குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/பரபரக்காதே

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


25


பரபரக்காதே


வாழ்க்கையில் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி பெற்று அமைதியும் இன்பமும் சூழ வாழ விரும்புவோமாயின் பரபரப்புணர்ச்சி கூடாது. அவசரக் கோலத்தில், பரபரப்புணர்ச்சியுடன் ஒன்றைப் பற்றி முடிவெடுப்பதும் செய்வதும் நல்லதல்ல. அவசரப்படுதல் என்ற குணத்தைக் கெட்ட குணங்களின் வரிசையிலேயே வைத்து மூத்தோர் முடிவு செய்திருக்கிறார்கள்; மோசடி செய்யும் இயல்புடையவர்களும் ஏமாற்றுகிறவர்களுமே அவசரப்படுவார்கள். அவர்களுடைய நட்பும் அவசரமானதாக இருக்கும்; அவர்களுடைய அன்பும் அவசரமானதாக இருக்கும். அதுபோல அவர்கள் காட்டும் பகைமையும் அவசரமானதாகவே இருக்கும். பிராங்லின் என்ற ஆங்கிலச் சிந்தனையாளன் “Fraud and deciet are ever in hurry” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவசரப்படுகிறவர்கள், வாழ்க்கையில் பல தவறுகள் செய்கிறார்கள். நல்லவர்களைப் பகைவர்களாக மதித்து விடுகின்றனர்-பகைவர்களை நல்லவர்களாக மதித்துவிடுகின்றனர். இதன் காரணமாக வாழ்க்கை சுவையற்றதாகி விடுகிறது. அதுமட்டுமல்ல-வாழ்க்கையில், ஆற்றல் இழப்பும் பொருள் இழப்பும் ஏற்படுகின்றன. மோசடி எண்ணமும் தந்திரபுத்தியும் உடையவர்கள் மிக அவசரமாக மேவிப் பழுகுவார்கள். பரிவுரைகளையும், புகழுரைகளையும் குவிப்பார்கள். பின் தன்னுடைய மோசடி எண்ணம் நிறைவேறாத போது தூற்றுவர். ஆக, தவறான காரியங்களைத் தவறான வழிகளில் செய்து முடித்துக் கொள்ளும் நோக்கம் உடையவர்களே அவசரப்படுவார்கள்; பரபரப்பாக விளங்குவார்கள். இக்கருத்தை மாணிக்கவாசகப் பெருமானும் தமது திருவாசகத்தில் தெளிவாக விளக்குகிறார். அருளார்ந்த இன்ப வீடு; அவ்வீட்டுக்கப்பால் உள் நுழையப் பலர் காத்து நிற்கிறார்கள். நுழைந்து உட்செல்லும் தகுதியுடையோர் காத்து நிற்கிறார்கள். ஆனால், அத்தகுதியில்லா ஒருவர் தகுதியுடைய அடியாரின் மேம்பட்டவராக நடிக்கிறார். ஆனால் அவர், காத்திருக்கும் மற்ற அடியார்களோடு காத்திருக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைய விரைந்து முயற்சிக்கிறார். ஏன்? காத்திருக்கும் தகுதியுடைய அடியார்களுக்குக் காலந்தாழ்த்தியாகிலும் நிச்சயமாக இடம் கிடைக்கும். நடிப்பு வெளிப்பட்டால்..? ஆதலினால், விரைந்து இடம்பெற முயற்சிக்கிறார் என்ற கருத்தை விளக்கும் வண்ணம்,

“நாடகத்தால் உன்அடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் முடையானே”

என்று குறிப்பிடுகிறார். மீண்டும் ஓரிடத்தில் ‘விது விதுப்பேனை விடுதி கண்டாய்’ என்றும் குறிப்பிடுகின்றார்.

அறம் பேசவந்த திருவள்ளுவரும், ‘ஆர அமரச் சிந்தித்துத் தேர்ந்து தெளிந்து முடிவெடுக்க வேண்டும்’ என்று வற்புறுத்துகின்றார். இக்கருத்தைத் ‘தேரான் தெளிவும்’ என்ற குறளாலும் ‘தெரிந்து செயல் வகை’ என்ற அதிகாரத்தாலும் நாம் பெறமுடிகிறது.

தருமை ஞான முதல்வர் வாழ்க்கையை வெற்றி கரமாக்க அருளிச் செய்த உபதேசத்தை எடுத்த எடுப்பிலேயே “பரபரக்க வேண்டாம்” என்றே தொடங்குகின்றார். ஆதலால் நம்முடைய வாழ்க்கையையும் வாழ்க்கைப் போக்குகளையும் பரபரப்பில்லாத உணர்வுடன் ஆராய்ந்தறிய நம்மை நாம் பழக்கிக் கொள்ள வேண்டும். ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று முடிவெடுப்பதில் அவசரப்படக் கூடாது. அந்த அவசரமுடிவால் நாமே பல நல்லவர்களைக் கெட்டவர்களாக்கி விடவும் முடியும். கெட்டவர்களை நல்லவர்களாக்கி விடவும் முடியும். கெட்டவர்களை நல்லவர்களாக நினைத்து அல்லற்படவும் நேரும்.

எந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த உடனாவது அல்லது பிறருடைய வாழ்த்து, வசை முதலியவற்றைக் கேட்டவுடனாவது அவசரப்பட்டு முடிவெடுப்பது நல்லதல்ல. ஒவ்வொன்றுக்கும் இருக்கிற காரண காரியங்களையும் உள்நோக்கங்களையும் சூழ்நிலைகளையும் ஒரு தடவைக்கு மூன்று தடவையாவது அமைதியாக ஆராய்ந்து முடிவெடுத்துப் பழகுவதும் செய்வதுமே நல்லது.

ஆராயும் மனப்பண்பு

அவசரப்படக் கூடாது என்ற அளவிலேயே அமைதியாகக் காலங் கடத்துவது என்பது பொருளல்ல. வாழ்க்கையில் தெளியும் உறுதியும் பெற, ஆராய்கின்ற மனப்பண்பு தேவை. வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனித்தனியே வைத்துப் பார்த்து நன்றா தீதா என்று முடிவு செய்வது நல்லதல்ல-இயல்புமல்ல. மனித மாண்புகள் பற்றிப் பேசும் வள்ளுவம் இந்த அறிவுபற்றித் தெளிவான வழிகாட்டுகின்றது. குணங்களை அறிந்து கொள்க! குற்றங்களையும் அறிந்து கொள்க! பின் அவற்றுள் மிகை எது என்று கணக்கெடுத்து முடிவெடுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதே வள்ளுவத்தின் கருத்து. நாடி ஆராய்வதிலும் குணங்களையே முதன் முதலில் ஆராய வேண்டும் என்று வள்ளுவம் பேசுகின்றது.

இன்றைய வாழ்க்கை முறையில் பலர், குணங்களைப் பார்க்க மறுக்கின்றனர். குற்றங்களையே நாடுகின்றனர். குணங்களை மறைத்துக் குற்றங்களையே பேசுகின்றனர். தன்னுடைய நிறைவின்மையைப் பிறர் குறையைக் காட்டுவதன் மூலம் மறைக்க முயற்சிக்கின்றனர்.

இன்றையச் சமுதாய வாழ்க்கை கலைந்த வீடு போல் காட்சி அளிக்கிறது. கலைந்த வீட்டில், எப்படிக் குடியிருப்ப தென்பது முடியாதோ அதுபோலவே, அன்பிலும் உறவிலும் வாழவேண்டிய சமுதாயம் தம்முள் கலைந்து விடுமாயின் மனித சமுதாயம் வாழ முடியாது.

நன்றா தீதா என்று காண்பது மட்டும் போதாது. நன்றும் தீதும் நிகழ்வதற்குரிய காரணங்கள் என்ன என்று ஆராய்தலே வாழ்க்கையின் உயர்ந்த முறை.

ஒரு நிகழ்ச்சி தீமையாக இருக்குமானால் அத்தீமையினுடைய தோற்றங்கள் சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொண்டு நலன் விளைவதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும். தீமையை வெறுப்பது மட்டும் சீர்திருத்த மல்ல-தீமையினிடத்தில் அதற்கு மாறான ஒரு நன்மையை வைத்துத் தீமையை அகற்றுவதே சீர்திருத்தம். சிற்சில பொழுதில் சூழ்நிலையின் காரணமாகவும் தம்முடைய வழக்கத்தின் வழிப்பட்ட பலவீனத்தின் காரணமாகவும் செயல் மாட்டாமையின் காரணமாகவும் நம்முடன் பழகிய அரிய நண்பர்களே தீமை செய்து விடுவதும் உண்டு. இத்தீமையின் வழி, நாம் ஆத்திரப்படுதல் முறையல்ல. முன்னும் பின்னும் உள்ள வாழ்க்கைப் போக்குகளை அன்பின் தரமான நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனாலன்றோ திருக்குறள்,

“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்”

என்று கூறுகிறது. இக் கருத்தினையே ‘கண்ணால் கண்டதும் பொய்-காதால் கேட்டதும் பொய்-தீர விசாரித்தறிவதே மெய்’ என்று பழம் பாடல் கூறுகிறது. ஆகையால் வாழ்க்கையில் தொடர்ந்து நல்ல நண்பர்களைப் பெற்று இனிமையாக வாழ வேண்டுமென்றால் ஆராய்கின்ற மனப்பண்பு தேவை.