உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/பணி செய்க!

விக்கிமூலம் இலிருந்து


34


பணிசெய்க!


ஆன்றோர்கள் தம்முடைய வாழ்க்கை அனுபவத்தின் விளைவாக அருளிய முதுமொழிகள் நம்முடைய தாய் மொழியில் ஏராளம். அவற்றைச் சிந்தித்து வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் அவலம் தொலையும்; அமைதி தோன்றும். சிறப்பாக அப்பரடிகள் “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்றருளிச் செய்துள்ளார். இந்த ஓர் அடியில் ஓராயிரம் ஆண்டு முயன்று பெறக்கூடிய அனுபவ ஞானத்தை - வாழ்க்கையை இன்ப மயமாக்கிக் கொள்ளும் அறிவைத் தந்துள்ளார். கடமை என்பது மனித வாழ்வின் குறிக்கோள். கடமையைக் கடமைக்காகவும், நன்மையை அது நன்மை என்பதற்காகவுமே செய்ய வேண்டும். (“நன்மைக்காகவே நன்மையை நாட வேண்டுமே யொழிய வேறொன்றுக்குச் சாதனமாக இருப்பதற்கல்ல”) என்ற அரிஸ்டாட்டலின் அறிவுரை சிந்தனைக்குரியதாகும்! கடமையைச் செய்வதில் எதிரொலியான விளைவுகள்-பலாபலன்கள் பற்றி எண்ணினால் கடமையாற்றலின் தரமும் தகுதியும் குறையும். மேலும் கடமையின் நிழலாகத் தன்னலம் தோன்றி வளர்ந்து, பின் கடமையுணர்வையும் மறைத்து அழித்து ஆதிக்கம் செய்யும். கடமைகளைச் செய்வதையும் கூட வாணிகமாகவும் புகழ்வேட்டுத் திரியும் சாதனமாகவும் மாற்றி விடக் கூடும். இத்துறையில் நாம் எதிர்பார்க்கின்ற அளவுக்குப் பலன் இல்லாத போது, கடமைகளிலிருந்து கூட விலகத் தோன்றும். இல்லை. தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல் விலகி விடுவார்கள். அதனாலேயே அப்பரடிகள் ‘பணி செய்க! என்றார். பணியின் விளைவுகளை எதிர் பாரா வண்ணம் அஃறிணைகளைப் போலச் செய்க! மரம் பூத்துக் காய்க்கிறது- கனிகளைத் தருகிறது - எனினும் தன்னுடைய செயலுக்காக அது பெருமிதம் அடைவதில்லை-புகழை விரும்புவதில்லை. கடமையை முறையாகச் செய்து பலனில் பற்றின்றிக் கிடத்தலே நல்வாழ்க்கை என்கிறார். அதனாலேயே “கிடத்தலே” என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவமும் கூட, உதவியைப் பெறுகின்ற மனிதன் நன்றியறிந்து பாராட்ட வேண்டும் என்று கூறுகிறதே தவிர, உதவி செய்தவன் உதவி பெற்றவனிடமிருந்து நன்றியறிதலை எதிர்பார்க்கச் சொல்லவில்லை. அது நடவாத ஒன்று! அப்படி எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். ஆதலால், வாழ்க்கை கடமையை - நன்மையைச் செய்வதற்காகவே யாம். நலன் தழுவிய கடமையைச் செய்கிறவர்கள் பலன் பெறுகிறார்கள் - பெறுவார்கள் என்பது உண்மை. கடமையாற்றலின் மூலம் பிறருக்கு நன்மை விளைவதோடன்றிக் கடமையைச் செய்தவர்களுக்கும் ஒரு பெரிய நன்மை தோன்றுகிறது. அதாவது நங்கை ஒருத்தி தன் உடலை நலமாகவும் அழகுப் பொலிவுடையதாகவும் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதின் மூலம் அவள் தனது கணவனுக்கு இன்ப நலனும், மகிழ்வும் ஊட்டுகிறாள் என்பது உண்மை. ஆனால், அதே காலத்தில் தான் நோயுறா வண்ணமும் காப்பாற்றப்படுகிறாள் என்பதை மறந்து விடுவதற்கில்லை. அது போலவே கடமைகளைச் செய்வதன் மூலம் நாம் நம்முடைய வாழ்க்கையை இலட்சியச் சார்புடைய தாக்கி-அவ்வழிப் பயனுடையதாக்கி மறுமை இன்பம் பெறுகிறோம். கடமைகளை உலகியல் பலன்களாகிய நன்றி பாராட்டுதல் - புகழ்பெறுதல்- தகுதிகளைப் பெறுதல் ஆகிய நோக்கத்தோடு செய்யின் கடமைகளின் வழியாக அடையக் கூடிய-வாழ்க்கையின் குறிக்கோளாகிய- எல்லாவித அவல உணர்வுகளினின்றும் விடுதலை பெற்று இன்ப அன்பிலே நின்று திளைத்தல் ஆகியன கைகூடாமற் போகும். ஏனெனில் கடமைகளைச் செய்வதில் பெரும்பாலும் யாரும் போட்டிக்கு வருவதில்லை. ஆனால், மேற்குறித்த பலன்களுக்குப் போட்டி அதிகம். போட்டி என்றாலே அவ்வழிக் கீழ்மைக் குணங்கள் தோன்றுவதியற்கை. கடைசியாகப் போட்டி நிறைந்த செயல்களில் ஈடுபட்டுக் குறிக்கோளை மறந்துவிடவும் கூடும். இந்நிலைமையையே அப்பரடிகள் “குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று அருளிச் செய்துள்ளார். இத்தகு சிறந்த வாழ்வியல் ஞானம் நம்முடையதாக இருந்தும் அதற்குள்ளேயே நாம் கிடப்பதாக நினைத்துக் கொண்டிருந்தும் வாழ்க்கைச் செய்முறைக்குக் கொண்டு வராமல் வாழ்வது கொடுமை; அது, இலாபம் கருதி வாணிகம் தொடங்கி இழப்பை அணைத்துக் கொள்வது போல! அவல உணர்வுகளிலிருந்து விடுதலை பெற முயற்சிப்போமாக! போற்றிப் புகழ்தலையும் புழுதிவாரித் தூற்றுதலையும் நடுநிலை உணர்வுடன் ஏற்க நம்மை நாம் பக்குவப் படுத்திக் கொள்வோமாக! ‘வசைவெலாம் வாழ்த்தெனக் கொள்வேன்’ என்ற வள்ளலார் வழியில் வாழ்வோமாக! கடமையை மீண்டும் தொடர்ந்து கடமைக்காகச் செய்வோம்! எந்தவிதப் பலனையும் எதிர் பார்க்காது கடமைகளைச் செய்யும் ஞானத்தை முயன்று பெறுவோமாக! அவ்வழியில் திருவருள் நம்மை வழி நடத்துவதாக!