உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/கடமையா? கடவுளா?

விக்கிமூலம் இலிருந்து
15
கடமையா? கடவுளா?

“கடமையைச் செய். அதுவே போதும்; கடவுள் வழிபாடு அவசியமில்லை” என்று குரல் கேட்கிறது! இந்தக் குரல் கொடுப்பவர்கள் தங்களை அப்பட்டமான புதிய பகுத்தறிவுவாதிகளாகக் கருதிக் கொள்கிறார்கள். “கடவுளை வழிபடுவதே கடமை. கடவுளை வழிபடாதவர் எந்தக் கடமையைச் செய்தாலும் பயனில்லை.” இப்படி மற்றொரு குரல் கேட்கிறது! இந்தக் குரல் கொடுப்பவர்கள் பழைமைவாதிகள். இவர்களுக்கு உலகம் இன்னமும் பின்னேதான் இருக்கிறது. எப்பொழுதும் உலகம் பின்னே கிடப்பதில்லை. நாளைய உலகம் முன்னே கிடக்கிறது. பழைமையாக இருப்பது குறையல்ல. ஆனால் முன்னோர் நெறி என்ன என்பதை உள்ளவாறு உணரவேண்டும். “கடமையைச் செய்; கடவுளை வழிபடு” என்று மூன்றாவது குரல் கேட்கிறது! இந்தக் குரல் நடைமுறை வாழ்க்கையொடு கூடியது; ஏற்றுச் செயற்படக்கூடிய குரலும் கூட. இந்தக் கருத்துப் போரில் ஆளுடைப் பிள்ளையார் எந்த அணியில் நிற்கிறார்? ஏழாம் நூற்றாண்டில் நடமாடியவர் ஆளுடைப் பிள்ளையார்; அவர் சமய நெறியாளர்; சமயசீலம் நிறைந்தவர்; சமய நெறியை உடலுக்கு உடுத்தும் உடையென இல்லாமல், உயிர்க்கு உடுத்திய உடலெனக் கருதிப் போற்றியவர்; இல்லை, உடலுக்குள் விளங்கும் உயிரெனக் கருதிப் போற்றியவர்.

கடமை - இந்த உலகத்தின் இயக்கத்திற்குரிய அச்சாணி. கடமை யென்ற அச்சாணியில்தான் உலகம் சுழல்கிறது; இயங்குகிறது. வாழ்தலுக்கும், சாதலுக்கும் இடையே உள்ள போராட்டம் கடமையை மையமாகக் கொண்டது. சொர்க்கத்தை அடைய வேண்டுமானாலும் அடி அடியாக நகர்ந்து சென்றுதான் அடையவேண்டும். சொர்க்கத்தை அடையும் காலம் வரையில் வாழ்கின்ற வாழ்க்கையென்ற ஒன்று உண்டே! அந்த வாழ்க்கையை மனிதன் கடன் படாமல் நிகழ்த்த வேண்டும். களவு செய்யாமல் நடத்தவேண்டும். வாழ்க்கையைக் கடன் படாமலும் களவு செய்யாமலும் நடத்தக் கடமை செய்தலைத்தவிர வேறு வழியேது? உழைக்காமல் உண்டால் உழைத்து உணவைக் கொடுத்தவனுக்குக் கடன் படாமல் வேறு என்ன? உழைப்பை உழைப்பால் ஈடு செய்யாமல் எடுத்துக்கொண்டால் அது களவு. எடுத்துக்கொண்ட அளவுக்குத் திரும்பக் கொடுத்ததாக இல்லை. இந்தக் கடன்காரனைக் கடவுள் உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும். ஆதலால் சொர்க்கத்தின் வாயிலைத் திறக்கும் சாவி கடமையேயாகும்.

கடவுள், யாரை விரும்புகிறார்? பசி தீர உண்டு உறங்குபவனையா? ஒருபொழுதும் இல்லை. கடமையைச் செய்யாதவன் கடவுளுக்குப் பக்தனாக முடியாது. சைத்தானுக்கு வேண்டுமானால் தோழனாகலாம். கடவுளே கடமையின் திருவுரு; உலகத்தின் மிகப்பெரிய தொழிலாளி; ஓய்வு உறக்கமின்றித் தொழிற்படுபவன்; ஐந்தொழில் நிகழ்த்துபவன். கடவுள், கடமையை விருப்புடன் செய்பவன் நெஞ்சுக்குள்ளேயே எழுந்தருளுகின்றான். கடமை உணர்வுடைய மனமே, கடவுள் உணர்வைப் பிரதிபலிக்கும் மனச்சாட்சி. அவன் நெஞ்சமே கடவுளின் சந்நிதி.

திருஞானசம்பந்தர் செய்தொழில் பேணுதல் பற்றி, தொழில்முறை பற்றிப் பேசுகிறார். செய்கிற தொழிலை முறையாகச் செய்யவேண்டும்; திறமையாகச் செய்ய வேண்டும்; பயன்தரத்தக்க வகையில் செய்யவேண்டும். அது மட்டும் போதாது. நிலையான பயன் தரத்தக்க வகையில் அத்தொழிலைப் பேணுதலும் வேண்டும். செய்தொழிலைப் பேணி வளர்க்காது போனால் திறன் குன்றும்; வளம் குறையும்; வாழ்க்கை கெடும். அப்பொழுது நரகம் நாடி நம்மைச் சூழும். செய்தொழிலைப் பேணி வளர்த்தால் அறிவு வளரும்; ஆற்றல் பெருகும்; வளம் கொழிக்கும்; இறைவன் எங்கே? எங்கே? என்று கடமையைச் செய்பவனைத் தேடி வந்து தோழமை கொள்வான்; துணை நிற்பான். இறைவன் செல்வனாக வீற்றிருப்பான்; இன்பம் தருவான். யாருக்கு? பூவும் நீரும் இட்டவர்க்கு மட்டுமா? இல்லை, செய்தொழில் பேணியோர்க்குமாம்.

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
பன்றிவெண்கொம் பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்விச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கி வந்தளிர் மேனி
யரிவையோர் பாக மலர்ந்த
பெம்மா னல்கிய தொல்புக ழாளர்
பேணு பெருந்து றையாரே.

திருஞானசம்பந்தர் காட்டும் நெறியே பழைய நெறி. அதுவே புதிய நெறியும்கூட கடமையைச் செய்! கடமையைக் கடவுள் வழிபாடெனச்செய்! ஒன்றிய உணர்வுடன் தொழிற்படு! ஆற்றலை ஆள்வினையில் காட்டு! செய்தொழிலைச் செப்பமுறச் செய்ய அறிவையும் ஆற்றலையும் நல்கி வழிகாட்டும்படி கடவுளைப் பிரார்த்தனை செய். இதுவே திருமுறை நெறி.