குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/நினைந்தூட்டும் தாயினும்

விக்கிமூலம் இலிருந்து

12


நினைந்தூட்டும் தாயினும்....


திருவாசகத்திலுள்ள பாடல்கள் அனைத்தையும் உற்று நோக்க வேண்டும். ஒவ்வொரு பாடலும் அரும்பெரும் கருத்துக்களை அள்ளித்தரும் சிறப்புடன் மிளிர்வனவாகும்.

பல்வேறு தன்மைகளைக் கொண்ட தாய்மார்களை உலகில் காணலாம். குழந்தை பசியால் அழுவதற்கு முன் காலமறிந்து பாலூட்டும் தாய்-அழுகுரல் கேட்டபின் பாலூட்டும் தாய்-அழுது ஓய்ந்தபின் பாலூட்டும் தாய் இம்மூவரிலும் பசிநேரமறிந்து பாலூட்டும் தாயேத் தலையாயவள். அத்தகைய தாயைக்காட்டிலும் பேரன்புக் கொண்டவன் இறைவன். எனவேதான் ‘இறைவனைப் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தவனா’கக் கூறுகின்றார்.

தாயின் பால் உடலை-ஊனை-அதாவது ஆணவத் - தடிப்பை வளர்ப்பதாகும். ஆணவத் தடிப்பையுடையவன் இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாக முடியாது. இறைவனின் திருவருட்பாலோ ஆணவத் தடிப்பை-ஊனை. உருக்குவதோடு மட்டுமின்றி உள்ளொளியை-அருளைப் பெருக்கவல்லது. எனவேதான் இறைவனைத் தாயினும் சாலப் பரிந்தவனாகக் குறிப்பிடுகின்றார்.

செல்வந்தர் வீட்டுக் குழந்தை ஒன்று செல்லமாக வளர்ந்தது. அக்குழந்தைமீது தாய்க்கு அளவற்ற பாசம். அது என்ன தவறு செய்தாலும் அதைத் தண்டிக்க மனம் வராதவள். ஒருநாள் அலமாரியிலிருக்கும் பொற்கிண்ணத்தை எடுத்து விளையாட ஆரம்பித்தது குழந்தை. குழந்தையின் கையில் உள்ளதோ விலை மதிப்பெற்ற பொற்கிண்ணம். குழந்தையோ அதன் பெருமையை-சிறப்பை அறியாதது. தாயோ குழந்தையிடமிருந்து கிண்ணத்தைப் பிரிக்க-பிடுங்கி வைக்க மனமில்லாதவள். எனவே அது அக்கிண்ணத்தைச் சிதைத்து விடாதவாறு-தொலைத்து விடாதவாறு அதைப் பின்தொடர்ந்து சென்று பார்த்துக் கொள்வாள். அதுபோல இறைவன் மாணிக்கவாசகருக்கு திருவருளாகிய பொற்கிண்ணத்தை அளித்தான். தான் பெற்ற திருவருளைத் தொலைத்து விடாதவாறு இறைவன் புறம் புறம் திரிகின்றான்.

குழந்தை வளர வளரப் பொற்கிண்ணத்தின் அருமை அறிந்து அதைச் சிதைக்காதவாறு-தொலைக்காதவாறு சிக்கெனப் பிடித்துக்கொள்வதோடு மட்டுமின்றித் தாயை விட்டுப் பிரியாது. அதுபோல மணிவாசகர் திருவருளின் சிறப்பை உணர்ந்து அதைச் சிக்கெனப் பிடிப்பதோடு மட்டுமின்றி இறைவனையும் தொடர்ந்து செல்கின்றார்.

இதை மாணிக்கவாசகர்:-

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே

என்ற பாடலில் அழகாகக் குறிப்பிடுகின்றார்.