உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/அப்பர்

விக்கிமூலம் இலிருந்து

25
அப்பர்

தமிழக வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு, ஒரு பொற்காலம்! “இருள்கடிந்து எழுகின்ற ஞாயிறே போன்று” அப்பரடிகள் உலாவந்த காலம்! அப்பரடிகள் சிவனடிக்கே பதித்த நெஞ்சுடையவர்; நடையறாப் பெருந்துறவு பூண்டவர்; தொண்டின் திருவுருவமேயாக நடமாடியவர். இன்று இருபதாம் நூற்றாண்டின், புதிய சீர்திருத்தம் என்று பேசப்படும் அனைத்தையும், ஏழாம் நூற்றாண்டிலேயே சிந்தித்துச் செயலாற்றிய பெருமை அப்பரடிகளுக்கு உண்டு.

முடியாட்சியை எதிர்த்து முழங்கியவர்

உலக வரலாற்றில் முடியாட்சியை எதிர்த்து 14, 15ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் கிளர்ச்சிகள் தோன்றின. அமெரிக்காவில் கி.பி. 1783ஆம் ஆண்டிலும் பிரான்சு நாட்டில் கி.பி. 1789ஆம் ஆண்டிலும், சோவியத் ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டிலும்தான் மக்கட் புரட்சி தோன்றியது. ஆனால், நமது அப்பரடிகளோ ஏழாம் நூற்றாண்டிலேயே பல்லவப் பேரரசை எதிர்த்து மனித குலத்தின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியவர்.

மனிதன் அரசுக்கு அடிமையல்ல. மனிதனின் உரிமைகளைப் பாதுகாக்கவே அரசு. அதிலும் சமயம், தனி மனிதனின் விருப்பார்வத்தைப் பொறுத்தது. இதில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே உரிமை முழக்கம் செய்து வெற்றியும் பெற்றவர்.

அப்பரடிகள் சாதிகளை எதிர்த்தவர்; தீண்டாமையை எதிர்த்தவர்; மூடத்தனமான சடங்குகளை எதிர்த்தவர்; பல்வேறு சமயத் துறைகளிடையே இணைப்பைக் கண்டவர்; மதப் புரோகிதர்கள் வழி வேற்றுமைகள் உருவாதலைத் தவிர்த்தவர்; ஒருமை நிலையை உண்டாக்கியவர்; நாடு முழுவதும் நடையாக நடந்து நாளும் நன்மையளிக்கும் அருள்நெறிக் கொள்கைகளைப் பரப்பி வந்த பெருந்தகையாளர்.

திருநெறிய தமிழ் நெறிக்கும் புத்துயிர் அறித்த அண்ணல், அப்பரடிகள். திருஞானசம்பந்தருடன் சேர்ந்து நின்று அசைவன, அசையாதன அனைத்திலும் சமயம் பெருக்கிய உத்தமர். தமிழ் நாட்டின் திருத்தொண்டு வளர்வதற்காக அவதரித்தருளிய தமிழாளியர். பன்னிரு திருமுறைகளில் 4, 5, 6ஆம் திருமுறைளை அருளிச் செய்தவர். அப்பரடிகளின் திருமுறைகளை ஓதுவோர் திருநின்ற செம்மையே செம்மை நலம் எய்துவர். இஃது உண்மை; உறுதி.

அப்பரடிகள் திருநெறிய தமிழ்க் கவிதை யுலகிற்குத் தாண்டகம் என்ற புதுவகை யாப்பை வழங்கி யருளியுள்ளவர். இதனால் “தாண்டக வேந்தர்” என்று சிறப்பித்துப் பேசப்படுகிறவர். திருஞானசம்பந்தரால் ‘அப்பர்’ என்று அழைத்துச் சிறப்பிக்கப் பெற்றவர். அந்தணரில் சிறந்த அப்பூதியடிகள் அப்பரடிகளின் திருவடிப் போதுகளைப் பற்றிக்கொண்டு உய்திபெற்றவர். சைவத்தின் இரு விழிகள்

தமிழ் நாட்டிலேயே, தொண்டை நாடு மிகவும் சிறப்புடையது. “தொண்டை நாடு சான்றோருடையது” என்பது ஆன்றோர் வாக்கு. சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் தொண்டை நாட்டின் சிறப்பினை விரிவாக விளக்கிப் பாடியுள்ளார்.

சைவ ஞானாசிரியர்கள் நால்வரில் இருவர் - அப்பரடிகளும், சுந்தரரும் அவதரித்த புண்ணிய நாடு தொண்டை நாடு. தொண்டை மண்டலத்தில் திருமுனைப்பாடி நாட்டில் சிவம் பெருக்கும் திருவாமூரில் அப்பரடிகள் தோன்றினார். அப்பரடிகளை நாட்டுக்கு அளித்த குலமரபு, சைவ வேளாண் மரபாகும்.

சைவ வேளாளர் மரபில் குறுக்கையர் குடியில் அப்பர் அவதாரம் செய்தார். திருவாமூரில் புகழனார் - மாதினியார் தம்பதிகளுக்கு இரண்டு தவ விளக்குகள் தோன்றின. ஒன்று மூத்தது - திலகவதியார் என்ற பெண். இரண்டாவது மருணீக்கியார் என்ற ஆண் மகவு. தங்களுடைய மனையறத்தின் நன்கலமாகிய மக்களை முறையே வளர்த்தனர் பெற்றோர்!

திலகவதியார்

திலகவதியாரை மணந்துகொள்ள கலிப்பகையார் விரும்பினார். இருபாலும் ஒத்துப்போய் திருமணம் செய்விக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இடையில் தமிழரசர்களுக்கும் வடபுலத்தரசர்களுக்கும் ஏற்பட்ட போரில் படைத் தலைமை ஏற்றுப் போரிட, கலிப்பகையார் சென்றுவிட்டார்.

இந்நிலையில், திலகவதியாரின் தந்தை புகழனார் இறந்து போனார். கற்புக்கடம் பூண்ட மாதினியாரும் உடன் இறந்தார். திலகவதியாரும் மருணீக்கியாரும் பெற்றோரை இழந்த நிலையில் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலையில் மேலும் ஒரு துன்பம் படர்ந்தது. அதாவது போருக்குச் சென்றிருந்த கலிப்பகையார் போரில் திறமையாகப் போரிட்டு உயிர் கொடுத்துப் புகழ் பெற்றார். இது திலகவதியார் வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத இழப்பு! என்ன செய்வார்? திலகவதியாரும் இறக்கத் துணிகிறார்.

ஆனால், அருமைத் தம்பி மருணீக்கியார் நலங்கருதி உயிர் துறந்தாரில்லை. அதேபோழ்து - திருமணம் ஆகாத நிலையேயாயினும் பேசிமுடித்த நிலையே போதுமானது என்று கைம்மை நோன்பு மேற்கொண்டு தவம் செய்யத் தலைப்பட்டார்; அத்துடன் மருணீக்கியாரைப் பேணி வளர்க்கும் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார். இதனை அப்பரடிகள்,

‘அம்மை யார் எனக்கு’ என்றென்று அரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தார் ஆரூர் ஐயரே!

(5–7:6)

என்று பாடுவதால் அறியலாம்.

உரிய அம்மையை (அம்மாவை) இழந்தேன். ஆனால், இறைவன் அம்மையைப் போலவே என்னைக் காக்க தமக்கையைத் தந்தான் என்று விளக்கி யருள்கின்றார். உறவால் தமக்கையேயாயினும் பணிநிலையில் அம்மையாகவே திலகவதியார் விளங்கினார் என்பது உய்ந்துணரத் தக்கது.

இளமைக் காலப் பணிகள்

மருணீக்கியார் நாளும் வளர்ந்து வந்தார்; இளமைக் கோலம் பெற்று விளங்கினார்: அறிவு வளரப் பெற்று உலகியல் உணர்வையும் பெற்றார். தமது குடும்பத்தில் தொடர்ந்து வந்த துன்பத்தை மறக்கப் பல நல்லறங்களை மேற்கொள்கிறார். உணவு வழங்கும் ஆதுலர் சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தல், காடு வளர்த்தல், குளங்கள் அமைத்தல், கொடையளித்தல், விருந்தளித்தல், செந்தமிழ் நாவலர்களுக்கு வல்லாங்கு வழங்குதல், எல்லார்க்கும் உதவுதல் என்று நல்லறங்கள் பலவும் செய்தார்.

சமணத்தில் சேர்தல்

இந்தக் காலம் சமண முனிவர்கள் தமிழகத்தில் கால்கொண்டிருந்த காலம். பாடலிபுத்திரத்தில் சமணப் பள்ளிகள் தோன்றின. தமிழ் நாட்டுமக்கள், சமண முனிவர்களின் வாதத் திறமையால் ஈர்க்கப் பெற்றனர். கொல்லாமையாகிய அருள்நலஞ் சார்ந்த ஒழுக்க நெறியைப் பரப்பியதனாலும் தமிழகத்தில் சமண சமயம் பரவும் நிலை உருவாகியது.

மருணீக்கியாருக்குத் தமது குடும்பத்தில் தொடர்ந்து நடந்த உயிரிழப்புகளாலும் இன்னபிற சூழ்நிலைகளாலும் நிலையாமை உணர்வில் தலைப்பட்டுத் துறவு நெறியை விரும்பினார். சமணர்களின் அறிவுரைகள் மருணீக்கியாருக்கு இதமாக அமைந்தன; சமணத்தில் சேர்ந்தார். மருணீக்கியார் அல்லலுற்ற நிலையில் அறிவுரை - அறவுரை கூறித் தேற்றி, சைவ நெறியே சாலச்சிறந்தது என்று அவருக்கு உணர்த்துவார், அன்றும் இல்லை போலும்!

மருணீக்கியார் சமணத்தில் சேர்ந்து அருங்கலை நூலான எல்லாம் கற்றுத் தெளிந்து சமணர்களால் “தரும சேனர்” என்று பாராட்டப் பெற்றார்; சமணசமயத் தலைவரானார். ஆயினும் காலப்போக்கில் சமணசமய நெறி முறைகள் இயற்கைக்கு இசைந்தில்லாமையை உணர்ந்தார். வாழ்வைத் துறந்த ஒரு வாழ்வை, மருணீக்கியார் எண்ணிப் பார்க்கிறார்.

உடலினை வருத்தச் செய்யும் நோன்புகள் பற்றிய சிந்தனை அவருக்குத் தலைப்பட்டது என்பதனை அவர் பாடிய இசைப் பாடல்களாலும் “விரதமெலாம் மாண்ட மனத்தான் கண்டாய்” என்றருளியதாலும் “வாச மலரெலாம் ஆனாய் நீயே” என்றும் “பழத்திடைச் சுவையொப்பாய்” என்றும் அருளிச் செய்த பாங்கின் வழியும் உணரமுடிகிறது. ஏன்? ஓர் ஆன்மாவின் வாழ்வில் ஏற்படும் வளர்ச்சியை முறைப்படுத்திப் பாடும் ஒரு பாடலில், துய்ப்பைத் தொடர்வதே துறவு என்ற பொருள்பட ஓதுகின்றார்.

அப்பன் நீ அம்மை நீ ஐய னும் நீ
அன்புடைய மாமனும் மாமி யும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரு ரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய் நீ
துணையா யென் நெஞ்சந் துறப்பிப் பாய் நீ
இப் பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறார்ந்த செல்வன் நீயே, (6-95-1)

என்ற பாடலை ஓதி உணர்க.

ஓர் ஆன்மாவுக்கு உறவாய் வந்து உதவி செய்பவர்களை இப்பாடலில் தந்தை, தாய், தமையன், வாழ்க்கைத் துணை நலம் தந்துதவும் அன்புடைய மாமன் - மாமி, மனைவி, நுகர்பொருள்கள், குலம், சுற்றம், ஊர் என்று எல்லாம் முறைப்படுத்தி அருளிய நலத்தினை ஓர்க! உணர்க!

ஓர் உயிர் தந்தையின் விந்துவில் கருக்கொண்டு வளர்ந்த காலத்தை இயல்பாக நாம் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. எனவே பிறப்புக்கு முதல்நிலையில் தந்தையையும் அடுத்த ஈன்று புறந்தரும் தாயையும் குறித்தார். குழந்தைப் பருவத்தில் தோழமையாகப் பழகி வாழ்வளிப்பவளும் தாயே! ஓர் ஆன்மா பிறக்கும்பொழுதே அந்த ஆன்மாவோடு துணை சேர்க்க ஒரு பெண்ணையோ ஆணையோ ஈன்று வளர்த்து அன்புடன் மணமுடித்துக் கொடுப்பவர்கள் மாமனும், மாமியுமாவர்.

உலகியலில் பெரும்பாலும் ஆண் மக்களுக்கு அன்புடைய மாமனும் மாமியும் கிடைத்து விடுவதுண்டு. பெண்களுக்கு அன்புடைய மாமனும் மாமியும் கிடைக்க வேண்டும். இது நமது பிரார்த்தனை!

ஓர் ஆன்மா வளர நல்ல குலச்சார்பு தேவை. ஆம்! ஒழுக்க இயல்புகள் குலத்தின் வழிதானே வந்தமையும்! “குலஞ்சிறக்கும் ஒழுக்கம் குடிகட் கெல்லாம்” என்றான் கம்பன். அதுபோலவே உற்றுழி உதவச் சுற்றமும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, பலர் கூடி வாழவேண்டாமா? எல்லாம் இறைவனின் அருட்கொடை! ஊர் என்பது பலர் கூடி ஒப்புரவுடையராக, ஒருமையுளராக வாழும் இடம்; உரிமையும் உறவும் உடையது சுற்றம்.

குலம், அறிவுக்கும் ஒழுகலாற்றுக்கும் களன். இத்தனை நலன்களும் அமைந்த நிலையில் மனிதன் பிறந்து வளர்கிறான். இங்ஙனம், வாழும் நலத்தினைப் பேசியவர் அப்பரடிகள். தரும சேனராக விளங்கியபோது அவருக்கு சமணசமயத்தில் நிலைகொள்ளும் உணர்வு வேறுபட்டது.

சைவத்திற்குத் திரும்புதல்

இந்தச் சூழ்நிலையில் மருணீக்கியாருக்குத் தந்தையாக, தாயாக, தமக்கையாக, குலமாக, சுற்றமாக விளங்கிய திலகவதியார் தவமியற்றினார். நாளும் திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள இறைவனிடத்தில் திலகவதி யார் வேண்டிய பிரார்த்தனை என்ன? “அடியேன் பின்வந்தவனைப் பரசமயக் குழியினின்றும் எடுத்தாள வேண்டும்” என்பதே அந்தப் பிரார்த்தனை!

மருணீக்கியார் முன்செய்த தவமும், திலகவதியார் பிரார்த்தனையும் ஒருங்கிணையத் திருவதிகை ஈசன் திருவுளம் கொண்டான். தருமசேனராகிய மருள் நீக்கியாரை ஆட்கொள்ள அவருக்கு இறைவனால் கடுங்கனல் போன்ற சூலை தரப்பெற்றது. மருணீக்கியார் குடலைச் சூலைநோய் வருத்த வருந்தினார்.

சமணர்கள், மந்திரங்களால் அந்தச் சூலை நோயை அகற்ற எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. சமணர்கள் கைவிட்டுவிட்டனர்; துன்புற்ற அவர் திலகவதியை அடைந்து தமக்கையாரை - தாயன்பில் விஞ்சிய தமக்கையாரை, தவக்கொழுந்தை, திலகவதியாரை அடைந்து நிலமிசை வீழ்ந்து வணங்கினார்.

திலகவதியார் தம் இரு கைகளாலும் மருள்நீக்கியாரை எடுத்தாள்கின்றார். சைவநெறி தழுவவும் திருவதிகைத் திருக்கோயிலில் சென்று வழிபடவும் உரிமையளிக்கும் வகையில் திலகவதியாரே “திருவாளன் திருநீறு” நல்கித் தீக்கை செய்து, உய்யுமாறு செய்தருளினார்.

சைவநெறியில் தீக்கை செய்தல், அன்று, எவ்வளவு எளிய முறையாக இருந்திருக்கிறது!

இன்று தீக்கை முறையில் குண்டங்கள் வேள்விகள் முதலியவை இடம்பெறுகின்றன. அதனால் பெருஞ்செலவு ஏற்படுகிறது. அதுமட்டுமா! சைவநெறியில் பெண்களும் தீக்கை செய்வித்தருளும் ஞானாசிரியராக அமையலாம் என்பதற்கும் திலகவதியார் மருணிக்கியாருக்கு ஞானாசிரியராக அமைந்தது ஓர் எடுத்துக்காட்டு! மருணீக்கியார் உடனே திருவதிகை வீரட்டானத்து ஈசனை வணங்கி ஊனும் உள்ளமும் பொங்கிப் பெருக திருப்பதிகம் அருளிச் செய்கின்றார்.

கூற்றாயின வாறு விலக்க கிலீர்
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக் கேஇர வும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றா தென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடி யேன்அதி கைக் கெடில
வீரட்டா னத்துறை அம்மானே! (4–1–1)

என்று பாடிப் பரவுகின்றார். திருவதிகை ஈசன் செந்தமிழ்ப் பாமாலைகளில் மகிழ்ந்து “திருநாவுக்கரசர்” என்ற புகழ் நாமத்தைச் சூட்டி அழைக்கின்றான். தமக்கையாரின் தூய அன்பினைக் கருவியாகக் கொண்டு, திருவதிகை ஈசன் அருளைப் பெற்று, சூலை நீங்கப் பெற்று, சிவனருளில் திளைத்தார்; இன்புற்றார்.

சமணர்களால் ஏற்பட்ட துன்பங்கள்

இந்நிலையில் சமண முனிவர்கள் வாளாவிருக்கவில்லை. இந்திய நாட்டில், தமிழ் நாட்டில் வளர்ந்த சமயங்களுக்கிடையில் பூசல்கள் இருந்தன என்பது உண்மை. ஆனால் அவை மதச் சண்டைகளா? என்று ஆராய்ந்தறிய வேண்டும். உலகத்தில் மதத்தின் பெயரால் போர்கள் நடந்தன என்பது உண்மை. ஆயினும், அவை மதத்திற்காக நடந்த சண்டைகள் அல்ல. ஆதிக்கச் சண்டைகளேயாம்.

தமிழ்நாட்டில் சமணம் பரவிய காலத்தில், யாரும் அதை எதிர்க்கவில்லை. வழி வழிச் சைவ வேளாண் மரபினரான மருணீக்கியார், சமண சமயத்தைச் சார்ந்த போது யார் தடுத்தார்? ஒருவரும் தடுக்கவில்லை. பல்லவ, பாண்டிய மன்னர்களை மதம் மாற்றி, அவர்களைத் தம் வசப்படுத்திக் கொண்டு மற்ற சமயத்தினருக்கு - குறிப்பாகச் சைவ சமயத்தினருக்குத் தொல்லை தந்த பொழுதே, வம்பு பிறக்கிறது.

சமண சமயத்திற்கு மருள்நீக்கியார் சென்ற பொழுது, யாரும் அவரைத் தடுக்கவில்லை. திலகவதியார் கூட மனம் வருந்தினாரேயன்றித் தடுக்கவில்லை; ஆனால் தருமசேனரான மருள்நீக்கியார், மீண்டும் சிவநெறிக்கு வர, தவம் செய்கிறார். அவ்வளவுதான்! மருள்நீக்கியார் சமணத்திலிருந்து சைவத்திற்கு மீள வந்த பொழுது, சமணப் புள்ளிகள் ஆவேசப்படுகின்றன; அரசாணையை ஏவுகின்றன.

அகிம்சையைப் போதிக்கும் சமண சமயம், திருநாவுக்கரசருக்குச் சொல்லொணாத - எழுதிக் காட்ட இயலாத கொடிய துன்பங்களை விளைவித்தது. களிற்றுக் காலால் இடற வைத்தது; நச்சுச் சோறு ஊட்டியது; நீற்றறையில் இட்டது; கல்லில் கட்டிக் கடலில் எறிந்தது. சிவனருளைத் துணையாகக் கொண்டு திருநாவுக்கரசர் இந்த இடர்களையெல்லாம் கடந்தார்; சமண சமய வன்முறைகளை வென்று விளங்கினார். ஒருவர் சமண சமயத்திலிருந்து மீண்டும் சைவத்திற்கு வந்ததில் எத்தனை எத்தனை அங்கலாய்ப்புகள்? கொடுமைகள்?

அந்நிலையிலும் கூடச் சைவ உலகம் அப்பரடிகளுக்குத் துணை நின்றதாகவும் தெரியவில்லை. ஏன்? இல்லை என்றே சொல்லலாம். மனிதரைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் நாம்! நமது சமயத் தலைவர்கள் கடவுளைப் பற்றியே அதிகம் எண்ணிக் கவலைப்படுகிறார்கள்! ஐயோ, பாவம்! வரலாறு தெரியாதவர்கள், வாழும் முறைமை தெரியாதவர்கள்!

திருநாவுக்கரசர் பொய் கடிந்தார்; பொறிகளின் மீது தனியரசாணை செலுத்தினார். பொறிகளுக்கும், புலன்களுக்கும் தோல்வியைத் தந்தார்; மெய்ந்நெறியே மேவி நின்றார்; திருவினைகளைக் கடந்து நின்றார்; திருந்தி சாத்வீக குணத்தைப் பெற்று வெற்றி கொண்டார். அன்பு நெறியிலேயே நின்றார்.

திருநாவுக்கரசர் அருளிய திருமுறைகள் ஓதத் தக்கன உணரத் தக்கன. திருநாவுக்கரசருடைய திருப்பாடல்கள் சமுதாய நலம் சார்ந்தன; சமுதாயத்தை நெறிப்படுத்தி நடத்தும் இயல்பின. திருநாவுக்கரசர் வழியில் நடை போடில், சமுதாயம் வளரும்; வாழும்.

தன்னை அறிதல்

திருநாவுக்கரசர் சிவ நெறியில் தோய்ந்து விளங்கிய புலமை மிக்கவர். சைவத்தின் கொள்கையில் சிறந்தது தன்னை அறிதல்; அதன்பின்தான் தனக்குவமையில்லாத தலைவனை அறிதல்; உணர்தல், “தம்மை யுணர்ந்து தம்மையுடைய தலைவனை உணர்தல்” என்பது சைவ மரபு.

அறிவியல் முறையில் ஆய்வு செய்தாலும் நம்மை, நமது நிலையை, நமது தேவையை உணர்தலே முதற் பணி; நமது நிலையை நமது தேவையை உணராமல் எங்கே போவது? எதைத் தேடுவது? அதனால் சைவ மரபு, தன்னை யறிதலையே சமயக் கடமைகளில் முதன்மைப்படுத்தியது. திருநாவுக்கரசரும்,

தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே,

(5-97.29)

என்றருளிச் செய்தார்.

உள்ளமே கோயில்

பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை
ஒப்போட ஓதுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்தங்கு உறுதிகாட்டி
அப்போதைக் கப்போதும் அடியவர்கட்கு ஆரமுதாம் ஆரூராரை
எப்போதும் நினையாதே இருட்டறையின் மலடுகறந்து எய்த்தவாறே.

(4–5.9)

இறைவன் உயிர்களுக்கு உயிராக இருந்தருள் செய்யும் பெற்றிமையை இந்தப் பாடல் உணர்த்துகிறது. திருநாவுக் கரசர், “உள்ளக் கோயிலில் பெருமான் எழுந்தருளியுள்ளமையைப் பலர் அறிந்து கொள்வதில்லை. உள்ளத்தில் இறைவன் உள்ளான் என்பதை அறிந்து உணராதவர்கள் இறைவனை அடைவது அரிது” என்கிறார்.

ஆம்! மக்கள் இருட்டறையில் கரிய மலட்டுப் பசுவிடம் பால் கறந்ததைப் போலத்தான் வாழ்கின்றனர். “உள்ளத்துணர்மின்”, உள்ளமே கோயில் என்று மேலும் அருளியமையையும் அறிக! “துறந்தவர் உள்ளக் கமலம் மேவும் சோதித் திருவுரு போற்றி” என்று காஞ்சிபுராணம் போற்றும்; சேக்கிழார் பெருமானும் ஆன்மாவிற்கு, தன்னை அறியும் போதுதான் தன்னுடைய அறியாமையும் இயலாமையும் அறியவரும் என்றார்.

இந்தச் சூழ்நிலையில் கண்ணொளி இழந்தாருக்குக் கோல் ஒன்று தேவைபோல, ஆன்மா, இருளிலிருந்து ஒளியை நோக்கியும், கருவூரிலிருந்து திருவூரை நோக்கியும் நடத்த இருக்கும் பயணத்திற்குத் தனித்துணை தேவை. ஒளி தேவை; பேரொளி தேவை! வழித்துணை தேவை, மருந்து தேவை என்ற உணர்வு மேலிடும் போது தான் தெய்வம் உண்டெனும் சித்தம் உண்டாகி இறைவனைத் தேடும் ஆர்வம் தலைப்படும்.

மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே,

(4–76:2)

என்ற திருப்பாடலில் ‘தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டு’ என்ற அடி கவனத்திற்குரியது. சிவ போதத்தால் ஆன்ம தரிசனம்; சிவ தரிசனத்தால் ஆன்ம சுத்தி. தகவு என்பது கொல்லாமை. கடவுள் உடலுக்குள் புகுந்து நின்று ஆட்டுவிக்கின்றான். பின் பக்குவம் வந்துழி அவனுக்குள்ளேயே ஒளித்துக் கொள்கின்றான். முன்னையது சிவ போதம். பின்னையது சிவ போகம்.

திருக்கன்றாப்பூர் திருத்தாண்டகப் பதிகத்தில் சிவன், உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பாங்கினை விளக்கமாகப் பாடியுள்ளார். மேலும்,

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே,

(5-90–7)

என்று அப்பரடிகள் அருளிச் செய்தமை அறிக. நல்லதை நினைப்பதில் நாட்டம் செலுத்தாதது நெஞ்சு. ஆதலால், “மட நெஞ்சு” என்றார். நெஞ்சம் அமைந்தது எதற்காக? ஈசன் தன் திருவருளை நினைக்கவே நெஞ்சம். நெஞ்சு நினைத்தால் அது சொல்லாக உருக்கொள்ளும்.

ஆதலால், இறைவன் திருவடிகளை நினைத்த நெஞ்சு வாய்க்கு வாழ்த்தும் பணியைத் தருகிறது. வாய் இறைவன் புகழை வாழ்த்தவே வாய்த்தது. தலை, அவன் திருமுன்பு தாழ்த்தி வணங்க வாய்த்தது. ஒரு மனிதனின் உறுப்புக்களில் தலை, நெஞ்சு, வாய் ஆகியன திருவருட் பணியில் திருத்தொண்டில் ஈடுபடுதலைப் போல வளர்ச்சிக்கும் துணை செய்யும். பாதுகாப்பும் தரும். உய்யும் நெறியும் இதுவேயாம்!

இத்தன்மையுடையோர் மன உறுதியால் ஆட்டிப் படைக்கும் ஐம்பொறிகளைக் காவலில் வைப்பர். ஒருபோதும் மனங்கலங்கார்; திகைத்து நிற்கமாட்டார். அப்பரடிகளுடைய சிந்தைக்குச் சுருதி ‘சிவாய நம’ என்ற திருநாமம்; திருமந்திரம்.

எவருடைய உள்ளத்தில் சிவன் எம்பிரான் எழுந்தருள்கின்றான்? உணவின்றி வருந்தும் அனைவருக்கும் உணவளிப்போர், அறிவு நலம் மிகுதியும் பெற்றோர் ஆகியோர் உள்ளத்தில் அவன் எழுந்தருள்கின்றான். அறிவின் அடையாளம் துன்பந்தவிர்த்தல். துன்பந் தவிர்த்தலுக்கு, துணையாயமையும் சிவனை, தேறித் தெளிதல்; உணர்தல்; வணங்குதல் - இந்த அறிவே அறிவு.

அன்புடையராதல், மெய்யன்புடையராதல் வேண்டும். பயன் கருதாது உள்ளவாறு காட்டும் அன்பு மெய்யன்பு. இந்த மெய்யன்பு பெறுதல் அவசியம். பொய்ம்மையும் தன்னலமும் எளிதில் நீங்கா. உடலை வருத்தியேனும் மெய்யன்பைப் பெறுதல் வேண்டும். அப்பரடிகள் எல்லை கடந்தவர். ஆதலால்,

எவரேனும் தாமாக! விலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போது
உகந்தடிமைத் திறம் நினைந்து,

என்பார்.

திருநீறணிந்தவர் எவரேயானால் என்ன? அவரிடம் அன்பு காட்டுக. “மனிதரில் எவரேனும்” என்ற பிறகு, கடவுளில் ஏது வேறுபாடு! அப்பரடிகள் “இவர் தேவர்; அவர் தேவர்” என்று இரண்டாகப் பலவாகப் பேசிடும் மதச் சண்டைகளை மறுக்கிறார். ஒன்றே பரம்பொருள்! இரண்டு என்பது ஒன்றில்லை! ஒன்று என்றால் ஒருமை நிலை. இரண்டு என்றால் விவகாரம்.

ஆதலால், என்றும் எங்கும் உளனாகிய ஈசனை நினைந்து திருநீறணிந்து நிற்பவர் சிவனடியார். உயிர்க்கு உயிராக விளங்கும் கடவுளாகிய நடுதறியில், ஆன்மா கட்டப்பெற்றுள்ளது. பலருக்கு இன்று நெஞ்சமே இல்லை. கூறுமாறு காணப்படுவதில்லை! நெஞ்சினைக் காணமுடியுமானால் அங்கு இறைவனைக் காணலாம்.

இறைவன், அன்பால் வழிபடுவோர் உள்ளத்தில் எழுந்தருள்கின்றான். அப்பரடிகள் காட்டும் வழிகாட்டுதலில், தன்னையறிதல், தன்னைக் கட்டுப்படுத்துதல். உயிருக்குயிராக உடம்பினுள் எழுந்தருளும் இறைவனை உணர்தல், வழிபாடு செய்தல் ஆகியன தேவை.

மனித வாழ்க்கையில் காலமும் நியதியும் இன்றியமையாதன. காலம் போற்றியதில் அப்பரடிகள் தலை நின்றவர். காலத்தை வீணாக்குபவர்களைப் “பொழுது போக்கிப் புறக்கணிப்பார்” என்று கூறுகிறார். உலக இலக்கியங்களிலேயே இல்லாத புதிய செய்தி, “காலம் களவு போதல்” என்பது. பயன்படாது செலவழிக்கப் பெறும் காலம் களவுபோன காலம் என்கிறார். “களவு படாததோர் காலம்” - இது அப்பரடிகள் அருள்வாக்கு.

ஆனால் உலகியற் சூழலில் ஐம்பொறிகளின் கொட்டத்தை நோக்குழி வாழ்வதே அரிதாகிவிடுகிறது என்றார். உடம்பே கால்! கள்ளமே நாழி! துயரமே ஏற்றம்? துன்பமே கோல். பாழுக்கே நீர் இறைத்தல். பயிர்களோ காய்கின்றன. ஐவர் பயனில் செயலிலே தலைப்பட்டு அயர்ச்சியைத் தருகின்றனர்.

உடம்பொடு உயிர் தாங்கிப் பிறந்ததன் பயன் என்ன? இந்த உடம்பினைத் திருக்கோயிலாக்குதல்; உடம்பினுள் உத்தமனைக் காணுதல், இங்ஙனம் பயன் காணா வாழ்நிலையே “பயிர் அழிய விடல்” அதாவது பயிர் தீய்ந்து போகவிடுதல்.

இந்த உடலொடு கூடிய பிறப்பு ஒரு வாய்ப்பு. துன்பத்திலிருந்து நிலையாகத் தப்பித்துக் கொள்ளுதலுக்குரியது இப் பிறப்பு. இப் பிறவியின் அருமையினை அப்பரடிகள் விளக்கி உணர்த்துகின்றார்.

பல்வேறு பிறப்புக்களில் சுழன்று வந்த உயிர் இப்பிறப்பில் உய்தி பெறத் தவறினால் புழுவாய்ப் பிறக்கவும் நேரிடலாம் என்பது அப்பரடிகளின் கருத்து. “புழுவாய்ப் பிறக்கினும்” என்ற அருள் வாக்கு எண்ணத்தக்கது.

உயிரினத்தில் மனிதப் பிறவிக்கே மனம் உண்டு என்பது பழங்காலக் கொள்கை. நினைப்பதற்கு மனம் வேண்டும். மனமே இல்லாத பிறவியில் எங்ஙனம் நினைக்க முடியும்?

ஆதலால் “இப் பிறவியில் இறைவா உன்னை நினைந்தே என் ஆவி கழியும். கழிந்ததற்பின் என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே” என்றார்.

முன்னே உரைத்தால் முகமனே யொக்கும் இம்மூவுலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியும்என் ஆவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாய், எம்பிரான் உன்னை வேண்டியதே!

(4.112,3)

என்ற திருப்பாடல் உணர்த்தும் உண்மை அறிக.

முகமன் என்பது முகஸ்துதி. இந்த உலகியலில் முகமனே மிகுதி. உள்ளவாறு பேசுவோர் எண்ணிக்கை குறைவு. முகமனில் சொல்லப்பெறும் புகழுரை உண்மையாகவும் இருக்கலாம்; உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஆயினும் முகமன் வசப்படுபவர்களின் எண்ணிக்கையே மிகுதி.

இறைவன் முன்னே, மொழியப் பெறும் புகழ், பொருள் சேர் புகழ். இறைவன் உலகுயிர்களுக்கெல்லாம் தந்தை, தாய் என்பது உண்மை. இது சத்தியம். இதனை இறைவன் திருமுன்பு மொழிதல் அவசியமில்லாதது. ஆனாலும் மக்கள் விடுவதில்லை. முறை கருதி முகமன் என்றார். உண்மையில் இறைவன் முன், மொழிவது முகமன் அல்ல, பொருள்சேர் புகழேயாம்.

இறைவா! நினைக்கும் புலன் பெற்றுள்ள மனிதப் பிறவியில், ஊனில் உயிருள்ளவரை உன்னை நினைப்பேன். நினைத்துக்கொண்டே இருப்பேன். மறவாமை ஊடாடாத நினைவில் நிலைத்திருந்து ஆவியை உன் நினைப்புடனேயே கழிப்பேன். உடலிலிருந்து உயிர் பிரிந்து போன பிறகு நான் என் செய்வேன்?

நினைக்குமாறுடைய பிறவி கிடைத்தால் பிழை வராது. நினைத்தற்குரிய மனம், நெஞ்சு, புலன் பெறாத இழி பிறவியைத் தந்தால் என் செய்வது? இறைவா, அப்போது நீ என்னை மறக்காது இருந்தருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார். கல் நெஞ்சையும் உருகச் செய்யும் பாட்டு இது.

நீதி உணர்வு

அப்பரடிகள் சமுதாயச் சிந்தனையாளர். ஆதலால் நீதி பற்றிய சிந்தனையில் சிறந்து விளங்கினார். நீதி என்பது என்ன? ஆன்மாவின் நல்ல குணம் நீதி. நீதி மனித குலத்தில் நட்பை வளர்க்கும்; பெற்ற நட்பை உறுதிப்படுத்தும்; ஒருவருக்கொருவர் நீதி நெறிமுறையில் நடந்து கொள்வார்கள்; பழகுவார்கள். அவர்கள் பிரிவதில்லை. இது வரலாற்றுண்மை.

நீதிக்கு முரணான ஆசைகள், செயல்முறைகள் தோன்றும்பொழுதுதான் மக்கள் முரண்படுகிறார்கள், மாறுபடுகிறார்கள், போரிடுகிறார்கள்; சாகிறார்கள். ஆதலால் நீதி சார்ந்த வாழ்க்கையே உயர்ந்தது, வாழ்வதற்குரியது.

மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்குதல். எல்லா உயிர்களும் வாழ்தல் ஆகியன நீதி சார்ந்த சமுதாய அமைப்பு. தமிழ் மக்களிடத்தில் நீதி சார்ந்த வாழ்க்கை முறைச் சிந்தனை, நீதி சார்ந்த வாழ்க்கை கால்கொண்டு விளங்கியது.

சங்ககாலக் கவிஞர் பக்குடுக்கை நன்கணியார் “ஒரு வீட்டில் சாப்பறை கேட்கிறது; பிறிதொரு வீட்டில் மங்கல ஒலி கேட்கிறது! ஏன் இந்த முரண்பாடு?” என்று கேட்கிறார். அருகிலிருந்த ஒருவன் “இந்த முரண்பாடு படைப்பாளனின் செயல்” என்கிறான்.

உடனே கவிஞருக்குக் கோபம் மேலிடுகிறது. “அவலமும் அழுகையும் ஒரு வீட்டில்; களிப்பும் மகிழ்ச்சியும் பிறிதொரு வீட்டில் என்று எண்ணிப் படைத்திருப்பானாயின் அப் படைப்பாளன் பண்பில்லாதவன்” என்று ஏசுகிறார்.

இது மட்டுமா? “இந்த உலகம் இன்னாததாக இருக்கலாம். ஆனால், மானிடம் இந்த இன்னாத உலகத்தை இனியன பொதுளுவதாக மாற்றி அமைக்க வெண்டும்” என்று பாடுகிறார்.

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்!
இன்னாது அம்மஇவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே!

(புறம் 194)

என்பது அந்தப் பாடல். கச்சியப்பரும் “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” என்பார்.

அப்பரடிகள், நீதியை ஏற்போர் இந்த உலகத்தில் குறைவு என்று கூறுகின்றார். நீதிநெறி நிற்க விரும்பாதார் நீதி சொல்பவரைப் பார்த்து, “நீதிதான் சொல நீ எனக்கு யார்?” என்று கேட்பர். இதிலிருந்து புலப்படும் உண்மை, உறவினர்களே நீதி சொல்லும் இயல்பினர் - உரிமையுடையவர் என்பதாகும்.

அப்பரடிகள் இறைவனை “நீதிமுறை விளங்க இம் மண்ணில் புகுந்து இம் மண்மேல் நடமாடியவன்” என்று பாடிப் பரவுகின்றார். மேலும் கோயில் பதிகத்தில் பெருமானை, “நீதியே நிறைவே” என்று பாடிப் பரவும் பாங்கினை அறிக, ஓர்க; உணர்க!

பக்தி-தொண்டு

அன்பு, மனித குலத்திற்கும் சரி, உயிர்க்குலத்திற்கும் சரி, இயல்பாயமைந்த அடிப்படைப் பண்பு - குணம். இந்த அன்பு, காட்டும் இடம் நோக்கி வேறு வேறு பெயர் பெறுகிறது.

கடவுளிடத்தில் காட்டப்பெறும் அன்பு, பக்தி என்று கூறப்பெறும். அன்பினால் ஆன்மா நினைந்தும் உணர்ந்தும் கடவுளிடம் காட்டப்பெறுவது பக்தி. தூய சிந்தனை பிறக்க, இறையன்பு வேண்டும். மனம், புத்தி, வாக்கு, செயல் எல்லாம் இறைவனை நோக்கி நடப்பதே பக்தி நிறைந்த வாழ்க்கை.

காந்தத்தை நோக்கி இரும்பு நகர்கிறது. அல்லது காந்தத்தால் இரும்பு ஈர்க்கப்படுகிறது. மனைவி கணவனைக் காதலிக்கிறாள். கொடி, கொம்பைப் பற்றிக் கொண்டு படர்கிறது. ஆறுகள் அலைகடலை நோக்கி ஓடிக் கலக்கின்றன. அதுபோல - “தைலதாரை” போல இடையறாது இறைவன் திருவடிகளைச் சிந்தனை செய்வது பக்தி.

“இறைவனை நோக்கி ஆன்மா அழுதலே பக்தி” என்பார் டென்னிஸன். நாம் வாழும் இந்தக் கலியுகத்திற்கு ஏற்ற நெறி, பக்தி நெறியாகும். எரியூட்டப் பெற்ற நெருப்பு கூட இடைவிடாது விசிறியும் ஊதியும் எரியும்படி செய்யத் தவறினால் அணைந்து போகும்.

அதுபோலவே நாம் அரிதில் முயன்று கிடைத்த ஞானம், வைராக்கியம், பக்தி முதலியவற்றை வாசனா மலம் அழித்துவிடும்! கொட்டும் மழையில் நனைவதில் குளிர் அதிகமாக இருக்காது. ஆனால், மழை ஓய்ந்தபின் மரத்தடியில் நின்றால் மரக் கிளைகளிலிருந்து விழும் சொட்டுக்கள் அதிகக் குளிரையும் நடுக்கத்தையும் தரும்.

அதுபோல மூலமலமாகிய ஆணவத்தைக் காட்டிலும் வாசனாமலம் வேகமாகத் தாக்க வல்லது. அதனால் ஆயுட்காலம் முழுவதும், ஜீவன் முத்தி நிலையிலும்கூட, பக்தி நலஞ்செறிந்த உறுதிப்பாடுடைய வாழ்க்கையைப் பேண வேண்டும்.

இந்த உலகத்தை நடத்துவது, இயக்குவது நம்பிக்கையும் பக்தியுமேயாகும். கடவுள், மனம், வாக்குகளைக் கடந்த பொருள். கடவுள் காணப்படாத பொருள் என்று வாளா இருத்தல் தற்கொலைக்குச் சமம்.

நம்பிக்கையுடன் கடவுளைத் தேடவேண்டும்; பக்தி செய்யவேண்டும். இதன்மூலம் கடவுளைக் கண்டும் விடலாம். எவ்வளவுதான் பக்தி உயர்ந்ததாயினும் பக்தி இலட்சியமல்ல. பக்தி ஒரு சாதனமே! இந்த பக்தியே இலட்சியமாக விளங்கும் இரங்கத்தக்க நிலை தோன்றியுள்ளது.

அப்பரடிகளின் அருள்நோக்கால் இந் நிலை மாற வேண்டும். அப்பரடிகள் ஞானத் தலைவர், பக்தி கொண்டு ஒழுகியவர்; திருத்தொண்டே சார்பெனக் கருதி ஒழுகியவர்; அவர்தம் வாழ்க்கையிலும் வாக்கிலும் திருத்தொண்டு மேவி இருந்தது. உடலுறுப்புக்கள் அனைத்தையும் திருத்தொண்டில் ஈடுபடுத்தும் வகையில் திரு அங்கமாலைப் பதிகம் அருளிச் செய்தார்.

திருநாவுக்கரசர், திருக்கோயில் தொண்டுகளைச் செய்யும்படித் தூண்டுகிறார். பழங்காலத்தில் திருக்கோயிலில் தொண்டுமுறையில் நிகழ்ந்த பணிகள் அனைத்தும் இன்று தொழில்களாக மாறிவிட்டன. அறநிலையத்துறை செய்த மகத்தான காரியம் திருக்கோயில் பணியாளர்களைத் தொழிலாளர்களாக்கித் தொழிற்சங்கம் அமைத்து வேலை நிறுத்தம் வரையில் போய்விட்டது! இது இரங்கத்தக்க நிலை! அப்பரடிகள், உலகியல் சார்பு எதுவும் இல்லாதவர்; சிவன்தன் திருவடிகளே பற்றெனக் கொண்டு வாழ்ந்தவர். அவர்தம் படைக்கலம் ஐந்தெழுத்துதான்; இதனை,

படைக்கல மாக உன் நாமத் தெழுத்தஞ் சென் நாவிற் கொண்டேன்,
இடைக்கலம் அல்லேன் எழுபிறப் பும் உனக் காட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித்துர நீறணிந்துன்
அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தானே!

(4.81.8)


என்ற பாடலால் அறியலாம்.

“இடைக்கலம் அல்லேன்! எழுபிறப்பும் உனக்கு ஆட் செய்கின்றேன்” என்ற சொற்றொடரால் பத்திமையில் உள்ள உறுதிப்பாடு விளங்குகிறது. அப்பரடிகள் சிவன் எம்பிரானுக்கு இராப்பகல் என்ற வேற்றுமை யின்றித் தொண்டு செய்தவர்.

சிவனை, தம் தலைவனை நினைத்தொறும் நினைத்தொறும் அகங்குழைந்து மெய்வருந்தி அழுதவர். அதனாலேயே அவர் கண்கள், “மழைவாரும் இணை விழி” என்று மாதவச் சிவஞான முனிவர் போற்றினார்.

தொழு தெழுந்து ஆடிப்பாடித்
தோத்திரம் பலவும் சொல்வி
அழுமவர்க்கு அன்பர் போலும்
ஆவடு துறையனாரே!

(4.56.4)

என்ற அருள்வாக்கு உபதேசம் அல்ல. அது, அவர் வாழ்ந்த முறை; நம்மனோர் பின்பற்ற வேண்டிய முறை. அப்பரடிகளின் அடிச்சுவட்டில் பக்தியும் தொண்டும் வளர்ந்தால் நாடு வளரும்; சிவநெறி வளரும்; செந்தமிழ் வளரும்; அல்லன அகலும்; அறம் வளரும்; அன்பும் அமைதியும் இன்பமும் வளரும்; எங்கும் அன்பே அமையும்; பெரு வாழ்வு தோன்றும்.

சமுதாயக் கேடுகளை எதிர்த்தவர்

அப்பரடிகள் இறைநெறியில் எவ்வளவு காலூன்றி நின்றாரோ அவ்வளவுக்குச் சமுதாயத் துறையிலும் காலூன்றி நின்றவர். சமுதாயக் கேடுகளைக் களைவதில் முனைப்புடன் ஈடுபட்டவர்.

அப்பரடிகளுடன் இணைந்த கருவி உழவாரம். திருக்கோயில் விமானங்கள், மதில்கள், திருச்சுற்றுகள் முதலியவற்றில் முளைத்த செடி கொடிகளை அப்புறப்படுத்துதலே உழவாரப் பணி. இந்த உழவாரத் திருத்தொண்டை ‘கைத் திருத்தொண்டு’ என்று சிறப்பித்துக் கூறுவார் சேக்கிழார். ஏன்? சிவபெருமானே - திவீழிமிழலை இறைவனே அப்பரடிகளின் கைத்திருத் தொண்டில் திருவுள்ளம் கொண்டு வாசி இல்லாத காசு அருளிய பான்மை உள்ளவாறு உணரத்தக்கது.

திருத்தொண்டு செய்யும் பாங்கு வளர்தல் வேண்டும். திருமறைக்காட்டில் மூடப்பெற்றிருந்த திருக்கோயில் கதவைச் செந்தமிழ்ப் பதிகம் பாடித் திறக்கச் செய்து எல்லோரும் வழிபாடு செய்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கினார்.

சமுதாயத்தில் நிலவிய சாதிகளை வன்மையாக மறுத்தவர் திருநாவுக்கரசர்.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திர மும்குல மும் கொண் டென்செய்வீர்
பாத்தி ரம் சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே!

(5.60.3)

என்பார். படித்தவர்கள் செய்வது சாத்திரம். படித்தவர்கள் உண்மையான சமுதாய நலத்திற்கு எதிரிடையாகக் கூடச் சாத்திரம் செய்வதுண்டு. இதைப் பாரதி “பொய்ச் சாத்திரம்” என்பான். சமுதாய ஒருமை, சமுதாய நலன் ஆகியவற்றிற்கு விரோதமாகவும் தன்னயப்புக்களின் தூண்டுதலாலும் சாத்திர விதிகள் செய்வது உண்டு. இங்ஙனம் செய்யப்பெற்ற சாத்திரங்களில் “தீண்டாமை” என்பதும் ஒன்று.

அப்பரடிகள் காலத்தில் மனிதம் போற்றும் அடிப்படை கொள்கைக்கு மாறாகச் சாதி வேற்றுமைகள் குறிப்பாகத் தீண்டாமை முதலிய தீமைகள் நிலவின. இவற்றை அப்பரடிகள் கடுமையாகச் சாடினார். அப்பரடிகளைத் தீண்டாமை எதிர்ப்புக் கொள்கையிலிருந்து மாற்றப் பல முயற்சிகளைச் சாதிப் பித்தர்கள் மேற்கொண்டனர்.

நிதியளிப்புகள், நிலக்கொடைகள், அதிகாரம் உள்ள பதவிகள் ஆகியனவெல்லாம் வழங்க முன்வந்தனர். அப்பரடிகள் எதையும் வாங்கக்கூடத் தயாராக இல்லை. தீண்டாமை விலக்குக் கொள்கைகளை விட்டுவிடவும் அவருக்கு விழைவும் இல்லை. விருப்பமும் இல்லை.

அதன்பின் ஆசாரம் முதலியனவற்றைக் காரணமாகக் காட்டித் தீண்டாமையை நிலைநிறுத்த முயல்கின்றனர். ஆயினும் அப்பரடிகள் இவற்றுக்கெல்லாம் சற்றும் இடத்தராமல் மறுக்கிறார். இதனை,

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தகுவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்மெல்லாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே!

(6–95. 10)

என்ற பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.

இந்தப் பாடல் மூலம் அப்பரடிகளுக்குத் தீண்டாமை ஒழிப்பில் இருந்த உறுதிப்பாடு புலனாகிறது. மானுடம் சமத்துவம் பெற ஒரே ஒரு தகுதி மெய்ந்நெறி நின்று ஒழுகுதல்தான்; மற்றபடி குலமன்று, கோத்திரமன்று; வேறு, எதுவுமன்று. இது நமது சமய நெறியின் தொன்மையான விழுமிய கொள்கை. இடையில் வந்த தீமையே சாதி முதலியன.

“எவனேனும் அவன் சண்டாளனாய் இருப்பினும் “சிவ” என்று சொல்வானானால் அவனோடு பேசுக; அவனோடு உறவு கொள்க; அவனோடு வசிக்க; அவனோடு இருந்து உண்க” என்பது முண்டக உபநிடத வாக்கு. பிரம்ம சூத்திரம் இதையே வழிமொழிவதாக நீலகண்டபாடியம் எடுத்து வழி மொழிந்துளது.

ஆயினும், இந்த மெய்ம்மை வாக்கு - உண்மை - இன்றுள்ள முண்டக உபநிடதத்தில் இல்லை. சாதிப் பித்தர்கள் அதனை மறைத்து விட்டனர். ஆயினும் நமது நல்லூழால் இந்த உண்மைப் பொருள், மெய்ம்மை நெறி நமக்குக் கிடைத்துவிட்டது.

இதனைத் தேடி வழங்கிய பெருமை மாதவச் சிவஞான முனிவருக்கு உரியது. மாதவச் சிவஞான முனிவர், தாம் இயற்றியருளிய கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதியில்,

சிவன்எனும் மொழியைக் கொடிய சண்டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக;
அவனோடு கலந்து பேசுக; அவனொடு
அருகிருந் துண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோ டுடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவே
றெனக்கிலை கலைசையாண் டகையே!

என்று, மொழி பெயர்த்து அருளியுள்ள பெற்றியினை நன்றிக் கடப்பாட்டுடன் எண்ணுவோம்! ஏற்று வாழ்வோம்!

சாதிப் பற்றுடையார், “இங்கு சண்டாளன் என்பது உயர்குடியிற் பிறந்து இழிநிலை எய்தினோரையே குறிக்கும். பிறவிச் சண்டாளர் எனப்படும் தாழ்த்தப்பட்டவர்களை - ஆதிதிராவிடர்களைக் குறிக்காது” என்பர்.

ஆயினும், இது சாதியைக் காப்பாற்றும் புன்மைக் குணமே; புல்லறிவாண்மையேயாம். நமது மெய்மை நெறியின் கொள்கை முற்றாகச் சாதி வேற்றுமைகளை நீக்குவது; தீண்டாமையை அறவே அகற்றுவதேயாகும். என்று, நமது சமுதாயத்தில் தீண்டாமை அறவே அகன்று, ஒரு குல அமைப்பு தோன்றுகிறதோ அன்றே நமது சமுதாயம் வளரும்; வரலாற்றுப் போக்கில் பாதுகாப்புடன் இருக்கும்; நாடு வளரும்; நமது சமயம் வளரும்.

அந்த நாளும் வருமோ? இன்று, நாடு போகும் நிலைமையை நோக்கும்போது சாதி வேற்றுமைகள் அகலும், தீண்டாமை அறவே அகலும் என்ற நம்பிக்கை உண்டாகவில்லை.

ஏன்? நமது நாட்டு அரசியல் தலைவர்கள் நோய்க்கே மருத்துவம் செய்கின்றனர். நோயின் காரணத்தை நாடி மருத்துவம் செய்வாரைக் காணோம். அது மட்டுமல்ல, எது செய்தாலும் அதற்குக் கைமாறாகப் பாராட்டு; புகழ்; வாக்குகள் என்ற பிச்சைக்காரப் புத்தி வளர்கிறது.

பழைய காலத்தில் சாதி முறைகள் இருந்தன; தீண்டாமை இருந்தது; ஆனால் அன்று அவை நெகிழ்ந்து கொடுத்தன. இன்றுள்ள சமுதாய முன்னேற்றம் நடைமுறைகள், ஒதுக்கீட்டுக் கொள்கைகள் சாதிமுறைகளை இறுக்கமாக்கிக் கொண்டு வருகின்றன.

தீண்டாமை விலக்குப் பணி, ‘குடியிருப்பு’ (காலனி) கட்டுவதன்று; ஊரில் ஊர் நடுவில் வீடு கட்டுவது; தீண்டாமை விலக்குப் பணி, சாதி - சமூகத்தின் பெயரால் இட ஒதுக்கீடும், சலுகைகளும் அல்ல.

இதனால், சலுகைகளைக் காப்பாற்றும் பொருட்டுத் தீண்டாமை, தீண்டாமை வழிபட்ட சாதி உணர்வு இறுக்கமாகிறது. சாதிகளைக் காப்பாற்றினால்தான் சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்கிறது.

இதனால், எங்கும் சாதிக் கலவரங்கள் தோன்றுகின்றன. இதற்கு மாறாகப் பின் தங்கிய நிலைக்குரிய அளவைகள் இன்னன்ன என்று ஆய்வு செய்து, தெளிந்து அந்த அடிப்படையில் மனிதகுலத்தை வரிசைப்படுத்தி அவரவர் உயர்வுக்குரிய உதவிகளைத் திட்டமிட்டுக் காலக் கெடுவுடன் வழங்கி உயர்த்தலாம்.

இதனால், கி.பி. 2001ஆம் ஆண்டிலாவது, நம்முடைய நாட்டில் ஒரே குலம் தோன்றும், சமுதாயம் உருக் கொள்ளும். அந்தப் பொற்காலம் வருமா?

அப்பரடிகள் நம்முடைய சமுதாயத்திற்குப் பொருளியல் கோட்பாட்டையும் வகுத்தருளினார். அவர்தம் பொருளியல் கோட்பாடு அறநிலை தழீஇயது. அதாவது “தர்மகர்த்தா முறை”. இந்த முறையைக் காந்தியடிகள் விரும்பினார்.

இன்று இந்தக் கோட்பாடுகளை ஏற்றுப் போற்றப் பெறாமல் இருப்பது தவக்குறைவேயாம். அதுவும் நமது சமய நிறுவனங்கள் இந்தக் கோட்பாட்டைச் செயற்படுத்தாமையை வரலாறு மன்னிக்காது.

இன்று நமது சமயம் சடங்குகளிலேயே வளர்கிறது; வாழ்கிறது. அதனால் ஆன்ம வளர்ச்சி இல்லை; அனுபவம் இல்லை. சடங்குகளை அப்பரடிகள் உடன்படா நிலையில் மறுக்கிறார். அவர் போற்றியது பக்தியும் தொண்டுமேயாம்.

கோலும் புல்லும்ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே,

(5.39.8)

என்றருளியுள்ள பாடல் மூடச் சடங்குகளை வன்மையாகக் கண்டிப்பதையும் - மறுத்துரைப்பதையும் உன்னுக. இன்று நம்மை ஆட்டிப் படைப்பன இத்தகைய சடங்குகள் தாமே!

பரிபக்குவம்

அப்பரடிகள் வளர்ந்தவர். அப்பரடிகளின் பரிபக்குவத்தையும் படிமுறை வளர்ச்சியையும் அவர்தம் திருமுறைப் பாடல்களால் உய்த்துணர முடிகிறது.

அப்பரடிகள் வாழ்க்கையின் அருமைப்பாட்டை விளக்கிப் பேசிய வகையில் உள்ள பாடல் பலப்பல. “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்!” என்று அருளியுள்ளமை எண்ணத் தக்கது.

ஆயினும் வாழ்வாங்கு வாழத் தவறின் அல்லலுண்டு என்பதை மறுப்பார் யார்? வல்லாண்மையில்லாதார் வாழ்க்கையில் நேரிடும் துன்பங்களை, விதந்து கூறுகின்றார். மனிதனை விரைவில் கெடுத்து மனிதனை ஏவல் கொள்ளுந்திறமுடையது வறுமை. இந்த உலகில் வறுமைக்கு ஈடான கொடுமை வேறொன்றும் இல்லை. வறுமை, மனிதனைத் தீமை செய்யத் துண்டும்.

வறுமை, மனிதனுடைய உணர்வைக் கெடுக்கும். நற்குணங்களையும் இழக்கச் செய்யும். “நெருப்பிற்குள் தூங்க முடியும். வறுமையோடு தூங்குதல் அரிது” என்கிறது திருக்குறள். வறுமை இருப்பது இழிவில்லை. வறுமையைக் கடக்க முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவு. ஆதலால், திருநாவுக்கரசர், “விரைந்தாளும் நல்குரவு” என்றார்.

வறுமைக்கு மாற்று செல்வமே! செல்வம் மனிதனை வறுமைத்துன்பத்திலிருந்து காப்பாற்றும். விரைந்தாளும் வறுமை வந்தடைந்தபோது உள்ள விரைவு, செல்வம் தேடுவதில், செல்வத்தினைச் சேர்ப்பதில் மனிதன் காட்டுவதில்லை. இதுதான் விநோதம்!

சினம் கொடுமையுள் கொடுமை. சினம் தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும். வறுமைக்கும் கோபத்திற்கும் உறவு உண்டு. கோபம், அனைத்துத் துன்பங்களுக்கும் தாய்! இந்த உலகில் உள்ள தொல்லைகளைக் கூர்ந்து நோக்கின் அவையனைத்துக்கும் கோபமே காரணம் என்பதை அறியலாம்.

“கோபத்தை அடக்குபவனே பாக்கியசாலி” என்றார் முகம்மது நபி. கோபம் பைத்தியத்துக்குச் சமம். அதனால் அப்பரடிகள் “பொல்லா வெகுட்சி” என்றார்.

இவைபோலவே, மகிழ்ச்சியும் துன்பத்தைச் செய்யக் கூடியதே! மகிழ்தலோடு நிற்பார் யார்? மகிழ்ச்சியாலும் மதிமயங்கித் தீமை செய்தல் உண்டு. மகிழ்ச்சியை நாடித் தகாதன செய்தலும் உண்டு.

அடுத்து வெறுப்பு. வெறுப்பு, இந்த உலகத்தையே துன்பச் சுமையாக்கிவிடும். வெறுப்பே ஒரு சுமை. வெறுப்பு மிகமிகப் பளுவானது. ஆம்! வெறுக்கப்படுபவன் அழியும் வரையில் அவனை அழிப்பதற்குரிய காரியங்கள் செய்ய வேண்டுமே! அதனால், வெறுப்பு உடையாரிடம் மற்றவர்க்கு வெறுப்பன செய்யத்தான் நேரம் இருக்கும்; தாம் வாழ முடியாது.

வறுமை, பொல்லா வெகுட்சி, வெறுப்பு ஆகியன வாழ்க்கையின் எதிர்மறை இயல்புகளாக அமைந்தும் செல்வம், மகிழ்ச்சி முதலியன உடன்பாட்டு நிலையில் அமைந்தும் மானுட வாழ்க்கையை அரிப்பவை. இவற்றின் வலையில் வீழாமல் திருவாரூரில் எழுந்தருளியுள்ள கற்பகத்தைப் பற்றிக் கொள்வது பாதுகாப்பு.

விரைந்தாளும் நல்குரவே, செல்வே, பொல்லா
வெகுட்சியே, மகிழ்ச்சியே, வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம்! யானோ வானோர்
கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்றும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே!

(6.27.8)

என்ற பாடல் நினையத் தக்கது.

ஐம்பொறிகள் இயல்பாக நல்லவையே. ஆயினும் முறையாகப் பழக்கப்படாத ஐம்பொறிகள் தீமையே செய்யும். ஐம்பொறிகளை அப்பரடிகள் “வஞ்சப் பொறிகள்” என்று கூறுகிறார். ஏன்? எதனால்? நல்லன செய்தல் போலத் தீமை செய்தலால் ‘வஞ்சப் பொறிகள்’ என்றார், ஐம்பொறிகளை.

புண் சுமந்த விலங்கின் உடலினை, நோய் ஏற்படும் வகையில் கொத்தித் தின்னும் காக்கை போல்வன என்று கூறுகிறார். ஆம்! ஐம்பொறிகளுக்கு நமது துன்பம் தெரியாது! தெரியாது! அதனால், “மூள்வாய தொழிற் பஞ்சேந்திரிய வஞ்ச முகரி காண்” என்றார்.

நாள்தோறும் ஐம்பொறிகள் நடத்தும் ஆட்சியை “மம்மர் ஆட்சி” என்றார். ஐம்பொறிகளின் வழியில் வீழாது தடுத்து, காப்பாற்றிக் கொள்ள, பற்றிக் கொள்ளும் நெடுந்தூண், திருவாரூர் ஆளும் நெடுந்தூண் என்றார்.

மூள்வாய தொழிற் பஞ்சேந் திரிய வஞ்ச
முகரி காண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள் வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர்க் கமையாதே! யானேல் வானோர்

நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே!

(6.27.9)

இந்தப் பிறவித் துன்பத்தை மாற்ற வழிதான் என்ன? வேதம் ஓதுதலால் அடைய இயலுமா? வேள்விகள் செய்யலாமா? நீதி நூல்களைப் படித்தால் சாலுமா? இவையெல்லாம் பயன் தாரா! ஈசனை உணர்தலே வழி; வேறு வழியே இல்லை!

அதனால்தான் “நிலையில்லாத நீ நிலைபெறுமாறு வேண்டுதியேல் ஈசனை நினைந்துய்ம்மின்”; தில்லையுள் கூத்தனுக்கு அன்பு பூண்டால், ஆட்பட்டால் அல்லல் என் செய்யும்? வல் வினைகள்தான் என் செய்யும்? ஒன்றும் செய்யா? நமன் தமரும், “சிவன் தமர்” என்று ஓடிவிடும்!” என்று கூறுகிறார்.

பழிபாவங்களுக்குக் கழுவாய் எது?

பாவம், பழி நீங்குவதற்கு என்ன வழி? என்று நினைந்து, அப்பரடிகள் பாவநாசத் திருப்பதிகம் அருளிச் செய்துள்ளார். உலகந் தோன்றிய நாள் தொட்டு மனித வாழ்க்கையில் பாவங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. அதே போழ்து பாவ நீக்கத்திற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன.

கிறித்தவ மத வரலாற்றில் “பாவ மன்னிப்புச் சீட்டு முறை” எழுப்பிய புயல், - புயலின் விளைவு நாடறிந்தோருக்குத் தெரியும்.

மனு நீதிச் சோழன் வரலாற்றில் பாவமன்னிப்புச் சடங்குகளை அமைச்சர்கள் விதந்து கூறுவதைச் சேக்கிழார் எடுத்து கூறுகிறார். பாவமும் பழியும் அற்று வாழ்தல் வேண்டும்.

கங்கையாடுவதும் காவிரியாடுவதும் பாவநீக்கத்திற்குத் துணை செய்யுமா? சாத்திரங்கள் பல கற்றும் என்ன பயன்? காலையில் நித்தம் நீரில் மூழ்கி என்ன பயன்? காடுகளிலும் நாடுகளிலும் திரிவதால் என்ன பயன்? ஊன் வருந்த நோன்பிருந்து என்ன பயன்? இவையெல்லாம் பாவம் நீக்கா.

அரனுக்கு அன்பில்லாமல் ஆயிரம் ஆயிரம் நற்பணிகள் செய்யலாம். ஓடும் இயல்புடைய தண்ணீரை ஓட்டைக் குடத்தில் தொகுத்து வைத்து மூடினால் நிற்குமா? அதுபோலத்தான் அரனுக்கு அன்பில்லாது செய்த பணிகள்! அரனுக்கு அன்பின்றிச் செய்யும் அறம் அறமல்ல.

ஈசனுக்கு அன்புடையோரே பாவம் பழியிலிருந்து விடுதலை பெற முடியும்! இறைவன் சிவன்! அவனை நினைந்து ஏத்தி மகிழின் பயனுண்டு. ஈசன் திருவடிகளைப் பற்றுக் கோடாகக் கொண்டால் அவன் காப்பான்! அவன் காவலாளன்!

சிவன் - ஈசன் ஊனிலும் உயிரிலும் உணர்விலும் கலந்து நின்று அருள் செய்வான்; கலந்து நின்று காத்தல் செய்வான். ஆதலால், எங்கும் ஈசன் உளன் என்று எண்ணி, ஈசன் திறமே பேணின் பாவங்கள் நீங்கும்; பழி அகலும்.

அரனுக்கு அன்பு பூணுதல், அரன் உணர்த்தும் வழியில் திருத்தொண்டு செய்தல் பாவநீக்கத்திற்குரிய வழி. மற்றபடி கழுவாய் முதலியன பயன் தரா. பாவம், பழி முதலியவற்றைக் கழுவாய்முறை நீக்காது.

ஆதலால், பாவம் செய்யற்க! ஓடித் திரியும் மனத்தை மடைமாற்றம் செய்க! ஒரோவழி பாவம் நிகழ்ந்துவிட்டால் இறைவனை நினைந்து நினைந்து உருகுக! இதுவே பாவ மன்னிப்புப் பெறும் முறை.

இடையறாது இறைவனைத் துதித்தால் பாவம் அணுகாது. ஒரோவழி அணுகினாலும் அரனடிக்கே வைத்த பக்தியைச் சாதனமாகக் கொண்டால், அது மேலும் தீவிரமாக வீழ்த்திவிடாது.

கல்வியும் ஞானமும்

இந்தப் பயிற்சிக்குக் கல்வியும் ஞானமும் தேவை. மானுடப் பிறவி பயனுடைய பிறவியாதல் கல்வியினாலேயாம். அதனாலன்றோ தமிழ்மறை ‘கற்க’ என்றது.

“கற்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பதே நல்லது” என்றும் “அறியாமையே தீவினையின் மூலவேர்” என்றும் பிளேட்டோ கூறினார்.

யௌவன இத்தாலி கண்ட மாஜினி “கல்வியே ஆன்மாவின் உணவு; கல்வி இல்லையேல் நமது சக்திகள் ஸ்தம்பித்துவிடும்; பயன் தரா” என்றான்.

கல்வியின் துறைகள் பலப்பல. அதில் துறைதோறும் கல்வி மெய்ப்பொருள் கல்வி என்று பிரித்துப் பார்க்க வேண்டும். “நூலறிவு வந்துவிடும், மெய்ப்பொருள் அறிவு வரத் தயங்குகிறது” என்பர் சிந்தனையாளர்.

முறையான கல்வி மனிதனைச் சான்றோன் ஆக்கும்; ஞானியாக்கும். திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் மெய்ப்பொருள் விளக்க நூல்கள் ஆகியவற்றை உண்மை உணர்த்தும் நூல்கள் என்று கூறலாம்.

உண்மை நூல்களைக் கல்லாதவர் மனத்தில் கடவுள் அணுகவும் மாட்டான். ஒரோவழி அணுகி வந்தாலும் அவர்தம் அறிவில், உள்ளத்தில் நின்றருள் செய்ய மாட்டான். “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்பது திருமந்திரம். திருஞானசம்பந்தரும் “கற்றல் கேட்டல் உடையார் பெரியார்” என்றார். நமது திருநாவுக்கரசர்,

கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோரும் காத லானை,

என்றார். கல்லாதார் மனம் இருள் நிறைந்தது. அறியாமையின் ஆதிக்கத்திலிருப்பது. ஆதலால் ஞானமே வடிவான அவனை, “கல்லாதார் மனத்தணுகாக் கடவுள்” என்றார். அடுத்து “கற்றார்கள் உற்றோருங் காதலான்” என்றார்.

கல்வி கற்றல் ஒரு கலை; சிறந்த பொழுதுபோக்கு. குறைந்த செலவில் நடைபெறக்கூடிய பொழுதுபோக்கு. அதுமட்டுமா? மனிதன் பூரணத்துவம் அடையவேண்டும். அதாவது அன்பு, ஆன்மா, உடல் மூன்றும் சம விகிதத்தில் பயன் நோக்கி வளரவேண்டும்.

தூய வாழ்வின் வழியில்தான் சரியான கல்வி கிடைக்கும். நூல்களைப் படித்தால் மட்டும் போதாது. அடுப்பில் எரியும் கட்டைகளைப் புரட்டிப் போட்டால் நெருப்பு நன்றாக எரியும். அதுபோலப் படித்த நூல்களை, செய்திகளை அசைபோடவேண்டும்; உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருநாவுக்கரசர் “உற்று, ஓர்தல்” என்றருளிச் செய்கின்றார். உற்று ஓர்தல் என்றால் கூர்ந்து ஆராய்தல், “நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்?” என்று ஆராய்ந்தறிதலைத்தான் உற்று ஓர்தல் என்று அப்பரடிகள் விளக்கியருளினார்.

இங்ஙனம் கற்றால்தான் ஏதம் களையலாம். ஆன்மா, ஆணவப் பிணைப்பு, இறைவன் திருவருள் ஆகியன பற்றி அறிந்து ஆராய்ந்து தெளிந்த சிந்தனைபெற்றுத் தெய்வம் தெளிதல் கல்வியின் பயன்.

ஆன்மாவின் அறிவு கருவிகளில் சிறந்தது சித்தம். சித்தம், சிந்தனை செய்தலுக்குப் பயன்படுவது. சிந்தனை சித்தத்தில் செறிய வேண்டும். அதாவது, சிவனடியில் தோய்ந்த சிந்தனை தேவை. சிவஞானத்தைச் சிந்திக்கும் இயல்பு, சித்தத்திற்கு மிகுதியும் உண்டு.

சிவனடியைச் சிந்திக்கும் பேறுபெற்ற மனிதர்கள் வறிதே வாழார். அவர்தம் வாழ்க்கைக்குக் குறிக்கோள் உண்டு. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை - பயனற்றது. அதனால் திருநாவுக்கரசர் “குறிக்கோள் இலாது கெட்டேன்” எனறார்.

மானுடப் பிறவி அமைந்தது விபத்தினால் அல்ல. இந்த வாழ்வியலில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. முறை பிறழாத நிகழ்ச்சியும் இருக்கிறது. இவற்றை உற்று நோக்கும்போதே, இந்த மானுட வாழ்வுக்கு ஏதோ குறிக்கோள் இருக்கவேண்டும் என்பதை உய்த்துணர முடிகிறது. அந்தக் குறிக்கோள்தான் என்ன?

குறைவிலிருந்து விடுதலை பெற்று நிறைவு பெறுதல்; குற்றங்களினின்று நீங்குதல் என்பதே. எனவே, நின்று ஒழுக வேண்டிய நெறியறிந்து அந்நெறி நின்று ஒழுகுதல் வேண்டும். அப்பரடிகள்,

செறிவிலேன் சிந்தை யுள்ளே
சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்
கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்
நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்
ஆவடு துறையு ளானே!

(4.57.7)

என்று பாடுகிறார்.

செறிவு ஏன் கைகூடவில்லை? உயிர் வாழ்க்கை அனுபவம் விநோதமானது. வாழ்க்கை என்பது அடுப்பு. ஆசை என்ற தீ அந்த அடுப்பில் பற்றி எரிகிறது. ஆசையினால் அடையும் துய்ப்பு, சொறி சிரங்கைச் சொரிந்தால் கிடைக்கும் சிறுபொழுது இன்பம் போன்றது.

ஆன்மா, இந்தச் சிறுபொழுது அனுபவ இன்பத்தையே சதமெனக் கருதி விளையாடுகிறது! எதுபோல? உலைப் பானையில் இளஞ்சூட்டில் விளையாடுகின்ற ஆமை போல! இளஞ்சூடாக இருந்த நீர் சில மணித் துளிகளில் கொதி நிலைக்கு மாறியதும் அதில் கிடக்கும் ஆமை அழிந்து விடும்.

அதுபோல ஆன்மா அழியலாகாது; தப்பித்து உய்தி பெறுதல் வேண்டும். உய்தி பெற என்ன வழி? சிவபெருமான் திருவடிகளை அன்பினால் நினைந்து குழைந்து வாழ்தலே உய்யும் வழி. மேலும்,

வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்தில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தன் கூழைமையே!

(4.81.5)

என்பார்.

பிறவியை இழிவெனக் கருதாதீர்! பிறவியைத் துன்பம் என எண்ணாதீர்! வாய்த்த இப்பிறவியை மதித்துப் போற்றி வாழ்மின்! தில்லைக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதே கூழைமை - கடமை! இதுவே உய்யும் நெறி.

தொண்டு

ஆற்றல் மிக்க அன்பால் இறைவனைப் பலகாலும் அழைக்க வேண்டும். சிவன் திருவருளை நினையுமாறு நினைந்து வாழ்த்தவேண்டும். பக்தி, ஞானம் இவ்விரண்டின் பயன் தொண்டு. “தொண்டலால் உயிர்க்கு ஊதியமில்லை” என்றும் “தொண்டலால் துணையும் இல்லை” என்றும் அப்பரடிகள் விதந்து கூறுவார்.

“தொண்டே முக்திக்கு வாயில்” என்றார் அண்ணல் காந்தியடிகள். ஆனால் உலகியல் நடப்பு என்ன? இந்த உலகில் பலரும் அதிகாரத்தையே விரும்புகின்றனர். தொண்டு செய்ய யாரும் முன்வருவதில்லை. இறைவன் ஆன்மாக்களைத் தொண்டு நெறியில் பூட்டித்தான் ஆட்கொள்கிறான். உண்டு வாழ்வது தொண்டு செய்தற்கேயாம்!

தொண்டு செய் தென்றும் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீ பணிசெய் மட நெஞ்சமே

(5.33.10)

என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளமையை ஓர்க! அப்பரடிகள் மேற்கொண்ட திருத்தொண்டினைத் திருவீழிமிழலையில் எழுந்தருளியுள்ள பெருமான் “கைத்திருத்தொண்டு” என்று சிறப்பித்து வாசியில்லாக் காசு தந்தருளிய பெற்றிமையை அறிந்து தொண்டு நெறியை மேற்கொள்வோமாக!

சமயப் பொறை

ஆற்றல் மிக்க அன்பும் தொண்டுள்ளமும் பெற வேண்டுமாயின் “இவர் தேவர், அவர் தேவர்” என்று பூசலிடும் குணம் ஆகாது. சமயங்களுக்கிடையில் கூடப் பகையும் பிணக்கும் கூடாது. நமது சமயநெறி வளர்ந்த நெறி. பொதுமை நெறியும் கூட!

ஆயினும் சைவ நெறியின் கொள்கை, கோட்பாடுகளை உணர்ந்து கொள்ளாமல் ஆத்திரத்தில் எரிச்சலில் சிலர் புதுச்சமயம் ஒன்றினைத் தோற்றுவிக்கின்றனர். இது அவசிய மற்றது.

விரிவிலா அறிவி னார்கள்
வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்
எம்பிராற் கேற்ற தாகும்

பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளுர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின் றேனே!

(4.60.9)

என்றார். மேலும் “பல்வேறு சமயங்கள் கருதினானை” என்றார். ஆதலால் திருநாவுக்கரசர் சைவ நெறியில் நின்றவர்; அதேபோழ்து உலகின் பல்வேறு சமயங்களிடையேயும் ஒருமை நிலை கண்ட பெருந்தகையாளர்.

திருநாவுக்கரசர் - அப்பரடிகள் என்ற ஞானக் கதிரவனாகத் தமிழகத்தில் உலா வந்தார். தமிழர்களின் சமய உரிமைக்குப் போராடினார்.

புறச் சமயங்களை ஆய்வு செய்தும், நின்று ஒழுகியும் சைவ சமயமே சமயம் எனத் தெளிந்தார்; வாழ்க்கையை மதிக்கக் கற்றுக்கொடுத்தார்; பக்தியும் தொண்டும் உய்வைத் தரும் என்றார். சமுதாய உயர்வு தாழ்வுகளை அகற்றி ஒருமை நலம் காணத் தொண்டு செய்தார்; சமயங்களுக்குள் ஒருமைப்பாடு கண்டார்; போற்றினார்.

இன்று தமிழ்நாடு அடைந்துள்ள இடர்ப்பாடுகளிலிருந்து மீள ஒரே வழி, அப்பரடிகளின் திருவடிகள் தோய்ந்த தடத்தில் செல்வதேயாம்.

என் கடன் பணி செய்து கிடப்பதே!