குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/பிழை தவிர்த்தாளும் பெருமான்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


22


பிழை தவிர்த்தாளும் பெருமான்!


பட்டினத்தார் அருளாளர்; வாழ்க்கையில் வெற்றி பெற பிழைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்! ஆற்றுப்படுத்துகின்றார். சிறு பிழைகளையும் மலையாக நினைந்து வருந்துதல் வேண்டும். “நேற்றோடு வாழ்க்கை முடியாமல் இன்றைக்கும் வாழ அனுமதிக்கப் பெற்றிருப்பது பிழைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகவேயாம். இறைவன் பிழைகளைப் பொறுப்பான். அதனால் தொடர்ந்து பிழைகள் செய்யலாமா? செய்யக் கூடாது.

பிழைகளினின்றும் விடுதலைபெற முயற்சி தேவை. பிழைகளை நினைந்து வருந்துதல், பிழைகளுக்குரிய காரணங்களை அறவே களைதல், பிழைகள் வாராது தடுக்கும் முயற்சியில் தலைப்படுதல் ஆகியன தேவை.

பட்டினத்தடிகள் பிழைகளைப் பட்டியல் போடுகிறார். மற்றவர் பிழைகளுக்குப் போட்ட பட்டியலன்று. அதை எளிதில் பலர் போடுவர். ஆனால் அவர் தம்பிழையென்று எண்ணி நினைந்து வருந்துகின்றார்; அழுகின்றார்.

பிழைகளுக்குக் காரணம் அறியாமை. அறியாமை என்பது தெரியாமையன்று; ஒன்றினைப் பிறிதொன்றாகத் திரிபுணர்ச்சியுடன் அறிவதே அறியாமை. திரிபுணர்ச்சியால் உலகம் துன்புறும்; அழியும்; அறியாமை நீக்கத்திற்கு ஞான நூல்களைக் கற்கவேண்டும். கற்கும் நூல்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை.

கற்பது, பழக்கமும், வழக்கமும் ஆகவேண்டும். நாள் தோறும் நூல்களைக் கல்லாதவர்கள் பிழை செய்கிறார்கள். ஞான நூல்களைக் கற்றால் மட்டும் போதாது அந்நூற் கருத்தினைக் கருதுதல் வேண்டும். சிந்தித்தல் வேண்டும். அங்ஙனம் கருதாததும், பிழையே!

இதயம் ஈரமாக இருத்தல் வேண்டும். “ஈர அன்பினர்” என்பார் சேக்கிழார். ஈரத்தின் விளைவு கசிதல்-உருகுதல். இறைவனை நினைந்து கசிந்துருகி அழாததும் பிழையே. வாழ்க்கையின் இன்பதுன்பச் சுழற்சிகளில் நினைக்க வேண்டாததை நினைக்கவும், நினைக்கக் கூடியதை மறக்கவும் வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இறைவனை நினையா திருத்தல் பிழை.

இறைவனின் திருவருளைத் தருவது ஐந்தெழுத்து. ஐந்தெழுத்தின் அருமையைத் திருமுறை அருளிய ஞானாசிரியர்கள் பாடியுள்ளனர். ஐந்தெழுத்தினை “வைத்த பொருள்” என்று கருதும்படி அப்பரடிகள் அறிவுறுத்துகின்றார். சுந்தரர், “மற்றுப் பற்றெனக்குன் திருநாமமே மனம் பாவித்தேன்” என்பார். ஐந்தெழுத்தினை எண்ணிச் சொல்லாததும் பிழையே!

இறைவன் போற்றுதலுக்குரியவன்; அவன் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது. அப்பொருளைப் போற்றித் துதி செய்தல் கடமை. அங்ஙனம் செய்யாததும் பிழை. கற்று, கருதி, கசிந்துருகி நின்று, நினைந்து, ஐந்தெழுத்து ஓதி, துதித்து வாழ்தல் பிழையிலா வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

கடவுள் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் விண்ணளந்து காட்டி வினை மறைப்பவை. நெடுந் தொலைவுக்குத் தெரியும்! தோட்கப்படாத செவிகளுக்கும் கேட்கும் வகையில் மணிகள் ஒலி செய்யும். ஆதலால், திருக்கோயிலைக் கண்டவுடன் தொழுக! ஆலய மணி ஒலி கேட்டவுடன் தொழுக! அப்படித் தொழாஅத தூஉம் பிழை. இவை அடிகள் காட்டும் பிழைகள்! இப் பிழைகளிலிருந்து கிளைத்தெழும் பிழைகளும் உண்டு. பிழைகள் நீங்க வில்லையானால் பிழைகளைத் தொடர்ந்து பழி வரும்; பழி, பாவத்தைத் தரும்; பாவம், நரகத் துன்பத்தைத் தரும். ஆதலால், பிழைகளைத் தவிர்த்து வாழ முயல்க!

பிழைகளைத் தவிர்ப்பது எளிதன்று. பழக்கம் மிகமிகக் கொடிது. உயிரின் அறிவு பழக்க வாசனையின் வழியிலேயே செல்லும், தீய பழக்கங்களிலிருந்து உயிரை நேரடியாக மீட்பது எளிதன்று. மீட்கும் பணியைவிட உயிர்க்கு நலம் பயக்கும் பழக்கங்களில் ஈடுபடுத்துதல் நன்மையைத் தரும்; மீட்பாகவும் அமையும், தீமையும் எளிதாக விலகும். பிரார்த்தனை என்பதே பிழைகளை நினைந்து வருந்தி நல்லறிவு வேட்டலேயாம்.

“யானே பொய்என் நெஞ்சும்

பொய்என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே!”

என்று மாணிக்கவாசகர், பாடுகின்றார்.

ஆதலால், பிழைகளைத் தவிர்த்து வாழப் பிரார்த்தனை செய்க! உயிர்களைப் பிழைகளிலிருந்து மீட்பது பிரார்த்தனையே! பிழைகளைத் தவிர்க்கப் பயன்படும் பிரார்த்தனையே இன்று பிழைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. தீவினையை நினைந்து வருந்த வேண்டியதிருக்கிறது.

இறைவனின் சந்நிதியில் பொன்னும் பொருளும் புகழும் வேண்டிப் பிரார்த்தனை செய்தல் பிழையென்பதை அறிக! ஆதலால், பிழைகளைத் தவிர்த்திட முயலுக! அறியாமையை அகற்றுக! நல்ல ஞான நூல்களை-கற்க! கருதுக! இறைவனை நினைந்து கசிந்துருகி அழுக! தொழுக! உய்வு பெறுக.

நாம் மனிதர்கள்தாமே! நம்முடைய அறிவு, ஆற்றல் எல்லைக்குட்பட்டவை. நாம் வாழும் சமுதாய அமைப்பு செப்பமில்லாதது. ஆதலால், நாமே பிழைகளிலிருந்து முற்றாக விடுதலைபெற இயலாது. முயன்றாலும் அது சேற்றுக் குட்டையிற் சிக்கிய மாடு கரை ஏறியதைப் போலத்தான்! அதற்காகப் பிழைகளைத் தவிர்க்கும் முயற்சியை விட்டுவிடக் கட்டாது.

முற்றாக நம்மைப் பிழைகளிலிருந்து நீக்கித் தவிர்த்தாளும் தண்ணளி பெரும்ானுக்கு உண்டு. அவன் பொறுத்தருளாது போனால் நமக்கேது உய்தி? குன்றே அனைய குற்றங்களைக் குணமாகக் கொண்டு ஆட்கொள்ளுதல் அவனுடைய கருணையின் செயல்! அவன் உயிர்கள் நோகாவண்ணம் பையத் தாழுருவித் தண்ணளி செய்திடுவான்.

“கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!

பட்டினத்தார் வழியில் நாமும் பிழைகளை நினைந்து வருந்துவோம்! பிழைகளைத் தவிர்த்து வாழ்ந்திடுவோம்!