உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/சமய இலக்கியங்கள்

விக்கிமூலம் இலிருந்து


32

சமய இலக்கியங்கள்

தமிழ், காலத்தால் மூத்த மொழி, கருத்தாலும் மூத்து முதிர்ந்து வளர்ந்த மொழி. இலக்கியம் - இலக்கணம் - இலக்கியம் என்று சுழற்சி முறையில் செழித்து வளர்ந்த மொழி. தமிழின் செழிப்புக்கு அதன் இனிமையும், தமிழிலக்கியங்கள் காட்டும் நெறிமுறைகளும் எடுத்துக்காட்டுக்கள்.


தமிழில் விளங்கும் தொன்மையான நூல் தொல் காப்பியம். இந்நூல் 2700 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தென்பர் மொழி வரலாற்றறிஞர். தொல்காப்பியம் ஒர் இலக்கண நூல். இலக்கியங்களின் வழிதான் இலக்கணங்கள் தோன்றுகின்றன. அங்ஙனமாயின் தமிழிலக்கிய உலகம் 2700 ஆண்டுகளுக்கு முந்திய பழமையுடையது. தொல்காப்பியம் இலக்கண நூல்களுள் ஒன்றென அழைக்கப்பெற்றாலும் அஃது அப்பட்டமான மொழி இலக்கண நூல் மட்டுமன்று. வாழ்க்கையின் இலக்கணம் கூறும் வாழ்வியல் நூலுமாகும். எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே, இலக்கணம் கண்டன. ஆனால், தொல்காப்பியம் அம் மொழியைப் பேசி வாழும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற உணர்வு அரும்பும் தொடக்கமே சமய நெறியின் தொடக்கம். வாழ்க்கையின் அருமைப்பாட்டை உணர்தல், வாழ்க்கையின் நோக்கத்தையறிதல், வாழ்வாங்கு வாழக் காமுறுதல், ஒழுங்குகள் கால் கொள்ளுதல், ஒழுக்கநெறி நிற்றல் ஆகியன தலையெடுக்கச் செய்து தனி மனிதனையும் சமுதாயத்தையும் வழி நடத்துவதே சமயம், ஆதலால், தொல்காப்பியம் சமய இலக்கியம் என்று அழைக்கப்பெறாவிட்டாலும் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழரின் சமய அனுபவம் மெய்ப்பொருளியல் அடிப்படையிலானது. உலகியலை-உலகியலின் நிகழ்வுகளை ஆய்ந்து, சிறந்த செம்பொருள் காணும் ஆர்வமுனைப்பில், வாழ்க்கையில் முகிழ்த்த - நெறி-செந்தமிழ்ச் சமயநெறி. இக்கருத்தினைத் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் கூட நமக்குத் தருகின்றன.

எழுத்துக்களை “உயிரெழுத்து” என்றும், “மெய்யெழுத்து” என்றும், “உயிர்மெய்யெழுத்து” என்றும் முத்திறப் படுத்திய நுண்ணறிவு உயிரியல் வரலாற்றில் உண்மையாகி வருகிறது. உயிர்கள் பிறப்பு, இறப்பு இல்லாதவை. உயிர்கள் பிறத்தல்-இறத்தல் என்று நிகழ்வன, உடல் மாற்றங்களைப் பற்றியன-உயிர்கள் என்றும் உள்ளவை; தலைமைக்குரியவை. உயிரெழுத்துக்களின் முதலெழுத்தாகிய 'அ'வின் இலக்கணமும் இதுவேயாம். உடம்பினுள் இயங்கும் ஒலிக்கு முதலாகிய நாதம் ‘அ’ எழுத்து வடிவத்திலேயே இயங்குகிறது. உயிரின் இயக்கத்திற்கு உடம்பு கருவி, உயிர் இயக்கினாலொழிய உடம்பு தானே இயங்காது. மெய்யெழுத்தின் நிலையும் அதுவே. உயிரும் மெய்யும் கூடிய நிலையில் இயக்கங்கள் விரிவடைகின்றன. உயிர் மெய்யெழுத்தும் அப்படியே. பொருளதிகாரத்திலும் கடவுள் வாழ்த்து, மனையற வாழ்க்கை, துறவற வாழ்க்கை ஆகியன குறித்து விளக்கும் தொல்காப்பியத்தை ஒரு சிறப்பான சமய இலக்கியமெனக் கூறல் தவறன்று. ஆயினும் இன்றுள்ள நிலையில் வாழ்க்கையிலிருந்து சமயம் பிரிந்து நெடுந்தொலைவு விலகி, வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டும் விளங்குவதால் பலர், தொல்காப்பியத்தைச் சமய நூல் என்று கருதுவதில்லை.

தொல்காப்பியர் காலந்தொட்டே நெறிமுறை உணர்வு, தமிழர் வாழ்வில் பொதுளியிருந்ததால் பின் தோன்றிய சங்க கால இலக்கியங்கள்-காதல்-வீரம் பற்றி மிகுத்துக் கூறினும் வாழ்வாங்கு வாழும் ஆர்வத்தையும் காண்கின்றோம். சங்ககால இலக்கியங்களில் பரிபாடலும், திருமுருகாற்றுப் படையும் தனித்தன்மையுடைய சமய இலக்கியங்களாகும்.

பரிபாடல் மிகச் சிறந்த சமய இலக்கியம். உயிர், உலகியல் தொடர்புடைய வேட்கைகளின் ஆர்வம் காட்டித் தேடும் இயல்பினது. இவ்வுலகில் உயிர் வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது; தவிர்க்க முடியாதது. தேவைகள் வாழ்க்கையை உந்திச் செலுத்துவன.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
என்பது தமிழ்மறை. ஆனால் பரிபாடலில் பொன்னை விரும்பி வேண்டவில்லை. பொருளை விரும்பி வேண்ட வில்லை. போகத்தை விரும்பி வேண்டவில்லை. ஏன்? பொன்னும் பொருளும் மானிட சாதியின் படைப்பாற்றல் துணைக்கொண்டு படைக்கப்படுவன. போகம் அதாவது இன்புறுதல் மனித நலன்களைப் பொறுத்தது. இவற்றை இறைவனிடம் கேட்கும் பழக்கம் தமிழ்ச் சமய நெறியில் இல்லை. கேட்டாலும் இறைவன் தரமாட்டான். அவன் காரணங்களாக அருள் செய்வானேயன்றிக் காரியங்களாக அல்ல. என்ன வேண்டப்படுகிறது? அருள் வேண்டப் படுகிறது; அருளைப் பெற்றுத் தரும் அன்பு வேண்டப்படுகிறது. அருளையும் அன்பையும் படைத்திடும் அறம் வேண்டப்படுகிறது.

யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமு மல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளினர்க் கடம்பில் ஒலிதா ரோயே.

மேலும் சமய வாழ்க்கை தனி ஒர் உயிரின் உய்திக்கு மட்டுமன்று. ஒர் உயிரின் வாழ்க்கையைச் சமுதாய வாழ்க்கையில் இணைத்து வளர்ப்பதே சமயம். சிறந்த சமய நடைமுறை சமுதாய அமைப்பு கால்கொள்ளத் துணை செய்வது. சமுதாயத்தை இணைத்து அனைத்து இன்புறுத்த-இன்புற அன்பு தேவை; அறம் தேவை. தமிழ்ச் சமய இலக்கியங்கள் சமுதாய ஒழுகியலை வலியுறுத்துவன. ஏன்? கடவுளுக்கே 'நீதி’, என்று பெயரிட்டு அழைத்தது தமிழ்ச் சமயம். ஆதலால் சமுதாய வாழ்வியலறங்கள்-உணர்வுகள் இங்கு வேண்டப்படுகின்றன.

சங்க கால இலக்கியங்கள், முழுமையாக வளர்ந்த கவிஞர்கள் பலரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. சங்ககால இலக்கியங்களில் காதல் உண்டு; வீரம் உண்டு; ஆட்சி முறைகள் உண்டு! இவைகளின் ஊடே அறநெறிக் கொள்கைகளும் விளக்கமுற அமைந்து கிடக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். சங்க காலத்தில் வாழ்க்கை முழுமையுற்றிருந்தது. சங்ககால வாழ்க்கை, சீரான வாழ்க்கையாக இருந்ததாலும் வாழ்க்கையில் இயல்பாகவே சமயநெறிச் சீலங்கள் விளங்கியதாலும் சமயத்தை மிகுதியும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடிலாது போயிற்று. ஆயினும் சமய இலக்கிய வரிசையில் இவைகளும் அடங்கியன என்பது தான் உண்மை.

மானிட வாழ்க்கை புலன்களால் ஆயது. புலன்கள் தூய்மையாக இருக்க வேண்டும். பலர், பொறிகளில் தூய்மை காட்டுவர். அஃது அரியதொன்றன்று. இன்று சிலர் புறத் தோற்றத்தில் செவ்விய தோற்றம் காட்டுகின்றனர். அவர்களுக்கு விளம்பரமும் நிறையச் செய்யப்படுகிறது. உள்ளூரில் வாழும் சராசரி மனிதரிடம் ஆர்வங்காட்டாதவர்கள், உலகு அவாவி நிற்கின்றனர். அவர்களின் அண்மையில் சென்றால் சாதித்திமிர், மற்ற மானிட சாதியை இழிவாக நினைக்கும் இழிநிலை, மொழிவெறி, காசு பறிக்கும் உத்திகள், வஞ்சனைகள், அம்மணமான புகழாசை முதலியன முடைநாற்றம் வீசுவதைக் காண்கிறோம். இவற்றைக் கூர்ந்து உணரும் மோப்ப ஆற்றல் இன்றைய மானிட சாதிக்கு மிகுதியும் இல்லை. அதனால் சங்ககால இலக்கியம் காட்டும் வாழ்க்கை முறை, பொறிகளில் தூய்மை காத்தலன்று; புலன்களில் தூய்மை காத்தலாகும். புலன்களில் தூய்மையுடையாருக்கே செந்தண்மை வரும். அதனால்தான்,

புலனழுக்கற்ற அந்தணாளன்

என்று புறநானூறு பேசுகிறது. இஃதொரு சமயக் கோட்பாடேயாம்.

அது மட்டுமா? தமிழர் தம் வழிபடு கடவுளாகிய பரசிவத்தின் வரலாறுகள் பலப்பல. அவை பழைய வரலாறுகளாகவும் உருப்பெற்றுள்ளன; இலக்கியச் சான்றுகளாகவும் இடம்பெற்றுள்ளன. நமக்கு வரலாறு இன்றியமையாததன்று; அந்த வரலாறு வடித்துத் தரும் பயனுடைய வாழ்க்கை நியதி இன்றியமையாதது. சாதாரணமாக உயிரினம் வாழத்தான் விரும்புகிறது. எளிதில் இறக்க யாரும் விரும்புவதில்லை. ஏமாற்றங்களால் ஏற்படும் மனக்குறையால் நிகழும் தற் கொலைகள் உணர்ச்சி வயப்பட்டவை. அவை கணக்கில் எடுத்துக்கொள்ளத்தக்கன அல்ல. எல்லாரும் நெடுநாள் வாழத் துடிக்கின்றனர். அதற்காக மருந்துகளைத் தேடி அலைகின்றனர். அதுமட்டுமா? தாம் வாழ்வதற்காக மற்றவர்களைப் பலி கொடுப்பதற்கும்கூடச் சிலர் ஆயத்தமாகின்றனர்.

இது மனித இயல்பாக இன்று இருக்கிறது. பரசிவத்தின் நிலை என்ன? அமரர்களைக் காப்பாற்ற அலைகடலில் எழுந்த நஞ்சினை, தாம் உண்டது சிவம். அமரர்கள் சாவா மருந்தாகிய அமுதத்தை உண்டனர். ஆனால் சாவைத்தரும் நஞ்சினையுண்ட சிவம் வாழ்ந்தது. சாவா மருந்தை உண்ட அமரர்கள் செத்தனர்.

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்'

என்பது சிலப்பதிகாரம். ஏன்? அமுதத்தால் மட்டுமா வாழ்ந்துவிட முடியும்? அமுதத்திலும் உயர்ந்த நல்லெண்ணம் வேண்டாமா? மற்றவர்கள் வாழவேண்டுமென்ற உணர்வே சிவம். யார் செத்தாலும் அக்கறை இல்லை; தாம் வாழ்ந்தால் போதுமென்ற அமரரின் எண்ணம் நஞ்சினும் கொடியது. ஆதலால், அமரர் தம் நெஞ்சத்திலூறிய நஞ்சை அமுதத்தாலும் மாற்ற முடியவில்லை. ஆதலால், செத்தொழிந்தனர். இக்கருத்தினை எவ்வளவு நயம்படப் புறநானூறு பேசுகிறது.

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்கொடி தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.

நெல்லிக்கனி, சாவா மருந்து. அதியமான் தான் வாழ விரும்பாமல் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரே வாழ வேண்டும் என்று எண்ணித் தருகின்றான். அதனால் பண் பாட்டுலகில் என்றும் அதியமான் வாழ்கின்றான். “நீல கண்டம்” தன்னல மறுப்பின் சின்னம்; அருளுடைமையின் அடையாளம்.

ஓர் இனத்தில் சமயம் தோன்றி வளர்வது அந்த இனம் நன்கு வளர்ந்த காலக்கட்டத்தில்தான்; தமிழ், சமயத்தில் சிறந்து விளங்கும் மொழி. கடவுள் நம்பிக்கை, மதம், சமயம் ஆகியன ஒரு தன்மையன போலத் தோன்றினாலும் மிகுதியும் வேறுபாடுடையன என்பது எண்ணத்தக்கது. தமிழர் சமய நெறிக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், தமிழ்ச் சமய நெறியின் கடவுள் நம்பிக்கை மற்ற சமயங்கள் அல்லது மதங்கள் கடவுளைக் கருதுவது போலவன்று. தமிழ்ச் சமயத்தின் கடவுள் நம்பிக்கை, நம்பிக்கையின் பாற்பட்டது; நல்லெண்ணத்தின்பாற்பட்டது; ஆக்கத்தின் வழியிலானது; நீதியின்பாற்பட்டது.

மதம், மக்கள் மன்றத்தைத் தழுவாதது. சமயம், மக்கள் மன்றத்தைத் தழுவியதாக, மனித குலத்தை ஆக்குவதற்காகவே தோன்றியது. மதம், உருவாக்கப் பட்டது. சமயம் பரிணாம வளர்ச்சியில் உருவானது. மதத்திற்குப் பகுத்தறிவு பகையானது. சமயத்திற்குப் பகுத்தறிவு உடன்பாடானது. மதம், மறுமையைப் பற்றிப் பேசுவது. சமயம் இம்மையையும் பேசும்; மறுமையையும் பேசும், மதம் ஊழ்வினையின் வலிமையை மிகுத்துக் காட்டும். சமயம், ஆள்வினையை மிகுத்துக் காட்டும். மதம், சிற்றெல்லைகளைப் படைக்கும். சமயம், எல்லைகளைக் கடந்த பொதுமையைப் படைக்கும். இத்தகு சமயமே தமிழர் சமயம். இதனையே சேக்கிழார்,

செழுந்தமிழ் வழக்கு

என்கிறார். இந்தச் சமயநெறி “இந்து மதம்” என்ற கட்டமைப்பிற்குள் இல்லாதது. ஆனால் வரலாறு, நாட்டின் நடப்பில் பிணைப்பு ஏற்பட்டு இந்து மதப் பிணைப்பில் வந்த பிறகு அதன் கொள்கைகளும் இதன் கொள்கைகளாகக் கலப்பின் வழிவந்துள்ளன. சமயம் என்பது “சமைத்தல்” என்னும் சொல்லின் அடிப்படையில் பிறந்தது. மானிட வாழ்க்கை, புலன்களின் நுகர்வுகளால் ஆயது; நுகர்வுகளுக்கு வாயிலாக இருக்கின்ற பொறிகளால் ஆயது. இப்புலன்களும் பொறிகளும் உயிரின் நலத்திற்கு ஒத்திசைந்து, உள்ளவாறு இயங்கினால் உயிர் நலமுறும். ஆனால், இயற்கையில் புலன்களும் பொறிகளும் உயிரோடு ஒத்துழைப்பதில்லை. எந்த உயிருக்கு நன்மை செய்து இன்புறுத்த வேண்டுமோ அந்த உயிருடன் இப் புலன்களும் பொறிகளும் போராடும்; அதை அலைக்கழிவு செய்யும். இதனால், உயிர்க் குலத்தின் வாழ்க்கை தடம் புரண்டு போகிறது.

மனித அறிவு, எண்ணத் தொடங்கிய காலந் தொட்டு - சற்றேறக்குறைய 14500 போர்கள் உலகத்தில் நிகழ்ந்துள்ளன. இப்போர்கள் நாடுகளுக்கிடையே நடந்த போர்கள். சாதிகளிடையே நடந்த போராட்டங்கள், மதங்களுக்கிடையே நடந்த போராட்டங்கள், வீடுகளுக்கிடையே நடந்த போராட்டங்கள், வீடுகளுக்குள் நடந்த போராட்டங்கள் இந்தக் கணக்கில் சேரவில்லை.

இக்கொடிய போராட்டங்களில் கொன்று குவிக்கப் பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 364 கோடி என்றொரு புள்ளிக்கணக்கு பேசுகிறது. இப்புள்ளி விவரமும் நாடுகளிடையே நடந்த போர்கள் பற்றியதுதான். இங்கும் அங்குமாக நடைபெற்ற கொலைகள் இந்தக் கணக்கில் சேரா. ஏன் இந்த அவலம்? உயிரை, உயிரின் உணர்வை அன்பில் சமைத்து உலகு தழீஇய வாழ்க்கை வாழச் செய்யும் சமயநெறியில் ஈடுபடாமைதான்.

புலன்களையும், பொறிகளையும் பக்குவப்படுத்தாமல் அவைதம் வழியில் விடுவதில்தான் விபத்து இருக்கிறது.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு என்பதறிக. அப்பரடிகள் இப்பொறிகளும் புலன்களும் உயிரின் நலத்திற்கு எதிராகப் போராடும் இயல்பினை விளக்குகின்றார். ஒர் உயிர், ஐம்புலன்களைத் துணையாகக் கொண்டு வளர்வது வாழ்வின் இயற்கை. ஆனால் இந்த ஐம்பொறிகள் உயிரோடு ஒத்துழைக்காமல் உயிருக்கு ஊறு செய்கின்றன என்று கூறுகின்றார்.

மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னிரே.

உயிரின் வலிமையைவிட ஐம்புலன்களின் வலிமை மிகுதி யாததற்குக் காரணம் புலன்கள் பொறிகளிடத்திலேயே இல்லை. உயிரிடத்தில் இயல்பாக இருக்கும் அறியாமை, இன்ப துன்பம் பற்றிய முடிவுகளில் நிலை பிறழச் செய்து உயிரை அலைமோத விடுகிறது. சமய தத்துவ உலகத்தில் அறியாமை என்பதற்கு, “ஒன்றும் தெரியாமை” என்பது பொருளன்று. ஒன்றைப் பிறிதொன்றாக முறைபிறழ அறிவதே அறியாமை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்பது நினைக்கத்தக்கது. பிறழ அறிவதாகிய அறியாமையால் உயிர், நன்மையைத் தீமையென்றும் தீமையை நன்மையென்றும் தலைதடுமாற்றமாக அறிகிறது. இன்பத்தைத் துன்பமாகவும் துன்பத்தை இன்பமாகவும் எண்ணுகிறது. இங்ஙனம் உயிரின் மயக்கநிலையில் பழகிய புலன்கள் உயிர் தந்த பழக்க வாசனையில் நிலைத்து நின்று விடுகின்றன. உயிர், பட்டறிவில் நிலை திருந்திய வழி உடல் புலன்களால் வழி திரும்ப முடிவதில்லை. அந்த நிலையில் ஒரு போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டத்தில் புலன்கள் வென்று விடுவதாக அப்பரடிகள் கூறுகின்றார்.

உயிரின் அறியாமைக்கு மிகுதியும் காரணம் “செருக்கு” என்பது சமய நூற் கருத்து. உயிரின் அனைத்துத் தீமைகளுக்கும் அதுவே அடிப்படை. இதனை அப்பரடிகள்,

தினைத்தனையோர் பொறையிலா உயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியால் இந்த
அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும்
ஆங்காரம் தவிர்நெஞ்சே அமரர்க் காக
முனைத்துவரும் மதில்மூன்றும் பொன்ற அன்று
முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கால் உய்ய லாமே,

என்று கூறி விளக்குகின்றார்.

சமய வாழ்க்கையின் பயன், பொறிகளும் புலன்களும் தூய்மையுடையனவாகி உயிர் அன்பில் தழைத்து வளர்வதேயாம். உயிரின்-தூய்மை என்பது பயன்படாத் தூய்மையன்று; தீமை செய்யும் தூய்மையுமன்று. மாறாக, நன்றாற்றல் நிகழ்த்தும் தூய்மையே தூய்மை, அகத்திலும் புறத்திலும் ஒத்து இயல்வதே தூய்மை. இதனைச் சேக்கிழார்,

பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்
என்று விளக்குவார். தூய்மையில் உவர்ப்பு இல்லை; உவப்பு உண்டு. தூய்மை அருள்நலஞ் சான்றது. அங்கு வேறுபாடுகளில்லை; காய்தல் இல்லை. அதுவே தூய்மை. பழுத்த மனத்து அடியார்களாக விளங்குவது சமய வாழ்க்கையின் பயன்.

பொறை, சமய இயலின் ஒழுகலாறுகளில் சிறந்தது; விழுமியது. பொறையுடைமை வழி, மேலும் பல நல்ல ஒழுக்க இயல்புகள் வந்தமையும். பொறை-பொறுத்தாற்றல். நன்றும் தீதும் உலகியற்கை சுழன்று வருவன. அவை மானிட சாதியினாலேயே படைக்கப் பெற்று அனுபவிப்பன ஆகும். இதில் ஏன் மகிழ்ச்சி? மகிழ்ச்சியின்மை; பெரியோர், சிறியோர் என்பது அவரவர் தம் சூழ்நிலைக்கு ஏற்ப அமையும் ஒழுகலாறுகளில் விளங்கும் தன்மை. இதனால்-பெரியோரை வியந்து பாராட்டுதலைத் தவிர்க்க வேண்டும். ஒரே வழி-பெரியோரை வியந்து பாராட்டலும் சிறியோரை இகழ்தலும் கூடவே கூடாது. இஃது ஒரு ஒப்பற்ற சமுதாய நடைமுறை விதி.

தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே......
..............................
...................மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,

என்பதறிக.

அருள் நலம் சான்ற வாழ்க்கையை விளக்கிக் காட்டுவன சமய இலக்கியங்கள். அருள் நலம் பழுத்த சமய வாழ்க்கையுடையார் எத்தகைய வேறுபாடுகளுக்கும் இடம் கொடார். சமய நெறியின் விழுமிய இலட்சியம் ஒருமைப்பாடேயாம். ஒருமைப்பாட்டு இயல்பை வளர்ப்பதில் உண்மையான சமயம் ஈடுபாடு காட்டுகிறது. மனித குலத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இயங்குவது சமயமன்று. சமயச் சண்டைகள், சமயத்தின் இலக்கணத்திற்கு முரணானவை. சமயக் கலப்படங்கள், தெளிந்த சிந்தனைகளுக்குத் தடைகள். ஆதலால், சமயச்சாயல் தழுவிய இலக்கியங்களும், சமய இலக்கியங்களாகவே திகழும். திருமுறைகளும் வேறுபாடுகளைக் கண்டிக்கின்றன; மனித உலகத்தின் பொதுமை நலத்திற்கு இடையூறாக வாழ்ந்த சிலர், தன்னயப்பின் காரணமாகச் சாதிகளைத் தோற்றுவித்தனர்; குலங்களைக் கண்டனர். கோத்திரங்களைக் கூறினர். இவையெல்லாமே இல்லாதவையா? இல்லை. அவை எந்த நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பெற வேண்டுமோ, அந்த நோக்கத்தின் வழியில் நடைமுறைப்படுத்தப் பெறவில்லை. பிறப்பில் காணப்படும் வேற்றுமைகள் இயல்பாக அமைவன. அவை இயற்கை நியதிகளில் தவிர்க்க முடியாதவை. அதனால், பிறப்பின் வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தி ஒதுக்குதல் நன்னெறியன்று. பிறப்பின் அடிப்படையிலுள்ள வேற்றுமைகளைத் தவிர்த்து, தகுதியின்மைகளைத் தகுதிப்படுத்தி மக்களை உயர்த்துவதற்குத் தானே சமயம்! அச்சமயமே, தம் கடமையினின்றும் வழுவித் தாழ்த்தப்பட்டோர் என்று அவர்களை ஒதுக்குதல் முறையன்று. குலம், சமுதாய நியதியில் தவறான அமைப்பன்று. ஆனால், இச்சீரிய அமைப்பு முறை, முறைபிறழும்பொழுது சமயநெறியினின்றும் பிறழ்கின்றது. குலம் என்பது வழிவழி வரும் மரபு. உயர் குலத்தில் பிறந்ததனால் நாம் உயர்வுடையோம் என்ற கருத்தில் அகங்காரமுடையராகி ஒழுக்கமிலாது போதல் இவ்வுலக இயற்கை ஆயினும் அக்குலத்திற் கிசைந்த ஒழுக்கமிலராயினும் குலத்திற்குரிய பெருமை கொண்டாடுவர்; குலத்திற்குரிய பயன் கேட்பர். இது நன்னெறியன்று. இத்தகைய வாழ்க்கை சமயச்சார்புடையதன்று. ஆதலால், தமிழ்ச் சமய இலக்கியங்கள் ஒருமைப்பாட்டு நெறியை வலியுறுத்துகின்றன.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற அருமையான சங்க கால இலக்கியச் சொற்றொடர் நினைவு கூரத்தக்கது. சங்ககால இலக்கியங்கள் அப்பட்டமான சமய இலக்கியங்களன்று என்பதும், ஆயினும் சமய நாகரிகம் தழுவிய இலக்கியங்களே என்பதும் முன்பே கூறப் பெற்றன. சங்க காலத்தில் வாழ்க்கையே சமயமாக விளங்கியதால் சங்க கால இலக்கியங்களில் சமய வாழ்க்கையை விளக்கும் பாடல்கள் பல உள்ளன. இத்தகைய சமய வாழ்க்கையின் முடிவான செய்திதான்,
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

என்ற சொற்றொடர்.

எல்லா உலகமும் ஆனாய் நீயே

என்ற அப்பரடிகளின் அருள்மொழியும் சாதி வேறுபாடற்ற ஒருமைப்பாடுடைய மனித குலத்தையே விரும்புகிறது.

மனித குலத்தை அரித்துத் தின்றழிக்கும் தீமையில் தீமை வறுமை, ஏழைமை, சமய அறிவற்றோர், வறுமையில் வாழ்தலும்கூட ஒருவகையான அறம் என்றும் ஆதலால் ஆசைகள் கூடாது என்றும் கூறுவர். இங்ஙனம் சொல்வது தவறான வழிகாட்டுதலாகும். இதனால் உயிரியலில், உலகியலில் ஆர்வம் குறைந்து வறுமையே விஞ்சியது. ஏன்? “வறுமை இயற்கை; மாற்ற முடியாதது” என்ற கருத்து வேரூன்றியுள்ளதால் உழைப்பார்வம் இல்லை.

வறுமையை விரும்பியேற்பது உயர் சமய நெறியின் மரபன்று. வறுமையை "நச்சுப் பாம்பின் நஞ்சினும்கொடியது” என்று திருவாசகம் வருணிக்கிறது.

நல்குரவென்னும் தொல்விடம்

என்பது திருவாசகம். மிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்களாகிய-சமய இயலின் தத்துவம் உணராதார் வறுமைக்கு ஊழ் காரணம் என்றனர். மேலும் அறியாதார் சிலர் ஊழை நியதியாக்கி, வெற்றி காணமுடியாது என்றனர். ஆயினும் ஒருவர் வறுமைக்கு மற்றவர் முயன்று அதற்கு மாற்றுத் தேடுவதுதான் வாழ்க்கையின் சீலமாக அமைகிறது. இத்தகு சீலமுடைய ஒரு வாழ்க்கையை மிகப் பிற்காலத்தில்-இந்த இருபதாம் நூற்றாண்டில் “தருமகருத்தாக் கொள்கை” யென்று கூறினர். இக்கொள்கையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் தந்த திருமுறை இலக்கியம் எடுத்து மொழிந்தது.

இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன்ஐ யாற னாரே,

என்பதறிக. வறுமையும் ஏழைமையும் நிறைந்த சமுதாய அமைப்பில் சமயநெறி கால்கொள்ளாது என்பது தமிழ்ச்சமய இலக்கியங்களின் முடிவு.

சமய வாழ்க்கை, உயிரின் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அறிகருவிகளை மையமாகக் கொண்டது. மனம், ஒன்றைப் பற்றுவது. மனம் பற்றிய ஒன்றின் தன்மையை ஆராய்ந்து நிர்ணயிப்பது புத்தி. அந்த ஒன்றை நோக்கி விரிவடைவது சிந்தனை, அதனை அடைதற்குரிய உறுதிப்பாட்டினை மேற்கொண்டு, முயற்சி செய்வது அகங்காரம். ஆக, மனம்தான் தோணிபோல் பயன்படுகிறது. இந்த மனம் குறைவிலா நிறைவு, கோதிலா அமுது, வரம்பிலா ஆற்றல், பேரறிவு என்று புகழப்பெறும் கடவுளைப் பற்றுவதன் மூலம் அத்தன்மைகளைத் தன்னிடத்து ஈர்த்துத் தன்னையும் தன்னைச் சார்ந்த இதர கருவிகளையும் தன்னையுடைய உயிரையும் வளர்த்துச் செழுமைப் படுத்துவதே வழிபாடு.

சமய வாழ்க்கையின் சீலம், உடற்சார்புடையது மட்டுமன்று. சமய நெறியில் உடற்சார்பான ஒழுகலாறுகள் - வாயில்கள் பாதுகாப்பு மட்டுமேயாம். அகம் நிறை ஒழுக்கங்களே சமய வாழ்க்கையின் பயன். உயிர், சமய வாழ்க்கையின் அனுபவமாகிய பத்திமையில் வளரும்பொழுது தொண்டார்வமும் முகிழ்க்கும்; பார்வாழப் பணிசெய்யும் ஆர்வம் தழைக்கும்.

பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்

என்று அப்பரடிகள் பற்றிச் சேக்கிழார் குறிப்பிடுவார். சமய உணர்வில் தோன்றும் பணியார்வம் இன்பத்தை விழையாது; துன்பத்திற்குத் துவளாது; புகழ்நாட்டம் கொள்ளாது. அஃறிணையைப்போல் தன்முனைப் பற்றுத் தன்னயப் பின்றிப் பணி செய்யும் வாழ்க்கையே சிறந்த சமய வாழ்க்கையென அப்பரடிகள் கூறுவார்.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்அடி யேனையும் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

வையகம் தூய அன்பெனும் பத்திமையில் தழைத்துத் தொண்டு நெறியில் செழித்து வளர்வதே சமய இலக்கியங்களின் நோக்கம்-பயன்.