குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/பேசு, வாழி!

விக்கிமூலம் இலிருந்து

19


பேசு, வாழி!


பட்டினத்தார் இறைவனை நினைந்து நினைந்து நெகிழ்ந்துருகிப் பாடும்படி கூறுகின்றார். நாய் ஊர் சுற்றும்; மலம் உண்ணும்! எச்சில் இலையைத் தேடும்; தின்னும்; புழுதியிற் புரளும். அதனால் மாணிக்கவாசகர் “ஊர் நாயிற் கடைப்பட்டு” என்று இழிநிலைக்கு எல்லை காட்டுவார்.

ஆயினும் நன்றி அறிதலாகிய நற்குணத்திற்கு நாய்க்கு ஈடு எதுவுமில்லை. நாய் வலிந்து தீமை செய்வதில்லை. ஆயினும் மனிதன் நாயைப் போல் நன்றி அறிதலில் வளரவில்லை. ஆனால் நன்றியைக் கொன்ற வரலாறு உண்டு.

இறைவன் தோன்றாத் துணைவன். உள்ளத்திலும் எழுந்தருளியுள்ளான். வேண்டுவன எல்லாம் தருகின்றான். வாழ்விக்கின்றான். என்ன செய்தென்ன? அவன் இறைவனை நினைக்கின்றானா! இல்லை மறுக்கின்றான். அவன் கருணையை உணர்ந்தானா?

இறைவனை அறிவால் தேட முடியாது. பொருளால் தேட முடியாது. ஆயினும் தாயிற் சிறந்த தயாவாக அவன் இறங்கி அருளுகின்றான். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்பது திருவாசகம்.

அழுதும் ஊட்டாத தாயரும் உண்டு. அழுகுரல் கேட்டு ஊட்டும் தாயரும் உண்டு. நினைந்தூட்டும் தாய்மை சிறந்தது. இறைவனாகிய தாய் அவளினும் சிறந்தவனாம்! எப்படி? நினைப்பு, மறதியைத் தொடர்ந்து வருவது. மறதியின்றேல் நினைத்தல் ஏது? நினைந்தூட்டும் தாய் என்றதாலேயே அவள் மறந்திருந்தாள் என்பது பெறப்படுகின்றது.

இறைவனாகிய தாய்க்கு மறதியில்லை. அதனால் நினைவு கூர்தலும் இல்லை. இறைவன், உயிர்களை மறப்பானாயின் ஏது உயிர்ப்பு? ஏது உலகம்? ஆதலால், இறைவன் உயிர்களை மறப்பதும் இல்லை; நினைப்பதும் இல்லை; ஆனால் அறியாமை வயப்பட்ட உயிர்கள் இறைவன் மறந்து விட்டான் போல எண்ணிப் புலம்புகின்றன. இல்லை; அவ்வுயிர்களை அவை அறியாமல் தொடர்ந்து வருகின்றான்.

அவன்றவன் கருணையினால் ஊன்பொதி தசையினை உருகும் உடலாக மாற்றுகிறான். ஆன்மாவில் ஞான விளக்கினை ஏற்றி ஒளி உண்டாக்குகிறான். ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து அற்புதம் செய்கின்றான். இந்த அற்புதத்தினை, அனுபவத்தினை உயிர்கள் இழக்காமல் துய்த்து மகிழப் புறம் புறம் திரிந்து பாதுகாக்கின்றான்.

உலகியலில் பெரியோர் முன்செல்வர், அருளியலில் உயிர்களே முன் செல்லும், இறைவன் பின்னே வருவான். ஏன்? முன்னே செல்லும் உயிர்கள் இடறி விழுந்தால் எடுத்தாள வேண்டுமல்லவா? அதனால் அவன் உயிர்களின் பின்னே வருகின்றான் இல்லை! அவன் பித்துப் பிடித்து. உயிர்களின் பின்னே திரிகின்றான்.

அவன் உயிர்களை ஆட்கொண்டருளித் திரிவதற்கு யாது பொருள்? யாது குறிக்கோள்? ஒன்றுமே இல்லை! “குறியொன்றும் இல்லாக் கூத்து” என்று திருவாசகம் பேசும்.

இங்ஙனம் வண்ணப் பணித்து வாவென்று வான் கருணை பொழிந்திடும் அண்ணலை நினைந்து அழாமையால் “நாய் அனைய” என்று நாயை இழித்துக் கூறுகின்றதைப் போல, நாயை உயர்த்துகின்றார்.

நாய்க்கு நன்றி உண்டு. தம் தலைவனைக் காணின் அன்பு காட்டும். ஆனால் மனிதனுக்கு அது இல்லையே! என்ற ஏக்கத்தில் “நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன் களித்துத் தாயணையனாய் அருளும் தம்பிரான்” என்று பாடுகின்றார் பட்டினத்தார். பேரருளின் அருமைப் பாட்டை உணராதது ஏன்? ஆசைகளால் மனித மனம் அலைப்புறுகின்றது. ஆதலால், அருளில் நாட்டமில்லை.

தூண்டில் வாயிற் புழுவை விரும்பி மீன் இறக்க வில்லையா? அது போல நாம் துன்பத்தில் அழிகின்றனம். விளக்கொளியை விரும்பி விட்டில் விழுந்து இறக்கும் அறியாமையை யார்தான் மறுக்க இயலும்.

நாமும் காட்சியில் மயங்கி அழிகின்றோம். வண்டினங்கள் மனம் நாடுவன. அதனால் செண்பக மலர்களில் வண்டுகள் விழுந்து புரளும். சண்பக மலர் மணம் நாடி தாங்களும் அழியும்.

நெறி கடந்த இன்ப நுகர்வுகளில் உயிர்கள் அழிகின்றன. இவை ஐயறிவின. அவை மயங்கி அழிதல் இயற்கை. அவை சூழ்நிலையை மாற்றும் திறனுடையன அல்ல. ஆறறிவினனாகிய மானுடம் இங்ஙனம் அழியலாமா? மனிதன் சிந்தையில் தெளிவு பெற்று, தெளிவினுள் சிவத்தைக் கண்டு வாழ்ந்திடுக.

ஆசை கொடிது “ஆசை அறுமின்கள்” “ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” என்பது திருமந்திரம். ஆசை மனத்திற்கு மயக்கத்தைத் தரும்; அறிவைக் கெடுக்கும்” அவலத்தைத் தரும்; ஈசனோடாயினும் ஆசை அறுமின். இன்று, கண்ணப்பர் பிறந்த நாட்டில் கடவுள் வழிபாடு வணிகமாகி விட்டது. ஆசைப்பட்ட மனம் மாசுறும்.

ஆதலால் ஆசையுடன் இறைவனை வணங்கற்க; திருவடிகளை வாழ்த்துதலையே உடமையாகக் கொள்க; பட்டினத்தார் இறைவனைப் பேசு, பேசு, பேசு என்று பன்முறை கூறுகின்றார் ஏன்?

“பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி”

இன்று, வாய் படைத்தவர்கள் எல்லாம் பேசத்தான் செய்கின்றனர். ஆனால் ஐயகோ! அவர்கள் பேசுவது பேச்சா? அவர்கள் ஏன் ஊமையராய்ப் போயிருக்கக் கூடாது. பேச்சு, இன்று தூற்றலாக விளங்குகிறது. இது நன்றன்று.

ஆண்டாள் நாச்சியார் “தீக்குறளைச் சென்றோதோம்” என்று விளக்கிய கோள் இன்று நடமாடாத இடம் எது?

வாழ்க்கை விரைந்து ஓடுகிறது; ஓட்டைக் குடத்தில் நிரப்பிய தண்ணீரைப் போல! இறைவனின் புகழை இன்றே பேசு; இப்பொழுதே பேசு; இந்நொடியிலேயே பேசு; எப்பொழுதும் பேசு! என்றும் பேசு! என்று உயிர்களை விரைவுணர்ச்சியில் ஆற்றுப்படுத்துகின்றார்.

திருவாசகம்,

“பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்றென்றே பேசிப் பேசி”

என்று கூறும். இறைவனைப் பேசுதல் எளிதன்று. தடைகள் தோன்றும். உலகியல் சூழும்; பலகாலும் பேசிப் பழகி விட்டால் இறைவனையே பேசுதல் எளிதாகும்.

சுந்தரர்,

“நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே”

என்றார். இறைவனைத் தொடர்ந்து நினைத்தலையும், பேசுதலையும் நமது வழக்கமாகக் கொள்வோமாக.