உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/நியாயமே

விக்கிமூலம் இலிருந்து

15


நியாயமே!


தேசம் உய்யத் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமானின் வரலாறு கருத்திற்கினிய விருந்தாகும். வரலாற்றுப் போக்கில் ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்புண்டு. இது சரியா? அது சரியா? என்று பல கேள்விகளை மாணிக்கவாசகர் வரலாற்றில் எழுப்ப முடியும். ஆம், வெறும் அறிவு விவாதத்திற்குட்பட்டது-நடைமுறைக் கொவ்வாதது. அனுபவத்திற்கல்லாதது. வெற்று அறிவுணர்ச்சியோடு மாணிக்கவாசகர் வரலாற்றைப் படித்தால் குழப்பமே மிஞ்சும். ஆழ்ந்த அறிவோடும், நடைமுறையோடும், அனுபவத்தையும் சாத்தியக் கூறுகளையும் கூட்டி மாணிக்கவாசகர் வரலாற்றைப் படித்தால் அவ் வரலாறு வாழ்க்கைக்குப் பெரு விருந்தாக இருப்பதை உணரலாம். இந்த முறையில் மாணிக்கவாசகரின் வரலாற்றை ஆராய்வோமாக.

பாண்டிய மன்னனிடத்தில் மாணிக்கவாசகர் அமைச்சராக இருக்கின்றார். அறிவிலும், ஆட்சிமுறையிலும், குடிமக்களுக்கு நல்லன செய்வதிலும் சிறந்து விளங்குகின்றது மாணிக்கவாசகரது அமைச்சியல். குடிமக்களிடத்திலிருந்து அரசன் வரி வாங்குகின்றான். அங்ஙனம் மக்களிடம் வரி வாங்குவது அரசனுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக அல்ல; வரிப் பணங்களைக் கொண்டு மக்களின் வாழ்க்கைக்குரிய திருப்பணிகளைச் செய்ய வேண்டும். பாண்டிய மன்னனோ மக்களின் வரிப்பணம் கொண்டு பரிகள் வாங்கி வரச் சொன்னான். பரிகள் ஆடம்பரத்தின் சின்னம் அல்லது போர்ப்படை, பரிகள் வாங்கச் சொன்ன காலத்தில் பாண்டிய அரசனுக்குப் பகையேயில்லை. ஆதலால் ஆடம்பரத்துக்காகவே அரசன் பரிகளை வாங்கிவரச் சொன்னான் என்று கருத இடமிருக்கின்றது.

தேவையற்ற ஒன்றைச் செய்ய அமைச்சர் மாணிக்கவாசகரின் மனம் துணியவில்லை. ஆனால் அரசனின் ஆணை, அரசனைப் பரிவாங்கும் எண்ணத்திலிருந்து நல்வாழ்வுத் துறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். திருத்துதலில் பலமுறைகள் உண்டு. திருத்துபவர் திருத்தப்படுபவர் ஆகியோரைப் பொறுத்து முறைகள் மாறுபடும். தன்னினும் தாழ்ந்தாரை இடித்துக் கூறித் திருத்தலாம். தனக்குச் சமமானோரை அறவுரைகள் கூறித் திருத்தலாம். தன்னினும் உயர்ந்தோரை அவர் விரும்பியதை ஒழித்து வேறொன்றைச் சொல்வது அல்லது செய்தவன் மூலமே திருத்தலாம். இங்கு அரசன் திருத்தப்பட வேண்டும். ஆதலால் மாணிக்கவாசகர் அரசன் கூறியது விடுத்து, அதாவது பரிகளை வாங்காமல், திருக்கோயில் எடுப்பித்து, இதுவே செய்யத்தக்கது என்று அறிவுறுத்தினார். ஆதலால் அரசனுக்குப் பெருமை தரும் எண்ணத்தில் மாணிக்கவாசகர் செய்தாரே தவிர வேறு கருத்தில்லை. அங்ஙனம் பார்க்கும்பொழுது பரிகள் வாங்கக் கொடுத்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டியது நியாயமே ஆகும்.

“திருக்கோயில் கட்டியது எந்த வகையில் சிறந்தது. பரிகள் வாங்குவதைவிட?” என்று பகுத்தறிவு உலகம் கேட்கத்தான் செய்யும். திருக்கோயில் கட்டியதன் மூலம் நாடும் அரசனும் பெற்ற நன்மை ஒன்றல்ல; பலப்பலவாகும். சிறப்பாக அரசனுடைய பொருள் அறங்கலந்த அருளிய லுக்குப் பயன்பட்டது. அதன்மூலம் அறமும், கலையும், அருளும் வானுற வளர்ந்து அரசனுக்கு அழியாப் புகழைத் தந்தது. எப்படி அறம் ஆயிற்று? கலைஞர்களும் ஊழியர்களும் திருக்கோயில் கட்டுங்காலத்தில் தொழில் பெற்றனர்; தொழிலுக்கேற்ற ஊதியம் பெற்றனர்; வாழ்வை வளப்படுத்திக் கொண்டனர். இதை அறம் அல்ல என்று எப்படிச் சொல்லமுடியும்? கல்லெல்லாம் கலையாகி, கடவுளராகி, பேசும் தெய்வத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள கோயில்கள் கலையின் விளக்கந்தரும் இடந்தானே!

உலக உயிர்களுக்குத் தாயும், தந்தையுமாகித் தன்னருள் பொழியும் புனிதன் பிரார்த்தனைக்குப் பயன்படுவதால் திருக்கோயில்கள் அருளியல் விளைவிக்கும் பண்ணைகள் தாமே! அதுமட்டுமா? பரந்த மண்டபங்களும், அவைகளின் ஊடே கலைபயில் கூடங்களும் மருத்துவமனைகளும், நடுவர் மன்றமும் இன்னபல அமைப்புக்களும் அமைந்து விளங்கினமையால் மக்கள் பணிசெய்யும் மன்றமாகவும் திருக்கோயில் விளங்கிற்று. இத்தகு திருக்கோயில் ஒன்றை மாணிக்கவாசகர் எடுத்தது நியாயமே.

அரசன் குதிரைகளோடு வரும்படி மாணிக்கவாசகருக்கு ஆணை பிறப்பித்தான். மாணிக்கவாசகர் என் செய்வார்? தமக்கு உற்ற புகலிடமாய் விளங்கும் இறைவனிடத்தில் முறையிட்டார். ஆம். அவன்தானே எல்லாம். நமக்கு அன்புப்பட்டவர் பாரம் பூண்பது இறைவனின் குணமன்றோ? குதிரைகளை கொண்டு வருவதாகத் திருவருள் ஆணை பிறந்ததும் குறிப்பிட்ட நாளில் குதிரைகள் வரும் என்ற செய்தியோடு மாணிக்கவாசகர் மதுரை சென்றார்; அரசனிடம் தெரிவித்தார். குதிரைகளும் குறிப்பிட்ட நாளில் வந்தன. இறைவன் ஒரு பெருந்திருவிளையாடல் நடத்தினான். காட்டில் திரியும் நரிகளை எல்லாம் பரிகளாக்கினான். தாமே குதிரைச் சேவகனாக அமர்ந்தான். குதிரைகளைக் கொண்டு வந்து அரசனிடம் கயிறு மாற்றிச் சேர்ப்பித்தான். அரசனும் நிலையற்ற மகிழ்ச்சியில் திளைத்தனன். கதிரவன் படுத்தனன். காரிருள் சூழ்ந்தது. பரிகளெல்லாம் நரிகளாயின. உலகமே நடுங்க ஊளையிட்டன. அரசனுக்குச் செய்தி எட்டியது. வெகுண்டெழுந்தனன். மாணிக்கவாசகரை வெஞ்சிறையில் இட்டு, கல்லுடைக்கச் செய்தான். இடையில் பகலில் பரியும், இரவில் நரியுமாக ஆக்கிய திருவிளையாடலின் உளக்குறிப்புத்தான் என்னே? இக்கருத்தை ஆராய “உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்ற திருக்குறள் நினைவிற்கொண்டு ஆராய்ந்தால் அரிய கருத்துக்கள் வெளிப்படும். இக்குறளின் படி இம்மை-பகலுக்கும் மறுமை இரவுக்கும் உவமிக்கப்படுவது தெளிவாகிறது. இம்மையில் - இன்பம்போலத் தோன்றுவன மறுமையில் துன்பத்தை விளைவிக்கக்கூடும். இந்தப் படிப்பினையைப் பலருக்கு நினைவுபடுத்துவதற்காகவே, பகலில் இன்பந்தரும் குதிரைகளாகவும் இரவில் தொல்லைதரும் நரிகளாகவும் ஆக்கித் திருவிளையாடல் செய்தருளினார். இங்ஙனம் சிந்தித்துப் பார்க்கும் பொழுது பரமன் நரிகளைப் பரிகளாக்கியதும் பரிகளை நரிகளாக்கியதும் நியாயமே! நிற்க.

சிறையில் வாடிய மாணிக்கவாசகர் ஆற்றொணாத் துயருற்றார். அருளாளராகிய மாணிக்கவாசகர் அல்லலுறுவது இயற்கைக்கே தாங்க முடியவில்லை. இயற்கை அன்னை சினங்கொண்டாள். வைகையில் வெள்ளமெனப் பொங்கிப் பாண்டியமாநகரை அழிக்கத் தொடங்கினாள்; பெரும்புயல் மதுரையைச் சூழ்ந்தது. நல்லவர் படுந்துன்பந் தாளாமல் இயற்கை பொங்கி வருவதும் நியாயமே!

“வைகையாற்றின் வெள்ளந்தடுக்கக் குடிக்கோர் ஆள் வருக” என்று அரசனின் ஆணை பிறந்தது. அரசனின் ஆணை கேட்ட குடிமக்கள் வெள்ளம்போல் திரண்டு வெள்ளந்தடுக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால், ஒரே ஒரு குடி வெள்ளத்தடுப்பு வேலைக்கு ஆளனுப்ப முடியாமல் தவித்தது. ஆம், அந்தக் குடியில் பெண்ணொருத்தியே வாழ்ந்தாள். அவளும் முதியவள். வேலை செய்யும் சக்தியற்றவள். அரசன் ஆணைவழி ஆளனுப்ப இயலவில்லையே என்று ஏங்குகின்றாள். அற்றவருக்கருந் துணையாக விளங்கும் ஆண்டவனை நோக்கி வேண்டுகின்றாள். விதி வழியே “கூலியோ கூலி” என்ற குரல் கேட்கின்றது. ஆம், ‘தேவர்க் கோவறியாத தேவதேவன்’ தெருவழியில் நடந்து வருகின்றான்; தட்டும் மண்வெட்டியும் தாங்கி, “கூலியோ கூலி” என்று கூவி நடந்து வருகின்றான். குரல் கேட்ட கிழவி-வந்து ஆறுதல் பெற்றாள்; அமைதி கொண்டாள். வந்திக்கு ஆளாக அமைகின்றாள். கூலி பொன்னல்ல, பொருளல்ல; வயிற்றுப் பசிதீர்க்கும் பிட்டேயாகும். பிட்டைத் தின்றுவிட்டு வெள்ளம் தடுக்கும் வேலையில் ஈடுபடச் சென்ற கூலியாள் அங்குத் தனது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. தான் செய்யாததோடு மாத்திரமின்றி செய்பவரையும் கெடுக்கின்றான். இதனால் வந்தியின் பகுதி அடைபடாமலே கிடக்கின்றது. மாலையில் அரசன் வெள்ளத் தடுப்பு வேலையைப் பார்வையிட வருகின்றான். அடைபடாத பகுதியைப் பார்க்கின்றான். அதற்குரிய வந்தியின் ஆளை வெகுண்டு அடிக்கின்றான். அடித்ததென்னவோ எதிரிலிருந்த ஆளை, ஆனால் அடிபட்டது வையத்துயிர்க்கெல்லாம்; அடித்தவன் உட்பட கொற்றாள் மறைந்தனன்! இந்நிகழ்ச்சிகளின் தொகுப்பிலே பெறப்படும் நற்கருத்துக்கள் எவை, எவை? ஏன் இறைவன் கொற்றாளாக வந்தனன்? அவன் நினைத்த மாத்திரையில் எல்லாவற்றையும் செய்யக் கூடியவனாயிற்றே? அப்படியிருக்க அவனே கொற்றாளாக வந்தது திருத்தொண்டின் நெறியை உலகுக்கு உணர்த்தவேயாகும். சமுதாயத் திருத்தொண்டுகளைச் செய்வதில் எல்லோரும் ஈடுபட வேண்டுமென்ற படிப்பினையைக் காட்டுவதற்காகவே இறைவனே கொற்றாளாக வந்தனன்! அப்படி வந்தபோதும் பொன்னுக்கும் பொருளுக்கும் மண் சுமக்காமல் வெறும் பிட்டுக்கு மண் சுமந்தது ஏன்? உலக உயிர்கள் வாழ உணவு தேவை. தனக்குத் தேவையான அளவு ஒன்றையே இவ்வுலகிலிருந்து பெற்றுக்கொண்டு, பொன் பொருளில் ஆசைப்படாமல் திருத்தொண்டு செய்யவேண்டும் என்ற கருத்தை விளக்கவே பிட்டுக்கு மண் சுமந்தான்! இவ்வுலக முழுவதையும் ஓர் ஒழுங்கிலும் முறை பிறழாத நிகழ்ச்சியிலும் அழைத்துச் செல்லும் ஆண்டவன் ஏன் தன்னுடைய கொற்றாள் கோலத்தில் அதற்குரிய பொறுப்பைச் செய்து நிறைவேற்றாது விட்டான்? வாழ்க்கை கடமையோடு பிணைக்கப்பட்டது. கடமையைச் செய்யத் தவறுகிறவர்கள் கடுந்தண்டனைக்குரியோர் என்பதை வையகத்துக்கு எடுத்துக் காட்டவே கடமை தவறுவதுபோல் நடித்து அடி பெற்று அறிவுரை கொடுத்தனன். இந்த உலக உயிர்கள் அனைத்தும் இறைவனின் இருப்பிடம் என்பதை உலகுக்கு உணர்த்தவே, அவன்மீது விழுந்த அடி உலகம் முழுவதும் விழுந்தது! இங்ஙனமெல்லாம் மாணிக்கவாசகரது வரலாற்றை உணரும் பொழுது, இந்த வரலாற்றை உலக முழுவதும் உணர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகின்றது. ஒவ்வொருவரும் மாணிக்கவாசகரது வரலாற்றைப் படித்துப் பயனடைவார்களாக!