குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/டங்கல் ஒப்பந்தம்
இனிய செல்வ,
ஊரும் உலகமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. விரிவடைய விரிவடைய விசாலமான புத்தி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இன்றைய நடப்பு அப்படியில்லை. ஊரில் நடக்கும் போட்டா போட்டி, ஆதிக்கங்கள், அமுக்கங்கள் ஆகிய எல்லாமே உலகத்திலும் நடக்கின்றன.
இனிய செல்வ, டங்கல் ஒப்பந்தம் பற்றிப் பேசுகிறார்கள். ஆதரித்தும் பேசுகிறார்கள்; எதிர்த்தும் பேசுகிறார்கள். இனிய செல்வ, நமது நிலை என்ன?
நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
என்ற திருக்குறள் நெறிதான்! பொதுவாக டங்கல் ஒப்பந்தத்தை உலக நாடுகள் முழுதும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஏன்? சீனாகூட விரும்புகிறது. இந்த வகையில் அமெரிக்காவின் உலகந்தழீஇய ஒட்பம் வெற்றி பெற்றுள்ளது.
இனிய செல்வ, டங்கல் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு பெரிய பயன் எல்லா நாடுகளுக்கும் எந்த விதமான தடையுமின்றி உலகச் சந்தை திறந்து விடப்பெற்றுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி உரிமங்கள் இல்லை; வரிகள் இல்லை, இஃதோர் அனுகூலமான செய்தி. ஆனால், இந்தப் பொதுவிதி நமது நாட்டுக்கு ஒத்து வருமா? நமது நாடு மக்கள்தொகை பெருகிய நாடு உற்பத்தியில் போதிய சுறுசுறுப்புக்காட்டாத நாடு! உற்பத்திப் பொருளின் முடிவும் மற்ற நாடுகளை நோக்க சுமார்! இதனால் கைத்தறித்துணிகளைத் தவிர, எலெக்ட்ரானிக்ஸில் ஒருசில பொருள்களைத் தவிர மற்றவை உலகச் சந்தையில் இடம் பிடிப்பது கடினம். ஆனால், நமது நாட்டுச் சந்தை ஏகபோகமாகப் போய்விடும். நமது பொருள்கள் தேக்க நிலை அடையும்.
இனிய செல்வ, இன்று நமது நாட்டில் உற்பத்தி செய்யப் பெறும் மருந்துகளுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை வாய்ப்பு உண்டு, உலகத்தில் மருந்து உற்பத்தியில் சில சிறியமாற்றங்களைச் செய்து, ஒரே மருந்தைப் பல பெயர்களில் தயாரிப்பார்கள். டங்கல் திட்டம் இதைத் தடை செய்கிறது. ஒரு மருந்து உற்பத்தியை, விதிமுறைகளை அனுசரித்து அதனுடன் பதிவு செய்து "பேடெண்ட்” பெற்று விட்டால் அதே மாதிரி மருந்தை மற்ற நாடுகள் செய்ய முடியாது.
இனிய செல்வ, உலகப் பொருளாதார ஆதிபத்தியம் உருவாகலாம். டங்கல் திட்டத்தின் மூலம் இம்முறை எளிதில் எளியநாடுகளின் வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம். ஆதலால், நமது நாட்டுமக்கள் தொகையும், நமது நாட்டுத் தொழில் வளர்ச்சியின் மந்தப் போக்கும் அதற்கு மேலாக அண்மைக் காலமாக நமது உற்பத்தி அயல் நாட்டு மூலதனத்தைச் சார்ந்திருப்பதும் சிந்திக்க வைக்கின்றன. வட்டிச்சுமை வேறு, உலகில் தூங்காதது இரண்டே இரண்டு. ஒன்று காலம். பிறிதொன்று வட்டி. இனிய செல்வ, இந்தச் சூழ்நிலைகளை யெல்லாம் நினைவில் கொண்டு பார்த்தால் திட்டம் எவ்வளவு நல்லதானாலும் நமது நிலை ஏற்புடையதாக இல்லை. இனிய செல்வ, அண்டை அயல்நாடுகளைப் போல் தற்சார்பான தொழில் முயற்சி. கடின உழைப்பு, ஆகியவற்றை நமது நாட்டு மக்கள் பெற்றாலன்றி வாழ்தல் அரிது. நமக்கு முன்னுதாரணமாக விளங்கியது ஜப்பான் நாடு. ஆனால் இன்று ஜப்பான் நாடே நுகர் பொருள் உலகச் சந்தையில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இனிய செல்வ, ஒப்பந்தம் சரியானதா? தவறானதா? என்பதை விட நமது நிலையில் வளர்ச்சி வேண்டும் என்பதே உண்மை.
இன்ப அன்பு
அடிகளார்