குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/விண்ணகமாக்குவோம்!

விக்கிமூலம் இலிருந்து

5. விண்ணகமாக்குவோம்!

மனிதகுலத்துக்கு ஒரு கவிஞராக-மனிதகுலம் வாழ் வாங்கு வாழ வழிகாட்ட வந்த ஒரு கலங்கரை விளக்காக-மனிதனை மனிதனாக வாழச் செய்யும் மாபெரும் கவிஞராக வாழ்ந்தவர் வள்ளுவப் பெருந்தகை.

நமது நாட்டைப் பொறுத்தவரை படிப்புப் பெருகிய அளவிற்குப் பண்பாடு பெருகவில்லை. நாட்டில் படிப்பிற்குப் பஞ்சமில்லை. பண்பாட்டிற்குத்தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

வேறு எந்த நாட்டையும்விட இந்த நாட்டில்தான் பக்தி அதிகம். எனினும், எது பக்தி என்பதிலே ஒரு தெளிவான கருத்து இல்லை. எனவே, இந்த நாட்டில் வளர்கின்ற பக்தி, பொட்டல் காட்டில் மழைபெய்வதுபோல ஆகி விடுகிறது. அங்கயற்கண்ணியும் அண்ணல் சோமசுந்தரப் பெருமானும் எப்படி இருந்தார்களோ அந்த வாழ்க்கை அனுபவம் இன்று நம்மிடை இல்லை. அன்று, பன்றிக் குட்டி ஒன்று பால் இன்றிப் பசியால் கதறியது. அந்தக் கதறல் அண்ணல் சோமசுந்தரப் பெருமான் திருச் செவிக்கு எட்டியது. அண்ணலே தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டிக் காப்பாற்றினார். இன்று, மதுரைமா நகரிலே கதறியழும் மனிதனுக்குச் சோறு கொடுக்க யார் முன் வருகிறார்கள்?

ஒரு கல்யாணம் என்றால் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு அண்டாவும் சட்டிகளும் வாங்கிக் கொடுக்கிறார்களே, ஒரு நூறு ரூபாய்க்காவது புத்தகம் வாங்கிக் கொடுக்கின்றவர்களைப் பார்க்கிறோமா? தமிழர்கள் தமது வீட்டை அடுப்பங்கரையாக்கியது போதாதென்று கோயில்களில் மடப்பள்ளிகள் கட்டி, அவற்றையும் அடுப்பங்கரையாக்கி விட்டார்களே! இங்கு வயிறு வளர்ந்துள்ள அளவிற்கு அறிவு வளர்ந்திருக்கிறதா? வயிற்றை வளர்க்க எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கால் பங்காவது அறிவை-உணர்வை வளர்ப்பதற்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? நாட்டில் அறிவுப் புரட்சியும் கருத்துப் புரட்சியும் ஏற்பட வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இந்த நாட்டில் வள்ளுவர் தோன்றி வாழ்ந்து இலக்கியம் செய்தார் என்பதற்குரிய அடிச்சுவடு-இலக்கிய மணம் தனி மனித வாழ்க்கையில்-சமுதாயத்தில்-நாட்டில் காணப்படுகிறதா?

நம்முடைய நாட்டில் தத்துவத்திற்கும் கொள்கைக்கும் குறைவில்லை. ஆனால் அவை செய்முறையில் வரவில்லை. கொஞ்சமாகப் படித்தாலும், படித்ததை வாழ்க்கையில் நடை முறைப்படுத்துங்கள்! படிப்புக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கிற இடைவெளியைக் குறையுங்கள். சாப்பிடுவதைக் கடமையாகக் கொள்வது போலப் படிப்பதையும் கடமையாகக் கொள்ளுங்கள்.

இருபது ஆண்டுகட்குமுன் விற்ற கண்ணாடிகளைவிட இன்று ஏராளமான கண்ணாடிகள் விற்பனையாகின்றன. அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து முகத்தை அழகு படுத்திக் கொள்கிறோமே அதுபோல, நாள்தோறும் திருக்குறளில் நமது நெஞ்சைப் பார்த்து, உள்ளத்திலுள்ள மேடு பள்ளங்களைத் திருத்திச் சரி செய்து கொள்ள வேண்டாமா?

மனிதனுக்குத் துன்பமும் தொல்லையும் மற்றவர்களிடமிருந்து வருவதில்லை. அறியாமையின் காரணமாக நம்மிற் பலர் இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. இதனை, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று புறநானூறு உணர்த்துகிறது.

துன்பம் வரும்போது நாம் அதைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பத்திற்குக் காரணம் என்ன என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நம்மை ந்ாமே எண்ணிப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை எண்ணிப் பார்த்து நாம் விமர்சனம் செய்து சிரிக்க மறந்து விட்டால், நம்மைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். துன்பம் வரும்போது, அந்தத் துன்பத்திற்குக் காரணம் நமது அறியாமையும் முட்டாள்தனமும்தான் என்று உணர்ந்து சிரிக்க வேண்டும்.

வள்ளுவம், ராஜா ராணியைப் பற்றிப் பாடிய நூல் அல்ல. இங்கு நடமாடுகின்ற சாதாரண சராசரி மனிதனைப் பற்றிச் சராசரி மனிதனுக்காகப் பாடப்பெற்ற வாழ்க்கை நூல் அது.

மனிதன் தனது கடமைகளைச் செவ்வனே செய்வதன் மூலம் கடவுள் வழிபாடு செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும். இன்று உலகெங்கும் வாழ்கின்ற 300 கோடி மக்களில் 10-ல் ஒரு பகுதியினர் சோற்றுக்கின்றித் துன்பப்படுகிறார்கள் என்றால், மனித சமுதாயத்திற்கே இது ஒரு அறை கூவல் இல்லையா? மனிதன் உழைப்பு உடையவனாக-உலையாத முயற்சியுடையவனாக இருந்து மனித சமுதாயத்தை வாழ்வித்து வாழவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுள்ளம்.

தேவலோகத்திற்குப் போய்த் தெய்வத்தைத் தேடுவதை விட உன்னையே நீ தெய்வமாக்கிக் கொள்ளலாம் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதற்கு உண்டால் மட்டும் போதாது-வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்., கை கால்களும், தலையும், உடலும் இருப்பதால் மட்டும் ஒருவன் மனிதனாகி விடுவதில்லை. மனிதனுக்குரிய மனச்சாட்சியோடு வாழ்பவன்தான் மனிதன். இதை நன்றாகப் புரிந்து கொண்டுதான் ‘வாழ்வாங்கு வாழு’ என்று பேசினார் திருவள்ளுவர்.

மனிதன் எண்னக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே திருவள்ளுவர் செய்த முதற் புரட்சி. ‘எண்ணிய எண்ணியாங் கெய்துப’ என்றார். கிறித்தவ மதத்தலைவர்கள் மனித சமுதாயத்தை எண்ணிச் சிந்தித்து, அந்த மனித சமுதாயத்தின் நல்வாழ்வில் அக்கறை கொண்டதுபோல இங்குப் பல இலட்சக்கணக்கான வெண்பொற்காசுகளையும் ஆயிரக்கணக்கான வேலி நிலங்களையும் வைத்துக் கொண்டிருக்கிற நமது சைவ சமயத் தலைவர்கள்-காவி வேட்டி ஜமீன்தார்கள் மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை.

அகமும் புறமும் ஒத்த வாழ்க்கை தேவை மனத்தது மாசாகக் கூடாது. மன மாசைக் கழுவித் தூய்மைப் படுத்தத்தான் வழிபாடு, கடவுள், மத நம்பிக்கை எல்லாம். இன்றோ, குளம் சாக்கடையாக மாறியதுபோல மதம், கடவுள் நம்பிக்கை யாவும் வெறும் சடங்குகளால் நிறைந்து விட்டன.

தமிழகத்துத் திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம் முதலியவற்றை ஓதி வழிபட வேண்டும் என்று நான் கூறியபோது, பலர் என்னைக் கருப்புச் சட்டை என்று கூறினார்கள். எனக்கு மொழி, இன சாதி வேறுபாடுகள் கிடையாது. வழிபாடு என்ற குளத்தில் மனம் குளிக்க வேண்டும்; அதன் மூலம் மனவெப்பம் கழிய வேண்டும். இந்த மனோதத்துவ அடிப்படையில்தான் நான் தாய்மொழியில் வழிபாடு செய்யவேண்டும் என்று கூறினேன். நமது குறைகளைச் சொல்லி அழுது, மனம் திருந்த நமக்குக் கிடைத்திருக்கிற ஒரே இடம் கோயில்தானே! மனிதன் கைகால்களால்-வாயால் தூய்மையாக இருந்துவிட முடியும். அது எளிது; மனத்தால் தூய்மையாக இருப்பதுதான் அரிது. மனிதன், மனத்தை அடக்கியாளக் கற்றுக்கொண்டால் - அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் அவன் உயர்நிலை எய்துகிறான். எனவேதான் திருவள்ளுவர் மனப்புரட்சி செய்தார்.

அன்று, பாண்டிய மன்னன் ஒருவனின் உயிர்நிலை அரச நீதியில் தங்கியிருந்தது. பாண்டியன் மாண்டான்-அவன் பத்தினியும் மடிந்தாள். அவள் உயிர்நிலை கற்பிலே தங்கி இருந்தது.

இன்று பலர் உயிர்நிலை பணத்திலேதான் தங்கியிருக்கிறது. உயிர்நிலையை அன்பில் வைத்திரு என்கிறார். அது மட்டுமா? அன்பைப் பார்க்க முடியும் என்றும் அவர் கூறுகிறார். இன்னொருவர்க்கு உற்ற துன்பத்தைக்கண்டு, இரங்கி வருந்தி அழும்போது சிந்துகின்ற கண்ணீர் அன்பைக் காட்டிவிடும் என்கிறார்.

மூச்சுக் காற்றும், சோறும், தண்ணீரும்போல இந்த நாட்டு மக்களுக்கு வள்ளுவம் இன்றியமையாததாகும். அது நாம் நாள்தோறும் உண்ண வேண்டிய கருத்துணவு. அதை உண்டால் மட்டும் போதாது; சீரணித்துக் கொள்ள வேண்டும்.

கவிதையைப் பாராட்டுவதின் மூலம் அதைப் பாடிய கவிஞனைத் திருப்திப்படுத்துவதுபோல, ஓவியனைத் திருப்திப்படுத்த முடியும் என்பதே எனது இலட்சியம். இதுதான் அருள் நெறிக் கொள்கை. வள்ளுவத்தின் வழி வாழ்ந்து, இந்த வையகத்தில் வாழுகின்ற எல்லா மக்கட்கும் சோறும் துணியும் தருவதன்மூலம் மண்ணகத்தை விண்ணகமாக்கி, இறைவனை மீண்டும் இங்கே கொணர்வோமாக!