குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/மானிடச் சந்தையில்

விக்கிமூலம் இலிருந்து

6. மானிடச் சந்தையில்

மானிடச் சந்தையில் பல்வேறுவிதமான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்; கோவலன் இருந்திருக்கிறான்; இராமன் இருந்திருக்கிறான்; இராவணனும் இருந்திருக்கிறான். மானிடச் சந்தையில் இணைத்துக் கட்டப்படாமலேயே மனிதர்கள் கூடிநிற்பார்கள்.

மனிதன் எதையும் எண்ணிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; அந்த எண்ணத்தின் வழியாக-சிந்தனையின் வழியாக பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டும்; நமது பழந்தமிழர்கள் எதையும் எண்ணித்துணிவார்கள்; துணிந்த பின் எண்ணமாட்டார்கள். அதுமட்டுமல்ல துணிந்தபின் எண்ணுவது இழுக்கு என்றுகூடக் கருதுவார்கள். எனவே, அவர்களது அகத்துறையிலும் புறத்துறையிலும் தகுதி இருந்தது, தரம் இருந்தது. இன்று, எண்ணிச் சிந்திப்பதற்கு அக்கறை குறைந்து விட்டது. கேள்விக்குச் சரியான விடையிறுப்பதென்பதும் அரிதாகிவிட்டது.

தமிழர்களில் பலர் நேற்று நேற்று என்றே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்; நேற்றைய நிகழ்ச்சிகளைக் கனவு கண்டு கொண்டிருப்பதால் எத்தகைய உருப்படியான பயனும் ஏற்படப் போவதில்லை-நாளை நாளை என்று கனவு கண்டாலாவது இன்றில்லா விட்டாலும் நாளை, நாளை இல்லா விட்டாலும் நாளை மறுநாள் விடிவெள்ளி முளைக்கலாம்.

மனிதன் எண்ணுபவனாக எண்ணித் துணிபவனாக ஆளுபவனாக-ஆளப்படும் நேரத்தில் உறுதியுடையவனாக இருப்பது மானிடச் சந்தைக்கு இன்றியமையாத பண்பாகும்.

'மனிதர்கள் இயற்கையில் மிக நல்லவர்கள்: சமுதாயத்தால் கெடுகிறார்கள்’ என்பது காந்தியடிகளின் கருத்து. மாக்ஸ் வெல்லியன் கருத்து இதற்கு முற்றிலும் மாறானது. 'மனிதன் அயோக்கியனாகப் பிறக்கின்றான்; சமுதாயத்திற்குப் பயந்தே நல்லவனாக வாழ முயற்சிக்கிறான்' என்பது மாக்ஸ் வெல்லியின் சித்தாந்தம்.

'மனிதன் ஒளியுடையவன்; ஒளிபடைத்தவன்; ஒளியுடையவனாக வாழ முடியும். ஆனால், அவன் அறிவை வளர்த்துக் கொள்வதில்லை’ என்கிறார் சாக்ரடீஸ். நீண்ட காலமாக மனிதசமுதாயம் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. தந்தையின் அறிவைவிட மகனறிவு தூயதாக இருக்கக்கூடும் என்பதை நம்பவேண்டும். நம்மிலே பலர் யார் சொல்லுகிறார் என்பதைத்தான் பார்ப்போமேயொழிய, என்ன சொல்லுகிறார் என்பதை ஆராய்வதில்லை. எனவேதான்

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்றார் திருவள்ளுவர். ‘பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்றார் சாக்ரடீஸ், ‘ஏன்’ என்று கேட்பது பாவம் என்று கருதிய மானிடச் சந்தையைப் பார்த்து. மனிதன் தன்னைப் பற்றியே எண்ணிச் சிந்தித்து, ‘ஏன்’ என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறினார் சாக்ரடீஸ்.

பொதுவாக, பணத்தோடும் பதவியோடும் தொடர்பு கொண்டவர்களைச் சட்டத்தாலேயே மாற்றமுடியும் என்பது ஒரு சித்தாந்தம். மனிதன் உயர்ந்தவன்; அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் உள் உணர்வுதான். இன்று, மானிடச் சந்தைக்கு வருகிறவர்களிற் பலர் தங்கட்குப் பிடித்தமான வற்றை எடுத்துச் செல்லாமல், பிடிக்காதவற்றைப் பற்றியே பேசிப்பேசி மானிடச் சந்தையைக் கலகக்காடாகவே ஆக்கி வருகிறார்கள். மானிடச் சந்தை கலகக்காடாகவே மாறிக் கொண்டும் வருகிறது. பொதுவாக, இன்று மானிடச் சந்தையிலே 95 விழுக்காடு நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருக்கின்ற 5 விழுக்காட்டினரின் ஆற்றல் எஞ்சிய 95 விழுக்காட்டினரையும் ஆட்டிப் படைக்கிறது. எனவேதான் மானிடச் சந்தையில் நல்லவர்களாக மட்டும் இருப்பது போதாது-நல்லவர்கள் வல்லவர்களாகவும் இருக்க வேண்டுவது இன்றியமையாதது என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

கிரேக்க நாட்டின் தலைநகரம்; பல்லாயிரக் கணக்கான மக்கள் நடமாடும் முச்சந்தி. பட்டப்பகல் நேரம் ஒரு பெரியவர் கையிலே தீவட்டியை ஏந்திக்கொண்டு எதையோ தேடிக்கொண்டு வருவது போல வருகிறார்.

‘என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார் ஒருவர். அந்தப் பெரியவர் சாவதானமாக,

'மனிதனைத் தேடுகிறேன்’ என்று பதில் கூறினாராம். இந்தப் பதில் முதலில் நமக்குச் சற்று வியப்பாகவும் புதிராகவும்தான் இருக்கும்.

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு
நூல் கற்றாரோ டேனை யவர்'

என்று பேசுகிறார் திருவள்ளுவர். இன்று, மானிடச் சந்தை புறத்தே போர்த்திக்கொண்டு வாழ்கிறதே தவிர, அகப்போர்வையை இழந்துவிட்டது. இந்த நிலைமையால் மானிடச் சந்தை அழுகிப்போனது போலத் தோற்றம் அளிக்கிறது. இன்றைய மனிதன் வெள்ளத்தை விலங்கை பேயை பெருந்துன்பந்தரும் நோயைக் கண்டுகூட அஞ்சவில்லை. தன்னையொத்த மனிதனைக் கண்டே அஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான். அவ்வளவு தூரத்திற்கு வாழ்க்கைப் போக்கு நசித்திருக்கிறது. ஆணவமும், ஆதிக்க சக்தியும் மனிதனைப் பிடித்து ஆட்டுகின்றன. மனிதன் இவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டாமா? மற்றவர்களையும் மகிழவைக்க வேண்டாமா? மானிடச் சந்தையின் தரம் உயர வேண்டுமானால், சிந்தனையால்-செயலால் இன்ன பிறவற்றால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்; கருத்து வேற்றுமைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் வேற்றுமைகளை உள்ளடக்கி விழுமிய ஒருமைப்பாட்டைக் காண வேண்டும். கருத்து வேற்றுமைகளால் புதிய காட்சிகளைத் தோற்றுவிக்கக் கூடாது. எறும்பு, தேனீ, கறையான் இவற்றைப் போல ஒருமைப்பாட்டோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புரவுக் கொள்கை மானிடச் சந்தைக்கு மிகமிக இன்றியமையாததாகும். மானிடச் சந்தையில் மனிதர்கள் ஒருவரோடொருவர் மனங்கலந்து பழக வேண்டும். புதிய கருத்துக்களையும் புதிய சித்தாந்தங்களையும் கண்டு, அவற்றைச் செழிப்புடையனவாக வளர்க்க வேண்டும். மானிடச் சந்தையைக் கருத்துப் புரட்சியுடையதாக ஆக்க வேண்டும்.

வாழ்க்கையில் போட்டி இன்றியமையாததுதான். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத் தவறு செய்யக்கூடாது. திறந்த வெளியில் திறந்த மனத்தோடு வாழ்ந்து வெற்றிபெற வேண்டும். மானிடச் சந்தையைத் தரம் உடையதாக-தகுதி உடையதாக-நாணயம் உடையதாக ஆக்குங்கள். அன்பும் அறமும் மானிடச் சந்தையில் இடம் பெறுமாறு செய்யுங்கள்!