உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/மக்கள் இருக்கிறார்கள்: மனிதன் இருக்கிறானா?

விக்கிமூலம் இலிருந்து

85. மக்கள் இருக்கிறார்கள்: மனிதன் இருக்கிறானா?

இனிய செல்வ,

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், எண்பத்தைந்து கோடி மக்கள். ஆனால் தகுந்த மனிதர்களைத்தான் காணோம். உலக வரலாற்றில் அரிஸ்டாட்டில் முதல் திருவள்ளுவர் வரை மனிதனைத் தேடியிருக்கிறார்கள். ஆனால் மனிதன் கிடைக்கவில்லை.

இனிய செல்வ, மனிதன் யார்? உடைமை பெற்றவன் மனிதனா? பட்டம், பதவிகள் பெற்றவன் மனிதனா? இல்லை, இல்லை! அப்படியானால் மனித உறுப்புகள் அனைத்தும் குறைவறப் பெற்றவன் மனிதனா? அதுவும் இல்லை. திருவள்ளுவர் மறுக்கிறார். "உறுப்பொத்தல் மக்கள் ஒப்பன்று" என்பது திருக்குறள். மானுடம் அற்புதமான படைப்பு. இனிய செல்வ, மனித உடம்பில் உள்ள பொறிகள், புலன்கள் ஆகியவை, அவை இயங்கத் துணை செய்யக் கூடிய சதை முதலிய அமைப்புக்கள்! அம்மம்ம, அற்புதம்! அற்புதம்! ஒன்றன் பணியில் பிறிதொன்று தலையிடுவதில்லை. ஆனால் ஒன்றோடொன்று ஒத்திசைந்து இயங்கி உயிரைக் காப்பாற்றுகின்றன; இயக்குகின்றன. இந்த இயக்கத்தில் ஒர் ஒழுங்கு (Order) நிலவுகிறது. முறை பிறழாத நிகழ்ச்சியும் (Consistancy) நிலவுகிறது. ஏன் இவ்வளவு பொறி நுட்பங்கள்? ஆற்றல் வாய்ந்த அமைப்புக்கள்?

மானுடம் புவியை நடத்தும் சக்தியைக் கொண்டது. மானுடம் படைப்பாற்றல் உடையது. இனிய செல்வ, எத்தனை மனிதர்கள் புவியை நடத்துகின்றனர்? இன்று புவியல்லவா தூக்கமுடியாத மனிதச் சதைப் பிண்டங்களைத் தூக்கிக் கொண்டு செல்கிறது; மனிதன் சிந்திப்பவன். ஆனால் அவன் சிந்திக்க மறுக்கிறான்! ஏன் சிந்திக்க மறுக்கிறான்? சில நூறு சம்பாதிக்கிறான். அவனைச் சுற்றி முகஸ்துதி செய்கிறவர்கள் கூடி விடுகின்றனர். உடனே அவனுக்கு நினைப்பு, தான் பெரிய மனிதன் என்று! அவன் எதையும் செய்யத் துணிகின்றான். அதீதத்தினுடைய எல்லை வரையில் பேசுகிறான்! கடைசியாக நான்முகன் தலையில் முருகன் குட்டியது போலக் குட்டித்தான் தீரவேண்டியிருக்கிறது! வேறு வழியேயில்லை.

இனிய செல்வ, இந்த மாதிரியான மனிதர்களைத் திருவள்ளுவரே கைவிட்டு விட்டார். ‘கயவர்கள்’ என்று கூறிக் கரும்புபோலக் கொன்று பயன் கொள்ளுமாறு கூறுகிறார்.

இனிய செல்வ, இன்று இத்தகைய கயவர்கள் கூட்டம் வளர்ந்து வருகிறது. ஏன், இன்றைய உலகியலை நடத்துபவர் யார்? இந்தக் கயவர்கள் தான்! நல்லவர்கள் செயலற்ற வர்களாகி விட்டனர். ஐயோ, பாவம் அப்பாவிகள்! இத்தகைய நல்லவர்கள் கூட்டம்? அப்பாவிகள் கூட்டம் சமுதாயத்தில் 90 விழுக்காடு தீயவர்கள் கூட்டம் 10 விழுக்காடு தான். செயலாண்மையும் துணிவும் இல்லாதவர்கள் கோடிக்கணக்கில் இருந்து என்ன பயன்? நல்லவன் திண்ணையிலிருந்து எழுந்திருப்பதற்கு யோசிக்கும் வேளையில் கயவன் ஊரையே கொளுத்திவிட்டுச் சாப்பறை கொட்டத் தொடங்கிவிடுவான். இதுதான் இன்றைய நடைமுறை. இத்தகு மாக்களுடன் பழகுவதை விடக் கொடிய மிருகங்களிடத்தில் கூடப் பழகி விடலாம்; வாழ்ந்து விடலாம். இனிய செல்வ, இங்கு அறிவியல், நடைமுறை இயலுடன் மாறுபடுகிறது. ஆம்! நீ சொல்வதுதான்! மனிதனைத் திருத்தமுடியும் என்று அறிவியல் நம்புகிறது. ஆனால், இலக்கிய மரபுகள் இயலாமையையே எடுத்துக் கூறுகின்றன. பொதுமறை கூறவந்த திருவள்ளுவரே

"நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்"

என்று கூறியதை ஓர்க. இனிய செல்வ, ‘பழமொழி’ என்ற இலக்கியம் கரியைப் பாலில் கழுவினால் கரி வெண்மையாகாது. பால்தான் கருப்பாகும் என்று கூறுகிறது. அதுமட்டுமா? சுவைமிக்க தேனில் எட்டிக்காயை ஊறப் போட்டாலும் எட்டிக்காய் இனிக்காது! இனிய செல்வ, அறுமுகச்செவ்வேள் சூரபன்மனை ஊர்தியாகக் கொண்ட தத்துவம்தான் என்ன? சூரபன்மனைப் பயன்படுத்தலாம். அவனாகப் பயன்பட மாட்டான்! அதுவும் எப்போதும் கண்காணிப்பில் தொடர் மேலாண்மையின்கீழ் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நிர்வாக இயலில் Under Control என்று கூறுவர். இனிய செல்வ, இன்றைய இந்தியாவில் தமிழகத்தின் நிலை இதுதான். மக்கள் கூட்டம் இருக்கிறது. தகுதியான நபர்களைத் தேடவேண்டியிருக்கிறது. இது எதிர்கால இந்தியாவிற்கு நல்லதல்ல. சோறும் துணியும் எல்லோருக்கும் கிடைத்துவிடும். அதைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவேண்டாம். ஆனால், மனிதன்-புவியை நடத்தும் மனிதன் வெற்றியினைப் பெற்றுக் குவிக்கும் மனிதன் தோன்றுவானா? இதுவே இன்றுள்ள பெரிய வினா? விடை சொல்லும் பொறுப்பு யாருடையது? ஆம்! ஆட்சியாளர்கள் முதலில் பதில் கூறவேண்டும். சமூகமும் குடும்பமும் அடுத்த நிலையில் பதில் கூறவேண்டும். பதில் கிடைக்குமா?

இன்ப அன்பு

அடிகளார்