குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/எது திருத்தலம்?
திருத்தலம் - சிறந்த பெயர்! ஊர்களெல்லாம் திருத்தலங்கள் ஆகா. திருக்கோயில் இருக்கும் இடமெல்லாம் திருத்தலமாகி விடுவதில்லை. ஆம்! திருத்தலம் இயற்கையில் அமைவதன்று. திருவருள் துணையுடன் வளர்ந்த மனிதர்கள் படைப்பது திருத்தலம். ஆம்! மனிதன் ஊர்களையும் படைப்பான். சொர்க்கத்தையும் படைப்பான்; நகரத்தையும் படைப்பான்; திருத்தலங்களையும் படைப்பான். படைக்கும் மனிதனின் தரத்திற்கேற்ப ஊர் என்று பெயர் பெறுகிறது; திருத்தலம் என்று பெயர் பெறுகிறது. திருஞானசம்பந்தர் திருத்தலத்திற்கு இலக்கணம் காட்டுகிறார்.
பொய்ம்மை - புண்ணியத்திற்கு எதிரிடை பொய்ம்மை உயிரின் வளர்ச்சிக்கு ஊறு செய்யும். உள்ளீடற்ற பதரினும் கேடானது பொய்ம்மை சேர் வாழ்க்கை. பொய்ம்மை, உயிர்க்கு ஊதியம் சேர்ப்பதற்குத் தடை. உயிர், ஊதியமற்றுப் போனால் உள்ளீடற்றுப் போகும். உயிரின் உள்ளீடாகிய அன்புறுபத்தி முதலிய இனிய பண்புகளில்லாதார் பொய்ம்மையே பேசுவர்; பொய்ம்மையே செய்வர். பாலை வனத்தில் பசுஞ்சோலையைக் கண்டாலும் காணலாம். பொய்ம்மை உலாவும் பதி, திருத்தலமாகாது. பொய்ம்மை செய்யாதவர் வாழும் பதியே திருத்தலமாகும்.
பொய்ம்மையை விஞ்சிய கொடுமை, சலம் செய்தல். கொலையினும் கொடுமை சலம் செய்தல். சலம் என்றால் என்ன? நல்லது போலக் காட்டித் தீமை செய்தல். அன்புடன் பழகுதல் போல நடித்துப் பகை வளர்த்தல். இதுவே வஞ்சகம். உள்ளம் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல். விரைந்து செய்வார் போலக் காட்டி - ஆனாலும், ஏதும் செய்யாதிருத்தல் சலம். வார்த்தைகளில் அக்கறை! ஆனால் வாழ்க்கையில் இல்லை! இத்தகையதோர் மனித உருவில் உலாவினாலும் இவர்கள் மனிதர்களல்லர். இத்தகையோர் வாழும் ஊர், வளர்தல் முயற்கொம்பே! ஊரே வளர முடியாத பொழுது, திருத்தலம் ஆதல் ஏது?
மனிதரல்லார், வள்ளுவர் வார்த்தையில் மக்கட் பதடி எனப்படுவர். யாக்கைக்கே இரை தேடி அலைபவர்; எப்படியாவது பிழைக்க வேண்டுமென்று எண்ணுபவர்; இவர்களுக்கு அறிவில் ஆர்வமில்லை; ஆள்வினையில் தேட்டமில்லை. துய்த்தலில் பெரு வேட்கை. எதையும் பேசுவர். எதையும் செய்வர். இவர்களுக்கு நினைத்ததே விதி. இவர்களை வள்ளுவர் கயவர் என்பார். கொல்லாமையை எடுத்தோதிய திருவள்ளுவர் கயவரைக் கொன்றால்தான் பயன் என்றால், கொல்லலாம் என்றார். இத்தகைய இழிஞரை - கயவரை நீதர் என்று குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர். நீதித் தன்மையிலாதவர் நீதராகலாம். இவர்கள் வாழும் ஊரும் சுடுகாடாகலாமே தவிர, ஊர் கூட ஆகாது. திருத்தலமாவதை எண்ணிக் கூடப் பார்க்க வேண்டாம்.
இது வரையில், திருத்தலமாவதற்கு எதிரிடையாகவுள்ள குணக்கேடுகள் பற்றித் திருஞான சம்பந்தர் விவரித்தார். அது போலவே, ஓர் ஊரைத் திருத்தலமாக்குவதற்குரிய பண்பு என்ன என்பதையும் விளக்குகிறர்.
மேட்டிலிருந்து பள்ளம் நோக்கித் தண்ணீர் வீழ்தல் இயற்கை. கீழ் நோக்குதல் உலக இயற்கை. மேல் நோக்கி வளர்தல் உயிரினத்தின் தலையாய கடமை. மனிதர்க்கு உறுப்பென அமைந்த புலன்கள் இயல்பில் அழுக்குச் சார்புடையன. இழுக்குடை நெறியில் உயிர்களை இழுத்துச் செல்லும் தகையன. இது புலன்களின் தன்மை. தன்மையென்றாலும், இயற்கையன்று; மாறுதலுக்குரியது; வளர்ச்சிக்குரியது. கீழ்மைப் படாது வளரப் புலன்களை வெற்றி கொள்ள வேண்டும். புலன்களை வெற்றி பெறாதார் நல்லவர்களாதல் முடியாது. அவர்களுக்கு இறையருளும் கிட்டாது. ஆதலால் வென்ற ஐம்புலன் உடைய சான்றோர் வாழும் ஊர் திருத்தலம்.
திருத்தலம் திருக்கோயில் மட்டுமன்று. முடிந்த முடிபாகத் திருக்கோயிலும் திருக்கோயிலைச்சூழத் தக்காரும் வாழும் ஊரே திருத்தலம் என்பது திருஞானசம்பந்தர் திருவுள்ளம். தகுதி பலவும் உடையார் வாழும் பதியே திருத்தலம். தகுதியுடையார்தாமே தனக்குவமையில்லாதானைச் சிந்தனை செய்ய இயலும். சிந்தனை சிவத்தில் தோய்ந்தால்தானே புலன்கள் அழுக்கினின்றும் அகலும். சிந்தனையைச் சிவத்தில் வைத்தார், இறைவனை நீங்காது போற்றுவர். உள்ளம் அதனால் தூய்மை பெறும்; அகநிலை செழிக்கும்; பொறிகள் புனிதம் பெறும். இத்தகு தக்கோர் எண்ணுவன விளங்கும். செய்வன துலங்கும். அவர்கள் வாழும் சூழலே இன்பச் சூழல். எம்பெருமான் இந்தச் சூழலில் திருவருள் திருவோலக்கம் கொள்ளும். அப்பொழுதே ஊர் திருத்தலமாகிறது.
நிலநீரொ டாகாச மணல் காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ் செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர் வாழுந் தலச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே,