குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/அறிவொடு வழிபடுக

விக்கிமூலம் இலிருந்து

6
அறிவொடு வழிபடுக!

சமய வாழ்க்கை என்பது எளியதொன்றன்று. கடவுளை நம்புதலும் அவனை வழிபடுதலும் இன்று ஒரு சடங்காகவே மாறிவிட்டது. வழிபாட்டுக்கும் அறிவுக்கும் இன்றைக்குப் போதிய தொடர்பில்லை. ஏதோ, அது உயிர்ப்பற்ற சடங்காக இருக்கிறதே தவிர அறிவும் இல்லை; அனுபவமும் இல்லை. விஞ்ஞானியாக இருந்து விஞ்ஞான சோதனைகள் செய்வதை இன்று அருமையானதென்று பலர் கருதுகிறார்கள். அறிவின் பாற்பட்டதாகவும் நம்புகிறார்கள். ஆனால், சமயத்தை - கடவுள் வழிபாட்டை அங்ஙனம் கருதுவதில்லை. கடவுள் வழிபாட்டுக்குச் சார்பாக நிற்பவர்களும்கூடப் பெரும்பாலோர் பொய்ம்மையே செய்கிறார்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சி என்பது பெரும்பாலும் அறிவின்மையத்திலேயே செய்யப்படுவதால் அது உடனடியாகப் பயனையும் தருகிறது. கடவுள் வழிபாடு அங்ஙனம் செய்யப் பெறாமையால் பலருக்கு அந்த அறிவில் ஐயம் ஏற்படுகிறது. நமது முன்னோர், கடவுளை வழிபடுவதற்கும் கூடப் பேரறிவு வேண்டும் என்று நம்பினர். ஏன்? நமது முன்னோர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு வழிகாட்டியவர்கள் சிந்தனையில் வல்லவர்களாக இருந்து ‘சித்தர்கள்’ என்று பெயர் பெற்றிருந்தனர், அறிவில் மேம்பட்டது பேரறிவு. பேரறிவைச் சமயமரபு ‘ஞானம்’ என்று குறிப்பிடும். ஞானம் என்றால் குறைவற்ற பேரறிவு என்பதும், துன்பத்தினைத் தாராது, இன்பத்தினை வழங்கும் நல்லறிவு என்பதும் சமயநூற் கருத்து. கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகிறவர்கள், கற்றல் கேட்டலுடைய பெரியோராகத் திகழ்ந்தார்கள் என்று ஆளுடைய பிள்ளை பேசும். ஏன்? மாணிக்கவாசகர் சமய வாழ்க்கையின் ஆய்வினை, நானார்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்று முறைப்படுத்தி ஆராயத் தூண்டுகிறார்... இங்ஙனம், அறிவாராய்ந்த ஞானிகளே கடவுளைத் தொழுதனர். ஞானத்தால் தொழுவார் என்று அருள்நூல் பேசும்.

கடவுளைத் தொழுதல் என்பது இன்று வழக்கத்தின் பாற்பட்டதாகி விட்டது. வெற்றுச் சடங்காகவே உலவுகிறது. ஆனால், உண்மையில் கடவுளைத் தொழுது பயன்பெற வேண்டுமானால் நுண்ணறிவு வேண்டுமென்று திருஞான சம்பந்தர் எடுத்தோதுகின்றார். நுண்ணறிவு கொண்டால் தான் சிவஞானம் பெருகும். அப்போதுதான் இறைவனின் திருவருட் காட்சி கிடைக்கும். அது வரையில் உருவ வழிபாடு தான் நிகழும். கடவுள் வழிபாடு நிகழாது. சட்டியே சுடும்; கறி வேகாது! இதனைத் திருஞான சம்பந்தர்,

தோலுடை யான்வண்ணப் போர்வையினான்
சுண்ண வெண்ணீறு துதைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான்
நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண்
மின்னிடை யாளொடும் வேண்டினானே,

என்னும் திருப்பாடலினால் உணர்த்துகின்றார்.