குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/அப்பர் விருந்து

விக்கிமூலம் இலிருந்து

26

அப்பர் விருந்து


1. ஏழில் இருபது

ஏழும் இருபதும்

நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு, புதுமை நிறைந்த நூற்றாண்டு, அறிவு பெருகிய நூற்றாண்டு, ஆற்றல் பெருகிய நூற்றாண்டு, மறுமலர்ச்சியும், சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்; நாங்கள் “பத்தாம் பசலிகள்” அல்லர், புத்தம் புதிய பிறவிகள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பலர் பெருமைப்படுகிறார்கள்.

ஆயினும், நாம் வாழுகிற இந்த நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இருபது என்கிற சொல் இருபதாம் நூற்றாண்டைக் குறிக்கும். ஏழு என்கின்ற சொல் ஏழாம் நூற்றாண்டைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் எவற்றையெல்லாம் நாம் புதுமைகள் என்று கருதுகிறோமே, அவற்றையெல்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த நாவுக்கரசர் பெருமான் நமக்கு நினைவுறுத்திச் சென்றார் என்ற செய்தியை விளக்குவதே இத் தலைப்பின் நோக்கம்.

மல்லிகை மணக்காதது ஏன்?

சாக்ரடீசை நாடு தெரிந்து கொண்ட அளவிற்கு இங்கர் சாலை நாடு தெரிந்து கொண்ட அளவிற்கு நமது அப்பரடிகளைத் தெரிந்து கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தமிழர்கள் நன்றி கொன்றவர்களாகப் போனார்கள். அவர்கள் வீட்டுக் கொல்லையில் பூத்துக் குலுங்கி மணம் பரப்பும் மல்லிகை அவர்கட்குத் தெரியாமற்போயிற்று.

தன் வீட்டுக் கொல்லையில் இயல்பாய் மலர்ந்த இனிய அழகிய மல்லிகையைப் பறித்து அனுபவிக்கத் தெரியாமல் அடுத்த வீட்டுக்காரன் தோட்டத்தில் மலர்ந்த எட்டிப் பூவை நோக்கிப் போவதுபோல, நமது சமுதாயத்தின் போக்குப் போனமையின் காரணமாக ஏதாவதொரு புதிய கருத்து - புதிய சித்தாந்தம் என்றால் சாக்ரடீஸ் சொன்னார், இங்கர்சால் சொன்னார், பிளேட்டோ சொன்னார், என்று சொன்னால்தான் நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற ஒரு மனோபாவம், ஒரு மாயை வளர்ந்திருக்கிறது! இந்தக் குறையை நீக்கும் பொருட்டே 20ஆம் நூற்றாண்டில் நாம் எந்தச் செய்திகளைப் புதிய செய்திகள் என்று சொல்லுகிறோமோ அந்தச் செய்திகளை 7ஆம் நூற்றாண்டில் அப்பரடிகள் சொன்னார் என்பது இத்தலைப்பின் விழுமிய கருத்து.

சமுதாய வயலிலே

இங்கர்சால், பிளேட்டோ, சாக்ரடீஸ், போன்றவர்களைவிடச் சமுதாய சீர்திருத்தத்திற்குத் தகுதியுடைய பெரியார் அப்பரடிகள் என்பது நமது ஆழ்ந்த நம்பிக்கை. ஒன்றைத் திருத்தவேண்டும் என்று சொன்னால், அந்தக் கொள்கையில் நம்பிக்கையுடையவர்களே அதைத் திருத்த வேண்டும்; அவர்களால்தான் திருத்தவும் முடியும். அதில் நம்பிக்கையில்லாதவர்கள் திருத்தப்புகுவது வேடிக்கையாக, கேலிக்கூத்தாக, நகைப்புக்கிடமாகப் போய்விடும்.

“கழனிகளிலே களைபிடுங்க இறங்குகிறவன் முதலில் களை எது? விளையும் பயிர் எது? என்று தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையானால், பயிரையே களை என்று பிழையாகக் கருதிப் பிடுங்கிவிடுவான். இறுதியில் விரும்பிப் பாடுபட்ட விவசாயிக்கு எதுவும் மிஞ்சாது” என்று ஒரு சமயத்தில் பெர்னாட்ஷா மிக அழகாகக் கூறினார்.

நமது நாட்டிலே இன்று சீர்திருத்தம் என்ற பெயரால், தமிழகத்தில் தோன்றிய சமய சாத்திரங்களை முறையாகப் பயிலாதவர்கள், திருமுறைகளைத் தொட்டும் பார்க்காதவர்கள், அங்கொரு பாட்டும் இங்கொரு பாட்டுமாக மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு அதிலே சீர்திருத்தப் புயலை உருவாக்குகிறார்கள். எனவே, அவர்கள் விளை பயிருக்கு முட்டுக்கட்டையாகவுள்ள களையைப் பிடுங்கத் தகுதியுடையவர்கள் அல்லர். அப்பரடிகள் போன்றோர் நீண்டகாலப் பாரம்பரியம் உடையவர்கள். அவர்கள் காட்டும் புதுமையிலே கவர்ச்சி இருந்தது; ஆக்கம் இருந்தது; ஊக்கம் இருந்தது; உறுதி யிருந்தது; உயர்வு இருந்தது. அதே காலத்தில் பழமை என்ற அடித்தளம் அசைந்து ஆட்டம் காணாமலும் காப்பாற்றிக் கொண்டார்கள். ஒரு கட்டடத்திற்கு வண்ணம் பூசிக் கோலம் கொடுக்கவேண்டும் என்று முயலும்போது அந்தக் கட்டடத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடுமானால் நீடித்த நிலைபேறுடைய நலஞ்சார் நாகரிகம் இல்லாமலே போய்விடும். வீடு வேண்டாமா?

இன்று நம் நாட்டில் நீடித்த நிலைபேறுடைய பழமையான ஒரு நாகரிகம் இருக்கக்கூடாதென்று கருதி நாள் தோறும் குடிசை கட்டும் பணியில் பலர் ஈடுபடுகின்றனர். இன்று ஒருவன் குடிசை கட்டுகிறான். நாளை அது நன்றாக இல்லை என்று பிரித்து எறிகிறான்; வேறு புதிய குடிசை கட்டுகிறான். அதனை மறுநாள் இன்னொருவன் பிரித்து எறிகிறான். ஆக நாள்தோறும் கட்டுவதும் பிரிப்பதுமாகிய புதுமையான வீடு கட்டுகிற காலமாக இருக்கிறதே தவிர, குடியிருந்து வாழும் நாகரிகம், இல்லாமற் போய்விட்டது.

பழமையிலே புதுமை

அப்பரடிகள் போன்றோர் பழைய பாரம்பரியத்தை ஒத்துக்கொண்டே பழமைக்கும் புதுமைக்கும் இணைப் பூட்டினர். அப்பரடிகள் முழங்கால் வரை வேட்டி கட்டினார்; நிறைய நீறு பூசினார்; பெரும் பெரும் உருத்திராக்க மாலைகள் போட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கோலத்தைப் பார்த்தால் மிகப் பழைய நூற்றாண்டின் பழமை தெரிகிறது. அவள் உள்ளத்தை அவர் சிந்தனையைப் பார்த்தால் புத்தம் புதிய புதுமையையும் - இன்னும் பின்னால் வரப்போகிற புதுமையையும் - அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறியலாம். அவர் பழமைக்கும் புதுமைக்கும் இணைப்பூட்டி இந்தச் சமுதாயம் அழிந்து படாமல் காப்பாற்றப் பெற வேண்டும் என்ற கருத்தில் ஒரு மாபெரும் இயக்கத்தையே நடத்தினார்.

அப்பரடிகள் புரட்சிக்காரர்

நமது நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவிஞர்கள், ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி இன்னல்களை உண்டாக்கும் சாதிகள் வேண்டா என்று பாடினார்கள். அன்றுமுதல் இன்றுவரை தோன்றியுள்ள எல்லாக் கவிஞர்களும் அதையேதான் தொடர்ந்து பாடிக்கொண்டு வருகிறார்கள். புதிய தலைப்புக்களைப் புதிய சிந்தனைகளைப் பாடும் நிலைமை வரவில்லை. இந்தத் தலைமுறை ஒழுங்காக ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்று விரும்பினால், பழங்காலக் கவிதைகளில் வலியுறுத்திக் கூறப்பெற்றிருக்கிற அறநெறிகளை, ஒழுக்கக் கூறுகளை வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொணர்ந்து, புதிய சிந்தனைகள் புதிய செய்திகள் புதிய சித்தாந்தங்கள் தோன்றத் துணைபுரிய வேண்டும். வலியுறுத்திக் கூறப்பெறுகிற செய்திகளும் சிந்தனைகளும் சித்தாந்தங்களும் சிந்தனையோடு கலந்து செயல்முறைக்கு வராமையால் விண்வெளி பற்றிய செய்திகளும், வேறு வகையான செய்திகளும், உலக ஒருமைப்பாட்டுணர்வும் எண்ணங்களும் வளர வாய்ப்பில்லாமல் போயிற்று. இது ஒரு பெருங்குறைதான். இதையே அப்பரடிகள் எண்ணிப் பார்த்து ஒரு புதிய புரட்சியை நாடு முழுவதிலும் உண்டாக்கினார்.

சமயவழிப் போரியக்கமா? சமுதாய நலப் பேரியக்கமா?

அப்பரடிகளின் வரலாறு சோதனை நிறைந்த ஒரு வரலாறு. அவர் சமண பெளத்த நாகரிகம் பரவியிருந்த காலத்தில், அந்த நாகரிகத்தை எதிர்த்துப் போராடினார். அப்பரடிகள் பெளத்தத்தையும் சமணத்தையும் எதிர்த்தார். என்று சொல்லும்பொழுது அவருக்குச் சமயவெறி இருந்தது என்று யாரும் தவறாகக் கருதிவிடக்கூடாது. சமணத்தையும், பெளத்தத்தையும் அப்பரடிகள் எதிர்த்தார் என்பதாலேயே அவர் சமய ஒருமைப்பாட்டிற்கு அப்பாற்பட்டவர் என்று கருதிவிடக்கூடாது.

உலகச் சமயங்களுக்குள்ளே ஓர் ஒருமைப்பாடு வேண்டும் என்று விரும்பியவர் அப்பரடிகள். ஆனாலும் அவருடைய வீட்டு நாகரிகத்தை, சமுதாய நாகரிகத்தைப் பிற


கு.இ.VII.10 நாகரிகம் வந்து ஆட்சி செய்வதை அவர் வெறுத்தார். அவர் நடத்திய போராட்டம் சமயப் போராட்டமே யன்று. நாம் நன்றாக எண்ணிப் பார்த்தால் 25 விழுக்காடுதான் அதனைச் சமயப் போராட்டம் என்று கூறலாம். பெளத்த சமண சமயங்களால் ஏற்பட்ட குழப்படியிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்றும் முயற்சிதான் 75 விழுக்காடு.

இன்று கிழக்காசிய நாடுகளில் புத்த மதத்தின் வெளித்தோற்றம் இருக்கிறதே தவிர உள்ளீடில்லை. புத்த மதத்தின் போர்வையிலே வாழ்கிற கூட்டம் பெருகியிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் புத்தரின் நெறியைக் கோடியில் ஒருவரே பின்பற்ற முடியும்.

தமிழகம் அத்தகைய போலி நடைமுறையை விரும்பவில்லை. இங்கு பெளத்தம் வந்தபோது தமிழர்களின் அடித்தளத்தையே தகர்த்தழிக்கும் நாகரிகமும் வந்தது. நல்ல பண்ணும் இசையும் கேட்கக்கூடாது என்பது சமணத்தின் முக்கிய நோக்கம். பண்ணோடு பிறந்த பைந்தமிழை, இசையோடு பிறந்த இன்பத் தமிழை மறந்து விட்டுத் தமிழர்கள் எப்படி வாழமுடியும்? எனவே தமிழ் நாகரிகத்தின் - தமிழ்ப் பண்பின் தனிப் பாடல்களைப் பாடினார்; பண்ணோடு இசை பரப்பினார். தமிழகத்தின் இசைத்தமிழ் வரலாற்றில் மறுமலர்ச்சியை உண்டாக்கினார்! பண்ணோடு கலந்த பாடலுக்குப் புத்துயிரூட்டினார்! ஆம்! சமண பெளத்த சமயங்களால் தமிழிசை அழிந்து போகாமல் காப்பாற்று வதற்காக அவர் ஒரு பேரியக்கமே நடத்தினார்!

தமிழ் இசை வெள்ளம்

இன்று தமிழிசை என்று கூறினால் நமக்குச் செட்டி நாட்டரசரின் நினைவு வரும். தெலுங்கிசை தமிழிசையை ஆக்கிரமித்தபொழுது தமிழிசையைக் காக்கச் செட்டி நாட்டரசர் செப்பரிய சீர்திருத்த இயக்கம் நடத்தினார்.

ஏழாம் நூற்றாண்டில் தமிழிசைக்கு ஆபத்து வந்த பொழுது பண்ணோடு இசை கேட்காது அதைக் கேட்பது பாவம் என்று கூறிய காலத்தில் பண்ணோடு இசை பாடித் தமிழகத்தில் இசை வெள்ளம் பாய்ந்தோடச் செய்த பெருமை அப்பரடிகளையே சாரும்.

அடுத்து, இயற்கையோடு கலந்து வாழுகின்றவன் தமிழன். இவ்வாறு இயற்கையோடு உறவாடிக் கலந்து வாழுகின்ற தமிழனைப் பார்த்து “நீ, மலரைப் பார்க்காதே அந்த மலரின் மணத்தை நுகராதே அது பாவம்” என்று கூறினார்கள். தமிழர்கள் எப்படி இதை ஒத்துக்கொள்வார்கள்? எனவேதான் அப்பரடிகள் இயற்கையோடியைந்த பாடல்களைப் பாடினார். “மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்!” என்று இயற்கையை வியந்தார்; “காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்” என்பது போன்ற இயற்கை வருணனைகள் பலவற்றை நாம் ஐயாற்றுத் திருப்பதிகத்தில் காணலாம். இப்படி இயற்கையோடியைந்து மனித வாழ்க்கையை வளமாக்கிச் செழிப்பூட்டிடவே அப்பரடிகள் சமணத்தை எதிர்த்தார்.

அம்மையப்பன்

தமிழகம் இருபாலருக்கும், பெருமை கொடுத்துப் பெண்ணினத்தின் வாழ்க்கையைப் பெருமையாகவும் தகுதியாகவும் தரமாகவும் போற்றிக் காத்தது; காக்கின்றது; காக்கும். அதைத்தான் நாம், நான்மாடக்கூடலில், அங்கயற்கண்ணி ஆலயத்தில் பார்க்கிறோம். பெண்மையை இழிவுபடுத்தும் நாகரிகம் தமிழனுடையதன்று. தமிழனுடைய நாகரிகத்திலே எல்லாத் துறைகளிலும் பெண்மை உரிய பங்கும் பேசரிய பெருமையும் உயர்வும் கொடுத்துப் போற்றப்பெறுகிறது. பெண்மையை இழிவு படுத்துகிறவர்கள் சமணரும் பெளத்தரும் ஆவர். அவர்கள், இயற்கையோ டொத்து வாழும் தமிழினத்திற்குச் சிறிதும் ஒவ்வாதவர்கள். அதனாலேயே திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் எழிலுற இயக்கும் அம்மையோடப்பனாம் அருள் நிலையில் இறைவனை அம்மையப்பனாகக் கண்டார்கள். பெண்மைக்கு இழிவு தரும் அநாகரிகத்தைத் தடுத்துக் காக்க முயன்றார்கள். இப்படி நாம் பார்க்கின்ற போதுதான்; நமது அப்பரடிகள் வெறும் நாகரிகத்திற்காகப் போராடவில்லை; தமிழ்ச் சமுதாயத்தினுடைய வீட்டு நாகரிகம் நாட்டு நாகரிகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே போராடினார் - ஏன்? ஒரு மாபெரும் இயக்கமே நடத்தினார் என்பதை அறிகிறோம். அத்தகைய அப்பரடிகள் என்னென்ன விதமான கருத்துக்களிலே நமக்குப் புதுமை ஊட்டினார், எழுச்சி யூட்டினார், ஏற்றம் தேடித் தந்தார் என்பனவற்றையெல்லாம் நாம் ஆராய வேண்டும்.

அப்பரடிகளின் அறைகூவல்

நமது தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் முன்னே குறிப்பிட்டதுபோல் கடவுள் நம்பிக்கையில்லாத - வாழ்க்கையோடு இணைந்து வாராத நாகரிகங்களைத் தூக்கிக் கொண்டு வந்த, பெளத்த சமண நாகரிகங்கள் தலைதுாக்கி நின்ற காலம் ஏழாம் நூற்றாண்டு. இந்த பெளத்த சமண நாகரிகங்களைத் தடுத்து நிறுத்தித் தமிழினத்தின் தொன்மையான சொந்த நாகரிகத்தைக் காக்க வேண்டுமென்பற்காகத் தெருத் தெருவாக ஊர் ஊராகச் சுற்றி வந்தார் அப்பரடிகள். அவர் அப்படிச் சென்றபொழுது பல இடங்களில் அவருடைய கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேட்கக்கூட ஆட்கள் இருக்கவில்லை என்று தெரிகிறது.

‘மனிதர்காள்! இங்கு வம்மொன்று சொல்லுகேன்’ என்று உரத்த குரலில் ஊர் மக்கட்கு அழைப்பு விடுத்து, அவர் தமது கருத்துக்களைச் சொல்லத் தொடங்குகிற நேரத்தில், அவசரக்காரர்களாக உள்ள பலர் எழுந்து போகத் தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவேதான் “இருந்து சொல்லுவன் ஏழைகாள்! கேண்மின்கள்!” என்றும் சொல்லியிருக்கிறார். ஆம், “நான் உட்கார்ந்து சொல்லுகிறேன். கேளுங்கள்!” என்று சொல்லியிருக்கிறார். இது எதைக் காட்டுகிறது? அவர், தமிழகத்தில் தமது கருத்துக்களை வெளியிடத் தொடங்கியபொழுது இந்த நாட்டில் இருந்த சிக்கலான நிலையைத் தானே; அப்பரடிகள் பலப்பல இடங்களில் பல்வேறு சூழல்களில் பட்டினியாகக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுச் சிவபெருமானே அவருக்குச் சோறுகொணர்ந்து கொடுத்திருக்கிறார்.

நமது நாயன்மார்கள் இப்படி இறைவனே சோறு கொணர்ந்து கொடுக்கும் அளவிற்கு அருள் வல்லார்களாக இருந்தார்கள் என்பது நமக்குப் பெருமையாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அவருக்குத் தமிழகத்தில் இருந்த வரவேற்பையும் நாம் உணரமுடிகிறது. அருளியல் ஞானியான அப்பரடிகளை வரவேற்றுச் சோறு கொடுக்கத் தமிழகத்தில் ஆள் இல்லாமல் இருந்தமையாலேயே இறைவனே பொதி சோறு கொணர்ந்து கொடுத்திருக்கிறார்! இது தமிழகத்தின் அன்றையச் சிக்கலைத்தானே காட்டுகிறது!

“திருத்தொண்டின் நெறி வாழ...”

இவ்வாறு சிக்கல் சூழ்ந்து நாட்டு மக்கள் இருளிலே மயங்கிக் கிடந்த காலத்தில்தான் அப்பரடிகள் தொண்டை நாட்டிலே - திருவாமூரிலே அவதரித்து அருமையான பாசுரங்கள் ஆயிமாயிரம் பாடினார். மக்களின் உள்ளங்களைத் தொடுகின்ற அளவிற்கு அவர் இசையோடு பாடினார்; நாடு முழுதும் சென்று நயத்தகு தொண்டு செய்தார். அப்பரடிகளின் வரலாறே தொண்டின் வரலாறு தான். “திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ” என்று சேக்கிழார் பெருமான் பாராட்டுகின்றார். இவ்வளவு சிறந்த அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே இருபதாம் நூற்றாண்டின் - ஏன் அதன்பின் வரும் நூற்றாண்டின் புதுமைக் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை நாம் இங்கே காணலாம்.

நாமார்க்கும் குடியல்லோம்

உலக மக்கள் எல்லாரும் ஒருவரின் குறிப்பிட்ட ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கட்டுப்பட்டுக் கிடக்காமல், அவர்களுடைய நலனுக்குகந்த ஆட்சி மலர வேண்டும் என்று கூறுவது ஓர் அரசியல் இயக்கம். இந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்கி வைத்த தலைவர்கள் - பெரியார்கள் உலகின் வெவ்வேறு கோடிகளிலே வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் ‘உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட மன்னனுடைய எதேச்சாதிகாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். மக்காளட்சி மலரவேண்டும்’ என்ற கருத்திற்காகவே போராடி வந்திருக்கிறார்கள். அந்தப் போராட்டத் தலைவர்களின் வரிசையிலே நமது அப்பரடிகளுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு! கொடி கட்டி ஆண்ட பல்லவப் பேரரசனை எதிர்த்து அப்பரடிகள் “நாமார்க்கும் குடியல்லோம்!” என்று முழங்கியதே அதற்குச் சான்றாகும்.

விடுதலை வீரர்

காஞ்சியிலே பல்வ மன்னன் கொடிகட்டி ஆளுகிறான். அவன், நமது அப்பரடிகளை அழைத்து வருமாறு ஆளனுப்புகிறான். அரசனின் ஆணையாயிற்றே என்று கருதி, அவர் மன்னனை நோக்கி ஓடவில்லை. “நாம் யார்க்கும் குடியல்லோம் எமக்காக ஆட்சியே யன்றி ஆட்சிக்காக நாமல்ல” என்று ஏழாம் நூற்றாண்டிலே அவர் உரிமை முழக்கம் செய்ததை அறிகிறோம். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற அப்பரடிகளின் அடியைத் தொடர்பாக வைத்துத் தான் இருபதாம் நூற்றாண்டில் பாரதியார்,

நாமிருக்கும் நாடு நம
தென்பதறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம்
என்ப துணர்ந்தோம்
பூமியில் எவர்க்குமினி
அடிமை செய்யோம் - பரி
பூரணனுக்கே அடிமை
செய்து வாழ்வோம்!

என்று பாடினார். ஆம்! ஏழாம் நூற்றாண்டிலேயே முழங்கால் வரை வேட்டியுடுத்திய கோலத்தால் மிகப்பழமையானவரான நமது அப்பரடிகள் “ஆட்சிக்காக மக்கள் அல்லர்; மக்களுக்காகவே ஆட்சி - அரசு எல்லாம்! கொடி கட்டி நாடாளும் பல்லவ மன்னனுக்கு நாம் அடிமையல்லோம்; இறைவனுக்கே நாம் அடிமை” என்ற கருத்தை வெளியிட்டார். இவ்வாறு ஏழாம் நூற்றாண்டிலேயே விடுதலை முழுக்கம் செய்த பெருமை நமது அப்பரடிகளுக்கு உண்டு. எல்லாம் இறைவனுடைமை; எல்லாரும் இறைவன் மக்கள் என்னும் உடன் பிறப்பொற்றுமை எண்ணம் உண்மையான மக்கள் ஆட்சியை ஏற்படுத்தும்; சமுதாய ஆட்சி மலரும்; அதுவே இன்பமும் மகிழ்ச்சியும் ஆகும்.

கவிழ்ந்த பாலுக்குக் காரணம் யார்?

அன்று இந்த நாடு அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தமையின் காரணமாக இந்நாட்டு மக்களின் சராசரி வயது 27 ஆக இருந்தது. இன்றோ, இந்த நாடு சுதந்திரம் பெற்று விட்ட பிறகு, மக்கள் நலன் கருதுகிற சொந்தக் குடியரசு நாடாக ஆகிவிட்ட பிறகு பல்வேறு நலன்களும் சுகாதார வாய்ப்புக்களும் பெருகியுள்ளன. எனவே மக்களின் சராசரி வயது 47 ஆக உயர்ந்திருக்கிறது. 27இல் செத்தது இறைவனின் திருவருள் என்றோ, 47 ஆக உயர்ந்திருப்பது விதி என்றோ நாம் சர்வ சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.

நீண்ட நெடுநாட்களுக்கு நாம் வாழவே இறைவன் நமக்கு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறான். “பாலைக் கொண்டுபோய்ப் பயன்பெறுமாறு வீட்டிலே கொடு” என்று கொடுத்தால், அதை நாம் இடையிலே கொட்டிக் கவிழ்த்து விட்டுக் கொடுத்தவனின் நோக்கம் அது என்று கூறிவிட முடியுமா? நாம், நமது வாழ்நாள் முழுவதும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்றே இறைவன் விரும்புகிறான். நாமோ, இறைவனின் அருள் நோக்கத்தை, விருப்பத்தை அறியாமல் இடையிலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுகிறோம். எனவே, இடையிலே வாழ்க்கை கெட்டுப் போவதற்குக் காரணம் இறைவனல்ல; இறைவனின் எண்ணத்தை - நோக்கத்தை மதிக்கத் தெரியாத நாம் தான்! எனவேதான் அப்பரடிகள் இந்த உலக மக்களை நோக்கி “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி; மதித்திடுமின்” என்று கூறினார். இந்த நாட்டில் பெளத்த, சமண மாயா வாதங்கள் வந்தமையின் காரணமாக வாழ்க்கையையே மதிக்காத ஓர் உணர்ச்சி, உடல்நலம் ஓம்பாத ஓர் உணர்ச்சி, வாழ்க்கையின் சூழலையே மதிக்காத ஓர் உணர்ச்சி வளர்ந்தது. இந்த நிலைமையைப் பார்த்து வருந்தி - மனமிரங்கியே அப்பரடிகள், மனிதப் பிறப்பு மாண்புறு பிறப்பு; அது மதிக்கத்தக்க பிறப்பு; மகிழ்வின்ப வாழ்வளிக்கும் பிறப்பு; அன்பு அருள் பெருகும் அறிவுப் பிறப்பு; எனவே, மனிதப் பிறவியை மதித்துப் போற்று; அதற்கு ஒரு மரியாதை கொடு; அதைக் கொண்டுபோய்க் குப்பையிலே போட்டுப் பாழாக்கி விடாதே என்று கூறுவதுபோல,

வாய்த்தது நந்தமக்கு
ஈதோர் பிறவி
மதித்திடுமின்

என்கிறார். “மனிதப் பிறவியை மதித்துப் போற்று” என்று கூறும் பொழுதே அப்பரடிகள் “நாமார்க்கும் குடியல்வோம்; நமனையஞ்சோம்” என்று பாடுகிறார்.

ஒருவன் நலமாக வாழ்கிறான்; திட்டமிட்ட வாழ்க்கை நடத்துகிறான்; ஒழுக்கம் காத்து வாழ்கிறான். அகமும் புறமும் ஒத்து வாழ்கிறான். யாருக்கும் அகநலம் இல்லாமல் புறநலம் அமையாது. ஒருவன், நன்றாகக் குளித்து, உண்டு, உடுத்தி வாழ்வதால் மட்டும் நலம் வந்துவிடும் என்று கூறிவிட முடியாது. முறையாக வாழ்பவர்கள்கூட, வேளை தவறாமல் பல வகையான சுவையுணவுகள் உண்பவர்கள்கூட நோய் வாய்ப்படுகிறார்களே அதற்கு என்ன காரணம்? புறத்திலே அவர்களுக்கு எத்தகைய கேடுமில்லை! புறத்தில் எத்தகைய குறையும் வருவதில்லை. ஆனால் அவர்களுடைய எண்ணத்தின் ஊற்று, சிந்தனையின் ஊற்று காலப்போக்கிலே நச்சுத்தன்மையடைந்து புழுவுக்கில்லாப் பொல்லாங்காகி அவர்களுடைய செயல்களிலும் அத்தன்மை பரவிவிடுகிறது. எனவே அவர்களுக்குப் புறத்திலே நோய் கிடையாது. அகத்திலேதான் நோய்!

நடலையல்லோம்

‘நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்’ என்றார் அப்பரடிகள். நடலை என்பது நல்ல பொருள் பொதிந்த ஒரு சொல். நான் தெருவிலே சுற்றித் திரிகிற நடைப்பிணம் அல்ல; சீனப் பொம்மையல்ல, ஆண்மை செறிந்த ஒரு மனிதன் என்ற கருத்திலேதான் ‘நடலையல்லோம்’ என்றார். ‘ஏமாம்போம், பிணியறியோம், பணிவோமல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்று பேசினார். உழைத்துண்டல் ஒருவர்க்கின்பம். உழைக்காதுண்டல் துன்பம். இத்தகைய உயர்ந்த வீரம் செறிந்த பாடல்களை இந்த நாட்டில் இருக்கிற குழந்தைகள் படித்தால், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் படித்தால் எவ்வளவு சிறந்த அக ஒழுக்கமும் புற ஒழுக்கமும் பெற்று இந்த நாடு திகழும் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இந்த அக ஒழுக்கமும் மிக்கோங்கினால், சமுதாயத்தில் மக்கட்பண்பு மலர்ந்தோங்கும்.

உயிரும் உலை நீர் ஆமையும்

வாழும் மனித சமுதாயத்திற்கு உலகியல் அறிவு மட்டும் போதாது. மக்கட் பண்பும் வேண்டும். மக்கட் பண்பையும் அறிவையும் பற்றிப் பேசுகிற திருவள்ளுவர்,

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போவ்வர்
மக்கட்பண் பில்லா தவர்,

என்று குறிப்பிடுகிறார். அரம் போன்ற கூர்த்த மதி சிலருக்கு இருக்கும். அவர் கூறும் ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் பேரைச் சுண்டியிழுக்கிற வன்மையும் இருக்கும். ஆனால் அது நஞ்சாக, நரியின் தந்திரமாக, வாழ்நாள் முழுவதுமே வெறியை - வெறுப்பை ஊட்டுவதாகவே இருக்கும். இந்தக் சூழ்நிலையை மாற்றி, ‘அறிவு’ என்பதற்கு அழகான விளக்கம் தருகிறார் அப்பரடிகள். நல்ல எடுத்துக் காட்டுக்களோடு, உவமையோடு கூறுகிறார். வாழ்க்கையில் நன்மைபோல் தோன்றித் தீமை விளைவிப்பனவும் உண்டு. தீமைபோல் தோன்றி நன்மை புரிவனவும் உண்டு. நிலையற்றனபோல் தோன்றி நிலைப்பனவும் உண்டு. நிலைப்பனபோல் தோன்றி நிலையாதனவும் உண்டு. இந்தக் கருத்தை ஓர் அழகான உவமையோடு பொருத்திக் கூறுகிறார் அப்பரடிகள். பொதுவாக, நாட்டுப் புறங்களிலே ‘ஆமை’ சமைத்து உண்ணுகிற மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் ஆமையைப் பிடித்து வருவார்கள்.

உலைப் பானையிலே தண்ணீர் ஊற்றி அதை அடுப்பிலேற்றித் தீயை மூட்டிப் பின்னர் ஆமையை அதில் போடுவார்கள். தண்ணீர் இளம் சூடாகிறது. தண்ணீரில் கிடந்து மரத்துப் போனதால், அந்த இளம் சூடு ஆமைக்குச் சற்று வெது வெதுப்பாக இன்பமாக இருக்கும். இளஞ்சூடு அதற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும். அந்த இளஞ் சூட்டின் இன்பத்தை இணையற்ற இன்பமாகக் கருதி அது அந்த வெந்நீரிலேயே நீந்தித் திளைக்கும். இதனை, ‘உலையை ஏற்றித் தழல் எரிமடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற’ என்று அடுக்கிச் சொல்லுகிறார் அப்பரடிகள். அந்த இன்பம் வெளியே போய்விடாதபடி, அதனோடு ஐக்கியமாகிக் கலந்திருக்கிறதாம். திளைக்கும் என்ற சொல்லால் அதனைத் தெளிவாக உணர்த்துகிறார். ஆமை அந்த இன்பத்தில் ஆடித் திளைக்கும்போது ஓடுவதால் இன்பம் குறைந்துவிடுமோ என்று கருதிக் கொஞ்சநேரம் நிற்கிறதாம். பிறகு நிற்பதால் இன்பம் குறைந்துவிடக்கூடாதே என்று கருதி ஓடுகிறதாம். இந்தக் காட்சியை அப்பரடிகள் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

உலையை ஏற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்றாடுகின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்,
இளைத்து நின்றாடுகின்றேன்!

என்று பேசுகிறார் அப்பரடிகள். ஆம்! அந்த ஆமைக்கு அறிவிருந்தது; நீரின் இளஞ்சூடு தெரிந்தது; வெதுவெதுப்பான நீர் இன்பந்தருவதை உணரும் ஆற்றலும் இருந்தது. ஆனால், இப்போது 8 மணிக்கு இளஞ்சூடாக இருக்கிற இளவெந்நீர், 8-30 மணிக்குக் கொதி நீராகித் தன்னை அழித்துவிடும் என்ற அறிவு மட்டும் இல்லை! அதுபோலவே, மனிதர்கள், வாழ்க்கை என்ற அடுப்பிலே, அனுபவம் என்ற பானையிலே, ஆசை என்ற தீ எரிய, உயிர் என்ற ஆமை, பெறுகிற சில பொழுது இன்பத்தைப் பார்த்து ‘ஆகா ஊஹு’ என்று மகிழ்ந்து திளைக்கிறபோது பின்வரும் பெருந்துன்பத்தை எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்; பின்னர் அவதிப்படுகிறார்கள்.

யாதனின் யாதனின் நீங்கியான்

எந்த ஒன்று, ஆசை என்ற பெயரால் நம்மை மயக்குகின்றதோ, ஆசையின் பேரால் எதற்காக அலமந்து திரிகிறோமோ, அதுவே நம்முடைய இறுதிக் காலத்தில் நமது உயிருக்கு உலை வைப்பதாக இருப்பதை நம் ஒவ்வொருவருடைய சொந்த வாழ்க்கையிலேயே நாம் காணமுடியும்.

பணமே, நமது ஆசைக்குரிய பொருளாக இருந்தால் அந்தப் பணம் திருட்டுப் போய்விட்டது என்ற செய்தியே நமது உயிர் குடிக்கும் கூற்றுவனாக மாறிவிடும். நாவின் சுவைக்கு அதிகமாக ஆட்பட்டு நிறைய உண்டுகொண்டே இருந்தால், கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்படும்போது, அந்த உணவினாலேயே உங்கட்கு இந்த நோய் வந்திருக்கிறது என்று மருத்துவர் கூறுகிற நிலையைப் பார்க்கிறோம். இப்படியாக நாம் ஆசைப்படுகின்ற ஒன்றே நமக்குப் பகையாக - கூற்றுவனாக அமைவதைப் பார்க்கிறோம். இதைத்தான் அப்பரடிகள் அழகாகக் கூறுகிறார். ‘எது நன்று, எது தீது’ என்பதைத் தோற்றத்தைக் கொண்டே முடிவு கட்டிவிடாதே! அதனுடைய உள்ளீட்டைப் பார்! அந்த உள்ளீடுதான் நமக்கு முக்கியமானது என்ற கருத்திலே பாடிய பாடலைப் பார்க்கிறோம்.

குறிக்கோள் இல்லாமல் வாழ்வா?

அடுத்து, ‘அறிவு வேண்டும், அறிவிலே தெளிவு வேண்டும். இந்தத் தெளிவுதான் பின்னர் சைவமாக வளர்கிறது’ என்ற கருத்தை நாம் அப்பரடிகளின் பாடல்களில் காணலாம். ஒருவனுக்கு அறிவிலே தெளிவு தோன்றி விட்டால் அவனுக்கென ஒரு குறிக்கோளும் தோன்றிவிடும். அறிவினால் தெளிந்த அவன் கொள்ளும் குறிக்கோளே உயர்ந்த குறிக்கோளாக உள்ளது. இன்று உங்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோள் இருக்கிறதா? என்று கேட்டால் பலருக்குப் பதில் கூறவே தெரியாது. காரணம், அவர்கட்குக் குறிக்கோள், சாதனம் ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு தெரியாது. சிலர் திருக்கோயிலுக்குச் செல்வர். கோவிலுக்குச் செல்வது அதனால் ஏற்படுகிற நல்லுணர்வைப் பெறுவதற்குரிய சாதனமே தவிர கோவிலுக்குச் செல்வதே இலட்சியமல்ல. நல்லுணர்வைப் பெறுவது இலட்சியம். கோவிலுக்குச் செல்வது அந்த இலட்சியத்தை அடைவதற்குரிய சாதனம் தான். நாம் உடல்நலம் பெறுவது இலட்சியம். அந்த இலட்சியத்தை எய்த நாம் குளிப்பது சாதனம். அதுபோலவே, உள்ளத் தூய்மையை - உயர்ந்த பண்பை நாம் அடைவதற்கு கோயிலுக்குச் செல்வது ஒரு சாதனம்தான். இந்தச் சாதனத்திற்கும் குறிக்கோளுக்கும் வேறுபாடு தெரியாமல் வாழ்க்கை நடத்துகிற மனித சமுதாயத்தை நோக்கி மனமிரங்கிப் பாடுகிறார் அப்பரடிகள். அவர் பாலப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என மூன்று பிரிவாக வாழ்க்கையைப் பிரித்துப் பேசுகிறார். வாழ்க்கையில் குறிக்கோள் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை பயனற்றுக் கெட்டுப் போகும் என்று குறிப்பிடுகின்றார்.

‘இளமையிலே பிழை, வாழ்க்கை நடுவிலே போராட்டம், முதுமையிலே கழிவிரக்கம்’ என்ற மேலை நாட்டுப் பழமொழி ஒன்றுண்டு. எவனொருவன் இளமைப் பருவத்தில் பிழை செய்கிறானோ, அவன் வாழ்க்கையின் இடைப் பகுதியிலே போராடிக் கொண்டேதான் இருப்பான். சிலர் உலகத்தோடு போராடுவர். சிலர் தம் தீய உணர்ச்சிகளோடு போராடுவர். எப்படியாயினும் போராடுவார். வாழ்க்கையில் அமைதியே இருக்காது. அவர்கள் வாழ்க்கையின் இறுதிக் கட்டம் கழிவிரக்கமாகவே இருக்கும். “தாமஸ் உல்சி” போன்ற வர்களின் வாழ்க்கை நமக்கு இந்த உண்மையைத் தெளிவாக உணர்த்துகிறது.

தாமஸ் உல்சி அரசியல் தந்திரத்தில் சமபலக் கொள்கையைக் கையாண்டு சிறப்புடன் செயலாற்றினான்; ஆனால் அரசனுக்கே உழைத்தான். சிந்தனையிலும் பரம்பொருளை நினைக்கவில்லை. ஆனால் அரசன் அவனை முதுமைக் காலத்தில் கைவிட்டுவிட்டான். இறைவன்தானே என்றும் துணைவன்? நன்மையிலும் தீமையிலும் துணைவன். அரசனால் கைவிடப்பட்ட உல்சி வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்தான். முதுமைப் பருவத்தின் தொல்லை; வாழ்க்கை வளமனை வாழ்க்கையல்ல - குடிசை வாழ்க்கை; அப்போது அவன், “நான் அரசனுக்குச் செய்த சேவையில் ஒரு சிறு பகுதியையாவது ஆண்டவனுக்குச் செய்திருந்தால் நான் எனது இறுதிக் காலத்தில் இப்படி அனாதையாக நிற்க நேரிட்டிருக்காது” என்று இரங்கிக் கூறுகிறான். ஆம்; அவன் இளமைக் காலத்துப் பிழை வாழ்க்கை, நடுவிலே போராட்டமாக ஆகி, இறுதிக் காலத்தில் கழிவிரக்கமாக மாறியதைக் காண்கிறோம். இந்தக் கருத்துக்கு அணி செய்வது போல் அமைந்திருக்கிறது,

பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
மெலிவுடன் மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும்
குறிக்கோள் இலாது கெட்டேன்,

என்ற அப்பரடிகளின் பாடல். மனிதப் பிறவி கிடைத்தற்கரிய பிறவி, அதைக் குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து கெட்டொழித்து விடலாமா? எனவே வாழ்க்கையில் குழந்தைகளாக இருக்கும் பொழுதே அவர்கட்கு நல்ல இலட்சியத்தை - குறிக்கோளை ஊட்ட வேண்டும். அந்த வயதுக்கும், உணர்வுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மிக்குயர்ந்த இலட்சிய உணர்வை ஊட்டவேண்டும். அடுத்து இளமைப் பருவம். அதைத்தான் “பனிமலர்க்கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாள்” என்ற அப்பரடிகள் பேசுகிறார். அவ்வாறு இல்லற வாழ்வில், துணைவியோடு வாழும் போதும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை கெட்டுப் போகும். இல்லற வாழ்க்கையில் என்ன குறிக்கோள் இருக்க முடியும் என்று கேட்கலாம். நன்றாக உளமொத்து வாழ்ந்து அந்த உளமொத்த வாழ்க்கையிலே நல்ல நீண்ட நெடும் பாரம்பரியத்தை உண்டாக்குகிற நன்மக்கட்பேற்றைப் பெறுவது குறிக்கோளாக அமைய வேண்டும். அப்படியில்லாமல் வெறும் உணர்ச்சிக்காக - மனப்பிராந்திக்காக இந்த வாழ்க்கை என்று கருதக்கூடாது; அது இல்லற வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கக்கூடாது. மூப்பொடு மெலிவு வந்து, கோலனாய்க் கோல் ஊன்றி நடக்கும் காலம் மூன்றாவது பருவம் - இறுதிப் பருவம். அப்போதும் குறிக்கோள் வேண்டும் என்று கூறுகிறார்.

மனம்போல் வாழ்வு

பருவுடல் தோற்றத்தால் மட்டும் ஒருவன் மனிதனாகி விடுவதில்லை. அவனுடைய உள்ளீடு என்ன? ஆன்ம நலம் என்ன? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆன்ம நலம் இல்லாமற் போனால், மனிதனும் வெறும் பாடைத் தேங்காய் போலப் பயனற்றவனாய் விடுகிறான். வெறும் பாடைத் தேங்காயாவது அடுப்பு எரிக்கப் பயன்படும். ஆனால் குறிக்கோளிலா மனிதனால் என்ன பயன்? இந்த நிலையை வைத்துக் கொண்டுதான் நமது அப்பரடிகள் போன்றோர், வாழ்க்கையின் உயர்ந்த - சிறந்த சிந்தனைகளைப் பார்த்தார்கள். உயர்ந்த சிந்தனைகளையுடைய மேலான வாழ்க்கையை உண்டாக்க அப்பரடிகள் விரும்பினார்.

‘இனியன நினையாதார்க்கு இன்னாதான்’ என்று அப்பரடிகள் பேசுகின்றார். நிலத்திலே நீர் ஊற்று இருப்பது போல், மனிதனிடத்தில் நினைப்பு ஊற்று இருக்கிறது. நினைப்பு நல்லதாக இருந்தால் அவன் நல்லவனாகிறான். பொதுவாகப் பகல் 12 மணிக்கு நாம் ஒரு நல்ல விருந்து படைக்க வேண்டுமென்று விரும்பினால், காலை 8 மணிக்கே சமையற்கட்டுக்கு நல்ல சரக்குகளைக் கொடுக்கவேண்டும். சமையற்கட்டுக்கு நாற்றம் பிடித்த அரிசியையும் பூச்சி வைத்துக் கெட்டுப்போன கத்தரிக்காயையும் கொடுத்து விட்டு 12 மணி விருந்துக்கு நல்ல சாப்பாடு வேண்டுமென்றால் ஒரு பொழுதும் வராது. சமையற்கட்டுக்குக் கொடுக்கப்பெற்ற சரக்குகளுக்கு ஏற்பவே பந்தியிலே விருந்து அமையும். அதுபோல, நமது இதயம் என்ற சமையற் கட்டில், ஏற்றப்பெற்ற எண்ணம் என்ற சரக்குகளுக்கு ஏற்பத்தான் சமுதாய வாழ்க்கை அமையும். இதயத்தில் எதை ஏற்றினோம் என்பதுதான் முக்கியம். அன்பு, ஒப்புரவு, ஈகை, இரக்கம், கண்ணோட்டம் முதலிய உணர்வுகளை ஏற்றினால் நாம் தூய மனிதராக - உலகிற் சிறந்த மனிதராக விளங்க முடியும். இல்லையானால், நமது வாழ்க்கை நரக வாழ்க்கையாகவே மாறிவிடும். ஒரு விலங்கு கொடுமையுடையதாக இருந்தால் கூட அவ்வளவு தீமையில்லை. ஒரு மனிதன் கொடியவனாக இருந்தால் அவன் மனித சமுதாயத்தையே பிடித்து ஆட்டி அலைக்கழிக்கிற பேய் போல ஆகிவிடுவான். ஆகையினால் தான் மனிதர்கள் தங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்; இனியன எண்ணவேண்டும் என்று அப்பரடிகள் கூறினார்.

கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்!

வஞ்ச ஆறு வற்றினால் பக்தி ஆறு பெருக்கெடுத்தோடும் என்கிறார் அப்பரடிகள். ஒரு பாத்திரத்தில், எதையாவது ஒன்றை வைத்துக் கொண்டு அதன் மேலே இன்னொன்றை ஊற்ற முடியாது. அதில் இருப்பதை அப்புறப்படுத்திவிட்டுத் தான் இன்னொன்றை ஊற்ற வேண்டும். வஞ்ச ஆறு, இயல்பிலேயே உள்ளத்தில் ஊற்றெடுக்கிறது. அதனைத் தூர்வை எடுத்துத் தூய்மைப்படுத்திவிட்டால் பக்தி ஆறு பெருக்கெடுக்கும். போட்டி, பொறாமை, சூது என்ற வஞ்ச ஆறு வற்றினால்தான் பக்தி ஆறு பெருக்கெடுக்கும். வஞ்ச ஆற்றை வற்றச் செய்வதற்கும் பல்வேறு சமுதாய உணர்வுகளையும் இன்று பலர் பேசுகிறார்கள்.

சாதிகளை ஒழித்துவிட வேண்டும் - குலச் சண்டைகளையும் கோத்திரச் சண்டைகளையும் போக்கிட வேண்டும் என்று பேசிகிறார்கள். இக்கருத்தை நமது அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே பேசினார்.

சாத்திரம் பல பேசும்
சழக்கர்காள்!
கோத்திர முங்குல
முங்கொண்டேன் செய்வீர்?

என்று கேட்டார். ஆனாலும் 7-ம் நூற்றாண்டிலிருந்து இந்த 20-ம் நூற்றாண்டு வரை, அண்ணல் காந்தியடிகள் வந்து சொல்லியும்கூட நம்மிலே தீண்டாமையை விட்டு விடத் தயாரானோர் எத்தனை பேர் 7-ம் நூற்றாண்டில் இந்தக் கருத்தைக் கூறிய அப்பரடிகளின் சிலையைக் கோயிலுக்குள்ளே வைத்திருப்பதைப் பார்க்கிறோம்; குருபூசை நடத்துவதைப் பார்க்கிறோம். ஆனால் இந்த நாட்டை விட்டுச் சாதி வேற்றுமையும், குல வேற்றுமையும், கோத்திர வேற்றுமையும் போகவில்லை. இன்றைக்கும் போனபாடில்லை. எங்கேயிருந்து தீண்டாமை போக வேண்டுமோ, யார் மூலம் தீண்டாமை போகவேண்டுமோ, அங்கிருந்து, அவர்கள் மூலமாகத் தீண்டாமை போகவில்லை. இன்று தீண்டாமை ஒழிப்பை அரசு தன் பொறுப்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கு.இ.VII.11. அதன் முழுப் பயனை நாம் இனிமேல்தான் காணவேண்டும். எங்கே தீண்டாமை குடி புகுந்து கொண்டு சமுதாயத்தைக் கெடுத்ததோ அங்கே இன்றும் சாதீய எண்ணங்களும் சாதீய உணர்ச்சிகளுமே இருந்து வருகின்றன. இருப்பதற்கேற்ற சூழ்நிலைதான் இருந்து வருகிறது. பொதுவான எந்த ஒன்றையும் மக்கள் மன்றத்தில் வைத்து மக்களை அதற்குத் தயார் செய்ய வேண்டுமே தவிர, அரசு தானாக இயக்கினால் உரிய பயன் இல்லாமற் போகும். அதுமட்டுமல்ல, அந்த இயக்கமும் வலுவற்றுப் போகும்.

சமய வாழ்வில் சமுதாய உணர்வு

நம்முடைய நாட்டு அரசர்கள் இரண்டு தவறுகளைச் செய்தார்கள். அதனாலேயே நம்முடைய சமய வளர்ச்சி தடைப்பட்டிருக்கிறதோ என்று நான் ஐயப்படுகிறேன். ஒன்று அரசர்கள் அவர்களாகவே கோயில்களைக் கட்டியது. அவர்களாகக் கோயில்களைக் கட்டியமையின் காரணமாக, அங்கு வாழும் மக்களிடத்திலே, “இது நம்முடைய சொத்து; இதை நாம் பேணிக் காக்க வேண்டும்; சுற்றுச் சுவர்களிலும், கோபுரங்களிலும் முளைக்கின்ற மரங்களை நாம் வெட்டியெறிய வேண்டும்” என்று கருதுகிற சூழல் இல்லை. அதை அனாதைச் சொத்தாகக் கருதுகிற நிலைக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். கோயில், தர்மகர்த்தாவுக்குச் சொந்தம் என்று மக்கள் கருதுகிறார்கள். தர்மகர்த்தாவோ கிடைத்த வரை இலாபம் என்று கருதுகிறார். அவரிடமும் சமுதாய உணர்ச்சி வரவில்லை. காரணம், அந்தக் கோயில் சமுதாயத்தினால் எழுப்பப் பெறவில்லை என்பதுதான்! தயவு செய்து யாரும் தவறாகக் கருதிக் கொள்ளக்கூடாது. நான் குலோத்துங்க சோழனைப் பாராட்டுகிறேன்; இராஜராஜ சோழனைப் பாராட்டுகிறேன்; பாண்டியனைப் பாராட்டுகிறேன். ஆனாலும், அவர்கள் இந்தச் சமுதாயத்தைப் பார்த்து, ‘இந்த ஊருக்கு ஒரு கோயில் தேவை: அதை நீங்கள் கட்டிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தால், அந்த மக்களையே திருக்கோயில் எழுப்பச் செய்திருந்தால் கோயிலையும், கோயில் சொத்தையும் பேணுகிற உணர்ச்சி அந்த மக்களுக்கு இருக்கும். இப்படி நாம் கூறும்போது அந்தக் கோயில்களையும் மக்கள்தாமே கட்டினார்கள்? மன்னனா கட்டினான்? என்று நீங்கள் கேட்கலாம். மக்கள் தாம் கட்டினார்கள். ஆனால் கூலிக்குக் கட்டினார்கள்; அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டுக் கட்டினார்கள். அவ்வாறின்றி, மக்களாகவே கட்டியிருந்தால் இந்த நாட்டில் பாடல்பெற்ற திருத்தலங்கள் பல அழிந்திருக்குமா? அந்தத் திருக்கோயில்களில் செடி, கொடிகள் முளைக்கமுடியுமா? இன்று பல கோயில்களின் சொத்து ஒரு சில மனிதர்களின் சுக போகத்திற்குப் போயிருக்குமா? இவையெல்லாம், தங்கள் சொத்து என்ற உணர்ச்சி மக்களிடம் இல்லாமற் போனதால் விளைந்த தீமைகள். இன்னொன்று, கோயில் எழுப்பியதோடு மட்டுமின்றி அவற்றிற்குச் சொத்தும் கொடுத்தது. இதுவும் ஒரு பெரிய குறைதான்.

பொது நிறுவனங்கள் மக்களாலேயே பாதுகாக்கப் பெறவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். அவை மக்களாலேயே பாதுகாக்கப் பெறுகிற அளவிற்கு மக்களிடமிருந்தே வருவாய் வரவேண்டும். அவ்வாறின்றி, ஒரு பெரும் மூலதனம் இருந்துவிடுமானால் பணம் வருகிறது, எப்படியும் காரியத்தை நிறைவேற்றிவிடலாம் - மக்களைப் பற்றி நமக்கென்ன என்ற எண்ணம் எழக்கூடும். நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டு நமது மதத்தைச் சார்ந்த மக்கள் பலர் பிற மதத்திற்குப் போயும்கூட, பலர் ஐந்தெழுத்தின் மெய்ப்பொருளை எண்ணிப் பார்க்க முடியாமல் போயும் கூட, நமது சமய மடங்களும், திருக்கோயில்களும் சிறிதும் கவலைப்படாமல் தங்களுடைய மணிகளை முழங்கிக் கொண்டு காலங்கடத்தி வருகின்றன. இதனாலேயே நமது திருக்கோயில்களுக்கும், மக்களுக்குமிடையே - நமது திருமடங்களுக்கும் மக்களுக்குமிடையே நீண்டதோர் இடைவெளி ஏற்பட்டது; இன்றும் இடைவெளி இருந்து வருகிறது. 

ஒரு நாலாயிரம் மக்கள்! அவர்கள் மத்தியில் ஒரு கோயில். அந்த நாலாயிரம் மக்களின் குடும்பப் பொறுப்பாக அந்தக் கோயில் இருக்கவேண்டும். அந்த மக்களின் பொறுப்பாகவே அவர்களைச் சார்ந்த திருமடம் இயங்க வேண்டும் என்ற ஒரு நிலைமை இருக்குமானால், நமது சமய நிலையங்களுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி ஏற்பட்டிருக்குமா? தொடர்பு குறைந்திருக்குமா?

கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் ஒரு நிரந்தரமான மூலதனம் ஏற்பட்டுவிட்டதால், அங்கு மக்கள் வந்தாலும் வராவிட்டாலும் அவை அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மக்களை வரவழைக்க வேண்டுமென்று விரும்பினால், கச்சேரிகள், விழாக்கள் மூலம் கூட்டம் சேர்த்து விடுகிறார்கள். அலங்காரங்கள், கச்சேரிகள், களிநடனங்கள் இவையனைத்தும், மக்கள் கூட்டம் குறைந்தபோது, அவர்களைக் கவர்வதற்காக - கூட்டம் வரவேண்டும் என்பதற்காக - ஏற்படுத்தப்பெற்ற சப்பைக் கட்டுக்களாக, சாதனங்களாகவே மாறிவிட்டன. இவை நிரந்தரமான புரட்சியை ஏற்படுத்தவில்லை. மக்கள் மன்றத்தில்தான் சமய நிலையங்கள் இருக்கவேண்டும்; மக்கள் மன்றத்தின் தொடர்பில்தான் அவை இயங்கவேண்டும் என்று நமது அப்பரடிகள் கருதினார். எனவே, இவர் ஒரு மாசில்லாத தூய துறவியாகக் காட்சியளித்தார். “ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார்”. அவர் உழவாரத் திருப்பணி செய்கின்றபொழுது, பொன்னும் மணிகளும் கிளம்பின. அப்பரடிகள் அவற்றையெல்லாம் ஒக்கவே நோக்கினார்; ஆம்! செம்பொன்னையும் ஓட்டையும் ஒரே மாதிரியாகப் பாவித்தார். இப்பொழுது நம்மிற் பலர் ஓட்டைக்கூடச் செம்பொன்னாகப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். அப்பரடிகளின் வாழ்க்கை தூய களங்கமில்லாத வாழ்க்கை “கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி” வேறொன்றும் வேண்டாத வியத்தகு வித்தகத் துறவு அப்பரடிகளின் துறவு. அவருக்கு நாட்டு மக்களின் நல்வாழ்விலே மிகச் சிறந்த ஈடுபாடு இருந்தது. இந்த நிலைமையை நாம் எண்ணிப் பார்க்கின்ற பொழுதுதான் அப்பரடிகளுக்குச் சமய வாழ்வில் ஏற்பட்ட சமுதாய உணர்வை நாம் உணர முடிகிறது.

யாம் வணங்கும் கடவுளார்

பொதுவாக, மனித வாழ்க்கையில் இருக்கின்ற தவறுகளை நீக்க வேண்டுமானால், முதலில் அவனைச் சமுதாய மனிதனாக்க வேண்டும். சமுதாயத்தை விட்டுத் தனித்து ஒதுங்கி வாழும் மனிதன் தொடர்ந்து தவறுகளை இழைத்துக் கொண்டேதான் போவான். எவன் ஒருவன் துணிவாகச் சமுதாயக் கூட்டு வாழ்க்கையை - பத்துப்பேர் மத்தியிலே வாழுகின்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறானோ, அவன் காலப்போக்கில் திருந்திவிடுவான்.

ஒருவன் ஆவுரித்துத் தின்றுழலும் புலையனாகவே இருந்தாலும், அவன் சான்றோர்கள் - அடியார்கள் மத்தியிலே வாழக்கூடிய சமுதாய வாழ்க்கையை மேற்கொண்டு விடுவானானால், சமுதாயத்தில் வாழுகின்ற மற்றவர்களைப் பார்த்து - தன்னினும் மூத்த சான்றோர்களைப் பார்த்து - அவர்கள் வாழும் முறைகளைக் கவனத்தில் கொண்டு, அவன் இதுதான் நல்ல வாழ்க்கை போல் இருக்கிறது என்று கருதி “ஆவுரித்துத் தின்னுகின்ற” பழக்கத்திற்கே முழுக்குப் போட்டுவிடக் கூடும். இதனை நன்றாக உணர்ந்தவர் நமது அப்பர் அடிகள்.

எனவேதான்,

அங்கமெலாம் குறைந்தழுகு
தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும்
புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்
கன்ப ராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும்
கடவுளாரே!

என்றார். தாம் வணங்குகின்ற கடவுள் என்று சொல்லுகின்ற அளவில் நாம் அந்தப் பாடலைப் பார்க்கிறோம். ஒப்புயர்வற்ற சமுதாய ஒருமைப்பாட்டை, சாதிகுல கோத்திரங்களுக்கு அப்பாற்பட்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது அப்பரடிகளின் கருத்து.

‘கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராவோர்’ கருத்தில் அந்த ஆவும், ஆண்டவன் வீற்றிருக்கும் கோயில் என்ற எண்ணம்தானே உண்டாகும். பின்பு தாமாகவே அக்கொடுந்தொழிலை விட்டுவிடுவர். மேலும் கோவிலில் காணப்படும் வாகன நந்தியையும் நினைப்பர்.

சமயத்தில் சமதர்மம்

அடுத்து, எல்லாரும் வாழ வேண்டும்; இன்பமாக வாழவேண்டும். பொருள் உடைமை, பிறருக்குத் தந்து உதவி வாழ்விப்பதற்கே என்ற உயர்ந்த தர்மகர்த்தாக் கொள்கையை அப்பரடிகள் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டில், ‘தர்மகர்த்தாக் கொள்கை’ என்ற ஒரு கொள்கை இல்லை. எனினும், தர்மகர்த்தாக் கொள்கைக்கு வித்தூன்றுவது போல அப்பரடிகள் பேசி இருக்கிறார்.

இரப்பவர்க்கு ஈய வைத்தார்
ஈபவர்க்கு அருளும் வைத்தார்.
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்

என்று கூறுகிறார். ஒரு பெரிய மருத்துவர் இருக்கிறார். அவர்தம் பெட்டியிலே இரு நூறு ரூபாய் மதிப்புள்ள நல்ல மருந்துகள் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு மருந்துகளும் அவர்தம் சொந்தப் பணத்தில் வாங்கியவைகளே. எனினும், எல்லா மருந்துகளையும் அவரே உட்கொள்ள முடியுமா? நோயுற்றவர்களுக்குத் தானே கொடுக்க வேண்டும்? மருத்துவரிடத்தில் ஏராளமான நல்ல மருந்துகள் இருப்பது போலச் சிலரிடத்தில் பெரும் பொருள் குவிந்து கிடக்கிறது. எதற்காக? இரப்பவர்கட்கு ஈவதற்காக! மருத்துவர்களிடமிருக்கும் மருந்து மற்றவர்களின் உடல் நோய் தீர்ப்பதற்காக!

ஆம்! கடவுள் அப்போதே அவனிடம் சொல்லித்தான் பணத்தைக் கொடுத்திருக்கிறார். “யாராவது வந்து கேட்டால் இல்லையென்று சொல்லாமல் இயன்றதைக் கொடு” என்று சொல்லியிருக்கிறார்... இரப்பவர்க்கு ஈவதற்காகப் பொருளை வைத்தார்; அப்படி இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் இயன்றதைக் கொடுப்பவர்களுக்கு அருளை வைத்தார். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லிப் பொருளைச் சேமித்து வைக்கின்ற வன்னெஞ்சுடைய வஞ்சகர்களுக்கு எல்லாம், கடவுள் ‘கடுநரகம்’ வைத்திருக்கிறார். இதனையே ‘கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்’ என்று அழுத்தமாக, தெளிவாகக் கூறுகிறார் நமது அப்பரடிகள்.

பொதுவாக, இடைக்காலத்திலே சமய உலகத்திற்கு வந்த ஆபத்துகூடச் செல்வர்களால்தான், வந்தது. இடைக் காலத்திலே, பரம தரித்திரர்களான ஏழை மக்களுக்கும் பரிந்து பேசுகிற கடமையைச் சமய உலகு மறந்துவிட்டது; அவ்வாறு பேசுவதனின்னும் விலகிவிட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நமது அப்பரடிகள், “உற்றார் இல்லார்க்கு உறுதுணையாவான்” என்று பேசினார். சமுதாயத்தில் யாரொருவர்க்கு உறவினர் இல்லையோ, யார் ஒருவர் தெருவில் அனாதையாக விடப்பட்டாரோ அவருக்கிறைவன் உற்ற துணை என்று பேசினார். ஒருவன் உற்றாரிலாதார்க்கு உறுதுணையாக நின்று உதவிபுரிய எண்ணினால் தன்னைச் சார்ந்தவர்களைக் கொண்டு செய்விப்பதே தக்கதாகும். அதுபோல் இறைவனும் தக்க வரை - செல்வரைக் கொண்டு செய்விப்பான். கண்ணுள்ளவரைக் கொண்டு கண்ணில்லார்க்குத் துணை செய்விப்பதும் இம்முறையேயாகும். ஆனால் இன்று நமது சமயம், உற்றார் உறவினர் இல்லாத அனாதைகளுக்கு உறுதுணையாக இல்லை. எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் உள்ளவர்க்கே மேலும் மேலும் பரிவு காட்டுவதாக - மரியாதை கொடுப்பதாக இருக்கிறது.

அன்பே பொருள்

அடுத்து, ‘அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்வானை’ என்று பேசுகிறார். அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வது சமயத்தின் இயல்பு. சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தில் இறைவன் பல்வேறு சூழ்நிலைகளில், அற்றார் போல, அலந்தார் போலக் கோலம் கொண்டு மண்மீதில் எழுந்தருளி வந்ததைக் காண்கிறோம். “சிவபெருமான்” என்ற திருக்கோலப் பொலிவோடு அவர் வரவில்லை. அவர், அற்றார்போல; அலந்தார்போல வந்தபோதும் உரிய மதிப்பும் வரவேற்பும் கிடைத்தன அடியார்களின் இல்லங்ளிலே! இன்று இறைவனே அற்றார்போல, அலந்தார் போல வந்தால் அவனுக்கு ஒரு பிடிசோறு கிடைக்குமா என்பது ஐயப்பாடு தான்! நிலைமை அந்த அளவிற்கு மாறிவிட்டது. அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்கின்ற, உற்றார் இல்லாதார்க்கு உறுதுணையாகின்ற அந்த உயர்ந்த சமய ஒழுக்கம் பரவவேண்டும். எல்லார்க்கும் கொடுப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம். அதுதான் சமுதாய ஒழுக்கம். அங்குதான் சமுதாயப் பண்பு வளர்கிறது. ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகளிடத்தே இந்த உயர்ந்த சிந்தனை தோன்றியதை நாம் பார்க்கிறோம்.

பொதுவாக, மனிதன் ஒருவன்தான் வாழ்க்கையென்ற இலட்சியத்தோடு போராடுகின்றான். பிறரோடு மனங்கலந்து பேசி, அன்பு கலந்து உறவாடி, கூடி வாழ்வதே மனித குலத்தின் உயர்ந்த லட்சியம்! மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள், தோன்றிய சில காலம் வரை சார்ந்து வாழ்கின்றன. பின் தத்தம் வாழ்க்கையைத் தாமே பார்த்துக் கொள்கின்றன. அதனால் அவைகளுக்குச் சார்பின் மேன்மையும் நன்மையும் தெரியவாரா. மனிதன் பிறந்த நாள் தொட்டு இறக்கும் வரையும் சார்புடனே வாழ்கின்றான்; அதனால் கடவுள் சார்பையும் நாடுகின்றான்.

அன்பலால் பொருளுமில்லை
ஐயன் ஐயாறனார்க்கே

என்று அப்பரடிகள் குறிப்பிடுகிறார். ஐயாறப்பர் நாம் கொண்டுபோகும் தேங்காய்ப் பழத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை; நாம் உண்மையிலேயே அன்புடையவர்களாக மெய்யன்புடையவர்களாக இருக்கிறோமா? என்றுதான் அவர் பார்க்கிறார். அன்புதான் மனிதனை வளர்க்கிறது. அன்புதான் மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் - மற்றவர்களை நாம் மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது. அன்பில்லையானால் தன்னல வெறியே தலைதூக்கி நிற்கும். அன்பு இருந்தால் சமுதாயப் பற்று, தலைதூக்கி நிற்கும். கடவுளுக்குப் படைக்கும் அமுதும் தூய அன்பேயாகும். அறவாணர்க்கு அன்பென்னும் அமுது படைத்து வழிபட்டார் வாயிலார். “நடமாடுங் கோயில் நம்பர்க்கொன்றீவதே, படமாடுங் கோயில் பரமர்க்கு ஈவது” என்றார் திருமூலர். நடமாடுங் கோயில், நல்ல சமுதாயமேயாகும்.

சாதாரணமாகச் சில விலங்குளையும், செடி கொடிகளையும் நாம் பார்க்கிறோம். அவை மக்கட் சமுதாயத்திலிருந்து பெற்றுக் கொள்வது மிக மிகக் குறைவு. ஆம்; அவை பெற்றுக் கொண்டதைப் போன்று பன்மடங்கு பயனைத் திருப்பிக் கொடுக்கின்றன. ஒரு கறவை மாட்டை எடுத்துக் கொள்வோம். அது ஒரு ரூபாய் மதிப்புள்ள தீனி தின்றால், இரண்டு அல்லது மூன்று ரூபாய் மதிப்புள்ள பாலை நமக்குத் தருகிறது; ஒரு தென்னை மரம்! அதற்கு நாம் செலவழிப்பது எவ்வளவு, அது நமக்குத் திருப்பித் தருவது எவ்வளவு, என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். இப்படி விலங்குகளும், செடி, கொடி, மரங்களும் சமுதாயத்திலிருந்து சிறிதளவு பெற்றுக் கொண்டு, பெருமளவு திருப்பிக் கொடுக்கின்றன. மனிதனோ சமுதாயத்திலிருந்து பெருமளவு பெற்றுக் கொள்கிறான்; சிறிதளவு திருப்பித்தரக்கூட, விருப்பங் கொள்ளாது வெட்கப்படுகின்றான். அப்படி ஏதேனும் கொஞ்சம் கொடுக்கத் தயாரானாலும் கொடுக்கும் அளவிற்கதிகமான பாராட்டை அவன் பெற விரும்பும் நிலையைப் பார்க்கிறோம். சமுதாயத்திற்கு நிரம்பக் கொடுக்க வேண்டும். அதுதான் சிறந்த சமுதாயப் பண்பு; தூய அன்புடையவர்களின் இலட்சியம்.

கங்கை ஆடிலென்?

அப்பரடிகள் பல ஆரவாரச் செயல்களை, போலிச் சடங்குகளைத் தம் பாடல்களில் சற்றுக் கடுமையாகவே சாடிச் சொல்கிறார்.

கங்கை ஆடிலென்?
காவிரி ஆடிலென்?
பொங்கு தண்கும
ரித்துறை ஆடிலென்?
ஓங்குமா கடல்
ஒதநீர் ஆடிலென்?
எங்கும் ஈசன்
எனாதவர்க் கில்லையே!

என்று கேட்கிறார். நீ கங்கையில் போய் நீராடி வந்திருந்தாலும் காவிரியில் போய் நீராடி வந்திருந்தாலும் என்ன பயன்? எங்கும் ஈசன் இருக்கிறான் - எவ்வுயிர்க்குள்ளும் ஈசன் உறைகிறான் என்பதை நீ உணரவேண்டும்! உயிர்களிடத்து அன்பு செய்தல்வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஓவியத்தை உதாசீனப்படுத்திவிட்டு, ஒதுக்கித் தள்ளி விட்டு, ஓவியனைப் பாராட்டுவதில் என்ன பொருள் இருக்கிறது? இப்படிச் செய்வதால் ஓவியனைத் திருப்தி படுத்திவிட முடியுமா? கவிதையைக் கழிவுக் கூடையில் போட்டுவிட்டுக் கவிஞனைப் பாராட்டுவதில் என்ன பொருள் இருக்கிறது? அப்படிச் செய்வதால் கவிஞன் திருப்தி அடைந்து விடுவானா? படைப்புக்கு நாம் வழங்குகிற பாராட்டுக்கள் தாம் ஓவியனுக்கும் கவிஞனுக்கும் நாம் செய்கிற சிறப்பு.

குழந்தைக்கு நாம் அளிக்கிற பாராட்டுத்தான் அக்குழந்தையின் தாய்க்கு நாம் செய்கின்ற சிறப்பு. இதுதான் உலக இயல்பு. ஆனால் நமது சமுதாயத்தில் இன்று நடப்ப்தென்ன? இறைவனுக்கு எல்லா வகையான சிறப்புக்களும் செய்கின்றோம். ஆனால் இறைவனின் உடைமையாக - உறைவிடமாக, இறைவனை உணர்த்தும் பிரதிபிம்பமாக - நிழற்படமாக இருக்கின்ற மனித சமுதாயத்தை - மனித உயிர்களை - மனித குலத்தைப் புழுதியிலே புரள விட்டுட்டு, சாக்கடையிலே மிதக்கும் புழுக்களைப் போலத் துடிக்க விட்டுட்டு மனித குலத்தின் அப்பனாக - அம்மையாக - அன்புடைய மாமனும் மாமியுமாக - ஒண்பொருளுமாக விளங்குகிற இறைவனை எப்படித் திருப்திப்படுத்த முடியும்? சிறப்புச் செய்யமுடியும்?

கையூட்டுக் கேட்பவரா கடவுள்?

கடவுளைச் சிலர் பயங்கரப் பொருளாக்கிவிட்டார்கள். இறைவனிடத்துப் பக்தியும் பரிவும் கொள்ளவேண்டும். கடவுளைக் கும்பிடாவிட்டால் நரகம் கிடைக்கும் என்று அச்சுறுத்துகின்றார்கள். கடவுளைக் கும்பிட்டவனுக்கு மோட்சமும், கடவுளைக் கும்பிடாதவனுக்கு நரகமும் கிடைக்கும் என்றால் கடவுள் இலஞ்சம் வாங்குபவரா? கடவுளை நாம் புகழ்ந்து பாடும் பாடல்களைப் புகழ் உரைகளை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, கடவுள் மோட்சம் அருளுவார் என்று எண்ணுவது தவறு; அது நடக்கவே நடக்காது. இறைவனுக்கு நமது மன நெகிழ்ச்சியும் மனத் தூய்மையும்தான் தேவை. இவற்றை உண்டாக்கிக் கொள்ளத் தோத்திரப் பாடல்களையும் பிறவற்றையும் சாதனங்களாக வைத்துக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

கங்கை ஆற்றில் மீன் எப்போதும்தான் கிடக்கிறது. காவிரியில் தவளை எப்போதும்தான் இருக்கிறது. அவற்றிற்கு ஞானம் வருகிறதா? கிடையாதே! ஏன்? அவற்றிற்குச் சிந்தனை கிடையாது. இந்த உலகத்தை நாம் போற்ற வேண்டும்; இந்த உலக மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். அதுதான் சிறந்த வழிபாடு.

பஞ்சம் நீங்கப் படிக்காசு வேண்டுமா?

இன்றும் பலர் மூட்டை கட்டிக் கொண்டு காசிக்குப் போவார்கள். ஆனால் சுற்றுப் புறத்திலே - தெரு மருங்கிலே - வாழப் பிறந்தும் வாழ வகையின்றி அவதிப்படுகின்ற காட்சியைக் கண்ணிருந்தும் காண மறுக்கிறார்கள்! விழியிருந்தும் குருடர்களாகிறார்கள்! காசிக்குப் போவதில் தவறில்லை. ஆனால் தங்கள் கொல்லைப் புறத்திலே ‘குய்யோ முறையோ’ என்று எழும் கூக்குரலைக் கேட்கமாட்டார்கள். தெருப்பக்கத்திலே எழும் அழுகுரலைக் கேட்கமாட்டார்கள்! அண்மையில் நடைபெற்ற உலக மாநாட்டில் வெளியான ஒரு செய்தி, மத உலகத்திற்கே ஓர் அறைகூவலாக இருக்கிறது. அது, கிறிஸ்துவ மதமாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய மதமாக இருந்தாலும் சரி தான். அந்த அறைகூவல் உலக மதங்கள் அனைத்திற்கும் பொதுவே! “நாள் ஒன்றுக்கு உலகில் 10 ஆயிரம் பேர் உணவின்றிச் சாகிறார்கள்” என்று அந்த மாநாட்டில் கூறப்பெற்றது. அப்படியானால் “இம்மையே தரும் சோறும் கூறையும்”, “அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை” என்ற பாடல்கள் நடைமுறைக்கு வருவது எந்த நாள்? ஒன்று நடைமுறைக்கு வந்துவிட்டால் அதை மெய்யென்று கூறுகிறோம்; நடைமுறைக்கு வராத போது பொய்யென்றும் கற்பனையென்றும் கூறுகிறோம். ஏன், பழைய சமய இலக்கியங்களை - வரலாறுகளை நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடாது? அன்று திருவீழிமிழலையில் அப்பரடிகள் இறைவனிடம் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கினார். பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்குச் சோறு போட்டார். அதை இந்த 20-ம் நூற்றாண்டில் ஏன் செய்யக்கூடாது என்றால், “அன்று இறைவன் படிக்காசு கொடுத்தார். இன்றும் அப்படிக் கொடுத்தால் பஞ்சம் நீங்கத் தொண்டு செய்யலாம்” என்று சிலர் சொல்கிறார்கள்.

அன்று, அப்பரடிகளுக்குப் படிக்காசு கொடுக்கின்ற நிலையில் இறைவன் இருந்தான். வாங்குகின்ற நிலையில் அப்பரடிகள் இருந்தார். செப்பால் அடித்த ஒரு காசுகூட அப்பரடிகளிடம் இல்லை. அவர், தம் உடைமைகள் என்று சிவபெருமானின் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் பற்றாதவர்.

அப்பரடிகளுக்கு உலகில் எப்பொருளும் இல்லை. இறைவன் கொடுத்தார். அப்பரடிகளிடம் ஆண்டவன் பொருள் வைக்கவில்லை; ஆனால் அருள் வைத்தார். அப்பரடிகள் அவ்வருளால் பாடினார். வேண்டுங்காலத்து இறைவன் வலிய வந்து வேண்டும் பொருளையும் அருளினர். இப்போது செல்வர் பலரிடம் ஆண்டவன் பொருள் வைத்துள்ளார். அவர்கள் அப்பொருளைச் சமுதாயத்துக்கு ஈந்து ஆண்டவன் அருளைப் பெறுதல் வேண்டும். இதுவே அவர் தம் தலைக்கடன். இப்போது பெரும்பொருள் குவித்து வைத்திருப்பவர்கள், குவிந்துள்ள பொருளை என்ன செய்யலாம் என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

அப்படியிருக்க இறைவன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று சமயத்தின் பெயரால், ஆண்டவனின் பெயரால் குவிந்திருக்கும் பணத்தைப் பயன்படுத்திப் பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் இறைவன் கொடுக்கத்தான் செய்வார். இன்றைக்கும் நாம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுதரற்றி இறைவனைக் கூப்பிட்டால் அவர் ஏன் என்று கேட்கத்தான் செய்வார்! இறங்கி வந்து கருணை புரியத்தான் செய்வார்! தேவை ஏற்படும் போது உதவத்தான் செய்வார்! இந்த உண்மைகளை அப்பரடிகள் பாடல்களிற் காண்கிறோம்.

பெரும் பொருளாதாரப் புரட்சியை விரும்பிய காரல் மார்க்ஸ் போன்றவர்கள்கூடப் “பொருளைச் சேர்த்து வைத்திருப்பவன் கொடுக்கிறானா? இல்லையா? இல்லையென்றால் அடித்துப் பிடுங்கு!” என்றுதான் கூறினார்கள். அவ்வாறு அடித்துப் பிடுங்கினாலும் பிடுங்கின நேரத்தில்தான் வலியும் தொல்லையும் இருக்கும். ஆனால் ‘நீ கொடுத்து வாழாவிட்டால் இறைவன் உனக்கு நரகம் வைத்திருக்கிறார். அந்த நரகத்திற்குப் போய் நீ காலமெல்லாம் அவதிப்படாமல் இருக்க வேண்டுமானால் உன்னிடம் உள்ளதை ஒளிக்காமல் கொடு’ என்றார் அப்பரடிகள். இந்தப் பொருளாதாரச் சம வாய்ப்புச் சமுதாய நோக்கோடு - பொதுமை நோக்கோடு பேசுகின்றார் அப்பரடிகள்.

மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்

மூசு வண்டறைப்
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே!

என்பது அப்பர் வாக்கு.

ஆம், அவ்வளவும் பொதுமை. யாராவது சுவர், எழுப்ப முடியுமா? வேலி போட முடியுமா? மாசில்லாத வீணையின் இனிய ஒலியை, ஏழையும் கேட்டு அனுபவிக்கலாம்; செல்வனும் கேட்டு அனுபவிக்கலாம் செவிகள் மட்டும் செவிடாகாமல் இருந்தால்! மாலைக்கால மதியத்தின் அழகு — தண்ணொளி இன்பம், கோடீஸ்வரனுக்கும் குடிசையில் வாழ்வோனுக்கும் பொது — மனக்குறையில்லாதார் அனைவருக்கும் மாலை மதியம் இனிக்கும்; இன்பம் செய்யும். அதுபோலவே இறைவனின் தண்ணருளும் எல்லார்க்கும் பொது. அதை அனுபவிக்க மொழி வேறுபாடு கிடையாது; இனவேறுபாடு கிடையாது; மதவேறுபாடு கிடையாது. உள்ளம் மட்டும் கல்லாக — இரும்பாக இல்லாமல் உண்மையன்புடனிருக்க வேண்டும்.

இறைவனுடைய திருவடிகளும் இறைவனின் ஆக்கத்தினால் ஏற்பட்ட உலகியல் பொருள்களும் இங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவற்றை மக்கள் அனைவரும்கூடி அனுபவித்துப் பயன் பெறவேண்டும் என்ற சிறந்த தத்துவத்தை - சித்தாந்தத்தை நாம் ‘மாசில் வீணையும்’ என்ற அப்பரடிகளின் பாடல் வாயிலாக அறிகிறோம்.

மொழி ஒருமைப்பாடு

இன்று மொழி ஒருமைப்பாடு, இன ஒருமைப்பாடு என்றெல்லாம் பேசப் பெறுகிறது. இன்று மொழிச்சிக்கல் நமது நாட்டில் உச்சம் பெற்றிருக்கிறது. எனவே நாம் யாரும் ஆத்திர அவசர உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் அமைதியாக ஆழ்ந்து சிந்தனை செய்து பார்க்க வேண்டும். மனிதனுக்கு வாய் இருக்கிறதென்றால் அது, தன்னோடு தன் அண்ணன் தம்பிகளாக வாழ்கின்றவர்களோடு மட்டும் பேசிக் கொண்டிருக்க அல்ல. நம் வீட்டிற்குள் இருக்கும் காற்றை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவா நமது வீடுகளில் சன்னல் வைக்கிறோம்? வீட்டின் வெளியில் இருக்கும் ஆரோக்கியமான காற்றுப் போக்குவரத்தினால் ஆரோக்கியமான வாழ்வு அமைவது போல, ஒரு மனிதனுடைய தாய்மொழிப் பற்றும் பிற மொழி உறவும் சேர்ந்து மனிதனின் உள்ளத்தை வளர்க்கிறது; அவனை உலக மனிதனாக்குகிறது.

மரம் நன்றாக வளர்ந்து பூத்துக் காய்த்துப் பயன்தர வேண்டுமானால் மரத்திற்கும் மண்ணுக்கும் நல்ல உறவு இருக்க வேண்டும். மண்ணோடு மரத்திற்கு இருக்கிற தொடர்புதான் அந்த மரத்தைக் காக்கும்; வளர்க்கும். எனினும், அது மட்டும் போதாது; அந்த மரத்திற்கு விண்ணோடும் தொடர்பு வேண்டும். காற்று வேண்டும். கதிரொளி வேண்டும். ஆம் மண்ணிலிருந்து மட்டுமல்ல, வேறு பல சூழல்களிலிருந்தும் அதற்கு உணவு தேவைப்படுகிறது. இவ்வாறு, மண்ணோடும் விண்ணோடும் அந்த மரத்திற்கு உறவு இருந்தால்தான் அது வளர்ந்து வாழ்ந்து பசுமையாகச் செழித்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து பெரும் பயன் தரமுடியும். அதுபோலவே மனித இனம் விரிந்து பரந்து வாழவேண்டுமானால், உலகத் தொடர்பு கொண்டு உயர வேண்டுமானால், சிந்தனையால் செழுமையுற வேண்டுமானால் மனிதனுக்கும் தாய்மொழிப் பயிற்சியோடு பிற மொழி அறிவும் தேவை. இந்த இருபதாம் நூற்றாண்டினுக்கு இன்றியமையாததை நன்றாகப் பாடி இருக்கிறார் அப்பரடிகள்.

வடமொழியும் தென் தமிழும்
மறைகள் நான்கும் ஆனவன் காண்

என்று குறிப்பிடுகின்றார். அந்த ஏழாம் நூற்றாண்டில் ஆங்கிலம் இல்லை; ஆங்கிலத்தைப் பற்றிய பிரச்சனை இல்லை. எனவே ஆங்கலத்தைப் பற்றிப் பேசவும் இல்லை. ஆங்கிலம் இடைக்காலத்தேதான் வந்தது. இடைக்காலத்திலேயே போகவும் போகிறது. அதைக் கட்டி அழுவதாலே நமக்குப் பெரும் பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை. காரணம், ஆங்கிலத்தில் சிலரே பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

பாரதத்தில் ஏறத்தாழப் பத்து விழுக்காட்டினரே ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றிருப்பார்கள். அன்று - அந்த நூற்றாண்டில் நமது பாரத நாட்டை - இந்திய நாட்டை இணைத்த மொழிப் பாலங்கள் வடமொழியும், தமிழ் மொழியுமேயாகும்.

வடக்கே வாழ்ந்தவர்கள் அனைவரும் தமிழைப் பயில ஆரம்பித்தார்கள். தெற்கே இருந்தவர்கள் அனைவரும் வடமொழியைப் பயில ஆரம்பித்தார்கள். மொழி உறவு, மொழிப்பாலம் அமைந்தது. இதனையே இந்த மொழி ஒருமைப்பாட்டையே “வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்” என்று குறிப்பிட்டார் நமது அப்பரடிகள். ‘ஆரியமோடு தென் தமிழ்’ என்றார். இவ்விரு மொழிகளுக்குள்ளும் உறவு வளர வேண்டும்; கருத்துப் பரிமாற்றம் வேண்டும் என்ற கருத்தைப் பார்க்கிறோம். இது மொழி ஒருமைப்பாடு.

மனிதகுல ஒருமைப்பாடு

அடுத்து மனிதகுல ஒருமைப்பாடு பற்றியும் அப்பரடிகள் குறிப்பிட்டிருக்கிறார். இன்று, அணுகுண்டு யுகத்தில் உலக ஒருமைப்பாடு பற்றிப் பேசுகிறோம். அன்று, அப்பரடிகள் மனிதகுல ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார் என்றால் தலையிலே குண்டு விழும் என்ற அச்சத்தின் அடிப்படையிலே அன்று. நியாயத்தின் அடிப்படையிலே - இலட்சியத்தின் அடிப்படையிலேதான் அவர் மனிதகுல

கு.இ.VII.12. ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். ‘எல்லா உலகமும் ஆனாய் நீயே’ என்கிறார். எல்லா உலகத்திலும், உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒருமைப்பாடு நின்று நிலவ வேண்டும் என்றார். இன்று விரிந்த சிந்தனையுடையவன், பரந்த கருத்துடையவன் ஒருமைப்பாட்டை நினைத்துப் பார்க்கிறான். விரிந்து பரந்த உலகத்தோடு உறவு கொள்ளக் கைநீட்டுகிறான்.

அப்பரடிகள் காலத்தில், உலகத்தோடு உறவுகொள்ள நல்ல வசதிகள் இல்லாதிருந்த காலத்தில் ‘எல்லா உலகமும் ஆனாய் நீயே!’ என்று பாடினார், அப்பரடிகள். உலகத்திற்கெல்லாம் இறைவன் ஒருவனாய் நிற்கின்றான் என்ற சித்தாந்தப்படி இங்கு நாம் உலக ஒருமைப்பாட்டைப் பார்க்கிறோம்.

சமயவழி ஒருமைப்பாடு

இதற்கு அடுத்தபடியாகச் சமய ஒருமைப்பாடு. அந்தச் சமய ஒருமைப்பாட்டையும் நாம் அப்பரடிகளிடத்துக் காணலாம். “ஆறு சமயத்து அவரவரைத் தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன” என்றார். விரிவிலார் வேறொரு சமயம் சொன்னாரேனும் அதுவும் எம்பிரானுக்குப் பொருந்தும் என்று கூறுகிற அளவிற்குச் சமய ஒருமைப்பாடு இருந்தது. அப்பரடிகள் கூறிய மொழி ஒருமைப்பாடு, உலக ஒருமைப்பாடு, சமய ஒருமைப்பாடு மூன்றும் உலகில் நிலவுமானால் சண்டை ஏது? சச்சரவு ஏது? அமைதி தவிர வேறொன்றும் இருக்க முடியாது. அப்பரடிகள் கூறுவதுபோல ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை!’ இவ்வளவு சிறந்த ஒருமைப்பாட்டை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் வலியுறுத்தியும்கூட, இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட ஏன் வளரவில்லை? நம்மிடையே ஒருமைப்பாட்டுக்குறை எப்படி வந்தது? ஆழ்ந்து சிந்தித்தால் இதற்குக் காரணம் தெரியவரும். நம்முடைய பக்தி இயக்கம் உணர்ச்சியைத் தொடுவதாக மாறினால் சிறந்த ஒருமைப்பாடு விரைவில் மலரும் என்பதில் ஐயமில்லை.

எங்கே இறைவன்?

இதற்கு அடுத்தபடியாக, எங்கே இறைவன் இருக்கிறான்? அவனை எங்கே போய்த் தேடுவது என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அப்பரடிகள் பேசுகின்றார். அழகான ஓர் உவமை வாயிலாக இதனை அப்பரடிகள் விளக்குகின்றார்.

விறகுக் கடையிலே விறகைப் பார்க்கிறோம். அந்த விறகில் நெருப்புத் தெரிகிறதா? நெருப்புத் தெரியவில்லை. அதனாலேயே அதில் நெருப்பு இல்லை என்று கூறிவிட முடியுமா? விறகிற்குள், நெருப்பை உண்டாக்கும் சக்தி இருக்கிறது. பாலில் நெய் தெரிகிறதா? தெரியவில்லையே. அதனாலேயே பாலில் நெய் இல்லை என்று கூறிவிட முடியுமா? விறகில் தீ மறைந்திருப்பது போல, பாலில் நெய் மறைந்திருப்பது போல மாமணிச் சோதியனான இறைவன் எங்கும் மறைந்திருக்கிறான். ஒன்றோடொன்று சேரக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்யைக் காண்பது போல உறவுக்கோல் நட்டு உணர்வென்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக் காண முடியும் என்கிறார் அப்பரடிகள்.

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே!

என்கிறார். “உறவுக்கோல் நட்டு” என்கிறார். இப்போது கடவுளை நெடுந்தொலைவிலே வைத்திருக்கிறோம். குருக்கள் கடவுளா? கோயில் கடவுளா? என்ற மயக்கம் பலருக்கு இருக்கிறது. அப்பரடிகள் “உறவுக்கோல் நட்டு” என்று கூறுகிறார்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய் என்நெஞ்சம் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் துநீ
இறைவன்நீ ஏறூரர்ந்த செல்வன் நீயே!

இப்பாடலின் வாயிலாக அன்பின் படிமுறை வளர்ச்சியை அப்பரடிகள் நமக்கு உணர்த்துகிறார். அப்பாவிடத்திலே இருக்கிற அன்பைவிட அம்மாவிடத்திலே அன்பு கொஞ்சம் அதிகம்தான். அதன் பிறகு மாமியார், மாமனார் உறவு வருகிறது.

அன்புடைய மாமனும் மாமியும் என்று பேசுகின்றார். அன்பின் பரிணாம வளர்ச்சியை அப்பரடிகள் மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

தாய்மொழி வழிபாடு

இந்தப் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடிய அப்பரடிகள் இறைவனையே உறவாகப் பார்க்கிறார். கடவுளைக் கடவுளாகப் பார்த்து, ஆடிக்கொருதரம் கும்பிடுவதால் பயனில்லை. கடவுள் உறவு இருக்க வேண்டும்; உடைமைப் பொருளாக இருக்கவேண்டும். இப்படி கருதுதற்குரிய உணர்வு நமது சொந்தச் சிந்தனையில் ஊறி வளர வேண்டும். பிற்காலத்தில் கடவுள் பக்தி அப்படி ஊற்றெடுக்கும் அளவிற்கு இல்லாமற் போயிற்று. அதற்கான உணர்வு வற்றிப் போய்விட்டது. கோயிலுக்குப் போனால் குருக்கள் கையில் இருக்கிற மணி ஒலிக்கிறது; பக்தர்கள் மனத்திலே நெகிழ்ச்சியில்லை; சுயசிந்தனை ஓட்டம் இல்லை. இதற்காகத்தான் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென்று நாம் வலியுறுத்துகிறோம். தாய்மொழிச் சிந்தனை மனிதனைப் பிரிப்பதன்று. உலகில் வாழும் மற்றவர்களோடு நாம் பழக, வேறு மொழிகளையும் கற்கவேண்டும். ஆனாலும் தாய் மொழிச் சிந்தனையிலிருந்து விலகக்கூடாது. தாய்மொழிச் சிந்தனைதான் உணர்வைப் பெருக்கும்; உணர்வைச் சுரப்பிக்கும்! இதனால்தான் நாம் தாய்மொழியில் வழிபாடு வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். இது தவிர நமக்குப் பிற மொழிகளிடத்து வெறுப்போ, காழ்ப்போ துளியும் இல்லை.

கைம்மாறு கருதாக் கடப்பாடு

அடுத்து, தொண்டின் நெறி நின்று தொண்டின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார் அப்பரடிகள். “தொண்டு செய்! தொண்டு செய்வதே மனிதனின் வாழ்க்கை! தொண்டலால் உயிருக்கு ஊதியமில்லை!” என்றார் அப்பரடிகள். உடம்பிற்கு ஊதியம் பணம், காசு, பொருள் முதலியன. உயிருக்கு ஊதியம் தொண்டு ஒன்றுதான். தொண்டு செய்வதாலே மனிதன் உயர்கிறான்; அவனுடைய உள்ளீடு சிறக்கிறது. எனவேதான் “தொண்டு செய்! தொண்டோடு பக்தி செய்!” என்றார்.

நாம் நடக்குபோது வலக்காலை வைத்தவுடன் இடக் காலை யோசித்தா எடுத்து வைக்கிறோம்? நாம் நடந்து செல்லவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டதும் எப்படி வலக்காலும் இடக்காலும் மாறி, மாறித் தொடர்ந்து இயல்பாக வைக்கப் பெறுகின்றனவோ அப்படியே வாழ்க்கையில் தொண்டும் பக்தியும் மாறி மாறி இயல்பாகவே நடைபெற வேண்டும். ஒரு கால் தொண்டு, இன்னொரு கால் பக்தி. இரண்டு கால்களாலும் நடக்கின்ற மனிதன் எப்படித் தனது நடைப் பயணத்தை இன்பமாகச் சிறப்பாக முடிக்கின்றானோ, அப்படியே தொண்டையும், பக்தியையும் வாழ்க்கைக் குறிக்கோள்களாகக் கொண்டு வாழுகிற மனிதன், தன் வாழ்க்கையை இன்பகரமாக நடத்த முடியும். அவன் வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகத் திகழும். இந்த உண்மையை மிக நன்றாக உணர்ந்தே நமது அப்பரடிகள் தொண்டின் வடிவமாகத் தொண்டின் செல்வராகத் திகழ்ந்தார். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றார்.

இன்று பணி செய்வதிலும்கூடப் பலர், பலாபலன்களைக் கணக்கிட்டே செய்கின்றனர். “பணி செய்ய வேண்டும், பலனை எதிர்பார்க்கக் கூடாது.” என்றார் அப்பரடிகள். இத்தகு உயர்ந்த கொள்கைகள் பலவற்றை அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே வலியுறுத்திச் சென்றிருக்கிறார். நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் நாம் எவ்வெவற்றையெல்லாம் புதிய சிந்தனைகள் என்று எண்ணுகிறோமோ அவற்றையெல்லாம் ஏழாம் நூற்றாண்டில் இந்த நாட்டில் தோன்றிய அப்பரடிகள் மிக மிக அழகாக, ஆணித்தரமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகள் காண விரும்பிய சாதிகுல பேதமற்ற, பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற, எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் பெற்று வாழ்கிற, அன்பாலே மக்கள் குலம் இணைந்து வாழ்கிற, தொண்டின் வழிப்பட்ட புதிய சமுதாயம் காணும் முயற்சியில் ஈடுபடு வோமாக!

2. அன்பில்லையேல்...!

இன்று நம் நாட்டில் கடவுள் நம்பிக்கையுண்டு; வழிபாட்டு வெளிப்பாடும் உண்டு; திருக்கோயில்கள் சூழ்தலும் உண்டு; திருநீறு அணிதலும் உண்டு; ஆறுகாலப் பூசைகளுமுண்டு; விழாக்களும் உண்டு; வேடிக்கைகளும் உண்டு; “அருச்சனைகள்” உண்டு; அமுது படையல்கள் உண்டு; இன்னும் என்னென்னவோ உண்டு. இவ்வளவும் இருந்தும் நாம் ஏன் கடவுளைக் காணவில்லை? கடவுள் காண முடியாத பொருளா? கடவுள் என்ன கற்பனையா? அல்லது பொய்யா? புனைந்துரையா? கடவுள் நம்பிக்கை யில்லாதவர்கள், “கடவுள் இல்லை, அதனால் காண முடியாது” என்பர். கடவுள் உண்டா? இல்லையா? என்ற வழக்கை நடத்துவதற்கு இன்றைய தமிழர்கள் தகுதியுடையவர்களல்லர். அண்டங்களில் ஒன்றாகிய மதியினையே இப்பொழுதுதான் மாந்தன் பார்க்கத் தொடங்குகிறான்; அமெரிக்க மாந்தனும் உருசிய மாந்தனும் இதில் போட்டியிட்டுக் கொண்டு முயற்சி செய்கிறான்.

அண்டங்களில் ஒன்றாகிய மதியைக் கண்டுபிடிக்கவே இத்தனை நாளாயினவென்றால் “அப்பாலுக்கப்பாலாய்” என்று பாடப்பெற்ற பரம் பொருளை, உண்டா? இல்லையா? என்று ஆய்வதற்குரிய அறிவெல்லையை நாம் இன்னும் அணுகக்கூட இல்லை. ஆதலால், கடவுள் உண்டு என்று நம்புவதே இப்போதைக்கேற்ற அறம். ஆனால், ஏன் நம்மால், உள்ள கடவுளைக் காணமுடியவில்லை? கடவுள் ஏன் நம்மைக் கண்டு ஒளிந்து கொள்கிறார்.

நாம் கடவுளையும் ஏமாற்றுவதில் வல்லவர்கள். கடவுள் நம்மிடத்தில் எதை விரும்புகிறாரோ, நாம் அதைத் தருவதில்லை. கடவுள் நம்மிடத்தில் நம்முடைய நெஞ்சத்தில் ஓரிடம், ஒண்டுக் குடித்தனம் செய்ய விரும்புகிறார்; மாறாத அன்பை வேண்டுகிறார். நாமோ அவருக்கு இவற்றைக் கொடுக்க அணியமாய் இல்லை. அதற்கு மாறாகத் தேங்காய்களைக் கொடுக்கிறோம்; பழங்களைக் கொடுக்கிறோம். ஏன்? சிலர் முடியையே கொடுக்கிறார்கள். கடவுள் விருப்பத்தை வழங்காத வல்லாள கண்டர்கள் நாமே! இன்னும் சிலர் திருத்துறை, திருக்குளங்களில் நீராடுவதில் வல்லவர்கள்! கங்கை என்றும் காவிரி என்றும் சுற்றித்திரிந்து மூழ்கிக் குளித்து மகிழ்கின்றனர். ஆனாலும் அவர்களிற் பலர், சராசரி மக்களாகக்கூட விளங்காமையைப் பார்க்கிறோம். நறுநீரால் (தீர்த்தத்தால்) இவர்களுக்குப் பயன் விளைந்ததோ இல்லையோ, இவர்களால் நறுநீர் கெட்டது என்னவோ உண்மை. இவர்களை ஆட்சி செய்யும் விலங் குணர்ச்சியிலிருந்து இவர்கள் விடுதலை பெறவில்லை. திருத்துறைகளில் மூழ்கி எழுந்திருப்பதால் திருவருட்பேறு பெற்று விடுவதென்றால் நீர் வாழ்வன அனைத்துமே பெற்றுவிடுமே! நண்டும் தவளையும் நாயகன் அருள் பெற்றிருக்கவேண்டுமே! அப்பரடிகள், வினாவிற்கேற்ற விடை தருகிறார். அப்பரடிகள், சமயத்தைப் பருவுடல் வாழ்க்கையில் மட்டும் கொண்டவரல்லர்: உயர்ந்த பட்டறிவில் திளைத்தவர். அவர் வாழ்ந்த மெய்யறிஞர்; புரட்சியிற் பூத்த புதுமலர்; புதுமணம் வீசிய நறுமலர்; அருள் மணங்கமழ்ந்த திருமலர்.

தண்ணீர் இயல்பாக ஓடும் தன்மையுடையது. எங்கும் கெட்டியான அடைப்பிருந்தாலன்றித் தண்ணீர் தேங்காது. உருண்டு ஓடுதல் அதன் இயற்கை. இங்ஙனம் ஓடும் தண்ணீரை ஓட்டைக் குடத்தில் இரண்டு கைகளால் அள்ளிச் சேர்த்து மூடி வைப்பது முடிந்த காரியமோ? தண்ணீரைக் கைகளால் அள்ளிப் பானையில் சேர்ப்பதற்கு முன்பே பாதி போய்விடும். பானையோ ஓட்டை! பானையில் விழுந்த தண்ணீரும் அடுத்த கைத் தண்ணீர் வருவதற்கு முன்பு ஓடிவிடும். இந்த நிலைமையில் ஓட்டைப் பானைக்குள் தண்ணீரை வைத்து எப்படி மூடுவது? வெறும் பானையைத் தண்ணீர் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு மூடினால்தான்! அப்படி மூடி வைப்பதால் என்ன பயன்? என்ற இரக்கத்திற்குரிய வினாவை அப்பரடிகள் வினவுகிறார். அதுபோல ஓரிடத்திலும் நிலைபெறாது உருண்டு ஓடும் மனம். இந்த மனம் தங்கியிருக்கின்ற குடமாகிய உடம்பைத் திருத்துறைகளில் குளிப்பாட்டித் திருவருள் கிடைத்ததாக நம்பி வாழ்வது ஓட்டைக் குடத்தில் ஓடும் நீரினை அடைத்து வைத்த முட்டாளின் செயலோடு ஒக்கும்.

இறைவனைக் கோடி துறைகளில் குளித்தாடுவதால் மட்டும் காண முடியாது; நெஞ்சு கலந்த அன்பினாலேயே காண முடியும். “ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்” என்றும், “அருச்சனை வயலில் அன்பு வித்திட்டு” என்றும் மாணிக்கவாசகர் பேசுகின்றார். “ஐயன் ஐயாறனார்க்கு அன்பலால் பொருளில்லை” என்பர் அப்பரடிகளும். ஆதலால், இறைவனின் திருவருளைப் பெற அன்பே வழி; வேறு வழிகள் இறுதிப் பயனைத் தரா.

கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே

என்பது அப்பரடிகளின் திருப்பாடல்.

3. புழுவிற் கடைமனிதன்

மனிதப் பிறப்பு மிகமிக உயர்ந்தது. உயிரினம் அனைத்துக்கும் மனிதனே நாயகன். ஆண்டவனுக்கு அடுத்து அணியார் சிறப்புடையது மனித இனமேயாகும். ஏன்? ஆண்டவனையேகூட, வளர்ந்த மனிதர்கள் ஏவல் கொள்வார்கள். இத்தகு சிறந்த மனித இனம் இன்று தாழ்ந்து கிடக்கும் நிலையினை எண்ணினால் வேதனை பெருகுகிறது. ஏன்? எதனால்?

மனிதனை, மனித இயல்புகளை ஆராய்வதில் அப்பரடிகளுக்கு இணை யாரோ? அப்பரடிகள் இந்த ஆய்வின் முடிவுகளைப் பிறர்மீது ஏற்றிக்கூற மாட்டார். “பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு” என்பது வள்ளுவமன்றோ? எந்தக் குறையினையும் தம்மீது ஏற்றியே பாடும் இயல்பு குணக்குன்றனைய அப்பரடிகளுக்கு உண்டு. குற்றமிலராய் வாழ்தல் சிறப்பு. ஆயினும் குற்றம் வந்திடுமோ என்று அஞ்சி, அஞ்சி அறநெறியில் நின்றிடுதல் அதனினும் சிறப்பு.

உயிரினங்கள் அனைத்திற்கும் பசி உண்டு. பசியைத் தணித்துக் கொள்ள உணவினை நாடி முயலும் முயற்சி எல்லா உயிர்களுக்கும் உண்டு. உண்டு மகிழ்தலும் உண்டு; உறங்கிக் கழித்தலும் உண்டு; இன்ப துன்பங்களைச் சார்ந்து மகிழ்தலும் நோதலும் உண்டு. இவையனைத்தும் மிகுதிப்படுவது தீமையென்றாலும் உயிரின் இயற்கையாகும். இவை உயிரியல் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவும் ஆகும். இதனால், இந்தக் குணங்களால் வேறு இனத்திற்குக் கேடொன்றுமில்லை. மனிதனோ, இவைகளோடு மட்டுமில்லாமல் மற்ற உயிரினத்திடத்தில்லாத ஒரு பெரிய தீமையைப் பெற்றிருக்கிறான். அதுதான் பொல்லாங்கு பேசுதலும், பொல்லாங்கு செய்தலும் ஆகும். எந்தவொரு விலங்கும் வலிய மேற்சென்று யாருக்கும் தீங்கு செய்வதில்லை. மனிதனோ விலங்கிலிருந்து உயர்ந்து விளங்கிக் காட்சி தரவேண்டியவன். அணைத்து அள்ளித் தூக்கமுடியாத அளவுக்கு ஆசாபாசக் கடலில் வீழ்த்தி விடுகிறான்.

ஒரு சாதாரணப் புழு, உடலைப் பேணுவதில் மனிதனைப் போலவே அதிக அக்கறை காட்டுகிறது. ஆனால் அப்புழு பொல்லாங்கு பேசுவதில்லை; பொல்லாங்கு செய்வதில்லை! சிவனடியார் திருக்கூட்டம் என்பது பழுத்த மனத்தடியார் கூட்டமாகும். அவர்கள் நன்றுடையவனையே கருதுவார்கள்: அல்லன கருதார். செம்மணச் சான்றோராக விளங்கித் தம் மகவெனப் பல்லுயிரையும் ஒப்பப் பார்த்து, பரிந்தோம்பிக் காப்பவர்கள். இத்தகு அடியார்கள் குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக, புண்ணியத்தின் புண்ணியமாக விளங்கும் சிவபெருமானின் அடியார்கள். இவர்கள் உயிரால் தனித்து, இறைவனுடன் ஒன்றித்து வாழ்பவர்கள். ஆயினும், சீலத்தின் சார்பால் கூடி வாழ்பவர்கள். அவர்களுடைய கூட்டத்தைப் ‘புனிதர் பேரவை’ என்று சேக்கிழார் பாராட்டுவார். தூய்மையில் தூய்மையே புனிதம். தூய்மையில் தூய்மையின்மை ஒரோவழி காணலாம். ஆனால், புனிதத்தில் தூய்மையின்மை ஊழி பெயரினும் காண முடியாது. “ஊழி பெயரினும் தாம் பெயரார்” என்பது வள்ளுவம். இத்தகு சிறந்த சிவனடியார் கூட்டத்திற்குள் தனக்கு இடம் கிடைக்குமோ? என்று அப்பரடிகள் ஐயப்படுகிறார்.

புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளனபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே

என்பது அப்பர் திருப்பாடல்.

சிவம், பண்பு, இனிமை இவற்றிற்கு முரண்பாடு தீமை. அதாவது பொல்லாங்கு - தீயன எண்ணுவோர், செய்வோர் சார்வோர், சிவநெறியைச் சார்ந்தவராகக் கருதப்படமாட்டார்கள். அவர்களுக்குச் சிவன் எம்பிரானிடத்தில் இடமில்லை. ஏன்? அவனுடைய அடியார்கள் கூட்டதிலுங்கூட இடம் கிடைக்காது. சிவநெறி நாளும் நன்மை பெருகு அருள்நெறி இயக்கமாகும். இஃது அப்பரடிகளின் ஆணை.

4. நெஞ்சமும் ஊசலும்

மனித வாழ்வின் மையம் நெஞ்சமேயாம். நெஞ்சத்தின் இயல்பே மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளமாகிறது. நெஞ்சு நிலையான தன்மையுடையதன்று, அதற்கென்று தொழில் தன்மை உண்டே தவிர, குணத்தன்மை கிடையாது. நெஞ்சிற்குக் குணங்களாகிய சிறப்பை, மனிதன் தன்னுடைய அறிவறிந்த ஆள்வினையால் ஆக்கித்தரக் கடமைப் பட்டிருக்கின்றான். நெஞ்சிற்கு மெல்லியல்புகளை மனிதன் தந்து, நெஞ்சின் வழி இயங்குகின்ற பொறிபுலன்களாலே பயன் அடைய வேண்டும். அதனால்தான் நெஞ்சை இரந்து கேட்கிறார் திருஞானசம்பந்தர், நல்லவண்ணம் இருந்து துணை செய்யும்படியாக!

நெஞ்சத்தின் தொழில் - இயல்பு சுவைத்தலாகும்; ஆனால், அலையும் இயல்புடையதுமாகும். அது ஒன்றை நன்றென்று கருதி ஏற்றுச் சுவைக்கும். உடனடியாகவே, “சீச்சி, இது நன்றன்று” என்று பிறிதொன்றினை நாடும். நாடிப் பிடித்து நன்றென்று சுவைக்கும். பின் “சீச்சீ, இது நன்றன்று; முந்தியதே நன்று” என்று மீண்டும் போய்ச் சுவைக்கும். சில சமயங்களில் “இதுவா? அதுவா?” என்று விரைந்த முடிவுக்கு வரமுடியாமல் இடையிலும் நின்று அலையும். இதுவே நெஞ்சத்திற்குரிய தொழில்.

மனிதன் தன்னுடைய அறிவின் திறன் கொண்டு நலம்தரும் சுவையைத் தேர்ந்து அதனை நெஞ்சு துய்க்கும் படி செய்யவேண்டும். நெஞ்சு துய்ப்பதற்கே உரிய ஒன்று. அதற்குரிய அனுபவத்தை நாம் தேர்ந்து தேர்ந்து தெளிந்து வழங்கத் தவறிவிட்டாலும், அது தன் முயற்சியில் தன்னிச்சையாகத் துய்த்தற்குரிய பொருளைத் தேடி அலைகிறது. அதுபோதே அவலம் தொடருகிறது. நாள்தோறும், நாழிகைதோறும் தூய அன்பு, தொண்டு, நல்வழிபாடு ஆகியவற்றில் நெஞ்சத்தை ஈடுபடுத்தித் துய்க்கச் செய்தல் வேண்டும். அதற்கு அறிவறிந்த ஆள்வினை தேவை. அஃது அற்றவர்கள், நெஞ்சத்தைத் தன் போக்கில் விடுகிறார்கள். அது முன்னர்ச் சொன்னது போல் ஒன்றைவிட்டு ஒன்றுபற்றி நிறைவான துய்ப்புக் கிடைக்காமல் எய்த்து அலைகிறது; சோர்வடைகிறது; துன்பத்தின் கொள்கலன் ஆகிறது. நெஞ்சுக்கு உற்ற அனைத்து அவலங்களையும் மனிதனின் ஆன்மாவும் அடைய வேண்டியதிருக்கிறது. ஏன்? உடம்பும் பொறி புலன்களும்கூட, அல்லற்பட வேண்டியதிருக்கிறது. இங்ஙனம் அவையும் நெஞ்சத்தை ஊஞ்சலுக்கு உவமை காட்டுகிறார் அப்பரடிகள், ஊஞ்சல், மரத்தில் கட்டப் பெற்றிருக்கிறது. உயிரியல், வாழ்க்கையென்ற மரத்திற் கட்டப் பெற்றிருக்கிறது. ஊசற்பலகையை மரத்தோடு இணைப்பன இரண்டு கயிறுகள். உயிரை வாழ்க்கையோடு இணைப்பன ஆசை, பாசம் என்ற கயிறுகள். ஊஞ்சல் புறப்பட்ட இடத்திலிருந்து முன்னே செல்லும்; பின்பு புறப்பட்ட இடத்திற்கு வரும்; திரும்ப ஏகும், வரும்; இடை உலவும். இந்த ஊஞ்சலின் இயக்கத்தோடு நெஞ்சை உவமித்தது சிந்தனைக்குரிய விருந்து.

உறுகயி றூசல்போல் ஒன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூரசலானே னதிகை வீரட்டனீரே!

என்பது பாடல்.

“ஊசல் பூத்த உளம்” என்று பிரபுலிங்கலீலை பேசுகிறது. ஒன்றுவிட்டு ஒன்றுபற்றி வந்துலவும் நெஞ்சத்திற்குக் கயிறூசல் ஒப்பு. முதன் முறையாகத் தன் நிலையை விட்டுச் சென்று பிறிதோரிடத்தைப் பற்றுவது ‘உறுகயிறு சல்’. பற்றிய அவ்விடத்தை விட்டு மீண்டு, தொடங்கிய நிலைப்பக்கம் வருவது மயிகயிறூசல்; அந்நிலையை விட்டு மற்றொரு பக்கம் சென்று பற்றுவதும் அதைவிட்டு மீள்வதும் அவ்விரண்டு ஊசலேயாகும். இடையில் வந்து உலவும்பொழுது வாசற் கயிறு முறுக்கு அவிழ்தல் உண்டு. முறுக்கு ஏறுதல் உண்டு.

“உறுகயிறுாசல்” ஆகும் பொழுது கயிறு முறுக்கேறியும், திரும்ப மறுகயிறுாசல் ஆகும் பொழுது முறுக்கவிழ்ந்தும் ஒருவழிப்படாமல் பிறர் வழிகளில் கயிறு இயக்கப்படுவதால் கயிற்றின் வலிமை தளர்ந்து தாங்கி நிற்கும் இயல்பை இழந்து “அறுகயிறூசல்” ஆகிறது. அது போல அவா மிகுதியினால் நாடி நரம்புகளில் முறுக்கேறி ஒன்றை நாடியும் அதனை அடைந்தும் அடையாமலும் அவலப்படும் வழி அவா என்ற பாசக்கயிறு தளர்ந்து அறுகிறது. ஊஞ்சற் கயிறு அறுந்தால் தரை தாங்குதல் போல, ஆன்மாவைப் பற்றி அலைக்கும் அவா பாசக் கயிறு அறுந்தால் ஆன்மாவைத் தாங்கும் தரை இறைவன் திருவடிகளேயாகும்.

ஊஞ்சல் தன்மை உடையதாக இருக்கும் நெஞ்சத்தை மாற்றி நிலைமாறச்செய்ய வேண்டுமென்றால் தாங்கித் திருவருள் சுரக்கும் திருவடிகளை நினைத்து வாழ்த்துதலே வழி; இதனையே ‘நிலைபெறுமா றெண்ணுதியேல்’ என்ற திருப்பாடலில், அடிகள் விளக்கி அருளுகிறார்.

5. முயல் விட்டுக் காக்கையின் போனவாறே!

அப்பரடிகள் இறைவன் கருணையை நினைந்து, நெஞ்சு நெகிழப் பாடுபவர். உயிர் அருவப்பொருள். அதற்கு ஓர் உருவத்தைத் தந்து உலகிடை அனுப்பித் துய்ப்பன துய்த்து, மகிழ்வன மகிழ்ந்து—குறை நீங்கி நிறைநலம் பெறச் செய்யும், அவன் கருணையே கருணை. இதனை,

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய் திட்டு
என்னையோ ருருவமாக்கி,

என்று பாடுகிறார். உருவமாக்கிய இந்தப் பணிக்கு ஈடாக எதனைக் கூறமுடியும்? இந்த உருவத்தினை முதலாகக் கொண்டுதானே மனிதன் வளர்கிறான்; வரலாறு படைக்கிறான்; உலகில் வேறு எந்த அறிவியல் படைப்பையும் விட இந்த மானுட யாக்கையின் படைப்பு அதிநுட்பமானது. அறிவியல் தன்மையுடையது. இந்த உடல் உயிர்க்கூட்டின் பயன், உயிரை இன்புறுத்தலேயாம். இறைவன் திருவுள்ளம் இன்புறுத்தலேயாம். ஆயினும் உயிர் பெற்றுள்ள சிற்றறிவு அடங்கவா செய்கிறது? அது தன்னிச்சையிலேயே ஆட்டம் போடுகிறது! அறிவுப் பொருளைத் திருத்திச் சீராக்குதல் எளிய காரியமன்று. அறிவற்ற சடப்பொருள் எளிதில் பக்குவப்படும். அறிவு நாடகமாடும் நடிக்கும்; உணர்ந்தது போல் காட்டிப் பின் தன்னெறியே மேற்கொள்ளும்; இன்பத்தைத் துன்பமாகக் கருதும்; துன்பத்தை இன்பமாகக் கருதும்; அடக்கினாலும் சிலநாள் அடங்கும். வாய்ப்பு வந்துழி மிஞ்சும். இத்தனை இக்கட்டான நிலையில் உயிருக்கு அறிவு கொளுத்தியே-அதனை அறியச் செய்தே பக்குவப்படுத்த வேண்டியதிருக்கிறது; அடிமைப்படுத்தவும் முடியாது. இன்பத்திற்கு எதிர் துன்பம். துன்பத்திற்குக் காரணம் அறியாமை. அறியாமையினால் செய்த செயல்களின் விளைவுகள் வினை! நோய் நீங்குகிறவரை உணவு சுவைக்காது என்பதுபோல, வினை நீக்கம் பெறும்வரையில் நிறைநல இன்பத்தையும் துய்க்க முடியாது. ஆதலால்,

முன்பிருந்த வினை தீர்த்திட்டு

என்கிறார்! தீமை நீங்கினால் போதாது; நன்மை விளங்கிட வேண்டும். இதனை வள்ளுவமும்,

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்று கூறுகிறது. அருணகிரியாரும்,

“பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்,” என்று கூறுகிறார். தீமைக்குக் காரணமாகிய அறியாமை நீங்கியவுடன் அறிவு ஆங்கு விளங்கவேண்டும். இறைவன் உயிரிடத்து விளங்கிய முன்னை வினை வாசனை நீங்கிய பிறகு, அந்த உயிரின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு குடியிருந்தருளுகின்றான்.”

அறியாமையில் உயிர் கிடக்கும்பொழுது உடலினுள் இருக்கும் உயிரும், மாற்றாரும் அறிய முடியாவண்ணம் நின்றருள் செய்யும் இறைவன், வினை நீக்கத்துக்குப் பிறகு பலரும் காணும் திருக்கோயிலென்ன, உயிரிடத்து விளக்கமுற வீற்றிருக்கின்றான். இறைவன், உள்ளத்து இடங்கொண்டமையின் காரணமாக அன்பு ஊற்றுக்கண் திறக்கிறது; உயிரிடத்து ஆற்றல் மிக்க அன்பைத் தூண்டுகிறது; இந்த நிலையில் ‘அன்பும் சிவமும்’ ஒன்றென்ற குரல் எழும்புகிறது. அன்பினாலாவது இன்பமே, அன்பினாலல்லது வன்பினால் ஆவது எப்பொழுதும் இன்பமன்று. அஃது ஒரு சேறு. அன்பு இன்புறுத்துகிறது. அன்பு பெருகி இன்பத்தில் திளைக்கும் பொழுது மேலேது? கீழேது? உயிர், இன்புறுத்தும் பொருளிடத்தும் அடிமையாகிறது. இஃது அறிவியல் அடிமை; உணர்வின்பாற்பட்ட அடிமை. இத்தகைய இறைவன் திருவருளை நினைந்து வாழ முடியாமல் பிற தெய்வங்களை வணங்குவதும், பிற நெறிகளைச் சார்வதும் வேடிக்கையாக இருக்கிறது! அப்பரடிகளே தம் வரலாற்றினை நினைந்து வியந்து பாடுகிறார். முயல், நாட்டில் திரிவது, அதனால் அதைப் பிடிப்பது சுலபம். எளிதில் பிடிக்கக்கூடிய முயலைப் பிடிக்காமல் விட்டுவிட்டு எளிதிற் பிடித்தற்கியலாத காக்கையைப் பிடிக்கக் காக்கையின் பின்னே ஓடித்திரியும் செயலை நினைவுபடுத்துகிறார். காக்கையோ வானில் பறக்கிறது. மனிதனுக்கோ பறக்கும் சக்தியில்லை, எங்ஙனம் பிடிக்க முடியும்?

கையிலிருக்கும் முயலை விட்டுவிட்டுக் காக்கையைப் பிடிக்கப்போவதாகவும் பொருள் கொள்ளலாம். முயல் சிவநெறி; நாம் பிறந்த நெறி, எளிதில் அமைந்த நெறி; இன்றமிழ் நெறி; ஆரத்துய்த்து மகிழத் துணை செய்யும் தூநெறி; இனிய நெறி, எளிய நெறி. இந்நெறிகளில் பிறந்திருந்தும் இந்நெறி நின்று வாழாது பிற நெறிகளைத் தேடியலைவதும் தாயிற்சிறந்த தயாவுடைய நம் சிவன் தாளினைத் தொழாது வேறு தெய்வங்களைத் தேடியலைவதும் காக்கையின் பின் ஓடுவதை யொக்கும்.

இனிய பாடல்! பாடிப் பயிலுக!

                                                
                                                என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
                                                        டென்னையோ ருருவ மாக்கி
                                                இன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்ந்திட்
                                                        டென்னுள்ளங் கோயி லாக்கி
                                                அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண்
                                                        டருள்செய்த வாரு ரர்தம்
                                                முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
                                                       காக்கையின் போன வாறே.

                                      (அப்பர் தேவாரம்–நான்காந் திருமுறை திருவாரூர்: பழமொழி)

6. காயும் கனியும்

இந்த உலகிடைப் பல சமய நெறிகள் நின்று நிலவுகின்றன. இச்சமய நெறிகள் அனைத்தும் இலட்சிய நோக்கால் ஒருமைப்பாடுடையனவேயாம். ஆயினும் இலட்சியத்தைப் பற்றிய அறிவிலும் தெளிவிலும், அந்த இலட்சியத்தை அடைதற்குரிய நெறிமுறைகளிலும் வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் இயல்பாய அறிவு அனுபவக் கூறுகளின் அடிப்படையிலேயே தோன்றுவன. இவ்வேறுபாடுகள் சிந்தனையுடையார்க்கு மகிழ்வையே தரும்; வெறுப்பினை விளைவிக்கா.

உயிர்களின் மேம்பாடு என்ற அடிப்படையில் சமய நெறிகள் ஒன்றுபட்டாலும் தத்துவ அடிப்படையில் மாறுபடுகின்றன. இம்மாறுபாடுகள் தத்துவக் கூர்தல் வழி தோன்றுவன. தமிழினத்தின் தனி நெறியாகிய சித்தாந்தச் சிவநெறி முழுதுற வளர்ந்த நெறியாகும். சித்தாந்தம் என்ற சொல்லுக்கே முடிந்த முடிபு என்பது பொருள். சித்தாந்தச் சிவநெறியில் இறைவன் கருணை நிறைந்தவனாக - தாயிற் சிறந்த தயாவுடைய தண்ணளியுடையோனாகப் போற்றப் படுகின்றான். திருநீறு உயிர்களுக்குக் கவசம், வினை நீக்கிப் பாதுகாப்புத் தரவல்லது. திருக்கோவையார் அருளிச் செய்த மாணிக்கவாசகர், குழந்தையின் நோய்க்குத் தாய் மருந்துண்பதைப் போன்று இறைவன் தன்னைத் தொழுது எழும் உயிர்களின் “வினை வலம் நீறெழத் திருநீறணி அம்பலவன்” என்று ஆண்டவனைப் பாராட்டினார். இந்த அனுபவத்தைக் கண்டு சுவைத்தற்கேற்றவாறு கூறுபவர் நமது அப்பரடிகள். இறைவன், “மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான்” என்று இதயம் குளிரப் பாடுகின்றார். அவன்றன் திருவடியைத் தொழுதால் நோன்பின்றி - வருத்தமின்றி இறைவனே நம்மை வலிய ஏற்றுக் கொள்வான். அதனுடைய அடையாளமே அவன் வெண்ணிறு சண்ணித்த மேனியனாக இருப்பது. அவனைத் தொழாது உறிதுக்கித் திரிந்து உடலையும் உயிரையும் வருத்திக் கொள்வதால் பயன் என்ன? உடலையும் உயிரையும் வருந்துகின்ற நோன்புகளால் உயிர் உய்தி பெறலாம் என்று கூறும் சமய நெறிகள் காய் அனையவே.

பெரும்பாலும் காய்கள் சுவையாக இருப்பதில்லை. காய்களை எளிதில் பெறவும் முடியாது; அடித்துப் பறிக்க வேண்டும். காய்களைத் தின்று அனுபவிப்பதிலும் தொல்லை அதிகம். காய்கள் எளிதில் செரிக்கா; ஆண்டில் இளையர் உண்ண முடியாது; பிறிதொரு சுவையூட்டாமலும் உண்ண முடியாது; செரித்த பின்பும் காய்களால் பெறப்படும் உடற்பயன் மிகமிகக் குறைவு. அதுபோலவேதான் நோன்பு களால் உடலை வருத்தும் சமய நெறிகளைச் சார்ந்து நிற்பதும் எளிதன்று. அவை உடலையும் உயிரையும் வருத்துவன: விளையும் பயனும் தெளிவானதன்று. கனி, எளிதில் கிடைப்பது, வலியக் கிடைப்பது; தொட்டால் சாறு கிடைக்கும்; ஆண்டில் இளையவரும் உண்ணலாம்; முதியவரும் உண்ணலாம்; தானே கனிந்ததானமையால் சுவை முற்றியது; சுவையூட்டத் தேவையில்லை; சுவைத்தலும் இனிது; தின்று மகிழ்தலும் இனிது; எளிதில் செரிக்கும்; முழுவதும் உடலுக்குப் பயன்தரும். சித்தாந்தச் சிவநெறி கனிச்சாறு அணையது. “ஒரும் வேதாந்தம் என்று உச்சியிற் பழுத்த, ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுதருந்தினர்” என்பது குமர குருபரர் வாக்கு சிவன், விரதங்களெல்லாம் மாண்ட மனத்தவன்; பழத்திடைச் சுவையொப்பவன்; கனியும் கனிதரு சுவையும் ஒத்தவன், “ஈசன் எனுங்கனி” என்பர் அப்பரடிகள். காய் காவலுடையது; கனியாகும் வரையில் காவலுண்டு. காயாகப் பறித்துத் தின்ன வேண்டுமென்றால் களவாகக் கல்லெறிந்து பறித்திடுதல் வேண்டும்; கனி காவலற்றது. கனி பறித்தற் குரியதுமன்று. அதுபோலவே காய் அனைய சமயங்களில் நிற்பவர்களுக்குப் பொறிகள் காவலும் புலன்கள் காவலும் வேண்டும். சிவநெறியின் கொள்கை வாழ்க்கை மகிழுதலுக் குரியது என்பதாகும். இறைவனே “பொன்னும் மெய்ப்பொருளும் தந்து துய்க்கச் செய்வான்; “ஒப்புடைய மாதராய்” நின்று துய்க்கச் செய்வான். அனுபவத்திற்குத் தடையில்லாத இடத்தில் காவலும் கிடையாது; களவும் வாராது. சிவநெறி காவலற்ற நெறி; அனுபவ நெறி. இந்நெறியல்லாது வேறு நெறிகளில் நின்றொழுகுதல் கணியிருக்கக் காய் கவர்ந்ததையொக்கும். “கனியிருக்கக் காய் கவர்ந்தது” என்பது மிகவும் சுவையானது. சிவநெறியில் பிறந்திருந்தும் சமணத்திற்குச் சென்று திரிந்ததை அடிகள் அழகாகக் குறிப்பிடுகிறார். இதனை,

மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி
யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்

கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
        மயிலாலும் ஆரூ ராரைக்,
கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக்
        காய்கவர்ந்த கள்வ னேனே,

என்ற அப்பர் திருப்பாட்டு உணர்த்தும்.

7. இருட்டறையில் மலருகறந்து எய்த்தவாறு...!


சமயநெறிகள் உலகிடைப் பலப்பலவாய்த் தோன்றி விரிந்துள்ளன. குறிக்கோள் அடிப்படையில், அதாவது உயிர்கள் உய்திபெறு நிலைபேறாய இன்பத்தில் திளைக்க வேண்டும் என்ற நோக்கில், சமய நெறிகளுக்குள் முரண் பாடுகள் இல்லை; மோதுதலும் இல்லை. ஆயினும் உயிர், உலகு, கடவுள், பிறப்பு, இறப்பு ஆகிய உண்மைகளைப் பற்றிய அறிவில் சமய நெறிகள் முரண்பட்டே பேசுகின்றன. இந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. காலம், பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பது இயற்கையேயாம்.

ஆதலால், சமய ஒருமைப்பாட்டுணர்வைப் பேணிப் பாதுகாப்பதோடு பல்வேறு சமய நெறிகளையும் கற்றுத் தெளிந்து நின்று ஒழுகி அனுபவமும் பெற்று, எந்த நெறியில் அதிகத் தெளிவும் உறுதியும் இருக்கின்றனவோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுவது மனித உலகத்தின் கடமை யாகும். இங்ஙனம் எடுத்துக் கொள்ளக் கூடிய தகுதி பெறாத வர்களை விரிவிலார் என்று அப்பரடிகள் கண்டிக்கிறார். இன்று, சமய நெறியினர் பல்துறையையும் ஆராயும் துணிவின்றித் தேங்கியே நிற்கின்றனர். மக்களைச் சிந்திக்கத் தூண்டாமல் பழக்க வழக்க வலையிற் சிக்கவைத்து ஆதிக்கம் செய்யவே சமய நெறியாளர்களும் விரும்புகின்றனர். சமய அனுபவம் சிந்தையில் தோன்றித் தெளிவடைய வேண்டிய ஒன்று. அதற்குரிய வாய்ப்பைச் சமயவுலகம் வழங்க மறுத்தால், மனித உலகம் உணர்வும் அனுபவமுமற்ற ஒரு கண்மூடித்தனமான சமய பழக்கவழக்கங்களிலேயே நிற்கும். இதனால் சமய நெறிக்கும் சிறப்பில்லை; மனித உலகத்திற்கும் பயன் இல்லை.

அப்பரடிகள் சமண சமயத்தில் தொடக்க காலத்தில் நின்று ஒழுகியவர். அந்நெறி அவருடைய அறிவுப் பசிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவரது அனுபவ உணர்வுக்கும் அது களமாக அமையவில்லை. சமண சமயம் அறிவையும் அனுபவத்தையும் வளர்ப்பதற்குப்பதில் உலகியலை விரித்துப் பேசி ஒடுங்கச் சொல்லிற்று. ஒன்றை விரித்துப் பேசுதலே ஒடுங்குவதற்குத் துணை செய்யாது. அதோடு, ஒடுங்குதலால் உயிர் ஒருபொழுதும் உய்தி பெற முடியாது. மாறாக ஒழுகுதலால் உயிர் உய்தி பெற முடியும். ஒழுகுதல் புலன்களை நல்லன சுவைக்கப் பழக்கப்படுத்திப் பக்குவப்படுத்துதல். இதனைத் திருமூலர் 'மடைமாற்றுதல்’ என்பார். அதாவது வீணே போகும் தண்ணிரை மடை மாற்றிக் கழனியிற் பாய்ச்சுதலைப் போலத் தற்சார்பான ஆசைகளில் செல்லும் புலன் நுகர்வை இறையருளில் மடை மாற்றி ஈடுபடுத்துதல் ஆகும்.

ஓடுதலும் திரிதலும் சமணர் இயல்பு. அதாவது ஓரிடத்தில் இருந்தாலே பற்று வந்துவிடுமாம். அதனால் இடம் விட்டு இடம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். இங்ஙனம் ஒடுவதால் பற்று இல்லாமல் போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. பற்று, மற்றவர் காட்சிக்குப் புலனாகும் வண்ணம் வெளிப்படுதற்கு வேண்டுமானால் வாய்ப்பில்லை எனலாம். பற்று ஒட்டிக் கொண்டேயிருக்கும். ஓரிடத்திலிருந்தே பற்றின்றி இருப்பதுதான் உண்மையில் முற்றிலும் பற்று விடுதற்குச் சாதகமாகும். தாமரையிலை, தண்ணிருக்குள்தான் கிடக்கிறது. ஆனால், தண்ணிர் அதில் ஒட்டாது. புளியம்பழம் ஓட்டுக்குள்ளிருந்தாலும் ஓட்டுக்கும் பழத்துக்கும் உறவு இருக்காது. அதுபோல் ஒன்றில் நின்று பற்றின்றி வாழ்தலே சிறப்பு. இதுவே, சிவநெறியின் இயல்பு. இங்ஙனம், வாழ்க்கையோடியைந்து வராத சமண சமயத்தில் நின்று அலைந்து திரிந்து எய்த்தலை அப்பரடிகள் இனிய உவமையால் விளக்குகின்றார்.

இருட்டறை! ஒளியில்லை! அந்த அறையில் ஒரு மலட்டுப் பசு! அதனைப் பால் கறந்து எய்த்த காட்சியை அப்பரடிகள் உவமையாக்குகின்றார். இருட்டறையில் பசு இருப்பதையே காண முடியாது. அதுபோல் உயிரின் தன்னறிவும், இறைவனின் பேரறிவும் இணைந்து செயற் பட்டாலன்றி ஞானத்தைக் காண முடியாது. பசுவோ மலட்டுப்பசு! அதாவது, அனுபவத்திற்கு வராத சமயம் என்பது கருத்து. கறந்து எய்த்தல்-சமண சமயத்தினின்று அலுத்ததை நினைவூட்டுகிறது; இங்ஙனம், கிடந்து எய்த்த அப்பரடிகளுக்கு இறைவன் உறுதி காட்டி உய்ய ஆட் கொண்டதை அப்பரடிகள் அழகு தமிழில் பாடுகின்றார்.

            பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு
                    தலையோடே திரிதர் வேனை
            ஒப்போட வோதுவித்தென் னுள்ளத்தி
                   னுள்ளிருந்தங் குறுதி காட்டி
            அப்போதைக் கப்போது மடியவர்கட்
                  காரமுதா மாரு ராரை
            எப்போதும் நினையாதே யிருட்டறையின்
                  மலடுகறந் தெய்த்த வாறே

என்பது அப்பர் திருப்பாடல்.
8. பாழுரில் பிச்சை

பிச்சையெடுத்து வாழ்வது வையகத்தின் இயற்கையன்று. “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்” என்ற திருக்குறளில் திருவள்ளுவர் “இரந்தும்” என உம்மை கொடுத்து அழுத்தியதே இரந்து வாழும் வாழ்க்கை, நெறி பிறழ்ந்தது - நியதி கடந்தது என்பதை அறிவுறுத்தவேயாம். ஒரோவழி, இயற்கைச் சூழலால் எளியராகிய வழி, இரந்தும் வாழவேண்டிய இன்னாத சூழல் ஏற்பட்டுவிடின், அந்த இன்னாமையை ஓரளவாவது இனியதாக்கிக் கொள்ள வேண்டாமா? அது மட்டுமின்றி நெறி கடந்த இரப்பினை, நெறியுடையதாக்கிக் கொள்ள வேண்டாமா? அதனால் இரப்பினையும் நெறியாக்கிக் கொள்கிற இனிய வழி வகையைக் கண்டு காட்டியது வள்ளுவம். இதனை,

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று,

என்ற திருக்குறளால் அறியலாம். அதாவது இரப்போர்க்கு கரவாது உவந்து ஈவார்கண்ணே இரத்தல் குற்றமன்று. அவரிடத்து இரத்தலும் ஈதலே போலும் என்றும் வள்ளுவம் கூறுகிறது. அஃதெங்ஙனம் இரத்தல், நெறியாக முடியும்? ஈதலாக முடியும்? இரப்பார்க்கு உவந்து ஈயாது கரப்பார் மாட்டு இரத்தல் மூலம் இரப்பவர்க்கு இழிவு வருகிறது; ஏமாற்றம் ஏற்படுகிறது; வறுமையும் அழிந்த பாடில்லை. அதே போழ்து தன்னை நோக்கி இரந்தவர்க்கு ஈயாது கரந்தவனுக்கும் இழிவு வருகிறது; இரந்தும் இல்லையென்று கூறியதால் பாவம் ஏற்படுகிறது. கரவாது உவந்து ஈவார்கண் இரந்து கேட்பதன் மூலம், இழிவு தோன்றுவதில்லை, பயனும் கிடைக்கிறது; வறுமையும் நீங்குகிறது. அதோடு ஈவான் உவந்து ஈதலின் மூலம் அவனுக்கு மகிழ்வு கிடைக்கிறது; ஈத்துவக்கும் இன்பம் கிடைக்கிறது; ஈவானுக்கு இரப்பானின் மூலம் அறம் செய்த புண்ணியம் கிடைக்கிறது. ஆதலால், கரவாது ஈவார்கண் இரப்பது முற்றிலும் தவறன்று.

ஆனால், அப்பரடிகள் பாழூரில் பிச்சையெடுத்து அல்லற்படும் அவலத்தை எடுத்துக் கூறி விளக்குகின்றார். ஊரோ பாழூர்! ஆங்கு பொருள்வளம் இல்லை! உருவத்தால் மனிதர்கள் வாழுகிறார்கள்! உள்ளத்தால் கொடிய விலங்குகள் அனையர் வாழுகிறார்கள்! ஆங்கு ஆள் வினையும் இல்லை; ஒயாது உழைத்திடும் இயல்பும் இல்லை; உறுபொருள் ஈட்டுதலும் இல்லை; அன்பும் இல்லை; ஆர்வமும் இல்லை; இடிந்த வீடுகள்; ஓட்டைக் கூரைகள்! ஒட்டிய வயிறுகள்! ஒளியிழந்த கண்கள்! கபடு நிறைந்த கன்றிய நெஞ்சங்கள்! விரோத மனப்பான்மையுடன் வீண்வம்பு விளைவித்திடும் நரியனையார்! அழுக்காற்றுப் பிண்டங்கள் இன்னும் எப்படி எப்படியோ கூறலாம்! "பாழ்" என்ற சொல்லில் அனைத்தும் அடங்கும். பாழ்பட்ட பொருள், தான் பயன்படாததோடன்றிப் பிறிதொன்றையும் பயன் பயன்படாதபடி தடுக்கும். இத்தகு பாழூரில் பிச்சையெடுக்கப் போகும் மனிதனின் பேதமையை என்னென்பது? பிச்சை போடுவார் யார்? பல ஊர்களில் கெட்டவர்களாகப் பலர் இருந்தாலும், சிலராவது நல்லவர்களாக வாழ்வார்கள். அத்தகு ஊரில் ஒருவரிடம் இல்லையானாலும் பிறிதொருவரிடம் வாங்கலாம். ஆனால், அப்பரடிகள் காட்டும் ஊர் பாழூர்! ஆங்கு வாழும் அனைத்து மனிதரும் பாழ்! அந்த ஊரில் ஆசை மிகுதியால் பிச்சையெடுக்கப் புகுந்து அலைந்தவன் அடையும் அவலம் கொடிது! கொடிது! அதுபோல் தொழுதகைத் துன்பம் துடைத்திடவும் இருளகற்றி இன்பம் வழங்கிடவும் தந்தையாய், தாயாய், இன்னுயிர்த் தோழனாய் துணை நின்று தண்ணளி செய்து அருளாரமுதத்தை வாரி வழங்கி இன்புறுத்தும் தலைவனாம் ஈசனில்லாத சமண் சமயத்தின் அனுபவம் அப்பரடிகளுக்குப் ‘பாழூரை நினைவுபடுத்தியிருக்கிறது. “யாரொடு நோகேன்; யார்க்கெடுத் துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால்?” என்ற மணிமொழியைப் போல எய்ப்பினில் சேமவைப்பாகப் பயன்படும் சிவனெம்பிரான் இல்லாத சமண நெறியில் யாரிடம் போய் எதைக் கேட்பது? வழங்குவார்தாம் யார்? அங்கு மாசில் வீணையின் நாதம்தான் ஏது? மாலை மதியத்தின் மகிழ்வு ஏது? வீசு தென்றல் ஏது? மலரிடை மணம் நுகர முடியுமா? யாதொன்றும் இல்லை! சூன்யம்! எங்கும் வறட்சி! இன்பமே நிறைந்த உலகைத் துன்ப நரகாக்கிடும் பொல்லாத விரத நெறி வாய் படைத்தவனைத் துய்க்கச் செய்யாமல் அழிக்கும் நெறியன்றோ?

அப்பரடிகள் சிவநெறியில் பிறந்தவர்; உய்யும் நெறி நாடியவர். உறிதூக்கிச் சமண் நெறியில் புகுந்தார்! தேடினார்! தேடினார்! ஆனால், ஆங்குத் தேவர்கோ அறியாத தேவ தேவனைக் காணோம். “என்று வந்தாய்” எனும் இனிய சாயல் காட்டித் தண்ணளி செய்து சுவையமுதுாட்டி வாழ்வித்திடும் வள்ளல் சிவபெருமான் இல்லை! அதனாலேயே சமண் நெறியைப் “பாழூர்” என்றும், யாருமில்லாத ஊரில் பிச்சையெடுக்கப் புகும் பேதைமையைக் காட்டியும் பெரு நெறியில் பிறந்தும் இச்சிறுநெறியில் புகுந்ததை நினைத்தும் பாடுகின்றார்! ஆவியை வீண் போக்காமல் அழகியதாக்கி, தமக்கு அணியென ஆக்கிக் கொண்ட ஆரூரானை நினைந்து நினைந்து நெஞ்சு நெகிழப் பாடுகின்றார் அப்பரடிகள்.

பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற
சமண் நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார் கண்டோடிக்
கதவடைக்கும் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை
யாட்கொண்ட வாரு ராரைப்
பாவியே னறியாதே பாழுரிற்
பயிக்கம்புக் கெய்த்த வாறே!

என்பது பாடல்.
9. எண்சாண் உடம்பில் இருக்கும் வாணிகர்!

இந்த உடம்பு எண்சாண் அளவினது; உயிர் உறைதற் கேற்ற இனிய குடியிருப்பு. உயிர் உடலில் குடியிருந்தாலும் வாடகைக் குடியிருப்பேயாம்; முற்றிலும் உரிமையுடைய தன்று. ஐம்பொறிகளும், உடலுக்கு நாயகராக விளங்கி உடலுக்குத் துன்பமே செய்கின்றன. நீதி நெறிக்கு மாறுபட்ட வாழ்க்கை முறைகளிலேயே பொறிகள் ஈடுபடுத்துகின்றன. இந்த ஐம்பொறிகளும் வணிகரைப் போல் வாணிகம் செய்கின்றன. அதிலும் நெறிவழிப்பட்ட வாணிகமன்று; தம் சுவை ஒன்றையே முன்னிலைப்படுத்தி முனைகின்றன; தாம் துய்த்தலிலேயே வேணவாக் காட்டுகின்றன. இந்தத் துய்ப்பின்மூலம், யாதொரு பயனும் உடலுக்கும் இல்லை; உயிருக்கும் இல்லை. முறைகேடான பொறிகளின் துய்ப்பாதலினால் உடல் நோய் வாய்ப்படவே செய்கின்றது. எளிதில் மூப்பும் முதுமையும் வந்தடைகின்றன. திறன் மிக்க அறிவும், ஆற்றல் நிறை உழைப்பும் மக்கி மறைந்து போகின்றன. வாழ்க்கையில் ஈடு இணையற்ற பேறாகிய புகழை இழப்பதோடன்றி இகழ்ச்சியும் வந்தடைகிறது. தம்மைக் கொண்டவர்க்கு, இல்லாத தீங்குகளைச் செய்து, தாம் சிறுபொழுது மகிழும் ஐம்பொறிகளின் வாணிகம், வாணிகமா? இல்லை, இல்லை, கொள்ளை! ஆனாலும் அப்பரடிகள் வாணிகமாகவே உருவகம் செய்கிறார். இந்த நீதியோடு படாத வாணிகத்தை ஐவர் செய்யத் துணை நிற்கின்றனர். ஏனைய உள்பொருள்களாகிய தத்துவங்கள் தொண்ணுற்றாறு. இந்த தொண்ணுற்றாறு தத்துவங்களும் தெளிந்த வாழ்க்கை வழங்குவதற்குப் பதில் மயங்குகின்றன.

இந்த மயக்கத்தின் காரணமாக உய்திக்குத் துணைசெய்யத் தவறிய இந்த உடம்பில் உயிர் தானே குடியிருப்ப தாகக் கருதி மயங்கி அறிவிழந்து பொறிகளின் ஆதிக்கத்திலிருக்கும் இந்த உடம்பைப் பேணிப் பாதுகாக்கின்றது. காலம் தவறாமல் உணவு வழங்கியும், நோய்க்கு மருந்து கொடுத்தும், இன்னும் என்னென்னவோ எடுபிடிகள் எடுத்தும் உடலைப் பேணத்தான் செய்கின்றோம். இந்த உடம்பின் மீது ஓர் ஈ, கொசு உட்காரத் தாங்கினோமோ, என்ன? அவ்வளவு பாதுகாப்பு! எனினும் இந்த வீடு காலி செய்யப் பட வேண்டிய ஒன்றே. நாமாகக் காலி செய்தாலும் பரவாயில்லை. நமக்கு உணர்வில்லாமலே மயங்கிய நிலையில், பேணிய உடம்பினின்று பெயர்ந்து நகர்கின்றோம். எங்கு நகர்வது? ஆயுட் கால முழுவதும் அண்டி இச்சை முகம் காட்டிச் சுரண்டிப் பிழைத்த பொறிகளாகிய வாணிகர்களையும் இப்பொழுது காணோம். தத்துவங்களும் மயங்கிக் கிடக்கின்றன. அதன் காரணமாக அறிவும் வேலை செய்யவில்லை; உணர்வும் வேலை செய்யவில்லை! நம்முடைய நிலை வலிவற்றுப் போயிற்று! உழைத்து ஊட்டி வளர்த்த பொறிகள் கைகொடுக்கவில்லை; மயக்கம் போடுகின்றன. எங்கும் இருள்! என்ன செய்வது நம்மால் ஒன்றும் ஆவதற்கில்லை! இறைவனுடைய கருணையே வலிய வந்து எடுத்தாள வேண்டியதிருக்கிறது.

திருக்கொண்டீச்சரத்து இறைவன் நம்மை எடுத்தாள் பவன். அவன் விண்ணுயர்ந்த நிற்கும் திருக்கோயிலை உடையவன். அவன் திருக்கோயிலின் உயரம், எடுத்தாளும் கருணைக்கு எடுத்துக்காட்டு. உலகின் எந்த திசையிலும் நின்று நிலவும் உயிர்களையும் வானுயர்ந்து நின்று அழைக்கும் அவனது கருணையின் சின்னமே, அணி செய்து நிற்கும் கோபுரம், அவன்றன் அழைப்பை அலட்சியம் செய்யக்கூடாது. அந்த அருளழைப்பை ஏற்று அவனுடைய திருவடியைச் சார்ந்து பீடுசால் பெருமை பெற்று வாழவேண்டும். அப்பொழுதும் பொறிகளுக்கு இழப்பில்லை. மாறாக நிறைதல் இன்பம் அவைகளுக்குக் கிடைக்கின்றன. நுகராத மணத்தை நுகரவும், காணாதன காணவும், கேளாதன கேட்கவும், வாய்ப்பு ஏற்படுகிறது. உலகியலைத் துய்க்கும் பொறிகள் அழிந்து போகின்றன. திருக்கொண்டீச்சரத்தான் திருவடியைத் துய்க்கும் பொறிகள், திருவருளைத் துய்க்கும் பொறிகளாகின்றன. ஆதலால், வறிதே பாழாகாமல் வாழ்வாங்கு வாழத் திருக்கொண்டீச்சரத்தான் திருவடிகளைப் பேணுவோம்.

சானிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிக ரைவர் தொண்ணூற் றறுவரு மயக்கஞ் செய்து
பேணிய பதியி னின்று பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே
                                                   - அப்பர்

10. எங்ஙனம் கூடுவது?

அப்பரடிகள், இறைவனைத் தெளிந்து கண்டு துய்த்த சிவஞானச் செல்வர். அவருடைய பாடல்கள் சிவஞானத் தெளிவு. அத்தகு அப்பரடிகளே, பல இடங்களில் எங்ஙனம் இறைவனைக் காண்போம்? என்று ஏங்கிப் பாடுகின்றார். உலகியலானாலும் சரி, அருளியலானாலும் சரி, இன்பம் தருகின்ற ஒன்று மேலும் அன்பினைப் பெருக்கி வளர்க்கும். உலகியல் காதலின்பமும் இத்தகையதே! அருளின்பம் அதனினும் ஆராத தன்மையுடையது! அதனாலன்றோ இறைவனை ’ஆரா அமுது’ என்று அருளாளர்கள் பாடிப் பரவுகின்றார்கள்! இங்ஙனம், சிவத்தில் திளைத்த சிந்தை யுடையோரே ஏங்கியும், அழுதும் பாட, இன்று அதன் நுழைவாயிலிற்கூட அடியெடுத்து வைக்காதவர்கள் ’காட்டு’ என்று கேட்கிறார்கள், பிறிதொருவர் ’காட்டுகிறேன்’ என்கிறார்! இஃதென்ன, விளையாட்டுப் பொருளா? அல்லது வேடிக்கைப் பொருளா? அல்லது சந்தையில் கொள்முதல் செய்யும் காய் கறியா? புற்றாக, மரமாக வடிவம் மாறும் வரையில் கொடுந்தவம் இயற்றியவர்களும் அல்லற்பட்டி ருக்கச் சாதாரண மனிதர்கள் கடவுளைக் காண்பது எங்ஙனம்?

நமது உள்ளத்தின் இயல்பு, எதையாவது ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பது. உள்ளத்தின் இத்தொழிலை ‘உள்குதல்’ என்பர். உள்ளத்தால் உள்ளவாறு நினைப்பவர் உள்ளத்தின் உணர்வாக இறைவன் விளங்குவான். இதனை,

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்

என்றும்,

நினைக்கும் நெஞ்சின் உள்ளார்

என்றும்,

நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்தும் ஆனாய்

என்றும் அப்பரடிகள் பல இடங்களில் பாடுவது சிந்திக்கத் தக்கது. பல்லவப் பேரரசன் கட்டிய கற்கோயிலைவிட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயில் இறைவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இறைவன் பூசலார் நாயனாரின் மனக்கோயிலுக்குத்தான் முதலிடம் தந்து குடி புகுந்தான். உள்ளத்தின் தொழிற்பாட்டில் விளையும் பண்பே உணர்வு, உணர்வற்றவர்களுக்கு, உள்ளம் இல்லை என்பதே பொருள். அப்படியே இருந்தாலும் அது இயங்கவில்லை என்பது தெளிவு. பெருமைக்குள் எல்லாம் தலை சிறந்தது உணர்வே. உள்ளம், இறைவனை உள்கிட, அவனே அந்த உள்குதலின் விளைவாகிய உணர்வாக வடிவம் பெற்று எழுந்தருள்கின்றான். இதுவே இறைவனை உள்ளத்தில் காண்பதற்குரிய இனிய எளிய வழி. -

உள்ளத்திற்கு இயல்பிலேயே ஒன்றினை விட்டுப் பிறிதொன்றினைப் பற்றும் இயல்பு உண்டு. அந்த இயல்பை மடை மாற்றி, உலகுக்கு ஒருவனாய் நிற்கின்ற இறைவனையே உள்கச் செய்து இறைவனை உணர்வு வடிவமாக்கி அவனை நினைந்து நினைந்து, உருகி உருகி, நெகிழ்ந்து நெகிழ்ந்து துய்த்தல் பேரறிவாளர்கள் இயல்பு. அப்பரடிகளே, “உணர்வு அவன் காண்” என்றும், “உணர்வாய் நின்ற திருவனே” என்றும், “உணர்வெலாம் ஆனானே” என்றும் “உற்றிருந்த உணர்வெலாம் ஆனானே’ என்றும், “ஊனாகி, உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி” என்றும் அருளியுள்ள அடிகள் உணரத்தக்கன. இங்ஙனம் உள்கி உணர்வாகிக் காணக் கூடிய இறைவனை அப்பரடிகளும் உள்கி உருகிக் காண ஆர்வம் காட்டுகிறார். ஒரு பொருளை நினைத்து உள்குதற்கு அந்தப் பொருளிடத்தில் பற்று வேண்டும். பற்றுகள் பலவும் தீது என்று பேசிய வள்ளுவர் இறைவனுடைய திருவடியைப் பற்றுதலை மட்டும் நன்றென்று காட்டிப் “பற்றுக’ என்றும் ஆற்றுப்படுத்தினார். -

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு,

என்று பேசுகிறது குறள்.

அப்பரடிகள் இறைவனை உள்கி அன்பின் மிகுதியினால், நினைந்து நினைந்து உருகுகிறார். அடிகள் தம் நெஞ்சத்தில் இறைவனை நினைந்த அன்பு ஊற்றெடுக்கிறது. அதன் காரணமாக அடிகள் உள்ளம் உருகுகிறது. அன்பின் பெருக்கமும் உள்ளத்தின் உருக்கமும் இறை காட்சிக்கு இன்றியமையாதன. ஆற்றல் மிக்க அன்பால் நெஞ்சுருகி நினைப்பதன் மூலம்தான் இறைவனைக் காண முடியும். இஃதன்றிக் கூர்ந்த பகுத்தறிவோ, வாதிடும் திறனோ, சாத்திரத் தொகுப்புகளோ சாட்சியங்களோ கூட இறை வனைக் காணத் துணை செய்ய முடியாது. ஏன்? இறைவனிடத்து அன்பும் உருக்கமும் இல்லாத தவமும் கூட இறைவனைக் காணத்துணை செய்யாது. அப்பரடிகள் நெஞ்சத்தில் அன்பு பெருக்கெடுத்து ஊறுகிறது; தன்னுாற்றாகத் தடைப்படாது பெருக்கெடுத்து ஊறுகிறது. இதனை,

                 உள்கினேன் நானும் காண்பான்
                                உருகினேன் ஊறி ஊறி

என்று அடிகள் குறிப்பிடுவதன் மூலம் உணரலாம். ஆயினும், “நின்னை அரியனாகக் கருதாது, எளியனாகக் கருதிப் போற்றுதல் ஒழிந்தேன்” என்றும் அடிகள் இரங்கிக் கூறுகின்றார். இங்ஙனம், இறைவனை எளியனாகக் கருதி இழந்துபடுதல் படிமுறையில் ஞான நெறிக்கு உயர்ந்தவர்களுக்கும் கூட நேரிடுகிறது என்றால், சாதாரண மனிதர்களின் நிலைமை என்ன ஆவது? இங்ஙனம் அல்லற்படுவோர் வாழ்க்கையை இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பின் உள்ளத்திற்கு உவமிக்கின்றார் அடிகள் பெருமான். உள்ளம் எறும்பென்று உவமிக்கப்படுகிறது. ஆம்! உள்ளம் எறும்பு போலச் சுறுசுறுப்பானதுதான். ஆனால், எறும்பின் சுறுசுறுப்பெல்லாம் வயிற்றுக்கு இரை தேடுவதிலே யாம். அதற்கு வேறு அலுவல் இல்லை. வயிற்றுக்கே இரை தேடி அலையும் எறும்பு இருதலைக் கொள்ளி மேலதானால் உணவு வேட்கையால் ஒட முனைகிறது. ஆனால் இரு முனைகளிலும் பற்றியெரியும் கொள்ளியோ அச்சுறுத்துகிறது. இங்ஙனம் உலகியல் வேட்கை பற்றி யெரியும் உள்ளத்தராக இருப்பவர்களால் இறைவனைக் காண முடியாது; அவனைக் கூட முடியாது என்பது அப்பர் அடிகள் கருத்து.

ஆதலால் தந்தம் ஈசன் எம்பெருமானை உள்ளத்தால் உள்கி, ஆற்றல் மிக்க அன்பால் நினைத்து அவனையே உணர்வாக்கி உருகி, கண்டு இன்புற முயல்வதே சமய வாழ்க்கை.

உள்ளுவார் உள்ளத்தானை உணர்வெனும் பெருமையானை
உள்கினேன் நானுங்காண்பான் உருகினேன் ஊறிஊறி
எள்கினேன் எந்தைபெம்மான் இருதலை மின்னுகின்ற
கொள்ளிமேல் எறும்பெனுள்ளம் எங்ஙனம் கூடுமாறே!

என்பது அப்பர் திருப்பாட்டு.
11. தடை செய்து ஆட்கொண்ட தண்ணளி!

அப்பரடிகளை இறைவன் நாடறியச் சூலை மூலம் ஆட்கொண்டார். இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற பிறகு அப்பரடிகள் இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து நாடு முழுதுமுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று, உருகிப்பாடி வழிபட்டு வருகின்றார். திருவருளின்பம் ஆராத் தன்மையது. ஆதலால், மேலும் மேலும் இன்பமுற வேட்டு நைந்து பாடுகின்றார். சிலபொழுது, இன்ப அன்பு மேலும் முறுகி வளரும் நோக்கத்துடன், இடையறவு படும்பொழுது துடிதுடிக்கும் உள்ளத்துடன் அழுது பாடுகின்றார்.

திருக்கச்சியேகம்பத் திருத்தலத்தில் அப்பரடிகளுக்கு இன்பத்தில் இடையறவு ஏற்பட்டிருக்கிறது என்று ஆங்கு அருளி செய்த பதிகத்தின் மூலம் உணர முடிகிறது. முதற்பாட்டிலேயே, “செய்ய வேண்டிய பணிகளிலிருந்து தவறினால், புளியம் விளாறினால், இறைவன் மோது விப்பான்” என்ற குறிப்பிற் பாடுகின்றார். “புளியம் விளாறினால், மோதுவித்த பின் உகந்தும் மகிழ்விப்பான்” என்றும் பாடுகின்றார்.

இந்தப் பதிகத்தில் இம்மாதிரி ஏராளமான செய்திகள் பேசப்படுகின்றன. உயிர்களிடத்தில் அன்பினைத் தழைக்கச் செய்து, அதனை நுகர்ந்து அனுபவிக்கும் இயல்பினன் இறைவன். சிறந்த அன்பு, தடைகளால்தான் தழைத்து வளரும். தரங்குறைந்த பெயரளவில் அன்பு என்று மினுக்குவது தடைகளால் தடைப்படும். ஆதலால், இறைவனும் உயிர்களிடத்தில் செயற்கையில் தடைகளைத் தோற்றுவித்துத் தடைகளைத் தாண்டி வளரும் அன்பினைத் தழைக்கச் செய்து வளர்க்கின்றான். இங்ஙனம் செய்யும் இயல்பினனாக இறைவன் இருப்பதை, நினைத்து பாடுவதால், அத்தகைய ஒரு தடைப்பட்ட உணர்ச்சி அப்பரடிகளுக்குக் கச்சியில் கால்கொண்டிருக்க வேண்டும்.

திருமால் நாள்தோறும் ஆயிரம் பூக்கள் கொண்டு அரனை அர்ச்சிக்கும் நோன்பேற்று, முறை வழுவாமல் செய்து வந்தார். ஒருநாள் திருமால் ஆயிரம் பூ எண்ணி எடுத்து வந்து அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் பொழுது, ஆயிரத்திற்கு ஒரு பூ குறைந்து விட்டது. இயல்பாகக் குறையவில்லை. சிவபெருமானே வேண்டுமென்று ஒரு பூவைக் குறையச் செய்து, மலர் குறைந்ததன் காரணமாகத் திருமால் மனங்கரைந்து அழுது, தனது கண் மலரை இடந்து மலரென இடத் தூண்டித் தடுத்தாட்கொண்டதை அப்பரடிகள் நினைத்து பாடுகிறார்.

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம் வைகல்வைகல்
நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே!

என்பது அப்பர் திருப்பாடல்.

தன்னை இறைவன் இனிதே ஆண்டுகொண்டான் என்றும் பின்னர் ஐம்பொறிகளுக்கு ஒற்றியாக வைத்தான் என்றும் கூறுகிறார். ’ஏன்று ஆண்டு கொண்டாய்’ என்பது மலக்கட்டு நிலையில் வாழ்ந்த போது, கருணையினால் ஆண்டு கொண்டு உய்தற்குரியவாறு முதற் பிறப்பு கொடுத் தமையைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். உய்தற்குரிய வண்ணம் உயிரை இறைவன் உடலொடு சேர்ப்பிக்கின்றான்.

உடலிடைத் தங்கிய உயிர், பொறிகளைக் கொண்டு ஆரத் துய்த்து, வேட்கை தணிந்துழி இறைவா இன்ப நிலையை எய்துகிறது. பொறிகளுக்கு உயிரிடத்தில் நிரந்தரமான செல்வாக்குமில்லை; உரிமையுமில்லை. உயிர்களுக்கும் பொறிகளுக்கும் உள்ள உறவு தற்காலிகமானதே.

அதனைத்தான் அடிகள், “ஐவருக்கு ஒற்றி வைத்தாய்” என்று பாடுகின்றார். ஒற்றி அனுபவம் பொறிகளுக்கு முழு உரிமையைத் தராது. பொருளுக்குரியவர் பொருளைக் கேட்கும்பொழுது பொருளைத் திரும்பத் தரவேண்டும். உயிருக்கு உரிய நாயகன் இறைவனே. உயிருக்கு உடையவனாகிய நாயகன் உயிர்களைப் பக்குவப்படுத்துவதற்காகப் பொறிகளிடத்தில் ஒற்றிவைக்கிறான். பின்னே, உரிய பொழுது மீட்டுக் கொள்கிறான்.

திருவாளன் திருநீறு, திலகவதியார் தர, சிவநெறிக்கு அடிகள் வருவதற்கு முன்பிருந்த நிலையை ஒற்றிக்காலமென அடிகள் பாடுகின்றார். பின், திருவதிகையில் ஆட்கொண்ட மையை ஐவரிடமிருந்து ஒற்றி மீட்டதாகப் பாடுகின்றார். இப்படி முன்னர்க் கட்டுண்ட நிலையில் கிடந்தபொழுது, ஆட்கொண்டு உடைமைக்காரனாகிப் பிறப்பருளி ஐவருக்கு ஒற்றி வைத்து ஒற்றி மீட்டுத் திருவதிகையில் ஆட் கொண்டமை நாடறியும். ஆதலால், உடையவனாக ஏற்றுக் கொண்டமையை இனி மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆதலால், அருள் புரிக என்று பாடுகின்றார்.

ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி
யல்லமென்னில்,
சான்றுகண் டாயில் வுலகமெல் லாந்தனி
யேயென்றெனை -
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை
யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய
சுடர்வண்ணனே!

என்பது அப்பர் பாடல்.
12. அஞ்சுவது யாதொன்றும் இல்லை!

மானிடராய்ப் பிறந்து வாழ்தல் அரிய பேறு; இனிய பேறு; எளிமையிற் கிடைக்கக் கூடிய ஒன்றன்று. அதனாலன்றோ, 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று ஆன்றோர் கூறினர். இந்த மானுட வாழ்க்கையின் பயனாவது, உயிர், அறிவு நலம் பெறுதல்; ஆன்ற அனுபவம் பெறுதல்; மூத்து முதிர்தல்; துன்பத் தொடக்கிலிருந்து விலகி இன்பச் சார்பாதல் ஆகியனவாகும். எங்ஙனம் உயிர் அறிவுபெறும்? குறைகள் நீங்கி நிறைவு பெறும்?

அறிவு எல்லையற்றது. அறிவுக்கோர் எல்லை அரனே யாம்; அதனாலன்றோ, வள்ளுவம் 'வாலறிவன்’ என்று இறைவனை வாழ்த்துகிறது. கடவுள் நம்பிக்கையுடையவர்கள், இயல்பில் முட்டாள்களாக இருக்க முடியாது. காலத்தின் கொடுமை, இடையில் கடவுட் சார்புடைய மதத் தலைவர்கள், புரோகிதர்கள் தங்கள் பணியைச் செய்யத் தவறியதால் அறிவு விளக்கம் இல்லாதவர்களும் கூட இன்று கடவுள் நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அது நம்பிக்கையே தவிர, வாழ்க்கையன்று. கடவுள் கொள்கையை நம்பி ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஆழமும் அகலமும் நிறைந்த அறிவின் முதிர்ச்சியிலே ஏற்படக் கூடியதாகும். உலகியலின் அமைதியினை ஆராய்ந்து அந்த ஆய்வின் முடிவாகவே, கடவுளைக் கண்டனர் நம்முடைய முன்னோர். கடவுள் நம்பிக்கையுடையோராக வாழ்தற்குப் பேரறிவு தேவை; விரிவான வாழ்க்கை அனுபவங்கள் தேவை. ஆதலால், அறிவின் உயர்மட்ட எல்லையாக விளங்கும் அரனை, எண்ணி வழிபடுதலின் மூலம், வாழ்க்கையில் உறவுபடுத்திக் கொள்ளுதலே அறிவு பெறுவதற்குரிய வழி.

இந்த முயற்சியிலே உலகியல் நுண்கலைகள் அனைத்தையும் ஆரத் துய்த்தறியும் வாய்ப்புகள் ஏற்படும். உலகியலைத் துறைதோறும் ஆராய்ந்து அவற்றின் இயல்புகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பாற்பட்டிருக்கும் கடவுளை அறிதலே, அறிவில் முதிர்ந்த ஞானம். இதனை விளக்கத்தான் போலும் பரப்பில் பெரிய திருக்கோயிலை எடுத்து வாயில்கள் பல அமைத்து அத்திருக்கோயிலினூடே பரப்பில் மிகச் சிறிய ஓரிடத்தில் கூர்ந்த கவனத்திற்குரியதாக எம்பெருமானை எழுந்தருளச் செய்தனர்! அறிவுப் புலன் ஆழமும் அகலமும் உடையதாக வளர்ந்து, பின் நுண்மாண் நுழைபுலமாக வளர வேண்டுமென்பதே வாழ்வியல் நியதி.

அறிவின் தெளிவில்லாத இடத்தில் கடவுட் சார்பு இருக்கும் என்பது நம்பமுடியாத ஒரு செய்தி. வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருக்கலாம். அதுவும் அச்சத்தின் பாற்பட்டதாகவோ, அல்லது வழக்கத்தின் பாற்பட்ட தாகவோ இருக்கலாம். கடவுட் சார்புடைய வாழ்க்கை அச்சத்திற்கு முரணானது. ஆங்கு அஞ்சாமையே நிலவும்.

“அஞ்சுவது யாதொன்றும் இல்லை” என்பது அப்பரடிகள் வாக்கு. ஆதலால், இந்த உடம்பு உயிர்க்குக் கிடைத்த ஒப்பற்ற கருவி. இக்கருவியை முறையாகப் பயன்படுத்தி உயிர் பயனடைதல் வேண்டும். உயிரடையக் கூடிய பயன்நிலை பேறுடையதாகவும், இன்பம் தருவதாகவும் இருக்க வேண்டும். அதற்குரிய ஒரே வழி, அறிவிற்கறிவாக விளங்கும் அரனை வழிபடுதலாகும். வழிபடுதலென்பது, இன்று பெரும்பாலும் வையகத்தில் இல்லை. ஓர் உயிர், ஒன்றில் அகமும் புறமும் ஒன்றெனக் கலந்து, ஒன்றாகிச் செய்தலே வழிபாடு.

உயிரின் இயல்பு ஒன்றைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிதல் ஆகிய ஐந்து செயல்களின் வழியாகவே முழுத்தன்மை அடைய முடியும். அஃதின்றிக் கடையில் தேங்காயை வாங்கிக் கொண்டு போய்க் குருக்கள் கையில் கொடுத்து உடைக்கச் செய்து, வாங்கி வருதல் மூலம் பக்தியும் வந்துவிடாது; பயனும் வந்துவிடாது. கோயிலில்தான் தேங்காயை உடைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அம்மியில் உடைத்தாலும் உடைபடும். அறிவு தொழிற்படும் பொழுதே, அனுபவம் கிடைக்கிறது.

அனுபவம் வந்த பிறகே அந்த அறிவு உயிருக்கு உடைமையாகிறது. அதுவரையில் அறிவிற்குத் தெரிந்த ஒன்று கூட அனுபவத்திற்கு வருவதில்லை; உடைமையாக மாறுவ தில்லை, அறிவு செயற்பாட்டின் மூலம்தான் சிந்திக்கும்.

இன்று நம்முடைய வழிபாட்டு முறைகள், மனித குலத்திற்கு வந்த சாதிப்பழக்க வேற்றுமைகள் மனித குலத்தை வழிபாட்டினின்று விலக்கியிருக்கின்றன. மனிதன் இன்றைக்கு திருக்கோயிலைக் காட்சிச் சாலையாகப் பயன்படுத்துகின்றானே தவிர, அவன் வழிபடுவதில்லை. வழிபாட்டுக்குரிய உரிமைகள் அவனுக்கு வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் தகுதி வேண்டாமா? என்கிறார்கள் சிலர்.

தகுதி பெறத்தான் திருக்கோயிலுக்கு வருகிறோமே தவிர, தகுதி பெற்றதைக் காட்ட வருவதில்லை. எழுதிக் காட்டும் ஆசிரியன் எழுதுவிக்கவும் செய்தால்தான் அறிவு உரிமையாகிறது. அறிவியல் ஆய்வுச் சோதனை செய்யும் ஆசிரியன் மாணாக்கனையும் செய்யச் செய்தால்தான் மாணாக்கர்க்கு அறிவு கிடைக்கிறது. அதுபோலத்தான், வழிபாடு செய்து வைக்கும் அர்ச்சர்கள் வழிபாடு செய்யச் செய்தால்தான் வழிபாட்டின் பயன் கிடைக்கும்.

இதுவே காலத்திற்கு முந்திய ஆன்றோர் வழக்கு. இடையில் புகுந்த சாதி முறையும் தொழில் முறையும் இந்த இனிய வழக்கத்தைக் கெடுத்துவிட்டன. ஆதலால், உண்மையான வழிபாடு உயிர்கள் செய்வதில்லை. உண்மையான வழிபாடு செய்யாமையின் காரணமாக உயிர்கள் அடைய வேண்டிய வழிபாட்டின் பயனாகிய பேரறிவும் பேராற்றலும் கிடைக்கப் பெறவில்லை. ஏதோ பழக்கத்தின் காரணமாகச் செய்கிறான். நனைய வேண்டிய இடத்தில் நனையாமற் குளிக்கிறான். தோய வேண்டிய இடத்தில் தோயாமல் தொங்குகிறான். ஒன்றித்துக் காதலிக்க வேண்டிய இடத்தில் ஒதுங்கி நிற்கிறான். மிகச்சிறந்த உயிரறிவின் ஒளிவிளக்காகத் திகழ வேண்டியவன் முட்டாளாகப் பெயர் சூட்டிக் கொள்கிறான்.

வழிபாடு ஓர் அறிவியல் சாதனை அதன் பயன் பொய்யன்று. இன்று அது பலருக்குப் பொய்ம்மையாக விளங்குகிறது. காரணம் பொய்யுடைய மனிதர் கையில் அது சிக்கியதேயாகும்.

வழிபாடு அறிவின் விளக்கமாக அமைந்தது. ஆனால் அஃது இன்று முட்டாள்தனமாகக் காட்சியளிக்கிறது. பலர் அதை அப்படியே ஆக்கிவிட்டனர். சிந்திக்க வேண்டியது சிலையின் அடியிலுள்ள எழுத்துக்களையல்ல. இந்த எழுத்துக்களைத் தோற்றுவிக்கக் கூடியவாறு, நம்முடைய கடந்த காலச் சமய வாழ்க்கை அமைந்திருக்கும் கால நிலையை எண்ணி நோதல் வேண்டும். எல்லாமாய் அல்லதுமாய் விளங்கும் பெருமானைக் காப்பாற்ற மட்டும் திருக்கோயில்கள் அல்ல. உயிர்களைத் தூய்மை செய்து பேணி எடுத்து வளர்க்கவே திருக்கோயில்கள். உயிர்களிடத்தில் அன்பு ஊற்றினைக் காணவே திருக்கோயில்கள். அந்த ஊற்றின் முன்னே கடவுள் குழைந்து நிற்கிறான். அதனைத் துய்ப்பதில் அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவனுடைய அருள் வெளிப்பாடு அங்கேயே பூரணத்துவம் பெறுகிறது.

மனிதனை மிருகமாக்கி, வேறுபாடுகளை நிரந்தரப் படுத்துவது இறை நெறியாக இருக்க முடியாது. பாவியே ஆனாலும் அவன் மாட்டு இறைவனுக்குள்ள கருணை இம்மியும் குறையாது. தூய்மை என்பது, சாதி முறைகளைக் காப்பாற்றும் கண்ணாமூச்சி விளையாட்டே தவிர, அதில் உண்மை இருக்க முடியாது. உடலால் தூய்மையற்று உள்ளத்தால் தூய்மையுடையோர் இல்லையா? உள்ளத்தால் உலகத்து அழுக்கெல்லாம் பெற்று உடலால் தூய்மை காட்டுபவர்கள் இல்லையா? அன்றும் முத்தநாதன் இருந்தான். இன்றும் முத்தநாதன் இருக்கலாம் அல்லவா?

தனித்தனியே மனிதர்கள் வழிபாட்டிற்குரிய இடங்களைப் பெறுதல் அரிது என்பதனால்தான் நமது திருக்கோயிலில் பண்டு பலரும் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர் என்பது, வரலாற்று முறையிலும் மறுக்க முடியாத உண்மையாகும். வேத நெறி தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரும் திருத்தொண்டின் நெறி விளக்கத் தோன்றிய திருநாவுக்கரசரும் இந்த வழிபாட்டு முறையையே எடுத்துக்காட்டிப் பாடியுள்ளனர். திருக்கோயிலில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது வழிபாடு பெற அல்ல; உயிர்களுக்கு எளிமையான அருள் வழங்கவேயாம்.

அப்பரடிகள் திருவங்கமாலையில் மிகத் தெளிவாக நம்மை வழிபாடு செய்து கொள்ளும்படி ஆணையிடுகிறார். வழிபாட்டில் நாட்டமின்றித் திரிவோரைப் பார்த்து யாக்கையால் பயனென்? என்று வினவி, வழிபாட்டுணர்வில் ஆற்றுப்படுத்துகின்றார். அரன் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் வலம் வந்து வணங்கச் சொல்கிறார்; கைகளால் பூக்களை எடுத்துப் போடச் சொல்கிறார்; தாமே போடுதல் போன்ற பொருள்பட ’அட்டி’ என்று பாடுகின்றார்; இறைவனைப் போற்றி போற்றியென்றே தொழுது வணங்கித் தூமலர் தூவச் சொல்கிறார். இதுவே திருமுறை வழிபாட்டு நெறி; நமது ஆன்றோர்களில் திருக்கோயில் வழிபாட்டு ஒழுக்கம். அப்பரடிகள் அருளிய திருப்பாடலைச் சிந்தனை செய்யுங்கள். -

      ஆக்கையாற் பயனென்?—அரன்
      கோயில் வலம் வந்து
      பூக்கையா லட்டிப் போற்றி யென்னாதஇவ்
      ஆக்கையாற் பயனென்?

13. நமது பழக்கமா?

நமது குமுகாய வாழ்க்கையில் பலர் கூடி உண்ணும் பொழுதும் ஒருவரோடொருவர் பேசாமலேயே உண்கிறோம். உண்ணும்பொழுது பேசுவதைப் பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. அங்ஙனம் பேசுவது ஆசாரக்கேடு என்று கருதுகிறார்கள்; கண்டிக்கிறார்கள். குழந்தைகள் உண்ணும் பொழுது, பேசத்துடிக்கிறார்கள்; பெரியோர்கள் அடக்குகின்றனர். பேச்சுக்குப் பதில் அழுகை பிறக்கிறது. இங்ஙனம் உண்ணும்பொழுது உரையாடக் கூடாது என்ற வழக்கம் எப்பொழுது தோன்றியது? யாரிடமிருந்து வந்தது? என்று அறிந்து கொள்ளுதல் சுவையான செய்தி!

தமிழர் வாழ்வில் சமண சமயம் வந்து கலந்த பொழுதே இந்த வழக்கம் வந்திருக்கிறது. தமிழினம் சமண சமயத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களையறியாமலே அந்த சமயப் பழக்கவழக்கங்கள் சில, அவர்களுடைய வாழ்க்கையில் வந்து பொருந்தியுள்ளன. சமணர்களின் சீரிய ஒழுக்கங்களுள் தலையாயது, நேரிடையாகவோ மறைமுகமாகவோ திட்டமிட்டோ தற்செயலாகவோ பிற உயிர்களைக் கொலை செய்யக் கூடாது என்பது. தற்செயலாகவும் உயிர்க்கொலை நிகழக் கூடாது என்பதற்காகச் சமண்சமயம் சில ஒழுக்க விதிகளை விதித்திருக்கிறது. அவற்றுள் ஒன்று திறந்த வாயினராக இருத்தல் கூடாது என்பது. இருந்தால், சிறு பூச்சிகள் இயற்கையில் வாய்க்குள்ளிருக்கும் பற்பசையில் சென்று ஒட்டி இறத்தல் கூடும் என்று கருதுகிறது. அதனாலேயே சமண முனிவர்கள் தம் வாயின்மீது ஒரு சிறு திரையிட்டிருப்பர்.

இவ்வளவு விழிப்பாகக் கொல்லாமையைக் கருதுபவர்கள் உண்ணும்பொழுது உரையாடினால் சிறு பூச்சிகள் வாய்க்குள் செல்லக் கூடுமென்று உரையாடுவதற்கு தடை விதித்தார்கள். அடுத்து உரையாடுதலின் மூலம் மகிழ்வு பிறந்து, அம்மகிழ்ச்சிப் போக்கில் திட்டமிட்ட அளவிற்கு மேலாக உண்ணக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அது நோன்பை மீறிய செயலாகும். இந்த அடிப்படையிலும் உண்ணும் பொழுது உரையாடுதலைச் சமணம் தடுக்கிறது. சமணர்களுக்குரிய இந்த பழக்கம்-சமண முனிவர்களுக்கு விதித்த இந்த நெறி எப்படியோ நம்மையும் அறியாமல் நம்முடைய குமுகாய வாழ்க்கையிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

அப்பரடிகள் “மூங்கைகள் போல் உண்ணும் மூடர்” என்று உண்ணும்பொழுது உரையாடாதார் பண்பைக் கண்டிக்கிறார்.

பொதுவாக, உண்பதும் ஒரு விழுமிய கடமையேயாம். மிகச்சிறந்த பயனுடைய பணிகளைச் செய்தற்குக் கருவியாக அமைந்துள்ள உடலைப் பேணுதலும் ஒரு தவமேயாகும்.

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று திருமந்திரம் பேசுகிறது. இங்கே உடம்பை வளர்த்தல் என்பது சதைப் பிண்டங்களை வளர்ப்பது என்பதன்று. உடலுக்குரிய விழுமிய திறன்களை வளர்ப்பது என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். சதைத் திரட்சிகள் எரி விறகிற்குப் பயன்படுமேயன்றிப் பணிகளுக்குப் பயன்படா. உயிர் உயர்தற்குரிய அன்பிற்கலத்தல், தொண்டு செய்தல் ஆகியனவற்றிற்குத் துணையும் தோழமையும் குமுகாயச் சூழலும் இன்றியமையாதன. தனி மனிதன் தனியே அன்பிற்கலத்தல் இயலாது. அவன் தன்மாட்டே அன்பு காட்டுதலை 'அன்பு' என வழக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அது சுயநலம்! அன்பன்று; அவமேயாம்.

ஒருவன் தன்மாட்டே தான் அன்பு காட்டிக் கொள்ளுதல் தீமையையே பெருக்கும்; இன்பத்தினைப் பெருக்காது. அதனாலேயே அன்பு காட்டுதற்குரிய களமாக விலங்குகள் போலல்லாது மனித குமுகாயத்தை ஒரு கூட்டு வாழ்க்கையாக இயற்கை அமைந்துள்ளது. மனித குமுகாயத்தில் அரக்கனைத் தவிர, தனி மனிதனே இல்லை! ஞானியானால் இறையுடன் தோழமை கொண்டு ஒன்றிக் காதலித்து இன்புறுவர். அவர்களுக்கும் இறைவன் என்ற ஒரு தோழனுண்டு. இவன் அவனைக் காதலிக்க, அவன் இவனைக் காதலிக்க மிகப் பெரிய ஞானக் காதல் வாழ்வு மலர்கிறது.

எனவே, மனித உயிர் குறைகளினின்று விடுதலை பெற அன்பினாற் கலந்த உறவு தேவை. உறவு தோன்றி வளர்தற்குரிய சூழ்நிலைகள் பலவற்றுள் பலர் ஒருங்கிருந்து உண்ணும் சூழ்நிலையே சிறப்புடைய சூழ்நிலையாகும். அதனாலேயே வள்ளுவம், பகுத்துண்ணலைத் தொடர்ந்து “பல்லுயிர் ஒம்புதல்” என்று பேசியது. திருமுறைகளும், திருக்குறளும், விருந்தோம்புதலை நெறிகளுக்கெல்லால் உயர்ந்த நெறி என்று எடுத்தோதுகின்றன.

மனித உறவுகளுக்குக் கொடிய பகையாகிய அழுக்காறு, பிற கட்டங்களில் தலை காட்டுதல் போல உண்ணும் பொழுது தலைகாட்டுதல் இயலாது. அளவுக்கு மிஞ்சிக் குவித்து வைக்கின்ற செல்வத்தைப் போலல்லாமல் யாரும் அளவோடுதான் உண்ண இயலும். ஆதலால் அழுக்காற்று உணர்வு தடை செய்யப்படுகிறது. அதோடு பிற கட்டங்களில் மனிதன் தன் மகிழ்வுணர்வைப் பூரணமாக வெளிப்படுத்தி விடுவதில்லை. உண்ணும்பொழுது தன்னுடைய நிறைவை அகன்ற ஒளிபடைத்த கண்கள் மூலமும், மகிழ்வு கொப்பளிக்கின்றதை முகத் தோற்றத்தின் மூலமும், சுவைத்து மகிழ்ந்தமையை உதடுகளில் பொங்கி வழியும் புன்னகை மூலமும் யாதொன்றும் தடை செய்ய முடியாவண்ணம் வெளிப்படுத்துகிறான். இத்தகைய சூழ்நிலையில் உறவு கலத்தலைப் போலப் பிற சூழ்நிலைகளில் முடியாது. அது மட்டுமின்றி ஒருவர் உண்பதை உடனிருப்பவன் விரும்புகிறான் என்பது தெரியாது போனால், உண்பவனுக்கு அவனையறியாமலே ஐய உணர்வும், கூச்சமும் தலை காட்டுகின்றன. அதன் காரணமாகத் தயங்கித் தயங்கி உண்கிறான். அப்பொழுது அவன் உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமற் போகிறது. உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமல் உண்ணும் உணவு, நஞ்சாக மாறி விடுகிறது. அதனால் நலம் கெடுகிறது; நோய் வந்தமைகிறது.

ஆதலால், உண்ணும்பொழுது உரையாடாது உண்ணுதல் நல்ல வழக்கமன்று; ஒழுக்கமன்று அறநெறியுமன்று; வாழ்வாங்கு வாழும் நெறியுமன்று; உடலியலில் பேணும் நெறியுமன்று. அதனாலன்றோ, தாயுமானார் “உறவு கலந்து உண்ணக் கண்டீர்” என்று எடுத்தோதினார். உறவு கலக்க உரையாடல் இன்றியமையாதது. ஆதலால், பலர் கூடி - உண்ண வேண்டும். உறவு கலந்து உண்பித்துச் சிரித்துப் பேசி மகிழ்வு சிறக்க உண்ண வேண்டும். ஆனால் உண்ணும் பொழுது உரையாடலை ‘அரட்டைக் கச்சேரி'யாக மாற்றிவிடக் கூடாது. பயனற்ற சொற்களைப் பலர் கூடி உண்ணும் பந்தியில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி உணர்ச்சி வசப்படுத்தக் கூடிய, அவல உணர்வுகளைத் தரக்கூடிய செய்திகளை மறந்தும் பேசக் கூடாது. இது நேர்மாறான பயனைத் தந்துவிடும். உண்ணும் நேரம் குற்றங்குறைகளை உணர்த்தவன்று. உண்ணும்பொழுது மனித இயலைத் தூண்டி உயர்த்துதற்குரிய மகிழ்வும் ஊக்கமும் தரத்தக்க செய்திகளையும், உயர்வு தாழ்வுகளை விரிவுபடுத்தாத உறவு நெறிகளையும் காட்டிப் பேசுதல் வேண்டும். இத்தகைய உரையாடலோடு கலந்துண்ணும் பழக்கம் நமது குமுகாய வழக்கம். இந்த இனிய வழக்கம் மீண்டும் நமது குமுகாயத்தில் மலர்வதாக.
14. ஆற்றில் கெருத்துக் குளத்தில் தேடுவதா?

இறைவன் எங்கும் இருக்கின்றான்; எல்லாவற்றிலும் இருக்கின்றான்; எப்பொழுதும் இருக்கின்றான். எங்கும் இறைவன் தங்கியிருப்பதனாலேயே அவனுக்கு இறைவன் என்று பெயர். “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று மணிமொழி இறைவனைப் போற்றுகிறது; பாராட்டுகிறது. எல்லாத் திருக்கோயில்களுக்குள்ளேயும் நுண்ணறிவில்லாத வரும் கண்டு அறிந்து போற்றும்படி திருமேனி கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ளான். திருக்கோயில்கள் யாவும் இறைவன் திருக்கோயில்களே. எல்லாத் திருக்கோயில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்திகளிலும் இறைவன் திருவருட் பொலிவோடு எழுந்தருளியிருக்கிறான். ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை. இங்கென்றும் அங்கென்றும் இறைவனைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு திருக்கோயிலில் வழிபாடு செய்து வைக்கும் பொறுப்புள்ள அர்ச்சகரே இன்னொரு திருக்கோயிலில் உள்ள தெய்வத்திற்கு நோன்பு எடுத்துக் கொண்டு அங்குச் செல்வார். இது எவ்வளவு பெரிய அதிசயமான செய்தி! சிற்றுண்டிச்சாலையை வைத்திருப்பவர் தாம் அங்கு உண்ணாமல் அடுத்த கடையில் போய் உண்டு, வருகிறதென்றால் அது வேதனையைத் தரக்கூடிய செய்தியல்லவா?

திருநல்லூர்த் திருக்கோயில், எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில். அங்கு, கண்ணுக்கும் கருத்துக்கும் தோற்றமாகும்படி இறைவன் எழுந்தருளியிருக்கின்றான். ஆனாலும் திருநல்லூர்த் தொண்டர், திருநல்லூர்த் திருக்கோயிலுக்குள்ளேயா இறைவனைக் காண முயல்கின்றனர்? காசிக்குச் செல்லுகின்றனர்! இதனை அப்பரடிகள் கண்டிக்கின்றார்.

கெட்ட புத்தியால் ஆற்றில் ஒரு பொருளைக் கெடுத்து விட்டு அந்தப் பொருளைக் குளத்தில் சென்று தேடினால், கிடைக்குமா? ஒரு பொழுதும் கிடைக்காது. சுந்தரருக்குக் கிடைக்கவில்லையா? என்று கேட்கத் தோன்றும். சுந்தரர் ஆற்றிலே பொன்னை, இறைவன் ஆணைப்படி போட்டவர்; கெடுத்தவரல்லர்.

ஆற்றில் போடுதலுக்கும், கெடுத்தலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதுவும் துர்மதியால் கெடுத்தது என்பது அப்பரடிகள் வாக்கு. மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்து அனுபவிக்க வேண்டும் என்று மடியில் மறைத்தது துர்புத்தி, அப்படியே ஆற்றில் இறங்கும் பொழுது அந்தப் பொருள் கெட்டுப் போகிறது. அதை எப்படி குளத்தில் எடுக்க முடியும்? அதுபோலச் சிலர் இறைவனை உள்ளூரில் நன்றாகக் கும்பிட்டால் மற்றவனும் கும்பிட்டுவிடுவானே என்றஞ்சி அயலூர்களுக்கே கும்பிடப் போவதுண்டு.

இறைவன் எங்கும் இருக்கிறான். நம்மூர்க் கோயிலில் இருக்கிறான்; பூசனை இல்லாது பூட்டப் பெற்ற கோயிலுக்குள்ளும் இருக்கிறான். கதவைத் திறவுங்கள்; அன்போடும் ஆராக் காதலோடும் அவனோடு பேசுங்கள்: மலர்ந்த மனத்தைப் பேசிக் காட்டும் மலர்களைத் தூவுங்கள்; உணர்வின் சின்னமாக-உருக்கத்தின் வெளிப்பாடாகத் திகழும் கண்ணீரால் முழுக்காட்டுங்கள்; கண்ணீர் வர மறுத்தால் குடங்களால் நீர் முகந்து ஆட்டுங்கள். காலத்திற்குக் காலம் கனிந்து கண்ணீர் வரும். இறைவனைக் காணலாம். அதனை விடுத்துக் காற்றிலும் கடிய வேகத்தில் உலகெல்லாம் திரிந்து இறைவனைக் காணமுயல்வது ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடிய அறியாமையோடொக்கும். இதனை,

தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர்
துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப் போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே!

என்று அப்பர் பாடுகிறார்.

15. மன்றத்து நின்ற மரம் வாழுமோ?

இன்றைய மனித சமுதாயத்தில் தனி உரிமை, 'பொது உரிமை' என்ற சொற்கள் பெரு வழக்கில் வழங்கப் பெறுகின்றன. தனி உரிமை-பொது உரிமை என்ற சொற்கள் பெருவழக்காதல் வளரும் சமுதயாத்திற்கு நல்லதல்ல. ஏன்? தனி உரிமையும் பொது உரிமையும் இன்று ஒன்றோடொன்று மோதக்கூடச் செய்கின்றன. தனி உரிமையும் பொது உரிமையும் அரும்பும் மலரும் போல் ஒன்றையொன்று தழுவி நிற்க வேண்டியன. தனி உரிமை, பொது உரிமை ஆகியவற்றில் முதலிடம் கொடுத்துப் பேணத்தக்கது பொது உரிமையேயாம்.

பொது உரிமை தாயானால் தனி உரிமை சேய், ஆனால் சமுதாயப் பேரறிவு வளராததன் காரணமாகத் தனி உரிமையிலிருந்துதான் பொது உரிமை தோன்ற வேண்டும் என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது. ஆனால் மனித சமுதாய வரலாற்றுப்படியும், வாழ்வியல் முறைப்படியும் பொது உரிமைதோன்றி வளர்ந்து செழுமையடையும் பொழுதே தனி உரிமை தோன்றுகிறது.

நம்முடைய சமுதாயத்தில் தனி உரிமை உணர்வு வளர்க்கப்பட்டமையின் காரணமாக, இந்த நாள் வரையில் பொது உரிமையை விட, தனி உரிமையே முதன்மைப் படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் நம்முடைய சமுதாயத்தில் பொது உரிமை இயக்கங்களாகிய கூட்டுறவு இயக்கங்கள் பலவீனமுற்றேயிருக்கின்றன. அரசு வழிப்பட்ட பொதுத் தொழில்கள் தனியார் தொழில்களை விட-தனியார் தொழில்களை நோக்கச் செழுமையான இலாபங்களைத் தரவில்லை. ஏன் நம்முடைய சமுதாயத்தின் பொது நிறுவனங்களாகிய கோயில்களை எடுத்துக் கொள்வோமே! அவைகளைப் பேண வேண்டுமென்ற உணர்வு எல்லாருக்குமா இருக்கிறது? இல்லவே இல்லை! இன்று கோயில்களைப் பேணும் பொறுப்பேற்றிருக்கின்ற சிலரிடத்தில் கூட, அது பொது, ஆதலால் பேணுகிறோம் என்ற உணர்வு இல்லை. இங்ஙனம் பேணுவோரில் சிலருக்கு அது வேலை; பலருக்கு அது 'பிழைப்பு', அதனாலேயே நம்முடைய பொது நிறுவனங்களுடைய உடமைகளும் முதலீடுகளும், அதற்கியைந்த பணிகளும் கோடிக் கணக்கில் பல்கிப் பெருக வில்லை.

சமுதாயத்தின் இந்த இழிமனப் போக்கு இன்று நேற்று தோன்றியதன்று. அப்பரடிகள் காலத்திலும் இதே நிலைமை தான்! ஊர் நடுவே, ஒரு மன்றம்! மன்றம் என்றால் பொது இடம் என்று பொருள். நம்முடைய இறைவன் மன்றிலாடுகிறான் என்பது நம் ஆன்றோர் வழக்கு. மன்றத்தையே 'பொதுவில்' என்றும் அழைப்பதுண்டு. மன்றத்திலாடும் இறைவன் என்றால் இறைவன் உலகுக்குப் பொது என்பது பொருள்.

உலகத்தின் முதல் பொதுவுடைமைத் தலைவன் இறைவனே! அவன் மகிழ்ந்தாடக் கூடிய இடம், மன்றம். அந்த ஆனந்த வெள்ளத்தமுதில் திளைப்பவர்கள் உலகத்து மக்கள். இங்ஙனம் பொது மக்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு, முன்பே, தமிழகச் சமய நெறியில் கருக்கொண்டு விட்டது. ஆயினும் பழக்கங்கள் அக்கருவை மூடி மறைத்துச் சிதைத்து விட்டன. மன்றம் பலர் கூடுமிடம். ஆங்கு நிழல் தருவதற்காக மரங்கள் வைக்கப் பெற்று வளர்ந்திருக்கும். நிழலில் கூடியிருந்து மகிழ்ந்தவர்கள், நிழல் தந்த மரங்களைப் பேணுவதில்லை. பேணாதது மட்டுமின்றித் தேவைக்கேற்பச் சிறிதும் பெரிதுமாகக் கொம்புகளை ஒடித்துச் சேதப் படுத்துவர். தொங்கும் கிளைகளை மாடுகளும் கடித்து மேய்ந்து அழிக்கும். நோய் தரும் பூச்சிகள் ஒட்டி, மரங்களை உருக்குலைக்கும்.

இங்ஙனம் மன்றத்தில் நின்ற மரமாயினும் மன்பதைக்குப் பயன்பட்டதாயினும் அம்மரம் பேணுவாரின்றி பெருந்துன்பமே உறுகின்றது. காரணம், மன்றத்தில் நின்ற மரம்! வீட்டகத்தே நின்ற மரமாக இருப்பின் எங்ஙனம் பேணுவர் என்று எடுத்து எழுதவும் வேண்டுமோ? தாம் வளர்த்ததாக இருப்பின் நச்சு மரமேயானாலும், கொல்ல மாட்டார்கள் என்று மணிமொழி பேசுகிறது. வளர்த்த பாசம் அத்தகையது! மன்றத்தில் நிற்கும் மரமும்-பொது இடத்தில் நிற்கும் மரமும் படும் துன்பத்தைத் துன்பத்திற்கு எல்லையாக எடுத்துக் காட்டுகிறார், அப்பரடிகள். ஆதலால் அப்பரடிகள் காலத்தும் பொதுமையுணர்வு தோன்றவில்லை. பொதுவுரிமைப் பொருள்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு வளரவில்லை எனலாம்.

தனியுரிமையும், தனி மனிதவுணர்வும் நஞ்சென வளர்ந்து மனித சமுதாயத்தை அரித்துக்கெடுத்திருக்கின்றன. மனித சமுதாயம் என்ற ஒப்பற்ற மாளிகை யான், எனது’ என்ற இரண்டு 'இடி'களால் தகர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ‘யா'னிலும் 'ஒரு மனித' னிருக்கிறான். 'நா'மிலும் ஒரு மனிதனிருக்கிறான். 'என' திலும் 'ஒரு மனித'னுடைய உணர்வு இருக்கிறது. 'நமதிலும்' ஒரு மனிதனுடைய உணர்வு இருக்கிறது. ஆனால், இரண்டிற்குமிடையேயுள்ள வேற்றுமை ‘யான், எனது வெறுப்பை வளர்க்கிறது; பகையை வளர்க்கிறது; பாதுகாப்பின்மையைத் தோற்றுவிக்கிறது. 'நாம்', ‘நமது என்ற உணர்வு, அன்பைப் பெருக்குகிறது; உறவை வளர்க்கிறது; பாதுகாப்பைத் தருகிறது.

தனியுரிமையில் பொதுவுரிமை அடங்காது. பொதுவுரிமையில் தனியுரிமை அடங்கும். ஆயினும் வழி வழி சமுதாயத்தில் வேண்டிய அளவு பொதுமையுணர்வு வளரவில்லை. 'யான்’, ‘எனது என்ற உணர்வு மனிதனுடைய உத்வேகத்தை அழிக்கிறது. தனிமனிதன் ஒப்பற்ற காரியங்களைச் செய்துவிட முடியாது. இதனை உணர்த்தவே மிகப் பருமனான ஒரு தேரைப் பலர் கூடி இழுக்கும் மரபைச் சமயநெறி தோற்றுவித்தது. ஆயினும் என்? தேர் இழுக்கப் பெறுகிறது. ஆனாலும் சமுதாயப் பொதுவுணர்வு தோன்ற வில்லை. தேரோட்டம் ஒரு சடங்காகப் போய்விட்டது.

மனிதன், ஒன்றில் ஒன்றவேண்டும். அந்த ஒன்று கடவுள். எல்லா உலகுக்கும் ஒருவனாக இருக்கின்ற கடவுள்! அவன் “இவனுமல்லன்; அவனுமல்லன்” அவனுக்கு ஒன்றென்றே பெயர் கூறினும் பொருந்தும். அவனையே “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்று அப்பரடிகள் பாராட்டுகின்றார். “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று சாத்திரம் பேசும்! “ஞாலமே விசும்பே, இவை வந்து போம் காலமே!” என்று மணிமொழி பேசும். அந்த ஒன்றில் வேறுபாட்டுணர்வு அற்று ஒன்றிக் கலந்தால் துன்பம் வராது என்ற கருத்தை அப்பரடிகள் இனிது விளக்கிப் பாடுகின்றார். அதாவது, தனிமை துன்பம் தரும்; பொதுமை இன்பம் தரும். கடவுள் ஒன்று, அதுவே, உலகத்திற்கு ஒன்று. அந்த ஒன்றை ஒன்றியிருந்து நினைத்தால் இன்புறலாம் என்பதாகும்.

மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரமெய்தி
ஒன்றினா லுணரமாட்டே னுன்னையுள்
வைக்கமாட்டேன்

கன்றிய காலன்வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினா னலமந்திட்டே னதிகைவி ரட்டனரே,

என்பது அப்பர் திருப்பாட்டு.

16. உழுத சாலிலேயே உழுதல்

நெஞ்சம் விந்தையானது. அலைகடலையும் நெஞ்சத்தையும் ஒப்பிடலாம். அலைகடலில் எண்ணத் தொலையாத அலைகள் உண்டு. அது போல, எண்ணத் தொலையாத ஆசை அலைகள் நெஞ்சில் உண்டு. அலைகளின் எண்ணிக்கை பலவானாலும், அவை புதிய வண்ணமும் வடிவமும் உடையன அல்ல; முன் பின் என்ற காலமாறுபாடேயாகும். உருத்தெழுந்து வந்த அலை, கரையில் மோதி அலையென்ற வடிவமிழந்து, பெயரழிந்து ஆங்காரமடங்கிக் கரையால் எதிர்த்துத் தாக்கப் பெற்று உருக்குலைந்து கரைந்து தண்ணீராகக் கடலில் கலக்கிறது. மீண்டும் அத்தண்ணீர்த் துளிகளே காற்றழுத்தத்தின் துணை கொண்டு அலையாகி மோதுகிறது. ஆக வடிவத்திலும் மாறுதலில்லை; செயலிலும் மாறுதல் இல்லை. அதுபோலவே ஆசை அலைகள் நெஞ்சில் எழுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தாலும் ஆசைகள் புதியன அல்ல, பழைய சுயநலமேதான்! பழைய சுயநலம் மாறிப் புதிய பிறர் நலமாக இருப்பின் குணம் மாறும் பயன் விளையும். ஒருக்கால் சுயநலமும் காப்பாற்றப் பெற்றாலும் பெறலாம்.

இந்த நெஞ்சு, அறியாமைத் தன்மையுடையது. அதற்கு ஆய்ந்தறியும் அறிவுணர்வை விட வழக்கம்தான் பெரிது. அது, இன்று புதுப்பாதை போடாது. நேற்று நடை பயின்ற பாதையிலேயே செல்லும்; அந்தப் பாதை நாற்றமுடையதாக இருந்தாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டாவது அந்தப் பழைய பாதையில் செல்ல வழி நடத்துமே தவிர, எளிதில் வழக்கத்தை மாற்றாது. நெஞ்சம், ஆசைகளின் ஊற்றுக்களன். ஆசைகள் துன்பத் தருவனவேயன்றி இன்பந்தரா. அதனாலன்றோ,

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

என்று திருமந்திரம் பேசிற்று. ஆசையை விடுக என்றால் ஒன்றும் வேண்டாம் என்பது பொருளன்று. அன்பின், வழியல்லாமலும், பண்புவழிப் பயன் கருதாமலும் விழைவது, ஆசை. உணவு, உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலைப் பேணவும், பேணிப் பாதுகாக்கவும், திறனுறு வகையில் உடலைப் பயன்படுத்திக் கொள்ளவும் உணவை விரும்புதல் ஆசையாகாது. ஆனால், உணவின் மேலேயே ஆசை கொண்டு சுவையில் நாட்டம் வைத்து அச்சுவை உடலியக்கத்திற்குத் தீங்கு பயந்தாலும் உணவை விரும்பியுண்பது ஆசையாகும்.

பொருள், வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பொருளின்றேல் பூவுலகம் இல்லை. நெறிமுறைப்பட்ட துய்ப்பிற்கும், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு, மற்றவர் உயிர் வாழும்படிச் செய்யும் அறமாகிய ஈதலுக்கும் பொருள் தேவை. இந்த வகையில் பொருளை விரும்புதல் ஆசையன்று. அங்ஙனமின்றிப் பொருள் மீதே விருப்பங்காட்டி, “பொருளுடையோன்” என்று பலர் சொல்ல விரும்பித் 'துய்க்காமலும், ஈந்து மகிழாமலும், மகிழ்விக்காமலும் பொருளொன்றையே குறியாகக் கொண்டு சேமிப்பது' ஆசையாகும். மண்ணில் பயிர் தழைக்க மழைத்துளி தேவை. அதுபோல, மனிதகுலம் செழிக்க அன்பு தேவை. உயிர், காதலால் செழித்து வளரும். காதல் பாலுணர்வின் பாற்பட்டது மட்டுமன்று; அதனையும் கடந்தது. காதல் உயிர்களைச் செழிக்கச் செய்யும்; உணர்வுகளைச் செழிக்கச் செய்யும்; தூண்டி வளர்க்கும்; தூய்மை சேர்க்கும்; பொறிகளுக்கும் புலன்களுக்கும் அன்பினைச் சேர்க்கும். இத்தகு தூய காதல் வழி ஒருவன் ஒருத்தியை நாடுதலும் ஒருத்தி ஒருவனை நாடுதலும் ஆசையாகாது. பயனின்றி உயிர்களை அரித்தழித்து உருக்குலைக்கும் பாலுணர்ச்சியின் வெறியில் மகளிரை நாடுதல் ஆசையாகும். உயிருக்குக் கடவுள் துணை. தாயிற் சிறந்த தயாவுடன் தண்ணளி சுரக்கும் துணை. கடவுளை வாழ்த்துதல் வாழ்வேயாகும். கடவுளை மாறா அன்பினில் வாழ்த்துதல் வேண்டும்.

அங்ஙனம், கடவுளை வாழ்த்துதல் ஆசையாகாது. அங்ஙனமின்றி, “இது வேண்டும், அது வேண்டும்” என்ற விண்ணப்பங்களுடன், விண்ணப்பத்தை நிறைவேற்றுவதற்காகக் கடவுள் மீது விருப்பமின்றி, விருப்பங்கள் மீது விருப்பத்துடன், கடவுளை வாழ்த்துதல் ஆசையாகும்.

ஆசை துன்பத்தையே தரும். ஆசையுணர்வில் சுவை புதிதன்று; பொருள் புதிதன்று; உணர்வும் புதிதன்று. எல்லாம் பழைய சுயநலத் தேவையின் மயம். அஃது அரிப்புடைய சொறிசிரங்கைப் போல உயிர் வாழ்க்கையை அரித்து எரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று, என்னை நான் நேசித்ததால், அடைந்தது, துன்பமே. நேற்றுக்கு முந்திய நாள் கதையும், அதுவே. ஆயினும் “நான்”, “எனது” என்ற நச்சு உணர்வுகள் மாற்றப்பட்ட பாடில்லை. திரையில் காட்சி மாறினாலும் உணர்வு மாறாது போனால் பயனில்லை. நாள்கள் மாறினாலும், நாடிடும் நாட்டம் மாறினாலொழியப் பயனில்லை. நேற்றைய துன்பமே இன்று மீண்டும் வருகிறது. நேற்றைய 'நான்' இன்று 'நாம்' ஆக மாறி வளர்ந்தால், துன்பம் தொலையும். நேற்று என்னுடையது. இன்று 'நம்முடையது' என்று மாறி, வளர்ந்தால் பயனுண்டு. 'நானில்' உலகமில்லை. ஆனால் 'நம்மில்' 'யானும்' அவலம் தரத்தக்க ஆசையினின்று விலகி அன்பு வடிவம் பெற்று ஆங்கு இருக்கிறது. ஆளுக்கு அழிவில்லை. தீமைக்கே அழிவு. 'என்னுடையது' 'நம்முடையது' ஆன பிறகு தனி ஒருவரின் உரிமை அழிந்துவிடவில்லை; மாறாக உறுதி பெற்றிருக்கிறது; ஆங்காரமற்றிருக்கிறது. மேலும் சொன்னால், ஒருவரைப் பாதுகாக்கப் பலர் முன் வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒருவனாகத் தனித்து, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவலத்துடன் வாழ்க்கை முடிவதைவிடப் பலர் பாதுகாக்கும் வாழ்க்கையே புகழுடைய வாழ்க்கை. தானே உண்பதைவிட, உண்பிக்க உண்பது சுவையுடையது. தானே சிரித்து மகிழ்வதைவிடப் பிறர் மகிழ்விக்க மகிழ்வது மாண்புடையது. தானே, தன்னை வியந்ததலைவிட மற்றவர் வியந்து பாராட்டுதல் சிறப்புடையதாகும்.

ஆதலால், நேற்றைய வாழ்க்கையில் விளைந்த துன்பத்தினைப் பார்த்து அதனினும் விலகி வாழ்தல் வேண்டும். அதுபோலவே நேற்றைய வாழ்க்கையிலேற்பட்ட இன்பத்தினைப் பார்த்து அந்த இன்பத்தினை மேலும் வளர்த்துப் புதுமையாக்கி அனுபவித்தல் வேண்டும். 'நேற்று' அப்படியே அப்பட்டமாக 'இன்று' ஆகுமானால், பயனில்லை 'நேற்று' போய் 'இன்று' உருவாகும் பொழுது கழிப்பன கழித்து, கொள்வன கொண்டு புதுமைப் பொலிவு பெறவேண்டும். வறட்சித் தன்மையுடைய கிழட்டுத் தனத்தை நீக்கப் புதுமை உணர்வு துணை செய்யும். ஆக புலன்களைச் சென்ற வழியே செல்லவிடாமல், போன வழியிலேயே போய்ப் பாழாகி விடாமல், புதுநெறியில்-பொது நெறியில் நெஞ்சத்தை நாம் பழக்க வேண்டும். ஆனால், புலன்களோ புதுமையில் நாட்டமில்லாது வழக்கத்திற்கும் பழக்கத்திற்கும் அடிமையாகின்றன. “எங்களால் மாற்றிக் கொள்ள இயலவில்லையே! நாங்கள் என்ன செய்வது” என்று அங்கலாய்க்கின்றன. இந்தப் பொல்லாப் பழக்கம் பயனுடையதன்று.

நிலம், பரப்பளவில் அதிகமுடையது. ஒரு நிலம் முழுவதையும் உழுதால்தான் நிலம் பயனுடையதாகும். ஒரு நிலத்தின் ஒரு சால் நிலம் உழப்பெற்று, அதற்கு அண்மைத்தாய அடுத்த சால் நிலம் உழப்பெறாது போகுமானால், முன்னர் உழுத உழவினால் பயனில்லை. அது போலவே நேற்றைய தீய பழக்கத்தை விலக்க அதனைச் சார்ந்து வரக்கூடிய தீய பழக்கங்களையும் விலக்க வேண்டும்.

நேற்றைய நற்பழக்கத்தை உறுதிப்படுத்திக் காப்பாற்றிக் கொள்ளப் புது நற்பழக்கங்களும் தேவை. பக்தியாகிற நற்பழக்கத்தை அரண் செய்து காப்பாற்றத் தொண்டு தேவை. இங்ஙனம் இனிய பழக்கங்களை விரிவாக்கிக் கொள்ளாமலும் வாழ்தல் வாழ்க்கை ஆகாது. இதனை அப்பரடிகள் “உழுத சாலில் உழவே விரும்பும் இழுதை நெஞ்சம்” என்று எடுத்துக் காட்டி இடித்துரைக்கின்றார். ஆதலால், வழக்கங்களையும் பழக்கங்களையும் மாற்றி நலம் பல பெருக்கி, நன்றுடை யானை வாழ்த்தி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சுவைத்தனவே சுவைக்க விரும்புதல் நெஞ்சத்தியல்பு; அங்ஙனம் மாறாது சுவைக்கத் தக்கன நன்றுடையான் திருத்தாள்களேயாம். மற்ற சுவைப் பொருள்கள் மாறாது போனாலும் சுவைத்தற்குரிய நோக்கம் மாறவேண்டும். இதனை,

                   எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
                   தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
                   டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
                   டிழுதை நெஞ்சமி தென்படு நின்றதே!

என்ற அப்பர் திருப்பாட்டால் அறியலாம்.

17. யாதினும் இனியன்

மனித உயிர் வாழ்க்கை சுவையொடுபட்டது. உயிரின் இயக்க உணர்ச்சி சுவைத்தலேயாகும் துய்த்தலும், சுவைத்தலும் உயிரின் பிறப்புரிமைகள். உயிர் வளர்தலுக்கும் சுவைப் புல உணர்வே மூலமும் முதலுமாக விளங்குகிறது. அது போலவே உயிர் வாழ்க்கை, அவலத்தில் ஆழ்தலுக்கும் சுவையே காரணம். தனிமனிதப் போராட்டமானாலும் சரி, சமுதாயப் போராட்டமானாலும் சரி, ஆழச் சிந்தித்தால் சுவைப்புலன்களை மையமாகக் கொண்டே தோன்றியிருக்கும்.

மனிதரில் பெரும்பாலோர் ஏன், எல்லாருமே நாவின் சுவைக்கு ஆளாகின்றனர். இதில், அதீத மாமுனிவர்களைத் தவிர வேறு யாரும் விதி விலக்கல்லர். சுவையாக உண்பதற்கே வாழ்வதாக கருதிக் கொண்டிருப்போர் ஏராளம்! சோறே சொர்க்கமென்று வாழ்பவர்களும் உண்டு! இன்னும் கொஞ்சம் வளர்ந்தவர்கள் பால்சுவையில் ஈடுபடுகிறார்கள். பால்சுவையைச் சுவைத்து மகிழ்ந்து வாழ்கிறார்கள். நாச் சுவையை விட இந்தச் சுவையை ஆர்தல் நுட்பமானதாகும். பலர், சுவையுணர்வின்றிப் பால்வாழ்க்கை நடத்துகின்றனர். இஃதொரு கலை. அதனாலன்றோ திருவள்ளுவரும்,

                மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
                செவ்வி தலைப்படு வார்

என்றார். இந்த இரண்டு சுவையிலும் ஈடுபடத் துடிக்கும் மனிதர்களை எங்கும் காணலாம். இன்னும் சற்று வளர்ந்தவர்கள் இந்த இரண்டு சவையிலும் அமைதி கொள்வதில்லை. ஏன்? இவ்விரண்டையும் கூடத் துச்சமெனத் தள்ளவும் துணிவர். அவர்களுடைய சுவைப் பசி, ஆணை செலுத்துதல் ஆகும். பலரோடு பிறந்து வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரிலும் தன்னை உயர்த்தி விஞ்சியவனாகக் காட்டிக் கொள்ளுதல்; தன்னாணை கேட்டுச் செயற்படுவோரைக் கண்டு மகிழ்தல். இத்தகு சுவை நுகர்ச்சி கோடியில் ஒருவருக்கே ஏற்படும். அவர்களே பலர் புகழ விளங்குவார்கள். இன்னும் வளர்ந்தவர்கள் மேற்கூறிய சுவை நுகர்வினால் இன்பமுண்டு, துன்பமுமுண்டு, ஆக்கமுண்டு, அழிவுமுண்டு என்பதனை உணர்ந்து, தன்னை, தன்னுடைய வாழ்க்கையைச் சுவைத்து சுவைத்துத் திருத்தித் திருத்தி முழுநலம் அடையச் செய்தலில் ஈடுபடுவர். அவர்கள் தம் உயிரினும் இனியனாகிய இடைமருதீசனை எண்ணித் தம்முயிருடன் கலக்கச் செய்து இனிமை நலம் துய்ப்பர். வேறு எப் பொருளைச் சுவைத்தாலும் பசி நீங்காது. காமமும் எல்லைக்குட் பட்டதன்று. மேலும் மேலும் முறுகி வளர்வதே காமத்தின் இயல்பு. அதிகார மனப் போக்கும் எல்லைகளைக் கடந்து விரிவடைவதேயாம். பகையும், போரும் விகாரத்தின் விளைவுகள்; திருவருட் சுவையோ தீதற்ற சுவை. சுவைத்த அளவுக்குப் பயன் தரும். அச்சுவை முறுகி வளர்ந்தாலும் சுவைக்கின்றவனுக்கு நன்மையே. இச்சுவை, அழுக்காறு, அவா, வெகுளிகளுக்கு அப்பாற்பட்டது. ஆதலால் சுவைகளுக்கெல்லாம் தலையாயது திருவருட்சுவையே. இதனை அப்பரடிகள் படிமுறையில் விளக்கிக் காட்டுவது உணரத் தக்கது.

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே!

என்பது அப்பர் திருப்பாடல்.

18. களவுபடாத காலம்

இந்த உலகை-உலக இயக்கத்தை நடத்துவது காலம். காலம் என்னும் களத்தில்தான் மனிதன் வளர்கிறான்; வரலாறு உருவாகிறது. காலம் மிகவும் விழுமியது; போற்றத்தக்கது; பயன்கொள்ளத்த தக்கது. காலம் என்ற நெருக்கடியை இலட்சியமாக வைத்துத்தான் மனிதன் வளர்கிறான். காலம் அருமையானது. சென்ற காலம், நிகழ் காலத்தை நிர்ணயிக்கிறது. நிகழ்காலமும், எதிர் காலத்தை உருவாக்குகிறது. இந்த உலகில் எந்த ஒன்றையும் மனிதன் படைத்துக் கொள்ள முடியும். ஆனால் புதியதொரு காலத்தை அவன் படைத்துக் கொள்ள முடியாது. அது போலவே மனிதன் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் இழந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது.

வாழ்நாள் பல வினாடித் துளிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு வினாடித்துளியும் கழியும்போது உயிர்வாழ்க்கை கரைகிறது; மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மகிழ்விலேயே ஈடுபடும் மனப்போக்குடைய நாம் மரணத்திற்கு அஞ்சுவதால்-அயர்ந்து மறந்து விடுகிறோம். நாம் அறிந்துகொண்டாலும் சரி, அறியாமல் போனாலும் சரி, உணர்ந்தாலும் சரி, உணராமல் போனாலும் சரி வாழ்நாள் கரைந்தே போகிறது. எப்படி முயன்றாலும் வாழ்நாள் கரையத்தானே செய்யும். அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன? என்று கேட்கலாம். ஆனால் வாழ்நாளை முற்றிலும் முழுதுமாகப் பயன்படுத்தினால் அது கரைந்து அழிந்ததாகக் கருதமுடியாது. வள்ளுவரும் “உளதாகும் சாக்காடு” என்பார். காலம் விரைந்து செல்லக்கூடியதே. அதனைத் தடுத்து நிறுத்துதல் என்பது இயலாது. ஆயினும் காலத்தின் நோக்கம் பயன்படுதலேயாம். காலம் முழுதுமாகப் பயன் பட்டிருக்குமானால் அஃது அழிவன்று; ஆக்கமேயாம். மனித உலகத்திற்கு ஒவ்வொரு வினாடித்துளியும் பயன்பட வேண்டும்.

ஒரு மனிதன் தனக்குரிய பொருள், தனது வாழ்வுக்குரிய பொருள், பிறரால் அவனறியாமல் கொள்ளை கொள்ளப்படும்போது களவு போய்விட்டது என்று கூறுகிறான். இத்தகைய களவு, உடைமைகளுக்கு மட்டும் தானா? காலத்திற்கும் உண்டு, அடிக்கடி சிலர் நேரம் போனதே தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். இப்படிக் கூறும் பொழுது அவர்கள் இம்மியும் கவலைப் படுவதில்லை.

நம்மை அறியாமல் நமது செயலுக்கும் பயன்படாமல், பயன் தராமல் வாளா கழிகின்ற காலமும் களவு போனதாகவே கருதப்படும். இங்ஙனம் அப்படி அடிகளே கூறுகின்றார், “களவுபடாததோர் காலம்” என்பது அவர் வாக்கு! உடைமைகளைப் பாதுகாக்கும் கவலை இல்லையா? பூட்டும் சாவியும் தோன்றவில்லையா? கணக்குப் பார்க்கும் பழக்கம் இல்லையா? காலம் படைத்துத் தரும் உடைமைகளுக்கு இவ்வளவு அக்கறை எடுப்பவர்கள் ஏன் மூலப் பொருளாகிய காலம் பற்றிக் கவலைப்படாது இருக்கிறார்கள்? அதுதான் புரியாத புதிர்! உடைமை இழப்பு உடனடியாகத் துன்பம் தருவது. ஆனால் மனம் வைத்து முயன்றால் ஈடு செய்யவல்லது. காலத்தின் இழப்போ நெடிய துன்பத்தைத் தரவல்லது; ஈடுசெய்ய முடியாததும் கூட. ஆயினும் அதைப் பற்றி மனித உலகம் போதுமான கவலை காட்டுவதாகத் தெரியவில்லை. எப்படியும் மனிதனுக்குக் காலம் போற்றும் உணர்வு வேண்டும் என்பதற்காக வினாடி வரையில் பகுதி பிரித்துக் காட்டினார்கள். வினாடியைவிட்டால் நிமிடத்திலாவது முடித்துக் கொள்ளட்டும் என்றும் நிமிடம் குறைந்தாலும் மணிக்கணக்கில் தொலைக்காமல் இருக்கட்டும் என்றும் பிரித்துக் காட்டினார்கள். ஆனால் நாள்கணக்கில், மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில்கூடப் பயனற்றுக் காலம் கழிவதை-இல்லை, அழிக்கப்படுவதை என்னென்று கூறுவது?

காலம் முழுமையாகப் பயன்படுத்தப் பட வேண்டும்; ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். காலம் சென்ற அடிச்சுவடு சாதனையின் மூலமாகத் தெரியவேண்டும். அப்பொழுதுதான் காலம் பயன்பட்டதாகும். அங்ஙனம் இல்லாமல் “நாளை” என்று கடத்தி வாழ்வதை இயற்கை ஒரு பொழுதும் மன்னிக்காது. அப்படிப்பட்டவனுடைய காலம் சைத்தனால் களவு கொள்ளப்படும். ஆதலால், உய்திக்குப் பயன்படவேண்டிய காலத்தைக் களவு போகாமல் உரியவாறு பயன்படுத்தி அளவுக்குட்படாத அன்பால் ஐயாறப்பனை வாழ்த்தி வாழ்ந்திடுதல் வேண்டும் என்றார் அப்பர் அடிகள். அறநெறிப்படி காலம் போற்றுதலும் சிறந்த கடமையாகும்.

வளர்மதிக் கண்ணியி னானை
             வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங்
              காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாதோ ரன்போ
               டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
                யேறு வருவன கண்டேன்!
கண்டே னவர்திருப் பாதங்
                கண்டறி யாதன கண்டேன்!

என்பது அப்பர் அருள்வாக்கு.

19. சிற்றம்பலம் சென்றுய்விர்

சுடுகாட்டில் எரிகின்ற நெருப்புக்கிடையில் ஒருவன் கிடக்கின்றான். அவன் பிணமல்ல, அவனுக்கு உயிர்ப்பிருக்கிறது. ஆனால் உயிரோட்டமாக இல்லை. மெல்ல மூச்சு வந்து கொண்டிருக்கிறது. அவன் நெருப்பினால் எரிந்து அழிக்கப் படுகின்றான். எரி நெருப்பிலிருந்து அவனால் தப்பித்துக் கொள்ளமுடியும். ஆனாலும், உயிர்ப்பாற்றல் குறைவின் காரணமாக-பிணத்தின் தன்மையை எய்திவிட்டதன் காரணமாக ஆற்றலின்றி எரிநெருப்புச் சுடக்கிடக்கின்றான். சுடுகாட்டில் இங்ஙனம் கிடப்பதால் மற்றவர்களும் எடுத்துக் காப்பாற்ற முன் வரவில்லை. அவர்களுக்கு இவன் பிணமாகவே காட்சியளிக்கின்றான். தப்பித்தவறி உயிர்ப்பிருப்பதை அறிந்தாலும் சுடுகாட்டில் உயிர்ப்பிருப்பது ஏலாது; அது கேடு என்று கருதி எடுத்துக் காப்பாற்ற முன் வரவில்லை. மாறாகப் பிணம் அசைகிறது. மூச்சு விடுகிறது, என்று சிரித்துக் கேலி செய்து அவனைக் கொல்லாமல் கொல்லு கின்றனர்.

இத்தகைய ஒரு காட்சியை அப்பரடிகள் உவமிக்கின்றார். எதற்கு? உயிர், அரித்துத் தின்னும் வினையினால் அரிக்கப்பட்டு அழிந்து போதலுக்கு உவமிக்கிறார்! உயிர் ஆற்றலுடையது; அறிவுடையது; ஆள்வினையுடையது; இன்ப அன்பு நுகர்வுக்குரியது; சிறப்புடைப் புலன்களைக் கருவியாக உடையது. ஏன்? எந்தை ஈசன் இறைவனையே அன்னையாகவும் அத்தனாகவும் உறவு பூண்டது. ஆயினும் என்? வினையின் அரிப்பிலிருந்துது அது மீள முடிவதில்லை. தனது தகுதிப் பாட்டினை இழந்து, வஞ்சப் புலன்களின் வஞ்சனைகளுக்கு இரையாகி மயங்கிக் கிடக்கிறது. அறிவு தொழிற் படவில்லை; ஆன்ற ஆள்வினையும் தொழிற்படவில்லை. துன்ப இன்பச் சுவை வேறுபாடுகளை உள்ளவாறு சுவைத்துத் தீயதை விலக்குதலுக்கும், நல்லது மேற்கொள்ளுதலுக்குமுரிய செயற்பாடில்லை. இந்தத் தளர்ச்சி பொருந்திய-முறை பிறழ்ந்த நிலையினால், வினை மேலும் மேலும் அடர்த்துத் தாக்கி உயிரை வலுவிழக்கச் செய்கிறது. நல்லுணர்விலிருந்து விலக்கித் தனிமைப்படுத்துகிறது. அதன் மூலம் வாழ்வுக்கும் புகழுக்கும் உரிய உயிரை அரித்து அரித்து அணு அணுவாக அழிக்கின்றது.

இங்ஙனம் வினைகளால் அரிப்புண்டு, அணு அணுவாக அழிதலைவிடச் சாவது மேல். ஆயினும், எலும்பு கடித்துத் தின்னும் நாய்க்குத் தன் வாயிலிருந்து செங்குருதி கொட்டினாலும் எலும்பு துண்டின் வேட்கை அதற்கு மாறாததைப் போல, மனிதன் எவ்வளவுதான் வினை வழிப்பட்ட துன்பத்தை அனுபவித்தாலும் அவனுக்கு வினையிலிருந்து முற்றாக விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கை இல்லை. சுடுகாட்டில் பிணத்தன்மை தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரே வழி, அவன் திருச்சிற்றம்பலத்தை நாடி அடைதலாகும். திருவருள் தன்மையுடைய அறிவு மயமான மன்றத்தில் இன்பக் கூத்தாடும். இறைவனை - ஆடலரசை - தில்லைக்கூத்தனை நினந்து நினைந்து வழிபாடு செய்தால் வினைகளின் அரிப்பிலிருந்து விடுதலை பெறலாம் என்று நம்மீதுள்ள இரக்கத்தின் காரணமாக அப்பரடிகள் வழி நடந்துகின்றார்.

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தீரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே!

என்பது அப்பர் திருப்பாட்டு.

20. இறைவன் தங்கும் இடம்

நமது சமயநெறி இனிய நெறி; எளிய நெறி; "இது”, “அது” என்ற பிரிவினைச் சழக்குகளைக் கடந்த பெருநெறி. நமது சமயநெறியில் இறைவனை எப்படியும் தொழலாம்; எந்தப் பெயராலும் அழைக்கலாம்; எங்கும் தொழலாம். இங்ஙனம் அமைந்த ஒரு சன்மார்க்க நெறியை உலகில் வேறெங்கும் காண முடியாது, இறைவன் உருவமுடையவனல்லன்; ஆயினும், உருவமுடையான். அவனை ஆலயங்களிலும் வழிபடலாம்; அவரவர் அகத்திலும் வழிபடலாம். இறைவன் என்ற சொல்லுக்கே பொருள், எல்லா உயிர்களிடத்திலும் தங்கியிருப்பவன் என்பதே. இறைவன், விரும்பி எழுந்தருளும் திருக்கோயில், உயிர்களின் நெஞ்சமேயாகும். “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்றார் மாணிக்கவாசகர்.

             நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
                     நினையாது ஒருபோதும் இருந்தறியேன்

என்று அப்பரடிகள் முதற்பதிகத்தில் அருளிச் செய்துள்ளார். இறைவனைத் தன் உயிருக்கு உயிராக எண்ணி உணர்தல் வேண்டும்.

இறைவனைத் தன் உயிரில் அறியும் தகுதியுடையவர்கள் உள்ளத்தில், இறைவன் தங்கி அருள்செய்வான்; அங்கனம் தன் உயிரில் இறைவனை அறியும் அறிவிலனாயின் அவனிடத்தில் தங்கி நிற்கும் இறைவனை அடைதற்கு இயலாதவனாகி அவலமுறுகின்றான்.

                தன்னிற் றன்னை யறியுந் தலைமகன்
                தன்னிற் றன்னை யறியில் தலைப்படும்
                தன்னிற் றன்னை யறியில னாயிடில்
                தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே!

என்பது அப்பர் வாக்கு.

தன்னில், தன்னுயிரில் இறைவனைக் கண்டு தொழுதல் இனியதவம். “விறகில் தீயினன்” என்பர் நமது அடிகள். விறகிற்குள்தான் சக்தி மண்டிக் கிடக்கிறது. மணியினுள்தான் மணியின் ஒளி கனன்று கொண்டிருக்கிறது. பாலினுள்தான் நெய் இருக்கின்றது. அதுபோல் ஊனில், ஆவியில் இறைவன் இருக்கின்றான். ஆங்கு அவனைக் கண்டு தொழாமல் - நெஞ்சத்தைக் கோயிலாக்காமல் புறத்தே தேடியலைவதில் பயனென்ன? இதனையே சித்தர் ஒருவர், “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உன் இருக்கையில்” என்று கூறினார். இதயத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து பத்திமை செய்யும் தகுதியற்றவர்கள் திருக்கோயிலிலும் இறைவனைக் காண முடியாது. ஆதலால், மெய்ஞான நெறியில் வளர விரும்புவர்கள் இறைவனை உள்ளக்கிழியில் உருவெழுதி உருகி நினைக்கவேண்டும். அகப்பூசை செய்யாமல் புறப்பூசை செய்தலை அருணந்திசிவம், “கையிலிருக்கும் தேனைப் பருகாமல் முழங்கை வழியாக வழிகின்ற தேனைக் குடிப்பதற்கு முயற்சி செய்வது போல” என்று கூறுகின்றார். ஆதலால் நம்முடைய மனம் என்ற கோயிலில் இறைவனை எழுந்தருளச் செய்து நாள்தோறும் அவனை வழிபட்டு உய்வோமாக!

21. வானகத்தை வழங்கும் வாழ்க்கை

                ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம்
                நான்நி லாவி யிருப்பன்என் நாதனைத்
                தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
                வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே!

ஊன் வேறு, உயிர் வேறு. ஊன் - கருவி, உயிர் - ஊனாகிய கருவியைப் பயன்படுத்தும் கருத்தா. ஊனிற்குக் குணமில்லை; செயவில்லை. உயிருக்குக் குணம் உண்டு; செயலுண்டு. உயிர், ஊனாகிய கருவியைக் கொண்டுதான் தொழிற்படுகிறது; பயன் விளைவிக்கிறது. உயிர்க்கும் அறிவு, தொழில், குணம் ஆகியவை உண்டாயினும் அவை நிறைவுடையன அல்ல; இன்பமே தருவனவாகவும் இல்லை. ஆதலால், உயிர் தன்னினும் சிறந்த இறைவனை - திருச்சிற்றம் பலவனைத் துணையாக நாடிப் பெறுகிறது. இறைவனைத் துணையாகப் பெற்றோனின் ஊன், உயிர் எல்லாம் அன்பின் நெறிப்பட்டவை; அருளார்ந்தவை. ஊனில் நிலவும் ஆவி-உயிர், உயிர்க்கும் பொழுது எண்ணும்; நோக்கும்; சிரிக்கும்; செயற்படும். இவை நிகழும் பொழுது உயிராற்றல் மங்கி, ஊன் முழுமையாகத் தொழிற்படாது போனால் முடை நாற்றம் வீசும், இரக்க உணர்ச்சியே இருக்காது. இது வெறுத்து ஒதுக்கத்தக்க வாழ்க்கை. உயிர் ஆற்றல் மட்டுமே தனியே தொழிற்படின் பகை, பிணக்கு, போட்டா போட்டிகள் தலைகாட்டும். இன்ப மயக்கத்தில் துன்பமே விளையும்.

உயிர், திருச்சிற்றம்பலவனை நாடித் துணையாகப் பெற்று அவனோடு கலந்து, அவன் தன் இயல்புகளைச் சிந்தனை செய்து, தமக்குரியவனாகப் பெற்று உயிர்க்கும் பொழுதெல்லாம் உயிரின் கரணங்கள், தன்மை மாறித் திருவருள் வயத்தனவாக விளங்கித் தோன்றும்; இறைமைத் தன்மையே வெளிப்படும்; இன்ப அன்பே மேவி விளங்கும்; குற்றங்கள் நீங்கும்; குணங்கள் கால்கொள்ளும்; துன்பங் களில்லை; இன்பமே உண்டு. ஆக, உண்மையான இறை வழிபாடு என்பது, உயிர் உடல் கொண்டு வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் அனைத்துச் செயல்களிலும் திருவருள் மணங்கமழுதலேயாகும். தன் முனைப்பு நாற்றமேயிருத்தல் கூடாது.

தன்னலச் சார்பு, அறவே நீங்குதல் வேண்டும். வேண்டுதல் வேண்டாமை முற்றாக நீங்குதல் வேண்டும். மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கும் தன்மையிற் சிறந்து விளங்கவேண்டும். பழுதிலாத் துறவும், பீடுறுபண்பும் வீடும் வேண்டா விறலும், திருவருட் சார்புடையோரின் இலக்கணம். அவர்களை இனங்கண்டு கொள்ளும் அடையாளங்கள் அவை. அத்தகு சான்றோர் அச்சத்தினின்றும் நீங்கியவர்கள். அவலத்தினின்றும் விடுபட்டவர்கள். இறைவன் உவந்து குடியேறி நடமாடும் திருக்கோயில்கள் அவர்கள்! அவர்களே சான்றோர்கள். அவர்கள் மண்ணகத்தையும் விண்ணகமாக்குவார்கள்.

வழிபாடென்பது கைகளால் கும்பிடுவது மட்டுமன்று; மலரிடுதல் மட்டுமன்று; வாழ்க்கை முழுவதுமே சமயமாக இருக்கவேண்டும். ஊனை இடமாகக் கொண்டு உயிர் உயிர்க்கும் பொழுதெல்லாம் அது எந்த சந்தர்ப்பமாயினும் சரி, கொடிய துன்பங்கள் சூழ்ந்தாலும் சரி, அல்லது இன்பமே சூழ்ந்தாலும் சரி இறைத் தன்மையை உயிர்ப்பிப்பதாக இருக்க வேண்டும். அதுவே நிறை நலமிக்க சமய வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கைதான் பிறவிப் பிணிக்கு மருத்தாக அமையும்; ஞானத்திற்கு உணவாக அமையும். அத்தகைய சமய வாழ்க்கையே துன்பத் தொடக்கில்லாத வானகத்தை வழங்க வல்லது என்பது அப்பரடிகள் கருத்து.
22. அகப்பகையை வெல்க

மனித உலகம் இன்பத்தையே விழைகிறது. அதற்காகவே உழைக்கிறது. ஆயினும், இன்பத்தின் சாயல்கூட இன்னும் மனித உலகத்தை அணுகவில்லை. இன்பத்தின் நிழல்களைத்தான் இன்று இன்பமென்று கருதி உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நிழல், நிழல்தானே! இன்று மனித உலகம், இன்பத்தை ஆரத் துய்க்க முடியாமல் தடையாக இருப்பது புறப்பகையன்று. ஒரு காலத்தில் புறப்பகையும் மனிதனை வருத்தியது. 'சுறுக்’ கென்று தைக்கும் புறப்பகையைக் கடிதில் உணர்ந்த மனிதன், புறப்பகைகளை வெற்றி காண்பதில் படிப்படியாக முன்னேறி விட்டான்.

ஆதலால், இன்று அவனை வெள்ளம் வருத்துவதில்லை; தீ, சுடுவதில்லை; கொடிய விலங்குகளும்கூட வருத்துவதில்லை. அவற்றையெல்லாம் முறைப்படுத்தித் தன் ஆற்றல் எல்லைக்குள் உட்படுத்தி அனுபவத்திற்குக் கொண்டு வந்து விட்டான். அஃதோர் அற்புதமான சாதனை. அந்தச் சாதனையின் அருமையைக் குறைத்து மதிப்பிடுவதில் பொருளில்லை. ஆயினும், பலவற்றைப் பழக்கிய அவன், பழகத் தவறிவிட்டான். நாயினை நல்லவிதமாகப் பழக்கினான். ஆனாலும் அவன் பழகத் தவறிவிட்டான். அவனை இன்று வருத்துவது, புறப்பகையல்ல. அகப்பகையே யாகும். அழல் நெருப்பு அவனைச் சுடுவதில்லை. ஆனாலும், அழுக்காற்றுத் தீ அவனைச் சுடுகிறது. அலைகடல், அவனை வருத்துவதில்லை. அதனை அடக்கிக் கலம் செலுத்துகிறான். ஆனாலும் அவா வெள்ளம் அவனை அலைக்கழிக்கிறது.

இந்த அகப்பகையை வென்று, வெற்றி பெற்றாலேயே மனிதன் பகைப் பலத்துக்கு ஆளாகமாட்டான். மனிதனின் வாழ்வில் படைக்கலங்கள் மட்டும் அஞ்சாமைக்கு அடையாளமல்ல. படைக்கலம் தாங்கியவர்களிலும், பஞ்சை மனிதர்கள் உண்டு. படைக்கலம் தாங்காமலே கூடச் செருக் களத்தில் நின்ற வீரர்களுண்டு. அப்பரடிகள் படைக்கலம் தாங்கிய வீரரா? வில்லைத் தாங்கினாரா? வாளைத் தாங்கினாரா? இல்லை! அவருடைய நெஞ்சத்தைப் பழுதிலாத் துறவு என்ற அரணில் சேர்த்தார்; அங்கே நிலைநிறுத்தினார்; ஒடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார். ஒண் திறல் பிறந்தது. இறைவன் திருநாமமாகிய ஐந்தெழுத்தையே நாவினில் படைக்கலமாகக் கொண்டார். கோட்டை கொத்தளங்கள் பெற்றுக் கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை வெற்றி கண்டார். “அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்று அடலேறு என முழங்கினார். இந்தத் தறுதண்மை-பேராண்மை சமய நெறிக்கே உரியது; அருளியலுக்கே உரியது.

ஆனால், ஐயகோ! இன்றைய சமய வரலாறு அச்சத்தின் கொள்கலனாக மாறியிருக்கிறது. பல்லவப் பேரரசனையே கலங்க வைத்த நெறியினைச் சார்ந்தவர்கள் கோட்டைக் காவலர்களைக் கண்டே கலங்குகிறார்கள். இன்று சமயம் வாழ்க்கைக்காக இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக என்று ஆகிவிட்டது. பயனுக்காக அன்றிப் படாடோபத்துக்காக என்றாகி விட்டது. இன்றைய சமய உலகில் ஈர நெஞ்சினைக் காணோம். ஆதலால், கனிந்த அன்பினையும் காணோம். துறவு இன்மையால் தூய நெஞ்சத்தையும் காணோம். அஞ்சாமை யின்மையால் சைத்தானும் கை வரிசை காட்டுகின்றான்.

ஆதலால் எங்கு நோக்கினும் துன்பம்! பகை: இந்த இருண்ட சூழ்நிலைகளிலிருந்து நம்மை வழிகாட்டிக் காப்பாற்ற வல்ல ஆசிரியர் அப்பரடிகளேயாவார். அப்பரடிகள் மனித உலகத்தின் துன்பம் துடைக்க வந்த மாமணி! இருள் கடிந்து எழுந்த ஞாயிறு! வாழ்க்கைக்கொரு வழித்துணை! அப்பரடிகள், உபதேசங்களால் மட்டுமல்ல, அவர்தம் வாழ்க்கையாலும் நமக்கு வழி காட்டினார். மனம், ஒரு தன்மைத்தாயிருக்கக் கூடியதன்று. நெஞ்சமும் கூட அப்படித்தான்! இறைவனைவிட்டு ஒரு நொடி பிரிந்திருந்தாலும் அது கெட்டுவிடும். புறத்தே மண்டித் திணிந்து கிடக்கும் தீமையை உடனே பற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. அதனாலன்றோ, “நினையாது ஒருபோதும் இருந்தறியேன்” என்று கூறுகின்றார். மாணிக்கவாசகரும் “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்று குறிப்பிடுகின்றார். நெஞ்சத்தை, இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே பழக்க வேண்டும். அஃது ஒரு பொழுது மறந்தாலும் உடன், பாசி மூடிக் கொள்ளும். ஆதலால் அப்பரடிகளுடைய நெஞ்சு எப்பொழுதும் - இடையீடில்லாமல் இறைவனுடைய திருவடிகளைத் தடவிக் கொண்டிருந்ததாம். இன்றோ, நம்முடைய கைகள்தான் இறைவனின் திருமேனிகளைத் தீண்டித் தடவுகின்றனவே தவிர, நம்முடைய நெஞ்சு அவனைத் தீண்டித் தடவுவதில்லை.

உடலுக்கு உயிர்ப்பு உயிர், உயிர்க்கு உயிர்ப்பு இறை, உடல் உயிர் உறவுக்கு இணைப்பு மூச்சுக் காற்று. இந்த இணைப்புக்கு அன்பே காரணம். இங்ஙனம், நெஞ்சத்தை இறைவன் தாளிணைகளுக்குத் தந்து வாழும் வாழ்க்கையே வாழ்க்கையென்றார் அப்பரடிகள். இறைவனை நமக்குப் பெற்றுத் தர வல்லது, நம்மிடத்தில் இருத்தி வைக்கவல்லது அன்பேயாகும். மாணிக்கவாசகர் இந்த அன்பினை ஆற்றல் மிக்க அன்பு என்று கூறுவார். அப்பரடிகள் “ஐயன் ஐயாறனார்க்கு, அன்பலால் பொருளுமில்லை” என்றார். அது போலவே, தொண்டு செய்தலே உயிர்க்கு ஊதியம் என்றார். அப்பரடிகள் காட்டிய இறைவனை விட்டுப் பிரியாத நெஞ்சம், அவர் காட்டிய அன்பும் அவர் காட்டிய தொண்டும் நம்மைச் சேருமாயின் அவலம் வந்து அடையாது. ஈறிலாப்பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பு கிடைக்கும். இம்மையோடன்றி மறுமையும் ஏமாப்புடன் வாழலாம்.
23. வாழ்வியல் இயக்கம்

வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்நெடிய பயணத்தில் மனிதன், மா மனிதனாக, அதாவது முழு மனிதனாக வளர்ந்து உருப்பெறுகிறான். மனித வாழ்க்கையின் வளர்ச்சி ஒரு பரிணாம வளர்ச்சி! இந்த வளர்ச்சி தனி மனிதனாக நின்று ஒருவன் சாதித்துக் கொள்ளும் வளர்ச்சியல்ல! ஒருவனுடைய வாழ்க்கை முழுதான நிறை நல வளர்ச்சியை அடைய, பலர் உதவி தேவை.

ஆன்மா, உருவம் இல்லாதது. ஆனால் அறியும் உணர்வுடையது. ஆயினும் உருவம் இல்லாமையின் காரணமாக அறிவு இருந்தும் இல்லாத நிலை. எனவே, இயக்கம் இல்லை; வளர்ச்சி இல்லை. அறிவு நலம் சார்ந்த ஆன்மா, அறியாமையோடு பிணைப்புண்டு கிடக்கிறது. இயக்கமும் செயற்பாடும் இல்லையானால் அறிவுநலம் இல்லை; வளர்ச்சி இல்லை. உயிர் இருந்தும் இல்லாதது போல்தான். கோடையில் நீர்வற்றிக் கிடக்கும் குளத்தினால் யாது பயன்? கோடைக் காலத்தில் இலைகள் உதிர்ந்த நிலையில் மொட்டையாக நிற்கும் மரத்தினால் என்ன பயன்? இந்த நிலையில் திருவருளின் கண்ணோட்டம் உயிர்பால் வீழ்கிறது. ஒரு தலைமகன் வழி, உயிரின் இயக்கம் தொடங்குகிறது; வாழ்வு தொடர்கிறது.

ஆம்! ஒவ்வொருவர் வாழ்விலும் கிடைத்த முதல் துணை தந்தை; அப்பன்தான்! உயிர், அப்பனிடம் ஒராண்டு உற்றிருந்து ஜவ்வரிசி அளவு வடிவமுள்ள ஒர் உருப்பெற்றுப் பயணத்தைத் தொடங்கி, தாயின் கருப்பையைச் சென்று சேர்கிறது. முதற்பயணதில் கிடைத்த ஓர் உரு, அவ்வளவு தான்! ஆனால் இயக்கத்திற்குரிய புலன்கள், பொறிகள் கிடைக்கவில்லை. ஆம்! தாயின் கருப்பையே உயிருக்கு முழு வடிவம் கொடுக்கிறது. ஆகா! என்ன அற்புதம்! ஜவ்வரிசிப் பிரமாணமுள்ளதா யிருந்த விந்துவை முதலாகக் கொண்டு என் தாய் தனது வயிற்றில் அற்புதமான மூளையும் இதயமும் அழகும் ஆற்றலும் வாய்ந்த ஓர் உருவமாக என்னை உருவாக்கித் தந்த அற்புதக் கொடைக்கு ஈடு ஏது? ஆதலால் உயிர் சந்தித்த-பெற்ற இரண்டாவது துணை தாய்! உயிர் உடம்பெடுத்துப் பிறந்தாயிற்று! குழந்தை என்ற பெயரில் சிலகாலம் படுத்து, தவழ்ந்து, உட்கார்ந்து, தள்ளாடி நடந்து, விழுந்து எழுந்து நடந்து பையனாயிற்று! அப்பனும் அம்மையும் எப்போதும் உடன் இருப்பதில்லை; இருக்கவும் முடிவதில்லை.

இப்போது அவர்கள் அடுத்த உயிரின் பயணத்தை ஆரம்பித்து வைக்கும் பணியில் ஈடுபட்டு விட்டனர்; அப்படியில்லாது போனாலும் அவர்கள் மூத்த தலைமுறையினர். இளமை நலம் சார்ந்த பையனுடைய உணர்வுகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. சிலர் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்வதில்லை. “பையன் நேற்று தோன்றினான், நாம் மூத்தோர்” என்ற எண்ணம் அவர்களுக்கு! இது ஒருவகை நோய்! இதனை தலைமுறை இடைவெளி என்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தனக்குச் சில ஆண்டுக்கு முன் பயணத்தைத் தொடங்கிய அண்ணன் துணையாக அமைகின்றான். அவன் ஆவல்களை, ஆர்வங்களைப் புரிந்து கொள்கிறான்; உடனுக்குடன் அடையத் துணையாய் இருந்து உதவி செய்கிறான். உணர்வில் ஒன்றாகின்றான், உருவாகி வாழ்கின்றான்; வாழ்விக்கின்றான். ஆயினும் என்ன செய்ய? வாழ்க்கையென்பது நாம் பெற்றதை மற்றவர்களும் பெறத் துணை செய்வதுதானே! அதனால் ஒவ்வொருவருடைய வாழ்வும் பிறிதோர் உயிரின் பயணத்திற்குத் துணையாய் அமைதல் இயற்கை தவிர்க்க முடியாத கடமை! அத்தகைய அமைவில் பிறிதோர் உயிர் பயணத்திற்குத் துணை செய்யத் தக்க உற்பத்திக் கருவிகளுடன் ஒருத்தி பிறந்தாள்; வளர்ந்தாள். குறிப்பிட்ட இளமைப் பருவம் மீதுாரத் தொடங்கிய நிலையில் அண்ணனிடம் கொண்டுள்ள உறவு அமைதி பெறுவதில்லை. பாசம், அன்பாக மாறி வளர்ந்தது. இப்போது காதல் பருவம். காதல் பருவத்தில் அண்ணனிடமிருந்த-ஐயனிடமிருந்த உறவு நெகிழும் நிலையில் ஒருத்தியைத் தேடுகிறது.

ஒருத்தி என்ன கடைவீதியில் கிடைப்பாளா? அப்படி கிடைத்தாலும் வாழ்க்கைத் துணைநலமாக அமைவாளா? ஆதலால் இவன் பிறந்து வளரத் தொடங்கிய காலத்திலேயே இவனுக்காக ஒரு பெண்னை ஈன்றெடுத்து வளர்த்து மனைவியாகத் தர முன்வரும் மாமனார், மாமியார் சாதாரண பணியையா செய்கிறார்கள்! இல்லை. அவர்கள் செய்வது மிகப் பெரிய பணி; உதவி! அதனாலேயே “அன்புடைய மாமன், மாமி" என் அழைக்கப்படுகிறார்கள்! ஆம்! எதிர்வரும் தேவையை நெஞ்சில் நினைத்து உதவி செய்வது ஒரு பெரிய அறம். மாப்பிள்ளைகளுக்கு வாய்க்கும் அன்புடைய மாமன், மாமி போல் பெண்கள் அனைவருக்கும் வாய்த்து விட்டால் இந்த உலகம் ஒரு சொர்க்கம்தானே! ஐயனை-அண்ணனைத் தொடர்ந்து அன்புடைய மாமன்; மாமி!

அடுத்து, காதல் மனைவி. அனைத்திலும் தனக்கு ஒப்புடைய தலைவி! இவன் வாழ்க்கைக்கு ஒப்புதல் அளித்து உடன் பயணம் செய்யும் தலைவி-மனைவி! வாழ்க்கைத் துணை நலம்! வேராக நின்று தாங்கி வளமூட்டி வாழ்வளிப்பவள்.

இதுவரை வந்தமைந்த துணைகள் உயிருள்ளன! இப்போது துணையாய் வந்தமைவது கருவியாக அமையும் பொருள்! பொருள், வாழ்க்கையின் தேவை! பொருள் இல்லார்க்கு இவ்வுலகமே இல்லை! அந்தப் பொருளும் உழைப்பால் வந்த பொருளாதலால் ஒண்பொருளாயிற்று! போதுமா? வாழ்க்கை இயக்கமாகி வளர்ந்து வருகிறது. ஆனால் முழுமையான நிறை நலம் சார்ந்த நிலை இன்னமும் வரவில்லை. ஆனால் இந்த நிலையையே முழுமை நிலை என்று பலர் எண்ணுகின்றனர். இது தவறு.

அடுத்த நிலை, குலம் சார்ந்து வாழ்தல்! அதாவது, குல மரபு பேணிக் காத்து வளர்த்தல், இங்குக் குலம் என்று கருதப்பெறுவது சாதியன்று. குலம் என்பது ஒழுக்கம், பண்பு சார்ந்த மரபு! அதாவது வழி வாயாக ஒரு சிறந்த நற்பண்பு மீதூர்ந்து வருதல்.

குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்

என்றார் கம்பர்.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள

என்பது திருக்குறள். ஆதலால்; தான் பிறந்த குலம் சார்ந்த சிலரொடு உறவு நலம் காத்தல், பண்பு நலம் சார்ந்த வாழ்வியலுக்குத் தேவை. குலம் பொருந்தி வாழ்தலுக்கும் அடுத்த நிலை, சுற்றம் சூழ வாழ்தல்! சுற்றம் சூழ வாழ்தல் அன்பினை வளர்க்கும்; தன்னம்பிக்கையைத் தரும்; பாதுகாப்பு உணர்வு மேலிடும். கோட்டை, கொத்தளங்கள் தரும் பாதுகாப்பிலும், சுற்றம் தரும் பாதுகாப்பு மிகுதி. சிறந்த சுற்றம் வாழ்விற்கு தூண்டுகோல், நெம்புகோல்! சுற்றம் தாங்குகோலாக வளர்ந்து விளங்கும். குற்றம் குறைகளை மறந்து சுற்றம் பேணுதல், வாழ்க்கை வளரத்தேவை. வாழ்க்கை வளர்ச்சியின் முழுநிலை ஊரில் நிறைவு பெறுகிறது.

ஆம்! ஊரோடு சார்ந்து ஊரவர் கேண்மை பேணி வாழ்தல் வேண்டும். ஊரை வளர்த்து வாழ்தல் வேண்டும். ஊர் எது? ஆன்றவிந்து அடங்கிய கொள்கைக் சான்றோர் பலர் வாழ்வது ஊர், ஊர் பழித்ததாலும் அதனை அணியெனக் கொண்டொழுகி ஊராகி வாழ்தலே வாழ்வின் நிறைவு. இதுவரையில் நலஞ்சார்ந்த வாழ்நிலை. நிறை நலம் என்பது வேறு. அஃது உலகந்தழீஇயது. இந்தப் படிமுறை வளர்ச்சியில் ஒர் ஆன்மா வளர்தலை வாழ்வியலாக வளர்தலை-இயக்கமாகி வளர்தலை அப்பரடிகள் அழகுற விளக்குகின்றார்.

வாழ்வியல் பயணம் முடியவில்லை; தொடர்கிறது. தொடர்கிறது என்று கூறுவது தவறு. உயிர், தன்னை உற்று நோக்குகிறது. இல்லை, உற்று நோக்க ஆன்மாவை ஆற்றுப்படுத்துகிறது. சிவம்-கடவுள்! ஆம்! உற்று நோக்கியதன் பயன்? ஆன்மா மெள்ளத் தற்சார்பு நிலை அடைந்து வந்துள்ளது. ஆற்றலில் தற்சார்பு வரவேற்கத் தக்கது. ஆனால் வாழ்நிலையில் தன்னலம் வளர்ந்து விடக்கூடாது. ஐயனிடமிருந்து அன்பு தடம் புரள்கிறது. வீட்டின் இடையில் சுவர் தலைகாட்டுகிறது. காதல் மனைவி வேலைக்காரியாகிறாள்! அந்நியமாகிறாள்! அவள், தனக்குரிய கடமைகளைச் செய்யும் இயந்திரம்! அவளுக்கு இவன் செய்ய வேண்டிய கடமைகள் இல்லை என்ற நிலை! இந்த நிலை, முறை திறம்பிய வாழ்நிலை! துய்க்கும் நெறியில் துறவு சார்ந்தாலே துய்த்தல் சிறப்பாக அமையும். துறவும், துய்த்தலும் இரட்டை நாடிகள். “பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு” என்பதறிக. இது துறவும் துய்த்தலும் ஒருங்கிணைந்த வாழ்வு நிலை. அப்போதுதான் அன்பு வளரும், அறம் வளரும், துறவு வாழ்க்கை தனி வாழ்க்கையல்ல. துறவும் துய்த்தலும் கலந்ததே நிறை நலம் சான்ற வாழ்க்கை! அப்போதுதான் உழைப்பு உணவாகிறது. கூடி உணவு உண்ணும் சுற்றம் சார்ந்த வாழ்வு மலர்கிறது. உழைப்பின் பயன் உலகை உண்பிக்கப் பயன்படுகிறது. இதுவே அறம் சார்ந்த எருதுவின் வாழ்க்கை முறை! எருது மீது எம்பெருமான்! உழைத்துப் பலபொருள் படைத்து அளித்து வாழ்வித்து வாழ்தல் எருதுவின் வாழ்க்கை! இத்தகையோர் இதயத்தில்தான் எம்பெருமான் எழுந்தருள்கின்றான்! இதயத்தை உறைவிடமாகக் கொள்கின்றான்; ஊர்தியாகக் கொள்கின்றான்! வாழ்க்கை நிறைநலம் எய்திய நிலை இதுவே!

அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலம் சுற்றம் ஒருரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறுரர்ந்த செல்வன்நீயே”

- திருநாவுக்கரசு சுவாமிகள்

24. அருள் நெறி வாழ்க்கை

நமது தாய்மொழியில் நிறைய இலக்கியங்கள் உண்டு. புறத்திணை இலக்கியங்களும் உண்டு; அகத்திணை இலக்கியங்களும் உண்டு; இந்த இரண்டையும் கடந்து வளர்ந்த அருள்திணை இலக்கியங்களாகிய பக்தி இலக்கியங்களும் உண்டு. கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பதும் அருள்நெறி வாழ்க்கை வாழ்வதும் எளியதன்று. விஞ்ஞானிக்குத் தேவையான ஆற்றல்கள் அனைத்தும் அவ்வாற்றல்களோடு சீலமாகிய தவமும் அருள் வாழ்க்கைக்குத் தேவை. விஞ்ஞானத்தின் படைப்புக்கள் உலகியலை வளப்படுத்த மாறாது பயன்படுவன போலவே, மனித இயலில் உள்ளங்களை வளப்படுத்த மாறாது பயன்பட வல்லது மெய்ஞானம். அதாவது, பத்திமை வாழ்வு! ஆயினும், இன்று பத்திமை வாழ்வு அங்ஙனம் பயன்படாமையின் காரணமாக அதன் மீது ஐயங்கள் எழுந்துள்ளன. ஏன்? எதிர்க்களம் ஒன்றே தோன்றி வளர்ந்து வருகிறது.

அருளியல் வாழ்க்கை ஆற்றல் நிறைந்த வாழ்க்கை; அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை அன்பில் தழைத்த வாழ்க்கை. அச்சத்தை உதறிய வாழ்க்கை; தனி உணர்வு செத்த வாழ்க்கை; பொதுவில் பூத்த வாழ்க்கை. இந்த இலக்கணத்தோடு நமது அருளியல் வாழ்க்கை அமையுமானால் மறுப்பார் யார்? கதிரவன் உலாப் போதலை மறுப்பாரும் உண்டோ? வீசு தென்றலை மறுப்பாரும் உண்டோ? இறைவனிருப்பிடத்தை உலகத்திற்கு அப்பரடிகள் அறிமுகப்படுத்துகின்றார். கோட்டையென விளங்கும் கோயிலைக் காட்டியா? அழி பசிக்குப் பயன்படும் அப்பத்தைக் காட்டியா? இல்லை! இல்லை! மாசில் வீணையைக் காட்டுகிறார்! இசைக்குரிய இசைவிக்கும் ஆற்றல் வேறு யாருக்கு உண்டு? கட களிறும் அடங்கவல்ல இசை! மாலையில், செவ்வானத்தில் திங்கள்! வீசுதென்றல்! அடைந்து கிடக்க, வீடு கட்டிய ஒருவன் அதனைக் கடந்து வெளியே வருகிறான்! காவலோடு வெளியே உலாப் போகிறான். ஏன்? வீசு தென்றலை அனுபவிக்க! இன்பத்திற்கு எல்லையேயான இளவெயிலை வஞ்சனையின்றி காழ்ப்புக் கலப்பின்றி - கலகப் புகைச்சலின்றி அனுபவிக்க! ஆகா, என்ன இனிமை! வண்டுகள் பாடுகின்றன! தண்ணிர் தங்கிய பொய்கை! அதன் எல்லையில் இனிய காற்று! தண்ணளி தழுவிய காற்று! இத்தகு இன்ப மயமானதாக இறையின் திருவடிகளைக் காட்டுகின்றார் அப்பர் பெருமான்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் விங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!

என்பது அப்பர் திருப்பாடல்.

இன்றைய சமுதாயத்தில் அருளியல் வாழ்க்கை இத்தகைய இன்பம் தழுவியதாக இருக்கிறதா? இன்று சமய வடிவம் தெரிகிறது; ஆனால் சமய வாழ்க்கையைக் காணோம். ஆரவாரம் கேட்கிறது; ஆனால் அமைதியைக் காணோம். தண்ணளியைக் காணோம். வேற்றுமையைக் காண்கிறோம். இந்த அவல நிலைமை எங்கிருக்கிறது. எங்கு இல்லை என்று சொல்ல முடியாது; எங்கும் பரவிக் கிடக்கிறது.

சமயம், ஒரு தத்துவம் மட்டுமல்ல, அஃதொரு வாழ்க்கை முறை. கடவுள், வாழ்த்துப் பொருளல்ல; வாழ்வுப் பொருள்; சமயம் உருவங்களோடு நிற்பதன்று. உருவங்களைக் கடந்த உணர்வுகளால், உணர்வுகளையும் கடந்த இன்ப அன்பால் மனித மனங்கள் மலரினும் சிறந்து மணம் பரப்ப வேண்டும். கனியினும் சிறந்த கனிவு பெற வேண்டும்; தீங்கரும்பினும் சிறந்த சுவை பெற வேண்டும். அப்பொழுதே சமய வாழ்வு முழுமை பெறுகிறது. இறைவன் தீதற்றோர் திருவுள்ளங்களில் எழுந்தருளவே விரும்புகின்றான், காஞ்சி மன்னன் கட்டிய பெருங்கோயிலை வறிதே விட்டு விட்டு, உள்ளத்தால் தூயதாகிய பூசலார் மனத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான். ஆதலால் உள்ளத்தைக் கோயிலாக்குங்கள்! அதனை அன்பினால் மெழுக்கிடுங்கள்! இறைவனை எழுந்தருளச் செய்யுங்கள்! பண்டு கண்ணப்பன் வழங்கிய அன்பினைப் போன்று இறைவனுக்கு வழங்குங்கள்! அவனுடைய தண்ணருள் சுரக்கும்; புன்புலால் யாக்கை புனிதமாகும். உங்கள் புலன்களில் இறைவன் தங்கித் திளைப்பான்! திருவருள் சுரப்பான். இன்பமே சூழும். எல்லோரும் வாழ்க!

25. அப்பரடிகளின் தொண்டு நெறி!

மனித உலக வாழ்க்கையின் நியதி வளர்தல், வளர்தல், வளர்தல்! இவ்வளர்ச்சிக்குத் தடை, பழமைகளின் மீதுள்ள பிடிப்பின் காரணமாகச் சிந்தனையில், செயலில் தேங்கிக் கிடத்தல், தேக்கத்தை மறுப்பதற்காகவும், மறைப்பதற்காகவும் உழுதசால் வழி உழுதல் செய்வர். உழுதசால் வழி உழும்போது பொய்த் தோற்றமான ஒர் இயக்கம் இருக்கும். ஆனால், உண்மையில் இயக்கம் இருக்காது. ஆங்கு உயிர்ப்புள்ள பழமையும் இருக்காது; புதுமையும் இருக்காது. ஏன்? உயிர்ப்புள்ள பழமையினால் புதுமையைத் தோற்றுவிக்காதிருக்க முடியாது.

எப்படி ஒரு மனிதன் செத்துப் பிணமாகிய பிறகு உயிர்ப்பில்லாது போகிறானோ, உற்பத்திக்குப் பயன்படாது போகிறானோ அதுபோலவேதான் ஒரு தத்துவம், ஒரு கொள்கை உயிர்ப்பில்லாத நிலையில் முடக்கப்படுமானால் வளர்ச்சிக்குத்த துணை செய்யாது. ஆங்கு முன்னைப் பழமையுமில்லை. பின்னைப் புதுமையுமில்லை. இங்ஙனம் சமய உலகம் தேங்கிக் கிடப்பதை எதிர்த்தார் அப்பரடிகள். அவர் சமய தத்துவங்களை உயிர்ப்புடன் ஆய்வு செய்ததால்தான் சமணத்திற்குச் சென்றார்; பின் சைவத்ததிற்கு வந்தார்; பின் இரண்டும் கடந்த பொதுமை நிலைக்கு வருகிறார்.

உழுதசால்வழி யேஉழு வான்பொருட்(டு)
இழுதை நெஞ்சம்இது என்படு கின்றதே!

(அப்பரடிகள் 5-891)

என்று இடித்துக்காட்டி 'எல்லா உலகமும் ஆனாய் நீயே!' என்ற பொதுமை நெறியையும் காட்டுகின்றார். இறைநெறி, ‘இது’, ‘அது’ என்ற சண்டைகளுக்கு இரையாகக் கூடாது. எல்லாம் வல்ல இறைவன் 'இதற்குள்ளும்' 'அதற்குள்ளும்' மட்டும்தான் இருக்கின்றான் என்றால் இறைவனுடைய பரந்துபட்ட நிலை என்னாவது?

இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாது ஒழிந்துஈசன் திறமேபேணி

(அப்பரடிகள் 6,613)

என்பது அப்பரடிகள் வாக்கு. ஈசன் உயிர்களின் தலைவன் என்பது பொருள். சிறுமதிபடைத்த மனிதர்கள், உயிர்குலத்தினரிடையில் வேறுபாடுகளை உண்டாக்கினர்; வேலிகளை அமைத்தனர். சின்னப் புத்தியின் காரணமாகத் தோன்றிய இந்த வேற்றுமைகளை இறைவன் பாற்படுத்தியும் கதைகள் கட்டத் தொடங்கி விட்டனர். அப்பரடிகள் இத்தகைய சிறுமைத்தனமான வேறுபாடுகளை முற்றாகக் கடிந்தவர். அவர் ஒரு பொதுமை நெறியாளர். -

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

என்ற அவரது வினாவே இதற்குச் சான்று.

இயற்கை உலகு, மானிட சாதிக்கு உணவாக, மருத்துவமாக, உணர்வளிக்கும் ஆசிரியனாக, எல்லை கடந்த இன்ப அன்பினை அளிக்கும் இறையாக விளங்கி வாழ்வளிக்கிறது. . இயற்கையோடியைந்த வாழ்வு யாண்டும் இல்லை. எங்கும் உயிர்ப்பில்லாத செயற்கை உலகு ஊடாடிக் கிடக்கிறது.

மனிதன் இயற்கையாகச் சிந்திப்பதில்லை. அவன் சார்பு வழிச் சிக்கியும், தன்னல வயப்பட்டும் சிந்திக்கிறான். அதனால் அச்சிந்தனையில் உயிர்ப்பில்லை; கவர்ச்சியில்லை. மனிதன் இயற்கையில் நுகர்ந்து வாழப் பொருள் ஈட்டுவதில்லை! துய்த்தும் மகிழ்வதில்லை; உயிர்ப்போடு உலா வந்து உலகத்தை வாழ்விக்கும் செல்வத்தைச் சிறைப் படுத்துகிறான்.

ஒருவன் கொள்ளைக்காரனாக மாறுகிறான். மற்றவன் கள்வனாக மாறுகிறான். இம்மறைகேடு, செல்வம் ஈட்டுதலில். இயற்கையாக வேண்டிய உழைப்பாற்றலைச் செலுத்தாமையும் உழைப்பின் விலையைக் கொடுக்காமல் பொருள்களின் மீது ஆசைப்படுதலும் தோன்றியவுடனேயே களவும் காவலும் தோன்றிவிட்டன. இஃது இயற்கை நெறி பிறழ்ந்த வாழ்வு. மனிதர்களிடையில் இன்று நிலவும் உறவுகள் கூட இயற்கையில் அமைந்தவையல்ல. மனித உறவுகளிடையே இன்று பேசப் பெறும் அன்பு, காதல் ஆகியவற்றில் கூட, இயற்கையில் அமைந்திருப்பது மிகமிகச் சிறிய விழுக்காடேயாகும்.

மனித நிலையில் இன்றைக்கு அன்பு, தன்னயப்பை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய வாயிலாக அமைந்துள்ளதே தவிர, அது தியாகமாக இல்லை. மனித குல நாகரிகத்தின் தாயகமாக, தொட்டிலாக விளங்கும் காதல் வாழ்க்கை கூட இன்று நிர்வாணமான நயப்புகளுக்கு இரையாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக உலகைத் தியாகத்தில் இயக்குவதற்காக அமைந்த துறவு நெறியும் கூட, இன்று நிறுவனங்களாகி வழக்கமான செய்முறைகளுக்கு இரையாக்கப்பட்டு, நெகிழ்ந்து கொடுக்காத இறுக்கமான நடைமுறையாகி விட்டது. இதனை, அப்பரடிகள் உணர்ந்து ‘அன்பலால் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே' என்று ஆற்றுப் படுத்துகின்றார். அவர் இறையை, வாச மலரினும், மூரி முழங்கொலி நீரிலும் காணத் தூண்டுகிறார். வழிபாடு இயற்றும்படி வழி நடத்துகிறார். அப்பரடிகள் நடையறாப் பெருந்துறவை நாட்டுக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

இங்ஙனம் விளங்கிய அப்பரடிகள், தமிழக வரலாற்றின் ஒளிவிளக்கு. அப்பரடிகள் மானிட சாதியின் அடிமைத் தனத்தை வெறுத்தவர்; எதிர்த்துப் போராடியவர்; மனித உரிமைகளைக் காப்பதற்காக ஏழாம் நூற்றாண்டிலேயே முடியாட்சியை எதிர்த்துப் போராடியவர். அந்தப் போராட்டத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களை ஏற்றுக் கொண்டவர். இனவழியிலும் மொழிவழியிலும் பொதுமைக்கு இடையூறில்லாத தனித்தன்மையைப் போற்றிக் காத்தவர். 'வடமொழியும் தென் தமிழும்-ஆனவன் காண்’ என்றும், ‘ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்’ என்றும் அருளியவர். சிறந்த ஞானியாகத் திகழ்ந்த அப்பரடிகள், உடல் உழைப்பிற்கு உரிய ஏற்றம் தந்தவர். தொண்டே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டவர். 'தொண்டலால் துணையுமில்லை' என்று உலகறியக் கூறியவர். திருக்கோயில் தொண்டு முதல், தெருவீதி பெருக்கும் தொண்டு வரையில் செய்தவர். சேக்கிழார், 'பார்வாழத் திருவீதிப் பணி செய்வார்’ என்று அப்பரடிகளைப் பாராட்டுகிறார். அப்பரடிகள் தம் “கைத் திருத்தொண்டின்" சிறப்பின் காரணமாக 'வாசியிலாக் காசு'. பெற்றவர். அப்பரடிகளின் வாழ்க்கை அன்பில் பழுத்த தவ வாழ்க்கை. அப்பரடிகள் அருளிச் செய்த பாடல்கள் அருளமுதப் பாடல்கள். அவர் தொண்டு ஞாலமுய்ய, நாமுய்யப் பயன்பட்டது; இன்றும் பயன்படவேண்டும்.

அப்பரடிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு அவர்தம் தொண்டு நெறி நிற்றலேயாம். திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ்க! வளர்க! உலகெலாம் மகிழ்க!

26. அப்பரடிகளின் அருள்நெறி

தமிழகம், வளர்ந்த நாகரிக மரபுகளைக் கொண்டு புகழ் பூத்ததாகும். மொழியியல், வாழ்வியல், கலையியல், சமயவியல் அனைத்திலும் தமிழகம் தனக்கென்று ஒரு மரபும், தனி நட்பையும் கொண்டு விளங்கிய பெருமையுடையது. காலந்தோறும் தமிழ் மொழியையும் தமிழ்நெறி மரபுகளையும் வளர்த்துப் பாதுகாத்த வரலாற்றுப் பெருமை தமிழினத்திற்கு உண்டு.

ஆயினும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ் மொழி வரலாறு- தமிழின் ஒருமைப்பாடு, சமயநெறி ஆகியனவற்றைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் ஒரு தொய்வு ஏற்பட்டது உண்மை. செந்தமிழ் வழக்கில் அயல் வழக்கு புல்லுருவி வடிவத்தில் ஊடுருவியமையால் தமிழ் மக்கள் ஏமாந்தனர். ஏமாற்ற வந்தவர்கள் ஏற்றங் கொண்டனர். தமிழ் மொழியில் அயல் மொழிச் சொற்களில் ஊடுருவல்! திருத்தலங்களுக்கிருந்த தமிழ்ப் பெயர்களில் மாற்றம்! திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் - இறைவியின் தமிழ்ப் பெயர்கள் மாற்றம்! வரலாற்று அடிப் படையில் புகழ்பெற்ற திருத்தலங்களுக்குப் பொருந்தாப் புராணங்கள் செய்து, புகழ் மங்கச் செய்தல்! கொள்கை - கோட்பாடுகளில் கலப்படம்! எல்லாம் செய்யப் பட்டன! தன்னையும், கடவுளையுமே நம்பும் தமிழர்கள் சிறு தெய்வங்களை நம்பத் தலைப்பட்டனர்; நாளையும் கோளையும் கூட நம்பி வழிபடத் தலைப்பட்டு விட்டனர். தமிழர்களின் அறிவு கெட்டது; ஆள்வினைத்திறன் சுருங்கிற்று. வாழப் பிறந்தவர்கள் பிழைப்பு நடத்தத் தலைப்பட்டனர்.

இந்தப் படுவீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை மீட்க ஏழாம் நூற்றாண்டில் ஒரு பேரொளி எழுந்தது; நாடு முழுவதும் ஒளி வீசியது; கண்மூடித்தனமான மூடப்பழக்கங்களைச் சுட்டெரித்தது; ஞானத்தைப் பரப்பியது. தமிழர்கள் எழுச்சி பெற்றனர்; ஏற்றம் பெற்றனர். அந்தப் பேரொளி எது?

அந்தப் பேரொளிதான் ஞாலமெலாம் 'அப்பரடிகள்' என்று புகழ்ந்து போற்றும் தமிழ்த் தலைவர். அப்பரடிகள் அயல் வழக்கின் காரணமாக வந்து மண்டிக் கிடந்த தீமைகளைச் சாடினார்; மக்களுக்கு அறிவு விளக்கம் தந்தார்.

முடியாட்சியை எதிர்த்த முதல்வர்

உலகம் முழுவதும் “அரசனின் ஆணை ஆண்டவனின் ஆணை” என்ற கொள்கை இருந்தபொழுது தமிழ்நாட்டில் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்திற்கு முரணாக இருந்து முடியாட்சியை, எதிர்த்துப் புரட்சி செய்த முதல் தலைவர் அப்பரடிகள்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

(ஆறாம் திருமுறை. 961)

என்று முடியாட்சியை எதிர்த்துப் புரட்சி செய்த தலைவர் அப்பரடிகள். அப்பரடிகள் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு.

ஆனால், அன்று (ஏழாம் நூற்றாண்டில்) அப்பரடிகள் எண்ணிச் சொன்னவைகள், இன்று சீர்த்திருத்தக் கருத்துக்களாகப் போற்றப்படுகின்றன. தமிழுலகில் முதன் முதலில் சமுதாயச் சீர்திருத்தத்தைச் சிந்தித்துக் கூறிய முதல் புரட்சித் தலைவர், ஞானத் தலைவர் அப்பரடிகள்.

சமுதாயச் சீர்த்திருத்தம்

தமிழ் மரபில் குலம் மட்டும் உண்டு. குலம் என்பது வழி வழி தலைமுறை சார்ந்த நெறி மரபினைச் சார்ந்தது. இதனை,

இலமென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள- திருக்குறள் 223

என்ற திருக்குறளாலும் அறிக. பிறப்பினால் அமையும் சாதிக் கொடுமைகள் தமிழகத்தில் இருந்ததில்லை. அயல் வழக்கின் நுழைவாலும் நிலபிரபுத்துவ சமுதாய அமைப்பின் காரணமாகவும் பிறப்பினால் சாதி வேற்றுமை, தீண்டாமை முதலியன வந்து புகுந்தன. இந்தச் சாதி வேற்றுமைகளை அப்பரடிகள் வன்மையாக மறுகின்றார்; கண்டிக்கின்றார்.

சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்தி ரமுங்குல மும்கொண் டென்செய்வீர்

கு.இ.VII.17.

பாத்தி ரம்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே

என்று சாடுகின்றார். மேலும்,

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தகுவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே!

என்றும் அப்பரடிகள் பாடுகின்றார்.

இதையே பாரதியும்,

சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்

என்று பாடுகின்றார்.

இந்தப் பாடல்களின் கோட்பாடுகளை இப்போதும் ஏற்காத இதயம் படைத்த, மருட்டுகின்ற மதத் தலைவர்கள் நமது நாட்டில் உள்ளனர். ஐயகோ! இன்றைய தமிழகம் யாரோ ஒரு பாவி நுழைத்த சாதிப் புன்மைகளால் சீரழிந்து வருகிறது. இந்தப் பொல்லாச் சாதித் தீமையை நீக்கினால் ஒழியத் தமிழகம் மீளாது. தமிழினமே ஒருமைப்பாடு குலைந்து சிதறுண்டு போகும். தமிழினத்தில் நுழைத்துள்ள சாதி வேற்றுமைகளை முற்றாக அகற்றத் தக்க வகையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, நடைமுறை விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். திருக்கோயில் வழிபாட்டு முறையிலும் கருவறையில் உள்ள பெருமானைப் பத்தராவார் அனைவரும் பூவும் புனலும் சொரிந்து வழிபடும் வாய்ப்பு, வழங்கப் பெறுதல் வேண்டும். இந்த உரிமை திருமுறைக் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தது.

அப்பரடிகள்,

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.

(4ஆம் திருமுறை)

என்று ஒதும் பாடலின் மூலம் பத்தராவார் ஒவ்வொருவரும் கருவறையில் எழுந்தருளியுள்ள பெருமானுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிப்பட்டுள்ளனர் என்பதை அறிகின்றோம். இன்றும் வடபுலத்தில் இந்த மரபு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இந்த உரிமை இல்லை. அர்ச்சகர் சாதியை மாற்றும் முயற்சியை விட இந்த முயற்சி பயனளிக்கத்தக்கது. பழைய மரபைப் புதுப்பிப்பதுமாகும். மூலவர்-இறைவன் சந்நிதியில் (திருவாபரணங்கள் இல்லாத நிலையில்) நடை முறைப்படுத்தலாம்.

அறக்கட்டளை முறை

இன்று நம்மை வருத்தும் தீமைகளில் இரண்டாவது வறுமை, ஏழ்மையாகும். இந்த வறுமையிலிருந்து மக்களை மீட்கத் தவறிவிட்டால் இந்தத் தலைமுறையிலேயே தமிழர்கள் வலிமை இழப்பர்; தமிழகம் தாழும். பொருளியல் துறையில் அறக்கட்டளை முறையை-தர்மகர்த்தா முறையை வலியுறுத்துவர்.

இந்தத் தர்மகர்த்தா முறையை அண்ணல் காந்தியடிகள் இன்று இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்தத் தர்மகர்த்தாக் கொள்கையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தினார்.

இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லால்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன்ஐ யாற னாரே

.
(4ஆம் திருமுறை)

இது அற்புதமான தத்துவம். இரப்பவரின் துன்பம் நீக்கவே செல்வம் உடைமை. அச் செல்வம் உடைமையும் நாமாகப் பெற்றதல்ல. இறைவன் திருவருளால் அமைந்தது. அதுவும் இரப்பவர்க்கு ஈதல் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைக்கப் பெற்றது. இது நியதி. இங்ஙனம் அல்லாத உடைமை அமைப்புகள் ஏற்கத்தக்கன அல்ல. அவை பிறர் பங்கைத் திருடிச் சேர்த்தவை. இவர்கள் பொருள் ஈட்டும் பொழுதும் பேணும்பொழுதும் கரந்து வாழ்பவர்கள். ஆதலால் இவர்களுக்கு நரகம் உறுதி என்கிறார் அப்பரடிகள்.

பழகும் பண்பியல் கோட்பாடு

மனிதகுலம் கூடிவாழும் இயல்பினது. கூடிவாழ்வதே ஒழுக்கம். கூடி வாழ்தலுக்குச் சில பண்பியல்கள் தேவை. இதனைப் "பழகும் பண்பியல்” என்று கூறலாம். இத்துறையை மேலை நாட்டினர் "Behaviorial Science" என்று வள்ர்த்துள்ளனர்.

பழகும் பண்பியலில் தலையாயது எது எனில் யாரோடும் அன்பாகப் பழகுவது. அந்நியமாவதற்குரிய செய்திகளைப் பின்தள்ளி வைத்து, ஒன்றுபடுதலுக்குரிய களங்களை உரமூட்டி வளர்த்தல். ஒருவர் இல்லாத இடத்தில் அவருடைய புகழ்மிக்க குணங்களைப் பலர் அறியக் கூறவேண்டும். அவரை நேரில் காணும்போது அவரிடம் முகமன் பேசாமல்-புகழ்ந்து கூறாமல் இடித்தும் எடுத்தும் கூறுவனவற்றைக் கூறித் திருத்த முற்படுதல் வேண்டும்.

குணங்கள் சொல்வியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்

என்று பழகும் பண்பியலுக்கு இலக்கணம் கூறுகின்றார் அப்பரடிகள்.

உழவாரத் திருத்தொண்டு

தமிழகத் திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்கள் ஆதலால் திருக்கோயில்களைப் பேணுவதில் அப்பரடிகள் ஆர்வம் மிகுதியும் காட்டினார். திருக்கோயில்களைப் பேணும் ஆர்வத்தினாலேயே உழவாரத்தினைக் கையிலேந்தி திருத்தொண்டு செய்தார். சேக்கிழார் “கைத்திருத் தொண்டு” என்று இதனைப் பாராட்டினார். அப்பரடிகள்,

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே

என்று திருக்கோயில் பணி செய்யக் கூவி அழைக்கிறார்! அப்பரடிகள், வாழ்ந்த காலத்தில் இந்தப் பணிகள் எந்த அளவுக்கு அவசியமாக இருந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இன்று இந்தப் பணிகளை அவாவி நிற்கும் திருக்கோயில்கள் எண்ணற்றவை. நமது திருக்கோயில்களை நாம் பேணிக்காக்க வேண்டும். அது நமது கடமை.

எல்லை கடந்த அருளாளர்

அப்பரடிகள் வேறுபாடுகளைக் கடந்த நெஞ்சினர். உலகந் தழிஇய உணர்வினர்; நாடு, மொழி, சமய எல்லைகள் கடந்த அருளாளர். ஒரோவழி சமணர்கள், பெளத்தர்களைக் கடிந்த பகுதிகள் சில உண்டு. இவை மதத்தின் பெயரால் தவறு செய்தவர்களைக் கண்டிக்கும் நோக்கத்திலேயன்றி வேறு அல்ல. அதே போழ்து வேறுபாடுகளையும் தனித் தன்மைகளையும் அங்கீகரிக்கும் பேருள்ளம் அப்பரடிகளுடையது.

வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்,
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

என்ற அடிகள் கவனித்துப் படித்து இன்புறத் தக்கன. இறைவனை “எல்லா உலகமும் ஆனாய்” என்ற பாடல் உலக ஒருமைப்பாட்டினை வற்புறுத்தும் பாடல்.

இன்றைய தமிழகத்திற்கு அப்பரடிகளே சிறந்த வழிகாட்டி அப்பரடிகள் காட்டிய அருள்நெறியே நமது நெறி.

உலகப் பொது நெறி. வளர்க அருள்நெறி!