குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/நீதியால் தொழுக
நீதியால் தொழுக
மனிதனது தேவைக்கேற்ப வருமானம் வந்து கொண்டிருந்தால் அவன் நேர்மைத் திறமுடையவனாக, ஒழுக்க சீலனாக, அறத்தின் வழிச்செல்பவனாகத் திகழ்கிறான். தேவையை நிறைவு செய்ய முடியவில்லையானால் திசைமாறித் திரும்புகிறான். தேவைப் பூர்த்திக்காக, சிந்தனை ஓட்டத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது. அவன் சிந்திப்ப தெல்லாம் ‘தேவை நிறைவு’ பற்றித்தான். அவ்வாறு முனையும் போது, அவனுக்கு முன்னாலே தோன்றும் நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலியவற்றைப் புறக்கணிக்க முயலுகிறான்.
இங்குதான் சமயம் மனிதனைத் திருத்தி நல்லாற்றுப் படுத்துகின்றது. ‘சின்ன தேவைக்காக உலகின் நிலை பேறான ஒழுக்க நெறியை விட்டு வழுவாதே’ என்று நல்லுரை பகருகின்றது சமயம். மனிதனது மனத்திலே தோன்றும் தீய எண்ணங்கள், தாறுமாறான சிந்தனைகள் இவைகளுக்குத் தடை போடுகிறது சமயம். சமயச் சார்பற்ற ஒழுக்க நெறி, ஊற்றுக் கசிவில்லாத ஓடை போன்றதாகும்; மணற் பரப்பின் மீது கட்டப்பட்ட மனை போன்றதாகும்; வேரில்லாத மரம் போன்றதாகும். மனிதனை மனிதன் வஞ்சித்து ஏமாற்றி வாழ்கின்ற காலத்தில் சிந்தனையைத் திருத்துகிறது சமயம். சிந்தனை செயலாக வந்த பின்னர், செயலைத் திருத்த முற்படுகிறது அரசியல். குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது சட்டம். இந்தக் குற்றத்திற்கு அடிப்படையாக இருக்கும் எண்ணத்தையே-சிந்தனையையே திருப்பி நல்வழிப் படுத்துகிறது சமயம்.
வாழ்க்கை எப்பொழுதுமே குறைவுடையதுதான். சில இடங்களில் இதற்கு மாறாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் எல்லாருக்கும், எவ்வகையிலேனும் குறைவு இருந்து கொண்டேதான் இருக்கும். நிறைவான பொருள் எது என்பதைக் துருவித்துருவி ஆராய்கின்ற பொழுது ஆதியும் அந்தமுமற்ற இறைவன் ஒருவன்தான் என்ற முடிவு ஏற்படுகிறது. இறைவன் குறைவற்றவனாக அன்பே உருவாக இன்பமே வடிவினனாக இருக்கின்றான். இத்தகு பொருளை மனிதன் சார்ந்திருப்பதனால் சான்றாண்மை மிக்கவனாக மாறிவிடுகின்றான். இறைவனைச் சார்வதற்குச் சமயமும் வழிபாடும் உறுதுணையானவை.
இறைவனைத் தொழுதல் ஓர் அறிவியல் முயற்சி. அறியாமையில் அல்லலுறும் உயிர் ஞானத் திரளோனாக நிற்கும் இறைவனைத் தொழுதல் மூலம், அறியாமை நீங்கப் பெறுகிறது; உயிர் ஞானம் பெறுகிறது. துன்பத் தொடக்கில் தொல்லையுறும் உயிர், துன்பத் தொடக்கிலிருந்து விடுதலை பெற்று, இன்பத்தில் திளைத்து மகிழ்கிறது. இறைவனைத் தொழுதல் இறைவனுக்காக அல்ல. அவன் பெறக்கூடியது ஒன்றுமில்லை. இறைவனைத் தொழுதல் உயிரின் வளர்ச்சிக்கே யாம். இறைவனைத் தொழுதல் என்றால் உடனடியாகச் சடங்குகளே நினைவுக்கு வரும். சடங்குகள் சமயமாகா; இறைவனைத் தொழுதல் ஆகா. ஆனால் அவையின்றியும் சமய வாழ்வு வாராது; கடவுளைத் தொழுதலும் ஆகாது. சடங்குகள் சமயவாழ்க்கைப் பயிற்சிக்குத் தொடக்க நிலையில் துணை செய்வன; வழிபாட்டுணர்வில் நிலைத்து நிற்கக் காப்பாகத் துணை செய்வன. இறைவனைச் சடங்குகளால் தொழும் அளவிலேயே தொழுகை முற்றுப்பெறாது. சடங்குகள் தொடக்க நிலையின. இறைவனைத் தொழுதலாகிய பயன் அல்லது சமய வாழ்க்கை அகநிறை அன்பால் அருளார்ந்த சீலத்தால், நீதியால், என்று முழுமை பெறுகிறதோ அன்றே இறைவனைத் தொழுதல் முழுமை நலம் எய்துகிறது.
சிலர், இறைவனைச் சடங்குகளால் தொழுகின்றனர். இல்லை; நாடகத்தால் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அழுக்காறு அடங்கவில்லை; அழுக்காறு தோன்றுவதற்குரிய கூறுகளும் கெடவில்லை; அவாக்களால் அலைப்புறுகின்றனர்; வெகுளியால் வெந்து அழிகின்றனர்; கடுமொழி பேசுகின்றனர்; ஆங்காரத்தில் விஞ்சுகின்றனர்; பகைத் தீயால் பலருக்குத் துன்பம் செய்கின்றனர். தற்சார்பே தழைத்து நிற்கிறது; அநியாயமே ஆட்சி செய்கிறது; அநீதி அணிகலனாக விளங்குகிறது. இத்தகையோர் மனிதரில் “பொக்கு” போன்றவர். “பொக்கு” என்றால் உள்ளீடில்லாத பதர், “பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன்” என்பது அப்பரடிகள் வாக்கு. இத்தகையோர் சமய வேடங்கள் பூணலாம். ஆரவாரமான சமய சடங்குகளைச் செய்யலாம். ஆயினும் ஏன்? அது இறைவனைத் தொழுதலாகாது.
திருஞானசம்பந்தர் இறைவனைத் தொழும் நெறி காட்டுகிறார். இறைவனைத் தொழுதல் என்பதே இறைவனின் குணங்களை மேற்கொண்டு ஒழுகுதல் என்பதே பொருள். பொறிகளால் செய்யும் நூறாயிரம் சடங்கை விட புலன்களால் நின்றொழுகும் பண்பு ஒன்றேயாயினும் அதற்குரிய தகுதி உண்டு; பயன் உண்டு. பலநூறு பண்புகள் புலனில் நின்றொழுகுதலிலும் உயிர்க்கு அவற்றைப் பண்பாக சேர்த்தல் அதனிலும் விழுமியது. ஆதலால் வாழும் வாழ்க்கை முறையால் இறைவனைத் தொழுதல் சிறந்த தொழுகை முறை.
இறைவன் துலாக்கோலனையன், வேண்டுதல் வேண்டாமையிலாதவன், நீதியின் வடிவம். இல்லை அவனே நீதி! நீதி மனித உலகத்தைத் தழுவியது. இல்லை! நீதி உயிர்க் குலமனைத்தையும் தழுவியது. உயிர்க்குலமனைத்துக்கும் ஊறு செய்யாத தத்துவமே நீதி. உயிர்க்குலத்திற்கு இயல்பியல் அன்பு காட்டுவதே நீதி. உயிர்க்குலத்தைக் காக்க அவசியம் ஏற்படும்போது தம்மை ஒறுத்துக் கொள்ளுதலே நீதி. நீதி உழைப்பைக் கவர்வதில் மகிழ்வதல்ல; உழைப்பில் மகிழ்வது. நீதி துய்ப்பில் மகிழ்வதல்ல; துறவில் மகிழ்வது. நீதி தற்சார்பைச் சார்ந்ததல்ல; நீதி இன்புறுத்துவதில் இன்புறுவது; நீதி வாழ்விப்பதில் வாழ்வது. இத்தகைய சீலம் நிறைந்த நீதியாய் வாழ்கின்ற வாழ்க்கை முறையால் இறைவனைத் தொழு; வினைச் சார்பு வராது என்கிறார் திருஞானசம்பந்தர். ஆம், செயல் புரிவது உயிரின் இயற்கை, செயல் மாண்டு அடங்குதல் எளிதன்று. செயலில் தவம் செய்தலே நம்மனோர்க்குச் சாலும். அதாவது வினை செய்தலில் தவம் செய்தலே நம்மனோர்க்கு இசைந்தது. வினை செய்தால் அவ்வழி பற்றும் பாசமும், இன்பமும் துன்பமும் வரத்தானே செய்யும்! அவ்வழி உயிர் மன அலைவுகளுக்கு ஆளாகும். ஆனால் நீதியால் நின்று வினை செய்யும் பொழுது அந்த வினை செயலைப் பெருக்குவதைவிட செயல் மாண்டடங்கத் துணை செய்கிறது. ஆதலால் செயல் செய்க! தற்சார்பான செயல்களைத் தவிர்த்திடுக! உலகுயிர் தழைத்தினிது மகிழ்ந்து வாழச் செயல் செய்க! அதுவே, இறைவனைத் தொழும் முறை என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.
போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்பினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.