குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/தேடிப் பெறுவதா?

விக்கிமூலம் இலிருந்து


24


தேடிப் பெறுவதா?


துணையொடு கூடிய வாழ்க்கையே நல்வாழ்க்கை - அன்பு நலங்கனிந்த வாழ்க்கை - அற வாழ்க்கை. உலகியலில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கையில் பல வேறு துணைவர்கள் கிடைக்கின்றார்கள். கொஞ்சநாள் கூடி வாழ்கிறார்கள். பின்னர் பிரிந்து விடுகிறார்கள். சிலர் காரணத்துடன் பிரிவார்கள்-சிலர் காரணமின்றியே பிரிவார்கள்-சிலர் தம் பிரிவுக்குக் கற்பனையாகக் காரணம் காட்டுவார்கள். எப்படியோ இவ்வுலக வாழ்க்கையில், நமக்குக் கிடைத்த துணைவர்களிற் பலர் பிரிந்துவிடுகிறார்கள். தன்னலங்களையும் தடைகளையும் கடந்து பாசத்தோடும் பரிவோடும் துணையாகத் தொடர்ந்து வாழ்ந்தவர்கள் இயற்கை நியதியில்-மரணத்தால் பிரிக்கப்படுகின்றனர். அப் பிரிவினைகளையும் கடந்து உயிரை ஒட்டிச் சென்று மறுமையிலும் உறவு கொள்ளுகின்றவர்களும் உண்டு. அத்தகையேர்ர் கோடியில் ஒருவரே. அத்தகு துணை உலகியலில் கிடைப்பது அருமையிலும் அருமை. அதனாலன்றோ உலகியல் துணைகளைவிட இறைவனைத் துணையாகக் கோடல் சாலச் சிறந்ததெனச் சான்றோர் சொல்லுகின்றனர். இறைவனைத் துணையாகக் கொண்டால் அவன் எப்பொழுதும் எக்காலத்தும் எக்காரணத்தாலும் பிரிவதில்லை.

இம்மையோடன்றி மறுமையும் எழுமையும் தொடர்ந்து துணையாக இருப்பவன்-நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும் பிரியாதவன். அதனாலன்றோ மாணிக்கவாசகர் இறைவனை ‘தனித்துணை’ என்று கூறி வாழ்த்துகிறார். இறைவனைப் பெறுவது எப்படி? பிற சமயங்கள் ‘தட்டினால் கதவு திறக்கப்படும்’ என்று சொல்லும். தட்டும் சக்தி வந்து விட்டால் கதவு திறக்க இன்னொருவரும் வேண்டுமோ? தட்டும் பதவி பெற்ற ஒருவர் அக் கதவினை உதைத்து, உடைத்து உள்ளே நுழைய முடியாதோ? மேலும் தட்டின பிறகு கதவு திறப்பதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குக் கருணை என்றா பெயர்? வலிய உதவி செய்யும் (Volunteer Service) பண்பே வாழ்த்தப் பெறுகிறது. நம்முடைய வழிபடும் தெய்வமாகிய முருகன், தட்டாமலேயே கதவு திறப்பவன்; அதனாலன்றோ ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று திருவாசகம் பேசுகிறது! நாம் திருவருளைப் பெற வேண்டும். அவ்வின்பத்தைப் பெற்று வாழவேண்டும் என்று விரும்பி முனைவதைவிட நமக்கு அத்திருவருள் நலத்தை வாரி வழங்கவேண்டும் என்றே திருவுளங்கொண்டுள்ளான் முருகன். வந்த பிறகு வாரி வழங்கவில்லை. இதைத்தான் ‘வாரி வழங்குகின்றான் வந்து முந்துமினே’ என்கிறார் மாணிக்கவாசகர். இக்கருத்தினைத் திருவாசகத்தில் பல இடங்களில் பரக்கக் காண்கின்றோம். இறைவன் திருவருள் வழங்குகின்றமையைப் ‘பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்தூட்டும்’ என்கிறார். அழுதபின் ஊட்டும் தாய் அவ்வளவு சிறப்புடையளல்லள். அழாமலேயே காலத்தையும் பசியையும் கருத்திற்கொண்டு நினைந்தூட்டும் தாய் சிறப்பானவள். இறைவனாகிய தாயும், இத்தகைய தாயையும்விடச் சிறந்த முறையில் அருள் வழங்குகின்றான். ‘நினைந்தூட்டும் தாயினும்’ என்ற வரி நினைந்து நினைந்து மகிழத்தக்கது. இந்த வரியின் பொருளைத் திருக்குறள் இன்பத்துப்பால் தெளிவாக விளக்குகிறது. தலைவன் தலைவியிடம் ‘உன்னை நினைந்தேன்’ என்று கூறினான். உடனே தலைவி அழுதாள். ‘ஏன்’ என்று தலைவன் கேட்கத் தலைவி, ‘நினைந்தேன்’ என்றால் நினைப்பதற்கு முன் மறந்ததும் உண்டன்றோ? என்கிறாள். மறதிக்குப் பின் தோன்றுவதே நினைவு. இறைவன் நினைந்தருள் வழங்கினான், என்றால் ஒரு போது மறந்தானோ என்ற கேள்வியும் எழும். அவன் ஒருபோதும் உயிர்களை மறக்கவில்லை என்பதைக் குறிக்கவே மாணிக்கவாசகர் இங்ஙனம் குறிப்பிடுகிறார்.

இறைவனின் திருவருளின்பம் நாம் பெறுவதல்ல — அவன் வழங்குவதேயாம். வான்பழித்து, மண் புகுந்து மனிதர்களை ஆட்கொள்கிறான். அவனுடைய திருவருளினாலேயே நாம் ஆட்கொள்ளப் பெறுகின்றோம். அவன் நம்மை ஆட்கொள்வதற்காகவே கோலங்கள் தாங்குகின்றான். ஆயிரம் திருநாமங்கள் பெறுகின்றான். எனவே, இறைவனை நாம் தேடிப் பெறுவதில்லை. அவனே நம்மை நோக்கி ஓடி வருகிறான். அவன் ஓடி வரும்போது நாம் அவனை இழக்காமல் பற்றிக் கொள்ளவேண்டும். மழையை நோக்கி மனிதன் போவதில்லை. மழை வளந்தரும். புயல் வானிலே பரவி வான் வீதியில் வருகிறது. அப்புயலைத் தீண்டி நீர்த் துளிகளாக மாற்றி மழையாகப் பெற மண்ணகத்தே குளிர் காற்றுத் தேவை. குளிர்ந்த காற்றுள்ள இடத்தில் மழை நிறையப் பெய்கிறது. மண் வளம் செழிக்கிறது. அது போலவே இறைவனுடைய திருவருள், வேற்றுமையின்றி எங்கும் பரவிக் கிடக்கிறது. அதைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்ள நம்முடைய நெஞ்சத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதலால்தான் நாம் இறைவனைத் தேடிப் போவதில்லை. அப்படித் தேடிப் போவதாலும் அவனைக் காண முடியாது என்ற கருத்தை அருணகிரியார் அழகாக—தெளிவாக விளக்குகிறார்.

மனித மனம் ஒரு புரியாத புதிர்-அது செல்லக்கூடிய வேகம், மின் அணு அலைகள் செல்லும் வேகத்தைவிட அதிகமானது. அது எங்கும் செல்லும்-எப்போதும் செல்லும். சிறகடித்துப் பறந்து செல்லும். அது நல்லதா? தோட்டத்தில் மேயும் மாடு பட்டிக்குப் போகிறது. அந்த வீட்டு வாழ்வில் உலாவி மேயும் மனத்தை எந்தப் பட்டிக்கு அனுப்புவது? மாட்டை அடைக்கப் பட்டி-மனத்தை அடக்க பக்தி. பட்டியில் அடைந்த மாடு வேறு வழியாக வெளியே போய்விட்டால் பட்டியால் பயனில்லை. பக்தியிருந்தும் பலர் வாழ்வில் மேய்ந்தால் அந்த பக்தியால் பயனில்லை. ‘தடுங்கோள் மனத்தை’ என்று ஆணை இடுகிறார் அருணகிரியார். கண்டபடி மேயும் மாட்டைக் கட்டிப் போட்டால் பொறுமையாக இருக்குமா? ஆத்திரப்படும், அறுத்துக் கொண்டு போக முயற்சிக்கும். தடுத்து நிறுத்தப்போனால் கோபத்தோடு முட்டும். விரைந்து வேகமாகச் செல்லும் மனத்தைத் தடுத்து நிறுத்தி வாழாது போனால் வெகுளி வாழ்க்கையை வெருட்டும். ஆதலால்தான் ‘விடுங்கோள் வெகுளியை’ என்றாணையிடுகிறார். மனத்தின் வேகத்தைத் தடுத்து நிறுத்தினமையையும், வெகுளியை விட்டொழித்தமையையும் காட்டுவன தன்னலச் சார்பழிதலும் பிறர் நலப்பற்றுக்கால் கொள்ளுதலுமேயாம். அப்பொழுது எதுவும் தனக்கு மட்டும் உரியதல்ல-பிறர்க்கும் உரியதாகும். ஏன்? தாம் அனுபவிப்பதைவிடப் பிறரை அனுபவிக்கச் செய்வதிலேயே ஆனந்தம் காண்போர் மேலோர். இங்கேதான் பிறக்கிறது தானம். இப்படிச் செய்வதற்குத்தான் தானம் என்று பெயர். இன்றைய வழக்கில் தானம் என்றால் பாவக் கழுவாய்க்காக வணிகக் கண்ணோட்டத்தோடு இன்னாருக்குத் தான் கொடுப்பதென்ற வரையறையோடு நடைமுறை இருந்து வருகிறது. அது சரியன்று. இதனால் ‘தானம் என்றும் இடுங்கள்’ என்று ஆணையிடுகிறார். இவ்வளவும் இருந்தாலும் போதுமா? சிலர் பரபரப்பாகவே திரிவார்கள். அமைதியாக எதையும் பார்க்கும்-அநுபவிக்கும் ஆற்றலற்றவர்களாகப் பலர் இருப்பார்கள். தாமும் மாறுவார்கள். பிறரையும் தம் வழி மாற்ற முயற்சிப்பார்கள். எல்லாவற்றையும் தாமே தாங்குவது போல எண்ணிக் கவலைப்படுவார்கள். அஃது ஆன்மீக வளர்ச்சியின்மையின் சின்னம். இதற்கே ‘இருந்தபடி இருங்கள்’ என்று ஆணையிடுகின்றார். இருந்தபடி இருப்பதென்றால் உடலால் சோம்பியிருப்பதைச் சொல்லவில்லை. அதற்குப் பெயர் சோம்பேறித்தனம். ‘சித்தம் அடக்கிச் சிவாயநம’ என்று இருப்பதையே இங்ஙனம் கூறுகிறார்.

“நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே”—என்று இருத்தலே

இருந்தபடி இருத்தல் என்பதாம். இங்ஙனம் ஆழ்ந்தால் முருகனைத் தேடிச் செல்லவேண்டாம். அவன் திருவருளைத் தேடி அடைய வேண்டாம். வேல் தாங்கும் முருகனின் திருவருள் வலியத் தானே வந்து வெளிப்படும் என்கிறார் அருணகிரியார். ‘அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே’ பாடலை முழுதும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“தடுங்கோள் மனத்தை; விடுங்கோள்
வெகுளியை; தான மென்றும்
இடுங்கோள்; இருந்தபடி இருங்கோள்
எழுபாரும் உய்யக்
கொடுங் கோபச் சூருடன் குன்றந்
திறக்கத் துளைத்தவை வேல்
விடுங்கோள் அருள்வந்து தானே
உமக்கு வெளிப்படுமே.”

இப்பாடலை முறையாகச் சிந்தித்து அவன் அருள் நம்மிடை வலிய வந்து மேவி நின்று விளங்கிப் பயன்தரும் வண்ணம் வாழ முயற்சிப்போமாக!