உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/உண்மைத் தொண்டர்

விக்கிமூலம் இலிருந்து

16
உண்மைத் தொண்டர்

உயிர், ஒரு வளமார்ந்த விளைநிலம். அறிவார்ந்த விளை நிலம், ஓயாது தொழிற்படும் தன்மையது. விதை விதைக்காமலே உணர்வுகளை மையமாகக் கொண்டு வினைகளை விளைவிக்கும் தன்மையது. அலை கடலில், அலை வரிசை ஒன்றின் பின் ஒன்றாய் வீசுதலைப் போல அவா, அலைகள் வீசும் தன்மையது. ஒன்றை நினைக்கும், அதை அழித்துப் பிறிதொன்றை நினைக்கும். ஓயாத போராட்டம். ‘அவா வெள்ளம்’ என்று மணிமொழி பேசும். பிறப்பைத் தரத்தக்க ஆற்றல் அவாக்களுக்கே உண்டு. செயலுக்குக் களம் அவா. அவாவுக்குத் தாய் ஆசை. ஆசை அவாவைத் தூண்ட அவா செயலைத் துண்ட இன்பம்-துன்பம், வசை-வாழ்த்து, காய்தல்-உவத்தல், பகை-நட்பு ஆகிய சுழிகளில் உயிர் கிடந்து அலமருகின்றது. அலைகடலும்கூட நள்ளிரவில் உறங்கும் என்பர். அவா வெள்ளத்தால் அலைக்கப்பெறும் உயிர், பேய் படுத்துறங்கும் இரவிலும் உறங்குவதில்லை. மகிழ்ச்சி மேலிட்டிருந்தால் கற்பனை. ஆழ்துயில் கிடைக்காமலிருந்தால் கனவு. மனம், பகைப்புயலில் சிக்கித் தவித்தால் குள்ளநரித்தனச் சதித் திட்டங்கள். இங்ஙனம், சொறியச் சொறிய அரிப் பெடுக்கும் வினை வழிப்பட்டு உழலும் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற வழி என்ன?

தொண்டராக வேண்டும். அதுவே, வினை நீக்கத்திற்குரிய வழி. தொண்டராதல் வினை நீக்கத்திற்குத் துணை செய்யுமா? அதுவே இன்றைக்கு ஒரு தொல்லையாக இருக்கிறதே! இல்லை, இல்லை. தொண்டிற்குத் தொல்லை உலகத்தில் இல்லை! இல்லையே! போட்டிச் சங்கங்கள் தோன்றுகின்றன. அரசியல் கட்சிப் போட்டா போட்டிகள் இருக்கின்றன. அருள்நெறி மன்றம் என்றால் தவநெறி மன்றம் தோன்றுகிறது. பேரவை என்றால் இந்துமன்றம் தோன்றுகின்றது. இவையெல்லாம் தொண்டு கருதித்தானே தொடங்கப் பெறுகின்றன! இல்லை! இல்லை! இவையெல்லாம் சில நலன்களை மையமாகக் கொண்ட அமைப்புக்கள்! தொண்டிற்கெனத் தொடங்கியவை யாகா.

தொண்டராதல், எளிதன்று. தொண்டராம் தன்மைக்குப் பழுத்த மனம் வேண்டும். விருப்பு, வெறுப்பு இவைகளின் நாமங்கூட அறியா நன்னெஞ்சு தேவை. பணி செய்தலன்றிப் பயன் பற்றிக் (தற்பயன்) கணக்கிடும் நோக்கம் கூடவே கூடாது. ஓயாது உழைத்திடும் உயரிய பண்பு தேவை. சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் செழுந்தவம் செய்யும் இயல்பு தேவை.

இத்தகைய உயரிய குணங்களோடு மாந்தர் உலகத்திற்குத் தாயெனவும், தாதியெனவும், அன்பில் தாழ்ந்து செய்யும் தொண்டே தொண்டு. இத்தகைய தொண்டு உயிரை உருகச் செய்யும். உணர்வைப் பழுக்கச் செய்யும். செயல் நிகழும். மனத்தில் காயமிருக்காது. தற்செருக்கு இருக்காது. புலி வேட்டையிலும் கொடுமையான புகழ் வேட்டைக்கு அங்கு இடமில்லை. அடக்கம் அங்கு ஆட்சி செய்யும். பணிவே பண்பாக விளங்கும். உதவி செய்வோர், உதவி பெறுவோர் என்ற வரையறையும் இல்லை. உண்மைத் தொண்டுப் பார்வையில் பெரியோரும் இல்லை; சிறியோரும் இல்லை. இத்தகைய பண்படுத்தப்பெற்ற பழுத்த மனம் கிடைத்த பிறகு செய்வதே தொண்டு. அஃதல்லாத பொழுது செய்வது தொண்டாகாது. அஃதொரு வகை வினையே. இந்த வினை தீமையையோ நன்மையையோ செய்யும். துன்பத்தையோ இன்பத்தையோ அல்லது இரண்டையுமோ தரும். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தரும். உலகத்தில் விளையாட ஓர் அனுமதிச் சீட்டாக இது பயன்படலாம். ஆனால், உய்திபெற வேண்டுமானால் தொண்டராதலே நன்று. தொண்டராகிச் செய்யும் தொண்டு - செயலே செய்தாலும் - பின் பிறப்பைத் தராது. வாய்விண்ட வித்தைப் போல வினை மாண்டு போகும். இன்ப அன்பு செழிக்கும். அன்னியூர் ஆண்டவனை இதயத்தில் எழுந்தருளச் செய்க! அடக்க நினைக்காதே, அடங்குக! பணி செய்க! கள்ளினும் காமத்தினும் கொடிய புகழினைக் காமுற்று அலையாதே! இகழ்ச்சி கண்டு ஏக்கமுறாதே! யாவர்க்கும் தாழாகப் பழகு! வினை விளைத்தற்குக் காரணமாகிய உடலை ஓயாது உழைப்பில் ஈடுபடுத்து. உலகு தழைக்க உழைத்திடு. மற்றவர் கண்ணுக்கு மறைவாக வாழ். ஒளிந்தல்ல, ஒழுக்கத்தின் பாற்பட்டு! தொண்டராவாய்!

குண்டர் தேரருக் கண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை விண்டு போகுமே.

- திருஞானசம்பந்தர்