குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/மாணிக்கவாசகர்

விக்கிமூலம் இலிருந்து

1
மாணிக்கவாசகர்

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டுப் பறம்பு நாட்டில் உள்ள திருவாதவூரில் அவதரித்தவர், திருவாதவூரர். திருவாதவூர் ஒரு சிற்றூர். ஆயினும் செந்தமிழ் நலங்கொழித்த சிறப்பான ஊர். புலனழுக்கு அற்ற அந்தணாளர் கபிலர் பிறந்தது திருவாதவூரே என்று கூறுவர்.

பைந்தமிழ் மண்டலமாகத் திகழ்ந்த பறம்பு நாட்டில் வள்ளல் பாரியின் அவைக்களப் புலவராக விளங்கியவர் கபிலர். திருவாதவூரில் அவதரித்த திருவாதவூரர் முறையாகக் கல்வி பயின்றும் தனித் திறன்கள் பல பெற்றும் விளங்கினார்.

இந்தச் செய்தி, பாண்டிய அரசன் அரிமர்த்தன பாண்டியனுக்குத் தெரியவந்தது. அன்றைய அரசு முறைப்படி - பெரியோரை துணையாய்த் தேடியும் அமைத்துக் கொள்ளல் என்ற முறைப்படி - திருவாதவூரரை முதலமைச்சராக்கிக் கொண்டான் அரிமர்த்தன பாண்டியன்.

ஞானவேட்கை கொண்ட மாணிக்கவாசகர்

திருவாதவூரர் பாண்டிய நாட்டரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்புற, நாட்டு மக்கள் நலமுடன் வாழும் வகையில், ஆட்சி செய்து வந்தார். ஆயினும் பதவியிலும் ஆட்சியிலும் இவருக்கு இருந்த ஈடுபாடு குறைவு. சிவசிந்தனை அவரை ஆட்கொண்டிருந்தது.

அதன் காரணமாக நாளும் பல்வேறு அரசியல் - பணிகளில் அவர் ஈடுபட்டாலும் மானுட வாழ்க்கையின் அருமைப்பாடு, வாழும் முறைமை, உய்தி யடைதற்குரிய நெறிமுறைகள் முதலியவற்றில் தம் மனத்தைச் செலுத்தினார்; “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணுடைய”ராகவே விளங்கினார்.

திருவாதவூரருடைய ஆட்சியில் பாண்டிய நாட்டு மக்கள் பயமின்றிப் பண்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். முதலமைச்சர் மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனுக்கு, கண் ஆகவும் கவசமாகவும் இருந்து பாதுகாத்தார்; பணி செய்தார்.

அமைச்சுப் பணி செய்தபொழுது பணிக்குரிய காலம் தவிர எஞ்சிய காலத்தில், மெய்ப்பொருள் நூல்கள் கற்றுத் தெளிந்தாரை அணுகி அளவளாவிப் பேசி அரிய உண்மைகளைத் தெரிந்து கொண்டார்; ஞானநெறி நிற்கும் வேட்கையில் முறுகி வளர்ந்தார். திருவாதவூரரின் உடல் அமைச்சுப் பணி செய்தது; ஆன்மா, சிவசிந்தனை செய்தது.

பணிகொண்ட பரமன்

இந்நிலையில் குதிரைப்படைக் காவலர்கள் அரசனை அணுகி “இலாயத்தில் உள்ள குதிரைகள் மூப்படைந்துவிட்டன. புதிய குதிரைகள் வாங்கவேண்டும்” என்று விண்ணப்பித்தனர்.

அரசுக்கு, குதிரைகள் இன்றியமையாதன. அரசர்கள் நாடும் நகரும் பார்க்க, குதிரை மீதுதான் இவர்ந்து செல்வது வழக்கம். ஒரோவழிதான் யானையைப் பயன்படுத்துவர். அத்தேரினை இழுத்துச் செல்லவும் குதிரைகள் தேவை, அரசப் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று.

ஆதலால் அரசன், அமைச்சர் திருவாதவூரரை நோக்கி வேண்டிய பொருள் எடுத்துக்கொண்டு சென்று குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். திருவாதவூரரும் பயணமானார். திருவாதவூரர் குதிரைகள் வாங்கப் பொருள் எடுத்துக்கொண்டு பயணம் செய்த பொழுதே கையில் உள்ள பொருள் இறைபணிக்கும் சிவனடியார்களின் பணிக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பிக்கின்றார்.

ஆதி சைவனாம் அருச்சகன் ஒருவன் நேர் வந்து திருநீறு வழங்கியருள்கின்றனன். திருவாதவூரர் இதனை நன்னிமித்தம் என்று எண்ணிப் பயணத்தைத் தொடர்கின்றார். திருப்பெருந்துறையை அணுகுகின்றார், திருவாதவூரர்.

இறைவனும் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளித் திருவாதவூரரைப் பணி கொண்டருளக் காத்திருந்தனன், திருவாதவூரரும் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருந்த, கருணையே உருவெனக் கொண்ட மூர்த்தியைக் கண்டார்; தொழுதார்; அருள் வசத்தரானார்.

குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருந்த நாயகன், திருக்கண் நோக்கால் திருவாதவூரரின் ஆன்மாவைப் பந்தித் திருந்த ஆணவ மலத்தைக் கழுவினான்; திருவடிகளைச் சூட்டித் தீட்சை செய்தான். திருவாதவூரர்க்குத் திருவைந் தெழுத்து ஓதிக் - கொடுத்தான். திருவாதவூரர் தன்னை மறந்தார்; தலைவன் தாள் நினைந்துருகினார்.

பழுதிலாத சொற்களினால் பக்திப் பாடல்களைப் பாடினார்; ஈசன் திருவடிகளையும் அவன் ஆட்கொண்டருளிய பாங்கினையும் நினைந்து நினைந்து அழுது அழுது பாடினார். திருப்பெருந்துறை ஈசன் திருவாதவூரர் பாடல்களைக் கேட்டு உவந்து “மாணிக்கவாசகர்” என்றழைத்தார். அப்போது தொடங்கித் திருவாதவூரர் மாணிக்கவாசகர் ஆனார்.

இறைவன், மாணிக்கவாசகரைக் கொண்டு மண்ணில் பல பணிகள் செய்திட எண்ணியதால் மாணிக்கவாசகரை மண்மேல் இருத்தி உடன் இருந்த மற்ற அடியார்களுடன் மறைந்து விட்டார். இந்தப் பிரிவினால் வருந்தி மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் கல் நெஞ்சினையும் உருக்கும் தன்மையன.

மாணிக்கவாசகர், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஒரு பேரொளியைக் காண்கின்றார்; அணுகுகின்றார். இல்லை, அந்தப் பேரொளி அவரை ஈர்க்கிறது. அதனையடைந்து அண்ணித்து நிற்கிறார்; அப்போது சுடரைக் காண்கிறார். மிகவும் நெருக்கமாக அண்ணித் துள்ளமையால் “கூழ் ஒளிவிளக்கை”க் காண்கிறார்.

உலக இருள் நீக்க, சோதி, வாழும் இடத்தில் இருள் நீக்கச் சுடர். அகத்திருள் நீக்க விளக்கு! இப்படி ஒரு திருக்காட்சி தெரிகிறது. அக்காட்சியை “சோதியே! சுடரே! சூழொளி விளக்கே!” என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.

“திருப்பெருந் துறையில் நிறை மலர்க் குருந்தம்
மேவிய சீர் ஆதியே!”

என்று தொடர்கிறது மணிமொழி.

எல்லாம் அவன் செயல்

திருப்பெருந்துறை ஈசனின் பிரிவு தாங்காது மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் ஊனினையும் உயிரினையும் உருக்கும் பாடல்கள். மாணிக்கவாசகர் தம்மை இறைவன் ஆட்கொண்டருளியதையும் ஐந்தெழுத்தோத எடுத்துத் தந்தருளியதையும் நினைந்து நினைந்துருகிப் பாடுகிறார்.

“நானேயோ தவம் செய்தேன்; சிவாய நம எனப்பெற்றேன்!” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு. “என்னை ஓர் வார்த்தை யுட்படுத்துப் பற்றினாய்” என்பதும் அவர் வாக்கு. “ஓர் வார்த்தை” ஐந்தெழுத்து. மாணிக்கவாசகர் பத்திமையில் முறுகி வளர்ந்தார்.

குதிரை வாங்க கொண்டுவந்த பொருளைக் கொண்டு திருப்பெருந்துறைத் திருக்கோயில் திருப்பணி செய்தார். அரசனிடமிருந்து தூதுவர் வந்தனர். திருப்பெருந்துறை இறைவனிடம் மாணிக்கவாசகர் வேண்டுகிறார். அரசனுக்கு என்ன விடை சொல்ல என்று! ஏன்?

திருப்பெருந்துறையில் ஆட்கொள்ளப்பெற்ற நிலையில் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைச் சிவபெருமானின் உடைமையானார். இதனை,

“அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்ட போதே கொண்டிலையோ!
இன்றோர் இடையூ றெனக் குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய்! பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே!

(குழைத்த பத்து–7)

என்ற திருவாசகத்தால் அறியலாம்.

உடல், உயிர், உடைமை மூன்றையும் தியாகம் செய்தால்தான் ஞானம் சித்திக்கும். ஆன்மா, ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களுக்குச் சேவகம் செய்ய முடியாதல்லவா? இங்கு தியாகம் செய்தல் என்பது உடல், உயிர், உடைமை இவற்றுக்கு முதன்மை கொடுக்காது இலட்சியத்திற்காக வாழ்தலைக் குறிக்கும்.

உடல், உயிர், உடைமைகளைக் கருவியாகக் கருதாமல் பயனாகவே எண்ணி வாழ்தல் தவறு. இறைவன் எப்போதும் நன்றே செய்வான். ஆன்மாக்களின் பழக்க வாசனையால் நன்மையும் தீமையாகப்படுகிறது.

இதனையே “நன்றே செய்வாய்? பிழை செய்யாய்?” என்றார். “இன்று ஓர் இடையூறு எனக்குண்டோ?” என்றது அரசனால் வரவிருக்கும் இடையூற்றை எண்ணிக் கூறினார் போலும்.

நரி பரியாக்கியது

இறைவனிடத்தில் தன்னை ஒப்படைப்புச் செய்து விட்டதால் மாணிக்கவாசகர் தன் பிறவி, பிறவித் தொடர்பான கடமைகள் அனைத்தையும் இறைவன் வசமே ஒப்படைத்துவிட்டார். ஆதலால், அரசனுக்குப் பதில் கூறவேண்டியது என் அதிகாரத்தில் இல்லை என்ற பொருள் பட “என்னதோ இங்கு அதிகாரம்?” என்று கேட்கிறார்.

இறைவன், “ஆவணி மூல நன்னாளில் குதிரைகள் வரும் எனச் சொல்லி அனுப்புக!” என்று உத்தரவு தருகிறான். மாணிக்கவாசகர் அவ்வண்ணமே குதிரைகள் வரும் என்று திருவருளாணைவழி ஓலை அனுப்புகிறார்.

இறைவன் குதிரைகளுடன் தான் பின்னே வருவதாகவும் மாணிக்கவாசகரை முன்னே செல்லும்படியும் ஆணை பிறப்பிக்கின்றான்.

மாணிக்கவாசகர் அவ்வாறே மதுரைக்கு வந்து அரசவையை அணுகிக் குதிரைகள் வரும் செய்தியை அறிவிப்பதோடன்றி நல்ல குதிரைகளாக, விரைந்து செல்லும் குதிரைகளாக வரும். இதனால் நீ “துரகபதி” யெனப் பெருமையடைவாய் என்றும் கூறினார்.

நாள்கள் உருண்டோடின. குதிரைகள் வரவில்லை. அரசன் சினம் கொண்டான். மாணிக்கவாசகரைக் கொடுந் தண்டனைக்குள்ளாக்குகிறான். மாணிக்கவாசகர் திருவருட் குறிப்பின் வண்ணம் என்ன நிகழ்ந்தாலும் இறைவன் திருவுள்ளமே என்று “சிவனை மறக்கிலம்” என்று துன்பங்களை அனுபவித்தார்.

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்

திருப்பெருந்துறைச் சிவன் நரிகளைப் பரிகளாக்கித் தாமே குதிரைச் சேவகனாக அமர்ந்து ஆவணி மூல நாளில் மதுரைக்கு வருகிறான்.

குதிரைக் கயிறு மாறும்பொழுது “இன்று இப்போது உள்ள நிலையில் குதிரைகளை ஒப்புக்கொள்கிறாய்! நாளை இவை என்னவாயினும் என் பொறுப்பு இல்லை” என்று கூறுகிறான் குதிரைச் சேவகன்-திருப்பெருந்துறை ஈசன். நள்ளிரவில் குதிரைகள் நரிகளாகின்றன.

மீண்டும் அரசனுக்கு ஆற்றமாட்டாமை. மாணிக்கவாசகருக்கு எழுதிக் காட்டொனாத தண்டனை. மாணிக்கவாசகருக்குக் கிடைத்த தண்டனை பொறுத்தாற்ற இயலாதது!

எனவே இயற்கை சினம் கொண்டது; இயற்கை அழுதது! அதன் விளைவு வைகையாற்றில் பெருவெள்ளம்! மதுரை மாநகரை அழிக்கக்கூடிய வெள்ளம்! வைகை ஆற்றுக் கரையை உடைப்பு எடுக்காமல் அடைக்க வீட்டுக்கு ஓர் ஆள் அழைக்கிறான் அரசன்.

மதுரை மாநகரில் பிட்டு அவித்து விற்றுப் பிழைப்பு நடத்தும் மூதாட்டி - வந்தியம்மை! இவளுக்கு வேறு யாரும் துணையில்லை. ஆள் இல்லாமல் கவலைப்படுகிறாள்.

இந்த நேரத்தில் எடுப்பான தோற்றத்துடன் “கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ” என்று கூவி வந்தான் ஒரு கூலியாள்! மூதாட்டி வந்தியம்மை அந்தக் கூலியாளை அழைத்தாள்; அவனிடம் பேரம் பேசினாள். கூலியாள் மிகவும் நல்லவன்.

அதனால், அதிகம் கூலி கேட்கவில்லை. பசிக்கு கொஞ்சம் உதிர்ந்த பிட்டுப் போதும் என்றான். உதிர்ந்த பிட்டு வாங்கிப் பசியாற உண்டான். முடிச்சில் பெற்றும் கொண்டான்.

வைகைக் கரை அடைக்க, தட்டும், மண்வெட்டியும் சுமந்து சென்றான். மண் வெட்டினான், சுமந்தான். உடைப்பில் கொட்டினான்; பாடினான்; விளையாடினான்; களைத்துப் போனான்; தட்டை தலையணையாகக் கொண்டு தூங்கினான்.

பாண்டிய அரசன் உடைப்புக்கு அணை போடுவதைப் பார்க்க வந்தான். வந்தியின் ஆள் வேலை பார்க்காமல் தூங்குவதைக் கண்டு எழுப்பினான். அவனோ எழுந்திருக்க வில்லை. உடன் கையில் இருந்த பிரம்புகொண்டு அடித்தான்.

அவ்வாறு அடித்தபோது அரசன் முதுகிலும் அடி விழுந்தது. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் முதுகிலும் அடி விழுந்தது! அரசன் உணர்ந்தான்! அனைவரும் உணர்ந்தனர். கொற்றாளாக வந்தவன் கொற்றாளன் அல்லன். தனக்குவமை இல்லாதவனாகிய திருப்பெருந்துறை ஈசன் என்று உணர்ந்தனர்.

மாணிக்கவாசகர் வரலாற்றில் நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது பிட்டுக்கு மண் சுமந்தது இவை அனைத்துக்கும் அவர் அருளிச் செய்த திருவாசகத்தில் சான்று உண்டு, பரியை நரியாக்கியதை,

“நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டு கொண்டருள அழகுறு திருவடி
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று

ஈண்டு கனகம் இசையம் பெறா அது
ஆண்டான் எங்கோன்! “...”

(கீர்த்தித் திருவகவல் 36-40)

என்ற வரிகளாலும்,

இரும்பு தரு மனத் தேனை ஈர்த்தீர்த் தென் என்புருக்கிக்
கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழலிணைகள்

ஒருங்கு தீரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றே உன் பேரருளே!

(திருவேசறவு-1)

என்ற பாடலாலும் அறியலாம். மதுரைப் பெருநகரில் பெருமான் குதிரைச் சேவகனாக வந்தருளியதை,

“மதுரைப் பெரு நன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும்”

(கீர்த்தித் திருவகவல் 44-47)

என்ற வரிகளாலும், இறைவன் பிட்டுக்கு மண்சுமந்த நிகழ்ச்சியை,

பிட்டு நேர்பட மண் சுமந்த
பெருந்து றைப் பெரும் பித்தனே!
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன் உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னே சிறு
நாயி னுங்கடை யாய வெங்
கட்ட னேனையும் ஆட் கொள் வான் வந்து
காட்டி னாய் கழுக் குன்றிலே!

(திருக்கழுக்குன்றப் பதிகம்-2)

என்ற பாடல் வாயிலாகவும் உணர முடிகிறது.

இறைவன் மண் சுமந்து கூலி கொண்டு, கோலால் மொத்துண்டு அதன் பயனாகப் பண் சுமந்த பாடலைப் பரிசாகப் பெற்ற செய்தியை,

பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண் சுமந்த கூலி கொண் டக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்!

(திருவம்மானை-8)

என்ற பாடலாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

முறையான செயலா?

மாணிக்கவாசகரின் வரலாற்றில் உய்த்து உணர்ந்து உரைக்கத்தக்க பகுதிகள் சில உண்டு. அரசன் குதிரைகள் வாங்க தந்த பணத்தைக் கொண்டு குதிரைகள் வாங்காமல் திருக்கோயில் கட்டியது-இன்னபிற அறங்கள் செய்தது சரியா? முறையான செயல்கள்தாமா? வெளிப்படப் பார்க்கின் தவறாகத்தான் தெரியும்.

உய்த்துணர்ந்து மெய்ப்பொருள் உணரின் உண்மைப் பொருள் விளங்கும். அரிமர்த்தன பாண்டியன் குதிரைகள் வாங்க விரும்பியதன் நோக்கம் என்ன? அண்டை அயல் அரசர்களுடன் போர் செய்து வெற்றிபெற்று பாண்டிய அரசையும் பேரரசாக்கத்தானே! இது,

“பொற்பி லங்கு புதுப் பரி இங்கு நம்
கொற்றம் ஓங்க விரைவிற் கொளப்படும்”

(ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல்-15)

என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் கூறுவதன் வாயிலாக அறியக் கிடக்கிறது. அரசுக்கு மக்கள் வரி கொடுப்பது மக்கள் நலன் கருதிய பணிகளுக்கேயன்றிப் போர் செய்து மக்களை அழித்து வல்லரசு அமைப்பதற்காக அன்று.

போரற்ற உலகமே வாழ்க்கைக்கு இசைந்தது. ஆதலால் அரிமர்த்தன பாண்டியன் குதிரை வாங்குவதை ஈசன் தன் திருவருள் விரும்பவில்லை என்பதை மாணிக்கவாசகர் மூலம் உணர்த்த விரும்பியதே இந்த வரலாறு.

தகுதி மிகுதியும் உடையான் ஒருவன் தம்முள் கருத்து வேறுபடின், ஏவியது நீக்கிப் பிறிதொன்று செய்யின் காரண காரியம் ஆராய்ந்து அதனை ஏற்பர்.

குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் குதிரை வாங்காமல் சிறந்த அமைச்சராகிய மாணிக்கவாசகர் திருக்கோயில் திருப்பணி செய்ததை நன்றெனத் தேர்ந்து உய்த்துணர்ந்து இருத்தல் வேண்டும், அரிமர்த்த பாண்டியன், அல்லது கேட்டாவது தெரிந்து கொள்ள முயன்றிருக்க வேண்டும். பாண்டியனுக்கு அந்த நல்லூழ் இல்லை.

ஆனால் தமிழகத்திற்குத் திருவாசகம் பெறும் நல்லூழ் இருந்திருக்கிறது. அதனால் பாண்டியன் தெளிந்துணர மறுத்துவிட்டான். நல்லாட்சி என்ற நோக்கில் பார்த்தால் குதிரை வாங்காமல் திருக்கோயில் திருப்பணி செய்தது சரியே. அமைச்சரின் கடமையைத்தான் மாணிக்கவாசகர் செய்திருக்கிறார்.

குதிரைகள் போரின் சின்னம்; அவை அழிவு தரும். திருக்கோயில் ஆக்கம், கலைகளுக்கு ஆக்கம்; வேலை வாய்ப்பு வழங்குவது. மேலும் சமுதாய வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் உரியது. திருக்கோயில் மக்கட் சமுதாயத்திற்கு நிலையான சொத்து.

ஆதலால், பயனுடைய பணி செய்தது நன்றே. அப்படியானால் மாணிக்கவாசகர்-இறைவன் இருவருமே அரசனுக்கு அறிவுறுத்திக் குதிரைகளைப் பற்றிக் கவலைப்படாமல் செய்திருக்கலாமே! “குதிரைகள் வருகின்றன!” என்று சொல்வானேன்? “போலியாகக் குதிரைகளைக் காட்டுவானேன்?” என்ற கேள்விகள் எழலாம்.

ஆம்! கேள்விகள் ஏற்புடையனவே! இந்தச் செய்தியை அரசன் பாண்டியன் அணுகு முறையிலிருந்து அவன் குதிரை வாங்குவதில் பெரிதும் நாட்டமுடையவனாக இருக்கிறான் என்பதை உணர்ந்த இறைவன், அது தவறு என்பதைக் கொஞ்சம் கடுமையான முறையில் உணர்த்தக் கருதியே தொடக்கத்திலேயே கூறவில்லை. ஆனால், வரலாற்றுப் போக்கு வினாவுக்கு விடை காணும் திசையிலேயே செல்கிறது.

படிப்பினை

இறைவன் நரிகளைப் பரிகளாக்கி நடத்திச் சென்றான். பகலில் பரிகளாக இருந்த அவை இரவில் நரிகளாகிவிட்டன. பகற்பொழுதை இம்மையாகவும் இரவுப் பொழுதை மறுமையாகவும் கூறுவது மரபு.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

என்னும் குறள் இங்கே உணரத்தக்கது. பகலில் இன்பம் பயக்கும் பரிகள், இரவில் நரிகளாகித் துன்பம் விளைவிக்கும் என்ற தத்துவம் உணர்த்தப்பெற்றது.

கொற்றாளாக வந்த இறைவன் ஏன் ஒழுங்காக வேலை செய்யவில்லை? இறைவன் கொற்றாளாக வந்தது எடுத்துக் காட்டுமூலம் மக்களுக்குக் கற்பிக்கவே யாம். அதனால், வேலையை நன்றாகச் செய்யாது போனால் உதை கிடைக்கும் என்ற பாடம் படிப்பிக்கப் பெறுகிறது. இது எதிர்மறையாக அணுகிக் கற்பிக்கும் முறை. திருவாசகத்தேன்

மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகத்தை ‘திருவாசகத்தேன்’ என்று கூறுவர். தேன் உணவு, தேன் மருந்து, தேன், செல்வர்களுக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படும்; ஏழைகளுக்கு மருந்தாகப் பயன்படும்.

திருவாசகம், சிவஞானிகளுக்கு மேலும் மேலும் சிவஞானம் பெருகி வளரத் துணை செய்யும்; ஆணத்தின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். திருவாசகம் பயிலுதல், ஓதுதல் மருத்துவம் போன்றதாகும்.

மாணிக்கவாசகராகிய வண்டு சேகரித்தது திருவாசகத்தேன்; மாணிக்கவாசகராகிய வண்டு சிவம் என்கிற பரம் பொருளின் திருவடித் தாமரைகளில் மட்டுமே உட்கார்ந்து சேகரித்த ஒரு பூத்தேன். வேறு எந்த மலரையும் (வேறு எந்த தெய்வத்தையும்) மாணிக்கவாசகர் அணுகவில்லை.

“கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால் நரகம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இயக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே!

(திருச்சதகம்–2)

என்பது திருவாசகம். நரகமே புக நேரினும் சிவனைத் தவிர வேறு தெய்வத்தைத் தொழ உடன்பாடிலாத உறுதிப்பாட்டை உன்னுக; எண்ணுக!

வினைக்கேடன்

மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தவர். அவர் மேற்கொண்ட செயல்கள் எத்தனை, எத்தனை! அவர் வினைகளிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டியிருந்தது! இந்தச் சூழ்நிலையில் திருப்பெருந்துறைச் சிவன் மாணிக்கவாசகர் வாழ்க்கையில் புகுகின்றான்.

அவ்வாறு புகும்போது, வினைகளின்பால் ஒன்றிக் கிடந்த மாணிக்கவாசகரால் இறைவனை வரவேற்கக்கூட இயலவில்லை; ‘புகுதல்’ என்பது வரவேற்பு இல்லாத இடத்தில் வலிந்து செல்லுதல் ஆகும்.

உலகியலில் தாழ்ந்தோர் உயர்ந்தோரிடம் அறிமுகப்படுத்திக் கொள்வர்.

அருளியலில் மூவர் தலைவனாய் விளங்கும் மூர்த்தி, மாணிக்கவாசகரிடம் தன்னை “வினைக்கேடன்” என்று அறிமுகம் செய்து கொள்கின்றான்.

அளவற்ற கருணை அது! ஆயினும் என்ன? வினையின் தாக்கம் பெரிதாக இருந்ததால் இறைவன் ஆட்கொண்டருளிய அருமைப்பாட்டினை அறிந்து உணர்ந்து மாணிக்கவாசகருக்கு அழத் தெரியவில்லை; பாடத் தெரியவில்லை; ஆவி சோர்ந்து நிற்கத் தெரியவில்லை. அதனால் “இரும்பின் பாவை’ என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்.

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போது நான் வினைக்கேடன் என்பாய் போல
இளையன் நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனைய நான், பாடேன் நின் றாடேன் அந்தோ
அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்!
மூனைவனே, முறையொ நான் ஆன வாறு
முடிவறியேன் முதல் அந்தம் ஆயினானே!

(திருச்சதகம்–22)

என்று பாடுகிறார். சிவபதம் அளித்த செல்வம்

மானிட வாழ்வில் அம்மா, அப்பா இவர்களில் யார் முதன்மை பெறுகின்றனர்? இது ஒரு விவாதம். இந்த விவாதத்திற்குச் சைவம் விடையளித்ததுபோல யாரும் விடையளிக்கவில்லை. நெருப்பும் சூடும்போல, பண்பும் பண்பியும் போல அம்மா, அப்பா நிலை.

சைவம் அம்மையப்பரை ஒருருவமாகவே மொழிகிறது. “அம்மையப்பரே உலகுக்கு அம்மை யப்பர்” குமரகுருபரர் அம்மையப்பன் நிலையை இலக்கண நயத்துடன் வியப்பு மேலிட விளக்குவார்.

ஒருவன் என்கோ? ஒருத்தி என்கோ? இந்த இடர்ப்பாடு தமிழுக்கு இல்லை. தமிழில் இருவரையும் குறிப்பிடும் “ஒருவர்” என்ற பலர்பால் குறிக்கும் இயற்சொல் இருக்கிறது என்பார்.

“ஒருவனுக்கும் ஒருத்திக்கும்
உருவொன்றால் அவ்
வுருவையிஃ தொருத்தன் என்கோ?
ஒருத்தி என்கோ?
இருவருக்கும் உரித்தாக
“ஒருவர்” என்றோர்
இயற்சொல் இல தெனை யானமற்று
என் சொல் கேளே!

(சிதம்பரச் செய்யுட் கோவை 54: 3-4)

திருமுறைகள் முழுவதும் அம்மையப்பன் வழிபாடே பேசப் பெறுகிறது. அப்பரடிகள்,

“அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ”

என்று அப்பனை, ஐயனை, சிவனை முதல்நிலையில் வைத்துப் பேசுகின்றார், ஏன்?

அப்பரடிகள் வரலாற்றில் அம்மையின் அருள்நிலை மேம்பட்டு விளங்கவில்லை; சூலை நோய் துன்புறுத்தியது. மாணிக்கவாசகர் வரலாற்றில் அம்மையின் அருளும் நிலை முதல் நிலையாகும்; வலியவந்து ஆட்கொண்ட நிலை, ஆதலால், ‘அம்மையே!’ என்று விளிக்கிறார்.

நாயன்மார்களுக்கு அருளும் நிலையிலும்கூட அம்மையொடு உடனாய நிலையிற்தான் அருளிப்பாடு நிகழ்கிறது. “அருளது சக்தியாகும்” என்பது அருணந்தி சிவம் வாக்கு.

மானிடத்திற்குத் தாய் உற்ற துணை! குழந்தையின் நோய்க்கு, தாய்தான் மருந்துண்டாள். தாய் ஓர் அன்புப் பிறவி! தன்னல மறுப்பே தாயின் பிறவிக்குணம். இந்த உலகில் இறைவனின் கருணை சிறந்தது; மிகமிகச் சிறந்தது. அடுத்த நிலையில் சிறந்தது, தாயின் அன்பே! “கடவுள் எல்லா இடத்திற்கும் வர முடியாமையினாலேயே தாயைப் படைத்தான்” என்று ஆன்றோர் கூறுவர்.

எல்லாரும் எல்லாப் பதவிகளையும் ஏற்க முடியும், வகிக்க முடியும். தாயாக முடியுமா? ஒருக்காலும் முடியாது. தாயின் அன்பே உலகில் சிறந்தது; நிறை மிகுதியும் உடையது. தாய் ஓர் அற்புதமான படைப்பு; புனிதமான பிறப்பு. தாய்க்கு ஒப்பாக யாருளர்? எவரும் இல்லை! எனவே, மாணிக்கவாசகர் அம்மையை முதன்மைப்படுத்துகின்றார்.

“அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!”

என்பார். அம்மையே மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பாள். அருளுவதில் அன்னையே முதல் நிலையில் இருக்கிறாள். உணர்ச்சி தரும் இன்பம் வழங்குவதிலும் அம்மையே முன் நிற்கிறாள்.

எனவே, இருளகற்றி இன்பம் பெருக்கி வாழ்நிலை அருளும் அன்னையை-பராசக்தியை ‘அம்மை’ என்றார். அடுத்து “அப்பா” என்று விளித்தார். அம்மையப்பன் உறவுநிலை எத்தகையது? அப்பன் பொருள்! அம்மை பொருளின் ஆற்றல். அம்மை-ஆற்றலே அண்டமெலாம் பூத்து நிற்கிறது! பூத்த வண்ணம் காக்கிறது!

அம்மையின் ஆற்றல் பற்றுக்கோடாக நின்று செயற்படுவது அப்பனிடத்திலேயே. ஆதலால், “அப்பா” என்றார். மணிகளுள் சிறந்தது மாணிக்கம்! மாணிக்கம் ஒளி மிக்கது! ஒளிமிக்க மாணிக்கத்தினும் அப்பன் இறைவன் ஒளிமிக்குடையவன். இறைவனின் ஒளி வடிவம் ஒப்புவமை இல்லாதது. ஆதலால், “ஒப்பிலா மணியே” என்றார்.

வாழ்வியலில் அன்பே உயர்ந்தது. இறைவனுக்கு அன்பே உரிமைப்பொருள். ஆன்மாக்களிடம் இறைவன் விரும்புவது அன்பேயாம். ‘அன்பலாற் பொருளுமில்லை ஐயன். ஐயாறனார்க்கே” என்பார் அப்பரடிகள்.

அன்பு விரிவினையே விரும்பும். அன்பால் அனைத்தும் விரிவடையும். அன்புக்கு ஒப்பு அன்புதான்! அன்புக்கு அழிவில்லை. அன்பால் விளைவது ஆக்கம். அதனால் “அன்பினில் விளைந்த ஆரமுதே” என்றார்.

வாழ்க்கை குழந்தைமையில் தொடங்குகிறது. குழந்தமை நிலையில் பொய் இல்லை; குழந்தைகளுக்குப் பொய் சொல்லத் தெரியாது. குழந்தைகளுக்குப் பொய் சொல்லக் கற்றுக்கொடுப்பதே பெற்றோர்தான்! சமூகம்தான்!

கொடுங்கோன்மையும் ஆற்றலின்மையும் பொய்யைப் பிறப்பிக்கின்றன. பாபத்தின் கருவிகளில் தலையாயது பொய். ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வரும் பருவங்கள் தோறும் பொய்யும் பெருகி வளர்ந்து வருகிறது. அதனால், ‘பொய்யினைப் பெருக்கி’ என்றார்.

அடுத்து, மனிதனின் வாழ்நாள் எல்லையில்லாததா? இல்லை! இல்லை! மனிதனின் வாழ்நாள் காலவரையறை - எல்லைக்குட்பட்டதேயாம்! மனிதர் தம் வாழ்நாளை அவர்தம் விருப்பப்படி நீட்டிக்கொண்டு போகமுடியாது. மரணத்தை ஒத்திப்போட முடியாது!

மனித உடம்பு பச்சை மண்பானை போலவும் கண்ணாடி வளையல் போலவும் உடைந்து போகக் கூடியது; நிலையில்லாதது! அதனால் புத்திசாலித்தனமாக நிலையில்லாதனவற்றைக் கொண்டு நிலையானவற்றைச் செய்து கொள்ளவேண்டும்.

வாழ்வு ஆற்று நீரைப்போல ஓடி ஓடிக் கழிந்து போவது. வாழ்க்கையை நடைமுறையில்-பேச்சு வழக்கில் வளர்வது போலப் பேசுகிறார்கள்; அதாவது பிறந்த குழந்தை வளர்கிறது; ஒரு வயது; இரண்டு-வயது என்று வாழ்க்கையின் காலம் எண்ணப்படுகிறது. இந்த எண்கள் அளவில் ஏறுமுகம்தான்!

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? வரையறுத்த, வாழ்நாள் காலம் கழிய கழிய, குறைந்துகொண்டே வருகிறது. ஜனவரி மாதம் தேதி நாட்காட்டி கனமானதுதான்! பன்னிரண்டாவது மாதம்-டிசம்பர் மாதம் அந்த நாட்காட்டி இளைத்து விடுகிறது. டிசம்பர் 31 முடிந்ததும் நாட்காட்டியில் நாள் சீட்டு இல்லை. அட்டை மட்டுமே இருக்கிறது. அதுபோலத்தான் மானுட வாழ்க்கையில் வாழ்நாள் கடைசியில் அட்டை மட்டுமே இருக்கிறது. பொய்யோ பெருகி வளர்கிறது.

தலை, மூளையின் இருப்பிடம்! மூளை இயங்க இயங்கத்தான் உருவாகும்; செயற்படும். மூளை பயன்படுத்தப் பெறாவிடில் மூளை இருந்தும் இல்லாததைப் போலத்தான்! மூளை பயன்படுத்தப்படவில்லையாயின் வெறும் தலையே இருக்கும்.

தசையும் நிணமும் உள்ளதலை உயிர்ப்பில்லாத சதை. அந்தச் சதையில் புழுக்கள் வைக்கப்பெறும். வாழ்க்கையை வாழ்க்கையின் அருமையை அறிந்து அறிந்து பயன்படுத்தாத மாந்தர் புழுத்தலையர் என்பதனைத் தன்மேல் ஏற்றி மாணிக்கவாசகர் ‘புழுத்தலைப் புலையனேன்’ என்றார். புலையன் எனில் கீழோன் என்பது பொருள். சண்டாளன் என்றுமாம்.

மனிதன் பொய்யினைப் பெருக்கிப் புழுத்தலைப் புலையனாக வாழ்ந்தாலும் இறைவன் ஆட்கொண்டருளத் தவறுவதில்லை. செந்தண்மையும் நேர்மையும் பொருந்திய சிவபதம் சண்டாளருக்கும் உரியது; புலையருக்கும் உரியது.

கல்லைப் பிசைந்து கனியாக்கும் திறனுடைய சிவத்திற்கு - வல்லாளனாகிய திருப்பெருந்துறைச் சிவத்திற்குப் புலைத் தன்மையை மாற்றி ஆட்கொள்வது எளிது! அதுவும் செந்தண்மைக்குரிய நலன்களை உரிமையாகவுடைய சிவத்திற்கு எளிது! எளிது!

இருளில் கிடந்து எய்த்துக் களைத்துப்போன ஆன்மாவுக்கு இன்பமே வழங்கும் சிவம், செல்வம்! அது உடைமைச் செல்வம் அல்ல; உயிர்ச் செல்வம்; உயிரோடு தொடரும் செல்வம்! சிவம் எனும் செல்வத்தினை-சிவகதி என்ற பேற்றினை எப்போது பெறுவது?

“செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்று எண்ணியிருப்பார் பித்த மனிதர்” என்று பாரதி எள்ளி நகையாடுவான். மாணிக்கவாசகர் “இப்பிறவியிலேயே, இன்றே, இப்போதே சிவபோகம்” என்றவர். “இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! இனி எங்கேயும் எழுந்தருள இயலாது! என்றன் உடலிடத்தே இடங்கொண்டாய்!” என்று பேசுகிறார்.

மாணிக்கவாசகர், எதையும் வேண்டிப் பெற்றவரல்லர். சிவபெருமான் தானே வந்தாட்கொண்ட நிலை. “வேண்டு வதும் உன்றன் விருப்பன்றே” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு அருளுருவாகிய அம்மை மாணிக்கவாசகரை ஆட்கொண்டருளியது. அமைச்சுப் பணியில் இருந்த மாணிக்க வாசகர் உலகியல் கருதியும் ஆட்சிநிலை கருதியும் பொய் சொல்ல நேரிட்ட நிலையும் இருந்திருக்கலாம்.

அதனால் “பொய்ம்மையே பெருக்கி” என்றார். ஏன்? ஆவணி மூலத்தன்று குதிரை வரும் என்று சொன்னதும் நம்பிக்கையே தவிர, பொய் என்று கொண்டாலும் தவறில்லை. அமைச்சுப் பதவியிலும் இன்ன பிற பணிகளிலும் பொழுது கழிந்து போவதை எண்ணி வருந்திப் “பொழு தினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன்” என்றார் போலும்!

அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!

(பிடித்தபத்து-3)

அம்மையப்பன் திருவருட் சிந்தனை காலத்தை வென்று விளங்கத் துணை செய்யும். ஆதலால், ஆன்மா காலத்தை வென்று விளங்கும்; பொய்மையினை வெற்றி பெறும். எனவே அம்மையப்பனை எண்ணுக!

கடவுட் காட்சி

மாணிக்கவாசகர் தம்மை, இறைவன் ஆட்கொள்ளுதற்குரிய தகுதியின்மையைப் பலகாலும் உணர்கின்றார். எடுத்தோதுகின்றார். அதேபோழ்து தம்மை இறைவன், தாமே வலிய ஆட்கொண்ட பாங்கினையும் வியந்து வியந்து நன்றிப் பெருக்குடன் பாடுகின்றார்.

இறைவன் திருவருளைப் பெறுவதற்கு ஒழுக்கம் தேவை; நல்லொழுக்கம் தேவை; புலனில் அழுக்கு அறவே கூடாது. தவம் செய்யவேண்டும். ஆன்மா சிவத்தையே நினைத்து தவம் செய்யவேண்டும். உடல் பிறருக்கென முயலும் நோன்பு நோற்க வேண்டும். இறைவன் திருவருளில் தோய்ந்த செறிவு பெறவேண்டும். இறைவனைக் கண்டுணரும் அறிவு வேண்டும்.

இவையெல்லாம் பெறாவிடில் இந்த உடம்பு தோற்பாவை போலத்தான்! மாயையினாலாய மயக்கத்தினையும் காட்டி, அம் மயக்கத்தினின்றும் கரையேறுதலுக்குரிய வழியையும் காட்டித் திருக்கோலங்காட்டி இறைவன் ஆண்டருளிய பெற்றிமையை விளக்குகின்றார்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் கடவுளைக் கண்டார்; பேசினார். “கண்ணால் யானும் கண்டேன் காண்க!” என்றருளிச்செய்துள்ளமை அறிக. காட்சியில் மனிதக் காட்சி ஒன்று. கடவுட் காட்சி பிறிதொன்று. இரண்டும் தம்முள் வேறுபட்டவை, என்பதை ஓர்க!

ஒரு மனிதனைத் தொலைவில் பார்க்கும்போது அவன் உருவம் தெரியும். அண்மித்த நிலையிலும் உருவம் தெரியும். அடுத்து நெருங்கிய நிலையில் நிறம் தெரியும். கடவுட் காட்சி அப்படியல்ல. தொலைவில் நிறம் தெரியும்; அடுத்து உருவம் தெரியும்; அடுத்து உறுப்பு - திருவடி தெரியும் என்பதை அறிக.

“வண்ணந்தான் சேயதன்று எளிதே யன்று
அனேகன் ஏகன் அணுவணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தான் அது காட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவா மற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக் கேனே!

(திருச்சதகம்-25)
இப்பாடலில் “வண்ணந்தான் அது காட்டி வடிவு காட்டி, மலர்க் கழல்கள். அவை காட்டி” என்ற தொடர் மாணிக்கவாசகரின் கடவுட் காட்சியை-அவர் கடவுளைக் கண்டு அனுபவித்த காட்சியை விளக்குகிறது.

ஆட்கொண்டருளிய பாங்கு

மாணிக்கவாசகரை எம்பெருமான் ஆட்கொண்டருளினான். ஆட்கொண்டருளியதன் பயன் என்ன? “இறைவன் ஆண்டான்” “மாணிக்கவாசகர் அடிமை என்று இந்த உலகம் கூறட்டும்” என்பது.

“பவன் எம்பிரான் பணி மாமதிக் கண்ணிவிண் -
ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண் டான்என்
சிறுமை கண்டும்
அவன் என்பிரான் என்ன நான்அடி யேன்என்ன
இப்பரிசே
புவன் எம்பிரான்தெரி யும்பரி சாவ
தியம் புகவே

(திருச்சதகம்-9)

என்று அறிவிக்கின்றார். ஆதலால், மாணிக்கவாசகர் வீடு வேண்டி நின்றாரில்லை என்பது புலனாகிறது. அடிமைத் திறம் பூண்டு தொண்டு செய்தலிலேயே அவருக்கு நாட்டம்.

இறைவன், மாணிக்கவாசகரை ஆட்கொண்டருளிய பாங்கு பற்றிய திருவாசகப் பாடல் பலகாலும் படிக்கத்தக்கது; நினைந்து நினைந்து படித்துணர வேண்டிய பாடல்.

புறம் புறம் திரிந்த செல்வம்!

“கடவுள் அடிக்கடி உலகத்திற்கு வர இயலாமையின் காரணமாகத் தாயைப் படைத்தான்” என்று ஆன்றோர் வழக்கு ஒன்றுண்டு. ஆம்! தாய் ஓர் ஆன்மாவுக்குச் செய்யும் உதவி பெரியது! அளப்பரியது! உணவு எடுத்துண்ண முடியாக் காலம்தொட்டுப் பாலூட்டிச் சீராட்டி, வளர்ப்பவள் தாய்! உடலை, உயிரை, உணர்வை வளர்ப்பவள் தாய்.

“தாய்” - என்று பெயர் பெற்றவர்களெல்லாரும் நற்றாய் ஆகிவிடுகிறார்களா என்ன? அவருள்ளும் ஒரு சில தாய்மார்களே நற்றாய்கள்! தாய்மார்களில் பலர் சிறந்து விளங்காமைக்குக் காரணம் படைப்பின் குறை அன்று.

சமூக அமைப்பிலும் வளரும் சூழ்நிலையிலும் மிகச் சிலரே நற்றாய்களாகச் சிறந்து விளங்குகிறார்கள்! சான்றாகப் பல தாய்மார்கள் குழந்தைகள் அழுதாலும் உடன் பாலூட்டுவதில்லை? ‘சனியன்’ என்ற வசைதான் கிடைக்கும்.

சில தாய்மார்கள் அழுத குரல் கேட்டவுடன் பால் ஊட்டுவார்கள். அழுத பிறகு பாலூட்டும் தாய்மார்களே மிகுதி. அதனாலேதான் “அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்ற பழமொழி பிறந்தது போலும். அழுத பிறகு பாலூட்டும் தாய் மோசமானவளல்லள். ஆனாலும் அவள் நற்றாய் என்ற தகுதி பெற இயலாது.

மிகமிகச் சில தாய்மார்கள் காலக் கணிப்பின்படி குழந்தைக்குப் பசி வரும் என்று உணர்ந்து உரிய காலத்தில் பாலூட்டுவர். இவர்களே நல்ல தாய்மார்கள்! இவர்கள் குழந்தையை அழவிடமாட்டார்கள்; குழந்தையின் நலனில் முழுப் பொறுப்பேற்று, நினைந்து ஊட்டும் தாய்மார்கள் - நல்ல தாய்மார்கள்!

மாணிக்கவாசகருக்கு இவ்வளவில் மனநிறைவு இல்லை. நினைந்தூட்டும் தாய்கூடச் சில நேரங்களில் குழந்தையை மறந்து விடுகிறாள்! நினைப்பு என்பதே மறதியைத் தொடர்ந்து வருவதுதானே! மாணிக்கவாசகர் குழந்தைகளை ஒரு நொடிப் பொழுதும் மறக்காத தாயை நினைவூட்டுகிறார்.

ஆம்! மாணிக்கவாசகரா இறைவனை அழைத்தார்? மாணிக்கவாசகரை இறைவனே தொடர்ந்து வந்து குருந்த மரத்தடியில் ஆட்கொண்டருளுகின்றார். ஆனால் நினைந்தூட்டும் தாயினும் சால நல்லவன் கடவுள்! இறைவன் உயிர்களை ஒரு பொழுதும் மறப்பதில்லை. இறைவன் உயிர்களை ஒருபொழுதும் மறவாது காத்திருந்து உரிய பொழுதில் ஆட்கொண்டருளுகின்றான். ஆதலால் பால் நினைந்தூட்டும் தாயினும் நல்லவன் இறைவன்.

அதுமட்டுமா? இறைவனின் அருளிப்பாடுகள் அவ்வழி பெறும் அனுபவம் உயிர்களுக்குப் புதியவை. முன்பு எப்போதும் காணாதனவற்றைக் காட்டியும், கேளாதனவற்றைக் கேட்பித்தும் ஆட்கொண்டருள்கின்றான் புதுமையில் நாட்டம் உயிரியற்கை. சமய நெறிக்கும் புதுமை தேவையே. ஆதலால் முதலில் உயிர்கள் இறைவனின் ஆட்கொண்டு அருளும் நிகழ்வுகளுக்கு உடன்பட்டு நில்லா! ஏன்? மறுதலிக்கக்கூடச் செய்யும். ஆயினும் இறைவன் மிகவும் பரிவுணர்வுடன் நடந்து கொள்வான்!

தாய், குழந்தைகளின் தகுதிப்பாடு நோக்கி அன்பு காட்டுவதில்லை. அதுபோலக் கடவுள் உயிர்களின் தகுதி நோக்கி ஆட்கொள்வதில்லை. ஆட்கொள்வதற்கு முன்பும், ஆட்கொண்டருளிய பின்பும் இறைவனின் கருணைக்கும் பாத்திரமான உயிர்கள் தகுதிப்படுத்தப் பெறும்.

உயிர்களின் தகுதி எது? சிறப்பு எது? உயிர், உடலைக் கருவியாகக் கொண்டு உடலை வேலை வாங்குமானால் உயிர் தகுதியுடையது. உயிர்கள் இணைந்துள்ள உடம்பின் ஆளுகைக்கு உட்பட்டு உண்டியை, உடையை உவந்து வருமாயின் தகுதியுடையதல்ல என்பது கருத்து.

ஆதலால், உடல் ஆற்றலுடையதாக இருக்க வேண்டும். ஆனால், உடல் பெருத்தால் உயிர் சிறுத்துவிடும். உடலின் ஊனைப் பெருக்குவது தீது. உடல் ஊனை உருக்கி உயிரை வளர்ப்பது நல்லது. இதற்குக் கடவுளின் கருணை உண்டு. இல்லை, கடவுட் சிந்தனை உண்டாகி அவனுடைய அருள் தடத்தில் சென்றால் திருவருள் வழி ஊன் உருகும்.

ஊன் உருகினால் ஆன்மாவிடத்தில் ஒளி தோன்றும், ஒளி விளங்கும்! அது ஞான ஒளி! இறை ஒளி! ஊனின் அட்டகாசம் நின்று உள்ளொளி பெற்ற ஆன்மாவினிடத்தில் ஆனந்தமாய தேனினைச் சொரிந்து வளர்க்கிறான் இறைவன்! உயிர் இன்புறுகிறது; இன்ப மயமாகிறது. உயிர், இன்பமே வடிவாகிறது. இந்நிலையில் உயிரின் அறியாமை அகல்கிறது; அறிவு விரிவடைகிறது. ஞான ஒளியாகிறது.

இந்த ஞான ஒளி, எல்லையற்ற இன்பத்தைத் தருகிறது. தேனில் ஊறிய பொருள் எதுவும் கெட்டுப் போகாது. அதுபோலத் திருவாசகத்தின் வழி, திருவருள் தோய்ந்த - நனைந்த உயிர்க்கு என்றும் இன்பமேயாம்!

ஒன்று எவ்வளவு நல்லதாயினும் தொடர் கண் காணிப்பு இல்லையெனில் அது கெடும். அதுவும் உயிர் போதிய பாதுகாப்பு இல்லையெனில் கெடும். ஏன்? உயிர் இயல்பிலேயே தொடக்க நிலையிலேயே அறியாமையுடன் - ஆணவத்துடன் தொடர்புடையது. உயிர் தன் முயற்சியினால் திருவருள் துணையால் ஆணவத்தின் செயற்பாட்டை அடக்க முடிகிறதே தவிர, முற்றாக அகற்ற முடிவதில்லை.

ஏன்? உள்ளது போகாது; இல்லது வாராது. இஃதோர் இயற்கை நியதி. உயிருடன் இயல்பாகப் பொருந்தியிருப்பது ஆணவம்; அறியாமை. ஆதலால், ஆணவம் அகலாது. உயிர் முயன்றால், திருவருள்துணை அமையுமாயின் செயலற்றுப் போகச் செய்யலாம்.

இந்த ஆணவத்தைச் செயலற்றுப் போகச் செய்தலே கூட எளிதல்ல. திருவருளின்பத்தில் உயிர் திளைத்து மகிழும் பொழுதும் கூட ஆணவம் தலைகாட்டும்; சேட்டை செய்யும். அந்த நிலையிலிருந்து கூட ஆணவத்தின் செயற்பாட்டால் உயிர் பின்னடைவு பெறுதல் உண்டு.

இங்ஙனம் வளர்ந்த உயிரைத் தாக்கி வீழ்த்தும் ஆணவத்தின் செயலை ‘வாசனாமலம்’ என்பர். ஆணவத்தினோடு இரண்டறக் கலந்திருந்த பொழுது அடையும் துன்பத்தை விட வாசனாமலத்தால் தாக்கப்படும் துன்பம் கொடிது! கொடிது!

மழை பெய்கிறது! மழை பெய்து ஓய்ந்துவிட்டது! மழை பெய்தபொழுது மரத்து இலைகளின் மறைவில் ஒதுங்கிப் பாதுகாத்துக் கொண்ட பறவைகள், மழை ஓய்ந்தவுடன் இலைகளிலிருந்து விழும் சொட்டுகளின் குளிரைத் தாங்க முடியாமல் தவிப்பதாகக் காஞ்சிப் புராணம் கூறும்.

துய்க்காமலே அடையும் துன்பத்தைவிடத் துய்த்து, பின் அத்துய்த்தலில் இடையறவு ஏற்படும்பொழுது அடையும் துன்பத்தின் அளவு மிகுதி. அதனால் ஒன்றினைப் பெறுவதைவிடப் பெற்றதைப் பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியம். பாதுகாக்கும் பணியே பெரும்பணி! இதனை ஆங்கிலத்தில் Follow up என்று சொல்வர்.

நிர்வாக இயலில் தொடர் கண்காணிப்பு மிகவும் இன்றியமையாதது. இறைவன் உயிர்களுக்கு இன்பத்தை வழங்கியிருந்தாலும் அதனை அந்த உயிர்கள் தொடர்ந்து அனுபவிக்கும்படியும் வழி நடத்துகின்றான்; கண்காணிக்கின்றான்.

மாணிக்கவாசகரைத் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளி ஆட்கொண்டருளினான். ஆனந்த மாய இன்பத்தை வழங்கியருளினான். பின், மாணிக்கவாசகரைத் தொடர்ந்து அவர்பெற்ற இன்ப அனுபவத்தை அவர் இடையறாது அனுபவிக்குமாறு கண்காணித்து நிலை நிறுத்திக் கொள்கின்றான்.

மாணிக்கவாசகரைத் தொடர்ந்து காப்பதற்காகவும், அவர் தோய்ந்த இன்ப அன்பின் அனுபவம் இடையீடு படாதிருக்கவும், அவ்வழித் திருவாசகம் கிடைக்கவும் இறைவன் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கள் பல!

இறைவன் குதிரைச் சேவகனாகும் நிலை, நரியைப் பரியாக்கும் கடமை, பின் பரிகளை நரிகளாக்கும் திருவிளையாடல், மண் சுமத்தல், புண் சுமத்தல் - இத்தனையும் மாணிக்கவாசகரின் திருவருள் சார்ந்த அனுபவம் இடையீடுபடாமல் இருப்பதற்காகவே யாம் என்பதை எண்ணினால் “புறம் புறம் திரிந்த செல்வ”மாகிய இறைவன் திருவாசகத்தின் இலக்கியம் என்பது புலனாகிறது.

இறைவன் தாயிற் சிறந்தவன்; உயிர்களுக்கு நிலையாக நின்றருள்பவன்.

இந்தப் பாடலுக்குச் சமூக இயல், நிர்வாக இயல் அடிப்படையிலும் பொருள் காணலாம். மனித உலகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், தாழ்ந்த நிலையில் வாழ்வோர் எண்ணிக்கையே மிகுதி. அறியாமை, வறுமை இவர்களுடைய வழிவழிச் சொத்துக்கள்! அச்சமும் அடிமைப் புத்தியும் இவர்களை ஆட்கொண்டுள்ளன. இவர்களுக்கு எப்போது கடைத்தேற்றம்?

ரஸ்கின் என்ற சிந்தனையாளர் “Un to the last” என்று கூறினார். அதாவது கடையனுக்கும் கடைத் தேற்றம் என்பதையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார். இந்த உலகில் இலர் பலர் ஆயினர் ஏன்?

நோன்பு என்றால் என்ன? உண்ணா நோன்பா? உறங்காத நோன்பா? அல்லது பலகாலும் நீராடுதலா? தரையில் படுத்தலா? இவையெல்லாம் நோன்பா? இல்லையா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும். “விரதம் எல்லாம் மாண்ட மனத்தான்” என்ற தேவாரத்தின் வழி சிந்தனை செய்யுங்கள்! முடிவு, தலைப்படும்.

புறநானூறு, நோன்பு என்று போற்றுவது எதனை? தனக்கென முயலாது பிறருக்கென முயலும் மாந்தர் வாழ்வதால் உலகம் இருக்கிறது; இயங்குகிறது என்று போற்றுகிறது!

“உண்டாலம்ம இவ்வுலகம்.......
தனக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென வாழுநர் உண்மையானே!”

என்பது புறநானூறு. இத்தகு நோன்பு நோற்பார், வள்ளுவம் கூறியாங்கு மருந்து மரம் என வாழும் பெருந்தகையாளர் அருகிப் போனமையால் இலர் பலர் ஆயினர்! அறியாமையிலும் ஏழ்மையிலும் கிடந்துழலும் மக்களுக்கு வாழ்தலில்கூட விருப்பம் இல்லை. கடனே என்று வாழ்வார்கள்! பிழைப்பு நடத்துகின்றவர்கள், வெந்ததைத் தின்கின்றனர்; விதி வந்தால் சாகின்றனர்.

இத்தகு மக்களுக்கும், தமது முன்னேற்றம் பற்றிய சிந்தனையே இருக்காது. வாழ்தலையே விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் முதலில் விருப்பம் உண்டாக்க வேண்டும்.

அதனால்தான் நமது சமயத்தில் திருவருட் சக்தி, ஆன்மாக்களுக்கு வேட்கையுண்டாக்க, கரும்பு வில் தாங்குகிறான். ‘காம கோட்டம்’, ‘காமாட்சி’ - என்ற வழக்குகள் தோன்றின.

ஆதலால், அறிஞர்கள் சாதாரண மக்களுக்காக அவர்களுடைய நலனுக்குரியவைகளைப் பற்றி எண்ணவேண்டும்; எண்ணிச் செய்யவேண்டும். அவர்களுடைய தேவைகளை அவர்கள் அடைவதற்குரிய வாயில்களைக் காட்டி வழி நடத்தி, அவற்றினை அடைதலுக்குரிய திறனைப் பெற்று வளரத் துணை செய்யவேண்டும்.

அவர்களுடைய வளர்ச்சிப் பாதையில் ஏற்படும் அகநிலைத் தடைகள், புறநிலைத் தடைகள் ஆகியவைகளைக் கடக்கும் அறிவாற்றலையும் உடல் வலிமையையும் பெறத் தக்கவகையில் நெறிப்படுத்த வேண்டும்.

முன்னேற்றம் என்பது வளரும் தன்மையது; மேலும் நிலையானது. முன்னேற்றத் திசையில் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் ஊன்றி நிற்றல் வேண்டும். இங்ஙனம் முன்னேற்றத் திசையில் வளர, வாழ நல்ல கண்காணிப்புத் தேவை. கண்காணிப்பும் தொடர் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.

இதனை நிர்வாக அறிவியல், தொடர் கண்காணிப்பு என்று கூறும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாணிக்கவாசகர் நிர்வாக அறிவியல் சார்ந்த இந்த உண்மையை விளக்குகிறார்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் ஆட்கொள்ளப் பெற்றார். அந்தம் ஒன்றில்லா ஆனந்தத்தைப் பெற்றார். இந்த ஆனந்த அனுபவமும் இடையீடுபடாமல் இருக்க மாணிக்கவாசகரைத் தொடர்ந்து இறைவன் பின் செல்கிறான். இறைவன் பின்னே செல்பவன். வீழ்ந்தால் தூக்கவேண்டும் என்றால் பின்னே வந்தால்தான் துாக்கமுடியும். இதனைப் ‘புறம் புறம் திரிந்த செல்வமே!’ என்றார். இன்றும் ஆட்சியியலில் அமைச்சர்களின் பாதுகாப்புக்குச் செல்பவர்கள் (Escort) பின்னே செல்கிறார்கள்!

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி-பெருக்கி
உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே! சிவபெரு மானே!
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுத் தருளுவது இனியே

(பிடித்த பத்து-9)
என்ற திருவாசகப் பாடல் தாயன்பின் பெருமை, உடலை அடக்கியாளும் ஆன்ம நலம் கருதி ஆட்கொண்டருளல், தொடர்ந்து காக்கும் இறைவனின் கருணை ஆகியவற்றை விளக்கும் இனிய பாடல்!

பதம் தந்த பரமன்

ஏன் இறைவன் புறம் புறம் திரிய வேண்டியிருக்கிறது? ஆன்மாவுக்கு அருமை எது, பெருமை எது என்று எளிதில் புலனாகாது; புலனானாலும் சோர்வினால் நெகிழவிடும். ஊனுடம்பு வளர்ந்தாலும் பலர் ஆன்ம நிலையில் யாதொன்றும் அறியா நிலையில் இருப்பர்.

குழந்தைகளுக்குப் பொற்கிண்ணத்தின் அருமை தெரியுமா? கையில் உள்ள பொற்கிண்ணத்தை விளையாட்டுப் பொம்மைக்கும் சுவைத்துத் தின்னும் மிட்டாய்க்கும் ஈடாகக் கொடுத்துவிடுமே!

அதுபோலத்தான் மனிதர்கள் இறைவன் அருளிய பேரருட் கொடையாகிய மானுடப் பிறவியின் பெற்றிமையை உணர்வதில்லை! மானுடம் பிறவியை முறையாகப் பயன்படுத்திப் பயன்பெறுவோர் எத்தனை பேர்?

“என்னால் அறியாப் பதந்தந்தாய்
யான் அது அறியா தே கெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியா ரொடுங்கூடாது
என்நா யகமே பிற்பட்டிங்
இருந்தேன் நோய்க்கு விருந்தாயே!”

(ஆனந்த மாலை–2)

என்ற பாடலை உணர்க!

ஆம்! மானுடப் பிறவி, வென்று விளங்கவேண்டிய பிறவி! புவியை நடத்தவேண்டிய பிறவி! ஆனால், நடப்பது என்ன? மனிதன் வண்டியில் சவாரி செய்யவில்லை! வண்டி மனிதன் மீது சவாரி செய்கிறது!

அறிவுப் புலன்கள் நிரம்பிய உடல்! ஆற்றல் மிகுதியும் உடைய உடல்! அன்பினைப் பொழியும் இதயம்! கிளர்ந்து கிளர்ந்து வளரும் உயிர்! இத்தனையும் என்னாயின? பாழாய்ப் போயின.

ஓர் உவமை

மாணிக்கவாசகர் ஞான வாழ்வின் அருமையை அறியாதவர்களின் அவலத்தைப் பல்வேறு உவமைகளின் மூலம் தன்னைச் சான்றாக வைத்துக் கூறுவார் போல விளக்குகின்றார்.

யானை, உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. அதன் கை மிகப் பெரியது. ஆயினும் ஏன்? அந்த யானைக்குத் தன் உடலைப் பார்த்துக்கொள்ள முடியாது. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும்! அதுமட்டுமா? அந்தோ, பரிதாபம்! யானை தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துப் பாகன் கையில் கொடுக்கும். இது யானையின் இயல்பு.

மனிதன் யானை போலப் பெரிய உடலுடைய வனல்லன்; ஆயினும் வலிமை மிகுதியும் உடைய கருவிகளை உடையவன். எனினும் அவன் தன்னை அறிகிலன்; தன்னுடைய தலைவனை அறிகிலன். மனிதன் தனக்குத் தானே துன்பமிழைத்துக் கொள்கிறான். வினைப்பந்தங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறான்.

“இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
கருவை யான் கண்டி லேன் கண்ட தெய்வமே

வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன் கிற்பன் உண்ணவே

(கைம்மாறு கொடுத்தல்–1)

என்ற பாடலால் இதனை அறியலாம்.

தனித்துணை

மாணிக்கவாசகர் தனித்துணையைப் பெற்றவர். ஆயினும் தனித்துணையின் அருமை தெரியாமல் தன் போக்கில் நடந்து கொண்டதாகத் தன்னை நொந்து கொள்கிறார். வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணை தேவை.

நம்முடைய வாழ்க்கைக்குப் பல துணைகள் வந்து சேர்கின்றன. தந்தை, தாய்கூடத் துணைதானே! இந்த அற்புதமான பிறவிக்குக் கருவியாக இருந்தவர்கள் அவர்கள். ஆயினும் காலம் அவர்களைப் பிரித்துவிடுகிறது.

மனைவி ஒரு துணையே! ஆயினும் என்? மனைவியும் எல்லா நிலைகளிலும் ஒத்து நிற்பவளா? பிணக்கே கொள்ளமாட்டாளா? ஆதலால், மனைவியும் தனித்துணை ஆக இயலாது. அடுத்து நண்பன் - தோழன். இவனும் என்றும் எப்போதும் எங்கும் எல்லாச் சூழ்நிலையிலும் துணையாக அமைந்து விடுவான் என்று கருதமுடியாது.

கடவுள் அப்படியல்ல. கடவுள் ஏழ்பிறப்பும் துணை; நரகொடு சுவர்க்கத்திலும் துணை. ஆதலால், இறைவனைத் தனித்துணை என்றார். தனித்துணை ஆற்றுப்படுத்தும் வழி, வாழ்தல் வேண்டும். மூளையை மட்டும் நம்பக்கூடாது. இதயத்தையும் நம்பவேண்டும்.

“தனித் துணை நீ நிற்க யான் தருக்
கித்தலை யால் நடந்த
வினைத் துணை யேனை விடுதிகண்
டாய் வினை யேனுடைய

மனத்துணையே யென்தன் வாழ்முத
லேயெனக் கெய்ப்பில் வைப்பே
தினைத் துணை யேனும் பொறேன் துயர்
ஆக்கையின் திண்வ லையே!

(நீத்தல் விண்ணப்பம்-39)

என்பது திருவாசகம்.

மந்திரப் பாடல்

மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பெற்ற நிலையில் அம்மை, அப்பனுள்ளும்; அப்பன், அம்மையுள்ளும் இருப்பதை எண்ணி உள்ளம் நெகிழ்கின்றார். அம்மையும் அப்பனுமாகிய நீவிர் இருவீரும் என்னுள்ளத்தில் இருத்தல் வேண்டும் என்று வேண்டுகின்றார். இது ஐந்தெழுத்தின் விளக்கம். “சிவயசிவ” என்பது விளக்ககம்.

“உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீ யிருத்தி
அடியேன் நடுவுள் இருவிரும்
இருப்பதானால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப்புரி யாய் பொன் னம்பலத் தெம்
முடியா முதலே என் கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே!

(கோயில் மூத்த திருப்பதிகம்-1)

என்பது மணிவாசகம்.

“சிவயசிவ” - என்பது மீதுண்மை - அதிசூக்கும ஐந்தெழுத்து. இப்பாடலின் இருபுறமும் “உடையாள்” என்று சொல்வது அமைந்துள்ளது. ஆன்மாவைக் குறிக்கும் “ய” நடுவணதாகவும் இரண்டு புறமும் சிவசக்திகள் இருப்பதன் அருமைப்பாட்டையும் உணர்க. ஆன்மாவாகிய “ய” -விற்கு ‘சி’ சுரமாகிய உடையானும் “வ” கரமாகிய உடையாளும் இருக்கின்றமையை உணர்த்துகிறது.

“உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீ யிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால்”

என்பது மீண்டும் ஓர்க; உணர்க.

கண்ணப்பர் பற்றிய நினைவு

மாணிக்கவாசகர் கண்ணப்பர், சண்டீசர் ஆகிய நாயன்மார்களைப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். கண்ணப்பரை ஊன் உருக, உயிர் உருகப் பாராட்டி உள்ளார்.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என் னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித் தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்றூ தாய் கோத்தும்பீ!

(திருக்கோத்தும்பி-4)

என்ற பாடலால் கண்ணப்பர் அன்புருவாகி நின்ற காட்சியை விளக்குகின்றார். வேறொரு பாடலில் கண்ணப்பருடைய பூசை முறைகளை விளக்கிப் பாடியுள்ளார்.

பொருட் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ!

(திருத்தோணோக்கம்-3)

என்றும் பாடியிருப்பதறிக. பொருட் பற்றிச் செய்கின்ற பூசனைகள் என்பது ஆன்ம வழியில் செய்யப்படும் பூசனைகள் என்று பொருள்படும். ஆகமச் சிறப்புடையது பூசை என்று சிறப்பிப்பதால் ‘பொருள்’ என்பது ஆகமம் ஆயிற்று.

கண்ணப்பர் செய்தது அன்புப் பூசை. ஆராக் காதலால் நிகழ்த்திய பூசை; ஆகமமுறைப்பூசை மரபுகளைக் கடந்த பூசை.

கண்ணப்பர் வாயில் கொணர்ந்த நீர் திருமஞ்சனம். தலையில் சூடிய மலர் இறைவனுக்குச் சூட்டும் மலர்; சுவை பார்த்த ஊன் திருவமுது ஆயிற்று. செருப்பணிந்த கால்கள் நிர்மால்யம் எடுக்கும் கைகளாயின. இந்தப் பூசை, பெருமானால் விருப்புடன் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.

ஆகம விதிமுறைப்படி பூசை செய்த சிவகோசரியாரின் பூசையினும் கண்ணப்பர் பூசை மிக்குயர்ந்து விளங்குகிறது. கண்ணப்பர் பூசையில் அன்பு முதலிடம் பெற்றிருந்தது; ஊனும் உயிரும் உருகி வழிபட்டார். இதனை,

“அவனுடைய வடி வெல்லாம் நம் பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறி வெல்லாம் நமை அறியும் அறிவென்றும்
அவனுடைய செய லெல்லாம் நமக்கினிய வாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறறி நீ” என்றருள் செய்தார்.

(கண்ணப்பநாயனார். பு. –157)

என்ற பெரியபுராணப் பாடலால் அறியலாம்.

தொன்மைக் கோலம்

மாணிக்கவாசகர் திருக்கழுக்குன்றத் திருத்தலத்திற்குச் சென்று வழிபாடு செய்தார். அப்போது திருக்கழுக்குன்றப் பதிகத்தை அருளிச் செய்தார். திருக்கழுக்குன்றத்தில் இறைவன் திருவடிவில் மாணிக்கவாசகருக்கு காட்சியருளினன்.

குரு தரிசன அமைப்பில் திருப்பெருந்துறையும் திருக்கழுக்குன்றமும் மாணிக்கவாசகரின் அனுபவத்தில் கலக்கின்றன. திருக்கழுக்குன்றத்தில் இறைவனைக் கண்ட நிலை மாணிக்கவாசகர் முதிர்ச்சி அடைந்த நிலை. திருக்கழுக்குன்றத்தை எண்ணும் பொழுது மாணிக்கவாசகருக்கு விருப்பு இல்லை; வெறுப்பு இல்லை.

வாழ்க்கையில் வெறுப்பில்லாத நிலை மட்டும் இருந்தால் போதாது. வெறுப்புணர்வு தனி நிலையில் இருக்கக்கூடாது. விருப்பம் இருந்தால் வெறுப்பும் வரும், வளர்ந்த நிலையில், வெறுப்பு அணுகாத விருப்பம் இருத்தல் கூடும். ஆனால் பொதுவாக விருப்பு-வெறுப்பு இல்லாமல் இருந்தால் நல்லது.

நல்லதன் நன்மையிலும் நாட்டம் இல்லை. தீயதன் தீமையிலும் வெறுப்பு இல்லை. இதுவே இருவினை ஒப்பு. இருவினை ஒத்த நிலையில் - பிறவி வித்துக் காய்ந்துபோன நிலையில் திருக்கழுக்குன்றத்தில் வழிபடுகின்றார். திருப்பெருந்துறைச் சிவனையே தொழும் கற்புக் கடம் பூண்டவர் மாணிக்கவாசகர் என்பதறிக.

மாணிக்கவாசகர் தில்லையை அடைகின்றார். திருவாசகத்தில் தில்லை பாதி என்பர். தில்லையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த பாடல்கள் மிகுதி. இவற்றுள் மிகச் சிறந்த பதிகம் திருக்கோத்தும்பி. திருக்கோத்தும்பிப் பதிகத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு வரலாற்றுண்மையை உணர்த்துகின்றார்.

இன்று நமது திருக்கோயில்களில் பல திருமேனிகள். இவற்றில் சில சிவமூர்த்தங்கள் இடையில் வந்து சேர்ந்தவை. திருக்கோயிலில் பல திருவுருவங்கள் வந்தமையால் நம்மனோர் வழிபாட்டில் கற்பு நெறியே காண இயலாத நிலை; ஒன்றியறிந்து வழிபாடியற்ற இயலாத நிலை.

நால்வர் பெருமக்கள் காலத்திலும் பல திருவுருவங்கள் பல பெயர்களில் வழங்கின என்பது உண்மை. இந்தத் திருமேனிகளைத் தாம் அருளிய பாடல்களில் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர். ஆயினும் ஆன்ம நாயகனாக ஏற்று வழிபட்டது சிவபெருமானையே! அம்மையப்பனையே!

தமிழர் தம் வழிபடுந் திருமேனி அம்மையப்பனாகவே பழங்காலத்தொட்டு இருந்து வந்திருக்கிறது. அருளிப் பாடுகள் நிகழ்ந்தபோதெல்லாம் அம்மையப்பன் திருக்கோலத்திலேயே நிகழ்ந்துள்ளன.

இன்றும் பழைய திருக்கோயில்களில் எல்லாம் குறிப்பாக அருளிப்பாடுகள் நிகழ்ந்த தலங்களில் எல்லாம் கருவறையில் அம்மையப்பன் திருக்கோலம் எழுந்தருளியிருப்பதைக் காணலாம். சங்க கால இலக்கியங்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் பெரும்பாலும் அம்மை அப்பன் திருக்கோலமே பேசப்பட்டுள்ளது. ஐங்குறு நூறு,

“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே!”

என்று வாழ்த்தும் திருக்களிற்றுப்படியார்.

அம்மை அப்பரே உலகுக்(கு) அம்மை அப்பர் என்று அறிக
அம்மை அப்பர் அப்பரிசே வந்து அளிப்பர்-அம்மை அப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்,

என்று கூறும் திருமுறைகள் முழுதும் அம்மையப்பன் வழிபாடே பேசப்பெற்றுள்ளது. மாணிக்கவாசகர் தில்லையம் பதியில் அருளிச் செய்த திருக்கோத்தும்பியில்,

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கொத்தும்பீ

(திருக்கோத்தும்பி–18)

என்று பாடுகிறார்.

இத் திருப்பாடலில் அம்மையப்பர் ஓருருவாய் எழுந்தருளியுள்ள காட்சி, பாடிப் பரவப் பெறுகிறது. அம்மையப்பர் ஓருருவாய் நிற்கும் கோலமே தொன்மைக் கோலம் என்று அருளிச் செய்தமையை உணர்தல் வேண்டும்.

தோடும், குண்டலமும், திருநீறும் சூலமும் உடைய அப்பன் வலப்புறமாகவும், பட்டாடையும் தோடும் சந்தனமும் பச்சைக் கிளியும் வளையலும் உடைய அம்மை இடப்புறமாகவும் விளங்கும் திருக்கோலம். நமது சமய நெறியில் அம்மையப்பன் வழிபாடு வளர்வது நல்லது; அது வரலாற்றுடன் இசைந்தது; வாழ்வியலுக்கு இசைந்தது.

சதுரர் யார்?

மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்டருளினான்; தன்னையே மாணிக்கவாசருக்குத் தந்தருளி மாணிக்கவாசகரின் உடலிடம் எழுந்தருளினான். மாணிக்கவர்சகரை எடுத்துக் கொண்டான். இருவருக்குமிடையே வாணிகம் நடந்திருக்கிறது. இந்தப் பரிவர்த்தனையில் மாணிக்கவாசகர் அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றார். இறைவன் என்ன பெற்றார்?

இந்தப் பரிவர்த்தனையில் யார் சதுரப்பாடு மிகுதியும் உடையவர்? இது மாணிக்கவாசகரின் வினா. மாணிக்கவாசகரே விடையும் தருகிறார். ஆம்! மாணிக்கவாசகர் அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றார். இறைவன் தம் உடலிடம் எழுந்தருளப் பெற்றார். இந்த இரண்டுக்கும் எளிதில் கைம்மாறு செய்ய இயலாது. ஆதலால் “யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே” என்று விடை கூறுகின்றார்.

ஆனால் உண்மையில் யார் சதுரப்பாடு உடையவர்? இறைவனா? மாணிக்கவாசகரா? மாணிக்கவாசகர் என்ற ஓர் ஆன்மாவை ஆட்கொண்டருள இறைவன், குதிரைச் சேவகனாகி, பிட்டுக்கு மண் சுமந்து, கொற்றாளாக வேலை செய்து, கூலி கொண்டு, மொத்துண்டு, புண் சுமந்து அவதிப்பட நேரிட்டிருக்கிறது. எண்ணற்ற உயிர்க் குலத்தை உய்யுமாறு ஆட்கொள்ள எத்தனை தடவை அவன் மண் சுமப்பது? அடிபடுவது? இந்த நடைமுறை தொடர்ந்து சாத்தியமன்று; மாணிக்கவாசகரின் புண் சுமந்த பாடலைப் பரிசாகப் பெற்ற நாள் முதல் திருவாசகம் ஓதியே அனைவரும் இறைவனின் திருவருளைப் பெறலாம்; இன்ப அன்பினை எய்தலாம்.

அறிவால் சிவனேயாய மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகமே உயிர்களுக்கு-மானுடத்திற்கு ஈடிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தை வழங்கும்.

ஆதலால் மானுடத்தை ஆட்கொள்ள மண் சுமக்க வேண்டிய அவசியத்திலிருந்து இறைவனுக்கு விடுதலை கிடைத்தது. மேலும் இறைவனுக்கு, கடையூழியில் தனிமை கழிக்கத் துணையாகத் திருவாசகம் கிடைத்தது.

மாணிக்கவாசகரைப்போல் பலர் இறைவன் அருளைப் பெற்றுள்ளனர். ஆனால், இறைவன் தானே படியெடுத்துச் சுமந்து செல்லக்கூடிய திருவாசகத்தைப் பெற்றது மாணிக்கவாசகரிடத்தில் தான்! எனவே, இறைவனே சதுரப்பாடுடையவன்!

“தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்ற தொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப் பெருந் துறையுறை சிவனே

எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யான் இதற் கிலன் ஓர் கைம்மாறே!

(கோயில் திருப்பதிகம்–10)

என்ற பாடல் எண்ணி மகிழத்தக்கது.

பணி செய்யப் பணித்தருள்க!

மாணிக்கவாசகர் எம் பெருமானை, திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்புகின்றார். இறைவனை, “இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்” என்று ஆய்வு செய்யும், முடிவுகள் கூறவும் முயன்ற உலகம் தோற்றுப்போயிற்று! எத்தனை உயிர்ப் பேதங்கள் உண்டோ அத்தனை மனங்களும் உண்டு. அவரவர் மனம் நினைந்திடும் உருவம், பெயர்தானே இறைவனுக்கும்!

ஆதலால் இறைவனைப் பற்றிய ஆய்வு தொடர்வதே ஆன்ம அனுபவ வளர்ச்சி; அளவுகோல்! அடையாளம்! இறைவன் எத்தகையவனாக இருந்தால் என்ன? அவன் மானுடத்தை ஆட்கொண்டருளத் திருவுள்ளம் கொண்டு விட்டனாயின் எங்கும் எவ்வுருவிலும் எழுந்தருளுவான்.

நமக்குத்தான் “அவன் சிவன்” என்று தேர்ந்து தெளியும் அறிவு தேவை! உணர்வு தேவை. இறைவன் திருஉத்தர கோசமங்கையில் எழுந்தருளியுள்ளான். அதை ஊராக உவந்துகொண்டு எழுந்தருளியுள்ளான்.

ஆதலால், மாணிக்கவாசகர், “எம் பெருமானே! எழுந்தருள்க; நந்தமக்கு அருளிப்பாடு செய்வதற்கல்ல! என்ன பணி செய்யவேண்டும்? பணித்தருள்க - பணி கொள்வதற்காக எழுந்தருள்க.” என்று பிரார்த்திக்கின்றார்.

இத்தகு பிரார்த்தனை சிறந்த பிரார்த்தனை! இந்தப் பிரார்த்தனை முறை நாடெல்லாம் வளரவேண்டும். திருக்கோவையார்

மாணிக்கவாசகர் திருக்கோவையாரையும் அருளிச் செய்தார். “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்ற திருக்குறிப்பின் வழி பாடியதாக வரலாறு.

இறைவனை, ஆடல்வல்லானைத் தில்லையம்பலத்துள் காணலாம்; அங்கு, காண இயலாது போனால், மதுரையின் கண் ஆய்ந்த தமிழ்த்துறையில் காணலாம்; அங்கும் காண இயலாது போயின் ஏழிசைச் சூழலில் காணலாம் என்று திருக்கோவையார் பேசுகிறது.

தில்லையம்பலமும் தமிழ்த்துறையும் ஏழிசைச் சூழலும் மாணிக்கவாசகர் சிந்தையும் ஒன்றேயாம். அதனால்தான், திருவாசகத்தை இறைவன் படியெடுத்தான். தில்லையில் மாணிக்கவாசகரை, திருவாசகத்தின் பொருள் கேட்கின்றனர். மாணிக்கவாசகர் ஆடல்வல்லானையே பொருளாகக் காட்டி அருள்கின்றார்.

திருவாசகம் ஓதுவோம்

திருவாசகம் பண் சுமந்த பாடல்! இறைவனை முன்னிலைப்படுத்திப் பாடப்பெற்ற பாடல்கள் திருவாசகத்தில் மிகுதி! உயிரின் சிறுமையும் இறைவனின் பெருமையும் பேசப்படுவதால் உருக்கம் மிகுதி! ஊனினை, உயிரினை உருக்கும் பாடல்கள்!

டாக்டர் ஜி.யூ. போப் “என்பினை உருக்கும் பாடல்கள்” என்றார். அழுது அடி அடையும் நெறி, திருவாசக நெறி! திருவாசக நெறி, அன்பு நெறி! பொதுமை நெறி!

திருவாசகம் ஓதுவோம்! மனநலம் அடைவோம்.