உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/சூது

விக்கிமூலம் இலிருந்து

83. சூது

இனிய செல்வ,

திருவள்ளுவர் 'சூது’ என்று ஓர் அதிகாரமும் வகுத்து எழுதியுள்ளார். சூதாட்டத்தின் வரலாறு அல்லது சூதாட்டத்தின் கொடுமை நீ கேட்டிருப்பாய் என்றே நம்புகின்றோம். ஆம்! ஆம்! இனிய செல்வ, மகாபாரதக் கதையில் தொடக்கமே அதுதான்! ஆம்! அன்று தருமன் நாட்டை வைத்துச் சூதாடினான். இனிய செல்வ, உன் கேள்வி புரிகிறது! அன்று என்ன என்று கேட்கிறாய்? ஆம்! இன்றும் நாட்டை பணயம் வைத்துத்தான் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால் சூதாட்டம் என்ற பெயர் இல்லை! புனைவுகளுக்குப் பெயர்போன நூற்றாண்டல்லவா இது! ஆதலால், இன்றைய சூது பன்னாட்டு மூலதனக் கடன், திறந்த வெளிச்சந்தை, டங்கல் ஒப்பந்தம் என்ற பெயர்களில் நடக்கின்றன. பொதுத்துறை பலவீனம் என்று பழி சுமத்தித் தனியார் துறை ஊக்குவிக்கப் பெற்று வருகிறது. இனிய செல்வ, இந்தப் போக்கு நீடித்தால் இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியா இருக்கிறதா அல்லது காணாமல் போய்விடுமா? என்ற கவலை மேலோங்குகிறது. இனிய செல்வ, நெறிமுறை சாராத பொருள் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சூதாட்டம் தான்!

ஆசை, சூதாட்டத்திற்குக் காரணம். அரசுக் கருவூலங்களில் பணம் இல்லை. அரசுக்குப் புதிய வருவாய் இனங்களைக் கண்டு திட்டமிடவும் திறன் இல்லை. இந்த நிலையில் மக்களை அரசு சுரண்டி அரசினை நடத்த வேண்டியிருக்கிறது. இனிய செல்வ, மதுவருந்தல் கேடு பயக்கும். மக்கள் மேலும் ஏழைகளாவார்கள். நோய்களுக்கும் இரையாவார்கள். ஆனால், ஆள்பவர் சொல்கிறார்கள், ஆண்டுக்கு 640 கோடி வருகிறது என்று! மக்கள் 6000 கோடி ரூபாய்க்கு மேல் குடித்தால்தான் அரசுக்கு 640 கோடி ரூபாய் வருமானம் வரலாம். மக்களை ஏழைகளாக்கி அரசுக்கு வருமானம் வருவதில் என்ன பொருள் இருக்கிறது, அல்லது நியாயம் இருக்கிறது? இது ஒருவகைச் சூதாட்டம்! நலம் செய்வது போலத் தீமை செய்வது. வாழும் மாந்தனின் அறிவை, அறிவறிந்த ஆள்வினையைப் பறித்துக்கொண்டு வீதியில் நிறுத்துவது.

இனிய செல்வ, இன்னொரு பயங்கரமான சூதாட்டத்தை அரசுகள் நடத்துகின்றன. அது என்ன சூது, என்றா கேட்கிறாய்? அதுதான் லாட்டரிச் சீட்டு! ஆசை தீது! அதிலும் பொருளாசை கொடிது! ஆசை யாரை விட்டது! இனிய செல்வ, ஆம்! உண்மை நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! பொருளில்லார்க்கு, இவ்வுலகம் இல்லை என்பது உண்மைதான்! இனிய செல்வ, பணத்தை விரும்புவது. பணத்தைச் சம்பாதிப்பது தவறல்ல! ஆனால், பணத்தை நேரிடையாக விரும்பாமல் பணம் வரும் வாயில்களை, உழைப்பை, தொழிலை விரும்பி முயன்று உழைத்துப் பணம் ஈட்ட வேண்டும். இதனைத் திருக்குறள் "இயற்றல்” என்று குறிப்பிடுகிறது. இனிய செல்வ, இன்று அரசுகளும் சரி, தனியார்களும் சரி, பண ஆசை பிடித்து அலைகின்றனர். முயற்சி நடக்கிறது. இனிய செல்வ, அரசுக்குப் பணம் தேவை. அரசின் பணத்தேவைக்குக் குடிமக்களின் பணத்தாசையைக் கருவியாகக் கொண்டு பரிசு என்ற பெயரில் சுரண்டப்படுகிறது. பணக்காரர்கள் நூற்றுக்குத் தொண்ணுறு பேர் பரிசுச் சீட்டுகள் வாங்கமாட்டார்கள். பரிசுச் சீட்டுகள் பெரும்பாலும் ஏழைகள் தான் வாங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஏழைகள், நடுத்தர மக்கள் வாங்குகிறார்கள். இனிய செல்வ, நமக்குத் தெரிந்தவர் ஒருவர் ஏழை தான்! போதிய வருவாய் இல்லை என்பதும் உண்மை தான்! ஆனால் அவர் சீட்டுகள் வாரியாகப் பல சீட்டுகள் வாங்குகிறார்; நூற்றுக் கணக்கான ரூபாய்க்கு வாங்குகிறார். ஆனால் அவர் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அடிக்க மறுக்கிறது. இனிய செல்வ, கிடைக்கும் வருவாயைக் கொண்டு சரியாக உண்ணாமல், அழகாக உடுத்தாமல், ஐயோ பாவம் சீட்டுகளை வாங்குகின்றார். "இன்றில்லையானாலும் நாளை கிடைக்கும்” என்ற நம்பிக்கையிலேயே வாங்கிக் கொண்டே இருக்கிறார். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அன்று இவருக்கு வேலை ஓடாது! பரிசு விழாத ஏமாற்றத்தினால் வேலை செய்வதில் சோர்வு தலைகாட்டுகிறது! ஆகப் பண இழப்பு! அனுபவித்து வாழ மனமில்லை! கைப்பொருள் இழப்பு! பணிகளிலும் பாதிப்பு! இவையெல்லாம் லாட்டரிச் சீட்டால்-சூதால் விளையும் எதிர் விளைவுகள்.

இனிய செல்வ, குளத்தில் தூண்டில்! தூண்டிலின் நுனியில் புலால் துண்டு. இந்தப் புலால் துண்டின் நுனியை மீன் சுவைக்கிறது! என்ன நிகழும்! சுவைப்புலன் தூண்டப்பட்ட பின் மீண்டும் மீண்டும் துண்டினை அணுகித் தூண்டில் முள்ளில் சிக்கிக் கொள்ளும். முடிந்தது கதை! இனிய செல்வ, அதில் ஒன்று அடைந்தாலும் பிறிதொன்றை நாடுவதால் இழப்பேயாம். சூதாடுவோருக்கு நன்றாக வாழ்தல், இன்பமாக வாழ்தல் என்றும் இல்லை! கிடையாது! சூது வறுமையைத்தான் தரும். உழைப்பே செல்வத்திற்குரிய ஆதாரம்! அதிர்ஷ்டத்தில் ஒன்றும் நடப்பதில்லை! நடக்காது!

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

(932)

இனிய செல்வ, சூது வறுமையையே தரும், சிறுமையே செய்யும். ஏன் இந்தச் சூது? இனிய செல்வ, குடிமக்களுக்கு நன்மையைத் தரவேண்டிய அரசு இங்ஙனம் சூதாட்டம் நடத்தலாமா? சூது பொருளைக் கெடுக்கிறது; பொய் சொல்லப் பழக்குகிறது. அன்பு, அருள் நலம் சார்ந்த வாழ்க்கையைக் கெடுக்கிறது. அல்லலில் உழலச் செய்கிறது. இத்தகு கொடுமை பல செய்யும் லாட்டரிச் சீட்டு விற்பனை தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 750 கோடி. இந்த அவலம் தொடர்வது நல்லதல்ல; விரும்பத்தக்கதும் அல்ல. திருவள்ளுவருக்கும் உடன்பட்டதல்ல.

இன்ப அன்பு

அடிகளார்