குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/மனத்துக்கண் மாசிலனாதல்

விக்கிமூலம் இலிருந்து

5
சிந்தனை மலர்கள்

1. மனத்துக்கண் மாசிலனாதல்

மனம், மனிதனின் சிறந்த அகக்கருவி. மனிதனின் செயற்பாடுகளுக்கெல்லாம் மனமே முதல் நிலைக்கருவியாக அமைகிறது. செயல்களுக்கு அடிப்படையாக அமைகின்ற செய்திகளை, வாயிலாக இருந்து ஆன்மாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் மனமே! மனம் தூய்மையாக இருந்தால் மந்திரங்கள் செபிக்க வேண்டியதில்லை என்று கூறுவர். மனம் தூய்மையாக இருப்பது நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது; நல்ல சமுதாயத்திற்கும் இன்றியமையாதது. புறத்தோற்றங்கள், மற்றும் செயல்கள் எப்படியிருப்பினும் மனம் தூய்மையாக இருந்தால் புறத்தோற்றம் கருதி யாரும் இகழமாட்டார்கள்; ஏற்றுக் கொள்வார்கள். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தூய்மை பெறுதல் வேண்டும்.

மனத்துக்குத் துய்மைக்கேடு எப்படி வருகிறது? மனம் இரண்டு வகையில் தூய்மைக் கேடு அடைகிறது. முதலாவது ஆன்மாவினிடத்திலுள்ள அறியாமை. இரண்டாவது புறச் சூழ்நிலை. ஆன்மாவினிடத்திலுள்ள அறியாமையினாலேயே மனம் கெடுகிறது என்பது பழைய கருத்து. மனம் புறச்சூழ்நிலையாலேயே கெடுகிறது என்பது மார்க்சிய சித்தாந்தம்; அண்மைக்கால விஞ்ஞானக் கருத்து. ஆயினும் புறச்சூழ்நிலையும் சார்பும் மனித மனத்தை உருவாக்கும் காரணங்கள் என்ற கருத்து, பழந்தமிழ்க் கருத்து என்பதை மறந்துவிடுவதற்கில்லை. மனத்திற்குத் தூய்மைக்கேடு அகநிலையிலிருந்து வந்தாலும் சரி, புற நிலையிலிருந்து வந்தாலும் சரி! வந்த வழியைப் பற்றி இப்பொழுது என்ன கவலை? இரண்டு நிலைகளையுமே இப்பொழுது ஆய்வு செய்யலாம். மனம், ஒரு பொருளைச் சென்று பற்றுகிறது. அல்லது ஒரு நிகழ்வில் தோய்ந்து ஈடுபடுகிறது. அப்பொழுது மனத்தின் பங்கு ஆன்மாவின் அறியாமை என்கிற தாக்கத்தின் காரணமாக விருப்பு நிலையையோ வெறுப்பு நிலையையோ அடைகிறது. மனம், ஒன்றை விருப்புணர்வோடு அணுகினாலும் சரி, வெறுப்புணர்வோடு அணுகினாலும் சரி, நடுநிலை பிறழ்கிறது! விருப்புணர்வு அடைய வேண்டுமென்ற ஆர்வத்தையும், வெறுப்புணர்வு ஒதுக்க வேண்டுமென்ற உணர்வையும், உருவாக்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெஃகல், வெகுளி, இன்னாச்சொல், பகை ஆகிய இயல்புகள் மனத்தினிடைத் தங்கித் தாம் முன்னியது முடிக்க ஆன்மாவை இழுத்துக் கொண்டு செல்லும். ஆதலால், மனத் தூய்மைக் கேட்டுக்கு முதல் நிலையாக அமைவது ஆன்மாவின் அறியாமை என்பதில் ஐயமில்லை. மனம் சென்று பற்றுகிற புற உலகில் வேற்றுமைகள் மிகுதியாக இல்லாமல், உடையார் - இல்லாதார் என்ற வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் எல்லாம் எளிதில் கிடைக்கக் கூடிய பொதுமை நிலையுடைய சமுதாய அமைப்பு இருந்தால் ஆன்மாவிற்கு அல்லது மனத்திற்கு விருப்புகளும் வெறுப்புகளும் உருவாவதற்குரிய வாயில்கள் அடிபட்டுப் போகின்றன. அத்தோடு, புறத்தே பற்றுக் கோடாகக் கொள்ளும் நட்பு, சுற்றம் முதலியன நல்லன எண்ணி, நல்லன. சொல்லி, நல்லன செய்வனவாக இருந்தாலும் மனம் தூய்மைக் கேடுறாது.

ஆதலால், மனம் தூய்மையுடையாராதலே மனிதத் தன்மையின் முதல் முயற்சி. அதுவே இன்ப வாழ்க்கையைத் தரக்கூடிய சிறந்த முயற்சி. மனம் தூய்மையுடையவராக வாழ்தலே அறவாழ்க்கை. மனம் தூய்மையில்லாது மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் புகழுக்காகவும் செய்யப் பெறும் செயல்கள் ஆரவாரத் தன்மையுடையன. இரைச்சல், ஒலி மட்டுமே! இரைச்சலைக் கேட்டுப் பொருள் கொள்ள முடியாது; கருத்துருவம் பெற முடியாது. அதுபோல ஆரவாரம் அன்புச்சார்பில்லாதது; இதயத்தொடர்பில்லாதது; அறமல்லாதது; ஆரவாரமான உலகத்திலிருந்து விலகி, சமுதாயம் தழுவிய அறவாழ்க்கையை மேற்கொள்ள மனத்தூய்மை பெறுவோம். சமுதாய வாழ்க்கை வாழ முயன்றாலே எளிதில் மனத்துாய்மை வரும். யார்மாட்டும் அன்பு, மற்றவர் வாழ்வு கண்டு மகிழ்தல், மற்றவர்களை வாழ்விக்க முயற்சி செய்தல், மற்றவர் வாழ்க்கைக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தல் ஆகியன மனத்தூய்மை பெறுதற்குறிய வாயில்கள். மனத்தூய்மை உடைய வாழ்க்கையே அறம் சார்ந்த வாழ்க்கை.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”

17-2-86.