குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/விலை ஏற்றம்

விக்கிமூலம் இலிருந்து

82. விலை ஏற்றம்

இனிய செல்வ,

இந்தியாவில் இரவு-பகல் எப்போதுமே தூங்காமல் இடையீடின்றி உயர்வது எது? ஆம்! நூற்றுக்கு நூறு சரி! எப்போதும் தூங்காமல் ஏறுவது வட்டி. வட்டி உயர்வு உலக நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் பல உலக நாடுகளில் இல்லாத ஒன்று விலை உயர்வு. இனிய செல்வ, நமது நாட்டில் விலை உயர்வு எப்படி? பல நாடுகளில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் குழுக்கள் உள்ளன. இனிய செல்வ, 1982-ல் நாம் சீனக் குடியரசுக்குச் சென்றிருந்தபோது விசாரித்ததில் "கடந்த 10 ஆண்டுகளாக விலை ஏற்றமே இல்லை. ஒரே நிலையில் விலை இருக்கிறது" என்றனர். நாட்டளவில் விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒன்று பணி செய்கிறது.

இனிய செல்வ, எல்லாருக்கும் திடீர் என்று வருவாயை உயர்த்திவிடமுடியாது. ஆனால், விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி ஒவ்வொருவருக்கும் செலவைக் குறைக்கலாம், குறைக்க முடியும். அப்படியே உற்பத்திச் செலவு கூடி விலை ஏற்றம் தவிர்க்கமுடியாத நிலையில் அரசு, அவசியமான நுகர்வுப் பொருள்களுக்குக் குறிப்பாக அரிசி, கோதுமை முதலியனவற்றுக்கு மான்யம் அளித்து நியாய விலையில் இல்லை, கட்டுபடியாகக்கூடிய விலையில் உணவுப் பொருளை வழங்கும் பொறுப்பை ஏற்கும்; ஏற்க வேண்டும். இதுதான் அரசின் நடைமுறை.

இனிய செல்வ, இன்று நமது நியாய விலைக் கடைகளில் அரிசி விலை கிலோ ரூ. 4-75, கோதுமை விலை கிலோ ரூ. 4-50. இந்த விலை தமிழ்நாடு அரசு ஆதரவு விலைக்குரிய மான்யம் கொடுத்தபிறகு! இந்த விலை இன்று சராசிரி ஒரு நடுத்தர வகுப்பினனான ஏழைக்கு ஒத்துவருமா? அவனுடைய வாங்கும் சக்தி எப்படி இருக்கிறது? உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் தனி நபரின் வருவாய் குறைவு. தனி நபரின் வருவாய்க்கும் நுகர்பொருள் விலைக்கும் இடையில் உள்ள இடைவெளி மேலும், மேலும் அகன்று கொண்டே போகிறது. நுகர்பொருள் மட்டுமா விலை ஏறி இருக்கிறது? இனிய செல்வ, சாதாரணமாகக் கிராமத்தில் "ஒரு கார்டு போடக்கூடாதா?” என்பர். ஆம்! ஒரு கார்டு-அஞ்சலட்டை 5 காசு 25 ஆண்டுகளுக்கு முன்! இன்று அஞ்சல் கட்டணங்களில் விலை ஏற்றம் உயர்வு! ஏன் உயர்த்துகிறார்கள்? என்பதே விளங்கவில்லை.

இனிய செல்வ, பொருளாதார இயக்கத்தின் செய்பாடாக விலை ஏறுதல் தவிர்க்க முடியாதது. ஆனால், எவ்வளவு, எந்த அடிப்படையில் விலை ஏறுகிறது? அரசுகள் மக்களிடமிருந்து தண்டல் செய்யும் வரிகளை மட்டுமே நம்பியுள்ளனர். இது முறையன்று. பொதுத் துறையை வலிமைப்படுத்தி வருவாய் காண வேண்டும். இனிய செல்வ, மதுவிலக்கு கொண்டு வந்தபொழுது அதனால் உருவான இழப்பை ஈடு செய்ய இராஜாஜி தமிழ்நாட்டில் விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டிருந்தது. இன்று விற்பனை வரி பல்கிப் பெருகிவிட்டது. கூடுதல் விற்பனை வரி வேறு.

இனிய செல்வ, நமது நிலையே இப்போது அறச்சங்கடம்! கார் டயரும் விலை உயர்வு; பெட்ரோல் விலை உயர்வு; எண்ணெய் விலை உயர்வு! எல்லாமாகச் சேர்ந்து பயணச்செலவை உயர்த்துகிறது. கிலோ மீட்டருக்குக் குறைந்தது ரூ. 6 வாங்கவேண்டி யிருக்கிறது. இவ்வளவு தொகை கொடுக்கப் பல அமைப்புகளுக்கு சக்தியில்லை; இருக்கவும் முடியாது. இனிய செல்வ, இந்தியாவில் விலையேற்றம் இந்திய மக்களில் பெரும்பாலோராகிய நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கிறது. மாதம் ஒன்றுக்கு ஆயிரக் கணக்கில் ஊதியம் வாங்கும் ஓர் அரசு அலுவலர் கூட இன்று ஏழை போல ஒரு வேளை உண்டும் ஒரு வேளை உண்ணாமலும் வாழும் நிலையில் உள்ளனர். ஏழைகளின் நிலையை எழுதிக் காட்ட வேண்டுமா?

இனிய செல்வ, மயில் இறகுகள் கனமில்லாதன. எடைகுறைவு. அதனால் ஒரு வண்டியில் மயில் இறகுகளை ஏற்றும்பொழுது அந்த வண்டி சுமக்கக்கூடிய அளவுக்கே ஏற்றவேண்டும். கனமில்லாதன என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக ஏற்றினால் ஏற்றப்பட்டது மயிற் பீலியேயானாலும் வண்டியின் அச்சுமுறியும். அதுபோலத்தான் விலை ஏற்றம்! இவ்வளவுதான் அவ்வளவுதான் என்று சமாதானம் கூறிக்கொண்டு விலையை ஏற்றிக்கொண்டே போனால் நடுத்தர மக்கள் அல்லற்படுவர்; ஏழை மக்கள் துன்புறுவர். எல்லை கடக்கும் நிலையில் மக்கள் கொதித்து எழுந்து ஆட்சியின் அச்சையே முறித்துவிட முனைவர். இதுதான் நேற்று வரை நடந்த வரலாறு. அரசுகள் படிப்பினையை ஏற்பது நல்லது.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

(475)
இன்ப அன்பு
அடிகளார்