குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/பக்திமையின் பண்பாடு

விக்கிமூலம் இலிருந்து
7
பத்திமையின் பண்பாடு

பத்திமை கொண்ட வாழ்க்கை தூயது. இனிமை நலம் மிக்கது. சழக்குகளைக் கடந்தது; வழக்குகளை வென்றது; மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்க்கும் தண்ணளியுடையது. உண்மையான பத்திமை, வாழ்க்கையில் விளங்கினால் சிக்கல்கள் இல்லை; பகையில்லை. போரில்லை; சட்டங்களின் தொகுதியில்லை. மார்க்ஸ் மாமுனிவர் கண்ட அரசற்றசமுதாயம் அமையும். பண்பட்ட நிலத்தில் விளைச்சல் பெருகி உயர்வதைப் போலப் பத்திமைச் சமுதாயத்தில் அன்பு பெருகும்; அருள் வளரும்; எங்கும் சமநிலை காட்சியளிக்கும்.

இத்தகு பத்திமை வாழ்வு உள்ளத்தொடுபட்டது. பயிருக்கு வளம் தரும் மண்ணின் உரச்சத்து எளிதில் கண்ணுக்குப் புலனாவதில்லை. வளரும் பயிரின் வளம் கொண்டே மண்ணின் வளம் காண்கின்றோம். பத்திமை வாழ்வு உடலொடு தொடர்புடையதல்ல. உடல் ஒரு வாயிலே! ஆனால் முழுக்க முழுக்க உள்ளத்தோடு தொடர்புடையது. நெஞ்சில் பத்தி தழைத்தால் பாரினில் பண்பு தழைக்கும், இன்றோ, பத்திமை வாழ்க்கையின் வடிவங்களே கொலுவீற்றிருக்கின்றன; உணர்வில்லை. சடங்கு ஆசாரங்களே மிஞ்சி வளர்கின்றன. சத்தான - சாரமான வாழ்க்கையைக் காணோம். ஐயகோ! இதனினும் கொடுமை ஒன்றுண்டோ? திருஞானசம்பந்தர் பத்திமை வாழ்க்கையின் இலக்கணத்தை வடித்துத் தந்துள்ளார்.

இன்று, எங்கும் பரபரப்பு! எதிலும் பரபரப்பு! ஆண்டவன் முன்னே அருச்சனை நாமங்களைச் சொல்வதில் கூடப் பரபரப்பு! காரணம் பத்திமை நோக்கமல்ல. அருச்சனை தொழிலாகிவிட்டது. குறைந்த நேரத்தில் நிறையச் சம்பாதிக்க வேண்டுமென்றால், அருச்சனையைச் சாங்கோ பாங்கமாகச் செய்ய முடியுமா? அப்படியே அருச்சகர் செய்தாலும் செய்துகொள்ள வந்தவர் அடுத்த பேருந்தில் போகப் பரபரத்துக் கொண்டிருப்பார். ஒரு செய்தியினைக் கேட்டுக் கலந்து, ஆராய்ந்து பேசி முடிவெடுக்க மனமில்லை. பரபரப்பு! ‘இப்படிச் சொன்னாயாமே!’ அப்படிச் சொன்னாயாமே! என்ற ஆவேச உணர்ச்சி! தகுதியை வளர்த்துக் கொள்ளக் கொள்ள உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. உரிமை யுணர்வில் ஒரே பரபரப்பு! தகுதியைப் பற்றி மனம் எண்ணிக்கூடப் பார்க்க மறுக்கின்றது. செய்தித் தாள்களில் சில வரிகளே வருகின்றன. பேசியவர் கருத்துக்கும் செய்திக்கும் உறவிருக்காது; உடன்பாடு இருக்காது. செய்தி தந்தவர் முன்னே குறைத்துப் பின்னே சிதைத்துத் தமது தொழிலுக்குரிய பாணியில் செய்தி தந்திருப்பார். “கள் குடிக்கலாம் என்று வள்ளுவர் கூறியதாக அடிகளார் கூறுகிறார்.” இந்தப் பொய்ச் செய்தியில் அரசியல் ஆர்வமுடையவர்களுக்கு - அடிகளாரைப் பிடிக்காதவர்களுக்கு உடனே பரபரப்பு! உண்மை கேட்டெழுத நேரமில்லை. ஆனால் ஊரெல்லாம் பேசநேரமுண்டு. நிறை தவறிய அரசியலுக்குப் பரபரப்பு! இப்படி எத்தனையோ வகையில் பரபப்பு! பரபரப்புடையவர் பண்பாளராக முடியாது. பத்திமைக்கும் பரபரப்புக்கும் எப்பொழுதும் பகை. “பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்.” என்றார் தருமை ஞானசம்பந்தர். திருஞான சம்பந்தரும் பரபரப்பு கூடாதென்றார். பரபரப்பு கூடாதென்பது மட்டுமல்ல; பரபரப்புக்குரிய சூடு ஆற வேண்டுமென்கிறார். ஆக்கின சூட்டில் அள்ளித்தின்ன முடியாதல்லவா? சூடு ஆற வைத்துத்தானே சுவைத்து உண்டு மகிழவேண்டும். உள்ளமும் ஆற அமர நிதானித்து எண்ணிப்பழகும் இயல்பைப் பெற்றால் பகை வராது; பண்பு வளரும்; பக்தியும் வளரும்; பரமனும் அருள்வான்.

பத்திமைக்குக் கள்ளத்தனம் முரணானது. வஞ்சனை ஒழிந்தால்தான் வாழ்வியல் சிறக்கும். உதடு சிரிக்கிறது. ஆனால் உள்ளமோ பற்றி எரிகிறது. முகம் முகமன் உணர்வைக் காட்டுகிறது. ஆனால் முதுகுக்குப் பின்புறம் பேசப்படுகின்றது. பாராட்ட மனமில்லை. ஆனாலும், பாராட்டு நிகழ்கிறது. பிறர் ஏற்றங்கண்டு மகிழ மனமில்லை. ஏதேதோ பேசப்படுகிறது. கருத்து மாறுதல்கள் அல்லது தவறுதல்கள் திருத்தப்படக் கூடியவையே! ஆனால் அவை வஞ்சகத்திற்கு வித்திடக் கூடாது. இன்று எங்கும் வஞ்சகமே ஆட்சி செலுத்துகிறது. கள்ளம் ஒழிந்தால்தான் கங்காளரைக் காணலாம்.

சொல், உலகத்தில் மிக உயர்ந்தது. சொல்லே மனித உலகத்தை இணைக்கும் பாலம். சொல்லே உணர்வைத் தூண்டுகிறது; உள்ளன்பை வளர்க்கிறது; உறுதியைத் தருகிறது; உறவினை வளர்க்கிறது. பரமனையும் தருவது. இத்தகு ஆற்றலுடைய சொல்லை இன்றைக்கு நெறி தெரிந்து பயன்படுத்துவோர் எத்தனை பேர்? சொல்லில் நிகழ்ந்த சோர்வுதானே கோவலனின் உயிர் கொண்டது. நீதியிற் சிறந்த நெடுஞ்செழியனை அநீதிக்கு ஆளாக்கியது. சொற்களைத் தேர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தத் தவறினாலும் குறைந்த அளவு சொற்களின் வெப்பத்தையாவது குறைக்க வேண்டும். சிலர் சொற்கள் செவியைச் சுடுகின்றன; நெஞ்சைச் சுடுகின்றன; உணர்வைச் சுட்டு அழிக்கின்றன. இங்ஙனம் சுடும் சொற்கள் பேசுவோர், நிறையத் திருநீறு பூசியவர்களிலும் இருக்கிறார்கள். அக்கு மணிகளை எண்ணில் பலவாக அணிந்தவர்களிலும் இருக்கிறார்கள். சொற்கள் ஈரக் கசிவுடையனவாக இருக்கவேண்டும் என்பது பற்றியே போலும், சொல்லை வழங்கும் நாவினைச் சுற்றி ஈரப்பசை எப்பொழுதும் இருக்க உமிழ் நீர்ச் சுரப்பிகளை இயற்கை அமைத்தது. சிலர் வாய் வறண்டும் கிடக்கும். பாவம் ! ஐயன்மீர்! வெப்பம் நிறைந்த சொற்களைக் கூறாதீர்! அவை ஒரு பொழுதும் பயன் தரா. பத்திமைக்கு வெப்பச் சொற்கள் பகை. பரமன் ஏறெடுத்தும் பாரான். பத்திமை வாழ்வு வேண்டுமாயின் சுடும் சொற்களைத் தவிர்மின்!

மனித வாழ்க்கை செயல்களை உயிர்ப்பாகக் கொண்டது. செயற்படா உலகம் செம்மை நெறியிற் சேர முடியாது. தொழிற்படா உலகம் தொல்லை இரும்பிறவிக் கடலைக் கடத்தல் முடியாது. செயற்படுக! செயற்படுக! ஆனால் காமத்தோடு செய்யற்க! காம உணர்ச்சி காரியத்தில் நாட்டங் கொடுக்காது. பயன்மீதே நாட்டங் காட்டும். ஒருத்தி உயிரை நேசிக்காது-காதலித்து அன்பு காட்டாது - அவளை வளர்க்காது - அவளிடத்தில் நலங்காண முடியாது. உடலின்பம் ஒன்றையே கருதிப் பெண்டாளுதல் காமம். இத்தகு காமம் இன்பத்தையும் வழங்காது. மாறாகத் துன்பத்தைத் தரும். பொருள், மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உண்பித்தும், உண்டும் மகிழப் பொருள் தேவை. இதற்குப் பொருள் தேடாது, ‘பொருளாளனா’கப் பொருள் தேடுதல் காமமாகும். நட்பு, தோழமை உலகத்தில் மிக உயர்ந்தது. ‘அது கிடைக்கும் இது கிடைக்கும்’ என்று நட்பு பூணுதல், நட்பன்று; காமம். காமம் என்பது பயனின்றி இயங்கும் ஓர் உணர்ச்சி. அது தன்னலத்தைச் சுற்றியே வட்டமிடும். மற்றவர்களைப் பற்றிக் காம உணர்வுடை யாருக்குக் கவலையே இருக்காது. அவர்கள் ஏதாவது செய்தாலும் காம விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளச் செய்வார்களே தவிர, பலருக்குப் பயன்படச் செய்யார். ஏன்? இந்த அசுர காமம் ஒருவனை இடமாகக் கொண்டு முதலில் இயங்கினாலும் பின்னே வளர்ந்து அவனையே மடக்கி - அவனை அணு அணுவாக அழித்தொழிக்கும். ஐயகோ! இத்தகைய காம உணர்வு மனித உலகத்தை அரித்து உருக்குலைக்கும் என்புருக்கி நோயாகும். வீட்டில் காதலித்து இன்புற்று வாழ்க! இது காமமன்று; அறம்! திருமடங்களில் துறவிருந்து உடைய பொருளைப் பேணி அறஞ் செய்க! அஃது அறம். ஆனால், செல்வச்செருக்கு, தன் முனைப்பு, மக்கட்பணி மறத்தல் காமத்தின் சின்னங்கள். துவராடையே துறவாகாது. நெஞ்சிற் சந்து பொந்துகளிலுங்கூட சம்பிரதாயமென்ற பெயரில் ‘நான்’, ‘எனது’ என்ற செருக்கு ஒட்டியிருக்கக் கூடாது. இத்தகு துறவு தூய உலகத்தை வழி நடத்தும் அறம். கடவுளுக்கு அருச்சனை செய்க! அவன் திருவடியைக் காதலித்து அருச்சனை செய்க! ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று அருச்சனை செய்வது காமம். ‘நாதன்தாள் வாழ்க’ என்று அருச்சித்தல் காதல், பக்தி.

மனித வாழ்க்கையின் மையம் மனமே! அவன் வீழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மனமே காரணம். மனத் தூய்மையே அனைத்து அறங்களுக்கும் அடிப்படை நெற்றி நிறைய நீறு தாங்கினால் போதுமா? பூசும் நீறுபோல் உள்ளும் புனிதமிருக்கவேண்டும். மனத் தூய்மை எளிதில் கிடைப்பதன்று. மனத்துய்மை இல்லாதார் தன் முனைப்பில் ஈடுபடுவர்; உயர்வு மனப்பான்மை கொள்வர். கூடிப் பழகுதலில் கூச்சங் காட்டுவர். ஆணவப் போக்கு ஆட்சி செய்யும். எப்பொழுதும் ஒருவழிப் பயணமே செய்வர். எதையும் எளிதில் மறவார். இத்தகு கேடுகள் மனத் தூய்மையின்மையின் சின்னங்கள். பத்திமை வளர வேண்டிய இடம் மனம், பயிர் வளர்தற்குரிய நிலம் திருந்தாமல் பயிரை வளர்க்க முடியாது. மனம் திருந்தாமல்-தூய்மையடையாமல் பத்திமை வாழ்க்கை வாழ்வது இம்மியும் முடியாது. பத்திமை வேடம் கொள்ளலாம். பஜனை செய்யலாம். ஆனால் அது பத்திமை வாழ்க்கையாகாது.

இறைவனை ஒன்றிய உணர்வுடன் ஏத்தி வழிபடுதல் வேண்டும். அலையும் மனம் கூடாது. வழிபடும் கடவுள் வடிவங்கள் பலவாகக் கூடாது. ‘இவர் தேவர், அவர் தேவர்’ என்று அலையக் கூடாது. வழிபாடு செய்யுங்காலத்தின் அளவால் பெருமை யுடையதாகிவிடாது. ஆரவாரச் சடங்குகளால் வழிபாடு சிறந்துவிடாது. வழிபாட்டுக்கு ஒன்றிய மனம் தேவை. இறைவன் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும்; பொருந்த வேண்டும். அதுவே வழிபாடு!

இறைவன் நாமத்தை நல்லவாறு சொல்லி வாழ்த்த வேண்டும். சிலர், நல்லவாறும் வாழ்த்த மாட்டார்கள். ‘பகைவர்களை அழித்து எனக்கு அருள் செய்க’ என்று இறைவனை வாழ்த்துதல் ஆரியமரபு. அங்ஙனம் வாழ்த்துதல் நெறியன்று. அவர்களுக்கு இறைவனும் அருள் பாலிக்க, மாட்டான். நல்லன கருதி, நல்லன சொல்லி, நல்ல வண்ணம் நன்றுடையானாக இருக்கின்ற இறைவனை வாழ்த்துதலே இறைவனை வாழ்த்தும் மரபு. இது தமிழ் மரபு. இங்ஙனம் வாழ்த்துதலே பக்திமைக்கு வித்து. பரமனருள் பெறுதற்குரிய வழி.

இங்ஙனம் பரபரப்பின்றி, கள்ளத்தனம் ஒழிந்து, காம உணர்வுடைய செயல்களிலிருந்து விடுதலை பெற்று, மனந்தூய்மையுடையவராகி இறைவன் திருவடிகளிடத்தில் அன்பு காட்டுதலையே பற்றெனக் கொண்டு ஒன்றிக் காதலித்து நல்லவாறே ஏத்தி வழிபட்டாலும் இறைவன் அருள் முழுநிலையில் முதிர்ந்து வெளிப்பட்டுவிடுவதில்லை. உயிரின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அளந்தே இறைவன் அருளை வழங்குவான். வழங்கக்கூடாது என்பதல்ல. வழங்கினாலும் பயன்படுத்தும் தகுதியிருக்காது என்பதனால்-அவன் வளர்த்து வளர்த்தே வழங்குவான். கண்ணப்பன் அன்பினை வளர்க்க ஆறு நாள் தேவைப்பட்டது. காளத்தியப்பனுக்கு! ஆனால், பன்னாள் அருச்சித்த சிவகோசாரியார் வளரவில்லை. இன்றோ கண்ணப்பர்களை வளர்க்க நம்முடைய கோயில்கள் விரும்பவில்லை. சிவகோசாரியார்களைப் பாதுகாக்கவே விரும்புகிறது. மனிதனின் ஆன்மத் தகுதிக்கு ஏற்றவாறே இறையருள் கிடைக்கும். இங்ஙனம் பத்திமை வாழ்க்கையின் சிறந்த இயல்பினைத் திருஞான சம்பந்தர்,

ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ளமொழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றனாம நாவினவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே,

என்று பாடுகிறார்.