உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/ஞான உழவு!

விக்கிமூலம் இலிருந்து


20


ஞான உழவு!


பட்டினத்தார் துறவி; “காதற்ற ஊசியும் கடைவழி வாராது” என்று கடைபோகத் துறந்த மாமுனிவர். துறவின் தூய திருவுரு, பட்டினத்தார். பட்டினத்தார் வழித் துறவு சிறந்தால் உலகு சிறப்புறும். பட்டினத்தார் முற்றத் துறந்த முனிவரானாலும் உழைப்பின் அருமையை உணர்ந்திருக்கிறார்; உணர்த்துகிறார். இன்று துறவுக்கும், உழைப்பிற்கும் தொடர்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். உழைப்பே உலகத்திற்கு உயிர் நாடி.

ஞான வாழ்க்கைக்கும் தளராத உழைப்புத்தான் தேவை. உலகியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமே உழைப்பு தேவை என்று கருதக் கூடாது. ஞான வாழ்க்கைக்கும் இடையீடில்லாத, தொடர்ச்சியான, சோர்வில்லாத முயற்சி தேவை. அக நிலையிலும் தேவை, புற நிலையிலும் தேவை. ஞான வாழ்க்கையில் கடுமையாக உழைத்தால் இப்பிறப்பிலேயே, உயிர் நிலையிலேயே ஞானம் பெறலாம்.

வாழ்க்கையின் மையம் மனமே! மனத்தின் வழியே பொறி, புலன்கள் தொழிற்படுகின்றன. மனம் தூய்மையாக இருந்தால், பொறிகள் தூய்மையாக இருக்கும். புலன்கள் தூய்மையாக இருக்கும். அதனாலன்றோ வள்ளுவம்,

“மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்”

என்றது. மனம் நிலம் போன்றது. நிலம் உழுது வளப்படுத்தாது போனால் வளம் தராது. ஆனால் உழாத-வளப்படுத்தாத நிலத்தில் புல், பூண்டுகள், முட்செடிகள் முளைக்கும். ஆக, நிலத்தை உரியவாறு பயன்படுத்த வேண்டும்.

அதுபோலவே, மனத்தை உழுது பண்படுத்த வேண்டும். மனத்தின் கண் தோன்றும் கருத்துக்கள், தீய எண்ணங்கள் ஒருநாள், இருநாள் முயற்சியில் மாறா. அவற்றை நாம் விடுக்க முயலும்தோறும் அவை கிளர்ந்து எழும். அதனால் மனத்தை “வஞ்சக் கட்டை” என்கிறார், பட்டினத்தார். நன்மை செய்தல் போலக் காட்டித் தீமை செய்ததால் “வஞ்சக் கட்டை” என்றார்.

மனத்தின் வஞ்சனையை, வஞ்சனையின் தீய எண்ணத்தை முதலற அதாவது வேரற எடுத்தல் வேண்டும். கழனியில் வேளாண்மை செய்யப்புகின் கழனியிற் கிடக்கும் வேளாண்மைக்கு பொருந்தாப் பொருள்களை அகற்ற வேண்டும்.

அதுபோல மனத்திற் கிடக்கும் பொருந்தா எண்ணங்களைத் தூர்வை எடுக்கவேண்டும். நிலத்தில் உரமிட, தண்ணீர் பாய்ச்ச வாய்ப்பாகவும், இடும் உரமும் பாய்ச்சும் தண்ணீரும் பரந்தோடிக் கெடாமல் இருக்கவும் பாத்திகள் அமைத்தல் இயற்கை. அதுபோல மனத்திலும் அன்பு, அறம், தொண்டு ஆகியவகைளைப் பாத்திகளாக அமைத்து ஒன்றினை ஒன்று தழுவித் தொடர்ந்து தொழிற்படச் செய்ய வேண்டும்.

கழனியில் நட்டால் மட்டும் பயிர் வளர்ந்துவிடாது. உரம் இடுதல் வேண்டும். மனம் விளைந்து பயன்தர உண்மை என்ற எரு இடவேண்டும். எது உண்மை? பொய்யாது ஒழுகுதலே உண்மை.

வள்ளுவம் வரையறுத்துக் காட்டிய வாய்மையில் வாழ்தலே உண்மை. மனத்தின்கண் விளைந்த சிவம் என்ற பயிர் முறையாக வளர, நாள்தோறும் ஆர்வம் என்ற தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். இவ்வளவும் செய்த பிறகும் பயிர் வளர்ந்து கதிர் முற்றி நிற்கும்போது எருதுகளால் அழிவு வராமல் காப்பாற்ற வேண்டும். எருதுகள், விளைந்த கழனியிற் புகுந்து உழப்பும்; கதிர்களைத் தின்னும்; விளைந்த கதிர்களைக் காலிற்போட்டு மிதிக்கும்; விரட்டச் சென்றாலும் அவைகள் எதிர்த்துத் தாக்கும்.

அதுபோல, மனத்தின் கண் விளையும் சிவப் பயிரை ஐம்பொறிகள் அழிக்கும். ஐம்பொறிகள் சிவம் என்னும் பயிரை அழிக்காமல் சாந்தம். தகைமை, சீலம் ஆகிய வேலிகளை அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.

இங்ஙனம் மனத்தின் கண் சிவப் பயிரைக் காத்தால் ஞ்ானம் பழுக்கும். இச் சிவப்பயிர் புண்ணியத்தை நல்கும். உயிரினைச் சேமப்படுத்தும் என்று வேளாண்மைத் தொழிலோடு ஞானத்தை உவமைப்படுத்தி, பட்டினத்தார் அருளியுள்ள பாடல் ஓதி இன்புறத் தக்கது.

“உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையறவு உளவோ

அதனால்,

நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வை செய்து
அன்பென் பாத்தி கோலி, முன்புற
மெய்யெனும் எருவை விரித்துஆங்கு ஐயமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று

தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உள் சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட, அருகாக்
காமக் குரோதக் களை, அறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு, அம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து
புண்ணிய
அஞ்செழுத்து அருங்காய் தோன்றி, நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
பவள நிறம்பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை யதனினும் உறுசுவை யுடைத்தாய்க்
காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர
............”

என்று திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் அருளியுள்ளார். பட்டினத்தார் வழியில் நாமும் ஞான வேளாண்மை செய்திடுவோம்! ஞான உழவில் மனத்தைத் தூய்மை செய்வோம்! மனத்தினைக் காடு ஆக்காமல் “சிவம்” என்னும் பயிர் விளையும் கழனியாக்குவோம்!

மனத்தில் முகிழ்க்கும் சிவஞானத்தைச் சீலத்தால் பாதுகாத்துத் தொண்டு என்னும் தூயவேலி அமைத்துப் போற்றிப் பாதுகாப்போம்! மனம் சிவம். ஆனால் மண்ணுலகம் சிறக்கும். பட்டினத்தார் வழியில் ஞானஏர் உழவைப் பூட்டுக! ஞானஏர் உழவை சிறப்புற நடத்துக.