குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/பரவும் முறையைப் பயில்க!

விக்கிமூலம் இலிருந்து

24
பரவும் முறையைப் பயில்க!

அறிவியல், தத்துவம் மட்டுமல்ல. அஃதொரு செய்முறை. விதிமுறைகளைப் பிசைந்து செய்யும் செயல்கள் அறிவியற் பயனைக் கூட்டுவிக்கும். இது பருவுலகில் காணப்படும் காட்சி.

அதுபோலவே, நுண்ணியலைச் சார்ந்த அறிவியலும் உண்டு. அதன் பெயர் சமயம். உயிர் நுண்பொருள். கடவுள் நுண் பொருள். இவை இரண்டைப் பற்றியும் திறனாய்வு செய்யும் தத்துவக் கொள்கைக்குச் சமயம் என்பது பெயர்.

உயிர் - கடவுள் இரண்டும் நுண் பொருளானாலும் இவை இரண்டுமின்றி உலகின் பருப்பொருள்கள் பொருளுடையனவாதலில்லை; பயன்படுதலும் இல்லை. நுண் பொருளுக்கும் பருப் பொருளுக்கும் உறவு ஏற்படுத்தி ஒன்றோடொன்று தொடர்புண்டாக்கி ஒன்றின் குறையைப் பிறிதொன்றின் மூலம் நீக்கி நிறை நலம் நல்குதல் வாழ்வியலின் அடிப்படை.

இந்த அடிப்படையை ஆராய்ந்து இருவேறு நுண் பொருள்களாக இருக்கின்ற கடவுள் - உயிர் இவ்விரண்டி னிடையே இசைவு உண்டாக்குதல் சமயநெறியின் அடுத்த இலட்சியம்.

உயிர் நுண் பொருள்; அறிவுப் பொருள் ஆயினும் உயிரின் அறிவு இயல்பில் குறையுடையது. ஆனாலும் நிறை அறிவைப் பெறத் தகுதியுடையது. கடவுள் நுண் பொருளானாலும் பேரறிவுப் பெரும் பொருள். உயிரின் குறையறிவை நிறை அறிவாக்குவது இறையின் பேரறிவே. இறையின் பேரறிவை, உயிர் பெறுதற்குரிய அறிவுச் செயல்முறையே வழிபாடு.

வழிபாடு ஒரு சடங்கல்ல. அஃது ஓர் உயிரியல் செய்யும்முறை. இறையின் பேரறிவை நினைந்து அதனோடு ஒன்றாகிக் கலந்து அதன் பேரறிவைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டு உயிர் வளர்ந்து வாழுதலே வழிபாட்டின் பயன். உலகியல் விஞ்ஞானச் செயல் முறையினும் இந்தச் செயல்முறை அருமையானது; எளிதில் கைவரத் தக்கதன்று. இன்று பலர் வழிபடுகின்றனர். ஆனால், வல்லாங்கு வழிபடுபவர் எத்துணை பேர்? இல்லை என்றே கூறினும் மிகையன்று.

“நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்?” என்றார் ஒரு சித்தர். என்ன பொருள்? நட்ட கல்லைச் சமய மெய்யுணர்வு வழிபாட்டு முறையில் கடவுளாக்க வேண்டும். இன்றும் பலர் பிறப்பின் வழி திருக்கோயில்களில் பூசனை உரிமை பெறுகின்றனர். அவர்களுக்குப் பயிற்சி இல்லை. இறை வழிபாடு - அதிலும் குறிப்பாகத் திருக்கோயில் வழிபாடு பயின்று செய்ய வேண்டிய ஒன்று. அஃது ஓர் அருள் நுட்பக்கலை! முயன்றால் எளிதில் கைகூடும். ஆனாலும் அருமையானது.

பூசனையில் இடையீடின்றி நினைத்தலாகிய தியானம் இன்றைக்குப் பலருக்குக் கைகூடுவதில்லை. அறுபட்ட கயிற்றைப்போல அறுந்த சிந்தனையே இன்று பலருக்கு! நெஞ்சத்தால் இறைவன் திருநாமங்களை எண்ணுவோர் இல்லை. அகப் பூசனை செய்வோர் இன்று யார்? இதயக் கமலம் எத்துணை பேருக்குத் தெரியும்? உள்ளக் கிழியில் உருவெழுதும் உயர்கலை தெரிய வேண்டாமா? உள்ளக் கிழியில் எழுதிய உருவைப் புறத்தே கல்லில் - செம்பில் எழுந்தருளச் செய்விக்கும் திறன் பெற்றார் யார்? வழிபாட்டுக்கு இன்று பயிற்சி தருவாரில்லை. பயிற்சிபெற வேண்டுமென்ற உணர்வே கூட இன்று மறைந்து விட்டது.

திருஞானசம்பந்தரே வழிபாட்டு முறைகளைத் தாம் பயின்றதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், நம்மனோர்க்கு வழிபாட்டு முறைகளைப் பயிலும் ஆர்வமில்லை; அஃது ஓர் இறை இயல் அறிவு என்ற நம்பிக்கைகூட இல்லை. ஆதலால், நாள்தோறும் இறைவனை வழிபட வேண்டும். வழிபட வேண்டிய முறையைப் பயின்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதே திருவருளின்பம் கிடைக்கும். இதனைத் திருஞானசம்பந்தர்,

மரவம் பொழில்சூழ் கடவூர்
மண்ணுமயான மமர்ந்த
அரவமசைத்த பெருமா
னகலமறிய லாகாப்
பரவுமுறையே பயிலும்
பந்தன்செஞ்சொன் மாலை
இரவும்பகலும் பரவி
நினைவார்வினைக ளிலரே,

என்று பாடுகின்றார்.