குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/உய்வளிக்கும் தெய்வசிகாமணி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

35


உய்வளிக்கும் தெய்வசிகாமணி


அருள்தரு தெய்வசிகாமணி தேசிகேந்திரன் புகழ் பாடும் நான்மணிமாலை தத்துவச் செறிவுடையது. சிவஞானம் பொதுளும் பெருமையுடையது.

அருள்:- அன்பீனுங் குழவி, அருள்! அன்பு வளர்ந்த நிலையில் அருளாகிறது! அன்பு தற்சார்புடையது. உறவுமுறை பற்றியது. உதவிகள் நாடுந்தன்மையது; நன்றி நாடுவது! அருள், பிறர் நலச் சார்புடையது; உறவு முறைகளைக் கடந்தது. திருவள்ளுவர் எடுத்துக் காட்டும் மருந்து மரம் அருளுக்கு ஒரு விளக்கம். அறம் செய்ய வேண்டுமாயின் அருளுணர்வு வேண்டும். பயன் நோக்கிய பணி அறமன்று. தற்சார்புடைய பணி அறமன்று. பயன் கருதிய பணி அறனிலை வாணிகமேயாம்! பிறர் நலம் கருதிய பணிகளே அறம்; அர்ப்பணிப்புணர்வுடன் செய்வதே அறம்!

சிவபெருமானின் ஊர்தி எருது. இந்த எருதினை ‘அறம்’ என்று கூறுவது மரபு. சிவபெருமான் ஓங்கி உயர்த்தும் கொடியும் எருதுக் கொடியேயாம்! உலகியலில் பசுவே சிறந்தது; வணங்கத்தக்கது என்பர். ஆனால் சிவநெறியில் எருதே உயர்ந்தது; வழிபாட்டுக்குரியது. ஏன்? எருது கடுமையான உழைப்புப் பிராணி! வைக்கோலைத் தின்று உயிர் வாழும்; தான் உழைத்து மற்றவர்களுக்கு நெல் முதலிய சுவை நிறைந்த நுகர் பொருள்களை வழங்கும்! எருதுகளின் உழைப்பில் விளையும் சுவையும் நலமும் செறிந்த பொருள்கள் மனித குலத்திற்கு! எருதுகள் சாரமற்ற வைக்கோலைத் தின்று உயிர் வாழும்! அதுவும் கூடத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்! “உழுத நோன்பகடு அழிதின் றாங்கு” என்று புறம் பேசும். அறங்கள் செய்ய வேண்டுமாயின் அன்பின் ஆக்கமாகிய அருள் வேண்டும். இறைவனின் கருணையை அருள் என்று கூறுவது சமய மரபு; வழக்கு! ‘அன்பு எனக்கு அருளாம்’ என்பது திருவாசகம். இறைவனுடைய அருட்பார்வையால் தான் நமது உள்ளத்தில் அருள் முகிழ்க்க வேண்டும். “அருள் உண்டெனில் அறம் உண்டு”.

உயிர்க் குலத்திற்கு அருள் நலஞ் செறிந்த அறங்கள் செய்து வாழவேண்டுமெனில் பொருள் வேண்டும். அந்தப் பொருளும் நல்ல வழியில் ஈட்டிய பொருளாக இருக்க வேண்டும். “அவ்வருளும் நல்ல பொருள் உண்டெனில் உண்டு” பிறர் பங்கைத் திருடிய பொருள் நல்ல பொருள் ஆகாது. சலத்தாற் செய்த பொருள் நல்ல பொருள் அல்ல! பழியஞ்சி, பழிபடரா நிலையில் உழைப்பினால் திரட்டிய பொருளே நல்ல பொருள். நல்ல பொருளுண்டெனில் அறமுண்டு; இன்பமுண்டு. துய்ப்பன போக மலம் துய்க்கும் வாழ்நெறியே உய்யும் நெறியின் தொடக்கம். இன்பம் துய்த்தலும் பல வழிப்பட்ட செயலே! ஆயினும் உய்யுமாறு உய்த்துச் செலுத்தும் போகம் இன்பம்!

உய்யும் நெறியுணராமல் வாழ்தல் இருள் மலஞ் சார்ந்த வாழ்க்கை! இருள் உண்டெனில் பிறப்புண்டு! பிறவாமை வேண்டுமெனில் சிந்தையில் தெளிவு வேண்டும்! அத்தெளிவினுள் சிவம் விளங்குதல் வேண்டும். ஆன்மாக்களுக்கு இருள் உண்டெனில் இருளின் தொடர்ச்சியாகத் தெளிவு வரும்; தெளிவு உண்டு. ஆன்மிக வாழ்க்கையில் தெளிதல் இன்றியமையாதது. “சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுட் சிவமுமாகி” என்பார் அப்பரடிகள். “தெய்வம் தெளிமின்” என்பார் இளங்கோவடிகள். இருளிலிருந்து - அறியாமையிலிருந்து மீள்வதற்குரிய தெளிவுண்டெனில், அத்தெருளைத் தெளிவை வழங்கியருள் தேவசிகாமணிச் சிற்குரு உண்டு!

தேவசிகாமணிச் சிற்குருவின் அருட் பார்வையில் ஆன்மாக்களிடம் தெளிவு தோன்றுகிறது; அறியாமை அகலுகிறது; ஞானம் தலைப்படுகிறது. ஞானம் தலைப்பட்டவுடன் இருள் அகலுகிறது. இருள் அகன்றவுடன் நல்ல பொருள் கிடைக்கிறது. நல்ல பொருள் கிடைத்தவுடன் அறம் தலைப்படும் வாழ்க்கை தொடங்குகிறது. அறத்தின் வழியதாக அருள்நலம் கிடைக்கிறது. இவையெல்லாம் கிடைப்பதற்குக் காரணம் தெய்வசிகாமணி தேசிகேந்திர குருமூர்த்தியின் கடைக்கண் பார்வையேயாம்!

“அருள் உண்டு எனில் உண்டு அறங்க ளெல்
லாம்; அவ் வருளும் நல்ல
பொருள் உண்டு எனில் உண்டு; போகியர்க்
கேயிவர் போகமல
இருள் உண் டெனில் உண்டுஇங் கெல்லாம்
வராமல் இருந்தும் ஒரு
தெருள் உண்டு எனில் உண்டு தேவ
சிகாமணிச் சிற்குருவே!”

என்பது நமது ஆதீன முதல்வராகிய அருள்தரு தெய்வ சிகாமணி நான்மணி மாலை என்னும் நூலின் திருப்பாடல்களில் ஓர் அருட்பாடல்!