உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/தகைசால் தலைமை

விக்கிமூலம் இலிருந்து

14


தகைசால் தலைமை


தலைமை, பொறுப்புடைய ஒன்று, தலைமைக்குரிய இயல்புகள் பலப்பல; தலைக்குத் தளராத நெஞ்சம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும். தம்மைப் பின்பற்றுவோரைக் காக்கும் ஆற்றல் வேண்டும். இன்று பலர் தலைமைப்பதவிக்கு ஆசைப்படுகின்றனர். ஆனால் அவர்களிடத்தில் தலைமைக்குரிய தகுதி கொஞ்சமும் இருப்பதில்லை. தலைமை நாடிப் பெறக்கூடியதல்ல. தகுதியுடையார் மாட்டு தலைமை வந்தடையும். தலைமைக்குரிய போட்டிகள் இன்று மட்டும் நடப்பதல்ல. உலகம் தோன்றிய நாள் தொடங்கி - தலைமைத் தத்துவம் மலரத் தொடங்கிய காலந்தொட்டு தலைமைப் போராட்டம் நடந்தே வந்திருக்கிறது. ஏன்! வரலாறுகள் முழுவதும் தலைமைப் போராட்டச் செய்திகள்தானே! புராணங்களிலும் கூட தலைமைப் போராட்ட வரலாறுகளையே காண்கிறோம்.

தக்கன் வேள்வி ஒன்று இயற்றினான். தக்கனுக்குச் சிவபெருமானிடம் உள்ள வருத்தத்தின் காரணமாக தான் இயற்றிய வேள்விக்குச் சிவபெருமானை அழைக்கவில்லை. திருமாலும் நான்முகனும்தான் வேள்விக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். சமய-மரபு வழி சிவபெருமானே தனக்குவமை இல்லாதவன். “சாதலும் பிறத்தலும் இல்லாதவன். பிறவாயாக்கைப் பெரியோன்” என்று சிலப்பதிகாரம் வாழ்த்துகிறது. அவனே வேள்வியை-வேள்விவழி அளிக்கப்படும் பொருளைப் பெறுதற்குரிய தலைவன். எனினும் அவன் அழைக்கப் பெறவில்லை. சிவபெருமான் இருக்கவேண்டிய இடத்தில் வேள்வித் தலைமையிடத்தில் திருமால் முதலிய அமரர்கள் அமர்ந்தார்கள். தலைமையின் மீது உயர்ந்த ஆசையால் வேள்வியை-வேள்விப் பொருளை ஏற்றுக் கொண்டார்கள்.

பின்னர் பாற்கடல் கடைந்த காலத்து நஞ்சு எழுந்தது. நஞ்சை அடக்கும் ஆற்றல் திருமால் முதலிய அமரர்களுக்கு இல்லை. அவர்களுடைய தலைமை நஞ்சை அடக்கி அமரர்களைக் காப்பாற்றப் பயன்படவில்லை. அவர்களால் முடியாமல் போய்விட்டது. ஏன்? அவர்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல், தவித்தார்கள். பெருமையை விரும்பிய தகுதியில்லாத போலித் தலைமையாளர்கள் நஞ்சைக்கண்டு அஞ்சினார்கள், அலறினார்கள். எல்லா உயிர்க்கும் அம்மையப்பராக இருந்தருளும் சிவபெருமானை நோக்கிக் கதறினார்கள், காப்பாற்றுக என்று அடைக்கலம் புகுந்தார்கள். சிவபெருமான் புன்முறுவல் பூத்தான். சிறுமை பொறுத்து அருள் வழங்கினான். நஞ்சை உண்டு-கண்டத்தில் அடக்கித் திருமால் முதலிய அமரர்களுக்கு வாழ்வளித்தான். “விண்ணோர்கள் அமுதுண்டும் சாக ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்வான் என்று இளங்கோவடிகள் சிவபெருமான் தகைமைசால் தலைமையை வாழ்த்துகிறார். “நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே” என்று புறநானூறு போற்றுகின்றது. சிவபெருமானே தனக்குவமை இல்லாத தலைவன்-கடவுள். மற்றையோர் கடவுளரல்லர். புண்ணியத்தின் விளைவாகப் பதவி பெற்ற உயிர்களேயாம். திருமாலையும் நான்முகனையும் சிவனோடு சேர்த்து மூவர் என்று சொல்வது அறமல்ல. இங்ஙனம் மாணிக்கவாசகர் சிவபெருமானின் தலைமைச் சிறப்பை - இறைத்தன்மையை-மூவர் கோனாக விளங்கும் தன்மையை விளக்கும் வகையில் அருளியுள்ள பாடல் படித்தின் புறத்தக்கது.

“சாவமுன்னாள் தக்கன் வேள்வி தகர்த்தின்று நஞ்சமஞ்சி
ஆவ வெந்தாய் என்றவி தாவிடும் நம்மவரவரே
மூவரென்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல்
தேவ ரென்றேஇறு மாந்தென்ன பாவந்திரி தவரே.”