குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/வாழாத நெஞ்சம்

விக்கிமூலம் இலிருந்து

10


வாழாத நெஞ்சம்


வாழ்க்கைக்குக் குறிக்கோள் உண்டு. இந்த வாழ்க்கை ஏதோ குருட்டாம் போக்காக அமைந்த ஒன்றல்ல. திட்டமிட்ட ஓர் அமைப்பேயாகும். வாழ்வது மட்டும் போதுமா? முறைப்படி வாழவேண்டும். வாழ்க்கைக்கு ஒரு நெறியும் - முறையும் வேண்டும் என்று உணர்ந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு. அதனாலன்றோ தமிழில் எழுத்து சொல் இலக்கணத்தோடு பொருள் இலக்கணமும் எழுந்தது. திருக்குறளும் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்” என்று கூறுகின்றது.

வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன பொருள்? முறையாக உண்டு-உடுத்து வாழ்வதாகுமா? இல்லை. வாழ்க்கையின் குறிக்கோளை அடைகிற வழியில் பயனுட்ைய வாழ்க்கை வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல். வாழ்க்கையைப் பொருளொடு கூட்டி-அறத்தோடு அணைத்து-இன்பத்தோடு இணைத்துப் பின்விலகி வீடுபெறும் வேட்கை வழி நின்று வாழ்வதே முறையான வாழ்க்கை “வீடு”, என்றால் விடுதலைபெற்று வாழும் இடம் என்று பொருள். எதிலிருந்து விடுதலை? துன்பத்திலிருந்து விடுதலை! துன்பத்திற்குக் காரணம் எது? பிறப்பு! பிறப்பினின்றும் அதனைத் தொடர்ந்து வரும் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவதே வீடு.

திருக்குறளும் ‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை’ என்று கூறுகின்றது. பிறப்பை நீக்கப் பிறப்பையே சாதனமாகக் கொள்வது நமது நெறி. வீட்டு நிலை வினையற்ற நிலை. பிறப்போடு கூடிய நிலை, வினையோடு கூடிய நிலை, வினைத்தொடர்பு அவாவிலும், அவாவினை நிழலெனத் தொடரும்; துன்பத்திலும் ஆழ்த்தும். வினைத்தொடர்பின்மை திருவருளில் ஆழ்த்தும். அதன்பயன் பிறப்பு-அதனைத் தொடரும் வினை - வினைவழிப்பட்ட துன்பம் இவைகளிலிருந்து விடுதலை, செத்துப் பிறக்கும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி. இத்தகைய குறிக்கோளோடு கூடிய வாழ்க்கையே வாழ்க்கை. இங்ஙனம் வாழ்வதே உண்மையிலேயே வாழ்ந்ததாகக் கருதப்பெறுகிறது.

இத்தகு வாழ்க்கையைப் பெறுவது எங்ஙனம்? உயிர்களின் வளர்ச்சி சிந்தனையினாலும், கூட்டுறவினாலும் ஆவது? வினையில் நீங்கி விளங்கிய அறிவினால் உள்ள இறைவனின் தொடர்பும் சிந்தனையுமே உயிர்களை வாழ்வாங்கு வாழ்கிற வாழ்வுக்கு அழைத்துச் செல்லும். இறைவனைச் சிந்தித்துப் பேசிவாழ்வது பயனுடைய வாழ்க்கை, வினைத் தொடர்பை நீக்கியருளும் சிறப்புறும் வாழ்க்கை. இங்ஙனம் வாழமுடியாத உலகாயகத்தின் வழி உருண்டோடி வாழ்தல் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்ளும் வாழ்க்கையாகும். யானையின் தலையில் யாரும் மண்ணை அள்ளிப் போடவேண்டாம். அதுவே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும். அது போல இறைவனை வாழ்த்தி வாழமுடியாதவர் தமக்குத் தாமே கேடு சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் வாழ்வதாக நினைப்பு. ஆனால், அவர்கள் வாழ்வதில்லை ஆண்டுகள் பலஓடி இருக்கலாம். போகங்கள் பல துய்த்திருக்கலாம். எனினும் வாழ்க்கையின் குறிக்கோளை - பயனை அடையாத வாழ்க்கையே அது. “குறிக்கோள் இலாது கெட்டேன்,” என்று அப்பரடிகள் அலறுகின்றார். இதனையே,

“வாழ்கின்றாய் வாழாத
நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய்! ஆழாமற்
காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு! உனக்குச்
சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக்
கடலாய வெள்ளத்தே”

என்று திருவாசகப் பாடல் விளக்குகிறது. அதாவது வாழு! வாழ ஆசைப்படு, வாழ்வாங்கு வாழ முயற்சி செய். வாழ்க்கையின் பயனை அடையும் வழியில் வாழ்வாயாக. வாழ்க்கையின் பயனாக விளங்கும் திருவருளில்—மாறிலாத இன்பத்தை வாழ்த்தி வாழ்வாயாக. வாழ்த்தி வாழ்தலே வினை நீக்கும்—அவலம் நீக்கும் என்று திருவாசகம் வாழும் வழிகாட்டுகிறது; இல்லை, வாழும் வழியில் அழைத்துச் செல்கின்றது.