குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/தொண்டின் நெறி சிறக்க

விக்கிமூலம் இலிருந்து
27
தொண்டின் நெறி சிறக்க

மனித உலகத்தை அன்பு வழியில் நடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது கடவுள் நெறி. சமயம் வாழ்க்கையின் தத்துவம். தமிழர்களைப் பொறுத்த வரையில் சமய வாழ்வு கற்பனையன்று, பொய்யுமன்று, புனர்ந்துரையுமன்று. தமிழினத்தின் சமயக் கொள்கைகள் உயர்ந்த அனுபவ ரீதியான வாழ்க்கையிலிருந்து தோன்றியவை - வாழ்க்கையோடு கலந்தவை.

உலகில் பல்வேறு இனங்களில் சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனைகள் அரசியல் அரங்கங்களிலும் புரட்சிக் களங்களிலும், தோன்றியுள்ளன. தமிழகத்திலோ சமுதாய மறு மலர்ச்சித் திட்டங்களை, காலத்திற்குத் தேவையான முன்னேற்றக் கொள்கைகளைச் சமய நெறிக் காவலர்களாகத் திகழ்ந்த அடியார்கள் தமது செவ்விய வாழ்க்கையாலும், சிந்தனையாலும், உருவாக்கினார்கள்.

உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய சமுதாய முற்போக்குச் சிந்தனையாளர்கள் வரிசையில் வைத்தெண்ணப்பட வேண்டியவர் அப்பரடிகள். மனித இனத்தின் ஈடேற்றத்திற்காக நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி ரஷ்யப் புரட்சி ஆகியனவெல்லாம் தோன்றுவதற்குப் பலநூற்றுக் கணக்கான ஆண்டுகட்கு முன்பே, சான்றோர் தோன்றும் நிலமெனப் பாராட்டப்பெறும் தொண்டை மண்டலத்தில் அப்பரடிகள் தோன்றித் தமிழகத்தில் புரட்சி நடத்தினார். அவருடைய புரட்சி அருள் வழிப் பாய்ந்தோடிய புரட்சி. அந்தப் பக்தி வெள்ளத்தால் அடித்து ஒதுக்கப்பெற்ற குப்பைகள் ஏராளம், ஏராளம்.

ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற வேறுபாட்டை அருளியல் தலைவர் அப்பரடிகள் எதிர்க்கிறார். அவரே மக்கள் இனத்தின் விடுதலைக்கு முதன் முழக்கம் செய்தவர். “நாம் யார்க்கும் குடியல்லோம்” என்பது அவருடைய விடுதலை முழக்கம். இறைவனே உலகின் தலைவன். அவன் ஒருவனுக்கே நாங்கள் குடிமக்கள் என்பது அவர் கொள்கை. சைவக் கொள்கையின்படி ஆன்மாவிற்கு வயதில்லை, உடலுக்குத்தான் வயது. இந்த உடலைப் பல்லாண்டுகள் கருவியாகக்கொண்டும் உயிர் உய்தி பெறலாம். உடலுக்கு ஏற்படுகின்ற மரணம் அறியாமையால் வருவது, நோயால் வருவது, அல்லது கூற்றுவனின் சேட்டையால் வருவது. மரணத்தை வெல்லுதல் மனிதனின் கடமை என்பதை மார்க்கண்டேயன் வரலாறு உணர்த்துகிறது. இன்று உலகம் முழுவதும் மரணத்தை வெல்லும் முயற்சி நடைபெறுகிறது.

நம்முடைய சுதந்திர பாரத நாட்டில் நல்லாட்சியின் காரணமாக நமன் தமர் புறமுதுகிட்டு ஒடிக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் இந்தப் புரட்சியை ஏழாம் நூற்றாண்டிலே எடுத்துக் காட்டினார் அப்பரடிகள்.“நமனையஞ்சோம்” என்பது அவர்தம் வாக்கு. மேலும் அப்பரடிகள் சாதி, குலம், சமயவேறுபாடு இவற்றைக் கடந்து மனித குல ஒருமைப்பாட்டை வற்புறுத்துகிறார். வற்புறுத்துவதோடு மட்டுமின்றி, இவ்வேறுபாடுகளைத் தோற்றுவித்துக் கொண்டு அவற்றிற்காக வழக்காடுகின்றவர்களைக் கடுமையாகச் சாடவும் செய்கிறார். “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்”. அடுத்து அறுவகைச் சமயத்தவரைத் தேற்றும் தகையன, தேறிய தொண்டரைச் செந்நெறிக் கேற்றும் தகையன என்றும், வணங்குகின்ற துறைகள் பலப்பல வாக்கி என்றும், வருவனவற்றால் அப்பரடிகளுக்குச் சமய ஒருமைப் பாட்டில் இருந்த பெருவிருப்பை நாம் புரிந்து கொள்ளலாம். அப்பரடிகள் அகம் நிறைந்த அன்பு கலந்த வழிபாட்டையே வற்புறுத்துகிறார். இறைவனின் திருவருளைப் பெறுதற்கு வாயில், ஆன்மாக்களின் அன்பு, ஆன்மாக்கள், அன்பினைப் பெறுதற்குரிய வாயில், பூசனை என்பது மாதவச் சிவஞான முனிவரின் வாக்கு “மறைமிற் றெம்பிரான் மைந்த கேள், இறைமை நம் அருளினால் எய்தற் பாலதாம் அறைதரும் அருளும் மெய் அன்பின் ஆவது அப்பொரை செழு பத்தியும் பூசைப் பெறாரோ” என்பது காஞ்சிப் புராணப் பாடல். திருவருளைப் பெறுவதற்குப் பூசனை, பூசை நேரிடையாத் துணை செய்யாது.

பூசையால் மனத்துள் கனிவும், கசிவும் தோன்றி அன்பு வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும். அந்த அன்பே தூய திருவருளைத் தரும். திருவருளைப் பெறுதற்குரிய வாயில் அன்பு, அந்த அன்பைப் பெறுதற்குரிய வாயில் பூசை. அன்பினைத் தூண்டி வளர்க்கும் சாதனமே பூசை. இது அப்பரடிகள் நின்ற நெறி; நமக்கு நாம் வாழக் காட்டிய நெறி. ஏன்? சைவத் திருமுறைகள் அனைத்தும் அன்பு வழிபாட்டையே வற்புறுத்துகின்றன. இறைவன் உவப்பது நாம் அன்பு மிகுதியால் இடக்கூடிய பூவினாலும், நீரினாலுமேயன்றி நாவிற்குச் சுவைதரும் பொருள்களைப் படைப்பதனாலன்று. இன்று நம்முடைய திருக்கோயில்களில் பூவும், நீரும் கொடுத்து மக்கள் வழிபடும் காட்சி பெருகிக் காணவில்லை. “அன்பே சிவம்” என்பது சிவநெறியின் முடிவு. திருமந்திரம் அருளிச் செய்த திருமூலர் 'அன்பும், சிவமும், இரண்டென்பார் அறிவிலார்’ என்று குறிப்பிடுகிறார். சேக்கிழார் அடிகள் 'அன்பினால் இன்பம் ஆர்வார்' என்றும் 'இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்' என்றும் அருளிச் செய்துள்ளது நினைந்தின்புறத்தக்கது.

ஆதலின் ‘அன்பே இன்பம், இன்பமே என்னுடைய அன்பு என்பார் மாணிக்கவாசகர். இத்தகு அன்பு வழிபாட்டின் சின்னமே கண்ணப்பர். அதனாலன்றோ திருவருள் இன்பத்தில் ஆவியோடாக்கை புரை புரை அழுத மாணிக்க வாசகரும் “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு”, என்று குறிப்பிடுகின்றார். கண்ணப்பர் வரலாற்றில் வரும் சிவகோசாரியார் அறிவின் சின்னம், சடங்கின் சின்னம். இறைவன் மகிழ்ந்தது கண்ணப்பரின் பூசையிலேயேயாம். கண்ணப்பர் தமது திருவாயில் தண்ணீர் கொணர்ந்து உமிழ்ந்து திருமஞ்சன மாட்டியதைச் சேக்கிழார் “அன்பு உமிழ்வார்” என்று குறிப்பிடுகின்றார். இத்தகு அன்பு வழிபாடு நாட்டில் பெருக வேண்டும். அப்பரடிகள் குறிப்பிடுவதுபோலப் போதொடு நீர் சுமந்து பலர் திருக்கோயிலுக்கு வர வேண்டும். இத்தகு வழிபாட்டுமுறை வளர்வதால் மக்களுக்குள் ஒருமைப்பாடு பெருகும். திருத்தொண்டின் நெறி வளரும். இந்த அன்பை வளர்த்துக் கொள்ளும் பண்ணைகளுள் ஒன்று, சிவ பூசை. பிறிதொன்று, மக்களுக்குச் செய்யும் தொண்டு. நம்முடைய சமய நெறி தொண்டினாலேயே வளர்ந்த ஒன்று. அப்பரடிகள் எங்கும் ஈசன் இருக்கிறான் என்று கருதித் தொண்டு செய்யாமல் கங்கையிலும், காவிரியிலும் சென்று நீராடுவதைக் கடிந்து பேசுகிறார். “கங்கையாடிலென், காவிரியாடிலென், கொங்கு தண்குமரித்துறை ஆடிலென் ஒங்குமா கடல் ஒத நீர் ஆடிலென் எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லேயே” என்று குறிப்பிடுகிறார். இதைவிட முற்போக்கான குரல் வேறெந்த நாட்டிலே பிறந்தது. வேறு எம்மொழியிலே பிறந்தது. இவ்வளவுதானா இதை விடக் கடுமையான தாக்குதலும் உண்டு; படித்துப் பாருங்கள். “இரப்பவர்க் கீயவைத்தார், ஈபவர்க் கருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கெல்லாம், கடுநரகங்கள் வைத்தார்” என்றும் பாடுகிறார். மக்கட்குத் தொண்டு செய்வது இறைவன் உவக்கும் செயல் என்பது நம் ஆன்றோர் கொள்கை. பிற்காலத்தில் புண்ணியத்தை இருவகையாகப் பிரித்தார்கள். பசு புண்ணியம் உயிர்களுக்குத் தொண்டு செய்வதின் மூலம் பெறக்கூடியது. பதி புண்ணியம் இறைவனுக்குத் தொண்டு செய்வதின் மூலம் பெறக்கூடியது. இதில் பசு புண்ணியத்திலும், பதி புண்ணியம் சிறந்தது. இக் கொள்கை தத்துவ ரீதியில் தவறானதன்று. ஆனால் திரிபுவாதமும் மயங்கிய பொருளும் கற்பிக்கப் பெற்றது. அதன் காரணமாகச் சைவ உலகத்திலிருந்து சங்க காலத்தில் சோழர் காலத்தில் நாயன்மார் காலத்தில் இருந்த தொண்டின் முறை விலகிச் சென்று விட்டது. ஆனால் சமய ஆசிரியர்களோ, சந்தான ஆசிரியர்களோ அவர்கள் அருளிய நூல்களோ இக் கொள்கைக்கு ஆதாரமாக இல்லை. சிவஞான போதமும், பதி புண்ணியம், பசு புண்ணியம், என்ற பாகுபாட்டைக் காட்டுகிறது. வேறு பாட்டை ஒத்துக் கொள்கிறது. ஆனால் இந்த வேறுபாடும் சிந்தனையைப் பொறுத்ததேயன்றி செயலைப் பொறுத்ததன்று.

தற்போதத்தோடு - தன்னுணர்வோடு செய்யாமல் சிவச் சிந்தனையோடு செய்ய வேண்டும். ஆண்டான் நினைவோடு ஆருயிர் அனைத்தையும் ஒம்புதல் வேண்டும். இங்ஙனம் செய்யப் பெறும் பசு புண்ணியமும், பதி புண்ணியமேயாம். இதனைச் சேக்கிழார் “பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்” என்று கூறி விளக்குகின்றார். இக்கருத்தினையே திருமூலரும் “படமாடக் கோயிற் பகவர்க் கொன்றியில் நடமாடக் கோயில் நம்பர்க் கங்காகா; நடமாடக் கோயில் நம்பர்க்கொன்றீயில் படமாடக் கோயில் பகவற்கஃ தாமே” என்று பாடுகிறார். இப்பாடலின் கருத்தை இன்றைய அஞ்சல் முறை நமக்கு உணர்த்தும். நாம் விரும்பிய ஒருவருக்குச் சேர வேண்டும், என்று விரும்பி முகவரியை எழுதி உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிற அஞ்சற் பெட்டியில் இட்டாலும் அது உரியரையே சென்று சேரும். அது போல சிவபெருமானை நினைந்து அவனால் அங்கீகரிக்கப் பெற்ற எந்த ஓர் உயிர் வர்க்கத்திடமாயினும் நாம் ஒன்றைத் தருவோமானால் அது அவனையே சென்று சேரும். இத்தகைய மிகச் சிறந்த தொண்டின் நெறியை ஏழாம் நூற்றாண்டிலேயே மிக மிகத் தெளிவாக விளக்கியவர் அப்பரடிகள். அப்பரடிகள் தொடங்கி வைத்த தொண்டின் நெறியை மீண்டும் தொடங்கித் தொடர்ந்து செய்ய சைவத் திருமடங்களில் தலைவர்கள் முன் வரவேண்டும்.