குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/திருவள்ளுவர் உலக மனிதர்
இனிய செல்வ,
இன்றுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர், திருக்குறளை நினைந்து உணர்ந்து படிக்கும் ஆர்வம் மேலிடுகிறது. இந்த உலகத்தில் பிறந்த "முதல் மனிதர்” திருவள்ளுவரே. நாம் மனிதகுலத் தோற்றத்தின் அடிப்டையில் இவ்வாறு கூறவில்லை. வேறுபாடுகளைக் கடந்த மனிதத் தன்மையோடு விளங்குபவனே மனிதன். ஆம்! மனிதம் பிறக்கிறது; மொழியில்லாமல் பிறக்கிறது; இனம் இல்லாமல் பிறக்கிறது; சமயம் இல்லாமல் பிறக்கிறது. இனிய செல்வ, மொழி, இனம், சமயம் இவையெல்லாம் மனிதன் தோன்றி வளரும்பொழுது சம்பாதிக்கும் கொள்முதல்களேயாம். பிறந்தபின் ஈட்டும் கொள்முதல்கள், இயற்கையாயமைந்த பொதுமையை அழிக்க அனுமதிப்பது என்ன நியாயம்? இனிய செல்வ, புதிய கொள்முதல்களும் ஏன் ஈட்டப்பட்டன? உலக மாந்தரின் உள்ளங்களைப் புரிந்து கொண்டு, உறவு கலந்து பேசி ஒன்றித்து வாழத்தான்! ஆயினும் நாட்டில் நடப்பதென்ன? இன வழிச் சண்டைகள்! சாவுகள்! மொழிவழிப் போட்டிகள்! இச்சண்டைகளால் "மனிதம்” இழக்கப்படுகிறது! மானுடம் அழிக்கப்படுகிறது.
இனிய செல்வ, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் மாந்தரைப் பிரிக்கும் எந்தவொரு கொள்கையும் கூறப்பெறவில்லை; ஒரு சொல் கூட எடுத்தாளப் பெறவில்லை. திருக்குறள் உலகந்தழீஇய ஒப்பமுடைய பொது நூல்! இனிய செல்வ, திருக்குறள் அறிவு உலகந்தழீஇயதாக அமைய வேண்டும்.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”
(140)
என்று திருக்குறள் கூறுகிறது. திக்குறள் தமிழ் மரபில் தோன்றியது. உலகந்தழீஇய சிந்தனை பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!” என்றார். தொல்காப்பியமும் உலகம் தழுவியது தான். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞன் பாவேந்தன் பாரதி தாசனும்,
"நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!”
என்று கூறினான். "புவியை நடத்து! பொதுவில் நடந்து!" என்றான். ஆயினும் தமிழகம், திருக்குறள் காட்டிய பொதுமையை ஏற்றுக்கொண்டதா? சாதி, மொழி, மதச்சண்டைகள் மறைந்தனவா? இல்லை, இல்லை! எங்ஙனம் தமிழன் இந்தியனாவான்? உலக மனிதனாவான்?
திருக்குறள் உலகப்பொதுமறை! ஆம்! உண்மை! இந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துக் கூறினோமா? உலக மாந்தர் திருக்குறளை ஏற்றுக்கொள்ளச் செய்தோமா? இனிய செல்வ, உனக்குக் கோபம் வருகிறதா? ஏன் வராது? ஆம்! நீ கூறுவது உண்மை? இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் திருக்குறள் வந்திருப்பது உண்மை! அதுவுங்கூடத் தமிழன் தந்ததல்ல அறிவுபசியெடுத்த அயல்வழி அறிஞர்கள் வந்து எடுத்துக்கொண்டு போனார்கள்!
இனிய செல்வ, திருக்குறளைப் படிப்பது வேறு; அறிவது வேறு; திருக்குறள் நெறிகளை ஏற்று வாழ்தல் என்பது வேறு. தமிழ் மக்கள் திருக்குறளை வாழ்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. திருக்குறளை நாம் வாழ்வாக்கிக் கொள்ளாமல் வழிபாட்டு நிலைக்குத் தள்ளினோம்! இதனால், திருக்குறளை நாட்டு நூலாக ஆக்கவேண்டும் என்ற கொள்கை வலுபெறுவதாக நீ கூறுவதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆயினும், திருக்குறளை நாட்டு நூலாக்க நாட்டு மக்களிடத்தில்-பல்வேறு மொழிகளில் திருக்குறளின் பொதுமையை, திருக்குறள் காட்டும் மனிதத்தை எடுத்துக் கூறினால் தான் நாட்டுமக்கள் ஏற்பார்கள்? மக்களின் ஏற்பு வழி திருக்குறள் நாட்டு நூலாகும். இந்தப் பணியைத் தமிழ் மக்கள் செய்யவில்லை; தமிழறிஞர்கள் செய்யவில்லை; தமிழ்நாடு அரசு செய்யவில்லை. இனிய செல்வ, இதனை உணர்ந்து உலக மாந்தருக்குத் திருக்குறளின் பொதுமையை விளக்குவதற்காகத் திருக்குறள் உலக ஆய்வு மையம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் தொடங்கிப் பணி செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. மதுரை அறநெறி அண்ணல் எஸ். நாராயணன் செட்டியார் அவர்களும், நமது திருக்குறள் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் ந.மணிமொழியன் அவர்களும் இந்த மையத்தை இயக்க முன் வந்தார்கள்! ஆயினும், நல்லூழின்மையால் இயங்கவில்லை. இனிய செல்வ, பொறுப்பேற்றுக் கொண்டவர்கள். செயல் வல்லவர்கள். ஆதலால், ஊழைக் காரணமாகக் கூறினோம். அடுத்த முயற்சியாக "திருக்குறள் தேசியநூல் கருத்தரங்கு” ஒன்றினை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடத்தினார்கள். கட்டுரைகள் திருக்குறளுக்குச் சிறப்புச் செய்தன; தேசியம் தென்படவில்லை; பொதுமை பொதுளவில்லை. இனிய செல்வ, திருக்குறள் திருமறை மார்க்சியம் போல் ஒரு பொது அறநூல் என்பதை உணர்தலிலும் உணர்த்துவதிலும் வெற்றி பெற்றால் தான் மீண்டும் "கர்நாடகம்" நிகழாமல் தவிர்க்கலாம். ஆம்! இன்று கர்நாடக மாநிலத்தில் திருவள்ளுவர் சிலையை வைக்க மறுக்கின்றனர்; வழக்காடுகின்றனர். ஏன்? இன்னும் இந்தியாவே உருவாக வில்லையே! கர்நாடகம் கர்நாடகம்தான்! கேரளா, கேரளா தான்! காஷ்மீர், காஷ்மீர் தான்! பஞ்சாப் பஞ்சாப்தான்! தமிழ்நாடு தமிழ்நாடு தான்! இந்த வேறுபட்ட நிலையில் கர்நாடகத்தில் ஒரு சிலர் தவறு செய்கின்றனர்; திருவள்ளுவரைத் தமிழராக எண்ணுகின்றனர். திருவள்ளுவர் தமிழராகப் பிறந்தவர் என்பது என்னவோ உண்மை. ஆனால் திருவள்ளுவரோ உலக மனிதராக உயர்ந்தவர். திருக்குறள், பொதுமையே பேசுகிறது! இந்திய மொழிகள் எல்லாம் திருக்குறளுக்கு உரிமை கொண்டாடி எடுத்துச் சென்றுள்ளன. கன்னட மொழியும் பல ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளைப் பெற்று விளங்குகின்றது. ஆதலால், கர்நாடக மக்கள் திருவள்ளுவரைத் தமிழராகவோ, திருக்குறளைத் தமிழ் நூலாகவோ எண்ணித் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ அந்நியமாக மாட்டார்கள் என்று நம்புகின்றோம். யாரோ சில "தனிமை வாதிகள்” செய்யும் முயற்சிகள் வெற்றி பெற, கர்நாடக மக்கள் இடம் தரக்கூடாது! தரமாட்டார்கள் என்று நம்புகின்றோம்! கர்நாடக மாநில மக்கள் வரலாற்றுப் போக்கிற்கு ஏற்ப, உலகப்பொதுமறையாகத் திருக்குறளை ஏற்க, திருவள்ளுவரைப் போற்ற முன் வரவேண்டும். இனிய செல்வ, எண்ணுவன நிகழும்! மக்கள் திருவள்ளுவர் சிலையை ஏற்பர்! இது உறுதி! அதே போழ்து கடமையை மறந்து விடாதே!இன்ப அன்பு
அடிகளார்