குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/ஜீவா பார்வையில் அப்பரும் மணிவாசகரும்
அமரர் ஜீவா பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் துறை போய அறிஞர். பொதுவுடைமை வாழ்க்கையை இப்பூவுலகம் முழுதும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாழ்ந்தவர். தாமரைத்தண்டு மண்ணோடு தொடர்பு கொண்டேயிருக்கிறது. அதன் மலர் விண்ணிலே உலவும் கதிரவனை நோக்கி மலர்கிறது. விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒர் அரிய இணைப்பை அங்கு பார்க்கிறோம். அதுபோல, அமரர் ஜீவாவின் சிந்தனைக் கால்கள் தமிழக நாகரிகத்திலேயே பரவிநின்றன. ஆயினும் அவர் சிந்தனை மார்க்சிய சித்தாந்தத்தை நோக்கி மலர்ந்தது. இவ்விரு கருத்துக்களுமிடையே எழுத்தால்- பேச்சால் இணைப் பூட்டின இணையற்ற சிற்பி அமரர் ஜீவா. அவர்தம் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரிரு சம்பவங்களைப் பின்னணியாகக்கொண்டே இக்கட்டுரை அமைகின்றது.
திருச்சி தேவர் மன்றம் விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது. 20-ஆம் நூற்றாண்டின் சமய மறுமலர்ச்சி இயக்கமாகிய அருள்நெறித் திருக்கூட்டத்தில் கொடிகள் அரங்கை அலங்கரித்திருந்தன. நெற்றி நிறைய நீறு பூசிய இளைஞர்களும், பெரியவர்களும் தேவர் மன்றத்தில் நிரம்பி வழிந்தனர். உயிருருக்கும் பாட்டினைத் தந்த மாணிக்க வாசகரின் திருவுருவம் அரங்கில் காட்சியளித்தது. திருவாசகப் பாடல்கள் பாடப்பெற்றன. இதற்கிடையில் அவையில் கையொலி - ஆரவாரம். அவையிலிருந்தோர் மன்றத்தின் நுழைவாயில் நோக்கிப் பார்வையைச் செலுத்தினர். கட்டான உடல், முறுக்கேறாத மீசை கையில் ஒர் ஏடு. ஆகியவற்றோடு ஜீவா உள்நுழைந்து வந்து கொண்டிருந்தார். அவரை அந்த விழா அரங்கில் பார்த்ததில் பலருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிலும் கலந்து பழகும் பண்பை நினைவுறுத்தும் நற்காட்சி என்று ஒருமைப்பாட்டுணர்வுடையோர் பேசிக்கொண்டார்கள். அதிபக்திமான்களுக்கு அச்சம். நாத்திகர் திருவாசக விழாவில் பேசுவதா என்ற கேள்வி-குமுறல், அமரர் ஜீவா அவர்கள் அரங்கில் வந்தமர்ந்தார். தவத்திரு அடிகளார் இன்ப அன்பு தழுவ வரவேற்றார். அமரர் ஜீவா அவர்கள் பேசத் தொடங்கினார். திருவாசக விழாவில் திருவாசகம்பற்றி அமரர் ஜீவா பேசினார். என்ன அற்புதம்! மணிவாசக பக்தர்களும்கூட இவ்வளவு பெரிய பக்தியை மாணிக்க வாசகருக்குக் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். மிக அழகாக மரபு பிறழாமல் பேசினார். ஆனாலும் பார்வை தமது சொந்தப் பார்வையே! இல்லை. அப்படிச் சொல்வது சுத்தப் பொய்! நியாயமாகப் பார்த்தால் மாணிக்கவாசகர் பார்வைக்கும் அமரர் ஜீவா பார்வைக்கும் வேற்றுமையே இல்லை. இதுவே உண்மை. அன்று அவர் எடுத்துக்கொண்ட பாடல் “வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்” என்ற பாடல். இந்தப் பாடலின் பொருள்நலம் அமரர் ஜீவாவின் சொல்லாற்றலால் புதுநலம் பெற்றது. பொது நலமும் பெற்றது. “இறைவனே மனிதரை ஆட்கொள்ளுவதற்காக-ஞானியரை ஆட்கொள்ளுவதற்காக அல்ல-அர்ச்சகர்களை ஆட்கொள்ளுவதற்காக அல்ல-நிலப் பிரபுத்துவத்தின் மறுபதிப்பாக விளங்குகின்ற தர்மகர்த்தாக்களை ஆட்கொள்வதற்காக அல்ல-மடாதிபதிகளை ஆட் கொள்வதற்காகவும் அல்ல. மனிதரை-சாதாரண மனிதரை கருப்பனை-சிகப்பனை ஆட்கொள்ளுவதற்காக இறைவனே இம்மண்ணுலகிற்கு வருகின்றான்,” என்று அவர் முழங்கிய போது அரங்கத்தில் கையொலி அலையென எழுந்தது! மீண்டும் தொடர்ந்தார்: “ஆட்கொள்ளும் வேலையின்மையால் வானையே பழிக்கின்றான் கடவுள். இன்றையச் சமயமோ வேலை செய்வதைக் குற்றமெனக் கருதி, உண்டு உறங்கி வாழ்கிறது. ஜீவா கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜீவா சொல்லுவதைக் கேட்க வேண்டாம். உங்கள் மாணிக்கவாசகர் சொல்லுவதையாவது கேட்க வேண்டாமா? மனிதன் பட்டினியால் நோயால் வாடியலையும் போது அவனை ஆட்கொள்ளும் பொறுப்பு யாருக்கு? மாணிக்கவாசகரைப் பாராட்டும் பரம்பரையினருக்கு இல்லையா? நெஞ்சில் கை வைத்துச்-சொல்லுங்கள்” என்று அவர் ஆவேசத்தோடு கேட்டபோது அரங்கில் உருக்கம் கலந்த அமைதி நிலவியது. அன்று அவர் பேசிய பேச்சில் சைவத்தின் சின்னமில்லை-சடங்கில்லை. ஆயினும் அதன் சாரமிருந்தது.
பிறிதொரு நாள் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருப்புத்துாரில் திருத்தளிநாதர் திருக்கோயிலில் திருமுறை விழா மேடையில் நால்வர். சந்நிதியில் அமரர் ஜீவா நின்று, ‘நான் கண்ட அப்பர்' என்ற பொருள் பற்றிப் பேசியது இன்றும் அத்திருக்கோயிலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பூதியடிகளே அமரர் ஜீவா வடிவில் வந்து அப்பரடிகளைப் போற்றிப் புகழ்வது போலிருந்தது! கம்பீரக் குரலில் “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பாடலை அவர் இடி முழக்கமென எடுத்துக் காட்டினார்: “உலகில் முடியாட்சியை எதிர்த்து போராடியவர்கள் வரிசையில் அப்பரடிகளும் நிற்கின்றார். அவர்தம் பெயரை நானிலமும் நாடும் அறியாமல் சிலையாக்கி சிறைப்படுத்தி வைத்திருக்கும் சைவர்களின் நிலைமையை நான் என்னென்பேன்” என்று கூறியபோது அவை மெய்சிலிர்த்தது. ஆவேசம் கொண்டது. 20-ஆம் நூற்றாண்டின் வரையிலும்கூட நிறபேதத்தை ஒழிக்காத மேலைநாடுகள் உண்டு. 7-ஆம் நூற்றாண்டிலேயே சாதி இன வேறுபாடுகளைச் சாடிய பெருமை அப்பரடிகளுக்கு உண்டு. அவர்தம் ஒருகுல நெறி பேணாமல் இன்றைய கோயில்களும் மடங்களும் சாதி குலவேற்றுமைகளை மேலும், மேலும் வளர்த்து வருகின்றன. அவர்களுக்கு அப்பரடிகள் பெயரைச் சொல்ல உரிமை ஏது? நான் கம்யூனிஸ்டாக இருந்தாலும் எனக்கே அந்த உரிமை உண்டு என்று அப்பரடிகள் மீது உரிமை கொண்டாடினார் ஜீவா! பின், அப்பரடிகள் பாடல்களில் பல்வேறு பாடல்களை எடுத்துக் காட்டினார். 'இரப்பவர்க்கு ஈய வைத்தார். ஈபவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்’ என்ற திருப்பாடலை அவர் சிந்தனை கலந்த நகைச்சுவையுடன் விமரிசனம் செய்தது இன்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி. பசி என்று கேட்பவனுக்குக் கொடுத்து வாழ்பவனுக்கே திருவருள். இல்லையென்று கூறி வஞ்சித்து வாழ்பவனுக்கு நரகம். இது அப்பரடிகள் கருத்து-இல்லை ஆணை! இன்றோ சமயநெறி நிற்பவர்கள் கொடுக்காதது மட்டுமல்ல-கொள்வதையே கடமையாகக் கொள்ளுகிறார்கள். பலரை வஞ்சித்து வாழ்பவர்களும் இன்று மிக எளிமையாகச் சமயப் போர்வை போர்த்திக் கொள்ளு கிறார்கள், என்று உணர்ச்சி ததும்ப எடுத்துக் காட்டியபோது அவையில் அமைதி நிலவியது.
இங்ஙனம் மார்க்சீய சித்தாந்தத்தில் ஊறிய அமரர் ஜீவா, இந்த நாட்டுக் கவிஞரை - பண்பாட்டை மறக்காமல் பாராட்டியது. பெருமைக்குரியது - பாராட்டுதற்குரியது: அமரர் ஜீவா, இயற்கையிலே ஒரு சிந்தனையாளர். சமுதாய மாற்றத்தைச் சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாட்டில் சட்டத்தின்மூலம் கொண்டு வரலாம்-மக்களாட்சிமுறை நடைபெறும் நாட்டில் கருத்து வளர்ச்சி-மனமாற்றத்தின் மூலமே கொண்டுவரவேண்டும் என்ற நம்பிக்கை அமரர் ஜீவாவுக்கு உண்டு. அதற்கெனவே, அவர் 'கலை இலக்கியப் பெருமன்றத்தை'க் கண்டார். பட்டிதொட்டிகளில் தமிழகப் பண்பாட்டை முற்போக்கு அணியின் சார்பில் பரப்ப அமைப்பினைக் கண்டார். நாளும் வளர்த்தார். அந்தப் பணியைத் தொடர்ந்து செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு நமது பாராட்டுக்கள்!
இறைவனைப் பெறுவது எப்படி? பிற சமயங்கள் 'தட்டினால் கதவு திறக்கப்படும்' என்று சொல்லும். தட்டும் சக்தி வந்துவிட்டால் கதவு திறக்க இன்னொருவரும் வேண்டுமோ? தட்டும் பதவி பெற்ற ஒருவர் அக் கதவினை உதைத்து, உடைத்து உள்ளே நுழைய முடியாதோ? மேலும் தட்டின பிறகு கதவு திறப்பதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குக் கருணை என்றா பெயர்? வலிய உதவி செய்யும் (Volunteer Service) பண்பே வாழ்த்தப் பெறுகிறது. நம்முடைய வழிபடும் தெய்வமாகிய முருகன், தட்டாமலேயே கதவு திறப்பவன்; அதனாலன்றோ ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்று திருவாசகம் பேசுகிறது! நாம் திருவருளைப் பெறவேண்டும். அவ்வின்பத்தைப் பெற்று வாழவேண்டும் என்று விரும்பி முனைவதைவிட நமக்கு அத்திருவருள் நலத்தை வாரி வழங்கவேண்டும் என்றே திருவுளங் கொண்டுள்ளான் முருகன். வந்த பிறகு வாரி வழங்கவில்லை. இதைத்தான் 'வாரி வழங்குகின்றான் வந்து முந்துமினே' என்கிறார் மாணிக்கவாசகர். இக்கருத்தினைத் திருவாசகத்தில் பல இடங்களில் பரக்கக் காண்கின்றோம். இறைவன் திருவருள் வழங்குகின்றமையைப் 'பால் நினைந் துட்டும் தாயினும் சாலப் பரிந்துTட்டும்' என்கிறார். அழுதபின் ஊட்டும் தாய் அவ்வளவு சிறப்புடையளல்லள். அழாமலேயே காலத்தையும் பசியையும் கருத்திற் கொண்டு நினைந்துாட்டும் தாய் சிறப்பானவள். இறைவனாகிய தாயும், இத்தகைய தாயையும்விடச் சிறந்த முறையில் அருள் வழங்குகின்றான். 'நினைந்தூட்டும் தாயினும்' என்ற வரி நினைந்து நினைந்து மகிழத்தக்கது. இந்த வரியின் பொருளைத் திருக்குறள் இன்பத்துப்பால் தெளிவாக விளக்குகிறது. தலைவன் தலைவியிடம் 'உன்னை நினைந்தேன்’ என்று கூறினான். உடனே தலைவி அழுதாள். 'ஏன்?' என்று தலைவன் கேட்கத் தலைவி, 'நினைந்தேன்’ என்றால் நினைப்பதற்கு முன் மறந்ததும் உண்டன்றோ? என்கிறாள். மறதிக்குப் பின் தோன்றுவதே நினைவு. இறைவன் நினைந்தருள் வழங்கினான், என்றால் ஒருபோது மறந்தானோ என்ற கேள்வியும் எழும். அவன் ஒருபோதும் உயிர்களை மறக்கவில்லை என்பதைக் குறிக்கவே மாணிக்கவாசகர் இங்ஙனம் குறிப்பிடுகிறார்.
இறைவனின் திருவருளின்பம் நாம் பெறுவதல்ல-அவன் வழங்குவதேயாம். வான்பழித்து, மண் புகுந்து மனிதர்களை ஆட்கொள்கிறான். அவனுடைய திருவருளினாலேயே நாம் ஆட்கொள்ளப் பெறுகின்றோம். அவன் நம்மை ஆட்கொள்வதற்காகவே கோலங்கள் தாங்குகின்றான். ஆயிரம் திருநாமங்கள் பெறுகின்றான். எனவே, இறைவனை நாம் தேடிப் பெறுவதில்லை. அவனே நம்மை நோக்கி ஓடி வருகிறான். அவன் ஓடிவரும்போது நாம் அவனை இழக்காமல் பற்றிக் கொள்ளவேண்டும். மழையை நோக்கி மனிதன் போவதில்லை. மழைவளந்தரும் புயல் வானிலே பரவி வான் வீதியில் வருகிறது. அப்புயலைத் தீண்டி நீர்த் துளிகளாக மாற்றி மழையாகப் பெற மண்ணகத்தே குளிர்காற்றுத் தேவை. குளிர்ந்த காற்றுள்ள இடத்தில் மழை நிறையப் பெய்கிறது. மண் வளம் செழிக்கிறது. அது போலவே இறைவனுடைய திருவருள், வேற்றுமையின்றி எங்கும் பரவிக் கிடக்கிறது. அதைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்ள நம்முடைய நெஞ்சத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதலால்தான் நாம் இறைவனைத் தேடிப் போவதில்லை. அப்படித் தேடிப் போவதாலும் அவனைக் காண முடியாது என்ற கருத்தை அருணகிரியார் அழகாக - தெளிவாக விளக்குகிறார்.
மனித மனம் ஒரு புரியாத புதிர் - அது செல்லக்கூடிய வேகம், மின் அணு அலைகள் செல்லும் வேகத்தைவிட அதிகமானது. அது எங்கும் செல்லும்-எப்போதும் செல்லும், சிறகடித்துப் பறந்து செல்லும். அது நல்லதா? தோட்டத்தில் மேயும் மாடு பட்டிக்குப் போகிறது. அடுத்த வீட்டு வாழ்வில் உலாவி மேயும் மனத்தை எந்தப் பட்டிக்கு அனுப்புவது? மாட்டை அடக்கப் பட்டி, மனத்தை அடக்கப் பக்தி. பட்டியில் அடைத்த மாடு வேறு வழியால் வெளியே போய்விட்டால் பட்டியால் பயனில்லை. பக்தியிருந்தும் பலர் வாழ்வில் மேய்ந்தால் அந்த பக்தியால் பயனில்லை. 'தடுங்கோள் மனத்தை' என்று ஆணை இடுகிறார் அருணகிரியார். கண்டபடி மேயும் மாட்டைக் கட்டிப் போட்டால் பொறுமையாக இருக்குமா? ஆத்திரப்படும், அறுத்துக்கொண்டு போக முயற்சிக்கும் - தடுத்து நிறுத்தப் போனால் கோபத்தோடு முட்டும். விரைந்து வேகமாகச் செல்லும் மனத்தைத் தடுத்து நிறுத்தி வாழாது போனால் வெகுளி வாழ்க்கையை வெருட்டும். ஆதலால்தான் ‘விடுங்கோள் வெகுளியை' என்றாணையிடுகிறார். மனத்தின் வேகத்தைத் தடுத்து நிறுத்தினமையையும், வெகுளியை விட்டொழித்தமையையும் காட்டுவன தன்னலச் சார்பு அழிதலும் பிறர் நலப்பற்றுக் கால்கொள்ளுதலுமேயாம். அப்பொழுது எதுவும் தனக்கு மட்டும் உரியதல்ல-பிறர்க்கும் உரியதாகும். ஏன்? தாம் அனுபவிப்பதைவிட பிறரை அனுபவிக்கச் செய்வதிலேயே ஆனந்தம் காண்பர் மேலோர். இங்கேதான் பிறக்கிறது தானம். இப்படிச் செய்வதற்குத்தான் தானம் என்று பெயர். இன்றைய வழக்கில் தானம் என்றால் பாவக் கழுவாய்க்காக வணிகக் கண்ணோட்டத்தோடு இன்னாருக்குத்தான் கொடுப்பதென்ற வரையறையோடு நடை முறை இருந்து வருகிறது. அது சரியன்று. இதனால் 'தானம் என்றும் இடுங்கள்' என்று ஆணையிடுகிறார். இவ்வளவும் இருந்தாலும் போதுமா? சிலர் பரப்பாகவே திரிவார்கள்.
கு.இ.VII.19. அமைதியாக எதையும் பார்க்கும்-அநுபவிக்கும் ஆற்றலற்றவர்களாகப் பலர் இருப்பார்கள். தாமும் மாறுவார்கள். பிறரையும் தம் வழி மாற்ற முயற்சிப்பார்கள். எல்லாவற்றையும் தாமே தாங்குவது போல எண்ணிக் கவலைப் படுவார்கள். அஃது ஆன்மிக வளர்ச்சியின்மையின் சின்னம். இதற்கே 'இருந்தபடி இருங்கள்' என்று ஆணையிடுகின்றார். இருந்தபடி இருப்பதென்றால் உடலால் சோம்பியிருப்பதைச் சொல்லவில்லை. அதற்குப் பெயர் சோம்பேறித்தனம். சித்தம் அடக்கிச் சிவாயநம என்று இருப்பதையே இங்ஙனம் கூறுகிறார்.
- நன்றே செய்வாய் பிழை செய்வாய்
- நானோ இதற்கு நாயகமே
- என்று இருத்தலே இருந்தபடி இருத்தல் என்பதாம். இங்ஙனம் ஆழ்ந்தால் முருகனைத் தேடிச் செல்லவேண்டாம். அவன் திருவருளைத் தேடி அடைய வேண்டாம். வேல் தாங்கும் முருகனின் திருவருள் வலியத் தானே வந்து வெளிப்படும் என்கிறார் அருணகிரியார். அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே பாடலை முழுதும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள்
வெகுளியை; தானமென்றும்
இடுங்கோள்; இருந்தபடி இருங்கோள்
எழுபாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந்
திறக்கத் துளைத்த வைவேல்
விடுங்கோள் அருள்வந்து தானே
உமக்கு வெளிப்படுமே.
இப்பாடலை முறையாகச் சிந்தித்து அவன் அருள் நம்மிடை வலிய வந்து மேவி நின்று விளங்கிப் பயன்தரும் வண்ணம் வாழ முயற்சிப்போமாக!