குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வேதாகமக் கல்லுரி
இனிய செல்வ,
இன்று தமிழ் நாட்டில் நடைபெறும் விவாதம் எது? ஆம்! "வேதாகமக் கல்லூரி” அமைப்பது குறித்துத்தான் எல்லாரும் பேசுகிறார்கள்! தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண் பமைந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு அரசு வேதாகமக் கல்லூரி ஆரம்பிப்பதாக அறிவித்தார். அறிவித்தது தான் அறிவித்தார்! இந்த அறிவிப்பின் எதிரொலியாக அரசியல் அரங்கத்தில், மக்கள் மன்றத்தில் உள்ள பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கை தந்துள்ள வண்ணம் உள்ளனர்! முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடுமையாக ஆட்சேபணை செய்கிறார்! இனிய செல்வ, கலைஞரின் ஆட்சேபணையை நம்மால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை! திருக்கோயில் அர்ச்சகர்களாக சாதி, குல வேறுபாடின்றி அனைத்துச் சமூகத்தினரை நியமிப்பதற்கு வழி செய்யும் சட்டத்தை கலைஞர் இயற்றினார். ஆனால், அந்த முயற்சியை கலைஞர் தொடர்ந்து மேற்கொள்ளவில்லை. அதற்கு உண்மையான காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு அதற்குத்தடை என்பது உண்மையல்ல. இனிய செல்வ, சென்ற கால நிகழ்ச்சியை அதன் காரண காரியங்களை ஆராய்வானேன்? இன்றைய மாண்பமைந்த முதலமைச்சர் அவர்கள் வேதாகமக் கல்லூரி தொடங்கி அதில் ஆதி திராவிடர்களையும் சேர்த்துப் படிக்க வைப்பதாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இந்து சமூக வரலாற்றில் ஒரு திருப்புமையம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? சமஸ்கிருத மொழியையே தமிழர் படிக்கக் கூடாது. வேத சாத்திரங்களை, ஆகமங்களைத் தமிழர்கள் படிக்கக் கூடாது என்று தடை இருக்கிறது. இனிய செல்வ, இந்தச் சூழ்நிலையில் சாதி வேறுபாடின்றி ஆதி திராவிடர்கள் உட்பட வேதாகமங்களைப் படிக்க வாய்ப்பளிப்பதும் அவ்வழி அனைவரும் அர்ச்சகராவதும் வரவேற்கத் தக்கவை தானே! இதற்கு ஏன் ஆட்சேபணை? எதற்காக ஆட்சேபணை?
இனிய செல்வ, சமயச்சார்பற்ற அரசு வேதாகமக் கல்லூரி திறக்கலாமா? இஃது ஒரு வினோதமான கேள்வி! இந்துக்களின் திருக்கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை அரசு ஏற்கலாம்! ஆனால், அத்திருக்கோயில்களுடன் பிணைக்கப் பெற்றுள்ள வேதாகமங்களைக் கற்பிக்கும் கல்லூரியை நிறுவக் கூடாதா? இனிய செல்வ, வேதாகமங்கள் தமிழில் மொழி பெயர்த்துக் கற்பிக்கப்படும் என்ற செய்தியை மறு ஆய்வு செய்தல் நல்லது. சில மொழி பெயர்ப்புக்கு உரியனவாகா! பூசை, சடங்குகள் செய்முறை பற்றித்தான் ஆகமங்கள் கூறுகின்றன. ஆகமங்களைத் தழுவிய நிலையில் தமிழிலேயே பூசை, சடங்கு முறைகளை எழுதச் செய்யலாம். இதனால், மொழி பெயர்ப்பில் விளையும் சில சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
இனிய செல்வ, திருக்கோயில் அர்ச்சகர்கள் சாதி முறையில் உயர் குலத்தினரேயன்றி பொருளாதார நிலையில் அப்படி அவர்கள் இல்லை. அனைவரும் அர்ச்சகராக வரவேண்டும் என்ற கொள்கைக்குச் செயல் வடிவம் தர, வேதாகமக்கல்லூரி அவசியமான தேவை என்பதே உண்மை! இனிய செல்வ, வேதம், ஆகமம், திருக்கோயில் பூசை இவையெல்லாம் ஒன்றோடொன்று நெருக்கமானவையல்ல. இவைகள் தோன்றிய காலங்கள். தோன்றிய களங்கள். நுதலும் பொருள்கள் ஆகியன வேறு வேறு என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். அடிநிலைக் கோட்பாடாகிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்டு ஒன்றாக்கி யிருக்கிறார்கள்! இன்றைய சூழ்நிலையில் வேற்றுமைகளைப் பேசி விவாதங்களை வளர்க்காமல் இன்றையத் தேவையாகிய ஒருமைப்பாடு ஒன்றினையே மையமாகக் கொண்டு அணுகுதலே சிறந்த முறை. விவாதங்கள் வளர வளர வீம்பு உணர்வுதான் வளரும்! உண்மை மறைந்து விடும்!
இனிய செல்வ, ஆரியம்-தமிழ், ஆரியன்-தமிழன் என்ற பிரிவினை தோன்றி வளர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாகிவிட்டன! நால்வேதம் எது? ஆகமம் எது? ஆரியம் எது? என்று வினாக்களை எழுப்பிக் கொண்டே போகலாம். இதனால், திறமை வளரலாம்! பண்பாடு வளராது! இதனைத் தமிழ் நாட்டு மக்கள் உணர்தல் வேண்டும். எதிலிருந்து எது வந்தது? சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் வந்தது-இந்த ஆராய்ச்சி இன்று தேவைதானா?
இனிய செல்வ! தமிழை இரண்டாம் நிலைக்குத்தள்ளும் முயற்சி நல்லதல்ல; வரவேற்கவும் முடியாது. இதனைத் தமிழ் நாட்டில் உள்ளோர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் நெறியல்லாதன செய்கிறார்கள்! குற்றமே புரிகிறார்கள் என்று உணர்தல் வேண்டும். இனிய செல்வ, நமது திருக்கோயில்கள் வேதங்கள், ஆகமங்களைக் கடந்து திருமுறைகளின் நெறிக்கு வந்து விட்டன! இன்றைக்குத் திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள இறை, திருமுறைப் பாடல்களைக் கேட்டு எழுந்தருளியுள்ள இறையே என்பதை உணர்தல் வேண்டும். சடங்கு நெறியைக் கடந்து பத்திமை யுகத்திற்கு வந்தாயிற்று! இனி, ஞான நெறியே நமக்குத் தேவை.
இனிய செல்வ, இன்றையத் தேவை இந்தியா. ஆதலால், விவாதங்கள், வேண்டாம்! வேதங்கள் நம்முடைய மண்ணில் தோன்றியவையே! ஆகமங்களும் நம்முடையனவே! இவற்றில் ஆதிபத்தியச் சாயல்கள் உடைய பகுதிகளை ஏற்காது தவிர்க்கலாம்; தவிர்க்க வேண்டும். நமது இந்தியப் பண்பாட்டிற்கு-தமிழ்ப் பண்பாட்டிற்கு அனுசரணையாக இருப்பவைகளைக் கற்போம்! கற்பிப்போம்! நமது சிந்தனைப் புலன்கள் திரு நெறிய தமிழில் தோய்ந்து விளக்கமுறுக! நமது அரவணைப்பு உலகந்தழீஇயதாக அமைவதாகுக! ஆம்! வேதாகமக் கல்லூரி வரட்டும்! வேதாகமங்களுடன் நிற்காது திருமுறைகளும், திவ்யப் பிரபந்தங்களும் கற்பிக்கப் பெறும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு, வரவேற்கத்தக்கது.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்ற திருக்குறள் நெறிவழி எண்ணுக! துணிக!
திருக்குறள் நெறியில் மறைகள் மொழியின் பாற் பட்டன அல்ல. நிறைமொழி மாந்தர் அருளிச் செய்பவையெல்லாம் மறைகளே!
"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”
இன்ப அன்பு
அடிகளார்