உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/மழைவளம் காப்போம்

விக்கிமூலம் இலிருந்து

80. மழைவளம் காப்போம்

இனிய செல்வ,

மழை பெய்திருக்கிறது. இல்லை, இல்லை! மழை கொட்டியிருக்கிறது! எங்கும் வெள்ளம்! இடிபாடுகள்! அழிவுகள்! பெய்த மழைத் தண்ணீரில் பாதி கடலுக்குப் போய்விட்டது! இப்படிப் பெய்த மழைத் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியிருந்தால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மழை பெய்தால்கூட போதுமானது. இடிபாடுகளையும் தவிர்க்கலாம். இனிய செல்வ, நமது பழக்கமே வேண்டும் போது தேடுவது; வந்தால் அனுபவிப்பது. எதிரதாக் காக்கும் அறிவும் இல்லை; பட்டறிவும் மிக மிகக் குறைவு. இன்றைய வாழ்வே நமது இலட்சியம்! நாளை என்பது நமக்கு இல்லை! எதிர்காலம் என்பது ஒன்று நம்மனோர் சிந்தனையில் இல்லை. இதுதான் நமது போக்கு! இந்த வகையில் வைதிக மதம் நம்மை குருடாக்கிவிட்டது.

தஞ்சை மாவட்டத்தில் பல ஏரிகளைத் தூர்த்து விட்டார்கள். திருச்சி மாவட்டத்திலும் ஏரிகள் தூர்ந்து கொண்டிருக்கின்றன. இனிய செல்வ, நாடு வளர்கிறது, அறிவியல் வளர்கிறது என்கிறார்கள்! நமக்கு என்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை! கடந்த காலத்தைப் போல, நம்முடைய முன்னோர்களைப்போல நாம் என்ன செய்திருக்கின்றோம்? செய்கின்றோம்? காவிரியில் கரிகாலன் அணை கட்டினான்! மிகுதி நீரை வாங்கக் கொள்ளிடம் ஆற்றினை அகலமும் உயர் கரைகளும் உடையதாக அமைத்தான். கல்லணை உடையவில்லையே! நாம் கட்டிய குடகனாறு அணை உடைந்துவிட்டதே! பழங்காலக் கோயில்களைக் காண்க! விண்ணளந்து காட்டி வானை மறைக்கும் திருக்கோயில்கள்! இன்று சத்துணவுக்கூடம் அமைக்கக் கூட-அதுவும் அளவில் சிறியது; சிமெண்டு பலகையில் ஆனது-முழங்கால் போடுகிறோம். ஏன் இந்த அவலம்? இலக்கியத்திலும் தான் என்ன பெரிய சாதனை? "காக்கா கருப்பு தான்!”

இனிய செல்வ, திருவள்ளுவர் மழையைப் பற்றிக் கூறும்பொழுது,

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்று கூறினார். இன்று மழை நம்மைக் கெடுத்துவிட்டது. பல நூறு கோடி ரூபாய்களுக்கு இழப்பு: உயிரிழப்பு: இழப்புகளுக்கிடையில் ஒரு மகிழ்ச்சி. எல்லா ஏரிகளிலும் கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்பி வழிவது நம்பிக்கையைத் தருகிறது. கழனிகள் விளையும். இரண்டாண்டுகளுக்குப் பஞ்சம் இல்லை! விவசாயிகளிடம் பணம் புழங்கும். திருவள்ளுவரின் திருக்குறள் மழையைப் பொறுத்தவரையில் உண்மையாகிவிட்டது. ஆனால், நமது வாழ்க்கைமுறை பெய்யும் மழையை முழுதாகப் பயன்படுத்தக் கூடியதாக அமையவில்லையே என்ற ஏக்கம் வரும்பொழுது பெருமூச்சு வருகிறது.

இனிய செல்வ, குடிமக்கள் ஏரி, குளங்களைக் குடி ஊழியம் அடிப்படையில் பாதுகாக்கும் பண்பு வளர வேண்டும். இனிய செல்வ, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் குன்றக்குடிப் பகுதியில் பெருமழை! போக்கும் மடையைத் தூர்ந்துபோகும் அளவுக்கு யாரும் கவனிக்கவில்லை. வெள்ளம் வந்தவுடன் தான் கவனம். மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில் இரவு 10 மணிவரையில் செய்ய வேண்டியதாயிற்று. இப்படித்தான் எல்லா இடங்களிலும்! அதுபோலவே ஆண்டுதோறும் கண்மாய்க் கரைகளின் அறுத்தோடிகள், மண் அரிப்பால் தாழ்ந்து போதல் போன்றவைகளைக் கவனித்து இருந்தால் நாங்களே மூன்று மாதத் தண்ணீர் கூடுதலாகச் சேமித்திருக்க முடியும். இந்த வேலைக்கு என்று நாளும் ஒதுக்கப்படுகிறது! இனிய செல்வ, எந்த நாள்? மதுரை ஆலவாயண்ணல் வைகை வெள்ளம் அடைக்க மண் சுமந்தாரே அந்த ஆவணிமூல நன்னாள்! அதுவும் சொல்லிவைத்தாற்போல் இந்த ஆண்டு நடைபெறவில்லை! ஏன்? இனிய செல்வ, நம்மையே கேள்வி கேட்கிறாயே! ஒரு அஞ்சலட்டை எழுது! து.ச.கணேசக் குருக்கள், சி.மருதுபாண்டியன், சுப.செல்வராஜ் ஆகியோருக்கு! எல்லாரும் குன்றக்குடிதான் (623 206)! எழுதிப்பார்!

இனிய செல்வ, பெய்யாமல் மழை கெடுக்கலாம். ஆனால், பெய்து கெடுப்பது என்பது மழையின் குறையல்ல! ஓர் ஆண்டு பெய்யாத மழை அடுத்த ஆண்டு சேர்த்து வரும். வானம் சேர்த்துப் பெய்து பயன் என்ன? தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்தும் முயற்சியில்லையே!

சங்க காலத்துக் கவிஞன் கூறினான் தண்ணீரைத் தேக்கி வைக்கும் அரசு வளரும், வாழும் என்று!

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

இரண்டுமே மழையின் குற்றமல்ல - மக்களின் குற்றமே!

மழை வளம் காக்க மண் வளம் காத்தல் வேண்டும். நிலமகள் பசிய சோலைகளால் புனைவு பெற்றால் புவி

தி.31. நனைய மழை பெய்யும்! மண் வளம் மரங்களுக்கு ஆக்கம்; மரங்களின் செழிப்பு மண்ணிற்கு ஆக்கம்; இவ்விரண்டையும் கண்டு கார்மேகக்கன்னி சூல்தாங்கி சூழ்ந்து வந்து பெய்வாள். மழை! மாமழையால் கிடைக்கும் மழை நீரை ஏரிக்கரை உயர்த்தி தேக்கி வைத்தால் ஏரி நிறைந்த செல்வம் சேர்த்துச் சேமமுற வாழலாம்!

இன்ப அன்பு

அடிகளார்