குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/எல்லாமே இறைவனின் திருக்கோலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

13


எல்லாமே இறைவனின் திருக்கோலம்


மாணிக்கவாசகர் நிலத்தியல்பும் - ஐம்பூதங்களின் இயல்பும் உணர்ந்த பேரறிஞர். இதனைத் திருவண்டப் பகுதி நமக்கு நன்றாக விளக்கிக் காட்டுகிறது. இறையுணர்வுடையோருக்கு இந்த உலகத்தின் ஒவ்வொரு பொருளும் இறைவனாகவே காட்சியளிக்கும்-திருவருளைப் படித்தறியும் பெரும் புத்தகம் இந்த உலக இயற்கை. உலகம் வேறு - இறைவன் வேறல்ல, உலகமே அவன்; அவனே உலகம்; எல்லாமே திருவருள் மயம். எல்லாவற்றிலும் இறைவனுடைய திருவோலக்கக் காட்சி! திருஞானசம்பந்தர் தன்னுடைய திருமுறையில் இயற்கைக் காட்சி நலங்களை வியந்து பாடிப் பரவுகின்றார். மாணிக்கவாசகரும் இறைவனை நினைந்து வாழ்த்த நினைக்கின்றார். ஆனால் எங்ஙனம் வாழ்த்துவது? எந்தச் சொற்களைக் கூறி வாழ்த்துவது என்று தெரியாமல் திகைக்கின்றார். ஏன்? ஒன்றைச் சொல்லி வாழ்த்தினால் பிறிதொன்று விடுபட்டுப் போகுமே என்ற கவலை! எல்லாமே இறைவனின் திருக்கோலம்!

மாணிக்கவாசகர் இயற்கையையும் இயற்கையின் இயக்கத்தைப் பற்றியும் நன்கு உணர்ந்தவர். இயற்கை முழுவதும் தில்லைப்பெருமானின் திருவுருவமே என்னும் கருத்துடையவர். காணும் பொருளெல்லாம் கயிலாயனே என்ற உறுதி மிக்க உள்ளமுடையவர் அவர்.

திருவாசகத் தேனில் ஒரு துளியை உங்கள் முன் வைக்கிறேன் அள்ளிப் பருக.

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”

இறைவன் வானாகவும், பூமியாகவும், காற்றாகவும், ஒளியாகவும், உடலாகவும், உயிராகவும், உண்மையாகவும், இன்மையாகவும், தலைவனாகவும் யான் என்றும் எனது என்றும் கூறுகின்றவர்களைக் கூத்தாட்டுகின்றவனாகவும் நிற்கின்றான். இங்ஙனம் காட்சி தரும் இறைவனை என்ன சொல்லி எப்படி வாழ்த்துவேன் என்று ஏங்கித் தவிக்கின்றார். இறைவன் ஐம்பூதமாய் நின்றருள் வழங்குகின்றான்; உயிர்களின் இன்பநுகர்ச்சிக்குக் காரணமாய் உடலாக விளங்குகின்றான். உயிர்க்கு உயிராக நின்றருள் செய்கின்றான். தனக்குவமையில்லாத தலைவனாக விளங்குகின்றான்; அகப்பற்றும் புறப்பற்றும் உள்ளவர்களை ஆட்டுவித்து அனுபவத்தைக் கூட்டுவிக்கின்றான். இறைவனுடைய புகழ் அளவிடற்கரியது; சொற்களைக் கடந்தது. காணும் பொருளெல்லாம் இறைவனாகவே காணும் காட்சி திருவருள் காட்சி; வரகுணபாண்டியன் வரலாறு நாடறிந்த ஒன்று; கற்றறையில் வீழ்ந்து கிடந்த வேப்ப விதைகள் எல்லாம் சிவலிங்கங்களாகவே காட்சியளித்தன. “குற்றம் நீ! குணங்கள் நீ!” என்று அப்பரடிகள் கூறுகிறார். இங்ஙனம் எல்லாவற்றையும் திருவருள் வயத்ததாகக் கருதுவதும் - வாழ்வதும் - பாராட்டுவதும் இன்ப அன்பைப் பெருக்கும், உலகை ஒரு குடும்பமாக்குவது அமைதியை விளைவிக்கும். பகைமை நீக்கிப் பண்பைப் பெருக்கும். காழ்ப்பு நீங்கிக் கருணை வளரும். துன்பங்கள் தொலையும், இன்பம் பெருகும். திருவாசகத்தில் உள்ள இப்பாடல் எல்லாச் சமயத்தாரும் ஓதுதற்குரிய முறையில் பொதுமை நலம் செறிந்து விளங்குகிறது. உண்மையான - ஆழமான சமயநெறி பொதுமை நலம் பெற்றே விளங்கும்.