குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/கூட்டுடைமைப் பொருளாதாரம்

விக்கிமூலம் இலிருந்து

60. கூட்டுடைமைப் பொருளாதாரம்

இனிய செல்வ,

நம்முடைய நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் பற்றி நாடு தழுவிய நிலையில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் பொதுமக்கள் அதிகம் பங்கேற்காதது ஒரு குறையே! ஆயினும் இடதுசாரி அரசியற் கட்சிகள் கதவடைப்பு வரையில் சென்று மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்றன. எனினும் பொதுமக்கள் போதிய ஆர்வங் காட்டவில்லை. இனிய செல்வ, அது சரி! நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள்? இனிய செல்வ, பொருளாதாரக் கொள்கை என்பது பெரும்பாலும் நான்கு வகையானது என்று குறிப்பிடுவர். அவற்றுள் முதலாவது தனியுடைமை. இரண்டாவது பொதுத்துறை (பொதுத்துறை என்பது அரசு மக்கள் துறை) மூன்றாவது மக்களின் கூட்டுடைமைச் சொத்து, அடுத்து அரசுடைமை (மக்களுடைமை)ச் சொத்து.

இனிய செல்வ, நமது நாட்டில் முதல் மூன்று சொத்து வகைகளும் நடைமுறையில் உள்ளன., அதாவது, ஏகபோகத் தனியுடைமையும் உண்டு. பொதுத்துறையும் உண்டு; கூட்டுடைமையும் உண்டு; நமது நாட்டின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரம் என்பர் அரசியல் வாதிகள், ஆயினும் நமது நாட்டில் தனியுடைமை வளர்ந்திருப்பதைப் போல், பொதுத்துறை வளரவில்லை. கூட்டுடைமையும் வளரவில்லை. ஏன் பொதுத்துறை வளரவில்லை? இனிய செல்வ, நம்மில் பலர் நாட்டுப் பற்றுடன் பொதுத்துறையை வளர்க்கவும் கூட்டுறவை வளர்க்கவும் உரிய மனப்பான்மையுடன் வளரவில்லை; வளர்க்கப் பெறவும் இல்லை! பழைய பழமொழி ஒன்றுண்டு! "மகள் பொன்னிலும் மாகாணிப் பொன் எடுப்பான்” என்று கூறுவர். இனிய செல்வ, "நாமிருக்கும் நாடு நமது” என்றும், "மன்னும் இமயமலை எங்கள் மலையே” என்றும் "எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்றும் பாரதி பட்டயங்கள் தந்த பிறகும் பாரதி பட்டயத்தைத் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டம் "நாம் அனைவரும் இந்திய நாட்டில் சம உரிமை பெற்றவர்கள்” என்று உரிமைச் சாசனம் செய்த பிறகும் நமக்கு நாட்டுடைமையைக் காப்பாற்றும் அக்கறையை விட நம்முடைய சொத்தைக் காப்பாற்றுவதில் தானே அக்கறை. ஆர்வம், திறமை யெல்லாம் செயற்பாடுறுகிறது! ஏன்? நாட்டையே வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அளவுக்கு நம்மனோரின் மனநிலை கெட்டுப் போயிருக்கிறது. இதனால், தனியுடைமை நிறுவனங்கள் வளர்ந்து வருவதுபோல் பொதுத்துறை வளரவில்லை; கூட்டுடைமையும் வளர வில்லை; வளரவிடவும் இல்லை ‘மனிதன்’, ‘இந்தியன்’ என்ற உணர்வுகளை விட "நான்” ‘எனது’ என்ற உணர்வும் அதைவிட, செய்யும் தொழில் சார்ந்த தொழிலாளி மனோ நிலையுமே வளர்ந்து பொது மனப்பான்மையைக் கெடுத்துக் கொண்டு வருகிறது. பொதுத்துறையில் இழப்பு: கூட்டுறவுத் துறையிலும் இழப்பே மிகுதி. இந்த நிலையைக் கண்ட நமது பிரதமர், இழப்பில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் துறையில் ஒப்படைக்கலாமா என்ற ஓர் ஆலோசனையை மக்கள் மத்தியில் வைத்துள்ளார். இடது சாரி அரசியற் கட்சிகள் தனியார்மயப் படுத்தும் கொள்கையை எதிர்க்கின்றன. ஆயினும் பொதுத்துறையை இழப்பின்றி நடத்தத் தொழிலாளர்களைப் பக்குவப்படுத்தி ஒத்துழைப்புத் தருவதாக உறுதி கூற முன்வர வில்லை. தனியுடைமைக் கொள்கை அமெரிக்காவுக்கு ஒத்து வரலாம். அந்த நாட்டில் மக்கள் தொகை குறைவு. பரப்பளவிலும் இந்தியாவை விட மும்மடங்கு பெரியநாடு. அமெரிக்காவில் ஏழைகள் குறைவு. அது மட்டுமல்ல. அமெரிக்க முதலாளிகள் நாட்டுப் பற்றுடையவர்கள்; நல்லவர்கள். இந்தியா, பரப்பளவில் சிறிய நாடு. மக்கள் தொகை அமெரிக்காவை விட மூன்று மடங்கு கூடுதல். இந்தியாவில் ஏகபோக முதலாளிகள் எண்ணிக்கை குறைவே. நடுத்தர வர்க்கத்தினர் கணிசமான அளவு உளர். இந்தியாவில் ஏழைகளே மிகுதி. ஆதலால், இந்தியாவிற்குத் தனியுடைமைப் பொருளாதாரம் ஒத்துவராது. ஆதலால், பொதுத்துறையையும் கூட்டுடைமையையும் வளர்த்தாக வேண்டும்.

இனிய செல்வ, திருவள்ளுவர் எத்தகைய பொருளாதாரக் கொள்கையைக் கூறுகிறார்? என்று கேட்கிறாய்! நல்ல கேள்வி! திருவள்ளுவர் பல்வேறு உடைமைகளைக் கூறுகிறார். ஆனால், ‘சொத்துடைமை’ பற்றிக் கூறவில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அரசியலில் தான் பொருள் செயல் வகை கூறப்படுகிறது. நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நமக்கு நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும் பாதுகாக்கவும் அனுபவிக்கவும் கடமையும் உரிமையும் உண்டு. ஆனால் ‘தனி உடைமை’ இல்லை. திருவள்ளுவர் ‘வீட்டையும் தாம் நுகரும் பொருளையுமே’ தன்னுடையது என்று தனியுடைமைப் பட்டியலில் வைக்கிறார்.

“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்று” 1107 என்ற திருக்குறளை அறிக. அதாவது ஒருவன் குடியிருக்கும் வீடும் அவன் நுகரும் பொருள்களும் அவரவருடைய உழைப்பில் ஈட்டியவை. தனியுடைமைச் சொத்துக்கள். இவை (Private Properties) இவை உற்பத்தியுடன் தொடர்புடைய சொத்துக்கள் இல்லையென்பது அறிக. உற்பத்திக் களங்களில் தலையாயது நிலம். நில உடைமை பற்றித் திருக்குறள் என்ன கூறுகிறது? நிலத்தை உழுது பயன் காண்பவன் அந்த அளவுக்கு நில உரிமை கொள்ளலாம் என்பது திருவள்ளுவர் கருத்து. இனிய செல்வ,

"செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”

(1039)

என்ற திருக்குறளில் நாள்தோறும் கழனிக்குச் செல்ல வேண்டும் என்பதாலும் கணவன்-மனைவி உறவை நில உறவுக்கு உவமையாக்கிக் கூறியதாலும் நிலம் உழவனின் உரிமைப்பொருள் என்று கூறி, உழாதாரின் நில உரிமை-ஜமீந்தாரி உரிமை போன்றவற்றை திருவள்ளுவர் கேள்விக் குறியாக்கியுள்ளார் என்பதை எண்ணுக.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

(1033)

என்ற திருக்குறளையும் ஓர்க. இனிய செல்வ, சுரண்டல் பொருளாதார அமைப்பை, திருவள்ளுவர் ஏற்கவில்லை என்பதனை,

சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று”

(66)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்”

(169)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை”

(859)
என்ற திருக்குறள்களால் அறிய முடிகிறது. ஆம்! நமது நாட்டுக்கு ஏற்ற பொருளாதாரமாகத் திருக்குறள் காட்டுவது ஒப்புரவறிதலாகிய கூட்டுடைமைப் பொருளாதாரமேயாம். கூட்டுடைமைப் பொருளாதாரத்தில் சுரண்டும் தன்மை இல்லை; ஏகபோகம் இல்லை. அறிவறிந்த ஆள் வினையுடையோர் பலர் கூடிப் பொருளைச் செய்து ஒப்புரவு அறிந்து ஒழுகி வாழும் கூட்டுடைமைப் பொருளாதாரம் நமது நாட்டுக்கு ஏற்புடையது. தனி உடைமைப் பொருளாதாரம் இருப்பதில் தவறில்லை. ஆனால் சமூக மேலாண்மையின் கீழ் தனி உடைமை இருக்கலாம். பொதுத்துறை வரவேற்கத்தக்கது. ஆயினும் நமது நாட்டுப் பொதுத்துறையில் தொழிலாளர்கள் பங்கும் மக்கள் பங்கும் இல்லை. இந்தியாவில் பொதுத் துறை என்பது அரசின்-ஆள்வோரின் ஏகபோக உடைமையாக இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது எப்படி பொதுத்துறையாக இயலும்? பொதுத் துறை ஒருவகையான மக்கள், தொழிலாளர்கள் பங்கேற்கும் துறையாக அமையின் வரவேற்கலாம். இந்திய நாட்டின் சூழ்நிலையில் இந்தியர்களுடைய மனோநிலையில் தனி உடைமைப் பொருளாதாரக் கொள்கை பயன்தருமா என்பது ஐயப்பாடே! அதனால்தான் திருவள்ளுவர் தனி உடைமையை விவரித்துக் கூறவில்லை போலும்! இனிய செல்வ, படிக்கவும்; சிந்திக்கவும்; எழுதவும்! கருத்துப் பரிமாற்றங்கள் நடை பெறட்டும்!
இன்ப அன்பு
அடிகளார்