குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/யாரைத் தேர்ந்தெடுப்பது?
இனிய செல்வ,
நாடு, தேர்தலைக் காண இருக்கிறது. இந்த உலகம் கண்ட ஆட்சி முறைகளில் மக்களாட்சி முறையே சிறந்தது. ஆனால், மக்களாட்சி முறை வெற்றி பெறுவது எளிதன்று. மக்களாட்சி முறை வெற்றி பெற வாக்காளர்கள் அறிவும் தெளிவும் உடையவர்களாக வேண்டும். நமது நாட்டில் 77 விழுக்காடு எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வாழும் நாடு. இனிய செல்வ, நமது தேர்தல் முறை எளிதன்று. ஆதலால், நமது தேர்தல் மக்களாட்சிப் பண்புகள் தழுவிய தேர்தல் அல்ல. சாதிகள் தேர்தலில் வெற்றி பெறுகின்றன. பணம் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது. மதங்கள் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றன. கவர்ச்சிகள் ஏன் மெள்ள மெள்ள வன்முறையுங் கூடத் தேர்தல் சாதனங்களாக வளர்ந்து வருகின்றன.
இனிய செல்வ, வாக்காளர்களின் தரம் உயர்ந்தால் தான் ஆட்சியின் தரம் உயரும். திருவள்ளுவர் வாக்களிப்பதற்கு முன் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டிய திருக்குறள் ஒன்று தந்துள்ளார்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
என்பதுதான் அந்தத் திருக்குறள்; இனிய செல்வ, ‘இதனை’ என்பது என்ன? இன்றைய நாட்டின் நலனே என்று கொள்ளலாம். இன்று நமது நாடு நன்றாக இல்லை; வலிமையாக இல்லை! வளமாக இல்லை. ஒரு நலமுடையதாக இல்லை. நமது நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. கடனில் மூழ்குகிறது. எங்கும் கையூட்டு வழக்கமாகி விட்டது. வேலை இல்லாத் திண்டாட்டம். இனிய செல்வ, கையூட்டும் சார்புகளும் இல்லாத அரசு அமைய வேண்டும். மக்களுக்கு இலவசங்கள் வழங்காமல் கடின உழைப்புடையவர்களாகிட வழி நடத்த வேண்டும். மக்கள் உழைப்பால் படைக்கப்பெறும் வளத்தைச் சுரண்டுபவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். நல்ல தரமான கல்வியறிவு வழங்கப்பெறுதல் வேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடைய நீண்ட ஆயுளுடைய அரசாக விளங்க வேண்டும். மூன்று கால் ஒட்டங்கள் அரசுக்கு ஆகாது.
இனிய, நல்ல, பலமுள்ள நாட்டின் நிலைமைகளைச் சீர் செய்யக் கூடிய அரசை அமைக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு தாம் பொறுப்பேற்று அமைக்க இருக்கும் அரசைக் கருவியாகக் கொண்டு வளமான நாடுகாணவும், வேலை வாய்ப்புப் பெருகி வளரவும் தூய்மையான உயர் நோக்குடைய அரசை எந்த அணி அமைக்கும் என்பதை ஆராய்ந்து வாக்குகள் அளிக்க வேண்டும். ஆளும் வேட்கையுடன் முனைப்புடன் தேர்தலில் நிற்பாரை எங்ஙனம் ஆய்ந்தறிவது? தேர்தலில் நிற்பவர்களுடைய சென்ற கால வரலாறுதான் சிறந்த கருவி. சென்ற காலத்தில் அவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? பணம் எவ்வளவு சேர்த்தார்கள்? ஆடம்பரமாகப் பவனி வந்த நிலைமைகள் நாட்டை வீட்டுக்குக் கொண்டு போனார்களா? வீட்டை நாட்டுக்குக் கொண்டு வந்தார்களா? என்று ஆய்வு செய்க! குறிப்பாகச் சென்ற காலத்தில் பதவியில் இருந்திருப்பார்களாயின் அவர்களுடைய நடையினை உய்த்தறிக. இன்று வாக்காளர்களைச் சந்திக்க வருவது எதற்காக? மக்களுக்குத் தொண்டு செய்யவா? அதிகாரத்தைச் சுவைத்து அனுபவிக்கவா? ஆராய்க; கூர்ந்து ஆராய்க! ஆராய்ச்சியின் முடிவில் யார் தேர்தல் மூலம் பெறும் ஆட்சி அதிகாரத்தை மக்களுக்கே; மக்கள் நலத்துக்கே பயன்படுத்துவார்கள் என்று யாரிடம் வாக்காளர்களுக்கு நம்பிக்கை வருகிறதோ அவர்களிடமே வாக்குச்சீட்டின் மூலம் ஆட்சி அதிகாரத்தை ஒப்புவிக்க வேண்டும். இனிய செல்வ, இது திருவள்ளுவர் காட்டும் தேர்தல் முறை. திருவள்ளுவர் கூறும் வாக்களிப்பு முறை. வெற்றி பெற்றால் நாடும் வளரும்; நாமும் வளர்வோம்!இன்ப அன்பு
அடிகளார்