உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/எல்லை கடந்த பொருள்!

விக்கிமூலம் இலிருந்து


21


எல்லை கடந்த பொருள்!


கடவுள் எங்கே? அவர் எப்படி இருப்பார்? கண்ணால் காணக் காட்ட முடியுமா? - என்ற வினாக்கள் இன்று பிறந்தன அல்ல. கடவுள், பழம் பொருள்! வினாக்களும் பழமையானவையே! விடை காண முடியாத வினாக்கள்! விடையே காண முடியாத வினா உண்டா? உண்டு!

விடையே காண முடியாத வினா உண்டு என்பதே அறிவியலின் அடிப்படை! இடையில் விடை என்ற பெயரில் சில விடைகள் தோன்றலாம். அவையே முடிவான விடைகளா? என்ற வினாத் தோன்றும்; இங்ஙனம் வினாவும் விடையுமாகச் சுழன்று வளருவது அறிவியல். திருவள்ளுவரும் “அறிதோறறியாமை” என்பார்.

ஐம்பூதங்களை அறியும் அறிவியலிலேயே அறியாமை இருக்கிறது. கண்ணால் காண்பன, உடலால் உற்றறிவன - இவற்றிலேயே இன்னமும் முழுநிலை கண்டபாடில்லை! இவற்றைக் கடந்த கடவுளைப் பற்றி ‘காண்க’ என்பதும் ‘காட்டுக’ என்பதும் ‘காட்டுவேன்’ என்பதும் சிறுபிள்ளை விளையாட்டேயாம்.

அறிவு, வளரும் இயல்பினது. அதற்கு எல்லை கிடையாது. சாதாரணமாக உலகியலில் அறிவுடையார் யார்? என்று காண்பதே புரியாத புதிர்! அறியாமையே கூடப் போலியாக அறிவு வேடம் பூண்டு ஆரவாரம் செய்வதைக் காண்கின்றோம். இதில் சாதாரண அறிவு கிடக்கட்டும்! வேதங்கள் என்ன ஆயின? என்று கேட்கலாம்.

வேதங்களும் கூட வளர்ந்தும் வளராத உயிர்களின் படைப்புக்கள் தாமே! வேதங்கள் முழுநிலைத் தகுதியுடையன என்றால் அவற்றுக்கு எப்படி உரைகள் மாறுபடும்? சிலர் வேதங்களுக்குப் பெருமை சேர்ப்பதற்காக வேதங்களை இறைவனே அருளிச் செய்தான் என்பர். அஃது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை! உபசார வழக்கு-அவ்வளவுதான்!

வேதங்கள் இறைவனைத் தேடியும் காண முடியவில்லை என்பது மாணிக்கவாசகர் வாக்கு. வேதங்கள் கடவுளால் படைக்கப்பட்டன அல்ல. அவைகளால் கடவுளைக் காணவும் இயலாது. கடவுள் வேதங்களையும் கடந்தவன். வேதங்களால் தொடர முடியாதவன் என்பார் பட்டினத்தார்.

“ஆரணம் தொடராப் பூரண புராண”

என்று பாடுகின்றார். கடவுள், பூரணன்! பூரணம் உடைய ஒன்றை பூரணமில்லாத ஒன்று காணவும் இயலாது; காட்டவும் இயலாது. வேதங்கள் காலத்தால் பழைமையானவை. ஆனால், கடவுள் காலத்தைக் கடந்த பழைமையானவன் என்பதை விளக்க “பூரண புராண” என்றார்.

வேதங்களானாலும் சரி, வேறு எந்த நூலானாலும் சரி, உரைகள் காண்பது அறிவுத் துறையில் முயல்வோர் வழக்கு. வகை வகையாக உரைகள் காண்பர்! பின், அவ்விரு வகை உரைகளிடையே மோதல்! இங்ஙனம், வகை வகையாக உரைகள் காண முயல்வார். உரைகளையும் கடந்த உள்ளார்ந்த அனுபவத்தில் ஈடுபடின் பயன் உண்டு! ஆனால், அத்துறையில் ஈடுபடுவோர் அரியரில் அரியர். அனுபவத்திற்கும் உணர்விற்கும் வாயிலாக அமையாத உரைகாணும் முயற்சி பயனற்றது.

பாட்டுக்குப் பொருள் உண்டு! ஆனால், பாடுவோர் பாட்டினைப் படித்து, உணர்வாரின் தகுதி நோக்கிப் பொருளின் அறிவு கூடும்; குறையும்-மாறுபடும்; முரண்படும். மனிதர்கள் காணும் பொருள், எல்லைகள் உடையது.

எல்லைகளைக் கடந்த பொருளுக்கு, எல்லைக்குட்பட்ட பாட்டும், பொருளும் எப்படி எல்லை காட்ட முடியும்? இல்லாத ஒன்று. அதனால் பட்டினத்தார் கடவுள், உரைகளைக் கடந்தவர்; உரைகளின் வரைகளைக் கடந்தவர்; உரைகள் காட்டும் பொருள்களின் அளவைக் கடந்தவர் என்று பாடுகின்றார்.

“உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து”

என்பது அருள்வாக்கு!

அறிவு, நிறை நலம் சான்றதாக வளரும் பொழுது “ஞானம்” என்று பெயர் பெறுகிறது. ஞானத்தைத் திருவள்ளுவர் “வாலறிவு” “செம்பொருள்” “மெய்ப்பொருள்” என்றெல்லாம் கூறி விளக்குவார். அறிவு, ஞானமாக முதிர்ச்சியடையும்போது அறியாமையின் நிழல்கூட இருக்காது. அந்த ஞானம் கண்டோரை, கேட்போரைத் தன்பால் ஈர்க்கும்; மணம் நிறைந்ததாக இருக்கும்.

ஞானத்தில் வார்த்தைகள் பேசா! ஞானம் மோனத்தன்மையுடையது. ஞானம் குறிப்பில், உணர்த்தும். ஞானத்தைப் பெறுதற்குத் தகுதி உடையார் குறிப்பில் உணர்வர். இந்தத் தத்துவத்தின் வழிபாடே ஆலமர் செல்வன் வழிபாடு! ஆலமர் செல்வன் இருந்தபடியே இருக்கிறார். ஆனால் எண்ணிலாதனவற்றை உணர்வார்க்கு உணர்த்துகின்றார்!

ஆலமர் செல்வன், வலக்கையின் ஆட்காட்டி விரல் அதாவது சுட்டுவிரலைக் கட்டை விரலுக்குக் கீழாகக் கொண்டு பொருத்தி, மற்றைய மூன்று விரல்களையும் நீட்டியவாறு காட்டி ஏதோ பாடம் சொல்லிக் கொடுக்கிறார்! “சின்னமுத்திரை” என்று சொல்லப்படுகின்ற இந்த முத்திரையைப் பற்றிக் கவிஞன் பாடத் தொடங்கினால் நூறு பாட்டுக் கூடப் பாடலாம்!

ஞானம், மோனத்திலே காட்டும் படிப்பினை என்ன? சுட்டுவிரல் மடங்குகிறது. சுட்டிக் காட்டப் படுதல் பெருமையின் சின்னம்! புகழின் அடையாளம்! மனித உலகம் அலமருவதெல்லாம் சுட்டிக் காட்டும் சொல்லைப் பெற வேண்டியே! அதனாலன்றோ, இன்று மனித உலகம் புகழ் வேட்டைக் காடாக விளங்குகின்றது.

ஆதலால், புகழினைப் பெறும் அவாவினை, ஞானத்தினை நோக்கி மடைமாற்றம் செய்தல் வேண்டும். கடவுளை நாடிச் செல்லும் ஆன்மா-உயிர் மோனத்தில் அமரும். மோனம் என்பது உயர்நிலை! செயலின்மையெல்லாம் மோன நிலையாகாது! வாயினால் பேசாமையெல்லாம் மோன நிலையாகாது.

சிலர் “இன்று மௌனம்” என்பர். ஆனால், அன்றுதான் அவர்களின் பொறிகளும், புலன்களும் வேகமாகத் தொழிற்படும். அதில் என்ன பயன்? சும்மா இருத்தல் என்பது உயர் ஞானக் கலை! உயிர் உடல் மற்றும் அறிதல் கருவிகள், செயற்கருவிகள், உணர்வுக் கருவிகள் அனைத்தும் ஒரு நிலையில் ஒன்றித்து, அடங்கி அனுபவத்தில் திளைத்தலே மௌனம். இதையே அனுபூதி என்பர்.

இதுவே, பேசா அனுபூதி! பேச்சு இறந்ததே அனுபூதி! விவகார உணர்வு ஒடுங்கும் வரையில் அனுபூதி தோன்றாது. இதனைப் பட்டினத்தார், நன்கு விளக்குகிறார்.

ஆதலால், இறை நெறியில் பட்டினத்தார் நெறி, தேடும் நெறியல்ல; ஓதும் நெறியல்ல; உற்றுணர்ந்து அறியும் நெறியேயாம். ஞானம் ஆரவாரத்தில் வராது. ஆழ்கடலின் அடி மடியில்தான் நன்முத்து கிடைக்கும்.

அதுபோல வாழ்க்கையின் ஆழ்கடலில்தான் “ஞானம்” என்ற முத்து கிடைக்கும். ஆதலால் பட்டினத்தார் நெறியில் இறைவனைக் காண மோனத்தில் அமருவோம்.

மோனம் என்பதற்கு பரபரக்காமல் ஒன்றினை நினைந்து நினைந்து அதில் ஆழ்தல் என்பதே பொருள். எந்தச் சூழ்நிலையிலும் மனம் விகாரமடையாமல் அமைதியாக இருத்தலே மோனம். இத்தகைய மோனநிலை ஆற்றல் மிக்கது. அத்தகு மோனத்தைப் பெற பட்டினத்தார் அடிச்சுவட்டில் முயலுவோமாக! வாழ்ந்து வாழ்விப்போமாக.