குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/புலன்களும்-பொறிகளும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11


புலன்களும்–பொறிகளும்


உயிர்களுக்கு உய்தியைத் தருவது வழிபாடு. உயிர்களுக்கு வினைநீக்கமும் - திருவருளின்பமும் வழிபாட்டின் மூலமேயாம். எனவே உயிர்கள் தம்முடைய உய்தியைக் கருதியே வழிபாடு செய்கின்றன. “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்” என்று திருவாசகம் பேசுகிறது. உயிருக்குப் பயன்கூடுவது அனுபவத்தின் வழியாலேயாம். உயிர், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கரைந்து வழிபாடு செய்வதின் மூலமே உய்திபெற முடியும். உயிர்கள் உய்திபெற வேண்டிச் செய்யும் வழிபாட்டை “ஒன்றி இருந்து நினைமின்கள். உந்தமக்கு ஊனமில்லை” என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார். வழிபாட்டில் புலன்களும் - பொறிகளும் ஒருங்கியைந்து ஈடுபடவேண்டும். இக்கருத்தையே “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பருகும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக” என்று பெரியபுராணப் பாடல் விளக்குகிறது.

புலன்களையும் - பொறிகளையும் ஒருங்குபடுத்தி வழிபாட்டில் ஈடுபடுத்தும் கருத்துடனேயே நம்முடைய சமயத்தின் சடங்குகள் அமைந்துள்ளன. புலனாலே சிந்திக்கும் திறமை சிலருக்கு உண்டு. உதாரணமாக கணக்குப் போட வேண்டியிருக்கிறது. அக்கணக்கைப் புலனாலேயே போட்டுச் சொல்லக்கூடியவர்கள் இருக்கலாம். அவர்கள் மனத்தின் மூலமே போட்டு விடை சொல்லி விடுவார்கள். அப்படிப் போட முடியாதவர்கள் ஏடும்—எழுத்துகோலும் எடுத்து கைகொண்டு எழுதிப் போட்டுப் பார்த்துச் சொல்வர். அதுவே இறைவனை நெஞ்சத்திலிருத்திச் சிந்திக்கலாம். இவ் வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. பூசலார் நாயனார் போன்றோருக்கேயாம் இந்த அருளியல் நிலை, புலன்களால் மட்டும் இறைவனைச் சிந்திக்கலாம். அச் சிந்தனையில் நிலைத்து நிற்க முடியாதவர்களுக்கும் — அதோடு புலனால் சிந்திக்கும் திறமை இல்லாதவர்களுக்குப் புலன்களுக்குச் சிந்தனை ஊட்டவேண்டிப் பொறிகள் செய்யும் வழிபாட்டுச் சடங்குகள் தொடங்கலாயின. பொறிகளும் புலன்களும் ஒருங்கியைந்து செய்யும் வழிபாடு தூய்மையானதாக—அனுபவத்தோடுகூடியதாக ஆழமானதாக-காதல் தன்மைமிக்குடையதாக இருக்கும். அதனாலன்றோ சிவநெறியில் அகப்பூசையும் புறப்பூசையும் இன்றியமையாதனவாக வலியுறுத்தப் பெறுகின்றன. மாணிக்கவாசகர் தனது சிந்தனையையும் காட்சியையும் — வணக்கத்தையும் — வார்த்தையையும் இறைவன் தனக்காக்கிக்கொண்டு ஆட் கொண்டருளினமையை வியப்புடன் வாழ்த்திப் பாடுகின்றார்.

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குள்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தெனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனைசெந் தாமரைக் கா டனைய மேனித்
தனிச் சுடரே இரண்டுமிலித் தனியனேற்கே

இறைவனே ஆட்கொண்டான் மாணிக்கவாசகரை. அவன் உடையான் அல்லவா! “உடையாய் என்னைக் கண்டு கொள்ளே” என்று மாணிக்கவாசகரே குறிப்பிடுகின்றார். சிந்தனையே செயலுக்கு அடிப்படை. சிந்தனையின் வழியே செயல் மலரும். முதலில் சிந்தனையை உரிமையாக்கினார். அவ்வழி காட்சியும் - வாழ்த்தும் - வணக்கமும் உரிமையாயின. சிந்தனை - காட்சி - வாழ்த்து - வணக்கம் எல்லாம் திருவருள் வழிபட்ட அன்பு புலன்களும் திருவருளை அனுபவித்தின்புற்றன. ஆதலால் இறைவழி பாட்டில் பொறிகளும்-புலன்களும் ஒருங்கியைந்து செய்யக் கூடிய சடங்குகள் இன்றியமையாதனவேயாம்.