உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/கொல்லாமை வேண்டும்

விக்கிமூலம் இலிருந்து


23


கொல்லாமை வேண்டும்


பட்டினத்தடிகள் முழுதுணர்ந்த ஞானி. அவர் உலகியலை அறிந்து வருந்தியதைப் போல யாரும் வருந்தவில்லை. மனித உலகில் தொடர்ந்து நடைபெறும் ஓர் அநீதி - வல்லாளன் வல்லமை இல்லாதானை அடித்துச் சாப்பிடுதல்.

உலகில் எத்தனையோ சமய நெறிகள் தோன்றியும், இலக்கியங்கள் தோன்றியும், சட்டங்களும் அவ்வழிப்பட்ட ஆட்சி முறைகளும் தோன்றியும் இந்த அநீதி நீங்கிய பாடில்லை.

காலையிலிருந்து மாலை வரையில் கடுமையாக உழைப்பவர்க்கு வாழ்க்கை இல்லை. அவர்கள் பிழைக்கிறார்கள். ஏன் இந்த அநீதி? இந்தக் கேள்வியை பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ரூசோவும் கேட்டார்; சோவியத் புரட்சிக்குத் தந்தையாகிய லெனினும் கேட்டார். நமது அருள்ஞானத் துறவியாகி பட்டினத்தாரும் கேட்கிறார். மற்றவரைக் கொன்று வாழுதலும் வாழ்க்கையாமோ?

வல்லோர், வலிமையில்லாதாரை அடுதலும் தொலைத்தலும் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து நடந்து வரும் அநீதி! ஆலயங்கள் என்ன செய்கின்றன? ஆம்! அவை இன்று வல்லமையாளர்களுக்குப் புகலிடம்! சான்றோர் என்ன செய்கின்றனர்; அவர்களைத் தேடிக் காணவேண்டிய திருக்கிறது. இந்த அநீதியை அறநெறிப் பார்வையில் அடிகள் அறிவிக்கிறார்!

ஒரு பெரிய பாம்பு; சிறிய பாம்பை விழுங்குகிறது. சிறிய பாம்பு, அதனினும் சிறிய தேரையை விழுங்குகிறது. தேரை, அதனினும் சிறிய பூச்சிகளை விழுங்குகிறது. இவை எங்கும், எல்லா இடத்திலும் வலிமையின்மையுடையன படும் அவதிக்கு எடுத்துக் காட்டு! அடிகள் ஏன் இதைக் கூறுகிறார்? ஓர் உண்மையை விளக்க முற்படுகிறார். பாம்பு தற்காப்புக்காகவே கடிக்கும். வலிந்து சென்று கடிக்காது. வலிந்து தீமை செய்தல் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லை. பாம்பைத் துன்புறுத்தாதார், பாம்பினாலும் துன் புறுத்தப்பட மாட்டார். “சான்றோர் அவைப்படின் பாம்பும் உய்யும்” என்பது கலித்தொகை. மனிதர்கள் தமக்குத் தீமை செய்யாதார் மாட்டும் தீமை செய்கின்றனர். ஏன்? அவர்களுக்கு நன்மை செய்தாருக்கேகூடத் தீமை செய்கின்றனர்.

மனிதர்கள் மேற்கொண்டு ஒழுக வேண்டிய அறத்திற் சிறந்தவை-துன்புறுத்தாமை, கொல்லாமை ஆகிய அறங்களாம். இதனை அகிம்சை யென்று அண்ணல் காந்தியடிகள் கூறினார். மகவெனப் பல்லுயிரையும் ஒப்ப நோக்கும் அருளுணர்வு வேண்டும்.

தற்செயலாகத் தன்னிடத்திற் பிறந்த மக்களே தம் மக்கள் என்று மட்டும் கருதி அன்பைச் சுருக்குதல் கூடாது.

அங்ஙனம் அன்பு சுருங்கினால் வறட்சியால் காய்தல், உவத்தல் ஏற்படும். அதனால் அறிவு மயங்கி நடுவுநிலை கெட்டு ஒழுக்கம் கெடும். ஒருவரை ஊட்டி வளர்த்தும், ஒருவரைப் பரிவு காட்டாது ஒதுக்கியே வாழ்தலும் கற்றவர்க்கும் அழகல்ல; தாய்மைக்கும் அழகல்ல.

எல்லா உயிர்கள் மாட்டும் ஒத்தநிலையில் அன்பினைக் காட்டாமல் ஓரவஞ்சனை செய்தவர்கள் நேற்றும் கெட்டார்கள் - கைகேயி சான்று. இன்றும் கெட்டவர்களை நாடு அறியும்! ஆதலால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பினைக் காட்டுக! கருணையைக் காட்டுக என்று வள்ளுவம் பேசுகின்றது.

“அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை; இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்”

(243)

என்று வள்ளுவர் கூறுகிறார்.

பிற உயிர்கள் அஞ்ச வாழ்வோர், தன்னுயிர் அஞ்ச வேண்டிய காலமும் வரும். இவர்களால் வருத்தப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள் எதிர்வினையாக இவர்களுக்குத் துன்பம் தரலாம். அவர்கள் தரமுடியாத நிலையில் இருந்தாலும், தர விரும்பாதவர்களாக இருந்தாலும்கூட நீதிவழிப்பட்ட அறஇயல் இவர்களுக்குத் துன்பத்தைத் தந்தே தீரும். “அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு” என்பது குறள்.

ஆதலால், எல்லா அறங்களிலும் மிக்குயர்ந்தது கொல்லாமை. உடற் கொலை மட்டும் கொலையன்று. உயிர் உரிமைகளைப் பாதுகாக்காது வாழ்வதற்குரிய வாய்ப்புகளை வழங்காது வாழ்விழக்கச் செய்தலும் கொலையே யாம். ஓர் உயிர் வயிறு வளர்க்க நூறு, ஆயிரம் உயிர்கள் கொல்லப்படுகின்றன.

கொல்லா நெறியைத் திரும்பத் திரும்ப பாரதத்தில் புத்தர், மகாவீரர், வள்ளுவர், அப்பர், அருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தியும் உயிர்க்கொலை நீங்கின பாடில்லை. புலால் உணவு விட்டொழிந்த பாடில்லை. எங்கும் கொலை உணர்வு கூத்தாடுகிறது. கொலை செய்வார் நெஞ்சத்தில் திருவருள் நோக்கு பதியாது. ஏன்? உலகியலும் வறட்சியுறும். பாரதி,

“நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டார்;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டார்;
சீரான மழைபெய்யும்; தெய்வம் உண்டு!
சிவன்செத்தா லன்றி மண்மேல் செழுமை உண்டு!

என்று பாடுகின்றார்.

மானிட உலகம் கொல்லாமையை மேற்கொண்டொழுகுதல் வேண்டும். உடற்கொலை, உயிர்க்கொலை, அறிவுக்கொலை, உணர்வுக்கொலை ஆகிய எந்தக் கொலையும் கூடாது.

இன்று அறிவியல் கொடிய கொலைக் கருவிகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. போர்ப்பயம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. போர் தோன்றின் உயிர்க்குலம் அனைத்தும் அழிந்து போகும். ஆதலால் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! ஒருபுறம் கொலை! மற்றொருபுறம் தொழுகை! இதனால் என்ன பயன்? கவிதைகளில் முரண் தொடை இனிமையாக இருக்கலாம். வாழ்க்கையில் முரண்பாடுகள் நல்லனவுமல்ல; நாகரிகமும் அல்ல. ஆதலால், பட்டினத்தார் நெறிவழி கொல்லாமையை மேற்கொண்டு ஒழுகுவோமாக!

வலிமை இல்லாதாரின் உரிமைகளைப் பாதுகாப்பதே வல்லமையுடையாரின் சீலம்; நோன்பு! அப்பொழுதுதான் அருள் பழுத்த மனம் கிட்டும்! அப்பொழுதுதான் கடவுள் தொழுகைக்கும் பொருள் உண்டு. உயிர்க் கொலை தவிர்மின்! புலால் உணவைப் புறக்கணிமின்! யாருக்கும் நோதக்கன செய்யன்மின்! எவ்வுயிர் மாட்டும் அன்பினைச் சொரிமின்! வையகம் உண்ண உண்மின்! உலகம் உடுத்த உடுத்துமின்! கடவுள் பெயரால் கொலை தவிர்த்து பட்டினத்தார் நெறியில் புது உலகம் அமைப்போம்! பொது உலகம் சமைப்போம்!