உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/யாதும் ஊரே,யாவரும் கேளிர்

விக்கிமூலம் இலிருந்து




3


யாதும் ஊரே! யாவரும் கேளிர்!


பழந்தமிழர் ஓருலகம் கண்டு வாழ்ந்தனர். அவர்களுடைய பரந்த மனப்பான்மை உலகறிந்த ஒன்று. கொடுத்துப் புகழ்பெற்ற கொடைவள்ளல் பாரி வாழ்ந்த பறம்பு நாட்டில் கணியன் பூங்குன்றன் என்ற சான்றோன் ஒருவன் தோன்றினன். கணியன் பூங்குன்றன் கனியமுதத் தமிழில் வல்ல கவிஞன். அழுத்த மனத்தினன், கணியன் பூங்குன்றன் தந்த கனியமுது, காலத்தை வென்று நிற்கும் கவிதை.

இன்று அறிவியல் வளர்ந்திருக்கிறது. வளர்ந்த அறிவியல், நாடுகளை இணைத்திருக்கின்றது. ஆயினும் எனது நாடு உனது நாடு என்ற வேற்றுமைப் பேச்சுக்கள், எல்லைத் தகராறுகள் ஒழிந்தா போயிற்று? இல்லையே! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அரசியல் அருளியலை ஆட்படுத்தித் தாம் மேம்பட்டு நாட்டுக்கும் நாட்டுக்குமிடையில், ஊருக்கும். ஊருக்குமிடையில், தெருவுக்கும் தெருவுக்குமிடையில் சமூகங்களுக்கிடையில், சமயங்களுக்கிடையில் வேலிகளைக் குறுக்குச் சுவர்களை எழுப்பிய வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது! அய்யகோ! இந்த அவல நிலைமை படையைப் பெருக்கிப் பசியைத் தோற்றுவித்திருக்கிறது. கவலையைத் தோற்றுவித்துக் கண்ணியத்தை மறைத்திருக்கிறது. எங்கும் சிறை மயம். கணியன் பூங்குன்றன் காட்டுகின்ற வாழ்க்கை முறையினை மேற்கொண்டால் இந்த அவல நிலைமை மாறும். அம்மம்மா! எத்தனை பேருக்கு ஊர்ப் பாசம். ஊருக்காக - ஊரின் முன்னேற்றத்திற்காக சுண்டு விரலை அசைக்காதவர்கள்கூட எங்கள் ஊர் என்று வீறாப்புப் பேசுகிறார்கள். அரசுப் பணி மனையில் அலுவல் செய்கிறவர்களிடத்தில் ஊர்ப்பற்று எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை உத்தியோக மாறுதல்கள் வரும்பொழுது கண்கூடாகக் காணலாம். கணியன் பூங்குன்றனார் “யாது மூரே!” என்று வாழ வேண்டுமென்கிறார். யாது மூரே! என்ற பெருநெறி பிடித்து ஒழுகின் பகை ஒடுங்கும்; போர் ஒழியும்.

யாதும் ஊரே! என்று கொண்டால் மட்டும் போதாது. பலர் பல நாடுகளில் குடியேறி வாழ்கின்றனர். யாதும் ஊரே! என்னும் அடிப்படையில் அல்ல. வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களே அடிப்படை பல ஊர்களில் குடியேறி வாழ்பவர்கள் பலர் அந்த ஊரில் யாரோடும் உறவு கொள்ளாது தனித்தே வாழ்வர். அதனால், அது பிழைப்புக் கருதிய குடியேற்றமே தவிர, உறவு, பண்பாடு அடிப்படையில் தோன்றிய குடியேற்றமல்ல. மனித குலத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் இனம், மொழி, சமயம், சாதி, அரசியல் வேறுபாடின்றி நேசிக்க வேண்டும். அன்பு கலந்து ஒன்றாகப் பழக வேண்டும். இன்றைய மனித வாழ்க்கை அசுரத் தன்மையுடையதாக உருவம் பெற்றிருக்கிறது. இன்று பலர் பழகுவதும் கூடப் பண்பாட்டிற்காக அல்ல. காரிய மயக்கு. வாழ்க்கையே வணிக மயமாகிவிட்டது. கணியன் பூங்குன்றன் காட்டும் பாதை ‘யாவரும் கேளிர்!’ என்பதாகும். மனித குலம் தமக்குள் காட்டிக்கொள்ளும் அன்பு வெள்ளத்தில், அரசியல் ஆணவ ஆதிக்கக்காரர்கள், வேறுபாட்டைப் பெரிதுபடுத்திய மத போதகர்கள் கட்டியுள்ள பிரிவினைக் கோட்டைகள் இடித்துத்தள்ளப் பெற வேண்டும். அன்றே உண்மையான மனித குலம் தோன்றும்.

மனிதன் இயல்பில் கூடி வாழப் பிறந்தவன். ஆனால், பிரிந்தே வாழ்கின்றான். மேலும் மேலும் பிரிந்துகொண்டே செல்கின்றான். ஏன்? அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ மனிதன் தன்னலமே நாடும் பொல்லாத குணத்திற்கு அடிமையாகிவிட்டான். அவனுக்குத் தன் உடைமை, தன் செல்வம், தனது மகிழ்ச்சி ஆகிய உன்மத்தங்கள் மேம்பட்டுவிட்டன. இவைகளுக்கு எதிராக யார் இருந்தாலும் வெறுக்கிறான். வெறுப்பை நியாயப்படுத்த ‘ஊர்’ என்ற மகுடம் சூட்டுகின்றான். அல்லது சாதி, மொழி, இனப் பாகுபாடுகளைத் தோற்றுவித்து அதன் சந்து பொந்துகளில் “தீமையைத் தந்தவர் இவர்; நன்மையைத் தந்தவர் அவர்” என்று கூறிப் பிரிவினையை வளர்ப்பதோடு மட்டுமின்றி, மனித குலத்தின் கேளிர்ப் பண்பைக் கெடுப்ப தோடன்றித் தீமையை எதிர்த்துப் போராடும் சக்தியையும் இழக்கின்றான். ஒருவர் பிறிதொருவருக்குத் தீமை செய்ய முடியாது. அதுபோலவே நன்மையையும் செய்ய முடியாது.

நன்றும் தீதும் அவரவர் வாழ்வின் வழி விளையும் விளைவுகளே! ஒரோ வழி பிறர் செய்வது போலத் தோன்றினாலும் பிறருக்குத் தீமையாயிருந்தனவற்றைக் காயும் தீமையாகவும், நன்மையாக இருக்குமாயின் தாம் மகிழ்ந்த நன்மையின் கைம்மாறாகவும் செய்யப் பெற்றதேயாம், எங்ஙனம் கதிரவனைச் சுற்றி ஞாலம் சுற்றுகிறதோ அது போலவே, அவரவர் செயல்களைச் சுற்றியே அவரவர் வாழ்வு வட்டமிடுகின்றது. இந்த அடிப்படைத் தத்துவத்தை நாம் புரிந்து கொண்டாலேயே இவர் நமக்குத் தீமை செய்தவர் என்று வெறுத்து ஒதுக்காமல் நட்புப் பூணும் பழக்கம் கால் கொள்ளும். இவர் நமக்கு நன்மை செய்தவரென்று புகழ்ந்து பேசி அவ்வழியில் தீமை தோன்ற வாய்ப்பு இருக்காது. இந்தப்பண்பாட்டு நிலை உருவாகின்ற பொழுதே மனித குலம் வெறுப்பினின்றும் விலகும்; ஆள்வினையில் ஈடுபடும்; அன்பிற் பிணைந்து வாழும்.

தீதைக் கண்டபொழுது நோதல் தீமையின் விளைவன்று. தீமையைச் சந்திக்கும் மனப் போக்கே அடிப்படை தீமையையும் நோதலின்றி, நடுக்கமின்றி, ஏற்று அனுபவித்து மாற்றும் மனிதனே நேரிய முயற்சியுடையவன்; பண்பாளன். ஆக நோதலும் தணிதலும் கூட நன்மை தீமைகளின் விளைவல்ல. அவை சாரும் மனிதனின் இயல்பே. சிலர் நன்மை தீமைகளின் வழி உணர்ச்சிவசப்படுவர். ஆடி அலமருவர். பின் உணர்ச்சிப் பெருக்கிற்கு நியாயம் காட்டுவர். இவையெல்லாம் சாமார்த்தியமாக இருக்கலாம். ஆனால் வாழும் இயல்பன்று. நோதலும் தணிதலும் மனிதன் பெற்ற அடிப்படைப் பண்புகளின் வழிப்பட்டதேயாகும். இந்தப் பண்பாட்டில் ஊறி வாழ்பவர்கள் மத்தியில் ‘யாவரும் கேளிர்’ என்ற பண்பு விளங்கித் தோன்றும்.

இன்று மனிதனை வருத்தும் மிகப் பெரிய பயம் சாதலேயாகும். அணு அணுவாக வறுமையால், பிணியால் நாள்தோறும் அழிந்து கொண்டிருந்தாலும் அவன் உயிர் வாழ்க்கையின் மீது வைத்துள்ள காதல்! அம்மம்மா. அது அளப்பில்! ‘சாதல்’ வாழ்க்கையின் முடிவன்று; சாதலும் பிறத்தலும் சுழற்சியில் வருவது. இன்றுள்ள ஒவ்வொரு மனிதனும் இதற்குமுன் எத்தனை தடவை செத்தானோ? இனி எத்தனை தடவை சாவானோ, இப்படிப் பழகிப் போன சாதலைப் புதியது போலக் கருதி அஞ்சுவது ஏன் என்பது புரியாத புதிர். சாதல் புதுமையன்று என்ற நம்பிக்கைத் தோன்றினால் உயிர் வாழ்க்கையின் மேலுள்ள காதலால் கொலைகள் நிகழாது, அச்சமும் அடிமைத் தனமும் தோன்றாது. சாவையே சந்திக்கத் தயாராக இருப்பவர்கள் கோழைகளாகச் செத்துக் கொண்டிருப்பவர்களைவிட ஆயிரம் மடங்கு நல்லவர்கள். அது போலவே வாழ்தலை இனிது என்று நம்பி மகிழ்ந்து மயக்க முறுதலும் இல்லை. வாழ்க்கையில் வெறுப்புத்தோன்றிய இடத்து ‘இது தீயது’ என்று எண்ணி வெறுத்தலும் கூடாது. ஏன்? “நன்றும் தீதும் பிறர் தர வாரா” மனித வாழ்க்கைச் செல்வம் வழி அவரவர் ஊழின் வழியேயாம்.

ஊழ் என்பது என்ன? பலர் கருதுவது போல அது கடவுளின் ஆணையா? எல்லோருக்கும் நடுவாக, நீதியாக, பொதுவில் நிற்கும் பரம்பொருள் ஒருவர்க்கு நன்மையும் பிறிதொருவர்க்குத் தீமையும், ஒருவர்க்குச் செல்வத்தையும் பிறிதொருவர்க்கு வறுமையையும், ஒருவர்க்குத் தளராத தளபதி பதவியையும் பிறிதொருவர்க்கு தளர்ந்து சாரும் கோழைத்தனத்தையும் கொடுப்பானா என்ன? அப்படி அவன் கோடுப்பானானால், அவனுடைய நடுநிலைத் தன்மை என்னாவது? பொதுமை இயல்பு என்னாவது: கடவுளுக்கும் ஊழுக்கும் நேரிடையாகச் சம்பந்தமில்லை. ஊழ் என்பது அவரவர் சிந்தனையும் செயலுமேயாகும். நேற்றையத் தீய சிந்தனை-நேற்றையத் தீய செயல் இன்றையத் தீயூழாக உருப்பெற்று அவற்றை உடையாரை வழி நடத்துகிறது அல்லது இழுத்துச் செல்கிறது. அதுவே தீயூழ்.

அதுபோலவே நேற்றைய நற்சிந்தனை, நேற்றைய நற்செயல் இன்றைக்கு நல்லூழாக உருக் கொள்கிறது. அவற்றை உடையாரை அது வழி நடத்துகிறது அல்லது இழுத்துச் செல்கிறது. ஆக, ஊழ் நல்ல வண்ணம் அமைய வேண்டுமானால் ஊழ் தோன்றுதற்குரிய அடிப்படைப் புலனாகிய சிந்தனையைத் திருத்துக அவ்வழி நல்லுணர்வை நாடி வளர்த்துக் கொள்க. நல்லனவே எண்ணி, நல்லனவே செய்திடுக. நல்லூழ் தோன்றும். நன்றுடையானும் நாடித் துணை நிற்பன்.

பெரியோரை வியத்தல் கூடாது. அது எப்படி? பெரியோரை மதித்தல் என்பது வேறு. பாராட்டுதல் என்பது வேறு. போற்றுதல் என்பது வேறு. இவை வியத்தல் ஆகா. வியத்தல் என்பது இயல்பில்லாத ஒன்றைக் கண்டபொழுது காணப்பெறும் ஆச்சரியம். அதற்கே வியப்பு என்று பெயர். பெரியோரிடத்தில் காணப் பெறும் பெருமைக்குரிய இயல்புகள் இயற்கையிலும் இயற்கை. அந்தப் பெருந்தன்மை பிறப்பின் வழிப்பட்டது. அது செயற்கையன்று; எதிர்பாராதது மன்று. ஆதலால், பெரியோரை வியத்தல் கூடாது. பெரியோரை ஒரோ வழி வியந்தாலும் தவறில்லை. ஆனால், சிறியோரை இகழ்தல் ஒருக்காலும் கூடாது. சிறியோரை இகழ்தலால் அவர்கள் ஒரு பொழுதும் திருந்த மாட்டார்கள். இகழ்தலுக்கு மாறாகப் பைய அரவணைத்து எடுத்துத் திருத்திக்கொணர்தல் வேண்டும். ஒரு சிலர் சிறியோர் ஆனது அவர்கள் வேண்டுமென்றே ஆனதல்ல. அதுவும் ஊழின் வழி. ஊழ், சூழலின் வழி. எனவே, யாரை நொந்து என்ன பயன்? இதுவே கணியன் பூங்குன்றனார் தந்த கனிமொழி.

பெரியோரை வியந்து பாராட்டாது சிறியோரை இகழாது வாழின் பொதுமை நிலை மலரும். வெறுப்புற்ற பொழுது இன்னாது என்று வாளா இருத்தல் புலன்களை நெறி முறை பிறழச் செய்யும். இனியன, இன்னாதன என்று நினைந்து மகிழ்தலும் காய்தலும் பொறி புலன்கள் வயப்பட்ட வாழ்க்கை, ஆங்கே ஆன்மா இல்லை. அறிவு இல்லை. உணர்வு இல்லை.

பொறி, புலன்களை ஆண்டு, எங்கு ஆன்மா தலை தூக்குகிறதோ ஆங்கு இன்பம் தோன்றும். அந்த இடத்தில்தான் சாதல் பற்றிய அச்சம் அகலும், ஆன்மா தன்னை அறியும் தவநிலை தோன்றுகிறது. அந்த மோன நிலையில்தான் ஆன்மா தன்னையே நோக்கி அறிகிறது. நன்றும் தீதும் பிறரால் வருவன அல்ல; தானே படைத்துக் கொண்டவை என்று உணர்கிறது. இந்தப் பேருணர்வு முழுமையாகும்பொழுது யாதும் ஊரே! யாவரும் கேளிர்! - என்ற பொதுமை வாழ்க்கை-அருளியல் வாழ்க்கை நமக்குக்

கிடைக்கும். இதோ கணியன் பூங்குன்றனார் பாட்டு.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே:

(புறம்-192)

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”