குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/சலுகைகள்-குடும்பங்கள் அடிப்படையில்

விக்கிமூலம் இலிருந்து
84. சலுகைகள்-குடும்பங்கள் அடிப்படையில்

இனிய செல்வ,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை"

என்ற திருக்குறளைக் கற்றிருப்பாய் என்ற நம்புகின்றோம். இனிய செல்வ, செய்யும் காரியம் நல்லதா அல்லது கெடுதலா என்பது செய்யும் காரியத்தைப் பொறுத்தது மட்டும் அல்ல, அல்லது செய்பவரைப் பொறுத்தது அல்ல. யாரை நோக்கிச் செய்யப்படுகிறதோ அந்த நபரைப் பொறுத்தது என்பது திருக்குறளின் கருத்து. மேலும் ‘உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்றும் திருக்குறள் கூறுகிறது.

இனிய செல்வ, நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப் பெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நல்லதேயாயினும் பக்க விளைவுகளும் எதிர் விளைவுகளும் இல்லாமலில்லை, பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மனிதரை மேலே தூக்கி விடுதல் அவசியம் மட்டுமல்ல, சமூகத்தின் கடமையுமாகும். ஆனால், பள்ளத்தில் கிடத்தல் என்ற நிலையை அளவு கோலாகக் கொள்ளாமல் சாதிகளை அளவு கோலாகக் கொள்ளுதல் நடைமுறையில் சிறந்த கொள்கைதானா? சாதிகள் சமூகமாகிவிடுமா? ஒரு சாதியில், ஒரு சமூகத்தில் அனைவரும் பின் தங்கியவர்களாக இருத்தல் கூடுமா? இனிய செல்வ, இவையெல்லாம் ஆய்வுக்குரிய கேள்விகள், சமூகத்தின் பெயரில் சட்ட அடிப்படையில் ஒதுக்கீடு அமையுமாயின் முண்டியடிக்கும் தகுதியுடைய ஆற்றல் மிக்கவர்கள்-அரசின் கதவைத் தட்டும் சக்தியுடையவர்கள் தான் பயன் அடைவார்கள். கடை கோடி மனிதனுக்கு ஒன்றும் கிடைக்காது. ஏன்? பிற்பட்டோருக்குரிய அளவுகோலுக்கு இசைந்து உள்ள தனிக் குடும்பங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை வழங்கினால் அனைவருக்கும் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. கடைகோடி மனிதனும் பயனடைவான்.

இனிய செல்வ, மக்கள் தொகுதியை மூன்றாகப் பிரிப்பது! முதல் வகைத் தொகுதியைச் சார்ந்த அனைத்து குடும்பங்களும் சமூகத்தால் அங்கீகரிக்கப் பெறாத குடும்பங்கள்; கல்வியில் பின் தங்கிய குடும்பங்கள்; பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள்; என்ற அடிப்படையில் இனம் கண்டு தாழ்த்தப்பட்ட சமூகமாகக் கருதி அனைத்துச் சலுகைகளையும் வழங்கலாம். இந்தத் தொகுதியைச் சார்ந்த குடும்பங்களுக்குக் குடும்ப அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும் உதவி. அதற்குப் பிறகு அந்தக் குடும்பத்தைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டு முன்னேறியோர் தொகுதியில் சேர்க்க வேண்டும். அது போலவே தொகுதி 2-ல் உள்ள குடும்பங்கள் மிகவும் பிற்பட்டோர். இந்தக் குடும்பங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையினர். இந்தக் குடும்பங்களுக்கும் காலக்கெடு அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்து உயர்த்த வேண்டும். வளர்ந்த குடும்பங்களைப் பிற்பட்டோரிலிருந்து நீக்கி முன்னேறிய குடும்ப வரிசையில் சேர்க்க வேண்டும். கடைசியாக உள்ளது மூன்றாவது தொகுதி. இந்தத் தொகுதியினர் பொருளாதாரத்தில் மட்டும் பின் தங்கியவர்கள், இந்தக் குடும்பங்களை, குடும்பங்கள் அடிப்படையில் அங்கீகரித்து உதவி செய்யலாம். -

இனிய செல்வ, இந்த நடைமுறையில் எல்லோருக்கும் உதவி கிடைக்கும். இனிய செல்வ, 1953-ல் 2720 ஆக இருந்த சாதிகள், 1983-இல் 3332 சாதிகளாகப் பல்கி பெருகி வளர்ந்து விட்டது தெரிகிறதா? ஏன்? சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுவதால் சாதிகளைக் காப்பாற்ற மக்கள் நினைக்கிறார்கள், காலப்போக்கில் மறைந்துபோன சாதிக் கூட உயிர்பெற்று எழுந்து விட்டது. சாதிகளிலிருந்து தப்பி வளரவே ஒதுக்கீட்டுக் கொள்கை. ஆனால், நடைமுறையில் சாதிகள் வளர்கின்றன; இயக்கம் அடைகின்றன. இறுக்கம் அடைகின்றன.

இனிய செல்வ, "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவம் இந்த வையகத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் மனிதக் குலப்பிரிவினைகளுக்குக் காரணமான சாதிகள், மதங்கள், உலகியல், வாழ்க்கைக்குச் சாதனங்களாக அமைதல் கூடாது. சாதிகள் அடிப்படையில் சலுகைகள், இட ஒதுக்கீடு உள்ளவரை சாதிகள் தொலையா. புதிய சாதிகள் தலையெடுக்கும். போலிச் சான்றிதழ்கள் நடமாடும். இவையெல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும். குடும்ப அடிப்படையில் பின் தங்கிய நிலைமையை மட்டுமே அளவு கோலாகக் கொண்டு சலுகைகள் வழங்கப்பெறுதல் வேண்டும். இடஒதுக்கீடு அளித்தல் வேண்டும். எந்த ஒரு சலுகையும் காலக்கெடுவுடன் கூடியதாகவும் அமைய வேண்டும். இது தான் சமூக நீதி.
இன்ப அன்பு
அடிகளார்