குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/திருநாவுக்கரசர்

விக்கிமூலம் இலிருந்து
31
திருநாவுக்கரசர்


தமிழகம், வழிவழி வரலாற்றுச் சிறப்புடையது. தமிழகம், அரசியல் வரலாற்றுச் சிறப்புக்கள், மிகுதியும் பெறாது போனாலும், அருளியல் துறையில் இந்தியத் துணைக் கண்டத்தில் தனிச் சிறப்புடைய வரலாறு பெற்றதாகும். பேசும் மொழியையும், கொண்டு ஒழுகிய நெறியையும் வாழ்க்கையோடு இசைத்த பெருமை தமிழர்க்கு உண்டு. வாழ்க்கை வேறு; மொழி வேறு; சமயம் வேறு என்ற நிலை தமிழகத்தில் என்றும் இருந்ததில்லை. தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டே தோன்றின. சமய நெறியும் அங்ஙனமேதான். அதனாலன்றோ சேக்கிழார் தமிழகச் சமய நெறியினைச் "செழுந்தமிழ் வழக்கு” என்று போற்றுகின்றார்.

இங்ஙனம், சமய நெறியில் வழிவழி வரலாற்றுச் சிறப்புக்கள் உள. என்றாலும், இடையில் சமய சமுதாய வாழ்க்கையில் தொய்வு தோன்றாமல் இருந்துவிடவில்லை. சமய நெறியை மேற்கொண்டு ஒழுகுவதில் ஏற்பட்ட தொய்வுகளையும், தூயநெறியல்லாத பொய்ந் நெறி நுழைவையும் அயல் வழக்கின் குறுக்கீட்டையும் நீக்கித் தமிழகச் சமய நெறியைப் பேணிக் காக்கக் காலத்திற்குக் காலம் ஞானிகள் தோன்றியுள்ளனர்.

தமிழக வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு விழுமியது. வரலாற்றுச் சிறப்புடைய இந்த நூற்றாண்டில்தான் ஞானத்தின் திருவுருவாக, நான்மறையின் தனித்துணையாக ஞாலமுய்ய, நாமுய்ய, சைவ நன்னெறியின் சீலமுய்யத் திருஞான சம்பந்தர் திருவவதாரம் செய்து, திருநெறிய தமிழின் மூலம் புறச்சமயப் பகை கடிந்து நமது சமய நெறியை வளர்த்தார். இதே நூற்றாண்டில் திருநெறிய தொண்டின் நெறி வாழத் திருநாவுக்கரசர் திருவவதாரம் செய்தருளினார். ஞாலத்தின் இருள்நீக்கும் ஞாயிறெனத் திருஞானசம்பந்தரும் திங்களெனத் திருநாவுக்ககரசரும் தோன்றிப் பணி செய்தருளினர்.

அப்பரடிகள் சான்றாண்மைக்குச் சான்றாக விளங்கிய தொண்டை நாட்டின் தென்பால், திருவாமூர் என்னும் திருப்பதியில் வழிவழி தாளாண்மையிலும் வேளாண்மையிலும் நனி சிறந்த குடும்பத்தில் திருவவதாரம் செய்தார். அப்பரடிகள் இளமையிலேயே பெற்றோரை இழந்து, பெருகிய தவத்திற் சிறந்த தமக்கையார் திலகவதியாரால் வளர்க்கப்பெற்றார். அப்பரடிகளுக்கு இளமைக் காலம் தொட்டு ஆறாத அறிவுப்பசி, இந்த அறிவுப்பசியோடு பெற்றோர் பிரிவுத் துன்பமும் சேர, துன்ப நீக்கத்திற்கு வழியெது என்று ஆராயும் வகையில் “துறத்தலே துன்ப நீக்கத்திற்குரிய வழி” என்ற நெறியைக் காட்டும் சமண சமயத்தைச் சார்ந்தார்.

சமண சமயத் தத்துவ நூல்களைத் துறைபோகப் பயின்றார். சமண முனிவர்களாலேயே 'தருமசேன'ர் என்று பாராட்டப்பெற்றார். தம்பியைப் பிரிந்த தமக்கை திலகவதியார் - திருவாமூரினின்றும் நீங்கித் திருவதிகை திருத்தலம் சென்று நாளும் தவம் செய்தார். உடன் பிறந்த தம்பி, மருள் நீங்கி, திருந்தியமனத்துடன் அருள்நெறி சார்ந்திடத் தவம் செய்தார். தவம் பலித்தது. எம்பெருமானின் அருளிப்பாடாக மருள்நீக்கியாரைச் சூலை நோய் பற்றியது. சமண, சமய முறைகளில் சமண முனிவர்களால் சூலை நோயை மாற்ற இயலவில்லை. கூற்றைப்போலக் கொடுமை செய்த கொடிய சூலையில் வாடிய மருள்நீக்கியார் திலகவதியாரை அடைக்கலம் புகுந்தார். அன்னையிற் சிறந்த திலகவதியார் மருள்நீக்கியாருக்குத் “திருவாளன் திருநீறு” தந்தருளித் திருக்கோயில் வழிபாட்டுக்கு ஆற்றுப்படுத்தினார். இதுவும் திருமுறை மரபில் தீட்சைமுறை. மருள்நீக்கியாரை மயக்கித் துன்புறுத்திய சூலையினின்றும் விடுதலை பெற்றார்; திருநாவுக்கரசரானார் “பண்ணார் இன்தமிழ்” பாருக்குக் கிடைத்தது.

அப்பரடிகள் பிற சமயத்தினின்று தாம் பிறந்த சமயத்திற்கு மீண்டார். இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழகத்தில் சமயப்பூசல் கால் கொண்டது. எப்பொழுதும் நம்முடைய சமய நெறியாளர்கள் பிற சமயங்களைத் தாக்கும் வழக்கமுடையவரல்லர். வழிவழி சிவநெறியில் தோன்றிய மருள்நீக்கியார் சமண நெறியைச் சார்ந்தபொழுது, யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், மருள்நீக்கியார் திரும்பத் தம்முடைய தாய்ச் சமயத்திற்கு வந்தபொழுது சமணர்கள் அரசின் துணைகொண்டு அவருக்குக் கேடு பல செய்தனர். அப்பரடிகள் திருவருள் துணை கொண்டு பகைப்புலத்துச் சோதனைகளில் வெற்றி பெற்றார். அப்பரடிகள் மூலம் தமிழகமே தம் வழிவழி மரபுகளைப் பாதுகாத்துக் கொண்டது.

தமிழகத்தில் அப்பரடிகள் உலா வந்தது ஏழாம் நூற்றாண்டில். உலகம் முழுவதும் ஏழாம் நூற்றாண்டில் மக்களின் சமூக வாழ்க்கை முறை பற்றிய கருத்துக்கள், சமய வாழ்க்கை ஆகியன எப்படியிருந்தன என்று அறிந்து கொண்டாலே, அப்பரடிகளின் அருமை நமக்கு விளங்கும். ஏழாம் நூற்றாண்டில் உலகத்தின் எந்தப் பகுதியிலும் சுதந்திர வேட்கை கால்கொள்ளவில்லை. மன்னனை மையமாகக் கொண்ட முடியாட்சி நிலவியது. “அரசனின் ஆணையை யாரும் மீற முடியாது; மீறக்கூடாது. ஏன்? அரசன் ஆணை தெய்வத்தின் ஆணை; அரசனது அதிகாரம் தெய்வத்தால் வழங்கப்பெற்ற அதிகாரம்” என்ற கருத்து, ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் அப்பரடிகள் பல்லவப் பேரரசன் ஆணையை மறுக்கின்றார். தனி மனித சுதந்திரத்திற்கு முதல் முழக்கம் தந்தவர் அப்பரடிகளேயாம். சமண முனிவர்களுடைய ஆலோசனையின் வழி, அப்பரடிகளின் தனிப் பட்ட சமய வாழ்க்கையில் பல்லவப் பேரரசன் குறுக்கிட்டதை அப்பரடிகள் வன்மையாக மறுக்கின்றார். ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கிறார். உலக மனித சமுதாயத்தின், முதல் விடுதலைப் பாட்டு முகிழ்க்கிறது; முழங்குகிறது.

நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
'சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடி இணையே குறுகினோமே.

பாடல் இது. இது விடுதலை முழக்கம்;

மரணமிலாப் பெருவாழ்க்கை; துன்பம் நீங்கிய துரய வாழ்க்கை, நின்ற சீலத்தால் பெற்ற ஏமத்தின் முழுயாப்பு (கலப்பு); பிணி நீங்கிய பெருமிதம். ஆம்; அடிமை வாழ்க்கையில் மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்குமா? அடிமை வாழ்க்கையே ஒரு நரகம் தானே; அடிமை வாழ்க்கை ஒரு நடைப் பிண வாழ்க்கை; அடிமை வாழ்க்கையில் பாதுகாப்பு ஏது: அடிமை வாழ்க்கை உடற் பிணிகளையும் உயிர்ப் பிணியையும் ஆக்கும். அடிமை வாழ்க்கையின் அவலங்களை எதிர்மறையால் சுட்டிக்காட்டி அடிமை விலங்கை அறுத்தெறியச் சொன்ன முதற் கவிஞர் அப்பரடிகளேயாவார். சுதந்திரமான ஆன்மாவால்தான் இறைவனை அணுக முடியும். அனுபவிக்க முடியும். கோழைமையும் கொத்தடிமைப் புத்தியும் உடையவர்கள் அச்சத்தின் அடிமைகள்; அருள்நெறிக்குப் புறம்பானவர்கள். ஆண்டவன் அவர்களை ஏறெடுத்தும் பாரான், சுதந்திரம் இறையருளின் நியதி; இதனை அப்பரடிகள் தமது பாடலில் தெளிவாக விளக்குகின்றார். பல்லவப் பேரரசன் ஆணையை மறுத்து, அரசனைப் பார்க்க மறுத்துவிட்டார். அப்பரடிகளது வழியினைத் தொடர்ந்தே பாரதி,

பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் - பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்,

என்றான்.

ஆக, அரசியல் அடிமைத் தனத்தை எதிர்த்துப் போராடியதில் “வால்டேரு"க்கும் “ரூஸ்ஸோ"வுக்கும் “ஜார்ஜ் வாஷிங்ட"னுக்கும் முன்னோடி, அப்பர் அடிகள் என்பதே உண்மை.

அப்பரடிகள் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு; இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு. நாம் வாழும் இந்தத் தலைமுறையில், புதியன என்று கருதிப் போற்றும் கொள்கைகள் பல உண்மையில் புதுமையல்ல. அவை, இந்த நூற்றாண்டுக்கும் உரியனவல்ல. இந்தச் சமயத்தில் நிலவும் சாதி வேற்றுமை மிகக் கொடுமையானது. அறிந்தோ அறியாமலோ இந்தச் சாதி வேற்றுமை பல நூறு ஆண்டுகளாகப் பேணப் பெற்று வருகிறது. இந்து சமய நிறுவனங்கள், திருக்கோயில்கள், திருமடங்கள் அப்பட்டமான சாதீய நிறுவனங்களாக உருப்பெற்று விட்டன. இவைகள் இன்று சமய நெறியைக்காக்கும் நிறுவனங்களாக, சமய வழிப்பட்ட பொதுமைச் சமுதாயத்தைக் காக்கும் நிறுவனங்களாக விளங்காமல், சாதிகளையே காப்பாற்றி வருகின்றன. அப்பரடிகள் சாதி வேற்றுமைகளை மிகக் கடுமையாகச் சாடுகிறார். இன்றே போல, அன்றும் சாத்திரங்களை ஆதாரமாகக் காட்டிச் சாதி வேற்றுமைகளை நியாயப்படுத்தி அப்பரடிகளிடம் வழக்காடியுள்ளனர் சனாதானிகள். தண்ணருள் சார்ந்த நெஞ்சம் உடைய அப்பரடிகள் இந்தச் சனாதனிகளின் வீண்வம்படி வழக்கைத் தாங்க முடியாமல் திருப்பிக் கடுமையாகவே ஏசுகின்றார்.

சாத்திரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமுங் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும்மாற் பேறரே!

என்பது அப்பரடிகள் வாக்கு மக்கள் சிவத்தின் அருளைப் பெற்று நடமாடக் கோயில் எனப்படுவர். திருமூலர் வாக்கில் சிவம் எழுந்தருளுதற்குரிய நடமாடும் கோயில்கள்! அங்ஙனம் நடமாடும் உயிர்வர்க்கத்தின் அருமையை உணராமல், குலம் கோத்திரம் சொல்லி ஒதுக்குதல் நீதியுமன்று; நெறியுமன்று. பிறப்பில் வேறுபாடு காட்டுதல் பெருநெறி அன்று. சீலத்தின் காரணமாக வேறுபாடு காட்டினாலும் காட்டலாம். அதனைக் கூட அப்பரடிகளின் அருள் நெஞ்சம் ஏற்றுக் கொள்ளவில்லை.

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே,

என்பது அவர் திருப்பாட்டு. ஏகாந்தர் = அன்பர். அப்பரடிகள் வல்லடி வழக்கில் வாழ்வாரை மையமாகக் கொண்டு சுற்றி வட்டமிடும் சமயத்தை விரும்பினாரில்லை. அவர் சனாதனிகள் காட்டும் காரணங்களைக் கூட மறுக்கிறார். சனாதனிகள், இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரமாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பசுவைத் தின்னும் புலையர்கள் என்று பழி சுமத்தினார்கள், தொழு நோயர்கள் என்று கூறினார்கள். அப்பரடிகள் அந்த விவாதத்தை மறுக்கிறார். புலைத்தன்மை நீங்கத்தானே புண்ணியனடி நண்ணுகிறார்கள். அங்ஙனமிருக்கப் புலையரென்று புறத்தே தள்ளுவது என்ன நியாயம், என்பதே அப்பரடிகள் கேள்வி? அப்பரடிகள் மக்களை வாழ்த்தவும் - வணங்கவும், அணைக்கவும்-அன்பு செலுத்தவும் ஒரே விதிதான் வகுக்கிறார். அவர்கள் “கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகி” இருக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி.

பழந்தமிழகத்தில் - திருக்கோவில்களில் இன்று ஆதிக்கம் செய்கின்ற சாதி முறைகள் இருந்ததில்லை. எல்லோரும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பூவும் நீருமிட்டுப் போற்றி வழிபட்டுள்ளனர். அப்பரடிகள்,

ஆக்கை யாற்பயனென்-அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇல்
ஆக்கையாற் பயனென்?

என்று வினவுகின்றார். இங்ஙனம் சாதி குல வேறுபாடுகளைக் கடந்து திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பூவும் நீருமிட்டு வரிசையாகச் சென்று அருச்சித்து வழிபடுவதே ஆன்றோர் மரபு. இதனைத் திருவையாற்றுத் தேவாரத்திலும் அப்பரடிகள்,

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்

என்று குறிப்பிடுகின்றார்.

அப்பரடிகள், சாதி வேற்றுமைகளைக் கடிந்ததோடு மட்டுமன்றிப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் வெறுத்தார். சமூகப் பொருளாதாரக் கொள்கையில் “தர்ம கர்த்தா முறை” என்பது ஒரு கொள்கை. இந்தக் கொள்கையை மனித குலத்திற்குத் தெளிவான வகையில் அறிமுகப் படுத்தியவர் அப்பரடிகள். இந்தத் தர்மகர்த்தாக் கொள்கை வழியில்தான், அண்ணல் காந்தியடிகளும் இந்திய சமூகத்தை வழி நடத்தினார். தர்மகர்த்தாக் கொள்கை 14, 15ஆம் நூற்றாண்டில் தான், உலகிற்குப் பரவலாக அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது. தர்ம கர்த்தாக் கொள்கை வழியில், செல்வம் யாரிடம் இருந்தாலும் அச் செல்வம் மக்களுடையதே, மக்களே அச்செல்வத்தை அனுபவித்தற்குரியவர். செல்வத்தை உரிமையாகப் பெற்றவர்கள் செல்வத்தைப் பேணிப் பாதுகாத்து மக்களுக்கு வழங்கும் கடமை பூண்டவர்களே; செல்வத்தின் உரிமை முற்றான அனுபவத்திற்கு வாயிலல்ல. இந்தத் தர்மகர்த்தாக் கொள்கையின் கரு, ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகளின் அருள்பழுத்த நெஞ்சில் தோன்றிவிட்டது.

மருத்துவர் ஒருவர் தமக்குரிய பொருளில் பல நூறு ரூபாய்க்கு மருந்துகளை வாங்கி மருத்துவ நிலையத்தில் வைத்திருக்கிறார். அந்த மருந்துகள் அவருக்குரியன என்பதில் கருத்து வேற்றுமையில்லை. ஆனாலும், அந்த மருந்துகள் அவருக்கு உரிமையுடையன என்பதால் அவரே மருந்துகளை உண்ண முடியாதல்லவா? நோயுடையார்க்குத் தானே மருந்து; வறுமையைப் “பிணி’ யென்றும், செல்வத்தை “மருந்து” என்றும் இலக்கிய உலகம் குறிப்பிடும். செல்வம் என்ற மருந்தைப் பெற்றிருப்பவர்கள் வறுமைப் பிணியாளர்களுக்கு வழங்கவேண்டும். அதுவே நியதி; நீதி. இந்த நீதி முறையில் வாழ்கின்றவர்களுக்கே நீதி தேவனின் அருள் கிடைக்கும். இந்த நீதியைப் புறக்கணிப்போரை நரகத்திலேயே இறைவன் இடுவன்.

இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன்ஐ யாற னாரே.

இது அப்பரடிகளின் திருப்பாடல்.

அப்பரடிகள், “மக்கள் மனத்தில் வஞ்சகம் வற்ற வேண்டும்; பக்திப்புனல் பெருக்கெடுக்க வேண்டும்,” என்ற நோக்குடையவர். அப்பரடிகள் பக்தியிற் சிறந்து விளங்கினாலும், பக்தி வாழ்க்கையில் நம்மை ஆற்றுப்படுத்தினாலும் அவர் திருத்தொண்டின் நெறியை மேற்கொண்டொழுகினார். அப்பரடிகள் வரலாற்றின் சாரம் - அப்பரடிகள் அருளிச் செய்த திருமுறைகளின் சாரம் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதாகும். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வாக்கியத்தில் உலகச் சமயங்களின் பிரிவினையும், மறைகளின் (வேதங்களின்) மறை முடிவுகளின் (உபநிஷதங்களின்) சாரத்தினையும் தந்துள்ளமை உய்த்துணரத் தக்கது. ஒரு பக்தன் திருக்கோயிலில் திருவலகு செய்வது திருத்தொண்டு. அதே பக்தன் செய்திக்கும் படத்துக்குமாக அதனைச் செய்யின் திருத்தொண்டல்ல. கடன் என்ற உணர்ச்சியில் மட்டுமே அது செய்யப்பெறின் கடமையாகும். கூலியுணர்வில் செய்யப்படும் பொழுது அது வேலையென்று சொல்லப்பெறும். பணி என்பது எல்லாவற்றிலும் உயர்ந்தது. முனைப்பின்றிப் பணிந்து செய்யப்பெறுவது பணி. முனைப்பில்லாததால் அங்கு “யானும்” இல்லை; “என்னும்” இல்லை. “நான்”, “எனது” என்ற உணர்வு அற்றதால் பணியின் பயன் பற்றிய சிந்தனை இல்லை. அச் சிந்தனையின்மையால் உயர்திணையேயானாலும் - முனைப்பும், பற்றும் இல்லாத காரணத்தால் - அஃறிணை போலக் கூறப்பெறுகிறது. பழுத்தமனத்து அடியார்கள்-சீவன் முக்தர்கள் என அழைக்கப்படுதல் மரபு.

அப்பரடிகள், திருவவதாரத்தால் திருத்தொண்டின் நெறி வளர்ந்தது. அப்பரடிகளின் நெஞ்சம், இறைவன் திருவடிகளினின்று நீங்கியதே இல்லை. அப்பரடிகளின் திருக்கரங்கள் ஒருபோதும் உழவாரப் படையினை நெகிழவிட்டதில்லை. தமிழகத் திருக்கோயில்களைக் (ஏழாம் நூற்றாண்டில்) காக்கும் பணியென்று உழவாரப்பணியையே அப்பரடிகள் நம்பினார். ஆம்; இன்று தமிழகத்தின் சிற்றுார்களில் பல திருக்கோயில்கள் இடிந்து கொண்டிருக்கின்றன. ஏன்? காலத்தின் கோலமா? இல்லை, இல்லை; திருக்கோயிலின் மதில்களில்-தளங்களில் செடி கொடிகள் முளைக்கின்றன.

அவைகளை உடனுக்குடன் உழவாரப்படை கொண்டு அப்புறப்படுத்தாவிடில் செடிகள் மரங்களாகிக் கோயில்களை இடிக்கின்றன. இதனை அறிந்த அப்பரடிகள் உழவாரப் படை கொண்டு திருக்கோயில்களில் செடி கொடிகளை நீக்கும் திருத்தொண்டைச் செய்தார். இந்தப் பணியை மீண்டும் தமிழகம் முழுவதும் சமய நம்பிக்கை உடையோர் செய்ய வேண்டும். தமிழ்நாடு தெய்வீகப் பேரவை தமிழகம் முழுவதும் இந்த - “உழவாரப் படை இயக்கத்தை” புதுப்பித்துச் செயற்படுத்தி வருகிறது. அப்பரடிகள் திருக்கோயில்களில் மட்டும் உழவாரப்பணி செய்யவில்லை. மக்கள் நடமாடும் திருவீதிகளிலும் கூட இந்தப் பணியைச் செய்திருக்கிறார். இதனையே, சேக்கிழார், 'பார்வாழத் திருவீதிப் பணி செய்வார்' என்று பாராட்டுகின்றார். அப்பரடிகள் திருத்தொண்டின் உருவமாகவே திகழ்ந்தவர். அப்பரடிகளின் கைத்திருத்தொண்டினைக் கண்டு கடவுளே மகிழ்ந்து அவருக்கு வாசியிலாக் காசு தந்தார். அப்பரடிகளை வாழ்த்தும்முறை, திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வழி நிற்றலேயாம்.

அப்பரடிகள் சிறந்த அருட்கவிஞர். அடிகள், தாம் அனுபவித்த அருளார்ந்த அனுபவத்தினை இனிய தமிழில், எளிய நடையில் ஒதுவோர் உணர்வைத் தொடத்தக்க வகையில் வெளியிட்டுள்ளார். அப்பரடிகள், அருள் நலம் செறிந்த கவிதைகளைக் கவிதையாக மட்டுமின்றி இசைத் தமிழிற் சிறக்கப் பாடினார். அப்பரடிகளுடைய அருட் கவிதைகள் கல்லையும் உருக்கும் கனிவுடையன.

அப்பரடிகள் பழந்தமிழ் யாப்பிலக்கணத்திற்கு இசைந்த வகையிலேயே, தமது பாடல்களை அருளிச் செய்துள்ளார். இல்லை, நிறைநலம் சான்ற நெஞ்சத்துட் பிறந்த கவிதைகளாதலால், இயல்பாகவே நிறை நலங்கள் வந்து பொருந்தி உள்ளன. அப்பரடிகள் “திருத்தாண்டகம்” என்ற புதுவகை யாப்பினைத் தமிழகத்திற்கு அளித்துள்ளார். திருத்தாண்டகம் பாடுவதில் அப்பரடிகள் தன்னேரில்லாதவராக விளங்கிய தால் “தாண்டகச் சதுரர்” என்றும் “தாண்டகவேந்தர்” என்றும் பாராட்டப் பெற்றுள்ளார். அப்பரடிகள் அருளிச் செய்துள்ள, ஆறாந்திருமுறை முழுவதும் தாண்டகத்திலேயே அமைந்துள்ளது. அப்பர் அடிகள் அருளிச் செய்துள்ள, திருவடித் தாண்டகப் பாடல்கள் மறைகளினும், மறை முடிவுகளினும் மிக்குயர்ந்தன. நாள்தோறும் இத்திருவடித் திருத்தாண்டகத்தை ஒதுவோர் பக்தி நலத்திற்சிறந்து மேன்மையுறுவர். இது, முக்காலும் உண்மை.

அப்பரடிகளின் திருமுறைப் பாடல்கள் பத்திமை உணர்ச்சியில் வெளிவந்தவை யானாலும் “கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பே” போல இலக்கிய நயம் பொதுள அமைந்திருக்கின்றன. அப்பரடிகள் அருட்பெருஞ் சூலையினால் ஆட்கொள்ளப்பெற்ற பிறகு, திருவதிகையில் “கூற்றாயினவாறு” என்று முதற் பதிகம் பாடுகின்றார். அப்பதிகத்தில், தமிழகத்தின் அன்றிருந்த சமய நெறியின் குறைபாட்டினைக் குறிப்பில் உணர்த்துகின்றார். அப்பர் அடிகள் வழிவழிச் சிவநெறி மரபில் தோன்றியவர். ஆயினும், தமக்குப் புறச் சமயங்களின் இயல்பினையும், சிவநெறியின் சிறப்பினையும் எடுத்துக்கூறி நெறி நிறுத்தும் ஆசிரியர்கள் இல்லையே என்ற குறிப்பை உணர்த்துகின்றார். திலகவதியார் வழிவழி மரபில் அவரை வளர்த்தாரானாலும் சமய, தர்க்க விவாத முறையில் வளர்க்கவில்லை.

அன்று, சிவ நெறியில் நின்ற சான்றோர்கள் இங்ஙனம் தம்மை நெறி முறைப்படுத்திப் பாதுகாக்காமல், புறச் சமயத்தில் மூழ்கி, அளவு காணும்படி செய்து விட்டனர் என்று குறைபட்டுக்கொள்கின்றார். ஆம்: அப்பரடிகள் சிவநெறியிலிருந்து புறச் சமயத்திற்குச் சென்றபொழுது பரபரப்பில்லை; தேடுவாரில்லை. திலகவதியார் கவலைப்பட வில்லையா என்று கேட்கலாம். திலகவதியார் வருந்தியது உண்மை. திலகவதியார் வருத்தத்தைச் சமய உலகத்தின் வருத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது' உடன் பிறப்பு வழிப்பட்ட உணர்வு கலந்த பாசத்தின் வழிப்பட்டதே: ஆனால், அப்பரடிகள் புறச் சமயத்தினின்றும் சைவம் வந்தபோது, எவ்வளவு பரபரப்பு? அது சமய நிகழ்வாக மட்டுமல்லாமல் அரசியல் நிகழ்வாகவும் வடிவம் பெறும் அளவுக்கு, வளர்ந்து விட்டது. அப்பரடிகள் நமக்கு இந்தப் படிப்பினையை உணர்த்தவே,

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்
கரைநின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
நீத்தாய் கயம்புக நூக்கியிட
நிலைக் கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்

அதாவது, நீர்நிலையின் கரையொன்றில் காவல் செய்வோர் நிற்கின்றனர். நீர்நிலைக்கண் வந்த ஒருவர், அக் கரையில் நின்ற வேறு சிலரை நீர்நிலையின்ஆழம் கேட்ட பொழுது “நீயே இறங்கிப் பார்த்துக் கொள்” என்று வழி காட்டினராம். அவர் நீர்நிலையில் இறங்கி நீர்நிலையின் ஆழத்தில் அல்லற்பட்டுக் கரையேற முடியாமல் தவித்ததாக வரலாறு. இங்கு நீர்நிலை சமயக்கால். ஆழங்காண விரும்பியவர் அப்பரடிகள். ஆழங்காட்டி அறிவுறுத்த வேண்டிய காவற் கடமை பூண்டோர் அப்பரடிகளின் வழி வழி சமய மரபில் வந்த சான்றோர். கரையில் நின்றவர்கள் சமண முனிவர்கள்.

சமண முனிவர்கள் துண்டச் சமயத் தத்துவக் கடலுக்குள் குதித்து ஆழந்தெரியாமல் அறிவினால் வியவ காரம் செய்து கரையேற முடியாமல் அல்லற்பட்டவர் அப்பரடிகள், என்று சிந்தனை செய்து, ஒப்புநோக்க எத்தகைய உண்மை வெளிப்படுகிறது. இன்னும் அந்த நிலை மாறிய பாடில்லை.

தமிழ் இலக்கிய உலகில் திருக்குறள் காலத்தால் மூத்தது. திருக்குறளை இலக்கியம் என்று மட்டுமே நம்முடைய சான்றோர் கருதுவதில்லை. திருக்குறள் ஒரு மறை நூல்; அதனால் அப்பரடிகள் திருக்குறளைத் தமது திருமுறைப் பாடல்களில் அணியென எடுத்து ஆண்டிருக்கின்றார். வள்ளுவர், இனியவை கூறல் அதிகாரத்தில்,

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

என்று ஒதுகிறார். திருக்குறள், ஆழமான கருத்துடையது. சுவைமிக்க கனி துய்த்தற்குரியதாக - உரிமையுடையதாக இயல்பில் இருக்கிறது. ஆனால், அறியாமையின் காரணமாக அந்தக் கனியினைத் துய்த்து மகிழாமல் துவர்க்கும் காயினை, துய்த்தற்குத் தகுதியில்லாத காயினை உரிமையில்லாத ஒன்றினை, உரிமையுடையோர் அறியாமல் கவர முயற்சி செய்வது ஏன் என்று கேட்கிறார். இனியன பேசுதல் இயற்கை இந்த இனிய குறளினை அப்பரடிகள் கனி இடத்தில் சிவநெறியினையும், காய் இடத்தில் புறச் சமயத்தினையும் எண்ணி, இசைத்துப் பாடுவது படித்து இன்புறுத்தக்கது.

மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலாம் என்றெண்ணி உறிதூக்கி
உழிதந்தென் னுள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ
மயிலாடும் ஆரு ரரைக்
கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேனே.

என்பது அத்திருப்பாட்டு.

அப்பரடிகள் சிறந்த உவமைகளின் மூலம் உண்மைகளை விளக்க வல்லவர். இன்றைய மனித சமுதாயத்தில் 'தனி உரிமை', 'பொது உரிமை' என்ற சொற்கள் பெரு வழக்கில் வழங்கப் பெறுகின்றன. தனி உரிமை - பொது உரிமை என்ற சொற்கள் பெருவழக்காதல் வளரும் சமுதாயத்திற்கு நல்ல தல்ல. 'ஏன்? தனி உரிமையும் பொது உரிமையும் இன்று ஒன்றோடொன்று மோதக்கூடச் செய்கின்றன. தனி உரிமையும், பொது உரிமையும் அரும்பும், மலரும்போல் ஒன்றையொன்று தழுவி நிற்கவேண்டியவை. தனி உரிமை பொது உரிமை ஆகியவற்றில் முதலிடம் கொடுத்துப் பேணத்தக்கது பொது உரிமையேயாம். பொது உரிமை தாய்; தனி உரிமை சேய், ஆனால், சமுதாயப் பேரறிவு வளராததனால் தனி உரிமையிலிருந்துதான், பொது உரிமை தோன்றுகிறது என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது. ஆனால் மனித சமுதாய வரலாற்றுப் படியும், வாழ்வியல் முறைப்படியும் பொது உரிமை தோன்றி வளர்ந்து செழுமையடையும் பொழுதே, தனி உரிமை தோன்றுகிறது. நம்முடைய சமுதாயத்தில் தனி உரிமை உணர்வு வளர்க்கப்பட்டமையின் காரணமாகப் பொது உரிமையைவிடத் தனி உரிமையே முதன்மைப் படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் நம்முடைய சமுதாயத்தில் பொது உரிமை இயக்கங்களாகிய கூட்டுறவு இயக்கங்கள் பலவீனமுற்றே இருக்கின்றன.

அரசு வழிப்பட்ட பொதுத் தொழில்கள், தனியார் தொழில்களைவிட - தனியார் தொழில்களை நோக்கிடச் செழுமையான இலாபங்களைத் தரவில்லை. ஏன்? நம்முடைய சமுதாயத்தின் பொது நிறுவனங்களாகிய கோயில்களை எடுத்துக் கொள்வோமே; அவைகளைப் பேண வேண்டுமென்ற உணர்வு எல்லாருக்குமா இருக்கிறது? இல்லவே இல்லை; இன்று கோயில்களைப் பேணும் பொறுப்பு ஏற்றிருக்கின்ற சிலரிடத்தில்கூட “அது பொது; ஆதலால் பேணுகிறோம்” என்ற உணர்வு இல்லை. இங்ஙனம் பேணுவோரில் சிலருக்கு அது 'வேலை'; பலருக்கு அது ‘பிழைப்பு'! அதனாலேயே நம்முடைய பொது நிறுவனங்களுடைய உடைமைகளும் முதலீடுகளும், பல்கிப் பெருக வில்லை. அண்மைக் காலமாகப் பொது நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன. இது நல்ல திருப்புமுனை.

சமுதாயத்தின் இழிமனப் போக்கு இன்று நேற்றுத் தோன்றியதன்று. அப்பரடிகள் காலத்திலும் இதே நிலைமை தான். ஊர் நடுவே ஒரு மன்றம். மன்றம் என்றால் பொது

கு. இ. VII .20. இடம். நம்முடைய இறைவன் மன்றிலாடுகின்றான். மன்றத்தையே 'பொதுவில்' என்றும் அழைப்பதுண்டு. மன்றத்திலாடும் இறைவன் என்றால், இறைவன் உலகுக்குப் பொது என்பது பொருள். உலகத்தின் முதல் பொதுவுடைமைத் தலைவன் இறைவனே. அவன் மகிழ்ந்தாடிய இடம், மன்றம். அந்த ஆனந்த வெள்ளத்தமுதில் திளைப்பவர்கள் உலகத்து மக்கள். இங்ஙனம் பொதுமைக் கரு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகச் சமய நெறியில் கால்கொண்டுவிட்டது. ஆயினும் பழக்கங்கள் அக் கருவை மூடிமறைத்துச் சிதைத்துவிட்டன.

மன்றம் பலர் கூடுமிடம். ஆங்கு, நிழல் தருவதற்கான மரங்கள் தோன்றி இடர்களைக் களைந்து வளர்ந்திருக்கும். நிழலில் கூடியிருந்து மகிழ்ந்தவர்கள், நிழல் தந்த மரங்களைப் பேணுவதில்லை; பேணாதது மட்டுமன்றித் தேவைக்கேற்பச் சிறிதும் பெரிதுமான கொம்புகளை ஒடித்துச் சேதப் படுத்துவர். தொங்கும் கிளைகளை மாடுகளும் கடித்து மேய்ந்து அழிக்கும். நோய் தரும் பூச்சிகள் ஒட்டி மரங்களை உருக்குலைக்கும். இங்ஙனம் மன்றத்தில் நின்ற மரமாயினும் - மன்பதைக்குப் பயன்படுவதாயினும், அம்மரம் பேணுவாரின்றிப் பெருந்துன்பமே உறுகின்றது. காரணம் மன்றத்தில் நின்ற மரம்! வீட்டருகே நின்ற மரமாக இருப்பின் நன்கணம் பேணுவர் என எடுத்துக் கூறவும் வேண்டுமோ?

“தாம் வளர்த்ததாக இருப்பின், நச்சு மரமேயானாலும் கொல்லமாட்டார்கள்” என்று மணிமொழி பேசுகிறது. வளர்த்த பாசம் அத்தகையது. மன்றத்தில் நிற்கும் மரமும், பொது இடத்தில் நிற்கும் மரமும், படும் துன்பத்தைத் துன்பத்திற்கு எல்லையாக எடுத்துக் காட்டுகின்றார் அப்பரடிகள். ஆதலால் அப்பரடிகள் காலத்தும் பொதுமை உணர்வு தோன்றவில்லை; பொதுவுரிமைப் பொருள்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வும் வளரவில்லை.

தனியுரிமையும், தனி மனிதஉணர்வும் நஞ்சென வளர்ந்து மனித குலத்தை அரித்துக் கெடுத்திருக்கின்றன. மனித சமுதாயம் என்ற ஒப்பற்ற மாளிகை, 'நான்’, ‘எனது’ என்ற இரண்டு 'இடி'களால் தகர்க்கப்பட்டு வந்திருக்கிறது. 'நானிலும்' 'ஒரு மனித'னிருக்கிறான். ‘நாமிலும்', ஒரு மனிதனிருக்கிறான். ‘எனதி'லும், ஒரு 'மனித'னுடைய உரிமை உணர்வு இருக்கிறது. 'நம்'முடையதிலும் 'ஒரு மனித'னுடைய உணர்வு இருக்கிறது. ஆனால் இரண்டிற்கும் இடையே வேற்றுமை! 'யான்’, ‘எனது’ என்ற உணர்வு வெறுப்பை வளர்க்கிறது; பகைமையை வளர்க்கிறது. பாதுகாப்பின் மையைத் தோற்றுவிக்கிறது. 'நாம்’, ‘நமது' என்ற உணர்வு அன்பைப் பெருக்குகின்றது; உறவை வளர்க்கின்றது; பாதுகாப்பைத் தருகின்றது.

தனி உரிமையில் பொதுவுரிமை அடங்காது. பொது உரிமையில் தனியுரிமை அடங்கும். ஆயினும், வழிவழி சமுதாயத்தில் வேண்டிய அளவு பொதுமையுணர்வு வளர வில்லை. 'நான்’, ‘எனது' என்ற உணர்வு, மனிதனுடைய உத்வேகத்தை அழிக்கிறது. தனி மனிதன் ஒப்பற்ற காரியங்களைச் செய்யவே முடியாது. இதனை உணர்த்தவே மிகப் பருமனான ஒரு தேரைப் பலர் கூடி இழுக்கும் மரபைச் சமயநெறி தோற்றுவித்தது. ஆயினும் என்? தேர் இழுக்கப் பெறுகிறது. ஆனாலும், சமுதாயப் பொதுவுணர்வு தோன்ற வில்லை. தேரோட்டம் ஒரு சடங்காகப் போய்விட்டது. அதனால், தேரோட்டத்திலும் சண்டைகள் தோன்றி விட்டன!

மனிதன், ஒன்றில் ஒன்ற வேண்டும். அந்த ஒன்று கடவுள்; எல்லா உலகுக்கும் ஒருவனாக இருக்கின்ற கடவுள்; அவன் அவனுமல்லன், அவனுக்கு ஒன்றென்றே பெயர் கூறினும் பொருந்தும். அவனையே “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்று அப்ப்ரடிகள் பாராட்டுகிறார். “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று சாத்திரம் பேசும். “ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே” என்று மணி மொழி பேசும். அந்த ஒன்றில் வேறுபாட்டுணர்வு அற்று, ஒன்றிக் கலந்தால் துன்பம் வாராது என்ற கருத்தை அப்பரடிகள் இனிது விளக்கிப் பாடுகின்றார். அதாவது, தனிமை துன்பம் தரும். பொதுமை இன்பம் தரும். கடவுள் ஒன்று. அதுவே உலகத்திற்கு ஒன்று. அந்த ஒன்றை ஒன்றியிருந்து நினைத்தால் இன்புறலாம் என்பதாகும்.

மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரமெய்தி
ஒன்றினா லுணரமாட்டே னுன்னையும் வைக்கமாட்டேன்
கன்றிய காலன்வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினா னலமந்திட்டே னதிகைவீ ரட்டனீரே.

என்பது அப்பர் திருப்பாட்டு.

அப்பரடிகள் உருவகத்தில் செய்திகள் அமைத்து விளக்குவதில் ஈடு இணையற்றவர். அப்பரடிகள், வாழ்க்கையில் அறிவுவினுள் தெளிவும், தெளிவினுள் சிவமும் காண வேண்டுமென்ற கொள்கையினர். வாழ்க்கையில் அறிவு தலைப்படுவதே அருமையிலும் அருமை. அறிவில் தெளிவு காண்பது எளிதன்று. அறிவில் தெளிவின்மையினாலேயே சமயக் கணக்கர் முரண்படுகின்றனர்; மோதுகின்றனர். சமயச் சண்டைகள் கால்கொள்கின்றன. அறிவில் தெளிவு காண்புழி - இன்ப அன்பு முகிழ்க்கும். அதுவே சிவநிலை.

இந்த நிலையை எய்திட வேண்டிய ஆருயிர் மயக்க வலையிற் சிக்கித் தவிப்பதை அப்பரடிகள் நகைச்சுவை ததும்ப உருவகிக்கின்றார். எரிகின்ற அடுப்பு. அதில் உலைப்பானை உலைப்பானை நீரில் மெள்ளச் சூடேறுகிறது. அந்நிலையில் குளிர் நீரில் கிடந்து மரத்துப்போன ஆமை உலைப்பானையில் இடப்பெறுகிறது. ஆமைக்கு இளம்சூடு உணக்கையாக இருக்கிறது; மகிழ்கிறது. அந்த மகிழ்ச்சியில் அந்தப்பானை நீர்க்குள்ளேயே திளைத்து நின்று விளையாடுகிறது. என்னே அறியாமை எரிகின்ற அடுப்பிலிருக்கும் உலைநீர் எப்பொழுதும் இளவெந்நீராக இருக்காது. வெந்நீரின் வெப்பநிலை ஏறும். ஆமை, வெப்பநிலை மாற்றத்தால் அழியுமல்லவா? இதை அறிந்துணரும் ஆற்றல் ஆமைக்கு இல்லை. ஆமைக்குத்தான் இல்லையா? ஆறறிவு படைத்த மனிதனுக்கு உண்டோ? வாழ்க்கையே இவ்வுலகம் என்ற ஒர் அடுப்பு. அவ் அடுப்பில் ஆசை என்ற தீ எரிகிறது. உணர்வாகிய நீர் மனிதன் பெற்ற சிறுபொழுது இன்பமே இளஞ் சூடுடைய வெந்நீர். இதனையே நிலையெனக் கருதித் திளைத்து மகிழ்ந்து விளையாடுகிறான் மனிதன். ஆனால் அவன் பெற்றதோ நிறை இன்பமல்ல. அவன் பெற்றது துன்பத்திற்குக் காரணமாய், இன்பம் போலத் தோற்றிய துன்பமே என்று விளக்க,

உலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்றாடுகின்றேன்,

என்பார், அப்பரடிகள்.

அப்பரடிகள், பழமொழிகளைக் கொண்டு அறநெறிகளை விளக்குபவர்.

இறைவன் கருணையை நினைந்து, நெஞ்சு நெகிழப் பாடுபவர். உயிர் அருவப்பொருள்; அதற்கு ஒர் உருவத்தைத் தந்து, உலகிடை அனுப்பித் துய்ப்பன துய்த்து, மகிழ்வன மகிழ்ந்து - குறைநீங்கி நிறைநலம் பெறச் செய்யும் கருணையே கருணை. இதனை,

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய் திட்டு
என்னையோ குருவ மாக்கி

என்று பாடுகிறார். இந்த உருவமாக்கிய பணிக்கு ஈடாக எதனைக் கூறமுடியும்? இந்த உருவத்தினை முதலாகக் கொண்டுதானே மனிதன் வளர்கிறான்! வரலாறு படைக்கிறான்? உலகில் வேறு எந்த அறிவியல் படைப்பையும் விட இந்த மானுட யாக்கையின் படைப்பு அதி நுட்பமானது; அறிவியல் தன்மையுடையது; இந்த உடல்-உயிர்க்கூட்டின் பயன் உயிரை இன்புறுத்தலேயாம். இறைவன் திருவுள்ளம் இன்புறுத்தலேயாம். ஆயினும் உயிர் பெற்றுள்ள சிற்றறிவு அடங்கவா செய்கிறது? அது தன்னிச்சையிலேயே ஆட்டம் போடுகிறது; அறிவுப் பொருளைத் திருத்திச் சீராக்குதல் எளிய காரியமன்று. அறிவற்ற சடப்பொருள் எளிதில் பக்குவப்படும். அறிவு நாடகமாடும்; நடிக்கும்; உணர்ந்தது போல் காட்டிப் பின் தன்னெறியே மேற்கொள்ளும்; இன்பத்தைத் துன்பமாகக் கருதும்; துன்பத்தை இன்பமாகக் கருதும்; அடக்கினாலும் சில நாள் அடங்கும்; வாய்ப்பு வந்துழி மிஞ்சும். இத்தனை இக்கட்டான நிலையில் உயிருக்கு அறிவு கொளுத்தியே - அதனை அறியச் செய்தே பக்குவப் படுத்தவும் வேண்டியிருக்கிறது; அதை அடிமைப்படுத்தவும் முடியாது. இன்பத்திற்கு எதிர் துன்பமே. துன்பத்திற்குக் காரணம் அறியாமையும் அறியாமையினால் செய்த செயல்களின் விளைவுகளுமாம். நோய் நீங்குகிறவரை உணவு சுவைக்காததைப் போல, வினைநீக்கம் பெறும்வரையில் நிறை நல் இன்பத்தையும் துய்க்கமுடியாது. ஆதலால்,

முன்பிருந்த வினை தீர்த்திட்டு

என்கிறார்.

தீமை நீங்கினால் போதாது; நன்மை விளங்கிட வேண்டும். இதனை வள்ளுவமும்,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்று கூறியது. அருணகிரியாரும்,

பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்

என்று கூறினார்.

தேவைக்குக் காரணமாகிய அறியாமை நீங்கியவுடன் அறிவு ஆங்கு விளங்க வேண்டும். இறைவன் உயிரிடத்து விளங்கிய முன்னை வினை வாசனை நீங்கிய பிறகு அந்த உயிரின் உள்ளத்தையும் கோயிலாகக் கொண்டு குடியிருந்தருளுகின்றான். உயிர் அறியாமையில் கிடக்கும்பொழுது உடலினுள் இருந்து உயிரும், மாற்றாரும் அறியமுடியா வண்ணம் நின்று அருள் செய்யும் இறைவன் வினை நீக்கத்திற்குப் பிறகு, பலரும் காணும் திருக்கோயிலென்ன உயிரிடத்து முழு விளக்கமுற வீற்றிருக்கின்றான். இறைவன் உள்ளத்து இடங்கொண்டமையின் காரணமாக அன்பாகிய ஊற்றுக்கண் திறக்கிறது, உயிரிடத்து ஆற்றல் மிக்க அன்பைத் தூண்டுகிறது. இந்த நிலையில் அன்பும் சிவமும் ஒன்றென்ற குரல் எழும்புகிறது, அன்பினாலாவது இன்பமே. அன்பினாலல்லது வன்பினால் ஆவது எப்பொழுதும் இன்பமன்று. அஃது ஒரு சேறு. அன்பினால் இன்புறுத்துகிறார். அன்பு பெருகி இன்பத்தில் திளைக்கும் பொழுது மேலேது? கீழேது? உயிர், இன்புறுத்தும் பொருளிடத்தில் அடிமையாகிறது. இது அறிவியல் அடிமை; உண்மையின் பாற்பட்ட அடிமை. இத்தகைய இறைவன் திருவருளை நினைந்து வாழ முடியாமல் பிற தெய்வங்களை வணங்குவதும், பிறநெறிகளைச் சார்வதும் வேடிக்கையாக இருக்கின்றன. அப்பரடிகளே தம் வரலாற்றினை நினைந்து வியந்து பாடுகிறார். முயல், நிலத்தில் திரிவது, அதனால் அதைப் பிடிப்பது சுலபம். எளிதில் பிடிக்கக்கூடிய முயலைப்பிடிக்காமல் விட்டு விட்டு, எளிதில் பிடித்தற்கியலாத காக்கையைப் பிடிக்க, காக்கையின் பின்னே ஒடித் திரியும் செயலை நினைவுபடுத்துகிறார். காக்கையோ வானில் பறக்கிறது. மனிதனுக்கோ பறக்கும் சக்தியில்லை. எங்ஙனம் பிடிக்க முடியும்?

கையிலிருக்கும் முயலை விட்டுவிட்டுக் காக்கையைப் பிடிக்கப் போவதாகவும் பொருள் கொள்ளலாம். முயல் சிவநெறி. நாம் பிறந்த நெறி, எளிதில் அமைந்த இனிய நெறி; இன்றமிழ் நெறி; ஆரத்துய்த்து மகிழத் துணை செய்யும் தூய நெறி; எளிய நெறி; இந்நெறியில் பிறந்திருந்தும் இந்நெறி நின்று வாழாது பிற நெறிகளைத் தேடியலைவதும், தாயிற் சிறந்த தயாவுடைய நம் சிவன் தாளினைத் தொழாது வேறு தெய்வங்களைத் தேடியலைவதும் காக்கையின் பின் ஒடுவதை யொக்கும். இந்த இனிய பாடலைப் பாடிப் பயிலுக.

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
டென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
டென்னுள்ளம் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண்
டருள் செய்த வாருரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போன வாறே.

அப்பரடிகள் சிறந்த சமய மரபுகளை வலியுறுத்தியது போலவே, பொருந்தாத பழக்க வழக்கங்களையும் மறுத்துரைப்பர். பொருளற்ற - உணர்வைத் தூண்டி வளர்க்காத வெற்றுச் சடங்குகளை அப்பரடிகள் ஏற்றுக் கொண்டதில்லை. பொருள் புரிந்து கொள்ள இயலாத கூர்ச்சம் முதலியன பயன்படுத்தும் சடங்குகளைக் கண்டிக்கின்றார். ஏன்? எல்லா உலகத்தையும் இறைவனாகக் காண்கின்ற ஞான உணர்வு அப்பரடிகளிடத்தில் முகிழ்த்திருந்தது. “எல்லா உலகமும் ஆனாய்” என்றும், “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்றும், “வாசமலரெலாம் ஆனாய் நீயே” என்றும் “முழங்கு ஒலி நீரானான் கண்டாய்” என்றும், “பண்ணின் இசை நீயானாய்”, “பழத்திடைச் சுவை யொப்பாய்” என்றும் அப்பரடிகள் அருளிச் செய்த சொற்றொடர்களை நோக்கின், அடிகள் பெருமான் எல்லாம் வல்ல இறைவனை இந்த அண்டமாக, அண்ட சராசரங்களாக, இந்த அண்ட சராசரங்களில் நிலவும் உயிர்களுக்கு உயிராகக் கண்டு வழிபடுகின்ற ஞானப் பூசையையே போற்றிப் பாராட்டுகின்றார்.

“எங்கும் ஈசன் இருக்கிறான் என்று எண்ணி, அன்பு செய்யாமல் கங்கையாடுவதில்-காவிரியாடுவதில் என்ன பயன்?” என்று கேட்கிறார். அண்மையில் மறைந்த நமது பெரியாரும் இதே கேள்வியைத்தான் கேட்டார். அப்பரடிகள் கங்கையாடிலென்? காவிரியாடிலென்? என்று வினாக்களைத் தொடுத்ததோடன்றிச் செய்யக் கூடாததை மறுத்துச் செய்ய வேண்டியதையும் வற்புறுத்துகின்றார். அதாவது “எங்கும் ஈசன் இருக்கிறான்” என்று அன்பு காட்ட ஆணையிட்டார்.

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்?
கொங்கு தண் குமரித் துறையாடிலென்?
ஒங்கு மாகடல் ஒத நீ ராடிலென்?
எங்கு மீசன் எனாதவர்க் கில்லையே

என்று பாடுகிறார்.

நமது சமுதாய வாழ்க்கையில் பலர் கூடி உண்ணும் பொழுது ஒருவரோடொருவர் பேசாமலேயே உண்கிறோம். உண்ணும்பொழுது பேசுவதைப் பெரியோர்கள் அனுமதிப்பதில்லை. அங்ஙனம் பேசுவது, ஆசாரக்கேடு என்று கருதுகிறார்கள்; கண்டிக்கிறார்கள். குழந்தைகள் உண்ணும் பொழுது பேசத் துடிக்கிறார்கள். பெரியோர்கள் அடக்குகின்றனர். பேச்சுக்குப் பதில் அழுகை பிறக்கிறது. இங்ஙனம் உண்ணும்பொழுது உரையாடக் கூடாது என்ற வழக்கம் எப்பொழுது தோன்றியது? யாரிடமிருந்து வந்தது? என்று அறிந்து கொள்ளுதல் சுவையான செய்தி.

தமிழர் வாழ்வில் சமண சமயம் வந்து கலந்தபொழுதே இந்த வழக்கம் வந்திருக்கிறது. தமிழினம் சமண சமயத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களையறியாமலே அந்தச் சமயப் பழக்க வழக்கங்கள் சில அவர்களுடைய வாழ்க்கையில் வந்து பொருந்தியுள்ளன. சமணர்களின் சீரிய ஒழுக்கங்களுள் தலையாயது, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அல்லது திட்டமிட்டோ தற்செயலாகவோ பிற உயிர்களைக் கொலை செய்யக்கூடாது என்பது. தற்செயலாகவும் உயிர்க் கொலை நிகழக் கூடாது என்பதற்காகச் சமண சமயம் சில ஒழுக்க விதிகளை விதித்திருக்கிறது. அவற்றுள் ஒன்று திறந்த வாயினராக இருத்தல் கூடாது என்பது. இருந்தால், சிறு பூச்சிகள் இயற்கையில் வாய்க்குள்ளிருக்கும் பற்பசையில் சென்று ஒட்டி இறத்தல் கூடும் என்று கருதுகிறது. அதனாலேயே சமண முனிவர்கள் தம் வாயின் மீது ஒரு சிறு திரையிட்டிருப்பர்.

இவ்வளவு விழிப்பாகக் கொல்லாமையைக் கருதுபவர்கள் உண்ணும்பொழுது உரையாடினால் சிறு பூச்சிகள் வாய்க்குள் செல்லக்கூடுமென்று, உரையாடுவதற்குத் தடை விதித்தார்கள். அடுத்து உரையாடுதலின் மூலம் மகிழ்வு பிறந்தது; அம்மகிழ்ச்சிப் போக்கில் திட்டமிட்ட அளவிற்கு மேலாக உண்ணக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அது நோன்பை மீறிய செயலாகும். இந்த அடிப்படையிலும் உண்ணும்பொழுது உரையாடுதலைச் சமணம் தடுக்கிறது. இந்தச் சமணர்களுக்குரிய பழக்கம் சமண முனிவர்களுக்கு விதித்த நெறி, எப்படியோ நம்மையும் அறியாமல் நம்முடைய சமுதாய வாழ்க்கையிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது. அப்பரடிகள், “மூங்கை போல் உண்ணும் மூடர்” என்று உண்ணும்பொழுது உரையாடாதார் பண்பைக் கண்டிக்கிறார்.

பொதுவாக, உண்பதும் ஒரு கடமையேயாகும். மிகச் சிறந்த பயனுடைய பணிகளைச் செய்தற்குக் கருவியாக அமைந்துள்ள, உடலைப் பேணுதலும் ஒரு தவமேயாகும்.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று திருமந்திரம் பேசுகிறது. இங்கே உடம்பை வளர்த்தல் என்பது சதைப் பிண்டங்களை வளர்ப்பது என்பதன்று. உடலியலுக்குரிய விழுமிய திறன்களை வளர்ப்பது என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். சதைத் திரட்சிகள் எரி விறகிற்குப் பயன்படுமேயன்றிப் பணிகளுக்குப் பயன்படா. உயிர் உயர்தற்குரிய அன்பிற் கலத்தல் - தொண்டு செய்தல் ஆகியனவற்றிற்குத் துணையும் தோழமையும் சமுதாயச் சூழலும் இன்றியமையாதன. தனி மனிதன் தனியே அன்பிற் கலத்தல் இயலாது. அவன் தன்மாட்டே அன்பு காட்டுதலை ‘அன்பு' என வழக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அது சுயநலம், அன்பன்று; அவமேயாம்.

ஒருவன் தன்மாட்டே, தான் அன்பு காட்டிக் கொள்ளுதல் தீமையையே பெருக்கும்; இன்பத்தினைப் பெருக்காது. அதனாலேயே அன்பு காட்டுதற்குரிய களமாக விலங்குகள் போலல்லாது மனித சமுதாயத்தை ஒரு கூட்டியல் வாழ்க்கையாக இயற்கை அமைந்துள்ளது. மனித சமுதாயத்தில் அரக்கனைத் தவிர, தனி மனிதனே இல்லை; ஞானியானால் இறையுடன் தோழமை கொண்டு ஒன்றிக் காதலித்து இன்புறுவர். அவர்களுக்கும் இறைவன் என்று ஒரு தோழணுண்டு. இவன் அவனைக் காதலிக்க, அவன் இவனைக் காதலிக்க மிகப் பெரிய ஞானக்காதல் வாழ்வு மலர்கிறது; எனவே மனித உயிர் குறைகளினின்று விடுதலை பெற அன்பினாற் கலந்தஉறவு தேவை. உறவு தோன்றி வளர்தற்குரிய சூழ்நிலைகள் பலவற்றுள் பலர் ஒருங்கிருந்து உண்ணும் சூழ்நிலையே சிறப்புடைய சூழ்நிலையாகும். அதனாலேயே வள்ளுவம், பகுத்துண்ணலைத் தொடர்ந்து 'பல்லுயிர் ஒம்புதல்' என்று பேசியது. திருமுறைகளும் திருக்குறளும், விருந்தோம்பலை நெறிகளுக்கெல்லாம் உயர்ந்த நெறி என்று எடுத்தோதுகின்றன.

மனித உறவுகளுக்குக் கொடிய பகைமையாகிய அழுக்காறு, பிற கட்டங்களில் தலைகாட்டுதல் போல உண்ணும்பொழுது தலைகாட்டுதல் இயலாது. அளவுக்கு மிஞ்சிக் குவித்து வைக்கின்ற செல்வத்தைப் போலல்லாமல், அளவோடு உண்பதலால் அழுக்காற்றுணர்வு தடை செய்யப்படுகிறது. அதோடு பிற கட்டங்களில் மனிதன் தன் மகிழ்வுணர்வைப் பூரணமாக வெளிப்படுத்தி விடுவதில்லை, உண்ணும்பொழுது தன்னுடைய நிறைவை அகன்ற ஒளி படைத்த கண்கள் மூலமும், மகிழ்வு கொப்பளிக்கின்ற திருமுகத் தோற்றத்தின் மூலமும் சுவைத்து மகிழ்ந்தமையை உதடுகளில் பொங்கி வழியும் புன்னகை மூலமும் யாதொன்றும் தடை செய்ய முடியாவண்ணம் வெளிப்படுத்துகிறான்.

இத்தகைய சூழ்நிலையில் உறவு கலத்தலைப் போலப் பிற சூழ்நிலைகளில் முடியாது. அது மட்டுமின்றி ஒருவர் உண்பதை உடனிருப்பவன் விரும்புகிறான் என்பது தெரியாது போனால் உண்பவனுக்கு அவனையறியாமலே ஐய உணர்வும் கூச்சமும் தலைகாட்டுகின்றன; அதன் காரணமாகத் தயங்கித் தயங்கி உண்கிறான். அப்பொழுது அவன் உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமற் போகிறது. உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமல் உண்ணும் உணவு, நஞ்சாக மாறிவிடுகிறது. அதனால் நலம் கெடுகிறது; நோய் வந்தமைகிறது.

ஆதலால், உண்ணும்பொழுது உரையாடாது உண்ணுதல் நல்ல வழக்கம் அன்று; ஒழுக்கமும் அன்று; அது நெறியுமன்று; வாழ்வாங்கு வாழும் நெறியுமன்று; உடலியல் பேணும் நெறியுமன்று. அதனாலன்றோ, தாயுமானார். “உறவு கலந்து உண்ணக் கண்டீர்” என்று எடுத்தோதினார். உறவு கலக்க உரையாடல் இன்றியமையாதது. ஆதலால் பலர் கூடி உண்ண வேண்டும். உறவு கலந்து உண்பித்துச் சிரித்துப் பேசி மகிழ்வு சிறக்க உண்ண வேண்டும். ஆனால் உண்ணும் பொழுது உரையாடலை 'அரட்டைக் கச்சேரியாக' மாற்றி விடக் கூடாது. பயனற்ற சொற்களைப் பலர்கூடி உண்ணும் பந்தியில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அது மட்டுமின்றி, உணர்ச்சி வசப்படுத்தக்கூடிய அவல உணர்வுகளைத் தரக்கூடிய செய்திகளை மறந்தும் பேசக் கூடாது. இது நேர்மாறான பயனைத் தந்துவிடும். குற்றம் குறைகளை உணர்த்தும் நேரம், உண்ணும் நேரமன்று: உண்ணும்பொழுது மனித இயலைத் தூண்டி உயர்த்துதற்குரிய மகிழ்வும் ஊக்கமும் தரத்தக்க செய்திகளையும், உயர்வு தாழ்வுகளை விரிவுபடுத்தாத உறவு நெறிகளையும் காட்டிப் பேசுதல் வேண்டும். இத்தகைய உரையாடலோடு கலந்துண்ணும் பழக்கம் நமது சமுதாய வழக்கம். இந்த இனிய வழக்கம் மீண்டும் நமது சமுதாயத்தில் மலர்வதாக.

இந்த உலகை - உலக இயக்கத்தை நடத்துவது காலம். காலம் என்னும் களத்தில்தான் மனிதன் வளர்கிறான். வரலாறு உருவாகிறது. காலம் மிகவும் விழுமியது. போற்றத் தக்கது. பயன்கொள்ளத் தக்கது. காலம் என்ற நெருக்கடியை இலட்சியமாக வைத்துத்தான் மனிதன் வளர்கிறான். காலத்திற்கு இருக்கும் அருமையான வாய்ப்பு சென்ற காலம், நிகழ்காலத்தை நிர்ணயிக்கிறது; எதிர்காலத்தை உருவாக்குகிறது.

இந்த உலகில் எந்த ஒன்றையும் மனிதன் படைத்துக் கொள்ளமுடியும். ஆனால் புதியதொரு காலத்தை அவன் அமைத்துக் கொள்ள முடியாது. அதுபோலவே மனிதன் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் இழந்த காலத்தைத் திரும்பப் பெறமுடியாது. வாழ்நாள் பல வினாடித் துளிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு வினாடித் துளியும் கழியும்போது உயிர் வாழ்க்கை கரைகிறது. மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மகிழ்விலேயே ஈடுபடும் மனப்போக்குடைய நாம் மரணத்திற்கு அஞ்சுவதால் அயர்ந்து மறந்து விடுகிறோம். நாம் அறிந்து கொண்டாலும் சரி, உணராமல் போனாலும் சரி, வாழ் நாளும் கரைந்தே போகிறது. எப்படி முயன்றாலும் வாழ்நாள் கரையத்தானே செய்யும். அதைப்பற்றிக் கவலைப்பட்டு என்ன என்றும் கேட்கலாம். ஆனால் வாழ்நாளை முற்றிலும் முழுதுமாகப் பயன்படுத்தினால் அது கரைந்து அழிந்ததாகக் கருதமுடியாது. வள்ளுவரும் “உளதாகும் சாக்காடு” என்பார். காலம் விரைந்து செல்லக்கூடியதே! அதனைத் தடுத்து நிறுத்துதல் என்பது இயலாது. ஆயினும் காலத்தின் நோக்கம் பயன்படுதலேயாம். காலம் முழுதுமாகப் பயன்பட்டிருக்குமானால் அது அழிவல்ல; ஆக்கமேயாகும். மனித உலகத்திற்கு ஒவ்வொரு வினாடித் துளியும் பயன்பட வேண்டும். ஒரு மனிதன், தனக்குரிய பொருள் - தனது வாழ்வுக்குரிய பொருள் பிறரால் அவனறியாமல் கொள்ளை கொள்ளப்படும்போது களவு போய்விட்டது என்று கூறுகிறான். இத்தகைய களவு உடைமைகளுக்கு மட்டும் தானா? காலத்திற்கும் உண்டு. அடிக்கடி சிலர், நேரம் போனதே தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். இப்படிக் கூறும்பொழுது அவர்கள் இம்மியும் கவலைப்படுவதில்லை. நம்மை அறியாமல் நமது செயலுக்கும் பயன்படாமல் பயன் தராமல் வாளா கழிகின்ற காலமும் களவு போனதாகவே கருதப்படும்.

அப்பரடிகளே இங்ஙனம் கூறுகின்றார். “களவுபடாததோர் காலம்” என்பது அவர் வாக்கு உடைமைகளைப் பாதுகாக்கும் கவலை இல்லையா? பூட்டும் சாவியும் தோன்றவில்லையா? கணக்குப் பார்க்கும் பழக்கம் இல்லையா? காலம் படைத்துத் தரும் உடைமைகளுக்கு இவ்வளவு அக்கறை எடுப்பவர்கள், ஏன் மூலப்பொருளாகிய காலம் பற்றிக் கவலைப்படாது இருக்கிறார்கள்? அதுதான் புரியாத புதிர் உடைமை இழப்பு உடனடியாகத் துன்பம் தரவல்லது. ஆனால், மனம் வைத்து முயன்றால் ஈடு செய்ய வல்லது. ஆனால், காலத்தின் இழப்பே நெடிய துன்பத்தைத் தரவல்லது; ஈடு செய்ய முடியாததும்கூட. ஆனால், அதைப் பற்றி மனித உலகம் போதுமான கவலை காட்டுவதாகத் தெரியவில்லை. எப்படியும், மனிதனுக்குக் காலம் போற்றும் உணர்வு வேண்டும் என்பதற்காகவே வினாடி வரையில் பகுதி பிரித்துக் காட்டினார்கள். வினாடியை விட்டால் நிமிடத்திலாவது முடித்துக் கொள்ளட்டும் என்றும், நிமிடத்தைவிட்டால் மணிக்கணக்கில் தொலைக்காமல் இருக்கட்டும் என்றும் பகுதி பிரித்துக் காட்டினார்கள். ஆனால் நாட்கணக்கில் ஆண்டுக் கணக்கில்கூடப் பயனற்றுக் காலம் கழிக்கப்படுவதை - இல்லை, அழிக்கப்படுவதை என்னென்று கூறுவது! காலம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். காலம் சென்ற அடிச்சுவடு, சாதனையின் மூலமாகத் தெரியவேண்டும். அப்பொழுதுதான் காலம் பயன்பெற்றதாகும், அங்ஙனம் இல்லாமல் “நாளை நாளை” என்று கடத்தி வாழ்வதை இயற்கை ஒரு பொழுதும் மன்னிக்காது. அப்படிப்பட்டவனுடைய காலம் சைத்தானால் களவு கொள்ளப்படும். ஆதலால், உய்திக்குப் பயன்பட வேண்டிய காலத்தைக் களவு போகாமல் உரியவாறு பயன்படுத்தி அளவுக்குட்படாத அன்பால் ஐயாறப்பனை வாழ்த்தி வாழ்ந்திடுதல் வேண்டும், என்றார் அப்பர் அடிகள். அறநெறிப்படி காலம் போற்றுதலும் சிறந்த கடமையாகும்.

வளர்மதிக் கண்ணியினானை
வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங்
காண்பான் கடைக்கணிக்கின்றேன்
அளவு பாடாததோ ரன்போ
டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
யேறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்

என்பது அப்பர் அருள்வாக்கு.

நெஞ்சம் விந்தையானது. அலைகடலையும் நெஞ்சத்தையும் ஒப்பிடலாம். அலைகடலில் எண்ணத் தொலையாத அலைகள் உண்டு. அதுபோலவே, எண்ணத் தொலையாத ஆசை அலைகள் நெஞ்சில் உண்டு. அலைகள் எண்ணிக்கை பலவானாலும் அவை புதிய வண்ணமும் வடிவமும் உடையன அல்ல; முன் பின் என்ற காலமாறுபாடேயாகும். உருத்துதெழுந்து வந்த அலை, கரையில் மோதி அலையென்ற வடிவமிழந்து - பெயரழிந்து ஆங்காரம் மங்கிக் கரையால் எதிர்த்துத் தாக்கப்பெற்று, உருக்குலைந்து, கரைந்து தண்ணீராகக் கடலில் கலக்கிறது. மீண்டும் அத் தண்ணீர்த் துளிகளே காற்றழுத்தத்தின் துணைக்கொண்டு அலையாகி மோதுகிறது. ஆக, வடிவத்திலும் மாறுதலில்லை; செயலிலும் மாறுதல் இல்லை. அதுபோலவே ஆசை அலைகள் நெஞ்சில் எழுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தாலும் ஆசைகள் புதியன அல்ல. பழைய சுயநலமேதான். பழைய சுயநலம் மாறிப் புதிய பிறர் நலமாக இருப்பின் குணம் மாறும்; பயன் விளையும். ஒருகால் சுயநலமும் காப்பாற்றப் பெற்றாலும் பெறலாம்.

இந்த நெஞ்சு அறியாமைத் தன்மையுடையது. அதற்கு ஆய்ந்தறியும் அறிவுணர்வை விட வழக்கம்தான் பெரிது. அது இன்று புதுப்பாதை போடாது; நேற்று நடை பயின்ற பாதையிலேயே செல்லும்; அந்தப் பாதை நாற்றமுடையதாக இருந்தாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டாவது அந்தப் பழைய பாதையில் செல்ல வழி நடத்துமே தவிர, எளிதில் வழக்கத்தை மாற்றாது. நெஞ்சம், ஆசைகளின் ஊற்றுக்களன். ஆசைகள் துன்பந் தருவனவேயன்றி இன்பந்தரா, அதனாலன்றோ,

ஆசையறு மின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

என்று, திருமந்திரம் பேசிற்று. 'ஆசையை விடுக' என்றால் ஒன்றும் வேண்டாம் என்பது பொருளல்ல. அன்பின் வழியல்லாமலும், பண்பு வழிப் பயன் கருதாமலும் விழைவது ஆசை. உணவு - உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலைப் பேணவும், பேணிப் பாதுகாக்கவும், திறனுறு வகையில் உடலைப் பயன்படுத்திக் கொள்ளவும் உணவை விரும்புதல் ஆசையாகாது. ஆனால், உணவின் மேலேயே ஆசை கொண்டு, சுவையில் நாட்டம் வைத்து, அச்சுவை உடலியக்கத்திற்குத் தீங்கு பயப்பினும் உணவை விரும்பி உண்பது ஆசையாகும்.

பொருள், வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பொருளின்றேல் பூவுலகம் இல்லை. நெறிமுறைப்பட்ட துய்ப்பிற்கும், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் மற்றவர் உயிர் வாழும்படிச் செய்யும் அறமாகிய ஈதலுக்கும், பொருள் தேவை. இந்த வகையில் பொருளை விரும்புதல் ஆசையன்று. அங்ஙனமின்றிப் பொருள் மீதே விருப்பங்காட்டிப் “பொருளுடையோன்” என்று பலரும் சொல்ல விரும்பித், துய்க்காமலும் ஈந்து மகிழாமலும், மகிழ்விக்காமலும் பொருளொன்றையே குறியாகக் கொண்டு சேமிப்பது, ஆசையாகும்.

மண்ணில் பயிர் தழைக்க மழைத்துணை தேவை. அதுபோல மனிதகுலம் செழிக்க அன்பு தேவை. உயிர், காதலால் செழித்து வளரும். காதல் பாலுணர்வின் பாற்பட்டது மட்டுமன்று; அதனையும் கடந்தது. காதல் உயிர்களைச் செழிக்கச் செய்யும்; உணர்வுகளைச் செழிக்கச் செய்யும்; தூண்டி வளர்க்கும்; தூய்மை சேர்க்கும்; பொறிகளுக்கும் புலன்களுக்கும் அன்பினைச் சேர்க்கும். இத்தகு தூயகாதல்வழி ஒருவன் ஒருத்தியை நாடுதலும், ஒருத்தி ஒருவனை நாடுதலும் ஆசையாகா. பயனின்றி உயிர்களை அரித்தழித்து உருக்குலைக்கும், பாலுணர்ச்சியின் வெறியில் மகளிரை நாடுதல் ஆசையாகும். உயிருக்குக் கடவுள் துணை. அவன் தாயிற் சிறந்த தயவுடன் தண்ணளி சுரக்கும் துணை. கடவுளை வாழ்த்துதல் வாழ்வேயாகும். கடவுளை மாறா அன்பினில் வாழ்த்துதல் வேண்டும்.

அங்ஙனமின்றி, “இது வேண்டும், அது வேண்டும்” என்ற விண்ணப்பங்களுடன், விண்ணப்பத்தை நிறை வேற்றுவதற்காகக் கடவுள் மீது விருப்பமின்றி, விருப்பங்கள் மீது விருப்பத்துடன், கடவுளை வாழ்த்துதல் ஆசையாகும். ஆசை துன்பத்தையே தரும். ஆசையுணர்வில் சுவை புதிதல்ல;

கு.இ.VII.21 பொருள் புதிதல்ல; உணர்வும் புதிதல்ல; எல்லாம் பழைய சுயநலத் தேவதையின் மயம். அஃது அரிப்புடைய சொறி சிரங்கைப் போல உயிர் வாழ்க்கையை அரித்து எரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று, என்னை நான் நேசித்ததால் அடைந்தது துன்பமே. முந்தா நாளையக் கதையும் அதுவே. ஆயினும் “நான்”, “எனது” என்ற நச்சு உணர்வுகள் மாற்றப்பட்ட பாடில்லை. திரையில் காட்சி மாறினாலும் உணர்வு மாறாது போனால் பயனில்லை. நாட்கள் மாறினாலும், நாடிடும் நாட்டம் மாறினாலொழியப் பயனில்லை. நேற்றைய துன்பமே இன்று மீண்டும் வருகிறது. நேற்றைய 'நான்' இன்று 'நாம்' ஆக மாறி வளர்ந்தால், துன்பம் தொலையும். நேற்றைய என்னுடையது, இன்று 'நம்முடையது’ என்று மாறி, வளர்ந்தால் பயனுண்டு. 'நானில்' உலகமில்லை. ஆனால், நாம் என்பதில் 'நான்' என்பது, அவலம் தரத்தக்க ஆசையினின்று விலகி அன்பு வடிவம் பெற்று ஆங்கு இருக்கிறது. ஆளுக்கு அழிவில்லை. தீமைக்கே அழிவு. ‘என்னுடையது’ ‘நம்முடையது' ஆனபிறகு தனி ஒருவரின் உரிமை அழிந்து விடவில்லை; மாறாக உதவி பெற்றிருக்கிறது; ஆங்காரமற்றிருக்கின்றது. மேலும் சொன்னால், ஒருவரைப் பாதுகாக்கப் பலர் முன் வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒருவனாகத் தனித்து, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவலத்துடன் வாழ்க்கை முடிவு அடைவதைவிட, பலர் பாதுகாக்கும் வாழ்க்கையே புகழுடைய வாழ்க்கை. தாமே உண்பதைவிட, உண்பிக்க உண்பது சுவையுடையது. தாமே சிரித்து மகிழ்வதைவிட மற்றவர் மகிழ்விக்க மகிழ்வது மாண்புடையது. நாமே, நம்மை வியத்தலைவிட, மற்றவர்கள் வியந்து பாராட்டுதல் சிறப்புடையதாகும்.

ஆதலால், நேற்றைய நம் வாழ்க்கையில் விளைந்த துன்பத்தினைப் பார்த்து அதனின்றும் விலகி வாழ்தல் வேண்டும். அது போலவே நேற்றைய வாழ்க்கையிலேற்பட்ட இன்பத்தினைப் பார்த்து அந்த இன்பத்தினை மேலும் வளர்த்துப் புதுமையதாக்கி அனுபவித்தல் வேண்டும். 'நேற்று’ என்பது இன்று அப்படியே அப்பட்டமாக ஆகுமானால், பயனில்லை. 'நேற்று போய் 'இன்று' உருவாகும் பொழுது கழிப்பன கழித்தும், கொள்வன கொண்டும் புதுமைப் பொலிவு பெற வேண்டும். வறட்சித் தன்மையுடைய கிழட்டுத் தனத்தை நீக்கப் புதுமை உணர்வு துணை செய்யும். ஆக, புலன்களைச் சென்ற வழியே செல்ல விடாமல், போன வழியிலேயே போய்ப் பாழாக விடாமல் புது நெறியில் - பொது நெறியில் நெஞ்சத்தை நாம் பழக்க வேண்டும். ஆனால், புலன்களோ புதுமையில் நாட்டமில்லாது வழக்கத்திற்கும் பழக்கத்திற்கும் அடிமையாகின்றன. “என்னால் மாற்றிக்கொள்ள இயலவில்லையே! என்ன செய்வது?” என்று சிலர் அங்கலாய்க்கின்றனர். இந்தப் பொல்லாத பழக்கம் பயனுடையதன்று.

நிலம், பரப்பளவில் அதிகமுடையது. ஒரு நிலத்தை முழுவதும் உழுதால்தான் நிலம் பயனுடையதாகும். ஒரு நிலத்தின் ஒரு சால் மட்டுமே உழப்பெற்று, அதற்கு அண்மைத்தாய அடுத்த சால் உழப்பெறாது போகுமானால், முன்னர் உழுத உழவின் பயனுமில்லை. அது போலவே நேற்றைய தீய பழக்கத்தை விலக்க, அதனைச் சார்ந்து வரக் கூடிய தீய பழக்கங்களையும் விலக்க வேண்டும். நேற்றைய நற்பழக்கத்தை உறுதிப்படுத்திக் காப்பாற்றிக் கொள்ளப் புது நற்பழக்கங்களும் தேவை. பக்தியாகிய நற்பழக்கத்தை அரண் செய்து காப்பாற்றத் தொண்டு தேவை. இங்ஙனம் இனிய பழக்கங்களை விரிவாக்கிக் கொள்ளாமல் வாழ்தல் வாழ்க்கை ஆகாது.

இதனை அப்பரடிகள் உழுத சாலில் உழவே விரும்பும் இழுதை நெஞ்சமென்று எடுத்துக் காட்டி, இடித்துரைக்கின்றார். ஆதலால், வழக்கங்களையும் பழக்கங்களையும் மாற்றி, நலம் பல பெருக்கி, நன்றுடையானை வாழ்த்தி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். சுவைத்தனவே சுவைக்க விரும்புதல் நெஞ்சத்தினியல்பு. அங்கனம் மாறாது சுவைக்கத் தக்கன, நன்றுடையான் திருத்தாள்களேயாம். சுவைப் பொருள் மாறாது போனாலும் சுவைத்தற்குரிய நோக்கம் மாற வேண்டும். இதனை,

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழி யேயுழு வான்பொருட்டு
இழுதை நெஞ்சம் என்படு கின்றதே

என்ற அப்பர் திருப்பாட்டால் அறியலாம்.

அப்பரடிகள் ஞான வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் நம்மனோரையும் ஞான வாழ்க்கை வாழத் துண்டுகிறார். நல்ல வாழ்க்கையை - உழவுத் தொழிலோடு உருவகம் செய்து காட்டிப் படிப்பிக்கின்றார். -

மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே

.

வேளாண்மைக்கு உழவு இன்றியமையாதது. அது போலவே ஞான வாழ்க்கைக்கு மெய்ம்மை உழவைச் செய்ய வேண்டும். மெய்ம்மை என்பது வெளிப்படையாக மெய்ம்மை, வாய்மை, உண்மை என விரிந்து விளங்கும் மூன்றையும் குறிக்கும். மெய்ம்மை உடலாற் செய்வது; வாய்மை யென்பது வாயினாற் கூறுவது. உண்மையென்பது உள்ளத்தில் நினைப்பது. இம்மூன்றையும் ஒரு சேரக் கடைப் பிடிப்பதே முழுநிறை மெய்ந்நெறி. மெய்ம்மை, வாய்மை, உண்மை இம்மூன்றில் ஒன்றிருந்து ஒன்று குறைந்தாலும் அது மெய்ந்நெறியாகாது. சமய நூலோர் புறநெறி தவிர்த்து அருள் நெறியில் உய்த்துச் செலுத்தும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளை மெய்ந்நெறி என்பர். முன்னரே குறிப்பிட்ட மெய்ம்மை, வாய்மை, உண்மை ஆகிய சீலங்களை முறையாகச் சரியை, கிரியை, யோக ஞான நெறி நின்று ஒழுகினாலேயே பெற முடியும். காரணங்களைக் காரியமாகக் காட்டுதல் தவறில்லை. விருப்பம் இச்சை மீதூர்தல். அதாவது பசித்தான் உணவின் மாட்டும், பிணியுடையார் மருந்தின் மாட்டும், இடையீடின்றி இச்சை மீதூர்தல் போலப் பழுத்த மனத்துடன் சிவபக்தியில் மேலிட்டு இறைவனிடத்து ஆற்றல் மிக்க அன்பில் - அயரா அன்பில் முறுகி நிற்றலே விருப்ப மென்ற வித்து. மெய்ம்மை உழவில் பயிற்சியின்மையின் காரணமாகத் தொடக்க நிலையில் காணப்பெற்றனவும், இடையில் உலகியலின் காரணமாகத் தோன்றியனவுமாகிய பொய்மையை அகற்றுதல் வேண்டும். மெய்ம்மை உழவில் பொய்ம்மை தவிர வேறு களை இருத்தல் இயலாது. களை அகற்றிப் பின் பொறுமை என்ற நீரைப் பாய்ச்ச வேண்டும். பொறுமை யென்பது வேறு; சகிப்புத் தன்மை என்பது வேறு. பொறுமையையே வள்ளுவம் பொறையுடைமை என்று போற்றும். அண்ணல் காந்தியடிகள் பொறையுடைமையை அகிம்சை யென்றார். தனக்கு ஏற்படும் துன்பத்தை - இழப்பை - இழிவைக் கொஞ்சமும் கூச்சமின்றி மனத்தாலும் நினைக்காது ஏற்று அனுபவித்தலே பொறையுடைமை. துன்பம் செய்யாமை மட்டும் அகிம்சையல்ல. மற்றவர் தரும் துன்பத்தையும் மகிழ்வோடு ஏற்றுத் தாங்கி அனுபவித்துத் துன்பம் தந்தாரையும் வாழ்வித்திடும் பண்பே அகிம்சை. இதனை வள்ளுவம் ‘உற்ற நோய் தோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்கு உரு’ என்றது. பலர் ஊரை அறிந்திருப்பர்; உலகை அறிந்திருப்பர். ஆனால், அவர்களைப் பற்றி அவர்களுக்கே தெரியாது. சிறந்த சமய வாழ்க்கையின் முதற்படி தம்மை உணர்தலே. அதற்குப் பிறகுதான் தம்மை யுடைய தலைவனை உணர்தல். இதனைத் ’தம்மையும் நோக்கிக் கண்டு’ என்றார்.

இவ்வளவும் நிகழ்ந்த பிறகு, அயர்ந்தும் சிறு நெறி செல்லாமல் பெரு நெறியைப் பற்றி ஒழுகுதலும் எங்கும் எப்பொழுதும் யார் மாட்டும் உள்ளும் புறமும் ஒத்துப் பழகுதலும், உயிர் ஒருமைப்பாடு காணல் என்ற தகைமை நெறி நிற்றலும் ஞான வாழ்க்கைக்கு வேலி. ஞான உறவில் வாழ்க்கை முழுமையாக ஈடுபட்டு வெற்றி கண்டவரே பிறகு, இரக்கத்தின் திருவுருவமாக விளங்குவர். ’ஐயன் ஐயாற னார்க்கு அன்பலால் பொருளில்லை’ என்பது அடிகள் வாக்கு அன்பே சிவமாய் அமைந்து வாழ்வதே செம்மையுள் நிற்றல். இந்த வாழ்க்கையின் பயனாகச் சிவகதி விளையும்.

அப்பரடிகள் பிறப்பை வெறுத்தவர் அல்லர். மண்ணை வெறுத்தவரல்லர். ஆனால் இவைகளை நம்பி வழியிடை நின்றவருமல்லர், தூய மனிதப் பிறவியும் வேண்டுமென்று வேண்டுகின்றார். அப்பரடிகள் கயிலைக்குச் செல்லக் காமுற்றார். ஆனால் எந்தை சிவபெருமானோ அப்பரடிகளின் இடத்திற்கே கயிலையை மாற்றினார். ஏன்? அப்பரடிகளின் அருந்தமிழை ஞாலத்தில் பயில வேண்டும்; அப்பரடிகளின் திருத்தொண்டின் நெறி வையகத்தில் நீடு நிலவ வேண்டும்! அதனாலன்றோ அரன் நாமத்தை எண்ணாது அப்பரடிகளின் நாமத்தையே எண்ணிய அப்பூதியடிகள் வாழ்த்தப்படுகிறார். அப்பரடிகள் தமிழாசிரியர்; தமிழ்த் தலைவர்; அன்பின் ஆக்கம்; அருளின் திருவுருவம்; பத்திமையின் வடிவம்; திருத்தொண்டின் திருவுரு; நம்மனோர்க்கும் ஞானத்தை வழங்கிய ஞானாசிரியர். அப்பரடிகள் நெறி வையகத்தில் கால்கொள்ளுமானால் சாதி வேற்றுமைகள் சருகெனக் காயும்; சமநிலைச் சமுதாயம் தோன்றும்; எல்லோரும் வாழ்வர்; இன்புற்று வாழ்வர்; இம்மண்ணகம் விண்ணகமாகும். அப்பரடிகளின் திருவடிகள் வாழ்க! வாழ்க!