குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/திருவாசகத் தேன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2


திருவாசகத் தேன்*[1]


திருவாசகம் ஓதுவோம்!


இந்த உலகில் எதுவும் வளரும்; எவரும் வளர்வர். வளர்வன எல்லாம் மாறும் - இதுவே உலகத்து இயற்கை. ஆன்மா வளர வேண்டும். ஆம்! ஆன்மா வளர்வதற்கும் மாற்றங்கள் பெற்று நிறைநலம் பெறுவதற்குமே எடுத்தது பிறப்பு.

நிலம் உழுதால் நிலத்தின் கெட்டித்தன்மை நெகிழ்ந்து கொடுக்கும்; விதைகளை வாங்கி செடியாக்கி, மரமாக்கி வளர்த்துக் கொடுக்கும். உழுத நிலமே பயன்படும். இரும்பை உருக்கவேண்டும். இரும்பை உருக்கிக் காய்ச்சினால்தான் வலிமை பெறும்; சுமை தாங்கும்.

மாற்றுக்குறையாத தங்கமேயானாலும் உருக்கினால் தான் அணிகள் செய்யலாம். பயன் கருதினால் வளர்ச்சி வேண்டும். வளர்ச்சிக்குரிய செயற்பாடுகளுற்றால்தான் வளர்ச்சி ஏற்படும்.

மனிதப்படைப்பின் குறிக்கோள் என்ன? அன்புற்றமர்ந்து வாழ்தலே வையகத்தியற்கை. இன்று மனித இனம் எங்குச் சென்று கொண்டிருக்கிறது? இன்றைய மனித இனத்திற்குக் குறிக்கோள் இருக்கிறதா? இன்றைய மனிதன் சாதனைகளையே குறிக்கோள்கள் - இலட்சியங்கள் என்று சொல்கிறான். இன்றைய மனிதனிடம் “மனிதம்” இல்லை; கடின சித்தம் குடிகொண்டு விட்டது. இந்த மனித குலத்துக்கு முதலில் அழக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐயா, ஐயா இது என்ன புதிய முயற்சி! இன்று மக்கள் அதிகமாக அழுகிறார்கள்! விலைவாசி ஏற்றம், குடும்பப் பொறுப்பு, மகள் திருமணம் எல்லாமே இன்று அழுகைக்குரிய நிகழ்வுகளாகி விட்டன. இந்த அழுகை போதாதா? இன்னும் என்ன அழுகை? எதற்கு அழுகை? என்று நினைக்கலாம். இப்பொழுது மனிதனின் தேவைகள் எளிதாகக் கிடைக்கும். தேவை ஒரு நல்ல அரசு. அதற்கு மேலும் நன்றென ஒன்றுண்டு! அதுவும் கிடைக்கும்! இன்பத்துள் இன்பமும் கிடைக்கும்!

மனிதனின் நெஞ்சக் கனகல்லை நெகிழ்ந்து உருகச் செய்ய வேண்டும். உருகும் மனிதனிடத்தில் உணர்வு சிறக்கும்; ஞானம் முகிழ்க்கும். மனிதன் கடவுளை நினைந்து நினைந்து உருகி அழுதானானால் உருப்பட்டுவிடுவான். மனிதன் கடவுளை நினைந்து அழக் கற்றுக் கொள்ள வில்லையே; என்று இடித்துக் கூறுகிறது திருவாசகம்! அழுதால் இறைவனை- இறைவன் அருளைப் பெறலாம்! இது திண்ணம்! திருவருள் முதல் எண். முதல் எண்ணை வெற்றிகரமாகப் போட்டுவிட்டால் மற்ற எண்கள் தாமே வரும்.

மனித வாழ்வுக்கு உணவு தேவை; மருந்தும் தேவை. உணவாகவும் மருந்தாகவும் ஒருசேரப் பயன்படுவது தேன்! தேன் உணவு! தேன் மருந்து! ஏழைகளுக்குத் தேன் மருந்து. வளமுடையோருக்கு உணவு. தேன், தேனீக்களால் சேகரிக்கப் பெறுவது. தேனீக்கள் சுறுசுறுப்பானவை. கட்டுப்பாடுடையவை; ஒழுங்குகள் உடையவை. ஒரே தொழில் செய்பவை. தேனீக்கள் பலகாத தூரம் சென்றாலும் தேன் உள்ள மலர்களை நோக்கியே செல்லும். தேனைச் சேகரிக்கும். எப்படி வாழ வேண்டும் என்பதற்குத் தேனி ஓர் உதாரணம்.

மாணிக்கவாசகராகிய தேனீ இறைவன் திருவடி மலர்களில் மட்டும் உட்கார்ந்து எடுத்த தேன், திருவாசகம். திருவாசகம் என்ற தேன் ஒரே பூவின் தேன். வேறு எந்த மலர்களிலும் மாணிக்கவாசகராகிய தேனீ உட்கார்ந்ததில்லை. பரமசிவமே கொற்றாளாகி மண் சுமந்து பெற்ற பரிசு, பண் சுமந்த பாடலாகிய திருவாசகம்! சிவபெருமானால் படி எடுக்கப்பெற்ற நூல் இது.

எத்தனை எத்தனை பிறப்புக்கள் பிறந்தாயிற்று! எய்ப்பும் களைப்பும் வந்தாயிற்று! கடினமான பிறப்புக்கள்! சூழ்ந்து வந்த தளைகள் எண்ணற்றவை! இவையெல்லாம் கழல வேண்டுமா? திருவாசகத் தேனமுதப் பாடல்களை ஓதுக!

பிறப்பு என்ன? வாழ்க்கை என்ன? நன்மை, தீமை என்ற சுழற்சி வட்டம் ஓயாது வருகிறது. இந்தச் சூழற்சியில் சிக்கிய ஆன்மா அனுபவிக்கும் அல்லல்கள் ஆயிரம்! ஆயிரம்! இந்த அல்லல்கள் தீர ஒரே வழி திருவாசகம் ஓதுதல்.

அல்லல் நீங்கி ஆனந்தம் அடையத் திருவாசகம் பாடுக! திருவாசகம் ஓதுக!

வாழ்க்கையாகிய நெடிய பயணத்துக்குத் துணை வேண்டுமா? தனிமைத் துன்பம் அழியத் துணை வேண்டுமா? இறைவனே கடையூழித் தனிமையிலிருந்து மீள, திருவாசகத்தைப் படி எடுத்துக் கொண்டுளான். நமது தனிமைக்கும் தனித்துணை மருந்து திருவாசகம்தான்! நமது நெடிய பயணத்துக்குரிய தனித்துணை திருவாசகம்! மாணிக்கவாசகர் பரசிவத்தின் திருவடிகளாகிய மேகத்தில் ஞானத்தை எடுத்து வந்து பெய்த ஞான மழை திருவாசகம்! திருவாசகத்தை, இராமலிங்க அடிகள் கூறியவாறு “நான் கலந்து பாட” முயற்சி செய்வோம்!

திருவாசகம் ஓர் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை உணர்த்துகிறது. நந்தம் மூதாதையரின் உதட்டில் உலா வந்து உலாவிய பாடல்கள் திருவாசகம். அதனால்தான் போலும் அன்றைய தமிழகத்தில் ஞானம் இருந்தது. இன்றும் நமது உதடுகளில் திருவாசகம் உலா வரட்டும்! திருவாசகச் சிந்தனைகளின் வழி ஆன்மாக்கள் வளரட்டும்! அலைவு உலைவுப் போராட்டங்களிலிருந்து விடுதலை பெறட்டும்; ஆன்ம சுதந்திரம் பெற முதலில் சிந்திக்க வேண்டும். ஆன்ம சுதந்திரமே இறை இன்பத்திற்குப் படி.

சிவப்பிரகாச சுவாமிகள் கூறிய வேளாண்மையைச் செய்க! மாணிக்கவாசகராகிய மாமழை பொழிந்தது; திருவாசகத் தேனமுது. ஓதுபவர் மனக்குளத்தில் திருவாசகம் நிரம்பட்டும். அவர்தம் வாய்வழிப்போந்து கேட்பவர் செவி வழி மனவயலில் பரவட்டும்! அன்பாகிய வித்திலிருந்து சிவம் முளைவிடட்டும்! கருணை மலரட்டும்! கருணையால் இந்த உலகம் சிறக்கட்டும்! மட்கலம் நல்லதேயானாலும் தீண்டாமையாயிற்று. தீண்டாமை இல்லாத பொற்கலமாய திருவாசகம் ஓதுவோம்!

நாளும் திருவாசகம் ஓதுவோர் நாள்தோறும் திருவாசகத்தை நினைந்து நினைந்து ஞானமழையில் நனைந்து நனைந்து உணர்வில் சிறந்து அழுவோம். இறைவனை நினைந்து அழுவதற்குரிய ஞானப்பாடல்கள் திருவாசகம். அழுகின்ற கண்களில்தான் கடவுள்தன்மை பூரணமாகப் பரிணமிக்கிறது. ஏன்?

தமிழ் பத்திமைக்குரிய மொழி பிரிவு துன்பத்தைத்தருவது. குருந்த மரத்தடியில் திருப்பெருந்துறை ஈசனைக் கண்டு அனுபவித்த மாணிக்கவாசகருக்கு ஈசனின் பிரிவுத் துன்பத்தில் பிறந்த தமிழ் திருவாசகம். ஆதலால் நெஞ்சை உருக்குகிறது. ஆதலாலும் உருக்கும் தன்மை மிக்குடையதாக விளங்குகிறது. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஈசனைக் கண்டார். “கண்ணால் யானும் கண்டேன் காண்க” என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்கிறார். அது மட்டுமல்ல. கடவுட் காட்சியின் இயல்பையும் விளக்கிக் கூறும் பாடல்களைப் படித்துணரில் மாணிக்கவாசகர் கடவுட் காட்சியில் திளைத்தவர் என்பது உறுதி.

வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்(று)அ
னேகன் ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்(று)அங்(கு)
எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா(று) அறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தா னது காட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக் கேனே

(திருச்சதகம்–25)

என்னும் திருவாசகத்தால் இதனை அறியலாம்.

மனிதக்காட்சிக்கும், கடவுட்காட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? மனிதக்காட்சியில் நெடுந் தொலைவில் உருவமும், அண்மைத் தூரத்தில் உறுப்பும், மிகமிக அண்மையில் வண்ணமும் (நிறமும்) காட்சிக்குப் புலனாகும். கடவுட் காட்சியில் தொலைவில் வண்ணமும் அண்மையில் உருவமும் மிகமிக அண்மையில் உறுப்பும் திருவடியும் காட்சிக்குப் புலனாகும். இந்த மரபு இந்தப் பாடலில் விளக்கப்பெற்றுள்ளது. அதனால் இறைவனை அண்ணித்து- ஒன்றித்து அனுபவித்த அடியார்கள், திருவடிகளையே போற்றுகிறார்கள்.

இங்ஙனம் குருந்த மரத்தடியில் காட்சி தந்த இறைவன் “இரு” என்று சொல்லி மறைந்து போன நிலையில் அந்தப் பிரிவு மாணிக்கவாசகரை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. தினையின் பாகமும் பிரிவது கூடாது என்பது மாணிக்கவாசகரின் விருப்பம். பிரிவுத்துன்பம் தாளாமல் மாணிக்கவாசகர் அழுது அழுது பாடிய பாடல்கள் திருவாசகம். திருவாசகப் பாடல்களுக்கு உருக்கம் அமைந்ததற்கு இதுவே முதற்காரணம்.

அடுத்து, மாணிக்கவாசகர் இறைவனை முன்னிலைப் படுத்தியே பாடுவார். மாணிக்கவாசகர் தனது ஏழ்மையை-எளிமையை நினைந்து நினைந்து இறைவனிடத்தில் உருகி வேண்டுதல் காரணமாகவும் உருக்க நிலை அமைந்துள்ளது.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அறிவால் சிவனேயாவார் என்று போற்றப்படுபவர். திருவாசகம் முழுதும் ஞானம். திருவாசக பூசை, சிவபூசைக்கு நிகரானது என்று ஒரு வழக்குண்டு.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் “நான்” என்பதைக் கெட்டுப் போகச் செய்தவர். “கூடும் அன்பினில் கும்பிடல்” என்பது போல இறைவன் திருவடியைப் போற்றி வணங்குவதைத் தவிர வேறு எதுவும் வேண்டாதவர்.

வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார்நமை நாளும்
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப்
புறம் போகவொட் டேனே!

(உயிருண்ணிப்பத்து–7)

என்று பாடியுள்ளார்.

மனிதன் விரும்புவது புகழ்! ஆசைப்படுவது புகழ். ஆனால் புகழ் விருப்பம் கூட மனிதனைக் கெடுத்து வீழ்த்திவிடும் என்பதே அறநெறி முடிவு. அதனால் “வேண்டேன் புகழ்” என்றார். மேலும் “நின்னடியான் என்று ஏசப்பட்டேன்” என்றும் “சகம் பேய் என்று சிரித்திட” என்றும் “நாடவர் பழித்துரை பூணதுவாகக்கொண்டும்” திருவாசகத்தில் என்றும் அருளியுள்ள பிற பகுதிகள் நினைவிற்குரியன. புகழுக்கு அடுத்து மனிதனை ஆட்டிப் படைத்துத் துன்புறுத்துவது செல்வம். ஆதலால் “வேண்டேன் செல்வம்” என்று அருளிச் செய்துள்ளார். மண்ணக இன்பமும் சரி, விண்ணக இன்பமும் சரி வேண்டாம். இது மாணிக்கவாசகரின் தூய பற்றற்ற வாழ்க்கைக்கு அளவுகோல். திருப்பெருந்துறை இறைவனுடைய திருவடித்தாமரைகளை சென்னிக்கு அணியாகச் சூட்டிக்கொண்டார். இனி திருப்பெருந்துறை இறைவனுக்கு ஆட்பட்டிருப்பதே கடன்! “புறம் போகனே இனிப்புறம் போகல் ஒட்டேனே!” என்ற உறுதிப்பாடுடைய வரி பலகாலும் படிக்கத்தக்க வரி!

துறவின் முதிர்ச்சியும் அன்பு நிறைந்த ஆர்வமும் பண்சுமந்த தமிழும் ஒன்று சேர்ந்து உருக்கத்தைத் தந்தன. இதனை “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்ற பழமொழி உணர்த்துகிறது. திருவாசகத்திற்குரிய பிறிதொரு சிறப்பு எண்ணற்ற உவமைகள், உருவகங்கள் உடையதும் ஆகும். கருத்துக்களை விளக்குவதில் உவமைக்கு ஈடு ஏது? மாணிக்கவாசகர் தம் அனுபவத்தை எண்ணி தம் உடல் முழுதும் கண்களாக அமைந்து அழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னை
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்

சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர் கைம் மாறே!

என்று பாடுவார். யார் சதுரர்? தமிழால் ஞானம் அடைய முடியும். ஞாலத்தில் உயர்ந்த சிவானுபவத்தைத் தமிழில் பேச முடியும்; பாட முடியும்; எழுத முடியும் என்று செய்து காட்டிய சதுரர்! சிவபெருமானிடம் அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்ற மாணிக்கவாசகர் சதுரர் என்றெல்லாம் எண்ண இடமுண்டு. ஆயினும் கோடானு கோடி ஆன்மாக்களை ஆட்கொண்டருள மீண்டும் மீண்டும் மண் சுமக்க வேண்டிய அவசியமில்லாமல் எளிதில் ஆன்மாக்களை ஆட்கொள்ளத் திருவாசகத்தினைப் பெற்ற சிவபெருமானே சதுரர்!

நாமும் நாளும் திருவாசகம் ஓதி, சதுரப் பாட்டுடன் வாழ முயல்வோம்!

எடுத்தாளும் இறைவன்!

மாணிக்கவாசகர் தமது வாழ்நிலையை எப்போதும் தாழ்த்திப் பேசுவார்! “தாழ்வெனும் தன்மை” - மாணிக்கவாசகருடைய அணி, மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்த போதும் பழுத்த மனத்தடியாராக புளியம்பழம் போலவே இருந்தார் என்பதை அவருடைய வரலாறு உணர்த்துகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தன்முனைப்பே இல்லை. “நான்”, “எனது” என்ற செருக்கிலிருந்து முற்றாக விடுதலை பெற்றவர் மாணிக்கவாசகர்.

அரசன் குதிரைகள் வாங்கத் தந்தனுப்பிய செல்வம் கொண்டு மாணிக்கவாசகர் குதிரை வாங்கவில்லை. ஏன்? குதிரை வாங்கினால் படைக்கும் பயன்படும். படை போருக்காகும். போரினால் ஏற்படுவது மரணங்கள்; இழப்புக்கள்! மாணிக்கவாசகர் போரைத் தவிர்க்க எண்ணினார். திருக்கோயில் கட்டினார். திருக்கோயில் கட்டினால் முதலில் மக்களுக்கு வேலை வாய்ப்பு! திருப்பெருந்துறை நன்செய் சூழ்ந்த ஊர். சில மாதங்களுக்கே வேலை இருக்கும். அதனால் மக்களுக்கு வேலை; சிற்பக் கலைக்கு ஆதரவு. மக்கள் வழிபடவும், சமுதாய நோக்கில் கூடி வாழவும் திருக்கோயில் பயன்படும். இசையும் கலையும் திருக்கோயில் வளாகத்தில் வளரும். இன்னிசை வீணையர், யாழினர் மக்கள், மக்கள் மன்றத்திற்குக் களிப்பையும், மகிழ்ச்சியையும் தந்து நல்வாழ்க்கை வாழ்வதற்குத் துணை செய்வர். ஆதலால், திருக்கோயில் தழுவிய சமுதாயம் வளர்ந்தது. களிப்பும்-மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தொழில் முயற்சிக்கு, பொருள் செயலுக்குத் தேவையானது. வினை தொழில் செய்தலில் இருந்து மாணிக்கவாசகர் விடுதலை பெற்றதில்லை.

இந்திய தத்துவ ஞானத்தில் ‘வினை’ என்ற சொல் ஆதிக்கம் செலுத்துகிறது. பொதுவாக வினை என்ற சொல்லுக்குச் செயல் என்று பெயர்; பொருள்.

வினையே ஆடவர்க்கு உயிரே!

என்பது குறுந்தொகை. தொழில் செய்தால்தான் ஆடவன்! இது சங்ககால வழக்கு. திருவள்ளுவரும் “வினைத் தூய்மை” என்றார். வினை- செயல் செய்தல் உயிர் இயற்கை. வினை, கண்ணுக்குப் புலனாகும் பொறிகளால் செய்கிறார்கள். பொறிகளும், புலன்களும் சேர்ந்து செய்கிற செயல்களும் உண்டு. புலன்கள் மட்டுமே செயற்பாடுறுதலும் உண்டு. உயிரின் இயற்கை ஏதாவதொரு தொழிற்பாட்டில்-இயக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். செயலின்றிச் சும்மா இருத்தல் இயலாத ஒன்று.

சும்மா இரு சொல் லறஎன் றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே

என்பார் அருணகிரிநாதர். மனம் மாண்டுபோனால்தான் ஆன்மாவிற்குச் செயலாற்ற இயலா நிலை உருவாகும். அதுமட்டுமல்ல. மாந்தர் வினை - தொழில் செய்தால்தான் உலகம் வளரும்; வாழும் உயிர்க்குலமும் வாழ இயலும். வினை செய்தல் கோட்பாடு மாந்தருக்குத் தவிர்க்க முடியாத தேவை. வையகம் இயங்க - வாழ மாந்தர்தம் செயலே மூச்சு; உயிர்!

ஆதலால், மாந்தர் வினை செய்தல் இயற்கை ஆக்கமும் கூட! இங்ஙனம் நல்லனவே பயப்பது வினை. சமய உலகில் வினையின் எதிர்விளைவைப் பற்றி மட்டுமே எடுத்துக் கூறினார்கள்; கூறிவருகிறார்கள். வினையின் விளைவு மக்களுக்குப் பொருளாக்கம்; மக்களுக்கு வாழ்வு. சமய உலகமும் வினை செய்தலை வேண்டாம் என்று ஒரு பொழுதும் கூறியதில்லை; கூற இயலாது. இறைவனே ஐந்தொழில் செய்கிறான். சமய உலகமும் தொண்டு செய்யுமாறு பணிக்கிறது. திருத்தொண்டு செய்யுமாறு உணர்த்துகிறது. சிந்தனை, சொல், தொண்டு எல்லாமே வினைதான்! புலன்களால், பொறிகளால் வரும் செயலாக்கங்களைவிட, சிந்தனையால் வரும் வினையாக்கம் கூடுதல் என்பதே உண்மை. மாணிக்கவாசகரே கூடச் செயல் செய்தவர் தானே! திருக்கோயில் கட்டியவர்தானே! அது ஒரு வினை தானே! ஆதலால் வினை இயற்றல் இயற்கை. வினை செய்யும்பொழுது கொள்ளும் மனப்பாங்குதான் முக்கியம். வினையை - தொழிலைச் செய்யும்பொழுது எத்தகைய மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே கேள்வி! செய்யும் வினையைவிட, தொழிலைவிட மனப்பாங்கே விளைவுகள், எதிர்விளைவுகளுக்குக் காரணமாக அமைகின்றன. அல்லது விளைவுகளே இல்லாமலும் போகின்றன. வினைகளின் செயற்பாடுகள் மனம், மொழி, மெய்யால் அமைகின்றன. மனம் விரும்பியும் விரும்பாமலும் செய்யும் வினைகளுக்கும் பயன் உண்டு. மனம் விரும்பிச் செய்கின்ற வினைகள் இன்பநலத் துய்ப்பிற்குக் காரணமாக அமைவன. மனம் விருப்பமில்லாமல் செய்யும் வினைகள் எதிர்விளைவுகளைத் தரும். மனம் வெறுப்பால் செய்யும் வினைகளும் உண்டு. இத்தகு வினைகளின் விளைவு துன்பமேயாம். ஆதலால் வினை- தொழில் இன்பமோ துன்பமோ தருவதில்லை. வினைகள் இயற்றும்போது மனம் நிற்கும் நிலையைப் பொறுத்தே இன்பமும் துன்பமும் விளையும். வினைகளைச் செய்தவர்கள் அனுபவித்தே தீரவேண்டும். இது இயற்கை - நியதி! கடவுளின் ஆணை!

கையால் நெருப்பை அள்ளிக்கொட்டினால் கைகளுக்குச் சூடு உண்டு. கை புண்ணாகும். இது இயற்கை. இதுபோல வினைகளை மனம் அழுந்திச் செய்தால், விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகிச் செய்தால் அந்த வினையின் பயனை, செய்தவர் அனுபவிக்குமாறு செய்வது இயற்கை நியதி! இறைவனின் நெறிப்படுத்தும் தொழிற்பாடு! “ஊட்டும் வினை” என்பார் திருஞானசம்பந்தர். வினை செய்தலில் மனமே விளைவுகளுக்கு அல்லது எதிர் விளைவுகளுக்கு அடிப்படை என்பதற்கு எடுத்துக்காட்டு, சாக்கிய நாயனாரின் கல்லடியும் கண்ணப்பரின் செருப்படியும்! இவை இரண்டும் இறைவனுக்கு உவப்பாயின! காமவேனின் மலர்க்கணை உவப்பைத் தராதது மட்டுமல்ல. காமவேள் எரிய வேண்டியதாயிற்று. இவர்கள் வரலாற்றில் செய்த வினைப்பயன் கூட்டவில்லை. வினை செய்த நோக்கமும் உளப்பாங்குமே பயன் தந்தன. வினை இயற்றாமல் இருத்தல் கூடாது. வினைகள் இயற்றாமல் போனால் ஆன்மா வளராது; பக்குவப்படாது. குற்றங்களிலிருந்து விடுதலை பெறாது. வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டுவிடும். அதுவும் ஒருவிதத்தில் குற்றமேயாம்! ஆதலால் வினைகள் இயற்றி வாழ்தல் வேண்டும். செய்யும் வினைகள் - காரியங்கள் தற்சார்பாக அமையாமல் பொதுமை அடிப்படை காரணமாக அமைய வேண்டும்! புவியை நடத்தும் வினைகள் இயற்றுதல்-நடத்துதல் வேண்டும். அதேபோழ்து பொதுவில் நடத்துதல் வேண்டும். செய்யும் வினைகளின் பயனை அவ்வப்பொழுது கணக்குப் பார்த்து நேர்செய்தல் வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் வினைகளின் பயனும் தொகுநிலை அடைந்து எளிதில் அனுபவித்துக் கழிக்க இயலாத நிலையை அடையும். அன்றாடம் கணக்கு நேர் செய்தலே சிறந்த வாழ்வியல் முறை.

“வினையிலே கிடத்தல்!”- மனிதன் பிறந்த நாள் தொட்டு ஏதேனும் செய்து கொண்டிருக்கிறான்; செய்து கொண்டே இருக்கிறான். ஏன் செய்கிறான்? எதற்காகச் செய்கின்றான்? இது அவனுக்கே புரியாத புதிர். பலர் பயன், இலாபம் கருதியே வினை இயற்றுகின்றனர்; தொழில் புரிகின்றனர். ஏன்? இலாபம் மட்டுமல்ல, கரண்டுவதற்காகவேகூட வினை இயற்றுகின்றனர்; தொழில் செய்கின்றனர். இந்த மனப்போக்கில் செய்யும் வினைகள் இன்ப வட்டங்களாக அமையும். அந்த இன்பத்தைத் துய்க்கும் பொழுது மனம் அடையும் நிலை என்ன? யார் கூறமுடியும்? அந்த இன்பத்தை விருப்பு வெறுப்புக்களுடன் அனுபவித்தால் அந்த இன்பத் துய்ப்பு துன்பத்தின் விளைவுக்கு இரையாகும். அந்த இன்பத்தைப் பற்றின்றித் துய்த்தால் பின் தொடர்ச்சி இல்லாமல் போகிறது. அந்த இன்பத்தைத் தாமே துய்க்கவேண்டும் என்று துய்க்கும்பொழுது அது தொடர் நிலையாகிறது.

வினைகள் இயற்றும்போது உணர்வின்றிக் கிடத்தல் என்றால் என்ன? வினை இயற்றுகின்ற ஆன்மா இரு வேறு நிலைகள் அடையும். ஒன்று மெய்மறந்த நிலை. இது நல்லது. பிறிதொன்று போதையில் பிறந்த கிறுக்கு நிலை. இது தீயது. உணர்வு, ‘நான்’ இழந்த நிலையில் வினை இயற்றும் வினை வரவேற்கத்தக்கது. பிறந்த உயிர்கள், வாழும் மாந்தர்கள் ஓயாது ஒழியாது வினை இயற்றிக் கொண்டே உள்ளனர். இந்தவினை, பிறவி வட்டத்தை நீர் அலையின் வட்டம் போல் விரிவடையச் செய்து கொண்டே போகிறது. பிறப்பின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையில் இறைவன் கருணையால் பிறவிச் சூழலைக் கட்டுப்படுத்தி ஆட்கொண்டருள எண்ணி அருள்பாலிக்கிறான். இறைவன் வினைகள் இயற்றி வாழும் மாந்தரிடத்தில் தாயாக, தந்தையாக, ஆசிரியனாகக் காட்சி தருகின்றான். ஆனால், இந்த ஆட்கொள்ளலை எந்த ஆன்மாவும் விரும்புவதில்லை; விரும்பி வரவேற்பதில்லை. ஆனாலும் மனிதகுலம் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாது போனாலும் சரி, இறைவன் உயிர்க்குலத்தை உய்யும் வகையில் எல்லாம் ஆட்கொண்டருளத் தவறியதில்லை. அவனே வலிந்து செய்யும் கருணை நிறைந்த கடமை இது.

சாதாரணமாக உலகியலில் உயிர் நிலையில் உள்ளவர்களிடம் தாழ்ந்தவர்கள் போய் அறிமுகம் செய்து கொள்வதே பழக்கம். ஆனால், இறைவன் ஆட்கொண்டருளும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதெல்லாம் பெரியோனாகிய இறைவன், அவனுடைய கருணையினால் ஆட்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ள உயிர்களிடம் தாமே போய் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலையே நடைமுறை. இந்த மண்ணகத்தில் வினைகள் இயற்றுதல், இலாபம் ஈட்டல், புகழ் பெறுதல், அதிகாரம் செய்தல் அம்மம்ம! எத்தனை வினைகள்! எத்தனை எத்தனை செயல்கள்! இந்தச் செயல்களைச் செய்யும் பொழுதெல்லாம் பொறிகளில் படியும் கறைகள்! புலன்களில் ஏறும் அழுக்குகள்! ஆன்மாவில்- உயிரில் ஏற்படும் விகாரங்கள்! இவையெல்லாவற்றையும் பொருட்படுத்தாது அழுக்குடலேயானாலும் அழுக்கேறிய ஆன்மாவேயானாலும் தாயினும் சாலப்பரிந்து ஆட்கொள்ள இறைவன் வருகின்றான். ஆனால் ஆன்மாக்கள் ஆட்பட ஒருப்படுவதில்லை. விரும்புவதில்லை. அறுவை மருத்துவத்துக்குப் பயந்து நோயினால் தொல்லைப் படுவாரில்லையா? பத்தியத்துக்குப் பயந்து நோய்ப்படுக்கையில் கிடப்பாரில்லையா? அதுபோலத்தான். ஆனால், இறைவனின் கருணை கைவிடுவதில்லை. நோயாளி அறுவை மருத்துவம் செய்து கொள்ள விரும்பாது போனால் மருத்துவன் விடலாமா? விடக்கூடாது. அதுபோல, இறைவன் உயிர்களை எப்போதும் நரகத்திலும் கூடக் கைவிடமாட்டான். இறைவன் சிறந்த மருத்துவன், வைத்தியநாதன், மூல நோய் தீர்க்கும் முதல்வன் இறைவன், ஆதலால், பிணியாளனைக் கைவிடுவதில்லை. அவன் பிணிகளை அடக்கியாளும் தலைவனாகின்றான். அவன் தலைவனானது மக்களுக்காகவே, வேறு காரணங்களுக்காக அல்ல. இறைவன் பைத்தியக்காரன்! குறியொன்றும் இல்லாதவன்! எது பற்றியும் கவலைப்படான்! ஏசினாலும் ஏத்தினாலும் உயிர்களை ஆட்கொண்டருளுவதே இறைவனின் தொழில்.

ஒரு செல்வன், செல்லமாக நாய் வளர்க்கிறான். வேளா வேளைக்குப் பாற்சோறு பஞ்சணை எல்லாம் கிடைக்கிறது. ஒருநாள் செல்வன் வீட்டு ‘பேபி’யான நாய் தெருவில் சுற்றிய ஊர் நாயைப் பார்த்தது. அது சுதந்திரமாகச் சுற்றியது. இந்த வளர்ப்பு பேபிக்கு ஊர் நாயுடன் சேர ஆசை! பெரிய இடத்தில் இருந்தாலும் சின்னப் புத்தி எளிதில் போகுமா? பேபி சங்கிலியை தலையால் சுழற்றிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டது. எங்கு ஓடிற்று! மாடி வீட்டில் பஞ்சணையில் கிடந்த நாய் அடுத்த வீட்டுக் குப்பை மேட்டுக்கு ஓடிற்று; அந்தக் குப்பை மேட்டில் ஊர் நாயுடன் கூடி விளையாடிக் கும்மாளமிட்டது. பேபியை வளர்த்தவன் பேபியைக் காணாமல் தவித்தான்; தேடினான்; தேடிப் போன நிலையில் பேபி குப்பை மேட்டில் விளையாடுவதைப் பார்த்தான்; அங்கே சென்றான். செல்லமாக ‘பேபி!’ என்றழைத்தான். பேபி வரவில்லை; நிமிர்ந்து பார்த்தது; உறவைப் புரிந்து கொள்ளவில்லை; உறவை அது பாராட்டவில்லை; மதிக்கவில்லை. மிக நெருக்கமாகப் போய் ‘பேபி!’ என்று ஆசையோடு அழைத்தான்! ஊகூம்! ஊகூம்! பேபி தன்னை வளர்த்த தலைவனைப் புரிந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்ல, நிராகரிக்கிறது! வளர்த்தவனுக்குப் பரிவு, பாசம் விடவில்லை! பேபியின் அருகில் போய் பேபியைக் குப்பை படிந்த உடலுடன் அள்ளித் தூக்குகிறான்! துடைக்கிறான்! முத்தமிடுகிறான்! பேபி செய்வதறியாமல் விழிக்கிறது! குப்பை மேட்டுச் சுகம் பறிபோவதில் கவலைதான்! ஆயினும், வளர்த்தவனின் பிடி இறுக்கமான பிடி! ஓட இயலவில்லை! இந்தக் கதைதான் ஆன்மாவின் கதையும்!

இறைவன் எவ்வளவு அற்புதமான வாழ்க்கையைத் தந்திருக்கிறான்! இந்த உலகத்தில் வினைகள் பலவற்றையும் தொழில்கள் பலவற்றையும் செய்து பாருள்ளோர் வாழத் தொண்டு செய்யலாம்! உலகம் உண்ண உண்டு வாழ்ந்தால் தீமையில்லை! நாடெல்லாம் வாழக் கேடொன்றும் இல்லை. ஏன் சண்டை? கலகம்? அழுக்காற்றினால் உயர்ந்தார் உண்டா? கலகம் செய்து காரியம் சாதித்தவர்கள் உண்டா? இல்லை! இல்லை!

இறைவனிடத்தில் பத்திமை செய்க! இறைவன் காந்தம்! நம்மை ஈர்த்து ஈர்த்து ஆட்கொண்டருளத் தக்கவகையில் ஈர்க்கப்படும் ஆற்றலுடைய இரும்பாக வாழ்வோம்! பட்டமரக் கட்டையாக கிடந்து என்ன பயன்? வினைகள் இயற்றுதல், தொழில் செய்தலில் இரும்பு போல உறுதியாக இருப்போம்! துருப்பிடித்து அழியும் இரும்பு போல் ஆன்மாவை ஆணவத்தால் ஆசையால் அழிந்து போகாமல் பாதுகாத்து அன்பு, தொண்டு ஆகியவற்றால் ஆன்மாவை வளர்ப்போம். பாதுகாப்போம். ஆன்மாவை நாளும் தொழில் செய்யும் மனப்போக்கால் உயிர்ப்புள்ள ஆனந்தத்தை ஈர்க்கும் ஆற்றலுடையதாகப் பாதுகாப்போம்.

“வினை, வினை"யென்று பயந்து விடாதீர்கள்! வினை செய்தலே இயற்கை! கடமை! மனக்கோணலின்றிப் பொதுவில் நன்மை செய்யுங்கள்!

வளர்க இவ்வையகம்! வாழ்க இவ்வையகம்!

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன் நான் என்றுன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்!
முனைவனே முறையோ நான் ஆன வாறு
முடிவறியேன் முதல் அந்தம் ஆயி னானே!

(திருச்சதகம்–22)
உயிரின் தவிப்பு

யானை பெரிய விலங்கு. ஆம்! உடலால் பெரிய விலங்கு! அதனால் பெரிய கையால் உண்கிறது! தும்பிக்கை நீண்ட பெரிய கை! ஒரே நேரத்தில் தும்பிக்கையாலும் வாயிலும் உணவு வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக உண்டு ஊன் பெருக்கும் யானை! அந்தோ பரிதாபம்! தன்னை, தன் உடலை அறிந்து கொள்ள இயலாதது யானை! சமய நெறியில் கடவுளைத் தெரிந்து கொள்ளுதல், கடவுளை வழிபடுதல் இரண்டாம் நிலையே! முதலில், மனிதன் தன்னை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதனால்தான் மாணிக்கவாசகர் ஆன்ம ஆய்வில் “நான் ஆர்’ என்று முதலில் தன்னைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகின்றார். “தன்னை யறிதல்” முதல் கடமை! தன்னுடைய குறைகள் அறிந்தால் தானே நிறைகளை நாடிப் பயணம் செய்ய இயலும்? “தம்மையறிந்து தலைவனை உணர்தல்” என்பது மெய்கண்டார் வாக்கு!

மனிதன் யார்? மனிதன் தானா! மிருகத்தில் மனிதன்; மனிதனில் மிருகம்; மனிதனில் மனிதன் என்ற படிமுறைகள் உண்டு! இந்த வரிசையில் மனிதன் யார்? தான் யார் என்று அறியாத நிலையில் வளர்ச்சியில்லை! ஆதலால், தன்னையறிதல் வாழ்க்கையில் முதல் நிலை! யானைக்கு எப்படி தன்னை தன் உடலை அறிய முடியாத நிலையோ அது போலவே மனிதனுக்கும் தன்னை அறிய முடியாத நிலை! யானை, இரு கையாலும் உண்டு ஊனைப் பெருக்கி வளர்த்துக் கொள்கிறது! இன்றைய மனிதனின் நிலை என்ன? எங்குப் பார்த்தாலும் உணவுச் சாலைகள்! இரை தேடி அலைகிறான்! திருக்கோயில்களையும் உணவு விற்கும் சாலைகளாக மாற்றிவிட்டான்! உண்டி நாலு விதத்தால் அறுசுவையில் தேர்ந்து உண்டு ஊனினைப் பெருக்கி வளர்கிறான்! இதன் விளைவே நீரிழிவு நோய் உடற் கனம்! இதயப் பாதிப்பு! மூட்டு வலிகள்! ஊனின் எடை குறையவேண்டும்! ஊனாகிய உடல் ஆன்மாவுக்குப் பணி செய்யவேண்டம்! ஊன் உருகுதல் வேண்டும்!

யானை, கட்டுத் தறியில் தன் தலையில் தானே புழுதியை அள்ளிப் போட்டுக் கொள்ளும்! அதுபோல ஆன்மா தன்னுடைய துன்பத்தைத் தானே வரவழைத்துக் கொள்கிறது. இன்பமே உலகத்து இயற்கை! துன்பமெலாம் மனிதனின் படைப்பே! அறியாமையின் காரணமாக மனிதன் தனக்குத் தானே துன்பம் செய்து கொள்கிறான்! அறியாமை என்றால் என்ன? ஒன்றும் தெரியாமை அறியாமை அல்ல. ஒன்றைப் பிறிதொன்றாக முறைபிறழ உணர்தலே அறியாமை! “நன்றுடையான், தீயதிலான்”-இறைவன் என்பது திருஞானசம்பந்தர் வாக்கு! “நன்றுடையான்” என்று சொன்னால் போதுமே! ஏன் எதிர்மறையாலும் “தீயதில்ான்” என்று சொல்ல வேண்டும்? எது நன்மை! எங்கும் எப்பொழுதும் எல்லாருக்கும் நன்மையாக எது இருக்கிறதோ அதுவே நன்மை! ஒருபொழுது நன்மையாகவும் ஒருபொழுது தீமையாகவும் இருப்பது நன்மையாகாது. இன்று மனிதர் நன்மை யென்று நினைத்துக் கொண்டிருப்பது தீமை கலந்த நன்மையையேயாம்! ஆதலால் பழக்க வாசனையால் தீமை கலந்த நன்மையை-தீமையாக உள்ளதை நன்மையாக மனிதர் அறியாமையால் கருதுகின்றனர். இறைவன் முற்றாக நன்மை. ஆதலால், மனிதர்கள் யானை தன் தலையில் மண்ணை யள்ளிப் போட்டுக் கொள்ளுதல் போலத் தங்களுக்குத் தாங்களே தீமை செய்து கொள்கின்றனர். ஆதலால், மனிதருக்கு வரும் துன்பம், பிறர் செய்ததன்று, தீதும் நன்றும் பிறர்தர வாரா! கடவுள் தந்ததுமன்று! எல்லாம் அவரவர் செய்து கொள்வதே! யானை தலையில் புழுதி அள்ளிப் போட்டுக் கொண்ட கதைதான்!

அடுத்து யானை தன்னைக் கட்ட, சங்கிலியைத் தானே எடுத்துப் பாகனிடம் கொடுக்கும். அதுபோல மனிதன் தன்னைத்தானே வினைக் கட்டுகளுக்கு உட்படுத்திக் கொள்கிறான். ஆன்மாவின் முதற் பிறப்பு கருமேனி கழிக்க வந்த பிறப்பே! அறியாமை அகல இறைவன் அருளிச் செய்த பிறப்பே! அற்புதமான பிறப்பு. அறிவுக் கருவிகள் செயற் கருவிகள் இணைந்த மகத்தான தோற்றம் “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்!” என்பது திருமுறை. ஆயினும் என்? உயிர்கள் தற்சார்பு, தன்முனைப்பு காரணமாக ‘நான்’, ‘எனது’ என்ற செருக்கின் வழியாக இருவினை பெருக்கி அல்லற்பட்டு உழல்கின்றன. வினைகட்டு-வினைத் துன்பம் உயிர்களின் ஈட்டம்! அவரவர் வினைவழி அவரவர் வந்தனர். எவர் எவர்க்கு உதவினர்? எவர் எவர்க்கு உதவிலர்? என்றெல்லாம் சிந்திப்பது தவறு. உயிர்கள் தமக்குத் தாமே யானையைப் போலக் கட்டுக்களைப் போட்டுக் கொள்கின்றன.

இவையெல்லாம் போகட்டும்! யானைக்குத் தன் மேல் யானைப் பாகன் இருந்து செலுத்துகிறான் என்பது தெரியுமா? உணருமா? தெரியாது! உணராது! அதுபோலத்தான் உயிர்களுக்கு! உயிர்களின் உயிருக்குள் உயிரதாக இருந்து விளங்கி உயிர்களை இயக்கிடும் கடவுளைப் பலர் அறியார்; உணரார். கடவுள் உயிர்க்குக் கருவாக, உயிராக விளங்கியருள் செய்யும் பான்மையை அறியாதன! உணராதன வேடிக்கை என்னவென்றால் யானை தன் முதுகுப் புறத்தே இருந்து செலுத்தும் பாகனை அறிவதில்லை. ஆன்மாக்களோ உயிர் நிலையில் உயிர்க்கு உயிராக-கருவாக இருந்தருளும் கடவுளைத் தெரிந்து கொள்ள இயலவில்லை; தெரிந்து கொள்ளும் முயற்சி இல்லை. இதனால், விளைந்த பயன் என்ன? துன்பமே ஒழிய வேறில்லை. உயிர்க்கு உயிராக உள்ள இறைவனை நினைந்து, உணர்ந்து, அந்தப் பேரறிவு ஒளிக்காட்சியின் திசையில் வாழ்ந்தால் துன்பம் வராது. அங்ஙனமின்றி ஆணவத்தோடு தொடக்குண்டு ஆணவத்தின் வழி இயங்குவதால் கண்டதெல்லாம் துன்பமேயாம்! இந்த உலக இன்பங்களில் துன்பம் தொடக்கு இல்லாத-துன்பக் கலப்பு இல்லாத இன்பம் எது? ஒன்றும் இல்லை! அதிலும் இறை ஒளியுடன் தொடர்பில்லாதன எல்லாம் துன்பமேயாம்!

கடவுளைக் காணப் பலரும் முயற்சி செய்கின்றனர். புற்றாக, மரமாகத் தவம் செய்கின்றனர். ஆனாலும் கடவுட் காட்சி கிடைப்பதில்லை; திருவருட் சார்பில்லாத-திருவருள் துணையல்லாத ஆன்ம அறிவால் கடவுளைக் காண முடியாது. கடவுளைக் கண்ணால் சிலர் அல்லது பலர் காணாமையால் கடவுள் இல்லை என்றே கூறுகின்றனர். மானுடம் அறிவுப் படைப்பு! அறிவின் அனுபவத்தின் எல்லையில் கடவுட்காட்சி விலங்குகள்-கால்நடைகள்! அவை சிந்திக்கும் இயல்பின அல்ல! மனிதன் காலால் நடக்கின்றான். அதனால் மனிதனைக் ‘கால்நடை’ என்று கூற இயலுமா? விலங்குகள் கால்களால் மட்டுமே நடக்கும் இயல்பின. மனிதன் கால்களால் நடப்பதற்கு முன் சிந்தனையால் நடந்து, கருத்தால் நடந்து பின்தான் கால்களால் நடப்பான்! ஆதலால், உயிர்தோறும் உள்ளக் கருவாய், ஒளியாய் விளங்கும் கடவுளை அறிஞராயோர், ஞானியர் சிந்திப்பர்; உணர்வர்; காண்பர்! இங்ஙனம் கடவுளைக் காணவில்லையே என்று மாணிக்கவாசகர் கவலைப்படுகிறார். கடவுளைக் காணாததால் அந்தப் பேரொளி காட்டும் திசையில் செல்லாததால்; கண்டது துன்டமே! சைத்தானுக்குப் பணி செய்தால் துன்பந்தவிர வேறு என்ன பயன்? கடவுள் ஒளி வழி எது செயினும் இன்பமாக அமையும். ஆணவத்தின் திசைவழி நன்றே செயினும் துன்பமேயாம். ஏன்? ஆணவத்தின் வழிகாட்டுதலில் உயிர்கள் நன்று நினைத்தல் இயலாது; நன்று செய்ய இயலாது. ஒரோவழி செய்யப்படுவன நன்மை போலத் தோன்றும். ஆயினும் நன்மையல்ல. உலை நீரில் கிடக்கும் ஆமைக்கு இளஞ்சூடு தரும் இதமான இன்பம் யாது செய்யும்? நன்மை போலக் காட்டித் துன்பம் செய்யும்!

மாணிக்கவாசகர் அனுபவம் வேறு! மற்றவர் அனுபவம் வேறு! இறைவனைக் காண-அனுபவிக்கப் பலர் முயற்சி செய்தனர்; முயன்று கொண்டுள்ளனர். ஆனால், கண்டவர் சிலரே! ஆன்மாவின் அறிவு, சிற்றறிவு! மறதிக்குள்ளாகும் அறிவு, பாசபந்தங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் இரையாகும் அறிவு. இந்த அறிவால் தூய்மையே அறிவே வடிவாக உள்ள கடவுளை எப்படிக் காணமுடியும்? நான்முகனும் திருமாலும் தேடிக் காணமுடியாத பொருள், கடவுள் என்ற வரலாறு கற்றுத் தரும் படிப்பினை என்ன? கடவுள் கருணை பாலித்தாலன்றிக் கடவுளைக் காண இயலாது. மாணிக்கவாசகருக்கு, இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி உபதேசித்தருளினான்; காட்சி தந்தான். ‘வருக’ - என்று அழைத்தான். ஆனால், அழைத்துக்கொண்டு போகாமல் இறைவன் மறைந்துவிட்டான்! ஏன்? மாணிக்க வாசகரின் அன்பு பெருகி வளர்தல் வேண்டும். அந்த அன்பைத் துய்க்க வேண்டும் என்ற திருவுள்ளம்தான்! கடவுள் மாணிக்கவாசகருக்கு மறைந்தான். புணர்ச்சி, அன்பை வளர்க்காது! பிரிவுதான் அன்பை வளர்க்கும். மாணிக்கவாசகர் கடவுளைக் கண்டார்; அனுபவித்தார். கடவுள் பிரிந்து போனார். மாணிக்கவாசகர் கடவுளிடம் கொண்ட பிரிவு, திருவாசகத்தைத் தந்தது.

கடவுள் ஒருவனே! வணங்குவனவெல்லாம் கடவுள் அல்ல! கடவுள் பல இல்லை. கடவுள் பல என்ற கொள்கை ஏற்புடையதுமன்று. வானிலுள்ள தேவர்க்கு எல்லாம் கடவுள் ஒருவனே! அமரர்களுக்கு எல்லாம் ஒருவனாக, தேவர்கோ அறியாத தேவதேவனாக விளங்கும் கடவுள் வலியவந்து, ‘வா’வென்று அழைத்து வான்கருணை பொழிந்த பிறகும் உடன் போகாது பின்நின்று போனதை நினைந்து நினைந்து வருந்துகின்றார்! ஒன்றை அனுபவிக்காமலே இருந்து விடலாம்! அனுபவித்துப் பின் இழத்தல் கொடிய துன்பத்தைத் தரும். மாணிக்கவாசகர் இறைவனைக் கண்டார். அந்தம் ஒன்றில்லா ஆனந்தத்தைப் பெற்றார்; அனுபவித்தார். இடையில் பிரிவு ஏற்பட்டுவிட்டது. ஆனந்த அனுபவத்தில் இடையீடு பட்டுவிட்டது. இதனை மாணிக்கவாசகர் ஆற்றிக் கொள்ள இயலாமல் தவிக்கிறார். கடவுளின் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலில்லாம்ல் அல்லற்படுகிறார். இந்த ஆற்றாமையால் தற்கொலை எண்ணம்கூட மாணிக்கவாசகருக்கு வருகிறது! “திண்வரை உருள்கிலேன்; தீயில் புக்கிலேன்!” “சாகேன்” என்றெல்லாம் அலமருகிறார்; புலம்புகிறார். மீண்டும் உண்ணவே ஆசைப்படுகிறார். பசியும் உண்ணுதலும் சுழன்று வரும் தீய வட்டமாயிற்றே! எத்தனை தடவை உண்டாலும் பசி என்று நீங்கும்! ஒருபோதும் நீங்காது! ஞானம்பெற்றால் ஒழிய உடற் பசி தணிய வழியில்லை! பிறப்பு தொடங்கிய நாள் தொட்டு உண்ட உணவுக்கு அளவில்லை! கடவுளே! இறைவா! அருள்செய்க! வருக என்றருள் செய்க! வெறுமனே செத்துப்போகும்படி விட்டு விடாதே! உன்னால் ஆட்கொள்ளப்பட்ட நான் வெறுமனே செத்துப்போனால் சிரிப்பார்கள்! இந்த அவலம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! உன் பணி செய்ய வருக என்றருள் செய்க! திருப்பெருந்துறை சிவனே அருள் செய்க! என்று உருகுகின்றார் மாணிக்கவாசகர்.

இருகை யானையை ஒத்திருந்(து) என்உளக்
கருணை யான் கண்டி லேன்கண்ட(து) என்னமே
‘வருக’ என்று பணித்தனை வானுளோர்க்(கு)
ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே!

(திருச்சதகம்–41)
ஊர் நாயிற் கடையானேன்!

சுதந்திரம் என்பது அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல; தற்சார்பு நிலையில் வாழ்வதுமாகும்! இந்தச் சுதந்திரம் ஆன்மாக்களுக்கு, திருவருளைச் சார்ந்த வழிதான் கிடைக்கும். ஆன்மாக்கள் இறைவனுக்கு அடிமையாய் வாழ்வதில் சுதந்திரத்தை இழப்பதில்லை. ஏன்? இறைவன் குறியொன்றும் இல்லாதவன். ஆதலால், ஆன்மாக்களை அடிமைப்படுத்தமாட்டான். சீவன் மூத்த நிலையில் ஆன்மாக்களின் அடிமைப் பண்பு தன் விருப்பமேயாம்.

சுதந்திரம் இல்லாதன எல்லாம் சுதந்திரமான ஒன்றிற்கு உடையமையாக இருத்தல் இயல்பு. ஆன்மாக்களுக்குச் சுதந்திரம் இல்லை. ஆன்மாக்கள் ஆணவத்துடன் கூடி, ஆணவத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கும் பொழுது ஆணவத்தின் வழியிலேயே வாழும். அருட்சத்தியின் அருளால் தெய்வம் என்னும் சித்தம் உண்டாகி மடைமாற்றம் ஏற்பட்டு விருப்பு-வெறுப்புக்களிலிருந்து ஆன்மா விடுதலை பெறும். திருவருளைக் கண்ணாகக் கொண்டு வாழும் இந்த நிலையில் ஆன்மா திருவருள் ஆட்டுவிக்கும் வழியிலேயே வாழும்; ஆடும்! இந்த உலகம் முழுதும், உயிர்கள் அனைத்தும் கடவுளுக்கே உரிமை உடையன. ஆதலால் இறைவனுக்கு ஆன்மாக்கள் உடைமைப் பொருள்கள்.

உடைமை என்பது ஒரு மந்திரச்சொல். மனிதர்கள் தன் உடைமைகளைக் காப்பதற்குப் போராடுகிறார்கள். ஆனால், பொது உடைமையைப் பேண யாரும் போராடுவதில்லை. ஏன்? பொது உடைமையை அழிக்காமல் இருந்தாலே பாராட்டலாம். பழங்காலத்தில் உடைமையைப் பொது நலத்திற்காகத் தியாகம் செய்தனர். வீட்டையே நாட்டிற்கு அர்ப்பணித்தார்கள். இப்பொழுது நாட்டையே வீட்டிற்குக் கொண்டு போகிறார்கள். ஆதலால், உடைமை என்ற உரிமையில் இறைவன் ஆன்மாவை-மாணிக்கவாசகரைக் காக்கக் கடமைப்பட்டுள்ளான். “அப்படிக் காக்கத் தவறினால் உன்னை ஊர்ப் பிச்சன் என்று கூறி உன்னைச் சிரிப்பிப்பன்; பழி தூற்றுவன்” என்று இறைவனை எச்சரிக்கிறார் மாணிக்கவாசகர். உடையவன் உடைமையைக் கவனிக்க வேண்டாமா? பேண வேண்டாமா? “இறைவன் உடைமையாளன்; ஆன்மா உடைமை” என்பது திருவாசகத்தின் திரண்ட கருத்து.

வீட்டுப் பிராணிகளில் நாய் ஒன்று. நாய் வளர்ப்பது இதயத்திற்கு இதத்தைத் தரும். நாய் அளவற்ற பரிவைக் காட்டும். வளர்ப்பவனைக் காணும் பொழுதெல்லாம் குழைந்து வாலாட்டும். சில உயரிய நாய்கள் வளர்ப்பவனின் சாவிலும் ஒன்றாகச் செல்லும்! இந்த இயல்புகள் நாய்க்கு இயற்கையாய் அமைந்தவையல்ல; வளர்ப்பில் வருபவை! நாய் வளர்ப்பில் கவனம் தேவை! ஒருவர் கைப்பட வளர்க்க வேண்டும். பொதுவாக நாய்க்கு நன்றியுண்டு என்று கற்பிக்கப்படுகிறது! நாய் நன்றியுடையதாயிருத்தல் பொதுப் பண்பு அல்ல; சிறப்புப் பண்பேயோம். வளர்ப்பவனைப் பொறுத்தே இது அமைகிறது. நாய்களில் தாய் நாயும் குட்டி நாயும் குரைத்துச் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்தாலும் தெரியுமே! ஏன்? சில நாள்களுக்கு வீட்டுப் பணியாள் நாய்க்குத் தீனி கொடுத்து அதை வயப்படுத்திக் கொண்டு கொலை, கொள்ளைகள் செய்துவிடுகின்றானே! அப்போது இந்த நாய் காவல் தொழிலை இழந்து விடுகிறது; குரைப்பதும்கூட இல்லை. இந்தக் குற்றங் குறைகள் வளர்ப்பு நாய்க்கேயாம்! ஆனால், திருவாசகத்தில் நாய் நன்றியில் உயர்ந்தது என்றே பேசப்பெறுகிறது. ‘நாய்’ முப்பது இடங்களுக்கு மேலாகப் பேசப்படுகிறது. இதில் பொதுவாக நாயின் சிறப்புக் கூறப்படுகிறது. மனிதன் நாயினும் கீழானவனாக இருக்கிறான். ஆம்! நாய்! உணவளித்து உண்டு கொண்டு இருக்கும்பொழுது உணவளிப்பவனுக்கு எந்தத் தீங்கும் நினைப்பதில்லை; செய்வதில்லை! உணவளிப்பவன் உணவளிக்காமல் வேறு ஒருவர் உணவளித்தால் அவனுக்கும் நன்றிப் பெருக்குடையதாக இருக்கிறது. அவ்வளவுதான்! ஆனால், மனிதனோ உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிறான்; உண்டு கொண்டு இருக்கும் போதேகூட தீமை நினைக்கிறான்! நாய், தான் பெற்ற பேற்றை எண்ணிப் பார்ப்பதில்லை. நாய்,-வளர்ப்பு நாய் வளர்ப்பவனின் அருமை உணர்வதில்லை. “நாய் பெற்ற தெங்கம்பழ”த்திற்கு “ஏது பயன்?” அதுபோல் மனிதரில் பலர் இறைவனின் அருமையை உணர்வதில்லை. இறைவனின் அருட்கொடையால் எத்தனை எத்தனை கோடி இன்பங்கள் இந்த உலகில் உள்ளன? இவற்றை உணர்வார் யார்? இவற்றினைத் தந்தருளிய கடவுளை நினைப்பார் யார்?

நாயில் ஊர் நாய் ஒருவகை! அதாவது வளர்ப்பார் இல்லாத நாய்! அது சுதந்திரமாய்த் திரியும். காலையில் அம்மம்ம, எவ்வளவு சுறுசுறுப்பு! எழுந்து ஊர் சுற்றும்! தன்னை ஒத்த ஊர் நாய்கள் நிற்கும் இடங்களில் நிற்கும்! விளையாடும்! சண்டைபோடும்! குடும்பம் நடத்தும்! எச்சில் இலைகளைத் தேடி ஓடும்! ஆங்கும் ஒரு யுத்தம்! படுகளம்! கிடைக்கும் எலும்பைக் கடிக்கும். செங்குருதி சொட்டச் சொட்ட ஒதுங்கிப் போய் இருக்கும்! மீண்டும் எழுந்து எலும்பினைக் கடிக்கும்! உடம்பு முழுதும் வங்கு பிடித்து இழுக்கும்! போதாக் குறைக்குச் சொறியும் உண்டு! இவையே ஊர் நாயின் இலக்கணம்! இந்த ஊர் நாயை உவமிக்கின்றார் மாணிக்கவாசகர்! ஆம்! கூர்ந்து நோக்கின் பல மனிதர்கள் ஊர் நாய்கள்தாம்! இல்லை, இல்லை! ஊர் நாயினும் கடையர்கள். கடவுளின் ஆணை வழி திரோதான சக்தியால் வளர்க்கப்பெறாத மனிதன்-வளராத மனிதன் ஊர் நாய்! இல்லை, இல்லை! ஊர் நாயைவிட மோசமானவன்! ஆம்! இவனும் எழுந்திருக்கிறான்; ஊர் சுற்றுகிறான். மூலைக்கு மூலை நின்று புறணி பேசுகின்றான்; புறம் பேசுகிறான்; வம்பு செய்கிறான்; வம்பு வளர்க்கின்றான்! வம்பு வழக்குகளைத் தூண்டி விடுகிறான்; கிடைத்த இடத்தில் தின்கிறான்; இரந்து திரிகின்றான். இரந்தும் தின்கிறான், இழிதொழில்கள் செய்தும் தின்கின்றான். பல இடங்களில் குடும்பம் நடத்துகிறான். இவனுடைய உடல், நோய்களின் கொள்கலன். இப்படியும் மனிதர்கள் இன்று வாழவில்லையா? இவர்களைச் சொன்னால் உடம்பெல்லாம் பற்றி எரியும் என்பதால் மாணிக்கவாசகர் தம்மீது பழி சுமத்திக் கொள்கிறார்.

ஊர் நாயிற் கடையனானேன் என்கிறார். இந்த ஊர் நாய்கள் தரங்கெட்டுப் போனதோடு அல்லாமல் வளர்ப்பு நாய்களையும் கவர்ச்சித்து கெடுக்கும்! வளர்ச்சியில் முதிர்ச்சி பெறாத வளர்ப்பு நாய்கள் பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகளுக்கு அஞ்சி வளர்ப்பிலிருந்து வழுவி ஊர் நாய்க் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து விடுவது உண்டு. ஐயோ பாவம்! விதிவழியே நடத்தல் பாதுகாப்பு! விதி முறைகளின்படி வாழ்தல், பழக்கப்பட்டவர்களுக்கு எளிது! பாதுகாப்பும்கூட! விதிமுறைகளே தவறுகளிலிருந்தும் பிழைகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கும். அயர்ந்தறியாது செய்யும் தவறுகளுக்குக் கண்டித்தலும் தண்டனைகளும் பெறுவது மருத்துவமேயாகும். “புளியம் வளாரினால் மோதுவிப்பாய் பின்னை உசுப்பாய்!” என்று அப்பரடிகள் கூறுவார். தெரிந்தும் தெரியாமலும் அயர்ந்தும் சோர்ந்தும் செய்யும் மனிதரின் பிழைகளைப் பொறுத்தாற்றாது தேவசிகாமணி குருதேவர் சுடுவது அவரையல்ல; தவறு செய்பவர்களின் பாசத்தினையே குற்றங்களையே என்று கூறுவர். ஆதலால் வளர்ப்பு நாய் வளர்ந்து வாழ்ந்து பேறடைய முயல்வதே சிறப்பு! ஊர் நாய்க் கூட்டத்தில் போய்ச் சேரக்கூடாது.

வளர்ப்பின் இலக்கணம் என்ன? அடையாளம் என்ன? வளர்ப்பில் கல்வி இருக்கும்! கலைஞானம் இருக்கும்! கல்வியும் கலைஞானமும் வாழ்க்கையை வளர்ப்பனவாம்! வாழ் நிலையில் உயிர் நிலையாகிய அன்பு, கலைஞானத்தின் பயனேயாம். அதனால்தான் சிவகோசரியாருக்குக் கிட்டாத “கலைமலிந்த சீர் நம்பி” என்ற சிறப்பு, கண்ணப்பருக்குக் கிடைத்தது. மனம் இயல்பாக நல்லதும் அல்ல கெட்டதுவும் அல்ல. நல்லது செய்வதும் அல்ல. ஓயாது ஒழியாது சலித்துக்கொண்டே இருக்கும். அதாவது இயக்க நிலையில் இருக்கும். இந்த இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு எவ்வழியில் இயக்கினாலும்-அவ்வழியில் ஆன்மா இயங்கும். ஆன்மாவின் இயல்பு சார்ந்த தன் வண்ணம் ஆதல். ஆன்மாவைச் சார்பு இயக்கினால் ஊர் நாயைப் போல் இயங்கும். திருவருட் சார்பு இயக்கினால் வளர்ப்பு நாய்போல் இயங்கும். உண்மையில் ஆன்மாவை இயக்குவது சார்புநிலை; சுற்றுப்புறச் சூழ்நிலை. அதனால்தானே “மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்றார் ஒளவை மூதாட்டி. மனத்தைப் பக்குவப்படுத்துவது கல்வியும் கலை ஞானமுமாம்! ஈசன் கூட கல்லார் நெஞ்சில் நில்லான்! கல்லா மனத்தராக இருப்பவர்களே, ஊர் நாய்போல வாழ்வார்கள்.

கல்வியும் கலைஞானமும் இல்லாதாருக்கு உடம்பின் அருமை தெரியாது. அதனால் உடம்பினைப் பேணவும் மாட்டார்கள்! உடம்பினை வளர்க்கவும் மாட்டார்கள்! அவர்களுடைய உடம்பு புழுக்கூடாகத்தான் விளங்கும். முடைநாற்றம் வீசும் புழுக்கூடாகத்தான் விளங்கும். ஐயகோ, இந்த உடல் அற்புதமான உடல்! ஞான விளக்கெரிய வேண்டிய உடல்! இறைவன் எழுந்தருளும் விமானமாக விளங்கவேண்டியது இந்தப் பொன்னுடல்! இறைவன் விரும்பி எழுந்தருளும் திருக்கோயில் இந்த உடம்புதான்! ஆயினும் என்? அருமைகள், அறிவோருக்குத் தானே! உடம்பு, இறைவன் எழுந்தருளும் திருக்கோயிலானால் விடுதலை உண்டு! இந்த நிலையில் உடல், உயிரைக் காக்கும்! ஆனால் உடம்பை இகழ்ந்து புழுக் கூடாக்கினால் உடம்பு காவல் தகுதியை இழக்கும், உடம்பைக் காத்துக் கிடக்கும் பணி வேறு வரும்.

கல்வியும் கலைஞானமும் தேடாது இறைவன் திருவருட் சிந்தனை வழி வளர்ப்பாக வாழக் கற்றுக் கொள்ளாது போனால் மானிட வாழ்வு வறிதே பாழாகும். திருவுடல், ஊனுடலாக, புழுக்குரம்பையாக மாறி, மனிதன் சுமந்து காத்து நிற்க வேண்டிய பொருளாகும்! இதனால் பிறவியும் நீங்காது! செத்துப் பிறக்கும் தொழிலுக்கு ஆட்பட்டு இங்கேயே ஊனுடலைக் காத்துக்கிடக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படும்! ஊர் நாய் வாழ்க்கையை வெறுத்திடுக! வளர்ப்பு நாய் வாழ்க்கையை ஏற்றிடுக!

வளர்ப்பிலும் பின்பற்றுதலிலும் தொடர்ச்சி தேவை. இடையீடு வந்ததோ, தொலைந்தது! ஆணவம் விழிப்புடன் இருக்கும்! திருவருள் வழிச் செல்வதில் அயர்வு- சோர்வு தலைப்பட்டால் மீண்டும் ஆணவச் சார்பு பற்றிக் கொள்ளும்! உயிர்களுக்கு ஆணவச் சார்பு- அநாதிச் சார்பு, இயற்கையாக அமைந்தது. அது தேடாமலே வந்தமையும். உயிர்களுக்குத் திருவருட் சார்பு பிறவிச் சார்பேயாம். இது வலியவந்து உயிர்களைப் பற்றாது. மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் புனல் போன்றது ஆணவச் சார்பு. பள்ளத்திலிருந்து மேட்டினை நோக்கித் தண்ணீரை ஏற்றுவது போன்றது திருவருட் சார்பு. ஆதலால், ஞானப்பயிற்சியில் - திருவருட் சார்பில் கவனம் தேவை. இதனைத்தான் ஞானிகள் “விழித்திரு” என்றனர். ஆன்மாவின் விழிப்புணர்வே ஆணவச் சார்பை மட்டுப்படுத்தும்; திருவருட் சார்பைக் கூட்டுவிக்கும். திருவருட் சார்புடையவர்கள் எத்தொழில் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் இறைவன் திருவருளையே பற்றுக் கோடாகக் கொள்வார்கள். கை வீசி நடக்கும் மோர்க் காரிக்குக் கவனம் முழுதும் மோர்ப்பானையில் இருப்பதைப் போல திருவருட் சார்புடையவர்கள் எந்தப் பணியை மேற்கொண்டாலும்-செய்தாலும் திருவருள் நினைப்பாக இருப்பார்கள். நின்றும் இருந்தும் கிடந்தும் தொழுவார்கள், தொழும்பாய்த் தொண்டு செய்வார்கள். இந்த நிலையை எண்ணி, அழும் கல்வியைத் தேடுக! கசிந்துருகி அழக் கற்றுக்கொள்க! இந்த நிலையில் இறைவனுக்கு உடைமையாகலாம். இறைவனுக்கு உடைமையாம் நிலை எய்தி விட்டால் அவன் காப்பான்! பெருங்காதல் மூளும்! ஊனும் உயிரும் உருக வாழலாம்! இன்ப அன்பினை எய்தலாம்! யாதுமோர் குறைவில்லை!

உடையானே நின்றனை உள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையா ருடையாய் நின்பாதம்
சேரக் கண்டு இங்கு ஊர் நாயின்
கடையா னேன்; நெஞ் சுருகாதேன்;
கல்லா மனத்தேன்; கசியாதேன்;
முடையார் புழுக்கூடு இது காத்திங்கு
இருப்ப தாக முடித்தாயே!

(திருச்சதகம்–60)

மழலையின் கையிலே
பொற்கிண்ணம்!

மாணிக்கவாசகர் துறைதோறும் வளர்ந்தவர். திருவாசகம் ஓர் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆன்மா அதன் பயணத்தை இறைவனின் கருணையினால் கருவூரில் தொடங்குகிறது. திருவூரில் பயணம் நிறைவுறும். பயணம் செவ்வியதாக அமைந்தால் எளிதில் திருவூரை ஆன்மா அடையும். பல ஆன்மாக்கள் தத்தம் விருப்பம் மேவிய தடத்தின் வழியே மட்டும் பயணம் செய்வதன் விளைவாகப் பயணம் நீட்டிக்கவும் செய்யலாம்.

மானிடப் பிறவியின் தகுதிக்கு ஏற்றவாறு வாழ்ந்திடா விடில் என்ன நிகழும்? மீண்டும் புழுவின் பிறப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்று அப்பரடிகள் கூறுகின்றார்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
நின்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரம்தர
வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி இருந்தருள்
செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
மேல்வைத்த தீவண்ணனே!

என்னும் அப்பரடிகள் திருப்பாடலை ஓர்க. மேலும் மானிடப் பிறவிக்கு மட்டுந்தான் நினைக்கும் புலன் உண்டு; திறன் உண்டு. அப்பரடிகள்.

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்
இம்மூவுலகுக்(கு)
அன்னையும் அந்தனு மாவாய் அழல்வனா
நீயலையோ

உன்னை நினைந்தே கழியும்என் ஆவி
கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாய் என் பிரான் உன்னை
வேண்டியதே!

என்று இரந்து வேண்டுகிறார். அதாவது நினைக்கும் தகுதியுடைய மானிடப் பிறப்பில் உள்ளவரை இறைவா, உன்னை நினைப்பேன்! ஒருகால் மானிடப் பிறவியை இழந்து நினைத்தற்கு வாய்ப்பில்லாத புழுப் பிறப்பை அடையின் இறைவா, நீ என்னை மறக்கக்கூடாது என்று வேண்டுவதறிக. ஆதலால் பிறப்பை அறிந்து ஆன்மா தகுதிப்பாடுறுதல் வரை சுற்றும் என்பதறிக.

இறைவனின் கருணையே உயிர்களின் பயணத் தொடக்கத்திற்குக் காரணம். பயணங்கள் நிகழ்வதற்கும் மாறுவதற்கும் முற்றுப்பெறுவதற்கும் ஆன்மாவின் வாழ்நிலையே காரணம். ஒரு ஆன்மா மானுட நிலையை எய்துதலே கூடிப் பல பிறவிகளுக்குப் பிறகுதான்! பலப்பல இடர்ப்பாடுகளுக்கும் பிறகுதான்! மனிதன் மிருகமும் அல்லன்; தெய்வமும் அல்லன், மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி, மானுடத் தகுதியைப் பெற்று மெய்மை நிலையையும் தெய்வத் தன்மையையும் அடைதலே ஆன்மாவின் பயணக் குறிக்கோள்; பயன்! மாணிக்கவாசகரிடம் ஆன்ம வளர்ச்சிக்குரிய தகுதியின்மைகளுக்குக் கழிவிரக்கம் கொள்ளல், ஆராக் காதலுடன் உண்மையை நாடுதல், இறைவனைத் தேடுதல், முதலிய தகுதிகள் அமைந்திருக்கின்றன. தகுதியில்லாதார் தகுதி நோக்கி-வளர்தலே வாழ்வு.

இறைவழிபாட்டின் நோக்கமே தகுதிப்பாடுறுதல் என்பதுதான். வட்டம் வரைய வேண்டுமாயின் காம்பஸ் தேவை. காம்பஸில் நீண்ட முனையை ஊன்றி, சிறிய முனையில் எழுதுகோலைப் பொருத்தி வட்டமிடுகிறோம். இப்படி வரையப்பெறும் வட்டம் கோணல் இல்லாமல் அமையும். அதுபோல ஆன்மா தன் இதயத்தை - சிந்தனையைத் திருவருளிடத்தில் நிறுத்தித் தன் செயலைச் செய்யுமாயின் குறையினின்றும் விலகி நிறைவு பெறும்; அறியாமையிலிருந்து விலகி அறிவு பெறும்; வாழ்க்கை வடிவம் பெறும்; நிறைநலம் பெறும்; இன்ப அன்பினை எய்தும். இதற்கு மாணிக்கவாசகர் வரலாறு சான்று.

மாணிக்கவாசகர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தவ வாழ்க்கை அல்ல. மாணிக்கவாசகருக்கு வாய்த்தது அரசியல் வாழ்க்கை; அமைச்சியல் வாழ்க்கை. அரசியல்-அமைச்சியல் வாழ்க்கையில் தவம் மேவுதல் இயற்கையன்று; மரபும் அன்று. அரசியல்-அமைச்சியல் வாழ்க்கையில் வினைகளும் வினைகளின் பயனாகிய அதிகாரங்களும் அமையும். ஒரோவழி பத்திமை பொருந்தி அமைதலும் கூடும். இது விதிவிலக்கு. ஆயினும் மாணிக்கவாசகர் அமைச்சியல் வாழ்க்கையையே தவ வாழ்க்கையாக நடத்திய அருமை அறிதலுக்குரியது. அதனாலேயே மாணிக்கவாசகர் பாண்டியனின் ஆணைவழி குதிரை வாங்க நாட்டமில்லாமல் திருக்கோயில் கட்டினார். மாணிக்கவாசகர் செய்தது தவறா? உலகியல் முறைப்படி தவறு; அறநெறி விதிகளின்படி தவறன்று. அரசன் அறநெறியறிந்து உணர்வான் என்று மாணிக்கவாசகர் நம்பினார். தகுதி இல்லாதாரை - நெறிமுறை தவறுகிறவர்களைத் திருத்தும் பாங்குகள் பலப்பல. திருத்தங்காணும் முயற்சி, நெறிமுறை தவறுகிறவர்களின் தகுதிப் பாட்டிற்கேற்ப அமையும். கயவர் ஒறுத்துத் திருத்தப்படுவர். சான்றோர் சொல்லத் திருந்துவர். மிக உயர்ந்தோர் குறிப்பாக, அரசியலில் ஏவினது ஒழிந்து பிறிதொன்று செய்தலாலே ஏவினது தவறு என்று உணர்ந்து திருந்துவர் என்பது மரபுவழி வந்த வழிமுறை. மாணிக்கவாசகர் அரசன் ஏவியவழி, குதிரை வாங்காது திருக்கோயில் கட்டியமையால் குதிரை வாங்குதல் தவறு, திருக்கோயில் கட்டியது நன்று என்று உணர்வான் என்று நம்பினார். ஆனால், பாண்டியன் தவமின்மையின் காரணமாக அங்ஙனம் உணரவில்லை. நடைமுறை வேறுவிதமாக அமைந்துவிட்டது:

அமைச்சியல் வாழ்க்கையில் இருந்த மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைக்குக் குதிரை வாங்கப் போன நாள் முதல் அவர்தம் வாழ்க்கையில் அற்புதமான மாற்றம் ஏற்பட்டது; தவமே மேலிட்டது. ஊராரை மறந்தார்; உற்றாரை மறந்தார்; இறைப்பணியில் நின்றார். திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரைத் தேடி வந்து ஆட்கொண்டான்! ஆம்! இதுவே சிவபெருமான் வழக்கம். சிவபெருமானுக்கு எப்போதும் அடியார்களுக்குப் பஞ்சம்! அதனால் தேடிவந்து தகுதியானவர்களை அழைத்துக் கொள்வான். மாணிக்கவாசகரை, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஞானாசிரியனாக வந்தருளி ஐந்தெழுத்தருளி ஆட்கொண்டருளினன். இதனை,

“நானேயோ தவம் செய்தேன்;
சிவாயநம எனப் பெற்றேன்”

என்று வியந்து கூறுகின்றார். மாணிக்கவாசகருடைய தவம் ஐந்தெழுத்தைத் தரவில்லை; சிவபெருமானுடைய கருணையே தந்தது என்பது கருத்து.

ஓர் ஆன்மா அதன் தகுதியைத் தானே வியந்து கூறுதல் ஆணவத்தின் பாற்படும். அவ்வழி, தகுதியின்மையேமேவும். சிவநெறி ஒழுக்கத்திற்குரிய தகுதிப்பாடுகளுள் ஒன்று “தாழ் வெனும் தன்மை”. அதாவது, அடக்கம், நிலத்தினைக் கிண்டிக் கொண்டு விண்நோக்கி வளரும் மரம் நிலத்தடியிலும் வேர்பாவும். நிலத்தடியில் பாவும் வேரின் வலிமையில்தான் மரத்தின் வலிவு இருக்கிறது. அதுபோல ஆன்மாக்களின் வளர்ச்சி-நிலைப்பாடு ஆரவாரத்தில் இல்லை; அடக்கத்தில் தான் இருக்கிறது. தாழ்ந்து பழகும் இயல்பில்தான் வளர்ச்சியின் அமைவு இருக்கிறது.

“தாழ்வெனும் தன்மை நோக்கிச்
சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது”

என்று அருணந்திசிவம் கூறுவார். “கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை” என்று கூறுவார் மாணிக்கவாசகர். திருத்தொண்டத் தொகையின் தோற்றமே இதற்கு ஒரு சான்று. தொண்டர்நாதனைத் தூதனுப்பிய நம்பியாரூரர், “அடியார்க்கும் அடியேன்” என்று பாடும் நிலை அடக்கத்தின் அருமையை-பயனை விளக்கத்தானே! ஆதலால் மாணிக்கவாசகர் தம்மை வியந்து பாராட்டிக் கொள்வதில்லை. திருவாசகம் முழுதும் தாழ்வின் தன்மையே பரவிக்கிடக்கிறது. மாணிக்கவாசகர் தனது தகுதியை அங்கீகரித்து ஒப்புக் கொண்டதில்லை! வியந்து பாராட்டிக் கொண்டதும் இல்லை. இறைவனின் அளப்பரும் கருணையே ஆட்கொண்டது என்பார். ஆயினும் மாணிக்கவாசகர் இறைவனின் அருமையை-ஆட்கொண்டருளிய அருமையை உணரவில்லை; அறிந்து கொள்ளவில்லை என்கிறார்.

மழலை மொழி பேசும் குழந்தை; விளையாட்டுப் பிள்ளை. பிள்ளை கையில் தங்கக் கிண்ணம் கிடைத்தது. குழந்தைக்குத் தங்கக் கிண்ணம் தேவையா? விளையாட்டுப் பொம்மை தேவையா? தின்னும் மிட்டாய் தேவையா? பருவத்தின் இச்சையே தேவை; அதுவே வெளிப்படும். குழந்தை தங்கக் கிண்ணத்தின் மதிப்பறியாது. தங்கக் கிண்ணத்தைத் தந்து அதற்கு ஈடாக ஒரு பொம்மையை அல்லது ஒரு மிட்டாயை வாங்கினாலும் வியப்பில்லை. அது போல மாணிக்கவாசகர் செய்யவில்லை. ஆனால் மாணிக்கவாசகர் இந்த உண்மையைத் தமது ஆன்மிக வாழ்க்கைக்குச் சான்றாகக் காட்டுகிறார். ஏன்? மாணிக்கவாசகரைப் போல இறைவனின் அருமையை உணர்ந்தவர்களும் இல்லை; தேடினவர்களும் இருந்ததில்லை. அந்தண வாழ்வைத் துறந்து அமைச்சு வாழ்விற்குச் சென்றமையை எண்ணிப் பாடுகின்றாரா? வாழ்க்கையின் குறிக்கோள் ஆன்மாவைப் பூரணத்துவமாக்கும் தவ வாழ்க்கையை மேற்கொள்ளுதலேயாம். அஃதில்லாமல் அமைச்சு வாழ்க்கையை ஏற்றதை எண்ணி வருந்துகிறார் போலும்!

இனம், இனத்துடன் சேரும். இஃது இயற்கை மாணிக்கவாசகருடன் பலர் இருந்தனர். அவர்கள் மெய்யன்பர்கள், அவர்கள் சிவபெருமானிடம் எளிதில் சேர்ந்தனர்; மெய்ம்மை ஆயினர். ஆனால், மாணிக்கவாசகர் பின்தங்கி விட்டார்! ஏன்? இறைவனை அடைதலுக்கு மெய்ம்மை தேவை. மாணிக்கவாசகரிடம் மெய்ம்மை இல்லை. பொய்ம்மையே இருந்தது!-இது, மாணிக்கவாசகரின் சொந்த விமர்சனம்! உண்மை உணர்வது நமது கடமை. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையிலும் செயல் மாள விடவில்லை. திருப்பெருந்துறைத் திருக்கோயிலைக் கட்டினார். அல்லவா? அது ஒரு பணி! செயல்! ஆதலால், செயல் அடங்கவில்லை என்று எண்ணினால் தவறில்லை! தவக்கோலம்! பத்திமைப் பரவசம்!. ஆயினும், செய்வினைகளும் இருந்தன. வினை நீக்கம் பெற்ற வாழ்க்கை வந்தமையவில்லை. அதனால் ‘பொய்யிலங்கெனை” என்று கூறினார் போலும்.

இறைவன் மெய்ப்பொருள்; மெய்யன்பர்கள் மெய்ம்மை மேவினார். தகுதியுடையார்க்கு வழங்குவதில் என்ன சிறப்பு இருக்கிறது. தகுதி இல்லாதாரைத் தகுதியுடையாராக்கி ஆட்கொள்ளுதலே சான்றோருக்கு அழகு. தகுதி மிகுதியும் உடையோருக்குக் கடன். இறைவன் வெண்ணீறு சண்ணித்த மேனியன். இறைவன் ஏன் வெண்ணீறணிகின்றான்? ஆன்மாக்கள் தாம் செய்த வினைகெட நீறணிகின்றான். இது இயல்பு; மரபு. இயல்பிலேயே வினையின் நீங்கி விளங்கிய அறிவினன் இறைவன். அப்படியானால் இறைவன் உடம்பில் திருநீறு எதற்கு? இந்த வினாவுக்கு விடை திருக்கோவையார் தருகிறது. குழந்தைக்கு நோய்! குழந்தை மருந்துண்ண இயலாது. ஏன்? குழந்தையின் பசுங்குடல் மருந்தைத் தாங்காது. அதுபோல, ஆன்மாக்களின் வினைவளம் நீறெழ நீறணிவான் அம்பலவன் என்று கூறுகிறது திருக்கோவையார். இறைவா! நின்னைத் தொழு தெழுவார் வினைவளம் நீறாய்ப் போக நீறணிந்து நிலவும் நின் கருணையால் என் பொய் கெடட்டும் என்பது கருத்து. ஆட்கொண்டருளும் கடப்பாடுடைய இறைவன் பொய்ம்மையை அல்லவா மெய்ம்மையாக்க வேண்டும்? அதுதானே பிறவா யாக்கைப் பெரியோனுக்குப் பொருத்தமானது என்பது மாணிக்கவாசகர் எண்ணம்.

“இறைவா! அம்மையப்பனே! அருளே உருவமாகிய சிவசக்தியைப் பாசத்தில் கொண்டருளியவனே! நீயே வந்து என்னைத் திருப்பெருந்துறையில் ‘வா’வென்றருளினை! பணி கொண்டருளினை! திருப்பெருந்துறை சிவனே, நின்னை அடைவதற்கு முன் உன்னை மூவர்கோனாய், மூவர் தலைவனாய்க் கண்டனன். அருமையில் எளிய அழகெனக் கண்டனன். ஆனால் நீயே வந்தெனைத் தலையளித்து ஆட்கொண்டருளிய பின் நின்னருமை உணர்கிலேன்! மழலையின் கையில் பொற்கிண்ணம் போலாயிற்று! நின்னருள் என்வசம்! திருப்பெருந்துறை சிவனே! கால காலனே! ஊழி முதல்வனே! ஊழிப் புழுதியே திருநீறாகப் கொண்டருளும் பெருமானே! என்றும் உள்ளவன் நீ! மெய்ப்பொருள் நீ! நின் திருமேனியில் படிந்துள்ள திருநீறு, ஆன்மாக்களின வினைவளம் நீறாக அணிந்தருளிய மாண்பு! உண்மை அன்பர் நின்னை மேவினார்! நானோ பொய்யன்! நீயோ அன்பருள் புக வைத்தாலும் போய் உய்யும் தரமறியேன்! தகுதியிலேன்! நெறியறியேன்! ஆயினும் நீ பெரியோன்! சிறியேன் பிழையெலாம் பொறுத்தருளும் பெரியோன்! ஆதலால், என்னை இடையில் விட்டுவிட்டுப் போவது அழகா? பொருத்தமா, அருள்கூர்ந்து சொல்லுக” என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.

இத்திருப்பாடலில் “போவதோ சொலாய்” என்பது நினையத்தக்கது. அடைக்கலப் பொருளைப் பாதுகாக்காமல் வறிதே விட்டுச் செல்லல் பெரியோருக்குப் பொருத்தமல்ல என்று எடுத்துக் கூறிய அருமையை அறிக.

மையி லங்கு நற் கண்ணி பங்கனே
வந்தெனைப் பணி கொண்ட பின் மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்கு வெண் ணீற்று மேனியாய்
மெய்மை அன்பருள் மெய்மை மேவினார்
பொய்யி லங் கெனைப் புகுத விட்டு நீ
போவதோ சொலாய் பொருத்த மாவதோ?

(திருச்சதகம்-96)
புறம் புறம் திரிந்த செல்வம்!

தாய்!-உயிர்க்குலத்தில் தாய்க்கு நிகரான படைப்பு ஏது? இந்த உலகத்தில் தாய் கடவுள்! தாய், கடவுளை நினைப்பிப்பவள். தாய், கடவுளின் பிரதிநிதி. ஆம், குழந்தையின் உருவாக்கத்தில் தாயின் பங்கு மிகுதி. கடவுளின் கருத்தை முடித்துத் தருபவள் தாய். கருவில் மட்டுமன்று; மண்ணிற்கு வந்த பிறகும் குழந்தையின் வளர்ப்பில், காப்பில் தாயின் பங்கு அதிகம். குழந்தையின் நோய்க்குத் தாய் மருந்துண்கிறாள்! பத்தியம் பிடிக்கிறாள்! உறக்கத்திலும் தன் குழந்தையின் மீது விழும் பூங்கொத்தை ஒதுக்கித் தள்ளும் தாயை, பாரதிதாசன் படைத்துக் காட்டுகிறான். திருமுறைகள் “அம்மையே! அம்மையே!” என்று போற்றுகின்றன. “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று திருக்களிற்றுப் படியார் பேசும். “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்று ஐங்குறு நூறு வழுத்தும். மாணிக்கவாசகரின் திருவாசகம் முழுதும் தாயன்பு பரிணமித்துள்ள. “அன்னைப் பத்து” என்றே ஒரு பதிகம், திருவாசகத்தில் உண்டு.

தாய்!-மகவைப் பெற்று வளர்ப்பவள் தாய்! ஆனாலும் மகவைப் பெறுபவர்கள் எல்லாரும் நல்ல தாயாகிவிடுவதில்லை. தாயிலும் தரங்கள் உண்டு. ஈன்றெடுத்த மகவு அழுதாலும் பாலூட்டாத தாயும் உண்டு. இந்தக் காட்சியைப் பெரும்பாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழைகள் வீட்டில் காணலாம். தாயும் உடலுழைப்பில் ஈடுபட்டுப் பொருளீட்ட வேண்டும்; வீட்டிலும் வேலை பார்க்க வேண்டும். களியாட்டமோ பொழுதுபோக்கோ இல்லாத நிலையில் பல குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அதனால் உடலில் சோர்வு; வாழ்வின் சுமை ஆன்மாவில் அழுத்தும் போக்கு; அலுத்தும் சலித்தும் வாழும் நிலை! இந்தச் சூழ்நிலையில் வாழும் தாய்மார்கள் விரும்பினாலும் நற்றாயாக வாழமுடிவதில்லை. இது ஏழைத் தாயின் நிலை! இது அவள் குற்றமல்ல. சமூகத்தின் குற்றம். இனி, தான் பாலூட்டாமல் மாற்றுத் தாயின் மூலம் பாலூட்டும் தாயும் உண்டு. இது செல்வச் செழிப்பில் நிகழ்வது. இது வாழும் கலையறியாத குடும்பங்களில் காணப்படும் காட்சி! இளமை-அழகில் உள்ள கவர்ச்சியின் விளைவு. இது அடாவடித்தனம்; இயற்கையை இகழ்ந்த வாழ்வு. சில தாய்மார்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வந்து பாலூட்டுவர். இது வேறு பல பணிகளில் ஈடுபடுவதின் விளைவு; கவனத்தில் சோர்வு! சில தாய்மார்கள் குழந்தைகள் அழாமலே காலக் கணிப்புடன் குழந்தைக்குப் பசிக்கும் என்றெண்ணிப் பாலூட்டுவர். இந்த மண்ணில் இவர்களே தாய்மார்கள்-நல்ல தாய்மார்கள்! வணக்கத்திற்குரிய தாய்மார்கள்! வரலாற்றில் இடம் பெறும் தாய்மார்கள்!

மாணிக்கவாசகர் இந்த நற்றாயினும் சிறந்த தாயை அறிமுகப்படுத்துகிறார். நினைந்தூட்டும் தாய் குழந்தையை மறப்பதுண்டு. மறதியைத் தொடர்வதுதானே நினைப்பு. மறத்தல் இல்லையெனில் நினைப்பும் இல்லை. மாணிக்கவாசகர் அறிமுகப்படுத்தும் தாய், குழந்தையை மறப்பது இல்லை! ஆதலால் நினைத்தல் வினை நிகழ்வு இல்லை. எப்போதும் இந்தத் தாய்க்குக் குழந்தையின் நினைவே; இந்தத் தாய் யார்? சிவசக்தியாகிய தாய்! இந்தத் தாய் ஆன்மாக்களை மறப்பதில்லை. அதனால் நினைவும் நிகழ்வதற்குரிய வாயில் இல்லை. சிவசக்தியாகிய தாய், குழந்தை மறுத்தாலும் மிகவும் பரிவுணர்வுடன் பாலூட்டுவாள். குழந்தை பாலின் தேவையை அறியாது. குழந்தையின் தேவை தாய்க்குத் தானே தெரியும். ஆதலால், குழந்தை மறுத்தாலும் இந்தத் தாய் விடுவதில்லை. மிகவும் பணிவுணர்வுடன் இழுத்துப் பிடித்துப் பாலூட்டுவாள்; பால் மட்டுமா? உணவினால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை; மருந்தும் தேவை! பாலுண்ணும் குழந்தை மருந்துண்ண மறுக்கும்! தாய் மருந்தும் தருவாள்! சிரிப்பினால் மருந்தும் கதையினால் கருத்தும் வழங்குபவள் தாய்!

தாய், தனது பிள்ளையின் தகுதி கருதி அன்பு காட்டுவதில்லை. தகுதியிருந்தால் மகிழ்வாள். தகுதி இல்லையானாலும் தன் பிள்ளையைச் சீராட்டவே எந்தத் தாயும் விரும்புவாள். ஆனாலும் தாயின் அறிவு, காரண காரியத்துடன் இயங்கும். தன் குழந்தை பாவச் செயல் செய்வதாயிருந்தால் எந்தத் தாயும் தாங்கிக் கொள்ள மாட்டாள்! எந்தத் தாயும் தன் மகவை “சான்றோன்” என்று கேட்கவே விரும்புகிறாள். அதேபோழ்து தன் குழந்தையைப் “பாவி” என்று தாய் வெறுத்து ஒதுக்கவும் மாட்டாள்! தாயின் அன்பு தன் குழந்தையின் அறியாச் செயல்களுக்கு-அவை அறியாச் செயல்கள் என்று அறிந்தாலும் உடன்படுவாள்! உடன் போவாள்! அன்பைப் பெருக்கி, நம்பிக்கையை வளர்த்து, பைய நன்னெறிக்கு அழைத்து வந்துவிடுவாள்! உடைப்பது எளிது; ஒறுப்பது எளிது; அழிப்பது எளிது; திருத்தம் காண்பது அரிய பணி! இதற்கு நிலத்திலும் பொறுமை தேவை. நலம் நோக்கித் திருத்தும் பணியாதலால் “பைய” என்ற சொல், வழக்கிற்கு வருகிறது. “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகுக!” என்ற சேக்கிழார் வாக்கு. அனுபவத்தின் முதிர்ச்சியில் பிறந்தது. மாணிக்கவாசகரும் “பையத் தாழுருவி” என்பார். இத்தகு திருத்தப் பாட்டுப் பணியில் நிற்க, சராசரி மனிதரால் இயலாது, சான்றாண்மைக்கு ஆழி எனப்படுபவர்களாலேயே முடியும்!

மிகவும் பாவம் செய்வதற்குக் காரணம் அந்த மகவின் உடல்! உடல் வளர்ந்த அளவு ஆன்மா வளரவில்லை. ஆன்மாவை ஆட்டிப் படைக்கும் உடல் வலிமை தானே பாவம் செய்கிறது! ஆதலால், தாய் ஊன்பொதி உடலைத் திருத்துவாள். உடலின் ஆதிக்கம் ஆன்மாவின் மேலிருந்து பணி கொண்டால் பாவம் வளரும். உடலை, ஆன்மா பணிகொண்டால் புண்ணியச் செயல்கள் நிகழும். உடல், ஆன்மாவை வேலை வாங்கினால் உடலின் ஏவலை ஆன்மா செய்யும்; நிறைவேற்றும்! இதனால் மிகுதியான உணவைத் தின்றால் உடல் கொழுக்கும்; பருமனாகும்; முரட்டுத்தனம் மேவும்! இது உடல் நலத்திற்கு நல்லதல்ல; சமூகத்திற்கும் நல்லதல்ல; வன்முறையின் தாயே, ஆன்மாவை மறுத்த உடலின் ஆதிக்கம்! “ஊனினைப் பெருக்கி உயிரை இழந்தேன்” என்பார் சுந்தரர். ஆதலால், ஆன்மாவின் ஆளுமைக்குள் உடல் இருக்க வேண்டும். உடலின் எடை குறைதல், உடலுக்கும் நல்லது; ஆன்மாவுக்கும் நல்லது. உடலின் தேவைகள் குறைதல் வேண்டும். ஆன்மாவின் தேவைகள் பெருகி வளர வேண்டும். அதனால், சக்தியாகிய தாய் உடலை உருக்கி இளைக்க வைக்கிறாள். அதனைத் தொடர்ந்து ஆன்மாவின் ஞானஒளியைப் பொருத்துகிறாள். ஆம்! ஒளி, ஞானத்தின் சின்னம்! முகம்மது நபி, எல்லாம் வல்ல இறைவனிடம் “ஒளியை என் உடலில் நிரப்பு” என்று கேட்டுப் பிரார்த்தனை செய்கிறார். இத்தகு ஒளியால் உடலின் எடை குறைகிறது. உடல், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆன்மா, ஞான ஒளியைப் பெற்றிருக்கிறது! இதனால் இன்பம் மேவுகிறது. சாதாரண இன்பமன்று அந்தம் ஒன்றில்லாத இன்பம்! ஆனந்தமாய இன்பம்! இடையீடில்லாத இன்பம்!

ஆன்மா ஆனந்தமயமான இன்பத்தின் அருமை தெரியாமல் அதனை இழந்துவிடலாம். அல்லவா? ஆன்மாவை ஆதியில் பற்றிய அறியாமை எதைத்தான் செய்யாது? இந்த உலக வரலாற்றின் பக்கங்களை நிரப்பியிருப்பது அறியாமையின் நிகழ்வுகளே! ஏன்? அறியாமையே கூட அத்தாணி மண்டபமேறி அரசோச்சியிருக்கிறது! ஐயோ பாவம் அறிவு- ஒடுங்கி இருந்த காலமும் உண்டு. அறிவு பெற்ற ஒரே காரணத்தால் ஒறுக்கப்பட்டதும் உண்டு. அறியாமையால் ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தைத் துறந்து, மண்ணின் மேல் ‘நான்’ ‘எனது’ என்றும் மாயை கடித்த வாயிலேயே நின்று நடித்திட ஆன்மா விரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறியாமையின் கொடுமை எழுதும் தரத்தன்று. ஆன்மாவுக்கு அறியாமை கொடுத்துள்ள வினை குறைவா, என்ன? ஆதலால், சிவமாகிய சக்தி, ஆன்மாவைப் பின்தொடர்கிறது. ஆன்மா, செல்லுமிடமெல்லாம் ஆன்மாவின் பின்னே சிவமாகிய சக்தி தொடர்கிறது! ஏன்? ஆன்மா ஆனந்தமாகிய இன்பத்தை இழந்துவிடாமல் அனுபவிக்குமாறு செய்வது சிவசக்தியின் குறிக்கோள்!

வழிபாட்டுக்குரிய சிவசக்தி, புறம் புறம் திரிவானேன்? முன்பே போகக் கூடாதா? அது மரபு; மதிப்பு; மரியாதை! ஆனாலும் முழுதும் கடமையின் வழிப்பட்ட தாகாது. முன்னே போனால் வழிகாட்டலாம்; தவறில்லை. வழி தவறிப் போகாமல் நெறிவழிச் செலுத்திக் காப்பாற்றலாமே என்று வாதிடலாம். இதில் உண்மை இருக்கிறது; மறுப்பில்லை. ஆனால், கீழே விழுந்தால் உடன் தூக்க இயலாது. பின்னே வந்தால் இடறியவுடனே காக்கலாம்; வழியும் காட்ட இயலும். உலகியலில் வழிகாட்டுவோர் பலர் இருந்தனர். இன்றும் பலர் உள்ளனர். ஆனால் பயன் என்ன? பொறுப் புணர்வுடனும் தயாவுடனும் எடுத்து வளர்ப்பதற்கு - ஆளாக்குவதற்கு முன்வருவோர் எவர்? உபதேசிப்போர் பலர் உள்ளனர். இடுக்கண் வருங்கால் காப்பாற்றுவோர் யார்? காப்பாற்றுவோர் தானே வேண்டும்! உபதேசத்தின் வழி உலகம் சென்றுவிடாது எடுத்தாண்டு இட்டுச் செல்வார் பின் உலகம் செல்லும்; உய்யும், காப்பாற்றுவோர் பின்னே வந்தால் தான் விழுந்தவுடன் தூக்கலாம்; எடுக்கலாம்.

திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரை ஆட்கொண்டருளினன். அந்தம் ஒன்றில்லா இன்பத்தை வழங்கியருளினன். இந்த இன்பத்தை மாணிக்கவாசகர் இடையீடின்றி அனுபவிக்க, திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரைப் பின் தொடர்கிறான்; திருஆலவாய் வரையில் பின் தொடர்கிறான்; மாணிக்கவாசகருக்காகக் குதிரைச் சேவகன் ஆகிறான். கொற்றாளாகி மண் சுமந்து பிரம்படி படுகிறான். எல்லாம் மாணிக்கவாசகரைக் காப்பாற்றத்தானே! காத்தாள்பவருக்குக் காத்தல் கடமை தானே! கடமை வாழ்வு எளிதன்று! காத்தாளும் கடமை எளிதன்று என்பதற்கு மாணிக்கவாசகர் வரலாற்றில் சிவ பெருமானுக்குற்ற அனுபவங்களே சான்று.

நமது திருக்கோயில் திருவிழாக்களில் சுவாமியின் முன்னே நாம் போவோம்! சுவாமி பின்னே வருவார்! “போ, முன்னே போ! முன்னேறிப் போ! நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று அறிவித்தல்தானே இது! ஏன்? நமது உலகியலில் கூட அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள், அமைச்சர்களுக்குப் பின்னேதான் வருவார்கள்! காவல் செய்வோர், காத்து வருவர் பின்னே!

இறைவன் தாய்! நினைந்தூட்டும் தாயிலும் நனி நல்லன்! ஊனை இளைக்க வைத்து, உயிரை ஒளியூட்டி வளர்க்கிறான்! ஆனந்தமாய இன்பத்தைப் பொழிந்து கருணை செய்கிறான்! பொழிந்த ஆனந்தமாய இன்பத்தை ஆன்மா இழந்துவிடாமல் தொடர்ந்து அனுபவிக்கப் பின் தொடர்கிறான். சிவசக்தி பிறப்பும் இறப்பும் நீங்கும் வரை தொடர்கிறாள். நரகொடு சொர்க்கம் எங்கு புகினும் தொடர்கின்றாள். இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் அம்மம்ம, சிவசக்திக்கு உள்ள மகிழ்ச்சி எழுதியும் பேசியும் விவரிக்க இயலாதது! சிவசக்திக்கல்லவா ஆன்மாவின் அருமை தெரியும்?

ஆன்மாவுக்கு அறிவு ஒளி ஏற்றுவர். அவர்தம் வாழ்க்கையின் தேவைகளை நிறைவு செய்வர். அவர்களின் பொறிபுலன்களுக்குப் பொருள் கற்பிப்பர். அதற்கு மேலும் ஆன்மாவை வளர்த்து ஞான நெறியை அறிமுகப்படுத்துவர். இங்ஙனம் செய்த பிறகும் மனம் நிறைவுபெறாது. பழக்க வாசனையில் பெற்றதை இழந்து விடக்கூடாதே என்ற கவலையில் தொடர்ந்து கண்காணிப்பார். எந்த ஒரு பணியிலும் நிர்வாகத்திலும் கண்காணித்தல் (Follow up) என்பது அவசியம் தேவை. நிர்வாக அறிவியலில் பின் தொடர்தல், கண்காணித்தல், கணக்கெடுத்தல், பயன்பாடுகளைக் கணக்கிட்டு ஆய்வு செய்தல் என்ற செயல்முறைகள் வற்புறுத்தப்படுகின்றன.

இந்தப் பாடலில் ‘நினைந்து’ என்ற சொல்வழி தேவைகளை ஆய்வு செய்து திட்டமிடலைக் குறிக்கிறது. திட்டமிட்ட பணியில் ஆர்வம் தலையெடுத்தல் வேண்டும் என்பதனை “தாயினும் சாலப் பரிந்து” என்ற வரி நினைவூட்டுகிறது. பணி செய்ய அறிவு தேவை என்பதனை “உள்ளொளி பெருக்கி” என்ற சொற்றொடர் உணர்த்துகிறது. “தேனினைச் சொரிந்து” என்ற சொற்றொடர் செயற்பாட்டையும் அதனால் விளைந்த பயனையும் பற்றிக் குறிப்பிடுகிறது. “புறம் புறம் திரிந்த” என்ற சொற்றொடர் பின்தொடர்தலையும் கண்காணித்தலையும் வலியுறுத்துகிறது. “செல்வமே” என்று ஆக்கத்தை உணர்த்துகிறது. சமூக இயல் பாங்கில் இங்ஙனம் பொருள் கொள்ளலாம். ஆனால், திருவாசகம் உலகியல் கடந்த ஆன்ம அனுபவம்; திருவருள் அனுபவம்!

பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்த புறம்புறம் திரிந்த
செல்வமே! சிவபெரு மானே!
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!

(திருவாசகம், பிடித்தபத்து-9)
யார் சதுரர்?

வாழ்க்கையே ஒரு வாணிகம் தான்! வாணிகம் தவறல்ல. ஆனால், இலாபமே வேட்டையாக எண்ணி வாழ்தல் தீது. இருபாலும் பயனும் மகிழ்வும் உண்டாகும் வகையில் நடப்பதே நல்ல வாணிகம். ஆன்மிக வாழ்க்கையிலும் வாணிக நடைமுறை உண்டு.

“கொண்டும் கொடுத்தும் ஈசர்க்கு ஆட்செய்தல்”, என்று இசைப்பா கூறும். “மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு” என்பார் திருவள்ளுவர். இஃது ஓர் உயர்வு நவிற்சி! மாரி, உயிரினங்களுக்குச் செய்யும் அளவு நாம் அதற்குக் கைம்மாறு செய்ய இயலாது என்பது உண்மை. ஆயினும் மழைக்குரிய சாதனங்களாகிய ஏரி, குளங்களைப் பராமரிப்பதும், புயலை நீர்த் திவலைகளாக மாற்றும் குளிர்ச்சியைத் தரக்கூடிய மரங்களை வளர்ப்பதும் நாம் மழைக்குச் செய்யும் கைம்மாறு! ஆனாலும் மழையின் உதவி அளவிலும் பயனிலும் கூடுதலானது. பொதுவாகவே மானிடரைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே நிறையக் கொடுக்கும்; குறைவாகப் பெறும். மரங்கள் நம்மிடத்திலிருந்து பெறுவது குறைவு. ஆனால், நமக்குத் திருப்பித் தருவது அதிகம். பசு மாடுகள் நம்மிடம் பெறுவது குறைவு. ஆனால், நமக்குத் தருவது அதிகம். இதுதான் நாகரிக வாழ்க்கை; பண்பாட்டு வாழ்க்கை! மானிடரோ சமுதாயத்தினிடமிருந்தும் மற்ற உயிர்க் குலங்களிடமிருந்தும் நிறையப் பெறுகிறார்கள். ஆனால் மிகமிகக் குறைவாகவே திருப்பித் தருகிறார்கள். சிலர், திருப்பித் தருவதே இல்லை. அதனாலேயே மழை குறைகிறது; மண் வளம் கெடுகிறது; மாடுகள் இளைத்துச் சாகின்றன. இது இயற்கைக்குப் பொருந்தா வாழ்க்கை. நாம் எவ்வளவு பெறுகிறோமோ அவ்வளவு திருப்பித்தர வேண்டும். இதுவே மத அறநெறி; திருவாசக நெறி. ‘தந்தது உன்றன்னை’ என்றதால் திருப்பெருந்துறையுறை சிவனின் எளிவந்த கருணையும் மாணிக்கவாசகர் ஆன்மாவின் வளர்ச்சியும் புலப்படுகிறது.

மாணிக்கவாசகர் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர்தம் சிந்தையில் திருப்பெருந்துறையுறை சிவன் குடிகொண்டான், அதுமட்டுமா? எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள் இருக்க, திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரின் உடலையே இடமாக - திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான். இது என்ன வியப்பு! எண்ணற்ற கற்கோயில்கள் உள்ளன! இவ்வளவு திருக்கோயில்களையும் விட்டு விட்டு மாணிக்கவாசகரின் உடலைத் திருக்கோயிலாகக் கொள்வானேன்?

இறைவனுக்கு உவப்பானவை கற்கோயில்கள் அல்ல; உடற்கோயிலே; மனக்கோயிலே; இறைவன் கற்கோயில்களில் எழுந்தருள்வது முதல்நிலை! அங்குவரும் மனிதர்களைச் சந்தித்து உறவாடிப் பக்குவப்படுத்தி அவர்தம் உடற் கோயிலில் புகுந்து தங்கி அருள்வான்! காஞ்சிபுரத்து பல்லவ மன்னன் காடவர் கோமான் கட்டிய கற்றளியில் எழுந்தருள்வதைவிட, பூசலார் நாயனார் பொன்னுடலில் கட்டிய மனக்கோயிலில் எழுந்தருள்வதை முன்னுரிமையாகக் கொண்டனன் என்ற வரலாறு உணர்த்தும் உண்மை என்ன? இறைவனுக்கு மனக்கோயிலே உவப்பானது என்பதுதானே.

திருப்பெருந்துறை இறைவன், மாணிக்கவாசகரின் உடலை இடமாகக் கொண்டு எழுந்தருளினன். இதனால் மாணிக்கவாசகர் புறம்போகாமல் பாதுகாப்புக் கிடைக்கிறது. இறைவனால் மாணிக்கவாசகரின் அன்பைத் தூண்டி அனுபவிக்க முடிகிறது. திருவாசக அமுதம் பருகக் கிடைக்கிறது. இருபாலும் நலஞ்சார்ந்த பண்டமாற்று! விண்ணவர்கள் தேடரிய, பழமறைகள் தேடரிய, முனிவர்கள் தேடரிய திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரின் உடலையே திருக்கோயிலாகக் கொண்டனன்! இந்த அரிய அருட்செயலுக்குக் கைம்மாறு செய்ய இயலுமா? பொருள் பற்றிச் செய்யும் பூசனைகள் கைம்மாறு ஆகுமா? ஆகாது! ஆகாது! புன்புலால் யாக்கை! இதில் புண்ணியத்தின் புண்ணியம் சிவம் புகுந்து மூடியமர்ந்தருள் செய்தலுக்கு ஏது கைம்மாறு? இந்த உலகியலில் சாதாரணமான செயல்களுக்கே கைம்மாறு செய்ய இயல்வதில்லையே! முடியவில்லையே! நமது நாட்டு விஞ்ஞானிகள்-குறிப்பாகக் காரைக்குடி மத்திய மின் வேதியியல் விஞ்ஞானிகள் வழங்கும் அறிவியல் கொடைக்கு எப்படிக் கைம்மாறு செய்ய இயலும்! ‘நன்றி’ என்று சொற்களால் கூறலாம்! அது எங்ஙனம் கைம்மாறு ஆகும்! பெற்றதற்கு ஏற்பக் கைம்மாறு கொடுத்தல் வேண்டும்! அதுதான் உண்மையில் கைம்மாறு! இன்று, நன்றி கூறுதல் ஒரு சடங்கு! இங்ஙனம் இருக்க இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்? அப்பரடிகள் கூறியதைப் போல “உன்னை நினைத்தே என் ஆவி கழியும்” என்பதே கைம்மாறு. மாணிக்கவாசகரும் “நின்று ஆடிப்பாடி அலறவேண்டும்” என்கிறார். உடல் எல்லாம் நெஞ்சமாக, கண்ணாக அலறி அழவேண்டும் என்கிறார்.

திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரை ஏற்றுக் கொண்டான்! மாணிக்கவாசகரும் விருப்புடன் ஆட்பட்டார். இறைவன்-திருப்பெருந்துறையுறை சிவன் தன்னை மாணிக்கவாசகருக்குத் தந்தனன். இங்கு எடுத்தது - தந்தது இரண்டும் இறைவன் செயலேயாம். மாணிக்கவாசகரின் விருப்பம் ஏதும் இல்லை! அதனாலேயே தனது விருப்பம் எல்லாம் இறைவன் தன் விருப்பமே என்று பாடுகின்றார். “வேண்டுவது உன்றன் விருப்பன்றே” என்பது திருவாசகம்.

இறைவன்-திருப்பெருந்துறையுறை சிவன், தன்னை மாணிக்கவாசகருக்குத் தந்ததால் மாணிக்கவாசகரின் உடலை இடமாகக் கொண்டதால் முடிவே இல்லாத இன்பத்தை மாணிக்கவாசகர் பெற்றார்; அனுபவித்தார். திருப்பெருந்துறையுறை சிவனின் அருளாரமுதத்தை அண்ணித்தும் தேனித்தும் துய்த்தும் இன்புறுகின்றார். ஆனால், திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரை ஏற்றுக் கொண்டதால் என்ன பெற்றார்? ஆன்மாவிடமிருந்து ஆண்டவன் எதைப் பெறமுடியும்? ஒன்றுமில்லை என்றுதான் கூறுவர்.

கொள்வது - கொடுப்பதில் அல்லது எடுப்பது - தருவதில் இருபாலும் பயனில்லையானால் வாழத்தெரியாதவர், சாமர்த்தியமில்லாதவர் என்று பொருள்படும். இறைவன் சதுரப்பாடில்லாதவனா? இறைவனை விட மாணிக்கவாசகர் சதுரப்பாடுடையவரா? இல்லை! இல்லை! திருப்பெருந்துறையுறை இறைவனே சதுரப் பாடுடையவன்! எப்படி? மாணிக்கவாசகர் என்ற ஓர் அன்பரை ஆட்கொள்ள இறைவன் எடுத்த முயற்சியின் அளவு என்ன? குதிரைச் சேவகனானான்! உதிர்ந்த பிட்டைத் தின்றான்! கொற்றாளாகி மண் சுமந்தான்! பிரம்படிபட்டான்! அம்மம்ம! எவ்வளவு இடர்ப்பாடுகள்! இத்தனை இடர்ப்பாடுகளையும் கடந்து மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையுறை சிவனிடம் பெற்ற அந்தமில்லா இன்ப அனுபவத்தை, திருவாசகப் பாடல்களாகத் தந்தார். திருவாசகம் பாடல்கள் மட்டும் அல்ல; திருவருளனுபவம்! இறைவனின் திருவருளுக்கு மொழியால் வடிவம் தந்தவர் மாணிக்கவாசகர். இந்தப் பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெற்றான் இறைவன். திருவாசகப் பாடல்களை அனுபவிக்கும் ஆரா வேட்கையில் தாமே அதனை எழுதிப் படியும் எடுத்து வைத்துக் கொண்டனன். இதனைச் சிவப்பிரகாசர் “கைகளோ முறிபடும் கைகள்” ஆயினும் திருவாசகத்தைப் படியெடுத்தான் என்பதனை,

கைகளோ முறிபடுங் கைகள் காணின்
கண்களோ ஒன்று காலையில் காணும்
மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும்
பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும்
ஆயினும் தன்னை நீ புகழ்ந் துரைத்த
பழுதில் செய்யுள் எழுதினன்

என்று கூறி விளக்குகின்றார். மாணிக்கவாசகர் காலத்துக்குப் பிறகு, இறைவன் தம்மை வழிபடுதலினும் திருவாசகத்தினைப் பூசை செய்தல், ஓதுதல் முதலிய செயற்பாடுகளாலேயே தம்மை அடையமுடியும் என்ற நியதியை வகுத்தருளினன். ஒவ்வொரு ஆன்மாவையும் ஆட்கொள்ள எத்தனை தடவை மண் சுமப்பது? பிரம்படி படுவது? இந்தத் துன்பத்திலிருந்து திருப்பெருந்துறையுறை சிவன் தப்பித்துக் கொண்டனன். திருவாசகம் ஓதினாலேயே திருப்பெருந்துறையுறை சிவன் அருள் கிடைக்கும். ஆட்கொள்ளப் பெறுவர்; இது நியதியாகவே யாயிற்று. இது திருப்பெருந்துறையுறை சிவனுக்கு மாணிக்கவாசகரிடமிருந்து கிடைத்த பாதுகாப்பு. மக்களுக்கும் எளிய வழியில் இறைவனை அட்ைய முடிந்தது. அதுமட்டுமா? கடையூழிக் காலத்தில் இறைவனின் தனிமைத் துன்பத்தை மாற்றிக் கொள்வதற்காக-படிக்க மாணிக்கவாசகர் திருவாசகத்தைத் தந்தார். “கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள் உடையாருன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே” என்று இதனை மனோன்மணீயம் கூறி விளக்கும். இப்போது யார் சதுரர்? மாணிக்கவாசகர் பெற்றது அந்தமொன்றில்லா இன்பம்! ஆனால், திருப்பெருந்துறையுறை சிவன், தேனமுதத் தமிழில் திருவருள் நலங்கொழிக்கும் திருவாசகப் பாடல்களை, பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெற்றனன்! கடையூழிக் காலத்தில் இறைவன் தன் தனிமைத் துன்பத்தை நீக்கிக் கொள்ளத் திருவாசகத்தைப் பெற்றுக் கொண்டனன்! மேலும் வழிவழி வரும் தலைமுறைகளை ஆண்டு கொண்டருளக் கருவியாக விளங்கும் திருவாசகத்தைப் பெற்றனன்! மீண்டும் மீண்டும் மண் சுமத்தல், பிரம்படி படுதல் முதலிய துன்பங்களிலிருந்து திருப்பெருந்துறையுறை சிவன் விடுதலை பெற்றனன். திருவாசகம் பெற்றதால் திருப்பெருந்துறையுறை சிவன் அடைந்தவை பலப்பல. அவையும் நிலையானவை! ஆதலால், சதுரர் திருப்பெருந்துறையுறை சிவனே!

ஆயினும் பலர் மாணிக்கவாசகரே சதுரர் என்பர். மாணிக்கவாசகர் ஆன்மா; அறியாமை உடைய ஆன்மா! இத்தகைய மாணிக்கவாசகர் பாசம் நீங்கப் பெற்று அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றதே பேறு. ஆதலால், மாணிக்கவாசகர் சதுரர் என்பர். ஆயினும் ஆன்மாக்களை ஆட்கொண்டருளுதல் இறைவனின் கடமை. இப்பிறப்பில் இல்லையாயினும் எப்பிறப்பிலாவது ஆட்கொண்டருளப் பெறுதல் வேண்டும். திருவருள் நலம் பெற்றவர்கள் எல்லாரும் மாணிக்கவாசகரைப் போலத் திருவாசகம் தந்தனரா? இறைவனையே எழுத வைத்தார்களா? இல்லை! இல்லை! ஆதலால் திருப்பெருந்துறையுறை சிவனே சதுரர்!

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன்று என்பான்

கு.இ.VIII.8.

சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர் கைம் மாறே

(கோயில் திருப்பதிகம்-10)
சிவபதம் அளித்த செல்வம்!

மானிட வாழ்வு, காலத்தினால் இயக்கப்படுவது. காலம் என்ற நியதி மானிட வாழ்வுக்கு இயற்கையாய் அமைந்தது; தவிர்க்க முடியாததும் கூட! மாணிக்கவாசகர், வாழ்க்கையின் போக்கைப் ‘பொய்யினைப் பெருக்கிப் பொழுதினைச் சுருக்கி’ என்று குறிப்பிடுகின்றார். ஆன்ம வாழ்க்கையின் அருமைப்பாட்டை அறியும் அறிவும் அதனை உரிய காலத்தில் உரியவாறு பயன்படுத்துவது பற்றிய அறிவும் நமக்கு வரவேண்டுமானால் நாள்தோறும் கிழிக்கும் நாட்காட்டியை (calendar) வைத்துக்கொள்வது நல்லது. இந்த நாட்காட்டி ஜனவரி முதல் தேதி கனமாக, புதியதாக, பொலிவாக விளங்கும். நாள் ஆக, ஆக இளைத்து டிசம்பர் 31ம் தேதி முற்றாக இதழ்கள் இல்லாமல் போய் வெறும் அட்டையே மிஞ்சியிருக்கும். எடை குறைந்து விட்டது; அழகு போய்விட்டது. அது போலத்தான் மனிதன் குழந்தையாகப் பிறக்கின்றான்; சிறுவனாக ஓடி விளையாடுகிறான்; இளைஞனாகிறான்; முதியவன் ஆகிறான்; கிழவன் ஆகிறான்; கடைசியில் மூளையின் இயக்கம் ஓய்கிறது. மூச்சு நின்று போகிறது. இந்த நிலை ஒரு நாளில் எய்துவதில்லை. காலம் காட்டும் கருவி-கடிகாரம் டிக் டிக் என்ற சப்தத்துடன் நகர்கிறது. முள்ளா நகர்கிறது? மனிதனின் வாழ்வு நகர்கிறது. இறுதி நிலை நோக்கி நகர்கிறது.

காலத்தின் நில்லாமையை அப்பரடிகள் விளக்கும் முறை எளிதில் விளங்குவதாய் அமைந்துள்ளது. கைகள் இரண்டையும் இணைத்து ஒரு தடவை உற்று நோக்குங்கள். விரல்களுக்கிடையில் ஓட்டைகள்! கைகள் இரண்டால் தண்ணீரை அள்ளி ஓட்டைப் பானையில் ஊற்றி குடத்தை மூடி தண்ணீரைக் காப்பாற்ற நினைத்த மனிதனின் மனப்பாங்கினை ஒத்தது மனிதன் காலத்தை அனுபவிக்கும் பாங்கு என்று விளக்குவார்.

கோடி தீர்த்தம் கலந்து குறித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே!

(அப்பரடிகள்-தேவாரம்)

“நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வானது உணர்வார்ப் பெறின்.

என்றது திருக்குறள்.

ஒரு மரம் ஒரே அறுவையில் விழுந்துவிடுவதில்லை! பல அறுவைகளால் நூல் நூல் அளவாக அறுபடுகிறது. அப்படித்தான் வாழ்க்கையும் ஒரு நாளில் முடிவதல்ல. பல நாட்கள் கழிந்த பின்னேயே முடிகிறது. ‘காலம்’ என்ற நியதி கடவுள் திருவுள்ளத்தின் வழி அமைந்தது. ஏன்? உயிர்களின் மேம்பாட்டை ஒரு வரையறுத்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம்! இல்லையெனில் உயிர்கள்-மனிதர்கள் “இன்று நன்று; நாளை நன்று”. என்று பேசியே காலங் கடத்திவிடுவர். “நாள் பார்த்தல்” என்ற மரபு நாளைக் கணித்தல், நாளைப் பாதுகாத்தல் என்ற அமைவிலேயே தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் ‘நல்ல நாள்’ ‘கெட்ட நாள்’ என்ற சித்தாந்தம் தொடங்கி விட்டது. இதன் காரணமாக வாழ் நாள்கள் வீழ்நாள்களாகவே போகின்றன. காலம் வீணாவதைத் தவிர்க்கவே “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று ஒரு பழமொழி ஏற்பட்டது. இது ஒரு அனுபவ ஞானமொழி. ஆனால், இன்றைய மானுடச் சந்தையில் இந்தப் பழமொழிக்கு வழங்கும் பொருள் வேறு. உடம்பில் உயிர் காற்று இயங்குவது வாழ்தலுக்கு அடையாளம் ! அந்தக் காற்றோட்டம் தடைப்படும் முன் பாவத்தைத் துாற்றிவிட்டுப் புண்ணியத்தை எடுத்துக்கொள் என்பது தான் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள். வாழ்க்கைச் சந்தையில் “பொருள் சுருட்டுவதற்கு நேரம் வந்துழி சுருட்டிக்கொள். ஒரு தரம் கிடைத்த வாய்ப்பு மறுதரம் கிடைக்காது” என்பர். ஆனால் நாட்டிலோ வயது கழிவதை வளர்கிறது என்று குறிப்பிடுகின்றனர். ஆம்! உடல் வளர்கிறது! ஆனால் வாழ்க்கை நாள் குறைகிறது. வாழ்க்கையின் படிகளில் மனிதன் வெள்ளி விழா, பொன் விழா, மணிவிழா, முத்துவிழா என்றெல்லாம் கொண்டாடி மகிழ்கிறான்! அவன் எடுத்துக்கொண்ட விழா, வயதுக்கா? அல்லது பொன்னும் மணியும் போன்ற சாதனைகளுக்கா? வரலாறுதான் கூறவேண்டும்!

யாருடைய வாழ்க்கையில் பொய்ம்மை பெருகுகிறது? பொழுது சுருங்குகிறது, மூளைப் புலன்கள் இயங்கவில்லை! அறிவு இல்லை! ஆள்வினைத் திறம் இல்லை! இரத்த அணுக்கள் மட்டுமே நெளியும் தலை! அதிலும் வெள்ளை அணுக்கள் மிகுதியாக நெளியும் தலை! இந்நிலைக்கு மாற்று என்ன? மருந்து என்ன? அன்புதான் மாற்று! மருந்து! “அன்பலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாற்னார்க்கே!” என்பார் அப்பர்டிகள். மானிட மூளையில் புலன்கள் பல உண்டு. இப்புலன்கள் அனைத்தும் முறையாகத் தூண்டி வளர்க்கப் பெறுதல் வேண்டும். அது நடைபெறுவதில்லை. இன்றைய கல்விமுறை நினைவுப் புலனையும், சமுதாயம் தேவைப் புலனையும் தொட்டுத் தூண்டி விடுகின்றன. ஆனால், சிந்தனை, படைப்பாற்றல், அன்பு முதலிய புலன்கள் தொடப்படுவது கூட இல்லை. அன்புப் புலன் தூண்டி வளர்க்கப் பெற்றால் வையகம் வளரும்; வாழும். இறைவனை அடைவதற்கு அன்பே தேவை. அம்மையும் அப்பனுமாக ஆட்கொண்டருளும் ஈசன் கூட அன்பின் வலைக்குள்தான் அகப்படுகின்றார். சிவபோகம், பெருமானின் கருணையினால் விளைவதன்று. ஆன்மாவின் அன்பினில்-ஆற்றல் மிக்க அன்பினில் விளைவதே சிவபோகம்! அம்மை சிவசக்தி ஆன்மாவுக்கு வாழ்க்கையில் விருப்பத்தை உண்டாக்குகிறாள். ஆன்மாக்கள் வாழ்தல் வேண்டும்; நன்றாக வாழ்தல் வேண்டும். வாழ்வதற்குரிய பொன் வேண்டும் என்பதனாலேயே அன்னை பராசக்தி-சிவசக்தி, காமாட்சியாக விளங்குகிறாள். அதனாலேயே அவள் காமாட்சி என்று அழைக்கப்படுகிறாள்! அன்னை காமாட்சியின் கையில் கரும்பு வில்! ஏன்? கரும்பு வில் காமத்தின் சின்னம்! சிவம்-பரமசிவம் துணையாக இருந்து துறப்பிப்பது! அப்பன் சிவம், ஒளி பெருக்கும் சிவம்! ஞான ஒளி! செம்மை! அனைத்து நலன்களும் சேர்ந்தது செம்மை! இம்மை, மறுமை நலன்களை வழங்கும் செல்வம்! ‘செல்வன் சுழலேத்தும் செல்வம் செல்வமே!’ என்று திருஞானசம்பந்தரும் அருளிச் செய்தார்.

“செத்த பிறகு சிவலோகம்” என்பது பித்தர் கூறும் வார்த்தை! இங்கேயே இன்ப அன்பு கிடைக்கும்! இங்கேயே வாழலாம்! இம்மையே நன்மை தருவார்! இப்பிறப்பிலேயே இன்பம்! இந்த மண்ணிலேயே விண்ணகம்! இந்த மண்ணில் விண்ணரசு என்பதே மானிட வாழ்வின் இலக்கு! அதனாலன்றோ சிவன், இந்தப் புவிக்கோளத்தைச் சுற்றி வருகிறான்! மனிதன் பின்னே நடந்து வருகிறான். சிவம் ஆட்கொள்ளும் களம், இந்த பூமிதான்! திருக்குறள் கடவுள் வாழ்த்தில்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்கிறது. இதில் மரபு வழி காணும் பொருள் நிற்கப், புதிய கோணத்தில் பார்க்கலாமே! பழைய காலத்தில் ‘அ’ எழுத்து பெரியதாக இருக்கும். ‘அ’ என்ற எழுத்தின் மேற் பகுதியில் ஒரு புள்ளியில் தொடங்குகிறது. அந்த வட்டமானது கோணல் இல்லாதது. கோணல் இல்லாத வட்டம் “குறைவிலா நிறைவை”க் குறிக்கும். அது பரம்பொருள் - சிவம்! அந்த வட்டத்திலிருந்து எழுத்து தொடங்கி கீழிறங்குகிறது. இது, பரமசிவம் உயிர்களை நோக்கி இறங்கி வருவதைப் புலப்படுத்துகிறது. ‘அ’ எழுத்தின் கீழ்ப்பகுதி வளைவுள்ளது; நடுப்பகுதி தொந்தி போல் வளைந்து தொங்கும். இந்தப் பகுதி உயிர் தன் முனைப்பில் வாழ்க்கையை நடத்தும் பாங்கைக் குறிப்பது. பின் எழுத்து வளைந்து மேல் நோக்குகிறது. மேல் நோக்கும் மையத்தில் எழுத்து தடித்து இருக்கிறது. மெல்லிய கோடு இந்த ஆணவம் அடங்குதலைக் காட்டுகிறது. குறிக்கோள் சார்ந்த வாழ்க்கை கூர்மைப்படுத்தப்படுகிறது. இதுவரையில் உயிருக்கே உரிய அறியாமையைத் தொடர்ந்து வந்து உயிருக்கு நுகர்வனவெல்லாம் அருளிப் பக்குவப்படுத்தி வந்த சிவம், இந்த இடத்தில் உயிரை முந்திச் சென்று வழிகாட்டுகிறது. அழைத்துச் செல்கிறது. ‘அ’ எழுத்தின் மேற்பகுதி நேர்கோடு. சிவம் உயிரை, பிறவியென்ற வளையத்திலிருந்து விடுதலை செய்து இன்ப அன்பில் திளைக்க வைக்கிறது. அதன் அடையாளம் ‘அ’ என்ற எழுத்து வளைவுகளைக் கடந்து நேர் கோட்டில் முடிகிறது. சிவம் உயிர்களை ஆட்கொண்டருளும் பாங்கினை எடுத்துக் காட்ட இது ஒரு எளிய விளக்கமாகும்.

மாணிக்கவாசகர் அமைச்சராகப் பணி செய்தார்! அவர் தம் அமைச்சுப் பணி சிறப்பாகவே அமைந்திருந்தது.

“எக்கோலம் கொண்டால் என்ன
ஏதவத்தைப் பட்டால் என்ன
முத்தர் மனமிருக்கும் மோனத்தே”

என்றபடி மாணிக்கவாசகரின் மனம் அமைச்சுப் பணியில் இருந்தபொழுதும் இறை வாழ்க்கை நடத்தினார்; சிவச் சிந்தனை மறவாமல் இருந்தார். அவர்தம் வாழ்க்கையே தவமாக விளங்கியது.

அரிமர்த்தன பாண்டியன், போருக்கு அரசுக்கு குதிரைகள் வாங்க எண்ணினான். கிழக்குக் கடற்கரையில், அரபு நாட்டுக் குதிரைகள் வந்திருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. அரசன், அமைச்சர் வாதவூரரை அழைத்துக் குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அறநெறியில் வளர்ந்து, சமுதாயச் சிந்தனையில் தழைத்து தவத்தில் முதிர்ந்திருந்த வாதவூரருக்குக் குதிரை வாங்குவதில் விருப்பமில்லை. ஏன்? குதிரைகள் அழகுக்குப் பயன்படும். அல்லது போருக்குப் பயன்படும். போர், மனித உலகத்திற்குத் தீயது. எந்தச் சூழ்நிலையிலும் போரைத் தவிர்க்க வேண்டும். அரசுக்கு மக்கள் வரி செலுத்தவது ஆள்கிறவர்கள் ஆரவாரத்துடன், ஆடம்பரமாக வாழ்வதற்கு அல்ல, மக்கட் சமுதாயத்தின் தேவை பலப்பல! ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே அந்தத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள இயலாது. கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, உத்தரவாதம் போன்றவற்றை அரசுதான் செய்ய இயலும். ஏன்? அரசிடம் மட்டுமே தொகுப்பு நிதியம் இருக்க வாய்ப்பு இருக்கிறது; மேலாண்மையும் இருக்கிறது. அதனாலேயே “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே” என்று புறநானூறு பேசுகிறது. ஆதலால், வாதவூரருக்குக் குதிரைகள் வாங்க தொடக்க நிலையில் முழு விருப்பம் இல்லை. ஆயினும் அரசின் ஆணையை மேற்கொண்டு கிழக்குக் கடற்கரையில் உள்ள திருப்பெருந்துறைக்கு வருகிறார். திருப்பெருந்துறையை அணுக, அணுக வாதவூரரின் சிந்தனை வளர்கிறது. குதிரைகள் வாங்க ஒருப்படவில்லை. இதற்கு முதற் காரணம் தவம் பயந்த நெஞ்சம்! குதிரைகள் வாங்குவதற்குப் பதிலாகத் திருக்கோயில் கட்டுகிறார். அரசின் பணம் அரசின் ஆணை குதிரைகள் வாங்கவேண்டும் என்பது! ஆனால் வாதவூரர் திருக்கோயில் கட்டுகிறார்! இதற்கு முதற் காரணம் சிவம் ஆட்கொண்டருளியதால் ஏற்பட்ட மாற்றம் மட்டும் அல்ல. குதிரைகள் வாங்கினால் போருக்கு மட்டுமே பயன்படும். திருக்கோயில் கட்டினால் மக்கள் வழிபட்டு இன்புறுவர்; சிற்பம் வளரும்; ஓவியம் வளரும்; இசை வளரும்: வேலை வாய்ப்புப் பெருகும். ஆதலால், சமுதாயத்தின் மையமாக விளங்கும் திருக்கோயில் கட்டினார். அரசன் ஆணை என்னாவது? வாதவூரர் முதலமைச்சர்! அரசனால் மதிக்கப் பெற்ற முதலமைச்சர்! ஆதலால் வாதவூரரின் எண்ணம் அரசன் செய்யும் பணியின் நன்மை நோக்கி ஏற்பன் என்பது. ஆனால், அரசன் வாதவூரர் செயலை ஏற்றுக் கொண்டானில்லை. வாதவூரர் தண்டனைக்கு ஆளாகிறார். வாதவூரருக்காக இறைவனும் தண்டனை-பிரம்படி பெறுகிறான்.

அருட்செல்வர் நாடிய மாணிக்கவாசகர் ஆட்சியில் பொருளும் பயனும் அன்பில் மாறாமல் இருந்ததால் இந்த மடை மாற்றம்; அவர்தம் அன்பினில் சிவம் விளைந்தது! அன்பும் சிவமும் கலந்த மாணிக்கவாசகரால் திருவாசகம் விளைந்தது! திருவாசகம் நம்மனோர் இதயத்தில் இருளகற்றி இன்பம் விளைவிக்கிறது.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!

(பிடித்தபத்து-3)
பிணக்கிலாப் பெருவாழ்வு

மனித வாழ்க்கையைத் துன்ப மயமாக்குவது பிணக்கு. நம்பிக்கையும்-நல்லெண்ணமும் பயிலாத நெஞ்சில் பிணக்குத் தோன்றுகிறது; அல்லது தோன்றும் வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு-ஒப்புக்கொண்டு மேவிய அன்புடன் வாழும் திறம் இல்லையானாலும் பிணக்குத் தோன்றும். பிணக்கு பகைக்கு வித்திடும். பிணக்கு வாழ்க்கையில் அமைதியைச் சீர்குலைக்கும். கெட்ட போரிடும் உலகம் தோன்றுவதே பிணக்கினால்தான்.

பிணக்கு வீட்டிலும் தோன்றும்; சமூக அளவிலும் தோன்றும். பிணக்கின் வளர்ச்சியே வேந்தலைக்கும் கொல் குறும்பு! பிணக்குகளைத் தவிர்த்து வாழ்தலே சிறப்பு. ‘நான்’ ‘எனது’ என்ற செருக்குகளை அகற்றினால் பிணக்குகள் தோன்றா!

ஆற்று வெள்ளத்தில் ‘சுழி’ தோன்றும். இச்சுழியில் சிக்கியோர் எவரும் தப்புதல் அரிது. அதுபோலவே மனிதனும் சாதி, குலம் என்னும் சுழிகளில் சிக்கிக் கொள்ளுதல் அறியாமையேயாம். ‘நான்’, ‘எனது’ என்ற உணர்வு செத்தால் தான் ஆன்மா உய்திநிலையை எய்தும். இந்த உலகில் துன்பங்கள் பலவானாலும் அவற்றிற்குரிய காரணங்கள் இரண்டேயாம், ஒன்று உடல் சார்ந்த ‘நான்’ என்ற அகங்காரம். மற்றொன்று உடைமை சார்ந்த ‘எனது’ என்ற மமகாரம். ‘நான்’, ‘எனது’ என்ற விருப்பங்களிலிருந்து விடுதலை பெறுதல் துன்பத்திலிருந்து விடுதலை பெறுதலுக்குரிய ஒரே வழி. தமக்கு வேண்டுவனவெல்லாம் மற்றவர்க்கும் வேண்டுவனவே என்ற எண்ணப்போக்கு வளரின் பிணக்குகளைத் தவிர்க்கலாம். தமது உரிமையை அழுத்தாமல் மற்றவர் உரிமைகளை மதித்தால்- வழங்கினால் பிணக்குகள் வரா. அழுக்காறு, புறங்கூறல் ஆகிய உறவுகளுக்கு எதிரான கேடுகளை அகற்றுதல் பிணக்கு வராமல் தடுப்பதற்குரிய தலையாய வழி! மற்றவர்களுக்கு ஊறு விளைவிப்பதில்லை என்ற நோன்பு மேற்கொள்வதாலும் பிணக்கினைத் தவிர்த்துப் பெருவாழ்வு வாழலாம்.

பொதுவாகப் பிணக்குகளைத் தவிர்த்து வாழ்தல் மனிதம் சிறக்க வழி! பிணக்குகள், சிறியன சிந்தித்து, சிறியன செய்வோர் மாட்டே தோன்றும்! பெரியதாக நினைப்பது, விரிந்த பரந்த மனப்பான்மையைப் பெறுவது, நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் பழகுவது, உறவுக்கு முதலிடம் கொடுப்பது, யார் மாட்டும் அடக்கமாக இருப்பது ஆகிய நற்பண்புகளை மேற்கொண்டொழுகுதல் பிணக்குகளைத் தவிர்க்க வழி! பிணக்கு தீய பண்பு. திருவருளுக்கு எதிரானது. ஒருமைக்குப் பகை பிணக்கு. பிணக்கு உடையோர் இம்மையிலும் வாழ்வாங்கு வாழ்தல் இயலாது; மறுமையிலும் பயன் எய்தார். ஆதலால் பிணக்கில்லாத பெருவாழ்வு வாழ முயல்வோமாக!

திருப்பெருந்துறை திருத்தலம்! நமது மலம் மூன்றும் கெட, சிவானந்த வெள்ளம் மேவிய, குதிரைச் சேவகனாய் எழுந்தருளிய பெருமான் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பதால் திருப்பெருந்துறையை வாழ்த்து மின்! திருப்பெருந்துறையை வாழ்த்தின் பிறவிக் காட்டின் கருவும் கெடும்! திருப்பெருந்துறை பிணக்கிலாத பெருந்துறை, பிணக்கிலாமையால் பெருந்துறையாயிற்று. பெருந்துறை ஊர், தலம்! ஆங்குப் பிணக்கு இலாதார் வாழ்ந்தமையால் அது பெருந்துறையாயிற்று. பெருந்துறை! திருப்பெருந்துறை! திருநலஞ்செறிந்த திருப்பெருந்துறை! மக்களாகப் பிறந்தோர் அனைவரும் விரும்பும் பெருந்துறை! பெருந்துறை பெருந்துறை என்று பேசியே துன்பங் கெடுத்து வாழலாம். இருளகற்றி இன்பம் பெருக்கித் துன்பத்தின் தொடர்பு அறுத்து வாழ்தல் கூடும் திருப்பெருந்துறையைச் சார்ந்தால்! திருப்பெருந்துறைப் பெருமானே! ஆன்மாக்களிடத்தில் பிணக்கிலாத பெருமானே! உன்னை ஏசினும் ஏத்தினும் பிணக்குக் கொள்ளாது அருள்பொழியும் பெருமானே! உன் நாமங்களையே பேசுவர்! இங்ஙனம் திருப்பெருந்துறைச் சிவபெருமான் திருநாமத்தையே பேசுபவர்களுக்கு எதிர் வரும் துன்பம் துடைக்கப்பெறும்.

நேற்றைய துன்பம் அறியாமையால் விளைந்தது! இன்று அதன் தொடர்ச்சி! ஏன்? எதிர்வரும் காலத்திலும் துன்பம்! அந்த எதிர்வரும் துன்பத்தையேனும் தடுத்தலாகாதா? தடுக்கலாம்! எப்படி? எப்போதும் பிணக்கிலாது வாழ்க! பிணக்கிலாத பெருந்துறையைச் சேருக! திருப்பெருந்துறையுறை பெருமானின் திருநாமங்களைப் பேசுக! எதிர்வரும் துன்பம் துடைக்கப்பெறும்! இணையில்லாத இன்பமும் வந்தடையும்! திருவருளின்பம் இச்சையினால் அடையக்கூடியதொன்றன்று! தவத்தால், சீலத்தால், நோன்பால் மட்டுமே எய்த முடியும்!

பிறவிக்கு-பிறவித் துன்பத்துக்கு வித்து ஆணவம்! ஆன்மாவை இயல்பாகவே பற்றியிருப்பது ஆணவம்! இந்த ஆணவம் என்றும் காயாமல் முளைக்கும் இயல்பினது! ஆணவத்தை அழித்தல் இயலாது. ஆணவத்தின் செயல் திறனை முடக்கலாம். ஆணவத்தின் ஆற்றலை அடக்கலாம். வினை செயல் உயிரின் இயல்பு. மனிதத்துக்கு வினையே உயிர்! வினைகள் என்றால் செயல்கள் என்று பொருள்! செய்யும் செயல்களே பயன் தந்து விடுவதில்லை; செயல் செய்வதன் நோக்கம் என்ன? உள்ளீடு என்ன? அதுவே கைகூடும்! கரும்பு பிடித்தவர் இறந்ததையும் இரும்பு பிடித்தவர் வாழ்ந்ததையும் எண்ணுக! ஆணவம் மேலும் மேலும் அடர்த்து ‘நான்’ ‘எனது’ என்னும் செருக்கினுள் சிக்கித் தலையால் நடந்து திரிந்து ஆகா வினைகள் மேலும் மேலும் செய்தல் வாழும் முறையன்று. ஆணவத்தின் ஆற்றல் மேலோங்கிப் பிறப்பிற்குரிய வித்து மேலும் விளையாமல் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய உத்தி, முதலில் பகைப் புலமாக இருக்கிற ஆணவத்தை அனுகூலமாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு ‘நான்’ ‘எனது’ என்னும் செருக்கினை அடக்கி ஆண்டு தாழ்வெனும் தன்மை உடையதாக மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கி நல்லனவே எண்ணி, நல்லனவே செய்து இடையறாத திருவருள் சிந்தனையுடன் வாழ்ந்தால் மனம் பக்குவமாகி நல்வாழ்க்கைக்குத் துணையாக அமையும். ஆணவத்தின் ஆற்றல் அடங்கிய நிலையில் இறைவனின் திருவருட் சத்தி ஆன்மாவிடத்தில் கருணை பொழியும். இந்தப் பரிபக்குவ நிலையிலும் உயிர்கள்-ஆன்மாக்கள் ஓயாது தொழிற்படும். ஆயினும் பயன் கருதா நிலையில் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அனுபூதி வாழ்க்கையை எய்தும்.

தாம் அடையும் நல்லனவற்றிற்கு மகிழ்தல், அல்லனவற்றிற்குத் துயருறுதல் நெறியுமன்று; முறையுமன்று. வெற்றியும் தோல்வியும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருபவையல்ல. தொடர்கதைதான். வெற்றி - தோல்வி என்ற மனப்போக்கு சச்சரவுக்குக் காரணமாக அமையும். ஒருவனுடைய வெற்றி, தோற்றவனுடைய உள்ளத்தில் அவமானமாக உறுத்தி அவன் மீண்டும் தன் தோல்வியை வெற்றியாக்க முயல்வான். மீண்டும் போர்! ஆதலால், வெற்றியை வெற்றியாகக் கொள்ளாது தோற்றவர்கள் வெற்றி பெற்றதைப் போல மகிழ்தலுக்குரியன செய்து உயர்த்துக! வாழ்த்துக!

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

(379)

என்று வள்ளுவம் கூறும். தீதும் நன்றும் கண்டு நோதலும் தணிதலும் வேண்டா என்று புறநானூறு கூறும். ஆன்மிகத்தில் வளர்ந்த மாமனிதர்கள் துன்பங்களில் உழலும் பொழுதும் தம் நிலையில் பிறழார்; திரியார். கரை தவறி விழுவதால் கடல் கலங்கி விடுமா என்ன? ஒருபொழுதும் கடல் கலங்காது. சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவோர் துன்பங்களினால் நிலை கலங்கார். அவர்கள் இன்பம் விழைதல் இல்லை! துன்பம் இயற்கை என்று எண்ணுவர். இத்தகு வாழ்வியலையே இருவினை ஒத்தல் என்று சமயவியல் கூறும்.

துன்பங்களுக்காகத் துக்கப்படுதல் விலங்கியல்பு ஆகும். துன்பம் நல்லுணர்வு கொளுத்துவதற்காகவே கிடைத்த சாதனம் என்று சான்றோர் கருதுவர். நல்லதாக நடந்த ஒரு காரியத்திற்குப் பலர் தம்மைக் காரணமாக்கி மகிழ்வர்; பெருமைப்படுவர். அதே போழ்து ஒன்று தீமையாகிவிட்டால்- துன்பமாகிவிட்டால் பழியைப் பலர் மீது தூக்கிப் போடுவர்; விதியை நொந்து கொள்வர். ஏன் இந்த இரட்டை நிலை? நன்மையும் தீமையும் ஏன் ஆன்மாவைப் பாதிக்க வேண்டும்? பானை சுடலாம்! பாலை நேரே சுட வைக்க இயலுமா?

நன்மையையும் தீமையையும் அனுபவிக்கும்பொழுது சமநிலையாகப் பாவித்தல், விருப்பு - வெறுப்புக்கள், காய்தல்- உவத்தல் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுதல்-இருவினை ஒத்தலாகும்.

மாணிக்கவாசகர் முதலமைச்சராக இருந்தபொழுதும் அரச தண்டனைக்கு ஆளாகிய நிலையிலும் சம நிலையில் இருந்தார். அதனாலேயே “நன்றே செய்வாய், பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே!” என்றார். மாணிக்கவாசகர் அவர்தம் வாழ்நிலையில் அடைந்த துன்பங்கள் பலப்பல! ஆனால் ஒருபோதும் மாணிக்கவாசகர் அஞ்சியது இல்லை. அதனால் மாணிக்கவாசகருக்கு இறைவன் கணக்கில் காட்சிகளைக் காட்டியருளியுள்ளான். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஞானாசிரியன்; மதுரையில் குதிரைச் சேவகன், வைகையாற்றங்கரையில் கொற்றாள்! இங்ஙனம் எத்தனை எத்தனை காட்சிகள்! எனவே, “கணக்கிலாத் திருக்கோலம் காட்டினாய்!” என்றார் மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசகரின் திருவுள்ளம் பிணக்குகளினின்று விடுதலை பெற்றது. இறைவன் தன் விருப்பம் தன் விருப்பமாகக் கொண்டவரானார்! “வேண்டுவதும் உன் தன் விருப்பன்றே!” என்பது மணிமொழி. அறிவால் சிவனே யாய நிலை மாணிக்கவாசகருக்குக் கிடைத்ததது.

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்! உன் நாமங்கள் பேசுவார்க்(கு)
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே

(திருக்கழுக்குன்றப் பதிகம்-1)
தனித்துணை

இந்தப் பிறப்பு, துன்ப நீக்கத்திற்காகவே! துன்பத்தின் காரணமாய அறியாமை நீக்கத்திற்காகவே! ஆயினும் உடலுறு வாழ்க்கையில் உயிர் உறும் துன்பம் தாங்கொணாதது; உள்ளவாறு உணரின் தாங்கவே இயலாதது. இத்துயர் அனுபவத்தின் விளைவே- தாக்கமே திருவருட் சிந்தனை!

இறைவன்-சிவபெருமான் உயிருக்கு வாய்த்த தனித்துணை! ‘தனி’ என்ற அடைசொல் சிறப்புப் பற்றியது. உயிருக்கு ஈடும் எடுப்பும் இல்லாத துணையாதலின் ‘தனித்துணை’ என்றார். உயிர் சந்திக்கும் துணைகள் பலப்பல உண்டு. தாயினும் சிறந்த துணை ஏது? ஆயினும் தாய் காலத்தினால் பிரிக்கப்பட்டு விடுகிறாள். இடம், தொலைவு நட்புத் துணையினைப் பிரித்து விடுகிறது. நண்பரெனக் கொள்பவர்களில் பலர் கொடுத்தல் குறைபடும் பொழுது பிரிவர். ஆனால், இறைவன்- சிவன் பிரிவதில்லை. இறைவனுக்கும் உயிருக்குமுள்ள உறவு குறியெதிர்ப்பு இயலானது தன்னலமற்றது. உயிரின் ஆக்கத்திற்காக இறைவன் தொடர்பு. கடவுள்-உயிர் இரண்டுமே காலங் கடந்தவை. ஆதலால், காலத்தால் பிரிவு நிகழ வாய்ப்பு இல்லை. இறைவன் உயிர்க்குயிரதாக இருப்பதால் இடத்தால் பிரிவும் இல்லை. அதுமட்டுமல்ல. “நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும்” இறைவன் பிரிவதில்லை. இறைவன் சொர்க்கத்தில் வெளிப்பட்டும் நரகத்தில் மறைந்திருந்தும் அருள் செய்வான். தாய், மருத்துவத்திற்கு ஆளாகின்ற குழந்தைக்கு மறைந்தே இருப்பாள். பிரியாதது மட்டுமே தனித்துணைக்கு உரிய சிறப்பன்று. உற்றுழி உதவுதலில் இறைவன் தனித் துணையேயாம். நோய்க்கு மட்டுமல்ல; நோயின் மூலத்திற்கும் மருத்துவம் செய்து காப்பாற்றுபவன் இறைவன். பொன்னும் பொருளும் போகமும் தந்தருளி மேலும், திருவையும் சேர்த்து வைப்பவன். ஆதலால் அவன் உயிர்க்குத் தனித்துணை ஆயினன்.

தனித்துணையாகிய இறைவன் ஆட்கொண்டருள, வான்பழித்து இம்மண்ணிற்கு வந்தருள்கின்றான்! இல்லை, இல்லங்கள் தோறும் தேடி எங்கே என்று வந்தருளி நிற்கின்றான். இறைவன் வந்ததைக் கண்டும் காணாமலும் பணியில் ஈடுபட்டிருப்பதாகப் பாவனை காட்டினேன்! நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை! ஆன்மா இருக்கிறது! இறைவன் நிற்கிறான். திருவடி நோக நின்றருள் செய்கின்றனன். நாழிகைகள் ஓடுகின்றன. நாட்கள் ஓடிக் கழிகின்றன. ஆயினும், இறைவனை நிமிர்ந்து பார்க்கும் உளப்பாங்கு வரவில்லை. ‘வருக’- என்று வணங்கி அழைக்கவும் மனம் ஒருப்படவில்லை. முகமன் கூற, உபசரிப்பு செய்ய எழுச்சி கொள்ளவில்லை. இறைவன் சும்மா இருப்பானா? இறைவன் தான் வந்திருப்பதை அறிவிக்கத் தன் திருவடிகளை நிலத்தில் தோயச் செய்து தாளந்தப்பாது தூக்கி எடுத்து வைக்கின்றான். அடக்கமாகக் காலை மாற்றுகிறான். ஆயினும் ஒலி கேட்கிறது. அந்தக் சூழ்நிலையிலும் நான் கண்டு கொள்ளவில்லை.

இறைவன் செருமல் ஒலி செய்கிறான். அப்போதும் நான், “நான்” தான்! அசைந்து கொடுக்கவில்லை. நான் என்ன சாமான்யனா? தலை நிறைய மூளை இருக்கிறது; அறிவு இருக்கிறது. பெற்றிருப்பது அறிவா? அறியாமையா? அது போகப் போகத் தெரியும்! சாயம், வெளுத்துப் போகக் கூடியதுதான். ஆயினும் ஆணவம் ஆட்டிப் படைக்கிறது! தலையால் நடந்தேன்! அம்மையார் நடந்த நடையல்ல! அது தலைக்குச் செய்த நடை! அம்மையார் நடை தவம் செய்த தவம்! ஆனால், நான் நடந்ததோ தருக்கி நடந்த நடை! எனக்குத் துணை எது? வினைதான் துணை! வினை பெருக்கி வினையால் அழியும் அவலத்திற்கு ஏது மருந்து? முற்றாகத் தற்கொலைக்குச் சமம்!

வினை செய்தல் உயிரியற்கை! மனம், உடல், வாக்கால் இடையறாது வினை செய்தலே உயிரியற்கை. வினை செய்தலும் வேண்டும். வினை செய்தலைத் தவிர்த்தலும் இயலாது; கூடாது. உயிரியற்றும் வினை உயிர்க்கு மருந்தாக அமைதல் வேண்டும். தண்ணீரால் உடலைக் கழுவுதலும் அவசியம். ஆயினும் உடன் துடைத்தலும் அவசியம். அதுபோல வினை செய்தலே உயிர் வாழ்க்கை; வினை செய்தலே துன்ப நீக்கத்திற்கு மருந்து. எப்போது வினை செய்தல் துன்பமாகிறது? எப்போது மருந்தாகிறது? வினை செய்தலைத் தவமாகக் கொண்டால் துன்பம் இல்லை; துயரில்லை. வினை செய்தலை வாணிகமாக்கக் கூடாது. அற விலை வாணிகமும் தீதே! வினை செய்தல் வழி, செருக்குக் கொள்ளுதல் ஆகாது. புகழ் வேட்டலும் கூடாது. “பொன் வேண்டேன்; புகழ் வேண்டேன்” என்பது மாணிக்கவாசகர் வாக்கு. “வீடும் வேண்டா விரலின் விளங்கினார்” என்பது சேக்கிழார் வாக்கு. திருவாசகம் முழுதும் பாழ்த்த பிறப்புறுத் தலை நோக்கமாகவுடையது! அதுவும் வீடுபேறு கருதியல்ல! கூத்துடையானைப் பாடிக் களிப்புறுதலுக்கேயாம். என்றும் இறைவனுக்கு அடிமைத் தொண்டு செய்தலுக்கேயாம்.

உயிர், வினை செய்தலை நோன்பாகக் கருத வேண்டும். தனக்கென முயல்வது நோன்பல்ல. பிறருக்கென முயல்வதே நோன்பு. உயிர்கள் செய்யும் பணிகள் பெருந்தன்மைக்குச் சான்று அன்று. அவை கடமை. இந்தப் பரந்த உலகில் வாழ்தலுக்குரிய குடிக்கூலியே தொண்டு, சேவை. வினை செய்க! வையகம் பயனுறச் செய்க!

இறைவன் புறத்தே காணும் துணையல்ல. அகநிலைத் துணை; உயிர்க்குயிரதாக நிற்கும் துணை மனத்திற்கே துணை. உயிர், மனம் வழியேதான் எண்ணுகிறது; இயங்குகிறது. வாழ்க்கையின் முதலும் முடிவுமாகிய கருத்தை உருவாக்குவதே மனம். ‘மனத்துள் நின்ற கருத்தானை’ என்பது தேவாரம். மனமே உலகை நோக்குகிறது; செய்திகளைச் சேகரிக்கிறது; தேவைகளை நிர்ணயிக்கிறது; நிர்ணயித்த தேவைகளை அடைய முயற்சி செய்கிறது. உயிர்க்கு மனத்தொடு புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகநிலைக் கருவிகளும் உண்டு. ஆயினும் மனமே முதல் வாயில்; மனமே முதற்கருவி. மனம் விரும்பினால் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகளையும் பயன்படுத்தலாம். மனம் தனித்து இயங்காது. புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகளைப் பயன்படுத்திச் செய்பவை சிறப்பாக அமையும். மனம் மட்டுமே இயங்கினால் செயற்பாட்டில் உணர்ச்சியும் எழுச்சியுமே மிஞ்சும். மனம் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ள மனிதன் பரபரப்புடையவனாக இருப்பான்; உணர்ச்சி வசப்படுவான்; ஆத்திரப்படுவான்; தீமை செய்து கொள்வான். மனம் வாழ்நிலையின் தொடக்ககமாதலால் அந்த மன நிலையிலேயே இறைவன் துணையாக அமைந்து வழிகாட்டுகிறான்; வழி நடத்துகிறான். ஆனால், பலர் அந்த மனத்தின் அறிவுறுத்தலை, மனச் சாட்சியின் குரலை மதிப்பதில்லை, எடுத்துக்கொள்வதில்லை. மனச்சாட்சியின் குரல், ஆன்மாவின் ஆணவ எடுப்பில் எடுபடாமல் போகிறது. பின் காலம் செல்லச் செல்லப் பட்டறிவின் வழியில்தான் மனச்சாட்சி அங்கீகரிக்கப்பெறுகிறது. அவ்வழி நடக்கும் வாழ்க்கையும் தொடங்குகிறது. இதுவே சமய வாழ்க்கையின் தொடக்கம்.

இந்த நிலைக்கு உயிர்கள் வரும் வரையில் இறைவன் உயிர்களைக் கைவிடமாட்டான்! உயிர் செய்யும் துரிசுகளுக்கு உடந்தையாக இருந்து உடன்போய் பிழைகளைப் பொறுத்தாளாவான். பின் பிழைகளைத் தவிர்க்கவும் கற்றுத்தந்து, பிழைகளைத் தவிர்த்து வாழும் வாழ்நிலையை அருள்வான். ஆணவத்துடன் இரண்டறக் கலந்து முனைப்புடன் வாழும் உயிர்களை- பிழை காணாது பால் கறக்கும் சிலர் பிழுக்கையை ஒதுக்கிப் பாலினை கொள்வதைப் போல ஆட்கொண்டருள்வான். சிறியோர் செய்த பிழையெல்லாம் பொறுக்கும் பெரியோன் இறைவன்.

உயிர்க்கு வாழ்க்கைக்குரிய முதல் எது? முதல்-தொடக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், உயிர் வாழ்க்கைக்குரிய ஆக்கங்கள் அனைத்தையும் வழங்கிய முதல் என்றும் பொருள் கொள்ளலாம். ஆம்! உயிர் என்றுமுளது; உயிர் இயல்பிலேயே ஆணவத்துடன் அத்துவிதமாக முடங்கிக் கிடக்கிறது; அறிவியக்கத்திற்குரிய வாயில்கள் இருந்தும் ஆணவத்தின் கூட்டால் செயலடங்கி முடங்கி மூலையில் கிடக்கிறது. அப்போது இறைவனின் திருவருள் நோக்கம் உயிரின்பால் வீழ்கிறது. அதுவே வாழ்க்கையின் முதல் தொடக்கம்! உயிர்க்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அறிவுக் கருவிகள் அடங்கிய நுண்ணுடல் கிடைக்கிறது. நுண்ணுடல் கிடைத்தவுடன் உயிர்க்கு வாழ்க்கை தொடங்குகிறது; தொடர்கிறது. இந்தத் தொடக்கத்திற்குப் பின் உயிர் செய் கருவிகளடங்கிய பரு உடலைப் பெற்றோர்வழி பெற்று மண்ணில் பிறப்பினைப் பெறுகிறது. இந்தப் பிறப்பில்தான் உயிர் பலமுறை சுற்றி வருகிறது. செயற்பாட்டுக்குரிய உடல் மாறும். அறிகருவிகள் அடங்கிய நுண்ணுடம்பு கடைசி வரையில்-முத்தி நிலை வரையில் தொடரும். இங்ஙனம் உயிர்க்கு வாழ்நிலை முதலாகவும், மனத் துணையாகவும் இருந்து வாழ்க்கையை இயக்கியருள்கிறது திருவருள்!

இந்த உயிர் வாழ்க்கை, வினைச்செயல், பயன் துய்த்தல், சாதல், பிற என்று தொடர்ந்து வருகிறது. கறங்குபோல் சுற்றிச் சுற்றி வருகிறது. இதனைத் துய்த்துவரும் பொழுதுதான் வாழ்க்கை துன்பமடைகிறது. வாழ்க்கையை இன்பமாக்கினாலும் இன்பத்தின் நிழலாகத் துன்பமே தொடர்கிறது! உயிர் உற்று அனுபவிக்கும் இன்பம், துன்பம் இரண்டுமே வினைக்கு முதல். துன்பத்திற்குக் காரணம்; பிறவிக்கு வித்து. மனம் எளிதில் நிறைவு பெறாது. அவா- ஆசை, கடல் அலைபோல் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் இயல்பினது. ஒரோவழி ஆவல் நிறைவெய்தி மனம் நிறைவு கொண்டாலும் இந்த மன நிறைவு நிலையானது அல்ல. இந்த மன நிறைவும் குறைந்த காலத்திற்கே இருக்கும்; மயக்கம் பொருந்தியதாகவும் இருக்கும். மனவெழுச்சி விரிவடையும் தன்மையுடையது, ஆசை வெட்கமறியாது. மனம் தனது ஆசையை நிறைவேற்ற மட்டும் உரத்த கூச்சலிடும். மனம், தன் வயப்பட்டுக் கிடக்கும். மனிதர்களை ஆட்டிப்படைக்கும்; அடிமைப்படுத்தும்; சுதந்திரத்தைப் பறிக்கும். இதனால், உயிர் ஓயாது வினை இயற்றியும் இன்ப துன்பச் சுழற்சியில் சிக்கியும் அனுபவித்தும் அனுபவியாமலும், இந்த உலகில் ஏற்படும் அநாகரிகத் தன்மையுடையோர்களால் தாக்குண்டும் பாதிப்புக்குள்ளாகும். உயிர் செத்தும் பிறந்தும் சுற்றிச் சுற்றி வந்ததால் உடலுறு உளைச்சல், மன உளைச்சல்களுக்கு இரையாகி எய்த்துப் போகிறது; களைத்துப் போகிறது. எய்ப்பிலும் களைப்பிலும் வைப்புப் பொருள் போல் இறைவன் துணை செய்கிறான்; ‘அஞ்சல்’ என்று அருள் செய்கிறான். மந்திரமும் மருந்தும் ஆகி நின்றருள் செய்கிறான். ஆதலால், துன்பத்தின் முடிவில் எய்ப்பினில் வைப்பாக விளங்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றுதல் வேண்டும். இத்தருணத்தில் பற்றவேண்டியது அவன் திருவடிகளையே! இந்த நிலையிலேயே மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்து, கற்று, முதலமைச்சராகி, அரசுப் பணிகள் செய்து எய்த்துக் களைத்த நிலையிலேயே திருப்பெருந்துறை இறைவனைச் சரண் அடைகின்றார். “எய்ப்பினில் வைப்பு” என்று எண்ணி அடைக்கலம் புகுகின்றார். திருப்பெருந்துறைச் சிவனும் ஆட்கொண்டருள்கின்றான். உயிர்களை இறைவன் ஆட்கொண்டருளிய பிறகு, உயிர்கள் இறைவனின் அடைக்கலப் பொருள்களாகின்றன. பாதுகாப்பது இறைவனின் பொறுப்பு. இங்ஙனம் அடைக்கலப் பொருள்களாகிய உயிர்களைக் காக்கவே திருவிளையாடல்கள்! மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்ட பிறகு, மாணிக்கவாசகரின் பணிகள் இறைவனின் பணிகளாயின. மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைச் சேவகனாகிறான்! கொற்றாளாகிறான். இது நியதி.

பிறவி, நோய் நீக்கத்திற்குரிய மருந்தே யாம்! ஆயினும், தெளிவும் தெளிவினுட் சிவமும் தோன்றும் வரை பிறவி ஒரு வலைதான்! துன்பந்தான்! இந்தப் பிறவி வலையை அறுத்தெறிய முயலுவதே வாழ்க்கையின் நோக்கம்; பயன்! மாணிக்கவாசகர் பழுத்த மனத்தராகிறார். புளியம்பழம் போலத்தான் மாணிக்கவாசகர் தம் வாழ்வியல் அமைந்திருந்தது. ஆதலால், வாழ்க்கை உவர்ப்பாகிறது. இறைவன் திருவடிகளையே பேசுதல் தவமாகிறது; வாழ்வாகிறது.

பிறந்து வினை பல செய்து நுகருமாறு நுகர்ந்து எய்த்துக் களைத்துப்போய் எய்ப்பினில் வைப்பாக என்றும் தனித் துணையாக விளங்கக்கூடிய இறைவன் திருவடிகளைப் பற்றுதலே வாழ்க்கை; வாழ்க்கையின் பயன்!

தனித்துணை நீ நிற்க யான்தருக்
கித்தலை யால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்
டாய் வினை யேனுடைய

மனத்துணை யே!என்தன் வாழ்ழுத
லேஎனக் கெய்ப்பில் வைப்பே!
தினைத்துணை யேனும் பொறேன்
துயராக்கையின் திண்வ லையே!

(நீத்தல் விண்ணப்பம்-39)
அறியாது கெட்டேன்!

நோய்! புதிய நோய்கள்! உடல் நோய்! ஆன்மாவின் நோய்! ஏன் நோய்? எதனால் நோய்? காரணங்களைத் தேடின் மூச்சு வாங்கும்! ஓர் உண்மை புலனாகிறது! நோய்க்குரிய காரணங்களில் பழையன மட்டுமல்ல! புதியனவும் உண்டு! பழைய காலத்தில் அழுக்காறு என்ற நோய்க்குக் காரணம் உடைமைச் சார்புடையதாகவே அமைந்திருந்தது. இன்றோ புகழும் காரணமாக அமைந்திருக்கிறது! நோய் இயற்கையன்று! நோய்க்குப் பழ வினைகள் காரணமல்ல. நோய் செயற்கை, நோய் வரவேற்றுக்கொள்வது! நோய்க்கும் இவன் புதியவனே! சுவை நாடி உண்டமை, உழைப்பில்லாத வாழ்க்கை, தூய்மையற்ற உடல், தூய்மையற்ற மனம், கெட்ட புத்தி, அறியாமையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஆன்மா இவையெல்லாம் நோய்க்குக் காரணங்கள்!

உலகம் முன்னேறுவது, நொடிகள் தோறும் முன்னேறுவது. ஒரு நொடிப் பொழுது அயர்ந்தாலும் உலகம் நெடுந்தொலைவு போய்விடும்! நாம் பின்தங்கி விட்க்கூடாது! துறை தோறும் முன்னேற்ற நிலை பராமரிக்கப்பெறுதல் வேண்டும். அறிவில் பிற்பட்டிருந்தால்- அறிவிருந்தாலும் உலக அறிவை நோக்க அறியாமையாகவே கொள்ளப்பெறும்! அறிவு வளர்வது; இடையீடின்றித் தொடர்ந்து வளர்வது! ‘அறி தோறும், அறியாமை’ என்று திருக்குறள் பேசும்! இன்றைய அறிவே அறிவு; வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் அறிவு; உழைப்பு உழைப்புத் திறன் வளரும் இயல்பினது. உடலியக்கத்திற்குரிய உணவு, உழைப்பின் வழியேதான் படைக்கப்படுகிறது! உழைத்து உண்பது அறம்! உழைத்து உண்பது ஒழுக்கம்! அறிவின் ஆக்கத்தில் பின்னடைவு; உழைப்பில் பின்னடைவு! இங்ஙனம் துறைதோறும் பின்னடைவுகள் தோன்றின் நோய்க்கு ஆளாவது இயற்கை!

நோய்வாய்ப்பட்ட பிறகு நெஞ்சில் கவலை பிறக்கும்; துன்பமும் துயரமும் வருத்தும்; அமைதி விடைபெறும்; இன்பம் விலைப்பொருளாகிவிடும்; வாழ்க்கை கசக்கும். ஆதலின் பிற்படா நிலையில் நொடிகள் தோறும் துறை தோறும் முன்னேற்றத்தைப் பராமரிக்க வேண்டும். மாணிக்கவாசகர் நோய்க்கு எளிதில் இரையாகக்கூடிய அமைச்சுப் பதவியில் இருந்தார். அமைச்சுப் பதவி “கடின”மான பதவி. ஆன்ம நலன்களைக் கெடுக்கும். அதிகாரம் அமைச்சுப் பதவிக்கு உண்டு! இருக்கும் இடம் உயரமானது! பெரிய இடத்தில் சின்னப் புத்தி தலைகாட்டும். ஆனால், உடலும் ஆன்மாவும் எளிதில் நோய்வாய்ப்படும் நிலை, ஆன்ம நலன்களில் பிற்பட்ட நிலை!

பிற்பட்ட நிலை மாற்றப்படுதல் வேண்டும். முன்னேற்றம் தேவை. முன்னேற்றம் கருதிய வாழ்க்கைக்கு முதலில் உரிய சுற்றம் அமைய வேண்டும்! நல்ல பழக்கங்கள் வேண்டும்; வழக்கங்கள் வேண்டும். ஒருவருக்குக் கெட்ட பழக்கங்கள் எளிதில் விலை இல்லாமலே கூடக் கடை விதியில் கிடைக்கும்! ஆனால் நல்ல பழக்கங்கள் எளிதில் கிடைக்கா. வழக்கங்கள் சொல்லவே வேண்டாம்! நல்ல பழக்கங்கள்தான் நல்ல வழக்கங்களாக மாறுகின்றன. ஆன்மா சிறந்த நலன்களைப் பெற்று முன்னேற வேண்டுமாயின் நல்லோர் கூட்டு வேண்டும். நல்லோர் இணக்கம் வேண்டும். நல்லோருடன் பழகவேண்டும். அங்ஙனம் தேர்ந்தெடுத்துப் பழகும் நல்லோரும்கூட வழி வழி நல்ல மரபினராயிருந்தால் காலம், தேசம், வர்த்தமானம் அவர்களை மாற்றா. அவர்களே பழ அடியார்கள்; என்றும் நல்லவர்கள்! தற்காலிகமாக இன்று பிழைப்புக் கருதி அடியார்களானவர்கள் பிச்சைக்காரர்கள்! இவர்களில் நடிப்பவர்களும் இருக்கலாம். பழைய அடியாரொடுப் பழுத்த மனத்தடியாரொடும் கூட்டு இருந்தால் அவர்கள் நம்மை வளர்ப்பார்கள். நம்மைப் பாதுகாப்பார்கள். காலைக் கதிரவன் ஒளியில் தோயும் இமயம் பொன்னொளி பெற்று விளங்கும். அப்போது அந்த இமயத்தைச் சார்ந்த காக்கையும் பொன்னொளி பெற்று விளங்கும். இமயம் சார்ந்த காக்கை பொன்னிறம் பெறும் என்பார் விபுலானந்தர். பழைய அடியாரொடும் கூடி வாழாமல் அரசன், அமைச்சர்கள் படைத்த தளபதிகள் ஆகியோருடன் கூடி வாழ்ந்து கழிந்த காலத்தை மாணிக்கவாசகர் எண்ணி வருந்துகிறார். பழைய அடியாருடன் கூடி வாழ்ந்தால் நோய் வராது. பிற்படுத்தலுக்குரிய சூழலும் தோன்றாது. ஆதலால், மாணிக்கவாசகர் பழைய அடியாருடன் கூடி வாழ்தலை விரும்புகின்றார்.

பழைய அடியாருடன் கூடி வாழ்தல் எப்போது கிடைக்கும்? பழைய அடியார்கள் பழுத்த அடியார்கள்! புளியம்பழம் போல் வாழ்கிறவர்கள்! அவர்கள் கூட்டத்தில் சேர்வது கடினம்! அவர்களுடன் கூடி வாழ்வது கடினம்! நெய், வேப்பெண்ணெய் என்று வேறுபாடு கருதாது சுவையுணர்வு கெட்டு உண்ணும் பழக்கம் வேண்டும். ‘நான்’ ‘எனது’ என்ற செருக்கறுதல் வேண்டும். காய் கதிர்ச்செல்வனின் கதிரொளிக் கற்றைகளும் மழை வழங்கும் புனலும் மரத்தின் வேர்களும் தாழ்ந்து தாழ்ந்து செல்லுதல் போலத் தாழ்வெனும் தன்மையுடன் வாழ்தல் வேண்டும். இறைவனிடம் பிறந்து மொழி பயின்ற நாள் தொடங்கி இடையீடின்றித் தொடர்ந்து பத்திமை செலுத்த வேண்டும். பெருமிதமும் வீரமும் செறிந்த அடிமைப் பண்பு வேண்டும்! அன்பிலும் அன்பின் திட்டத்திலும் அன்பின் ஆற்றலிலும் நம்பிக்கை வேண்டும். அச்சத்தைத் தவிர்க்கவேண்டும். “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்று வாழ்தல் வேண்டும். அச்சம் அன்புக்குப் பகை; உறவுக்கு எதிரி. அச்சம் பத்திமைக்கு எதிரிடையானது. அச்சம் தவிர்த்தவர்களே அடியார்கள்! பழ அடியார்கள்! மாணிக்கவாசகருக்கு அச்சமில்லை! “எங்கு எழில் என் ஞாயிறு” என்றார். ஞாயிறு திரியும் திசை மாறினால் துன்பம் வரும். அத்துன்பமும் தன்னைத் தீண்டாது! இது மாணிக்கவாசகரின் திட்டம்! உறுதி! மாணிக்கவாசகர் அச்சமின்றி வாழ்ந்தார். மாணிக்கவாசகர் “அச்சம் தவிர்த்தாண்ட” சேவனாகிய திருப்பெருந்துறையுறை சிவனுக்கு உடைமையானார். உலகியல் வாழ்க்கையில் உடைமை மிகுதியும் பேணப்படுகிறது. உடைமைக்கு உள்ள மதிப்பு மனிதனுக்குக்கூட இல்லை. காரணம் உடைமை வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. அருளியல் வாழ்க்கையிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் உடைமையாதலுக்கு மதிப்பு உண்டு. பங்கமில்லாத உரிமைக்கு உடமையாதல் அவசியம். அதாவது நம்முடைய தோழனுக்கு நாம் உடைமையாதல், நட்பியல் வாழ்க்கையில் உடைமையான வழி உறவுகள் வளரும்; உரிமைகள் அமையும். நல்ல பாதுகாப்புக் கிடைக்கும்; இருபாலும் கிடைக்கும். ஆன்மிக வாழ்க்கையில் இறைவனுக்கு நாம் உடைமையாகிவிட்டால் அவன் நம்மை வளர்ப்பான்; காப்பான்! நாம் கவலையின்றி வாழலாம்! நாம் உலக உடைமைகளுக்கும் உரிமைக்காரராக விளங்கும் வரையில் இறைவனுக்கு உடமைக்காரராதல் அரிது. கடவுளுக்கும் சைத்தானுக்கும் ஒரே நேரத்தில் தொண்டு செய்ய முடியாது. இரண்டு எஜமானருக்கு ஒரே நேரத்தில் சேவை செய்தல் ஒல்லுமோ? மாணிக்கவாசகர் அமைச்சுப் பதவியில் இருந்தவரை அவர், அரசருக்கு உடைமையாக இருந்தார். அமைச்சுப் பதவியை உடைமையாகப் பெற்றிருந்தார். அதுவும்கூட உடைமையாக அல்ல. உடைமையாகப் பெற்றிருந்தால் குதிரைகள் வாங்காததை, திருக்கோயில் கட்டியதைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டிருப்பான். வரலாறே திசை திரும்பியிருக்கும். பாண்டியனுக்கு மாணிக்கவாசகர் உடைமைக்காரராகவும் இல்லை. அடிமைக்காரராகவே இருந்தார்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையை அடைகின்றார். அறிவு நிலை மாறுகிறது; உணர்வு நிலை மாறுகிறது. திருப்பெருந்துறையுறை சிவனுக்குத் தாம் உடைமைப் பொருள் என்பதை உணர்கின்றார். திருப்பெருந்துறைச் சிவனுக்கு உடைமையாய்- அடிமையாய் வாழ விரும்புகின்றார். திருப்பெருந்துறைச் சிவனைக் கூவி அழைக்கின்றார். திருப்பெருந்துறைச் சிவனுக்கு உடைமைக்காரராய் வாழாது கழித்த நாளை நினைந்து இரங்குகின்றார். இதனால், திருப்பெருந்துறைச் சிவன் தன்னைத் தன் உடைமைக்காரன் என்று ஏற்பானா? அங்கீகரிப்பானா? புறத்தே தள்ளி விடுவானே எண்ணி அழுதரற்றிப் பாடிடும் பாடல்கள் என்பையும் உருக்குந்தகையன. பழைய அடியார் நின்பால் வந்தார், நானும் நோயும் புறமே போந்தோம் என்று பாடுகின்றார். இறைவனை, திருப்பெருந்துறைச் சிவனைக்காண நாணி நிற்பதாகப் பாடுகின்றார். “இறைவனுக்கு உடைமைப் பொருளாகிவிட்டால் அவன் வாழ்விப்பான்! பாரம், தோள் மாறும்!” “என்ன குறையும் இலோம்” என்று வாழலாம். மாணிக்கவாசகரின் துன்பம் நீக்க, திருப்பெருந்துறைச் சிவன் குதிரைச் சேவகனாக, கொற்றாளாக வந்தருளிய பாங்கினை அறிக.

இறைவன் உறவே பழைய உறவு! இருள் மலத்துள் மூலையில் முடங்கிக் கிடந்த ஆன்மாவைக் கருவி, கரணங்களுடன் இணைத்துப் பிறப்பில் ஈடுபடுத்தி அறிவொளிக் கதவைத் திறந்ததே இறைவன்தானே. இறைவன் நமக்கு நன்றே செய்தான்! யாதொரு பிழையும் செய்தானில்லை! இறைவன் ஆன்மாவுக்கு மானுடம் என்ற மதிப்புயர் வாழ்க்கையைத் தந்தருளினான். மானுடம் என்ற நிலை, வரலாறு படைப்பது. மானுடம் ஆற்றல் மிக்கது; படைப்பாற்றலுடையது. அறிவுப்புலன்கள்! படைப்பாற்றல் உடையது உடல்! படைப்பாற்றலுக்குரிய உலகம்! அன்பு சுரக்கும் இதயம்! அம்மம்ம! இந்த மானுடப் பிறவியின் ஆற்றலை வியந்து எழுத ஏது சொற்கள்! அற்புதமானது! அற்புதமானது! மானுடமாகிய வாழ்நிலையை ஆன்மாவுக்கு இறைவன் தந்தருளினன். இறைவனால் யாதொரு குறையும் இல்லை! நமக்குத்தான் இறைவன் அளித்த மானுடப் பிறப்பின் அருமை புரியவில்லை! உலகம் பற்றிய அறிவு இல்லை! பொறிபுலன்களை ஆட்சி செய்யத் தெரியவில்லை. வண்டிக்காரன் மாடு இழுத்த வழிக்கு வண்டியை விட்டு விடுவது போல, நமது வாழ்க்கையை மனம் என்ற குதிரை இழுத்த வழி விட்டுவிட்டுத் துன்பத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு அழுகின்றோம்; புலம்புகின்றோம்! இந்த உலகம் துன்பமானது என்று முகாரி ராகம் பாடுகின்றோம். வாழ்க்கையைக் கசப்பாக்கிக் கொண்டு ஒன்று கொலை செய்கின்றோம். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றோம்! ஏன் இந்த அவலம்?

இன்பமாக வாழ இறைவன் மானுடம் என்ற பதத்தை அருளினன். இறைவன்பால் குறையில்லை! என்றும் இன்பமாக வாழலாம். ஆனால் நாம் மானுடத்தின் இயல்பு அறியாது கெடுத்தோம்! கெட்டுப்போனோம்! இம்மையையும் இழந்தோம்! மறுமையையும் இழந்தோம்! இறைவனுக்கு உடைமைக்காரனாகாமல் பொறிகளுக்கே உடைமையானோம். நம்மை உடைமையாகப் பெற்ற பொறிகளும் புலன்களும் இச்சைக்கு ஆளாக்கி அடிமையாக்கி இந்த வாழ்க்கையை சொத்தையாக்கி விட்டன. நன்னெறிப் படுத்தும் பழைய அடியாரொடும் கூடுவதில்லை. மாறாக நகர் திரிதரு நம்பியருடன் கூட்டு! வறுமொழியாளரொடு கூட்டு! வம்பப் பரத்தரொடு கூட்டு! இதனால் வாழ்நிலை பின் தங்கிவிட்டது! என்னை ஒத்தார் எங்கோ சென்று உயர்ந்து விட்டனர். நமது நிலை பின் தங்கிய நிலை. வாழ்வு பின் தங்கியது மட்டுமா? நோய்க்கு விருந்தானோம்! இதிலிருந்து தப்ப என்ன வழி! மானுடம் என்ற பதந்தந்த வாழ்முதலை, இறைவனை நினைந்து நினைந்து அவனுக்கு உடைமைப் பொருளாக எண்ணி அருள் பாலிக்கும் பணிகளைச் செய்து வாழ்தலே வழி! இந்த வழியில் செல்வதற்குத் திருவாசகம் துணை!

என்னால் அறியாப் பதந்தந்தாய்
யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியா ரொடுங் கூடாது
என் நாயகமே பிற்பட்டிங்கு
இருந்தேன்! நோய்க்கு விருந்தாயே!

(ஆனந்தமாலை-2)
அடியரில் கூட்டிய அதிசயம்!

ஆ, அதிசயம்! நினைப்பிற்கு எட்டாததாக நடப்பது அதிசயம்! எதிர்பார்ப்பு இல்லாமல் நடப்பது அதிசயம்! அதிசயம் வியப்பில் ஆழ்த்துவது! அனுபவிப்பவனை அதிர்ச்சிக்குள்ளாக்குவது அதிசயம்! புரவலன்போலத் தோற்றமுடையோன் இரவலன் போல நடந்து கொள்ளுதல் இயல்பாக நிகழாத ஒன்று! ஆதலால், அதிசயம்! ஏன் பணமும் பதவியும் மனிதனைப் போதைக்கு இரையாக்கித் தலைகீழாகவே நடக்கச் செய்யும்! மாறுபட்ட ஒன்று அதிசயம்! இன்றோ மனிதன் மனிதனாக நடந்து கொள்ளுதலே அதிசயக் காட்சியாகி விடுகிறது!

மாணிக்கவாசகர் வரலாற்றில் அதிசயங்கள் பல நடந்தன. நரிகள் பரிகளானது அதிசயம்தானே! தேவர்கோ அறியாத தேவன் கொற்றாளாய் வந்து மண் சுமந்தது அதிசயம்தானே! யாவரும் விரும்பும் அமைச்சுப் பதவியை மாணிக்கவாசகர் நச்சாது அருளாளரானது அதிசயம் தானே! வான்பழித்து இம் மண் புகுந்து இறைவனால் மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப் பெற்றதும் அதிசயம் தானே! இனிய தமிழ், இன்பத் தமிழ் தேனூறும் திருவாசகமாக என்புருக்கும் பாடல்களாக அமைந்தமையும் அதிசயம் தானே! இறைவனின் கருணையை இனந்தெரியாத உணர்வில் மாணிக்கவாசகர் அனுபவித்ததின் விளைவு அதிசயப்பத்து.

‘நீதி’ என்றால் என்ன? மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்த்து ஒழுகுதல் நீதி! விருப்பு- வெறுப்புக்களைக் கடந்து யார்மாட்டும் ஒத்த நிலையில் பழகுதல் நீதி! அவரவர்க்குரியன கிடைக்குமாறு செய்தல் நீதி! கொள்வனவும் கொடுப்பனவும் மிகைபடாமலும் குறைவுபடாமலும் நிகழ்வது நீதி! அகனமர்ந்த ஒழுகுமுறை நீதி! இன்பம்-துன்பம் இவற்றினால் பாதிக்கப்படாமல் ஒரு நிலையாய் நிற்றல் - ஒழுகுதல் நீதி! நீதி-குணம் நீதிக்குணம் மேவிச் செயலில் பொதுமை பொதுளல் நீதி சார்ந்த வாழ்க்கை. நீதியே உலகத்தின் நியதிகளை, முறைமைகளைத் தோற்றுவிக்கின்றது. இயற்கையாய் அமைந்த நீதியிலிருந்தே அரச நீதிகள் பிறந்தன. ஆனால் இயற்கையாய் அமைந்துள்ள நீதியை அரச நீதிகள் பிறழ்ந்த வரலாறுகள் உண்டு. இயற்கையாய் அமைந்த நீதி யாண்டும் மாறியதில்லை!

மனித குலம் தொடக்கத்தில் நீதியைச் சார்ந்து வாழ்ந்திருக்கவேண்டும். அப்போது கூட்டு வாழ்க்கையும் கூட்டு உழைப்பும் இருந்தன; ஆக்கிரமிப்புக்கள் இல்லை; சுரண்டல் இல்லை. ஆதலால் ஆதிகாலத்தில் மனித வாழ்க்கையில் நீதி இருந்தது. மனிதனின் உடல் வலிமை வளர, வளர, புத்திக் கூர்மை வளர வளர நீதி கெட்டது. பாபக் கழுவாய் முறைகள் தோன்றியதன் விளைவாக பாபங்கள் பெருகி வளர்ந்தன. கடவுளுடன் பேரம் பேசலாம் என்ற நிலை, நீதியை தாழ்த்திவிட்டது! இன்று மனிதன் நீதியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தனது வாழ்க்கைக்கு இசைந்தது எதுவோ அதுவே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை நியதிகளுக்கும் நீதிகளுக்கும் சட்டங்கள் மாறுபடுகின்றன. ஏன்? மனிதனின் பலவீனத்திலிருந்தே சட்டங்கள் தோன்றின. அந்தச் சட்டங்களையும் மனிதன் இன்று மதிக்கத் தவறுகின்றான்.

இன்று எது நீதி? அவரவரும் நினைத்துக் கொண்டிருப்பதே ‘நீதி’ என்று கருதுகின்றனர். இன்று எங்கு நோக்கினாலும் நீதிக்கும் இயற்கை நியதிக்கும் முரண்பட்டவையே நீதியாகக் கருதப்படுகின்றன. பண்டு உலகத்தை இயக்கியது “வல்லாண்மை”யேயாம்! வல்லாண்மையுடையது வாழும். இது நியதி; நீதி! ஆனால், இயற்கையாய் அமைந்த சமயஞ் சார்ந்த நீதி, வல்லார்க்கு மட்டுமல்ல வாழ்வு, வல்லாண்மை இல்லாதாருக்கும் வாழ்வுண்டு, உரிமையுண்டு என்பதே. நீதிக்கு வேற்றுமை இல்லை; எல்லை இல்லை! காய்தல் இல்லை- உவத்தல் இல்லை! நீதி சார்ந்த வாழ்க்கைமுறை இன்பந்தரும். இந்த வையகத்திற்கு இன்றையத் தேவை நீதி சார்ந்த வாழ்க்கை முறையே!

சிவநெறி- சைவ நெறி தொன்மையானது. ஆதலால், சிவநெறி போற்றும் சிவன், நீதியாய் நிற்பவன்! இன்று பணம் பத்தும் செய்கிறது! இன்று பணத்தினால் விலைக்கு வாங்க முடியாதது ஒன்றில்லை! பணமும் அறிவுக் கூர்மையும் இன்று உலகத்தையே ஆட்டிப்படைக்கின்றன. பணமும் அரம்போல் கூர்மையான அறிவும் உடையவர்கள் இன்று நீதியையே விலை பேசுகின்றனர். ஆனால், சிவநெறி இயல்பு இதற்கு முரணானது.

சிவபெருமான் நீதியே வடிவமானவன்! சிவபெருமானை பணபலமுடைய திருமால் தேடியும் காண முடியவில்லை; நான்கு வேதங்களின் தலைவனாக அறிவின் சின்னமாக விளங்கும் நான்முகனாலும் தேடிக்கான இயலவில்லை! ஆனால், திருவாரூரில் பரவையார் வீட்டு வாயிற்படிகளில் சிவபெருமான் திருவடிகள் தோய்ந்தன. ஆதலால் கடவுள் ஆற்றல்மிக்க அன்புவலையில் படுவோன்; பக்தி வலையில் படுவோன்! இதனைத் திருவாசகம்,

“பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே”

என்பதால் அறியலாம்.

சிவபெருமானின் திருவுருவம் நீதி, சிவனவன் திருநாமம் நீதி என்று உறுதியாகிறது. சிவனைச் சார்ந்த சமயநெறி சிவநெறி. சைவம்- சைவ சமயம் நீதியேயாம்! சைவ நெறியில் கடவுளும் கூடத் தாம் விரும்பியபடி செய்ய இயலாது. ஆன்மாக்களின் தகுதிப்பாடே சிவனின் அருளிப் பாட்டுக்குக் காரணம். ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தும் முயற்சியை, கருணையை இறைவன் காட்டலாம். ஆயினும் தகுதியுடையதே வளரும்; வாழும். சிவன் அருளைப் பெறும்! திருவாரூர் இறைவனைத் தோழமையாக நம்பியாரூரர் பெற்றது உண்மை! ஆயினும் வாய்மை பிறழ்ந்தபொழுது, சொல் பிறழ்ந்த நிலையில் கண்ணொளியைப் பறித்த வரலாற்றை ஓர்க! உன்னுக!

காரைக்காலம்மையார் தவம் செய்த தவம்! இறைவனாலேயே ‘அம்மை’ என்று அழைக்கப்பெற்ற புண்ணியவதி! ஆயினும் அம்மையின் விருப்பம் பிறப்பறுக்க வேண்டும் என்பது. பிறவி நீக்கத்திற்குரிய தகுதி இல்லையெனில் என்ன செய்வது? இறைவன்தான் என்ன செய்ய இயலும்? ஆதலால்,

“பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்”

என்று அம்மையார் அருளிய குறிப்பினை உணர்தல் அவசியம்! சேக்கிழார்,

“செய்வானும் செய்வினையும்
அதன் பயனும் கொடுப்பானும்
உய்வகையால் நான்காகும்
விதித்த பொருள்”

(சாக்கியர். புரா. 5)

என்றருளியதும் இக்கருத்தினையே அரண் செய்கிறது. ஆதலால் எல்லாருக்கும்- கடவுளுக்கும் கூட நீதிமுறை உண்டு என்பது சிவநெறியின் தனித்தன்மை. இறைவன் உயிர்களை ஆட்கொள்வதற்குப் பணிகளை வழங்குவது நீதிக் குணமேயாகும்.

மாணிக்கவாசகர் அமைச்சுப் பதவியில் இருந்தார். அரசாணையை நிறைவேற்றுதலே அமைச்சருக்குரிய பொறுப்பு; கடமை! இதில் நீதி சார்ந்தவைகளும் இருக்கலாம். நீதி சாராதவைகளும் இருந்திருக்கலாம். வரிப் பணத்தில் குதிரைகள் வாங்கப் போனது நீதிக்கு முரண்தானே! பணியாளர் - அமைச்சர் என்ற பொறுப்பின் வழி மன்னன் ஆணையை நிறைவேற்ற வேண்டியது அமைச்சரின் பணி. மாணிக்கவாசகரின் பணி, இந்தப் பணியை விலக்கிக் கொண்டது அரசியல் ரீதியில் நீதியாகாது; அறநெறி அடிப்படையில் நீதியாகும். குதிரை வரும் என்று சொன்னதும் நீதிக்கு முரனேயாகும். ஏன்? பரிகள் நரிகளாகியதும் நீதிக்கு முரண்தானே! இந்த நிகழ்வினை மாணிக்கவாசகர் சிந்தித்துப் பார்க்கிறார்? அதனால்,

“நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்”

என்று கூறுகின்றார். மாந்தரில் சிலர் இயல்பாகவே நன்னெறி நிற்பர். நீதியைச் சார்ந்து ஒழுகும் சான்றோரின் உறவு கிடைத்தால் அவர் தம்முடன் உள்ள கூட்டத்தின் தாக்கமாக நன்னெறி நிற்கும்- நீதியைச் சார்ந்தொழுகும் பெற்றிமையும் கிடைக்கும். மாணிக்கவாசகர் இயல்பாக நீதியை நினைக்க வில்லையாம்! நீதியை நினைப்பவருடன் கூடாமல் அரசு அதிகாரத்தைச் சார்ந்தவருடன் கூட்டு ஏற்பட்டுவிட்டமையைக் குறிப்பிடுகின்றார். நீதி சார்ந்த வாழ்க்கை வாழாத வரையில் பிறவி நீங்காது; பிறந்து இறந்து உழலுதலும் தவிர்க்க முடியாதது என்பது திருவாசக உண்மை.

நீதியைச் சார்ந்து நீதிமானாக வாழ்ந்தாலே பிறவி நீங்கும். நீதியொடு தொடர்பிலாத இரங்கத்தக்க வாழ்க்கை வாழும்பொழுது கடவுளின் கருணை கிடைக்காது. மன்னித்து மதிப்பளிக்கத் தாயின் கருணை தேவை! எனவே, “பாதி மாதொடுங்கூடிய பரம்பரன்” ஆட்கொள்கின்றான்.

இறைவன் நிரந்தரம்; நீதி நிரந்தரம். ‘நிரந்தரமாய் நின்ற ஆதி’ என்ற தொடர் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ஆம்! நாளும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பண்டு இருந்த பல நாடுகள் இப்போது இல்லை. ஆறுகள் இல்லை. மலை, கடலாகி இருக்கிறது. கடல், மலையாகி இருக்கிறது. சில உயிரினங்கள் அழிந்து போயின. வல்லாண்மை வாழும் போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையிலும் இந்த உலகம் நிலைபெற்று இருக்கிறது என்றால் எப்படி? எதனால்?

சிறுமைகளைக் கடந்த பொருள் பொதிந்த புகழுக்குரியவர்கள் செய்த தியாகங்களின் பயனாக உலக வரலாறு இயங்கிக் கொண்டே இருக்கிறது. இப் புவிக் கோளத்தில் மனித குலம் அழிந்துவிடவில்லை. ஏன்? எதனால்? நீதி உணர்வு நிலை பெற்றிருப்பது ஒரு காரணம் அதுமட்டுமல்ல. நீதி என்றும் நிலையானது.

“மனிதனை நேசி!” “மனிதத்தைப் போற்று!” “பிறர் பங்கைத் திருடாதே!” “பிறர்க்கென முயலும் நோன்பினைக் கொள்க!” “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக!” “எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுக!” - இன்னோரன்ன நீதி சார்ந்த வாழ்க்கை நெறிகள் என்றும் எப்பொழுதும் நிலைத்திருக்கக் கூடியன. இவையே நீதி, எந்த யுகத்திற்கும் இந்த நீதி தேவைப்படும். ஆதலால், நீதி நிலையானது. நீதி, கடவுளின் மறு உருவம். நீதியே கடவுள்; கடவுளே நீதி. கடவுள் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. கடவுள் என்றும் பேராற்றல் உடையவன். வரம்பில் இன்பம் உடையவன். என்றும் அவன் எண்குணத்தான்; இறைவன் தன்வயத்தனானவன். ஆதலால் இறைவனுக்கு மாற்றம் இல்லை. இறைவன் நிரந்தரமாய் நின்றருள்கின்றான்.

இறைவன் காலங் கடந்தவன்; அநாதி, உயிர்கள் கால தத்துவத்திற்குட்பட்டவை. ஆதலால் ஆதி! ஆதியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஆன்மாக்களுக்கு ஆதியாகவும் நின்றருள் செய்கின்றான் இறைவன்! ஆம், இறைவன் அநாதி ஆதி! அந்தம்! ஆனாலும் எந்த நிலையிலும் இறைவன் பாதிக்கப்படுவதில்லை! பிறவி தோறும் ஆன்மாக்கள் பந்தங்களுக்கு ஆளாகின்றன; அதனால் பாதிக்கப்படவும் செய்கின்றன! ஆனால், இறைவன் பாதிக்கப்படவும் செய்கின்றன! ஆனால், இறைவன் எந்தச் சூழ்நிலையிலும் பந்தமற்றவன்; பாதிக்கப்படாதவன். கடையூழிக் காலத்தில் உலகம் இல்லை. ஆயினும் கடவுள் - இறைவன் உள்ளான்! இறைவன் நிரந்தரமாக இருப்பதால்தான் உயிர்க் குலத்திற்கு ஆதியாக விளங்க முடிகிறது. கடையூழிக் காலத்திலும் இறைவன் உலகை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்குப் புத்துயிர்ப்பை வழங்குகின்றான். இறைவன் நிரந்தரமாக இருந்தால்தான் இந்த உலக இயக்கத்தை, உயிர்க்குல இயக்கத்தை நிரந்தரமாக இயக்கமுடியும். இறைவன்- கடவுள் அநாதி, காலதத்துவத்தைக் கடந்தவன். இறைவன்- கடவுள் உயிர்களை நோக்க ஆதி! உயிர்களுக்கு வாழ்வளிப்பவன்! இந்த உலகம் இடையீடின்றி இயங்க ஐந்தொழில் நிகழ்த்துபவன். ஆதலால் இறைவன் நிரந்தரம்; ஆதி!

நிரந்தரமான ஆதியைச் சாரும் உயிரினங்கள் செத்துப் பிறக்கும் தொழிலுக்கு இரையாகா, நிரந்தரமாக இறைவன் திருவடி நிழலில் இன்ப அன்பில் வற்றாத முற்றாத ஆனந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திருக்கும். ஆம்! இறைவன் நிரந்தரம்! ஆதி! உயிர் நிரந்தரம்! ஏன்? ஆணவம் கூட, தன் கொட்டமடங்கிக் கிடக்கும். அதற்கும் கூட அழிவில்லை! அழிவில்லாத நிரந்தரமான கடவுள் சந்நிதியில் அழிவு ஏது? மாற்றங்களே நிகழும்! இறைவனையும் நீதியையும் சார்ந்து வாழும் உயிர்களும் நிலையாக இன்ப அன்பில் தங்கி இன்புறும்.

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங் கூடேன்
ஏதமே பிறந்திறந் துழல்வேன் தனை
என்னடி யான் என்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய் நின்ற
ஆதி யாண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயம் கண்டோமே!

(அதிசயப்பத்து-2)
திருவாசகத் தேன்

செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு ஏற்பத் திறம் வேண்டும். பணிகளின் பாங்கிற்கேற்பத் திறமை இருந்தாலே தலைமை, நிலை நிற்கும். மாணிக்கவாசகர் சிவன் எம்பிரானைப் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றார். நீத்தல் விண்ணப்பத்தில் ஒரு பாடலில் தன் குறையை இரண்டு வரிகளிலும் இறைவன் புகழை நான்கு வரிகளிலும் பாடுகின்றார். ஏன்?

பிறவிக் கடலை நீந்த வேண்டுமே! நீந்திக் கரையேற வேண்டுமே! அதுவும் சாதாரணக் கடலா? பெருங்கடல்! அந்தக் கடலில் மலங்கள் ஐந்தின் சுழல்! அதில் சிக்கிக் கொண்டு மத்திடை அகப்பட்ட தயிர்போல் சுழலும் தன்னை இறைவன் கைவிடாமல் எடுத்தாள வேண்டுமே என்ற கவலையில் பாட்டுப் பிறக்கிறது.

சிவன் எம்பிரான், மேரு மலையையே வில்லாகக் கொண்டு போர் செய்தவன். அத்தகு பெரியோனுக்குத் தன்னை ஆளுதல் மிக மிக எளிமையான ஒன்று. அது மட்டுமா? இறைவன் கொன்றை மாலை அணிந்திருக்கின்றான். சிவபெருமான் அணிந்துள்ள கொன்றை மாலை அவனே உலகிற்கு முதல்வன்- தலைவன் என்பதனை உணர்த்துகின்றது. தலைவனாக விளங்குபவன் தன்னைச் சார்ந்தாரை எடுத்தாளாமல் கைவிடுதல் அழகன்று என்று உணர்த்தும் பாங்கறிக. கொன்றை மாலை ஓங்கார பிரணவ வடிவமாயுள்ளது. ஓங்காரம் வேதம் முதல் அனைத்துக் கலைகளுக்கும் முதலாகும். ஓங்காரத்தின் பொருள் சொல்லத் தெரியாமல் நான்முகன் வாங்கிய குட்டை, நினைவில் கொள்வது நல்லது. இந்த உலகத்தின் முதல் ஒலி ‘ஓம்’! இந்த உலகத்தின் முதல் எழுத்து ‘ஓம்’! இறைவனே ஓங்கார வடிவினன். சிவலிங்கத் திருமேனியில் பீடம் (ஆவுடை) விந்து, இலிங்கம் நாதம் என்று சாத்திரம் கூறும். நாம் ஏதாவது எழுதத் தொடங்கினால் பிள்ளையார் சுழி போடுகிறோம். அதுவும் ஓங்காரம்தான். விந்து பக்கத்தில் நாதவடிகை இட்டு எழுதுதல் பிள்ளையார் சுழி. அ+உ+ம்=ஓம் ஆயிற்று. இறைவா, சிவனே! ஆன்மாக்களின் வாழ்க்கைப் பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவனே நீதானே! பிள்ளையார் சுழி போட்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்த இறைவன் அந்த பயணத்தை இனிதே முடித்து வைக்க வேண்டாமா? காத்தருள வேண்டாமா? ‘ஓம்’ என்றால் காப்பவன் என்பது பொருள் அல்லவா? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன. இறைவனுடைய கொன்றை மாலையைச் சிந்திக்கும் பொழுது!

இறைவன் தனக்குவமை இல்லாதவன். தமிழ் மறையும் ‘தனக்குவமை இல்லாதான்’ என்று கடவுளைப் போற்றுகிறது. அப்பரடிகள் “உவமன் இலி” என்றார். நபிகள் நாயகமும் “கடவுளுக்கு உவமையாக- ஈடாக எதையும் கூறக்கூடாது" என்றார். ஆம், கடவுளே தனக்குவமை யில்லாதவன். கடவுளுக்குத்தான் பிறப்பில்லை; இறப்பில்லை; வேண்டுதல் இல்லை; வேண்டாமை இல்லை; எல்லைகள் இல்லை. ஆதலால், கடவுள் தனக்குவமை இல்லாதவன். தனக்குவமை இல்லாதவனாக இருப்பதனால் என்னை எடுத்தாளுதல் எளிது. சிவன் எம்பிரான் தனக்குவமையில்லாதவனானாலும் மேருவை வில்லாகக் கொண்டவன். ஆயினும் எனக்கு எளியவன்; தண்ணளியிற் சிறந்தவன். தாமரைக்காடு அனைய திருமேனியுடையவன். இவ்வளவு சிறப்புக்களும் உடைய இறைவன் என்னை எடுத்தாளாமல் விடக்கூடாது!

நான் ஐந்து மலங்களின் சுழலில் கிடந்து உழல்கின்றேன்; கரையேறுவது தெரியாமல் தத்தளிக்கிறேன். ஆணவம் என்னைக் குருடாக்குகிறது; இருட்டறையில் கிடத்தியிருக்கிறது; மூலையில் முடக்கிப் போட்டுவிட்டது.

ஆன்மாவுக்கு ஆணவம் ஓர் அழுக்கு. அதனாலேயே ஆணவமலம் என்ற வழக்கு வந்தது போலும்! ஆன்மாவுக்கு ஆணவத்துடன் உள்ள சம்பந்தம் அநாதியானது. ஆணவமலம் ஆன்மாவைச் சிற்றறிவு உடையதாக்குகிறது. சிறு தொழில் உடையதாகச் செய்கிறது. ஆன்மாவைச் சிறுமைத் தனம் பொருந்திய நிலையதாக்குவது ஆணவத்தின் இயல்பு. ஆன்மாக்கள் தோறும் ஆணவத்தின் பந்தம் கூடும்; குறையும். இயல்பாக ஆன்மாவுக்கு அறிவு உண்டு; தொழில் உண்டு. ஆயினும் ஆன்மா ஆணவத்துடன் கலந்திருந்ததாலே ஆணவம் அறிவை மறைத்து விட்டது. தொழிலையும் மறைத்துவிட்டது. இருளிடைப்பட்ட கண், ஒன்றையும் காணாது. அதுபோல இருள் மலமாகிய ஆணவத்தின் வயப்பட்ட ஆன்மாவின் நிலையும் ஆனது; அதனால் ஆன்மா தன்னையும் காண இயலவில்லை; தன்னுடைய தலைவனையும் உணர இயலவில்லை. இது ஆணவத்தின் மூல நிலை. ஆன்மா திருவருட் துணையால் பிறவி எடுத்து வினைகள் இயற்றும் போது ஆன்மாவின் ஆணவம் கேடே செய்கிறது. ஆன்மா வினைகள் இயற்றும்போதும் இன்ப துன்பங்களை நுகரும்போதும் “நான் செய்கிறேன்,” “நான் நுகர்கிறேன்” என்று எண்ணி செருக்கடையச் செய்கிறது. இதுவே, ஆணவத்தினைச் சார்ந்த ஆன்மாவின் நிலை. ஆணவம், ஆன்மாவை இயல்பாக எப்போதுமே பற்றியிருப்பதால் இதை “மூல நோய்” என்று திருமுறைகள் கூறும். ஆணவம் இருளினும் கொடியது. காரணம் இருள், தன்னைக் காட்டும்; காணக்கூடிய பொருளை மறைக்கும். ஆணவம், தன்னையும் காட்டாது; தன் செயலையும் காட்டாது. ஆண்வச் சார்பினால் ஆன்மாவுக்கு அறிவு இல்லாமல் போகிறது; விருப்பமும் இல்லை; செயலும் இல்லை.

ஆன்மா, இனங்கண்டு கொள்ள இயலாமல் ஒடுங்கிக் கிடக்கும்; முடங்கிக் கிடக்கும். ஆன்மாவுக்கு இது கேவலம். அதனால் ஆணவத்துடன் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாவின் நிலைமையை கேவலாவத்தை என்று மெய்கண்ட நூல்கள் கூறும்.

இந்த நிலையில் சிவன் எம்பிரான் கருணையால் ஆன்மா, மாயையிலிருந்து உடலையும் உலகையும் பெற்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆணவத்தின் ஆதிக்கத்திலிருந்து ஆன்மாவை மீட்க சிவன்- பரம்பொருள் மாயை, கன்மம் என்று இரண்டு கூடுதல் மலங்களைச் சேர்க்கிறான். அதாவது அழுக்குத் துணியை வெளுக்க உவர் மண்ணைச் சேர்ப்பதைப்போல்! மாயை கன்மங்கள் உபசார வழக்காலேயே மலம் என்று கூறப்படுகிறது. மாயை, கன்மம் என்ற மலங்களுடன் சேர்க்கை கிடைத்தவுடன் ஆன்மாவுக்கு விருப்பம். ஞானம், செயல் ஆகிய மூன்றும் அமையும். இந்த நிலைகள் மாறிமாறி வந்து பொருந்தும். இந்த நிலையில் ஆன்மா, அறிவும் தெளிவும் இல்லாமல் நிலையில்லாதவற்றை நிலையாயின போலவும் நிலையானவற்றை நிலையில்லாதன போலவும் எண்ணும். நல்லன தீயனவாகும். தீயன நல்லனவாகும். இது மயக்க நிலை. ஒரு மலமாகிய ஆணவத்துடன் கூட்டுநிலை இருள்மல நிலை. மாயை, கன்மம், ஆணவம் ஆகிய மும்மலத்துடன் கூட்டு நிலை மருள் நிலை. இந்த நிலைமைகளிலிருந்து ஆன்மா பூரண அறிவுப் பொலிவுடன் விடுதலை அடைய வேண்டும். அதாவது இறவாத இன்ப அன்பு நிலையை அடைதல் வேண்டும். இந்த நிலை அருள்நிலை.

கருமம்- வினைத் தொடர்பு ஆன்மாக்களுக்குக் கிடைத்த பிறகே ஆன்மாக்கள் பிறவி எடுக்கின்றன. அவரவர் செயலுக்கு ஏற்ற பயனைத் துய்க்குமாறு செய்தல் நியதி. துய்த்தலினால் ஆன்மாவின் மலங்கள் கரையும்; மலங்கள் செயலிழக்கும். ஆனால் துய்க்கும் பொழுதும் ‘நான்’, ‘எனது’ என்ற உணர்வுடன் துய்த்தால் பற்றின் காரணமாக மலங்களின் பிடி இருக்கும். இதனால் செத்துப் பிறத்தல் தொடரும். செய்யும் வினைகள் மட்டுமே பிறப்பிற்கு வித்தாகா! செய்யும் செயல்களின் நோக்கமே காரணமாக அமையும். இங்ஙனம் மும்மலம் என்று பேசுவது பெரு வழக்கு. மாணிக்கவாசகர் “ஐம்மலங்களிற் கிடந்துழல்வேன்” என்கிறார்.

மாயை, சுத்த மாயை என்றும், அசுத்த மாயை என்றும் இருவகைப்படும். அசுத்த மாயையின் காரியம் மாமேயம் எனப்படும். மாமேயம், கால தத்துவம் முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களும் உலகங்களும் உலகத்துப் பொருள்களும் இவற்றால் வரும் போகமும் ஆகும். திரோதானம் ஐந்தாவது மலம். சிவசக்தியே திரோதான சக்தியாகத் தொழிற் படுகிறது. திரோதான சக்தியே (மறைக்கும் ஆற்றல்) ஆன்மாவுக்கு மலங்களின் செயற்பாட்டைப் பக்குவப்படுத்தி உய்திச் சாதனைகள் (மலபரிபாகம்) ஏற்படத் துணை செய்கிறது. இதுவும் மலம் என்று உபசாரமாகக் கூறப்பெறும். இவ்வைந்து மலங்களும் உயிர்களை- ஆன்மாக்களைப் பொருந்தி இயக்குகின்றன. இந்த நிலையில் ஆசைகள், விருப்பு வெறுப்புக்கள், இன்பங்கள் துன்பங்கள் ஆகியவற்றில் உழலும் நிலையை “ஐந்து மலங்களில் கிடந்து உழல்வேன்” என்றார்.

மாணிக்கவாசகரின் அனுபவம் மலங்களின் ஆற்றல் அடங்கிய நிலை; ஒடுங்கிய நிலை; உய்யும் நெறியில் செல்லும் நிலை. ஆன்மாவில் வந்து பொருந்தும் குலம் களையப் பெற்று விட்டது; குற்றங்களும் களையப்பட்டுவிட்டன. இவையிரண்டும் அற்ற நிலையே நன்னிலைதான்! ஆயினும், நிறைநலம் சார்ந்த பக்குவம் அல்ல. அதனால் மாணிக்கவாசகர் தன்னைக் கைவிடாது அருள்பாலிக்கும்படி வேண்டுகின்றார். என் மலங்களின் ஆற்றல் வலியது. ஒரு சிறு இடுக்கில் கூட நுழைந்துவிடும். பழக்கவாசனை பொல்லாதது. அதனாலேயே பழக்கம் தவிரப் பழகுமின் என்றார்கள்.

இறைவனே! சிவனே! அனைத்துயிர்களுக்கும் மங்கலம் செய்பவனே! ஆணவத்திலிருந்து என்னை மீட்டு எடுப்பாயாக! என்னை ஆணவம் இயல்பாகப் பற்றியது! அதாதியிலேயே பற்றியது! நானும் ஆணவத்துடன் இரண்டறக் கிடந்துழல்கின்றேன்! இறைவா நீ, என்னை ஆணவத்திலிருந்து மீட்க மாயையை விளக்காகக் கொண்டு அந்த ஒளியில் கரையேறுமாறு பணித்தனை! ஆனால், நானோ மாயையில் கட்டுண்டு அதுவே சொர்க்கம் என்று கிடந்துழல்கின்றேன். சாதனத்தைச் சாத்தியம் என்று எண்ணி மயங்கிக் கிடக்கின்றேன். எந்த ஒரு தீமையும் நன்மையின் வழியிலேயே மறையும்; மறைய வேண்டும். இது நியதி. அதனால் நீ எனக்கு நல்வினைகள் செய்தலுக்குரிய அறியும் கருவிகள்- செய் கருவிகளைத் தந்தருளினை. ஆனால் நானோ தீவினையே பெருக்கி வாழ்கின்றேன்! இறைவா உன்னுடைய திருவருட் சக்தியே என் பொருட்டுத் திரோதான சக்தியாக உருக்கொண்டு மறத்தல் செய்யினும் நான் நினைவுப் புலனை மேலும் ஆழமாக இயக்கி மறக்க வேண்டியவற்றை மறக்காமல் வன்கண்மை கொண்டு வல்வினை செய்து வாழ்கின்றேன். ஆக, நான் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் ஆகிய ஐந்து மலங்களின் சார்பில் சிக்குண்டு. உழல்கின்றேன். மத்திடை அகப்பட்ட தயிர்போல உழல்கின்றேன்! தயிர்- ஆன்மா! மத்து- ஐம்புலன்கள்! இறைவா, கன்மத்தின் வழி வினைவழி வந்த மிகப் பெரிய பொல்லாங்காகிய குலத்திலிருந்து என்னை மீட்டாய்! குலம், பிறப்பு-இஃது ஒரு தீச்சுற்று! இதிலிருந்து என்னை மீட்ட பெருமானே என்னைக் குற்றங்களிலிருந்தும் மீட்டாய்! என்று பேசுகிறார். குற்றம், ஆன்மாவின் புலன்களால் செய்யப்படுவது. அகக் கருவிகளைச் சார்ந்தது குற்றம். குறைகள் பொறிகள் வயப்பட்டவை. இறைவன் மாணிக்கவாசகரைக் குற்றங்களின்றும் மீட்டெடுத்து விட்டான்! குற்றங்கள் இல்லையேல் குறைகள் இரா! குறைகள் இல்லா நிலையில் குற்றங்கள் இல்லாமல் போகலாம். ஆனால் உறுதியாகக் கூறமுடியாது. அதனால்தான் மாணிக்கவாசகர்,

“களைந்தாய் என்னைக் குற்றம்”

என்று பாடுகின்றார்.

சிவனே! எம்பிரானே! என்னைக் குலத்திலிருந்து விடுபடச் செய்தனை! என் குற்றங்களைக் களைந்தாய்! இந்த நிலையில் என்னை முற்றாக எடுத்தாளுவாய்! மேருவை வில்லாக வளைத்த உனக்கு இது கடுமையான பணியல்லவே! உலகத்திற்குத் தலைவனாக விளங்கும் நீ, என்னை- அடைக்கலம் புகுந்த என்னைக் கைவிடலாமா? தனக்குவமை இல்லாத தலைவனே! ஐந்து மலங்கிடந்து உழலும் என்னை எடுத்தாண்டு கொள்க! என்று நெக்குருகப் பாடுகின்றார்.

குலங் களைந் தாய்; களைந் தாய் என்னைக்
குற்றம், கொற் றச் சிலையாம்
விலங்கல் எந் தாய் விட் டிடுதிகண்
டாய்! பொன்னின் மின்னு கொன்றை

அலங்கல் அந் தாமரை மேனியப்
பா! ஒப்பி லாதவனே!
மலங்கள் ஐந் தாற் சுழல் வன்தயி
ரில்பொரு மத்துறவே!

(நீத்தல் விண்ணப்பம்-29)
தொழும்பாய்ப் பணி செய்வோம்!

இறைவன் காலங்கடந்தவன்; கால தத்துவங்களைக் கடந்தவன்; காலாதீதன், காலகாலன். அங்ஙனம் இருக்க இறைவனுக்குப் பழைமை ஏது? புதுமை ஏது? ஆம்! உண்மைதான்! ஆயினும் இறைவன், ஆன்மாக்களை ஆட்கொள்ள வினை முதல். காரணப் பொருளாக அறிமுகம் ஆகும் காலந்தொட்டு இறைவனுக்குக் காலக் கணக்கிடுதல் தவறன்று. கடவுளைப் பழையோன் என்று அழைத்தல் பழைய மரபு. பழைமை- பழைமையினும் கால எல்லைக் கடந்த பழைமை என்பதை “முன்னைப் பழம் பொருள்” என்றார் மாணிக்கவாசகர். உலகியலில் காலப் பேரெல்லை ஊழி! பல்லூழிக் காலங் கண்டவனும் ஊழி முதல்வனும் ஊழிப் பெருங்கூத்து ஆடுபவனும் இறைவன்- கடவுள்! ‘இடுகாட்டு எரி ஆடலாய் அமர்ந்தவன்’ என்ற வழக்கும் உண்டு. இடுகாடு என்பது கால தத்துவத்திற்குட்பட்ட மனிதரை எரிக்கும் சுடுகாடு அல்ல; இறைவன் ஆடலமர்ந் தருளும் இடுகாடு! ஊழிப் பெருங்காலம்! ஊழியொருவனின் கூத்து! கடையூழிக் காலம் என்றும் கூறுவர்.

கடையூழிக் காலம் என்று கூறினும் மாயா காரய உலகினுக்கும் தேவர்களுக்குமே கடையூழி! இறைவன் கடையூழியைக் கடந்தவன். கடையூழியைச் சருவ சங்கார காலம் என்று புராணங்கள் கூறும். கடையூழியில் எல்லாம் அழிகின்றன. எல்லாம் கடந்த நிலையில் இறைவன் ஆடுதலை ‘ஈமத்தாடி’ என்றும் கூறுவர். ஈமம், இடுகாடு என்பது இடம் பற்றிய குறிப்பு அல்ல. காலம் பற்றிய சிந்தனை. அந்தக் கடையூழிக் காலத்து இறைவன் இறைவியுடன் ஆடும் பொழுது எழும் தூசியே திருநீறு. திருஞானசம்பந்தர் “சுடலைப் பொடி பூசி” என்றார். இறைவன் கடையூழிக் காலத்தில் ஆடுவது- நுண்மை நிலையில் ஐந்தொழில் நிகழ்த்துவதற்காகவேயாம்! கடையூழி ஒடுக்கத்தில் ஆன்மாக்கள் இளைப்பாறிய நிலையில் மீண்டும் புத்துயிர்ப்புப் பெறுகின்றன; புதுப்பிறப்பு எடுக்கின்றன. ஆதலால் கடவுள் காலம் கடந்தவன்! ஏன்? ஞாலமும் விசும்பும் இவை வந்து போகும் காலமாகவே இருப்பவன்!

காலம் கடந்தது எல்லாம் பழைமை! காலங்கடந்து நின்றால் மட்டும் போதாது. காலத்தை வென்று விளங்க வேண்டும். ஆம்! காலத்தினால் ஆய நியதிகளைக் கடத்தல் வேண்டும்; பிறப்பை இறப்பைக் கடத்தல் வேண்டும். “பிறவாயாக்கைப் பெரியோன்” என்று இறைவனைச் சிலம்பு போற்றும்! “முன்னே முனைந்தான்” என்று தேவாரம் பரவும். “நீலமண் மிடற்றொருவன்” என்று புறநானூறு போற்றும்! “விண்ணோர் அமுதுண்டு சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்பவன்” என்று இளங்கோவடிகள் நெகிழ்ந்து போற்றுவார். பெருமான் அணிந்துள்ள எலும்பு மாலையில் உள்ள மண்டை ஓடுகள் கடையூழிக் கணக்கைக் காட்டுவன. அழிந்தவற்றின் கணக்கும் அதுவே! ஆதலால் கடவுள்- சிவபெருமான் பழம்பொருள். முன்னைப் பழைமைக்கும் பழைய பொருள். ‘முன்னை’ என்ற சொல் கால எல்லையைக் கடந்தது என்பதைக் குறிப்பது.

அது சரி! கடவுள்- சிவபெருமான் பழம்பொருள்! பழையோன்! ஆன்மாக்களோ புதுப்புதுப் பிறவி எடுப்பன! அதனால், ஆன்மாக்களுக்கு- உயிர்களுக்குப் பழைமை பிடிக்குமா? ஆன்மாக்கள் - உயிர்கள் புதுமையை விரும்புவன. அது மட்டுமல்ல. ஆன்மாக்கள் புதுமையை விரும்பினாலே உலகம் இயங்கும்; வளரும்; வாழும். ஆதலால் ஆன்மாக்களை- உயிர்களை ஆட்கொள்ளும் விளையாட்டினைக் கருதி இறைவன் புதுமையாகவும் விளங்குகிறான். காலத்தினால் விளையும் மூப்பு, முதுமை, கிழட்டுத்தனம் இல்லாமல் என்றும் இளையோனாக, கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாக விளங்கி அருள்கின்றான்.

காலம் மிகமிகக் கொடுமையானது; கண்டிப்பானது. காலத்தொடு பட்டவையெல்லாம் மூப்படையும்; கிழட்டுத் தன்மையடையும்; பயனற்றுப் போகும். காலப்போக்கில் ‘அழியும்’ காலத்தத்துவம் நிகழ்காலம் எதிர்காலம் என்பதை விட விரைந்து இறந்த காலமாதல்தான் இயல்பு. திருக்குறள்,

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு”

என்று கூறும். ஆனால், இறைவன்- சிவபெருமான் காலாதீதனாய் இருப்பதால் அவன் புதுமை தாங்கியவனாகப் புதுமைப் புனைவுடன் விளங்க முடிகிறது. ஆன்மாக்களின்-உயிர்களின் விருப்பம் புதுமை வேட்டல். ஆன்மாக்கள்-உயிர்கள் விரும்பும் புதுமை, புத்தொளி கிடைக்காது போனாலும் அவை எய்த்துக் களைத்துப்போகும். ஆதலால் ஆன்மாக்களின்- உயிர்களின் வளர்ச்சி கருதி, நலம் கருதி, இறைவன்- சிவன் நாழிகைதோறும் புதுமைப் புனைவாளனாக விளங்குகிறான். ஊழிதோறும் இறைவனுடைய திருமேனிகள் மாறுகின்றன; பெயர்கள் மாறுகின்றன. ஏன்? அவன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் கூட மாறுபடுகின்றன! எனவே, இறைவன் பழைமைக்குப் பழைமையானவன்? ஆம்! அது உண்மை! ஆயினும் பின்னைப் புதுமைக்கும் பற்றுக் கோடாக விளங்கி அருளுகின்றான்! புதிய புதிய கணக்கிலாத கோலங்காட்டித் திருவிளையாடல் நிகழ்த்துகின்றான்; ஆட்கொண்டருள் செய்கின்றான். இன்றையப் புதுமை மட்டுமல்ல. இனி எதிர் வருங்காலத்தும் புதுமையாகவும் இறைவன்- சிவன் விளங்குவான். இது உண்மை! எது நாளும் புதுமை நலம் பெறுகிறதோ அது அழிவற்றது; ஆக்கம் தருவது. இறைவன்- சிவன் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்புதுமையாகவே விளங்குகின்றான்.

கடவுள் நம்பிக்கை மனித குலத்தில் கால்கொண்டு கிடக்கிறது. ஆனால் கடவுள் இலக்கணங்களில் எண்ணற்ற வேறுபாடுகள்! நாம்- ஆன்மாக்கள் கடவுளைத் தேடுவது ஏன்? வழிபடுவது ஏன்? காணாதனவற்றைக் காணவேண்டும். கேளாதனவற்றைக் கேட்கவேண்டும். என்றும் மாறாத் துணையாக அடையவேண்டும். நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும் பிரியாத தலைவனாக இருத்தல்வேண்டும். பிழையெலாம் தவிரப் பணித்து ஆட்கொள்ள வேண்டும். என்றும் இன்பம் பெருகும் இயல்பினை வழங்கியருளுதல் வேண்டும். இத்தகு நலன்களைப் பெறுவதற்குப் பரம் பொருளைத் தலைவனாகப் பெறுதல் தகுதி மிகுதியும் உடையது. தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மிக்க சிக்கலான பணி! நாற்காலி ஆசை தேவர்களுக்கும் உண்டு! வேள்வியில் சொரியும் அவிப்பொருளை உரிமையில்லாத நிலையிலும் தேடித் தின்பவர்கள் தேவர்கள். இந்தத் தேவர்களுக்கு அம்மம்ம, எத்தனை எத்தனை ஆசாபாசங்கள்! தேவர்களுக்கு நெறியும் இல்லை! முறையும் இல்லை! அவரவர் மனம் கொண்டதே மாளிகை. அதனால் திருக்குறள் “தேவரனையர் கயவர்” என்று திட்டித் தீர்த்துவிடுகிறது. கயவர்கள் இலக்கணம் என்ன? அவர் அவர் நலத்திற்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழ்வர். நிர்வாணமான சுயநலவாதிகள். இவர்கள் கொலையிற் கொடியர்.

இறைவன்- சிவன் அப்படியல்ல. இறைவன்-சிவபெருமான் தனக்கென ஒன்றும் வேண்டாதவன். குறி யொன்றும் இல்லாத கூத்தன்! இறைவன் திருநீறு பூசி விளங்குவதுகூடத் தம்மை வழிபடும் அடியார்களின் வினை நீங்குவதற்குத்தான்! குழந்தைகளின் நோய்க்குத் தாயே மருந்துண்பாள்; பத்தியம் பிடிப்பாள்! அதுபோல இறைவன்-சிவபெருமான் ஆன்மாக்களின் நலனுக்காகவே ஐந்தொழில் நிகழ்த்துபவன். ஆன்மாக்களின் கருத்தறிந்து முடிப்பவன்; வேண்ட முழுதும் தருபவன்; உய்வார்கள் உய்யும் வகையில் ஆட்கொண்டருளிச் செய்பவன்; பொன்னும் மெய்ப் பொருளும் தருபவன்; துய்ப்பனவெல்லாம் தந்தருள்பவன்; உய்யும் நெறியில் உய்ப்பன தந்தருளித் தாயிற் சிறந்த தயாவுடன் தொடர்ந்து நின்று காத்தருள்பவன். அதனால் சிவனே தலைவன்; தனித்துணை! சிவபெருமானைத் தலைவனாகப் பெறுதல் தவத்தின் ஆக்கம்; பயன்! அதனால் அடியார்கள் சிவபிரானை “உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்” என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர். சிவபெருமானைப் பிரானாக- தலைவனாகப் பெறுவதைவிட ஆன்மாக்களுக்கு வேறு பேறு ஏது? அதனாலன்றோ “எங்கெழில் என் ஞாயிறு?” என்றும், “வானம் துளங்கிலென்? மண் கம்பமாகிலென்?” என்றும் பாடுகின்றனர். அப்பரடிகள், “இறுமாந்திருப்பதென்று கொலோ?” என்றே பாடுவார்.

சிவநெறியின் சிறப்பு, சிவபெருமானுக்குப் புகழ் சேர்ப்பது மட்டுமல்ல. சிவனடியார்களுக்குப் புகழ் சேர்ப்பதே இறைவன்- சிவபெருமானின் திருவுள்ளம்! சிவனடியார்களைச் சிவன் எனவே தெளிந்துணர்ந்து வழிபாடு செய்யுமாறு சாத்திர நூல்கள் அறிமுகப்படுத்துகின்றன. ஆதலால் சிவபிரானைத் தேடுவதற்குப் பதில் சிவனடியாரைத் தேடலாம். இது எளிதும் கூட.

தமிழ்நாட்டுப் பெண்கள் களவுவழிக் கற்புக்குச் செல்பவர்கள். ஆம்! ‘களவும் கற்றுமற’ என்று ஒரு பழமொழி உண்டு. தலைவியைக் காதலித்த காதலன் களவில் கூடும் காலத்தை நீட்டித்துக் கொண்டே சென்றான். களவுக் காலம் கூடுதல் அலர் தோன்றுவதற்கு வாய்ப்பினை உண்டாக்கும் என்றுணர்ந்த தோழி, தலைமகளை நோக்கிக் களவை மறந்து விடுக! திருமணம் செய்துகொண்டு கற்பியலைத் தொடங்குக என்றுணர்த்திய பழமொழி இது. பழந்தமிழகத்தில் காதல் திருமணமே நடைபெற்றது. சுந்தரர் வரலாறு இதற்குச் சான்று.

இன்று திருமணங்களில் வழக்கத்தில் இருக்கும் கொடுமையாகிய வரதட்சணை ஒழிய வேண்டுமானால் காதல் திருமணங்கள் நடைபெற வேண்டும். பழங்காலத்தில் மனிதப் பண்பாட்டு அடிப்படையிலான சமுதாய அமைப்பு இருந்தது. அதனால் குலம் பார்ப்பார்கள்; குணம் பார்ப்பார்கள்; சீலம் பற்றிச் சிந்தனை செய்வார்கள்! இன்றோ பண மதிபீட்டுச் சமுதாயம்! எங்கும் எதிலும் பணத்தின் ஆதிக்கம்! மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களில் வரும் பெண்கள், மரபுவழி வந்தவர்கள். ஆதலால், அவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவராக வருபவர்கள் சிவனடியார்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால் சிவனடியாரை கணவராகக் கொண்டு அந்தக் கணவரின் தாள்களைப் பணிவோம் என்கின்றனர். ஆம்! தலைமகளைத் தாங்கும் தாள்கள் தலைமகனுடைய தாளாண்மைமிக்குடைய தாள்கள்தானே! இங்குத் தாள் பணிவோம் என்பது பெண்ணடிமைத் தனத்தின் விளைவல்ல. தாள்-தலைபோல விரும்பித் தொழுதல்.

அடுத்து, சிவனடியார்களுக்கே பாங்காவோம் என்கின்றனர். பாங்காதல் என்பது அயரா அன்புடன், பரிவுடன் பணிவிடை செய்தல் என்பதாகும். இத்தகு சிவனடி யாரையே மணப்போம், கணவராக ஏற்போம் என்று கூறுகின்றனர். ஆம்! சிவனடியார்கள்- நாங்கள் மணக்கப்போகும் சிவனடியார்கள் உவப்பப் பணி செய்வோம்! தொண்டு செய்வோம்! தற்சார்பின்றிக் கணவன்மார்களின் நலனையே நலனாகக் கொண்டு வாழ்வோம் என்கின்றனர்.

இறைவா! சிவபெருமானே! இந்தப்படி சிவனடியாரை மணக்க, தொண்டு செய்து வாழ்ந்திடத் திருவுள்ளம் பற்றுக! சிவனடியார் தாள் பணிவோம்! இங்ஙனம் சிவனடியாருக்குப் பணிசெய்யும் வாய்ப்பை வழங்கியருள்க! இந்தப் பேறு கிடைக்கச் செய்தருள்க! சிவனடியார்களைக் கணவராகப் பெற்றுப் பணி செய்யும் வாய்ப்புக் கிடைப்பின் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை!

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! நாங்கள் ஆரத் துய்த்து மகிழ்வதற்கேற்பப் பின்னைப் புதுமை நலன்களையுடையவனே! சிவனடியார் எம் கணவராதல் பெரும்பேறு! அவர்தம் குறிப்பறிந்து தொழும்பாய்ப் பணி செய்தால் யாதொரு குறையும் இல்லை என்றெல்லாம் போற்றுகின்றனர்.

இந்தப் பாடலின் கருத்து வாழ்வாக மலர்ந்தால் வீடுகள் சிறக்கும்! இல்லறம் வளரும்! சிவநெறி மலரும்! மழை பொழியும்! மண் வளம் கொழிக்கும்!

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்!


அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்!
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!

(திருவெம்பாவை-9)
புண் சுமந்த பொன்மேனி!

விளையாட்டு, விளையாட்டாக மட்டும் இருத்தலில் பயன் இல்லை. விளையாட்டின் போக்கிலேயே அறிவியல், அருளியல் கருத்துகளைக் கற்றுத் தரவேண்டும். அம்மானை என்பது பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு! அம்மானை விளையாடும் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்கள் உள்ள பகுதி திருவம்மானை என்று அழைக்கப்பெற்றது. திருவம்மானையில் இருபது பாடல்கள் உள்ளன. இந்த இருபது பாடல்களும் தத்துவச் செறிவுடைய பாடல்கள்! எளிய மொழி நடையில் அமைந்தவையும் கூட! இதுபோலவே பூவல்லி, பொற்சுண்ணம் என்பவையும் அமைந்துள்ளமையையும் அறிக.

அம்மானைப் பாடல்கள் வரிப்பாட்டு வடிவத்தில் அமைவன. திருவெம்பாவையைப் போலவே இந்த விளையாட்டும் கன்னிப் பெண்களால் நல்ல கணவனை நாடிப் பிரார்த்தனையுடன் விளையாடப் பெறுகிறது. இந்த அம்மானை விளையாட்டு, தமிழகத்தில் தொன்மைக் காலத்திலேயே விளையாடப்பெற்ற விளையாட்டு. திருவம்மானை பற்றிய விளையாட்டுக் குறிப்புக்கள் கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. அதுபோலவே திரு முறைகளிலும் திருவம்மானை விளையாட்டு பற்றிய குறிப்புக்கள் காணக்கிடக்கின்றன.

சிவன் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ளவன். எல்லா உயிர்களையும் கணக்கின்றி எல்லை கடந்து ஆட்கொண்டருளும் தண்ணளியுடையவன்; பெரியோன்; தனக் குவமை இல்லாதவன்.

திருப்பெருந்துறை சிவனுக்கு விண்ணும் மண்ணும் தழுவிய புகழ் உண்டு. புகழ்ப்படுவது புகழ். இறைவன் புகழ்ச்சியைக் கடந்தவன். புகழ்ச்சியைக் கடத்த போகம் என்று போற்றுவார் மாணிக்கவாசகர்.

இந்த உலகத்தில் வாழும் மக்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள். பதவிகளுக்கும் பெருமைகளுக்கும் ஆசைப்படுபவர்கள்! ஆனால் புகழ் என்ற சொல் காலத்தினால் பொருளற்றதாக விளம்பரமாக மாறி வருகிறது. மனிதர்களிடையில் மட்டும் தானா? தேவர்களிடத்திலும் கூட இந்தப் பதவி, புகழ் ஆசை உண்டு. தேவர்களின் பதவி ஆசைதானே தக்கன் வேள்வி! வேள்வியில் சொரியப் பெறும் அவி, சிவபெருமானுக்கே உரியது. ஆனால் மற்றைத் தேவர்களும் அவிப்பொருளுக்கு ஆசைப்பட்டனர். தக்கனைக் கொண்டு வேள்வி இயற்றினர் தேவர்கள். உயர் பீடத்தில் அமர்ந்தனர்; அவிப் பொருளைப் பெற்றனர்; இல்லை, இல்லை! மாணிக்கவாசகர் வாக்குப்படி ‘தின்றனர்’. தகுதியில்லாத ஒன்றினைப் பெருமை கருதியும் சுவை கருதியும் உண்டனர் என்பது ‘தின்றனர்’ என்று இழிவாகப் பேசப்படுகிறது. இங்ஙனம் பெருமை கருதி வேள்வியில் சொரிந்த அவிப்பொருளைத் தின்ற தேவர்கள்- கடலில் எழுந்த அமுதையும் உண்டனர். நஞ்சு கடலில் எழுந்தபோது தேவர்கள் என்ன செய்தார்கள்? ஆபத்தில் காப்பதன்றோ தலைமையின் இலக்கணம். ஆபத்தில் காக்கும் தலைமையே புகழுக்குரியது. நஞ்சைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓடினர். சிவபெருமானை நோக்கிக் காப்பாற்றும்படி அழுதனர்; அரற்றினர். சிவபெருமானும் நஞ்சினை உண்டு அமரர்களுக்கு அருள் செய்தனன். இதுவே புகழுதற்குரிய சாதனை.

“விண்ணோர்கள் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்த"தால்

சிவன் புகழ் விண்ணையும் மண்ணையும் தழீஇய புகழாயிற்று. நீலகண்டம் பெற்றமையின் எவ்வுயிர்க்கும் தலைவன் ஆனான்; ஈசன் ஆனான்.

இறைவனுக்கு- சிவபெருமானுக்கு மூன்று கண்கள். அவை முறையே ஞாயிறு, திங்கள், தீ. இந்த மூன்று கண்களில் தீ ஒரோவழி கட்புலனுக்கு வருவது. ஆயினும் பயன்பாடு மிகுதியுடையது. தீ, நெற்றிக்கண் அறிவுக்கண். தீ, தூய்மையற்றவனவற்றையெல்லாம் அழிக்கும். ஆனால் தீ ஒரு பொழுதும் அழுக்காவது இல்லை. அறிவு அறியாமையை அகற்றும்.

சிவம் - சக்தி பொருளும் ஆற்றலும் போல, நெருப்பும் சூடும் போலப் பிரிக்க ஒண்ணாதது. உலகுயிர்களுக்கு உள்ளே வேட்கை, துய்த்தாலொழிய நீங்காது. வேட்கை நீங்கினாலே விடுதலை. துய்த்தலுக்குரிய விருப்ப உணர்வைத் தருபவள் அன்னை பராசக்திதான். அதனாலேயே அன்னை பராசக்தி தன் கையில் கரும்பை ஏந்தியிருக்கிறாள். அன்னை பராசக்திக்குக் காமாட்சி என்ற திருநாமமும் வந்தது. இறைவன் சிவன்- உலகுயிர்கள் எல்லாம் போகம் துய்த்து அவ்வழி நிறைநலம் எய்துதல் வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்பினாலேயே அம்மையப்பனாக- போகத் திருமேனியுடையவனாக இருக்கின்றான். இப்புவியில் வாழும் மாந்தரும் விலங்கு முதலிய சிற்றுயிர்களும் ஆண்- பெண் என்று காதலில் கூடி இன்புற்று வாழ்கின்றனர். இவ்வின்ப வாழ்க்கைக்குத் தூண்டுவதே சிவபெருமானின் திருவுள்ளம்! அன்னையாகிய சிவையின்பால் நோக்குதலே மணம்!

உயிர்க்குலம் பரிணாம வளர்ச்சியில் வளரவும் பலருக்குப் பயன்படவும் உய்தி பெறவும் காதலிருவர் கூடி வாழ்தல் திருமணம் என்று கூறப்பெறுகிறது. ஆதலால் சைவத் தமிழ் மரபில் இறைவனை அம்மையப்பனாக வழிபடும் மரபு தோன்றி வளரலாயிற்று. “பெண் சுமந்த பாகத்தன்” என்றதால் சிவன் தனக்காகப் பெண்ணைச் சுமக்கவில்லை. உயிர் குலத்தின் நன்மை கருதியே சுமத்தலால் ‘சுமந்த’ என்றருளியுள்ள நயமும் உணர்க.

எனவே, தமிழ் மக்கள் சிவனை மங்கை பங்கினனாகவே வழிபட்டு வந்துள்ளனர். தமிழகத்தின் தொன்மை வாய்ந்த வழிபாட்டுத் திருமேனி மங்கை பங்கினன் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. மாணிக்கவாசகர்,

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
ஆலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

என்று பாடுகின்றார். அம்மையப்பர் திருக்கோலம் தொன்மைக் கோலம் என்று பாடுகின்றார். பழைமை வாய்ந்த சாத்திர நூலாகிய திருக்களிற்றுப்படியார்,

“அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்”

என்று போற்றுகிறது. சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து,

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!

என்று போற்றுகிறது. திருமுறைகள் முழுதும் “பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்த கோலமே” போற்றிப் புகழ்ந்து பேசப்படுகிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற திருக்குறளில் ஆதி என்பது சக்தியைக் குறிக்கும் சொல். சக்தியைப் பாகத்தில் உடையது பரம்பொருள் என்று இதற்கு ஒரு சைவ மரபு உரை உண்டு. சிவபெருமானை அம்மையப்பனாகவே சிந்தனை செய்தல் வேண்டும். வழிபடுதல் வேண்டும் என்ற மரபு வழி வழி பின்பற்றப்படுகிறது. சிவபெருமானும் அருளிச் செயல் நிகழும் போதெல்லாம் பெண் சுமந்த பாகத்தனாகவே எழுந்தருளி அருள்பாலித்துள்ளான். “பெண் சுமந்த பாகத்தன்” என்று போற்றுவது உலகியல்; தமிழ் மரபு.

தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே நாட்டின் பொது நலப் பணிகளை அரசன் ஏவும் வழியில் வீட்டுக்கொருவர் வீதம் பொறுப்பேற்றுச் செய்து நிறைவேற்றுவது பழக்கம். மாணிக்கவாசகருக்கு அரசு இழைத்த துன்பங்கள் கண்டு பொறுக்காமையால் வையையாறு சினம் கொண்டு பெருவெள்ளமாகப் பாய்ந்தோடி வந்தது. மதுரை மாநகரில் வையை யாற்றங்கரையில் உடைப்புக்கள். இந்த உடைப்புகளை அடைக்க வீட்டுக்கு ஓர் ஆள் வரும்படி பாண்டியனின் ஆணை பிறந்தது. மதுரையில் பிட்டு விற்றுப் பிழைத்து வந்த வந்திக் கிழவிக்குக் கணவனும் இல்லை; மகனும் இல்லை. என்ன செய்வாள்? ஏழைப் பிட்டு வாணிச்சியின் இதய உணர்வுகளை ஆலவாயண்ணல் அறிந்துகொண்டு அவனே தட்டும் மண் வெட்டியும் தாங்கிக் கொற்றாளாக வந்தான். நாணயமான தொழிலாளியாகவும் நடந்து கொண்டான். கூடுதல் கூலி கேட்கவில்லை. உண்பதற்குப் பிட்டு வாங்கித் தின்றுவிட்டு வேலை செய்யப் போனான். பசிக்கு உணவு உடலுக்கு வேலை. இது தத்துவம்; கொள்கை; கோட்பாடு.

சிவன், பெண் சுமந்த பாகத்தன். அதனால் அருளுதல் இயல்பாக உடையவன். ஏழைப் பிட்டு வாணிச்சியின் துயர் நீக்க உதிர்ந்த பிட்டையே கூலியாகக் கொண்டு மதுரை வைகையாற்று உடைப்பை அடைக்க மண் சுமந்தான். மன்னனின் கோலால் மொத்துண்டான்; திருமேனியில் வடுத்தாங்கினான்; புண்பட்டான்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பண் சுமந்த பாடல்களைப் பெற்றுள்ள பெருமை தமிழுக்கு உண்டு. இனிமை பயக்கும் இசையையே தமிழிலக்கியங்கள் பண் என்று பாராட்டுகின்றன. தமிழ் மக்கள் பண்களைக் கண்ட தோடன்றி அப்பண்களைப் பாடும் பருவ காலங்களையும் வரையறுத்திருந்தனர். பரிபாடல், சிலப்பதிகாரம் முதலியன மூலம் சங்க காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பண்கள் இருந்தனவாகத் தெரிகிறது. ஆனால் பெரும் பண் நான்கு என்பது மரபு வழி வந்த கருத்து. அவை பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி (நெய்தல்) என்பன. தேவாரத் திருமுறைகள் பண்ணமைவு முறையில் அமைந்தவை. தேவாரத் திருமுறைகளில் இருபத்து மூன்று பண்கள் மட்டுமே அமைந்துள்ளன. திருவாசகம் இயற்றமிழ் போல யாப்பமைவில் தோன்றினாலும் திருவாசகத் திருவம்மானையைச் சீகாமரத்தில் பாடலாம். சீகாமரப்பண் காலைப் பொழுதில் பாட வேண்டிய பண். அதனாலேயே மாணிக்கவாசகர் ‘பண் சுமந்த பாடல்’ என்று பாடுகின்றார்.

சிவன் தமிழோடு இசைப் பாடல்கள் கேட்பதில் இச்சை மிகுதியும் உடையவன். நாள்தோறும் காசுகள் தந்து தமிழோடிசை கேட்டின்புறும் இயல்பினன். மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள் பண் சுமந்த பாடல்கள். மாணிக்கவாசகரை இழந்து விட்டால் பண் சுமந்த பாடற் பரிசு கிடைக்காது.

மாணிக்கவாசகரின் பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெறுவதற்காகச் சிவபெருமான் வான்பழித்து இம்மண் புகுந்தனன். புவனியில் சேவடி தீண்டினன். குதிரைச் சேவகன் ஆயினன். மண் சுமக்கும் கூலிக்காரனாகி மண் சுமந்தான்; அடிபட்டான். புண் சுமந்தான். எண்ணரிய திருவிளையாடல்களை நிகழ்த்தினான். எல்லாம் மாணிக்கவாசகரைக் காப்பதற்கேயாம். மாணிக்கவாசகரிடம் பரிசாகப் பெற்ற பண் சுமந்த பாடல்களைத் தாமே தம் கைகளினால் படியெடுத்துக் கொண்டான். கடையூழியிலும் திருவாசகத்தை நினைந்து தன் தனிமையைக் கழிப்பதற்காக இக்கருத்தையெல்லாம் உணர்த்தும் பாடல் இது.

பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியமன்ட லத்தீசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கவிமதுரை
மண் சுமந்து கூவி கொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்

(திருவம்மானை-8)
இறைவா, என்னைப்
பணிகொள்வாய்!

கடவுள் மறுப்புக் கொள்கை ஒன்றும் புதியதல்ல. பழைய கொள்கை. சமய நூல்களில் கடவுள் மறுப்புக் கொள்கை உலகாயதம் என்ற பெயரில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. கடவுளை மறுத்தல் எளிது. கடவுளை நம்புதல் கடினமான கொள்கை. கடவுளை நம்பவேண்டும். நம்பிக்கையில் உறுதி வேண்டும். கடவுள் நெறியில் நடத்தலுக்குரிய திண்மை வேண்டும். இடர்ப்பாடுகளைக் கடந்தும் கடவுளை நம்புதல் வேண்டும். ஆதலால் கடவுளை நம்பும் கொள்கை. அக்கொள்கை வழி வாழ்தல் அருமைப்பாடுடைய முயற்சியின் பாற்பட்டது.

அதுபோலவே கடவுள் நெறியில் நின்று வாழ்தலே வழிபாடு. வழிபாடு என்பது உயர் கொள்கை. வழிப்படுதல் என்ற சொல்லே வழிபாடு ஆயிற்று. இறைநிலை இயக்கம்; ஓயாத இயக்கம்; இடையீடின்றி இயங்கும் இயக்கம். இயக்க நிலையில் ஐந்தொழில்கள் நடக்கின்றன. படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள் நடத்தும் முதல்தரத் தொழிலாளி- உழைப்பாளி இறைவன். இறைநெறியில் நிற்போருக்குப் படைப்பாற்றல் வேண்டும் இறைவனிடம் உள்ள படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாவரங்களின் ஒளிச்சேர்க்கை போன்றதே இறைவனிடம் ஆன்மா நடத்தும் ஞானச்சேர்க்கை. இறைவன் தந்த உலகைக் காக்கவேண்டும். நாளும் தீமைகளுடன் போராடி நல்லவற்றை நிலைநிறுத்த வேண்டும். நன்றல்லாதவற்றை மறக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அருளாக்கம் கண்டு வாழ்வித்து வாழ்தல் வேண்டும். இதுவே சமய வாழ்க்கை. கடவுள் எல்லாம் செய்வார் என்று வாளாகிடத்தல் இறைநெறி சார்ந்த வாழ்க்கையன்று.

கடவுளையும் கடவுளின் அருளையும் மறுத்து வாழ்தல் என்பது அறிவுடைமையன்று. கடவுள் இல்லை என்பது எளிதான விவாதம். ஆனால், இந்தப் பரந்த உலகியலில் ஓர் ஒழுங்கு (Order) இருக்கிறது. முறைபிறழாத நிகழ்ச்சிகள் (Consistency) இருக்கின்றன. இவை எப்படி? எதனால்? நியதி என்று சமய நூல் கூறும். இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன் என்ற வரையறை ஏதும் கடவுளுக்கு இல்லை. திருவள்ளுவர், “வாலறிவன்” என்றார். “மூரி முழங்கொலி நீர்” என்றும் “வாசமலர்” என்றும் திருமுறை கூறும். ஆதலால், சமயவாதிகள் பலபடக் கூறும். கடவுள் உருவமும், தன்மைகளைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை! கடவுள் உயர்வற உயர்ந்த பேரறிவு! பேராற்றல்! வரம்பில் இன்பம்!

மாணிக்கவாசகரும் தொடக்க காலத்தில் கடவுளின் அருளை மறுத்து வாழ்ந்திருப்பார் போலும்! “மறுத்தனன் யான் உன் அருளை” என்று கூறுகின்றார். அங்ஙனம் மறுத்தது அறியாமையின் விளைவு என்று ஒத்துக் கொள்கின்றார். அறியாமை என்பது தெரியாமையன்று. முறை பிறழ உணர்தல் அறியாமை. மறுத்து வாழ இயலாத கடவுள் அருளை, மறுத்து வாழலாம் என்பது முறை பிறழ்ந்த செயல்தானே! இறைவா! யானுன் அருளை மறுத்ததால் வெறுத்து ஒதுக்கிவிடாதே! மணி, அதன் மதிப்பினை உணர்ந்தார்க்கும் உணராதருக்கும் ஒளி தரும். நீ, மணி, மணிகளுக்கெல்லாம் சிறந்த மணி. ஆதலால் என்னை வெறுத்து ஒதுக்காதே! நான் உன்னை வெறுத்ததற்குக் காரணம் நான் அல்ல. என்னுடைய வினைத் தொகுதி ஆட்டி வைத்தது. ஆதலால் என்னை ஒதுக்காமல் என் வினைத் தொகுதியை ஒறுத்திடு. எனக்குக் கேடு செய்யும் வினைகளிலிருந்து என்னை மீட்டு எடு! ஆண்டுகொள்! இறைவா, நான் சிறியவன்! வினைத் தொகுதி வசப்பட்டவன். ஐவரொடு போராடி வெற்றிபெற முடியாமல் தவிப்பவன். நீயோ, பெரியோன்! பிறவா யாக்கைப் பெரியோன்! நீ என் வினைகளைப் பொறுத்தாட் கொள்ளுதல் கடமை! நானாக ஒன்றும் செய்யவில்லை! என் வினைகள் என்னைப் பொய் நெறியில் இழுத்துச் சென்றன! ஆனாலும் நான் நாய்! சிறு நாய்! நீ ஆட்கொண்டருளினால் உன்னை நினைந்தே வாழ்வேன்! மறவேன்! பெரியோனாகிய நீ என் பிழை பொறுத்து என் வினைத் தொகுதியை ஒறுத்து என்னை மீட்டு எடுத்து ஆண்டுகொள்! என்று உருகுகிறார் மாணிக்கவாசகர்.

இறைவா, முன்பே ஒருதரம் ஆட்கொண்டாய்! குருந்த மரத்தடியில் ஆட்கொண்டருளினை! அப்போது நான் என் உயிரையே உனக்கு அர்ப்பணிப்புச் செய்தேன்! உரிமைப் படுத்தினேன்! என்னுடைய உடலையும் உனக்கே உரிமைப்படுத்தி உன்னுடைய அடிமையானேன்! அடிமைக்கு ஆர் என்று கூக்குரலிட்டேன். அடிமைக்கு உடைமைகள் ஏது? ஏன்? எதற்கு? ஆதலால் என்னுடைய உடைமைகளையும் உன்னிடமே ஒப்படைத்தேன்! நீ அவற்றையெல்லாம் ஆட்கொண்டபோது கொள்ளவில்லையோ? நீயே என் தலைவன்! நீயே என் ஆண்டான்! நான் அடிமை! இன்று எனக்கு ஓர் இடையூறு உண்டா? இடையூறு வரலாமா? ஆனால், இடையூறு வந்திருக்கிறது; வந்து கொண்டிருக்கிறது. தமக்கு அன்பு பட்டவர் பாரம் சுமப்பதற்கென்றே எட்டுத் தோள்களை-வலிமை மிக்க தோள்களைக் கொண்ட பெருமானே! உனக்கு என்னுடைய அல்லல்கள் தெரியவில்லையா? தெரிந்தும் பாராமுகமாக இருக்கிறாயே! என்று நெக்குருகப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னையாட்
கொண்ட போதே கொண்டிலையோ

இன்றோர் இடையூறு எனக்குண்டோ?
எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே!

(குழைத்தபத்து-7)

இறைவா, நாட்டவர் சொல்லக் கேள்வி! அழுக்கொடு சேர்ந்தால் நிலம் அழுக்காகும். அழுக்கொடு சேர்ந்தால் தண்ணீர் அழுக்காகும். ஆனால், நெருப்பு! அழுக்கொடு சேர்ந்தால் நெருப்பு அழுக்காகாது. அது மட்டுமல்ல, அழுக்கும் தூய்மையாகும் என்பர். திருப்பெருந்துறைப் பெருமானே! உனது கண்களில் ஒன்று அக்கினி; தீ! ஏன் என் ஆணவத்தைச் சுட்டுப் பொசுக்கக் கூடாது? என்னுடைய வினை வளத்தை நீறாக்கக் கூடாது? முழு நீறு சண்ணித்த திருமேனியை உடைய சிவனே! உயிர்கள் செய்த வினைகள் நீறாவதற்காக நீறணிந்து நிற்கின்றாய்! வினைகள் நீங்கி நிற்கின்றாய்! விளங்கும் முதல்வனாகி நின்றருள் செய்கின்றாய்! ஊழி முதல்ல! ஒருவ! நீ, நன்றே செய்வாய் என்று நம்பி ஆட்பட்டேன் இறைவா, நீ நன்றுடையாய்! எத்தகைய நன்று? தீமையே கலப்பில்லாத நன்று! திருவருள் நன்று! ஆனால், நீ செய்த நன்றை நன்றெனக் கருதாமல் பிழையென எண்ணினேன்! உன்னுடைய அருளிப்பாட்டில் பிழையே இருக்காது. பிழை இருக்க வழியே இல்லை! ஆயின் என்னுடைய அறியாமையால் பிழையென்று கருதினேன்! நின்னருளைத் துணிந்து மறுத்தேன்.

‘சிவாயநம’ என்று சொல்லும் பேற்றினை அருளிச் செய்தனை! அன்றே எனது அல்லல்கள் அகன்றன என்று எண்ணியிருந்தேன். ஆனால், அல்லல்கள் அகன்ற பாடில்லை. மீண்டும் மலவாசனை தாக்குகிறது. பாசி படர்ந்த குளத்தில் பாசி அகன்றும் முழுதும் அகலாமல் உடன் படர்தல் போல என்னை ஆணவம் அடர்த்துகிறது. நெய்க்குடத்தைச் சுற்றிலும் எறும்புகள் மொய்ப்பதைப் போல வினைகள் என்னை மொய்க்கின்றன. அவா, வெள்ளம் போல் வந்து தாக்குகிறது! இறைவா, இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆட்கொண்டருளிய நீ, துன்பத்திற்குக் காரணமாகிய உடலை அகற்றாமல் வைத்து வாழவைத்து விட்டாய்! உடல் உள்ள அளவும் மலவாசனை இருக்கத்தானே செய்யும்! வினைகளும் நீங்கா இறைவா! என்னை ஆட்கொண்டருளிய நீ என் உடலை நீக்காதது ஏன்?

இறைவா, இன்று என் பிழைகளை எண்ணி வெட்கப்படுகின்றேன்; வருத்தமுறுகின்றேன் ஆட்கொண்டருளிய உன்னையும் பிரிந்துவிட்டேன்! திருப்பெருந்துறை சிவனே! நான் பொய்ம்மையுடையேன். ஆயினும் பெரியோனாகிய நீ கருணையினால் என் உடல் புகுந்து இடம் பிடித்து ஆட்கொண்டருளினை! ஆயினும் நின் கருனைப் பெருவெள்ளத்தை நினைந்து நினைந்து அழுகின்றேனில்லை. இரும்பின் பாவையனைய நான் ஆண்டருளிய நின்னைப் பிரிந்தேன்! அல்லல்களுக்கு ஆளானேன்! ஆயினும் செத்துப் போனேன் இல்லை! மண்ணில் வாழ்கின்றேன்! விழித்துக் கொண்டிருப்பதாக எண்ணினேன்! பாவித்தேன்! என் உள்ளக் கருத்தை மனத்துள் நின்ற கருத்தை இழந்தேன்! விழித்திருந்தும் இறந்த மூடர்களை இந்த உலகில் கண்ட துண்டா? என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கின்றேன்! இறைவா! இனியும் பொறுக்க இயலாது! விடைப்பாகா! உழுத பயனை ஊரவர் உண்டு மகிழ, வைக்கோலைத் தின்று உயிர் வாழும் கிடையை வாகனமாக உடையவனே! உன்னைப் பிரிந்து இனிது இருக்க ஒருப்படேன்! அதனால், இறக்கவும் மாட்டேன்.

இறக்காமையால் தானே மீண்டும் மீண்டும் அல்லல்! இறைவா, உடலை நீங்காது வாழ்ந்திடத் திருவுள்ளம் பற்றினை! அப்புறம் ஏன் துன்பங்களைத் தந்து ஒறுத்திடுகின்றாய்! இறைவா நீ என் உடலை ஒறுத்திடுதல் நன்றோ! நான் உய்வதற்கு என்னை ஒறுத்திடுதல் மட்டும் போதுமா? ஒறுத்தலினால் விளைவது துன்பமே! ஆதலால் இறைவா! என்னை ஒறுத்தது போதும்! இனிமேலும் ஒறுத்து வருத்தந் தரவேண்டாம்! என்னைப் பணிகொள்! உடல் பணிகளில் ஈடுபட்டால் வினை நீங்கும். துன்பங்கள் தொடரா! இறைவா, நீ எனக்கு உடல் தந்தருளியதே, பணி செய்யத்தானே! கண்கள் இயல்பாகப் பிறரையே பார்க்க உதவுகின்றன. இதன் அமைப்பு விதி என்ன? பிறர் நலம் காண முயலுக, பிறரொடு உறவு கொள்க என்பதுதானே! உடற்பொறிகள் அனைத்தின் அமைப்பும் பிறர் நலம் கருதியதாகத்தான் அமைந்துள்ளன. ஆதலால், என்னைப் பணிகொள்! பணி செய்தால் பொறி புலன்கள் அன்பில் தோயும்! எல்லோரிடமும் பணிந்து பணி செய்வதால் தாழ்வெனும் தகைமை வந்து பொருந்துகிறது.

ஆன்மாக்களின் உய்தியையே குறிக்கோளாகக் கொண்ட தலைவனே! தனக்குவமை இல்லாத தலைவனே! நான் என்ன செய்வேன்? இறைவா, நீயே பணித்தருள்! ‘இது செய்க!’ என்று பணித்தருள்! உன் விருப்பமே என் விருப்பம்! பணித்த வண்ணம் செய்வேன். காலந்தாழ்த்தாது அருள் செய்க! காலம் தாழ்த்திடின் செத்துப் போவேன்! நான் செத்துப் போனால் எல்லோரும் சிரிப்பர்! வேண்டாம் ஐயனே அருள் செய்க!

இறைவா! அனுபவித்த அல்லல்கள் போதும்! இனி மேலும் அல்லல்களைத் தராதே! ஒறுத்திடாதே! பணி கொண்டு அருள்செய்! ஒரோவழி நான் பணி செய்ய மறுத்தால் என்னைப் பலரறியக் கூவியழைத்துப் பணி கொள்! பலரறியப் பணி கொள்! பணி செய்தலே வினை நீக்கத்திற்கு வழி! இறைவா, திருப்பெருந்துறை இறைவா அருள் செய்! என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். அத் திருப்பாடல் இது.

அடியேன் அல்லல் எல்லாமுன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறா!எம்
கோவே! ஆ, வா என்றருளிச்

செடிசேர் உடலைச் சிதையாத(து)
எத்துக்கு எங்கள் சிவலோகா?
உடையாய் கூவிப் பணி கொள்ளாது
ஒறுத்தால் ஒன்றும் போதுமே!

(குழைத்தபத்து-2)
‘வா’ என்ற வான்கருணை

மாணிக்கவாசகர் அன்பு ஒன்றினையே வேண்டி நின்றார். “உனக்கு நிரந்தரமாய் அன்பு எனக் கருளாய்” என்று வேண்டினார். அன்பினால் ஊனும் உயிரும் உருகும் வகையில் அழுது அழுது அடி அடைந்தவர் மாணிக்கவாசகர். அதனால், அவர்தம் திருப்பாடல்கள் ஊனினை உருக்குகின்றன; உள்ளொளியைத் தருகின்றன. “பாம்பறியும் பாம்பின் கால்” - இது பழமொழி. கற்றாரை கற்றாரே காமுறுவர். அடியார்கள், அடியார்களுடன் இணங்கி அவர்தம் நடுவுள் இருப்பதையே விரும்புவர். அடியார் கூட்டத்தில் தம்மை அங்கீகரித்துப் பேசுவாரை விரும்புவர். மாணிக்கவாசகர் இந்த இயல்புகளுக்கு விதிவிலக்கானவரல்லர்.

மாணிக்கவாசகருக்குக் கண்ணப்பரிடம் பக்தி. கண்ணப்பர் தம் தூய அன்பை, அவர் இயற்றிய வழிபாட்டை, வழிபாட்டின் சிறப்பை வியந்து வியந்து உள்ளமெலாம் உவப்பப் பாராட்டுகின்றார்; பாராட்டி மகிழ்கின்றார்.

திருவுருவ வழிபாடு செய்தல் எளிதன்று. அது மிகவும் கடினமானது. திருவுருவத்தைக் கடவுளாகப் பாவிக்க வேண்டும். “திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைக் கண்டவர்க்குச் சிவனெனவே உறைவன் ஆங்கே!” என்பது சித்தியார். “திருக்கோயில் எழுந்தருளியிருப்பது திருவுருவமல்ல; கடவுளே” என்ற நம்பிக்கையுடன் வழிபட்டால் வழிபாடு இறைவனுக்குச் செய்தது ஆம்! அங்ஙனமின்றி திருவுருவம் என்று வழிபட்டால் வழிபாடு இறைவனுக்காகாது. இதனை மாணிக்கவாசகர்,

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே,
எங்களை ஆண்டு கொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில் திருவுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!

(திருப்பள்ளியெழுச்சி-7)

என்று பாடுவதறிக. “இது அவன் திருவுரு; இவன் அவன் என்று வழிபடுதலே முறையான திருவுருவ வழிபாடு. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பூசை செய்ய வேதம் கற்றிருக்க வேண்டும்; ஆகமங்கள் தெரிந்திருக்கவேண்டும். பூசைக்குப் பல்வேறு பொருள்கள் வேண்டும். இங்ஙனம் பல்வேறு பொருளைச் சாதனமாகக் கொண்டும் மந்திரங்களை உச்சரித்தும் வழிபாடு செய்ய வேண்டும்.

சிவகோசரியார் மரபுவழி- விதிமுறைப்படி பொருள் பற்றிப் பூசை செய்தவர். நாள்தோறும் பொன்முகலியாற்றில் நீராடி விதிமுறைப்படி பூசை செய்தல் சிவகோசரியாரின் வழக்கம். திண்ணனாருக்கு - கண்ணப்பருக்குப் பூசனை, பழக்கத்தில் இல்லாத ஒன்று. கண்ணப்பர் வேடுவர் குலத்தைச் சார்ந்தவர். குல மரபுப்படி வேட்டையாடும் தொழிலைக் கற்றவர். அவர் இயற்பெயர் திண்ணனார். அவர், தோழன் வாயிலாக “மலை உச்சியில் குடுமித்தேவர். இருப்பார்; கும்பிடலாம்” என்று கூறக்கேட்டார். குடுமித் தேவரைக்காணும் ஆர்வம் திண்ணனாருக்குப் பொங்கிவழிந்தது. திண்ணனார் மலை ஏறுகிறார். உடற் சுமை குறைகிறது; ஆன்மா, தூய்மையுறுகிறது. திண்ணனாருக்கும் அவர்தம் அன்புக்குமிடையே போட்டி. திண்ணனாரின் அன்பு முன் செல்கிறது. திண்ணனார் குடுமித் தேவரைக் கண்டார். நிலமிசை வீழ்ந்து வணங்கினார்; எழுந்தார்; மீண்டும் வீழ்ந்து வணங்கினார்; காளத்தி அண்ணலை நோக்கினார் திண்ணனார் “காளத்தி அண்ணல் சாலப் பசித்திருக்கிறார்” என்று உணர்கிறார். “பொறுத்திரு! சடுதியில் சென்று உணவு கொண்டு வருகிறேன்” என்றார்; ஓடினார்; ஓடினார்; வேட்டையாடினார். பன்றி அறுத்து இறைச்சியாக்கினார். அனலில் சுட்டார்; வாயில் போட்டுச் சுவை பார்த்தார். ஆனால் சுவையை அனுபவிக்கவில்லை. பக்குவப்படுத்திய இறைச்சியைத் தேக்கிலையில் எடுத்துக் கொண்டார். “என் அப்பன் காளத்தி அப்பன் குளித்திருக்க மாட்டானே!” என்று எண்ணினார். குளிப்பாட்டத் தன் வாய் நிறையத் தண்ணீரை எடுத்துக் கொண்டார். பூக்களைத் தலையில் எடுத்துக் கொண்டார்; விரைந்து காளத்தியப்பன் சந்நிதிக்கு வந்தார். திண்ணனார் வாயில் கொண்டுவந்த தண்ணீரைக் காளத்தியப்பர் மீது சொரிந்து திருமஞ்சன மாட்டினார்; தலையில் இருந்த பூக்களை எடுத்துச் சூட்டினார். பின் கையில் தேக்கிலையில் கொண்டுவந்த ஊனை இறைவன் முன் படைத்து உண்ணுமாறு வேண்டினார். “நான் சுவைத்துப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது; உண்ணுக!” என்று இறைவனை வேண்டினார். மாலைப்பொழுது வந்தது; இருள் சூழ்ந்தது. “அப்பனே இருட்டில் தனியாக இருக்கிறாயே! துணை வேண்டாமா?” என்றெல்லாம் நீள நினைந்தார். இரவெல்லாம் விழித்து நின்று காத்தார்.

இந்தப் பூசை ஆகம வழிப் பூசையல்ல. புனல், பூ, தூபம், தீபம், மணியோசை முதலியன இல்லை. திண்ணனாரின் இந்தப் பூசையை இறைவன் விரும்பினார்; திண்ணனார் மெய் தீண்டும் பொழுதெல்லாம் மெய் குளிர்ந்தான். இதனால் வேடர் திண்ணனாரின் அன்பு, அன்பின் ஆற்றல் தெரிந்தது. முடிவு என்ன? பொருட்பற்றிச் செய்கின்ற பூசைகள் இறைவன் விரும்புவன அல்ல. அருச்சனை என்னும் வெறும் வயல் மட்டுமே பரந்து கிடந்தால் பயனுண்டோ? அந்த அர்ச்சனை வயலுள் அன்பை விதைக்க வேண்டாமா? இறைவன் மலைத்தான்! ஆனால், அன்பெனும் பிடியுள் அவன் சிக்குவான்! சிவகோசரியார் செய்த பூசை பொருளைப் பற்றிச் செய்த பூசை. திண்ணனார் செய்த பூசை அன்பு பற்றிச் செய்த பூசை. அதனாலன்றோ சிவகோசரியாருக்குக் கண்ணிடந்து அப்பும் பேறு கிடைக்கவில்லை. திண்ணனாருக்கே அந்தப் பேறு கிடைத்தது. ஏன் கண்ணிடந்து அப்ப வேண்டிய நிலை? காளத்தியப்பருக்குக் கண்ணில் உதிரங்கொட்டல் நோய், வரவழைத்துக் கொண்ட நோய். திண்ணனாரின் அன்பை- அன்பின் பெருக்கை அளந்து காட்ட வேண்டும், சிவகோசரியாருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும்! அன்பைப் புலப்படுத்துவன, அன்பின் அளவைப் புலப்படுத்துவன கண்கள்தாம். திண்ணனாரின் அன்பை யாருடைய கண்கொண்டு அளப்பது? அளந்தறிவது? எவருடைய கண்களும்- காளத்தியண்ணல் கண்களும்கூட, திண்ணனாரின் அன்பை அளந்து காணும் ஆற்றலுடையன அல்ல. எனவே, திண்ணனாரின் அன்பின் பெருக்கத்தைத் திண்ணனார் கண்களைக் கொண்டேதான் பார்க்க வேண்டும்; பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் காளத்தியப்பருக்குக் கண்ணில் உதிரப் பெருக்கு ஏற்பட்டது! பொருட்பற்றிப் பூசனை செய்த சிவகோசரியார் செயலற்றவராகிறார். திண்ணனார் விரைந்து செயற்படுகிறார்; தமது கண்ணை இடந்து அப்புகிறார். திண்ணனார் கண்ணப்பராகிறார்! அன்பு கண்ணப்பராகிறது! கண்ணப்பர் அன்பின் பிழம்பாய்த் தெரிகின்றார். கண்ணப்பரை ஆட்கொண்டருளிய இறைவன் தன்னையும் ஆட்கொண்டருளியதை வியந்து பாடுகின்றார், மாணிக்கவாசகர்.

பொருட் பற்றிச் செய்கின்ற
பூசனைகள் போல் விளங்கச்
செருப்புற்ற சீரடி
வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார்
சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா
தோணோக்கம் ஆடாமோ!

(திருத்தோணோக்கம்-3)

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூ தாய் கோத்தும்பீ!

(திருக்கோத்தும்பீ-4)

இன்றைய திருக்கோயில் வழிபாட்டு நிலையில் பொருட்பற்றிச் செய்கின்ற பூசைகளே பெருகி வளர்ந்து வருகின்றன. பொருட்பற்றிய பூசையிலும் கூடத் ‘தான்’ கெடாமல் செய்யும் பூசைகளே மிகுதி. தான் கெடாதது மட்டுமன்றித் தன்னுடைய தேவைகளை, இல்லை, இல்லை அவாக்களை அடுக்கி வைத்து அருள்பாலிக்கும்படி வேண்டிச் செய்யும் வணிகத் தன்மை வாய்ந்த பூசைகளே மிகுதி! “வேண்டத்தக்கது அறிவோய்” என்றும் “வேண்டுவதும் உந்தன் விருப்பன்றே!” என்றும் தொழுது அழும் பக்தர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை. இன்று எங்கும் அன்பு வழிபாடு அருகி, ஆசையினால் இயற்றும் வழிபாடே மலிந்து விட்டது. திருக்கோயில் சூழலும் ‘சிவகோசரியார்’களைத் தோற்றுவிப்பதாகவே உள்ளது. ‘கண்ணப்பர்கள்’ உருவாகும் சூழல் அறவே இல்லை. பழங்காலத்தில் சிவாச்சாரியார்கள் திருவுருவங்களில் இறைவனை (ஆவாகனம் செய்து) எழுந்தருளச் செய்து வைத்தனர். அவ்வாறு எழுந்தருளச் செய்தபின் பக்தர்கள் நேரிடையாக மூர்த்தியின் திருமேனி தீண்டிப் புனலும் பூவும் சொரிந்து வழிபடவும், அனைத்து உச்சிமோந்து வழிபாடியற்றவும் உரிமைகள் இருந்தன. தானே வழிபாடியற்றுதல்தான்-செய்வதுதான் நல்ல வழிபாட்டுப் பயிற்சி முறை. இந்த வழிபாட்டு முறையில்தான், ‘கண்ணப்பர்கள்’ தோன்ற முடியும். நாடு முழுதும் உள்ள திருக்கோயில்களின் வரலாறுகளைப் படித்தால் இந்த உண்மை புலனாகும். திருமுறைகளில், பக்தர்கள் திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனியைத் தீண்டி வழிபாடியற்றினர் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. அப்பரடிகள் பாடிய திருவையாற்றுப் பதிகத்தில் வரும்,

“போதொடு நீர் சுமந் தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்”

என்ற அடியை நினைவு கூர்க.

பக்தர்கள் அனைவரும் திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனியைத் தீண்டி வழிபடும் உரிமை இன்றும் வடபுலத்தில்- காசி முதலிய திருத்தலங்களில் நடைமுறையில் உள்ளது. இதனால் என்ன குறை வந்துவிட்டது? சம்பிரதாயம் என்ற பெயரில் பொருட்பற்றிச் செய்யும் பூசையை மட்டுமே வளர்த்து அன்பையும் அன்பைப் பற்றாகக் கொண்டு செய்யும் வழிபாட்டையும் புறத்தே தள்ளி, இறைவனிடமிருந்து பக்தர்களை அந்நியமாக்கினால் என்ன செய்வது? காலப் போக்கில் மக்கள் திருக்கோயில்களிலிருந்து விலகுவர். திருமுறை ஆர்வலர்கள் சிந்தனை செய்க!

குறிக்கோள் சார்ந்த வாழ்வு

தஞ்சை மாவட்டத்தில் மண்ணியாற்றங்கரையில் திருச்சேய்ஞலூர் என்ற ஒரு சிற்றூர் உள்ளது. இயற்கை வளங்கொழிக்கும் ஊர் அது. வேத ஆகம சாத்திரங்கள் பயின்ற அந்தணர்கள்- நித்திய வேள்வி இயற்றும் சீலமுடைய அந்தணர்கள் பலர் வாழ்ந்த ஊர். திருச்சேய்ஞலூர்க் கிராமத்தில் வேள்வி குண்டப் புகை அணைந்ததே இல்லை.

இந்த ஊரில் எச்சதத்தர்- பவித்திரை என்ற தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளையின் திருநாமம் விசாரசருமர். அவர் இளமையிலேயே வேதங்களில் ஆறங்கங்களில், சைவாகமங்களில் வியக்கத்த்க்க அறிவு பெற்றிருந்தார். விசாரசருமருக்கு முறைப்படி முப்புரி நூல் அணிவித்தல், வேதங்களில் பயிற்சி தொடங்குதல் முதலிய சடங்குகள் நடைபெற்றன. விசாரசருமர் வாழ்க்கையின் இயல்பையும் குறிக்கோளையும் உணர்ந்தார். சிவத்தைப் பூசிக்க வேண்டும் என்று தெளிந்தார்; அறிந்து கொண்டார்.

ஒருநாள் மண்ணியாற்றங்கரையில் தன்னையொத்த பிள்ளைகளுடனும் பசுக் கூட்டத்தினுடனும் சென்ற பொழுது ஒரு பசு தன்னை மேய்ப்பானை முட்டப் போயிற்று. மேய்ப்பான் தற்காப்பு அடிப்படையில் அந்தப் பசுவைக் கண்டபடி அடித்துவிட்டான். இது கண்ட விசாரசருமர் மிகுந்த வேதனையுற்று மேய்ப்பானிடமிருந்து அடிபட்ட பசுவை மீட்டார். “பசுவை அடிக்கலாமா? நாளும் பால் சொரிந்து உயிர்க் குலத்தையும் பூசை முறைகளையும் வளர்க்கும் பசுவல்லவா? பசுவின் உடம்பே புண்ணியத்தின் புதையல்” என்றெல்லாம் அறிவுரை கூறினார், அதுமட்டுமின்றி, “இனி நீ பசுக்களை மேய்க்க வேண்டாம், நானே மேய்த்துக் கொள்கிறேன்” என்று கூறி அந்த அந்தணச் சிறுவர் பசு மேய்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். செய்யும் தொழிலுக்குச் சாதிகள் தடையில்லை என்பது பழைய மரபு.

அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பொறுப்பை விசாரசருமர் சிறந்த முறையில் செய்தார். பசுக்கள் மகிழ்ச்சியாக இருந்தன. நிறைய பாலும் கொடுத்தன. விசாரசருமர் பசுக்களை மிக நன்றாக வளர்த்தமையால் பசுக்கள் தாம் ஈன்ற கன்றுகளைப் பிரிய நேரிட்ட பொழுதும் வருந்தவில்லை; ஆனால் விசாரசருமரை ஒரு நொடிப் பொழுதும் பிரிய ஒருப்படவில்லை. விசாரசருமரை நினைத்தாலே பால் பொழியும் அளவுக்குப் பசுக்களின் நிலை வந்துவிட்டது. தாமே பசுக்கள் பொழியும் பாலைச் சிவபெருமானுக்கு முழுக்காட்ட விசாரசருமர் எண்ணினார். ஆதலால் மண்ணியாற்றின் மணலில் ஒரு சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளச் செய்து அந்த மூர்த்திக்கு, பசுக்கள் தாமே பொழிந்த பாலைத் திருமுழுக்காட்டினார். இது நாள்தோறும் நடைபெறும் பழக்கமாயிற்று. இங்ஙனம் பால் சுரந்தமையால் வீட்டிலும் பசுக்கள் தந்த பால் குறையவில்லை. இருப்பினும் ஊர் சும்மா இருக்குமா? ஒருவன் விசாரசருமர் சிவத்தினை எழுந்தருளச் செய்து பால் முழுக்காட்டுவதைப் பசுக்களுக்குரிய அந்தணர்களிடம் கூறிவிட்டான். அந்தணர்களுக்கு யாதொரு இழப்பும் இல்லை. அவர்களுக்குக் கறந்த பாலில், யாதொரு குறைவும் இல்லை. அப்படியிருந்தும் சபையில் விசாரசருமரின் தந்தையை அழைத்து, விசாரசருமரின் அடாத செயல் பற்றிக் கூறினர். விசாரசருமரின் தந்தை எச்சதத்தர் தவறு நிகழ்ந்திருக்காது என்றும் அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்குத் தாமே பொறுப்பேற்பதாகவும் உறுதி கூறினார்.

மறுநாள் விசாரசருமர் வழக்கம்போல் பூசையில் அமர்ந்தார்; பூசை செய்தார். தம்முன் எழுந்தருளியிருந்த இறைவனுக்குப் பால் முழுக்காட்டினார். இச்செயலை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தர்- விசாரசருமரின் தந்தை வெகுண்டு தடித்த கோலினால் விசாரசருமரை அடித்தார். விசாரசருமரின் சிவயோகம் கலையவில்லை. எச்சதத்தர் தீராத வெகுளியால் பால் முழுக்காட்டுக்கு என்று வைத்திருந்த பாற்குடத்தைத் தனது காலால் இடறி விடுகிறார். விசாரசருமரின் சிவயோகம் கலைகிறது. சிவ பூசைக்கு உற்ற இடர்ப்பாட்டைச் சடுதியில் உணர்கிறார். பாற்குடத்தை உதைத்த கால்களை வெட்டி விடுகிறார். எச்சதத்தர் கால்களை இழந்து வீழ்ந்தார். சிவபெருமான் அம்மையப்பராக எழுந்தருளிக் காட்சி தந்தருளி தாம் உண்பனவும் உடுப்பனவும் பெறும் சண்டேசுவரர் என்றும் பதந்தந்தருளினார்.

இந்த வரலாறு தரும் படிப்பினைகள் பலப்பல. முரண்பாடுகளும் உடைய வரலாறு இது.

பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற பாடம் மிக மிக முக்கியம். பசு இந்த நாட்டின் செல்வம். பசுக்களை முறையாக வளர்க்க வேண்டும். பசும்புல் மேயவிடுதல், நறுநீர் குடிக்கத் தருதல், குளிர் நிழலில் படுத்து இழைப்பாறச் செய்தல் ஆகியன பசுப் பாதுகாப்புக்கு முக்கியம். இத்தகைய ஏற்பாடுகள் இன்று நமது நாட்டில் இல்லை. நாம் பசுக்களை வணங்கக் கற்றுக் கொண்டிருக்கிறோமே தவிர, வளர்க்கக் கற்றுக் கொள்ளவில்லை. குடம் குடமாகப் பால் கறக்கும் இந்தியப் பசுக்கள் இன்று உழக்குகள் அளவிலேயே கறக்கின்றன. பசுக்களில் அயல் நாட்டின் மோகத்தால் உள்நாட்டினம் அருகிப் போய் கொண்டிருக்கிறது. பசுக்களில் நமது மரபு வழி வந்த இனப் பசுக்களையே முறையாக வளர்க்க வேண்டும். எனவே, கிராமம் தோறும் முறையாக அமைந்த மேய்ச்சல் தரைகள் தேவை.

மனிதக் கூட்டம், தமக்கு இழப்பில்லையானாலும் மற்றவர்கள் ஒன்றை அனுபவிக்கவிட மாட்டாது. அதனாலேயே அடிமைத் தனத்தின் துர்க்குணமாகிய பொறாமை மனித குலத்தைவிட்டு அகலவில்லை. இன்று உலகம் முழுதும் வாழும் மக்கள் உண்டு மகிழப் போதிய உணவு உண்டு. ஆனாலும் பஞ்சம் இருக்கிறது. தனி மனிதனின் பேராசையே பஞ்சத்திற்குக் காரணம். விசாரசருமர் இறைவனுக்குப் பால் முழுக்காட்டியதில் பசுக்களின் சொந்தக்காரர்களுக்கு யாதோர் இழப்பும் இல்லை. அவர்களுக்குக் கிடைத்த பாலில் குறைவும் ஏற்படவில்லை. ஆயினும் விசாரசருமரின் வழிபாட்டிற்கு இடையூறு செய்கின்றனர். இதுதான் மனிதனின் விபரீத புத்தி.

சண்டேசுவரர் சிவயோகத்தில் அமர்ந்தருளிப் பூசை செய்கிறார். தந்தை எச்சதத்தர், தன் மகன் விசாரசருமரை அடிக்கிறார். ஆயினும் விசாரசருமரின் சிவயோகம் கலையவில்லை; பூசை நிற்கவில்லை. தன்னை மறந்து தலைவன்தாள் நினைந்த நிலை. தற்சார்பு முழுதும் அற்ற நிலை. ஆதலால், தந்தை அடித்த அடிகள் யாதொரு பயனையும் தரவில்லை. தந்தை எச்சதத்தர் பாற்குடத்தை இடறிய நிலையில் விசாரசருமருக்கு விழிப்பு வந்துவிட்டது. ஏன்? குறிக்கோளுக்கு அல்லவா இடையூறு வந்துவிட்டது. குறிக்கோளை இழந்து வாழ்வதால் பயன் என்ன? விசாரசருமரின் குறிக்கோளாகிய சிவத்திற்குத் திருமுழுக்காட்டல் என்ற குறிக்கோளுக்கு இடையூறு செய்தவரின் கால்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன.

தற்சார்பற்றுக் குறிக்கோள் சார்ந்து வாழ்ந்த நிலை, விசாரசருமரின் நிலை. இன்று நமது மக்கள் கூட்டத்திற்குக் குறிக்கோள் இல்லை. ஒரோவழி இருந்தாலும் குறிக்கோளுக்காகப் போராடுவதில்லை; வாழ்வதில்லை. எங்கும் தற்சார்பு வாழ்க்கை நிலையே மேலோங்கி நிற்கிறது. இது நமது மரபு இகந்து வாழும் முறையாம். குறிக்கோள் இலாது வாழும் வாழ்க்கை, கெட்ட வாழ்க்கை.

குறிக்கோள் அவரவர் நிலையில் அவரவர் தகுதி, விருப்பங்களுக்கேற்ப எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆதலால், குறிக்கோள் என்பது ஓர் ஒழுங்கமைவுடன் அமையாது; அமையமுடியாது; அமையக்கூடாது. தான் கருதும் குறிக்கோள்களின் காரணமாக ஒருவன் செய்யும் அறமல்லாத செயல்கள் அறமாகக் கருதப்பெறும். இஃது உலக வழக்கில் சிறப்புடையது. ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கச் செய்யப்படும் கொலைகள், கொலைகளாகக் கருதப்படுவதில்லை. இது வரலாறு புகழும் வீரம்; தியாகம்! அதுபோலத் தான் வழிவழியாக நடைபெற்று வரும் மாந்தரினத்தின் குறிக்கோளாகிய வழிபாட்டிற்கு இடையூறு செய்யக்கூடாது. வழிபாடு குறிக்கோள். குறிக்கோளுக்கு இடையூறு செய்தது குற்றம். குற்றத்திற்குத் தண்டனை கால்களை இழத்தல். அன்பின் மிகுதியால் பிறர் நன்மையுற- பலர் நன்மையடையச் செய்யப்பெறும் காரியங்கள் காட்சியளவில் கொடுமை போலவும் பாபம் போலவும் தோன்றினாலும், அவை கொடுமையும் அல்ல, பாபமும் அல்ல. காரணம் அன்பு; குறிக்கோள் வெற்றிபெறுதல். அங்ஙனமின்றி- அன்பு இல்லாமல் வரலாற்றுக்கும் மாந்தர் கூட்டத்துக்கும் பயன் இல்லாமல் செய்யப்படும் சில பணிகள் அறம்போலத் தோன்றினாலும் அவை அறம் அல்ல; குறியெதிர்ப்பு உடையன.

இந்த விசாரசருமர் பற்றி- சண்டேசுவரர் பற்றி மாணிக்கவாசகர் பாடிய திருப்பாடல் சிந்தனைக்குரியது.

மாணிக்கவாசகர் ‘தீதில்லை மாணி’ என்று தொடங்குகின்றார். ஆம்! விசாரசருமர் இளம் வயதினர். அவருக்குத் தீய பயிற்சி இல்லை! தீய பழக்கங்களும் இல்லை! தூய்மையான வாழ்க்கையுடன் வளரும் இளைஞர் விசாரசருமர். தந்தையின் தாளைத் தடிந்த கொலைகாரர் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதே என்ற முற்காப்புணர்வுடன் ‘தீதில்லை மாணி’ என்றார். ‘தீதில்லை’ என்று மட்டும் பொருள் கொண்டால் தன் தந்தையின்- எச்சதத்தரின் காலை விசாரசருமர் தடிந்தது குற்றமும் இல்லை; தீமையும் இல்லை என்பதாகும். ஏன்? வழிவழி வளர்ந்து வந்துள்ள மரபுகளைக் காக்கும் கடமை பூண்ட ஒருவர் அந்த மரபுகளையே அழிப்பதை எங்ஙனம் ஏற்கமுடியும்? மரபுகளை அழித்தவர்கள்- அழித்துக் கொண்டிருப்பவர்கள் வாழ்ந்தால் என்ன? இறந்தால் என்ன? அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு உள்ள கடமை, வரலாற்றைத் தூக்கிப் பிடிப்பதுதான். அதைச் செய்யாதவர்கள் இருப்பது எற்றுக்கு? என்று உணர வைக்கிறார் மாணிக்கவாசகர்.

எச்சதத்தர், விசாரசருமக்கு என்ன தீங்கு செய் திருந்தாலும் மன்னிக்கப்பட்டிருப்பார். ஆனால் எச்சதத்தர் செய்ததோ திருமுழுக்குக்கு வைத்திருந்த பாற்குடத்தை இடறிவிட்டதாகும். எனவே, செழுந்தமிழ் வழக்குக்கும் தமது குறிக்கோள்களுக்கும் இடையூறு விளைவித்தமையால் தாதை தாள் தடியப்பட்டது. எந்த உறுப்பு தவறு செய்ததோ அந்த உறுப்புக்குத்தான் தண்டனை தரப்பட்ட்து. ஆயிரம்தான் சொன்னாலும் எச்சதத்தர் தந்தை. எச்சதத்தரும் வழிபடும் திருமேனிக்கு இடையூறு செய்யவில்லை. இடறிவிட்டது பாற்குடத்தையே! இந்தக் குற்றத்திற்குக் காலையே வாங்குவதா? இது பாதகம் இல்லையா? என்று உலகவர் பேசுவதும் உண்மைதானே! உலகவர் பாதகம் என்று நினைந்து கூறினாலும் சோறும் பெற்றார். உடல் வளர, வாழச் சோறு தேவை. ‘சோறு’ என்ற சொல்லுக்குப் பயன் அல்லது வீடுபேறு என்றும் விளக்கம் கூறலாம். இளையான்குடிமாறர் வரலாற்றில் ‘சோறிட்டுச் சோறு பெற்றார்’ என்பார் சேக்கிழார் பெருமான். இங்கு விசாரசருமர், சண்டேசுவரர் எனும் பதம் பெற்றார் என்பதனை உணர்த்த “பாதகமே சோறு பற்றினவா” என்றார் மாணிக்கவாசகர்.

திருசேய்ஞலூர் விசாரசருமர் குறிக்கோள் பேணினார். சண்டேசுவரர் எனும் பதம் பெற்றார்.

இன்று குறிக்கோள் சார்ந்த வாழ்வு மலர்தல் தேவை. இன்றைய உலகம் அவாவி நிற்பது குறிக்கோளுடைய மக்களையே! குறிக்கோளுக்காகப் போராடும் மக்களையேயாம்.

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

(திருத்தோணோக்கம்-7)
பணிவேண்டிப் பணிவோம்!

தமிழில் உவமை, சிறப்புடைய ஒன்று. ஒன்றை எளிதில் விளக்குவதற்கு உவமையைப் போல் உதவி செய்வது பிறிதொன்றில்லை. மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தில் உள்ள உவமைகள் பலப்பல. அவையுள் எளிதில் விளங்கும் உவமைகள் மிகுதி. “ஊர் ஆ” “ஊர் நாய்” போன்ற உவமைகள் மிகமிகப் பொருட் செறிவுடைய உவமைகள் மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் கண்டு அனுபவிப்பவைகளே உவமைகளாகியுள்ளன.

இறைவன்-சிவன் அம்மையப்பன், நெருப்பும் சூடும் போன்றது. அம்மையப்பன் தத்துவம்; பொருளும் ஆற்றலும் (Matter and Energy) போன்றது. பரசிவம் இயங்குநிலையில்-தொழிற்படு நிலையில் சக்தியாகப் பரிணமிக்கிறது. நெருப்பையும் சூட்டையும் பிரிக்க இயலாதது போல அம்மையையும் அப்பனையும் பிரிக்க இயலாது. அதனாலேயே மங்கைபாகம் என்ற திருவுருவத்தில்-திருநாமத்தில் வழிபடும் வழக்கம் தோன்றியது; தோன்றி வளர்ந்தது. இறைவன்- சிவன் பெண்பால் உகந்தமையை வினாவாக்கி விடையளிக்கிறது திருவாசகம். திருச்சாழலில்,

தென்பா லுகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்தினேற் பேதாய்இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ

(திருச்சாழல்-9)

என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். இறைவன் அம்மையப்பராக இருத்தலினாலேயே இந்த உலகம் இயங்குகிறது. உயிர்க்குலம் வளர்கிறது.

மாயிருஞ்சகம் ஆணொடு பெண்ணாய்
வயக்க முற்றன அகிலநா யகியும்
பாயும் வெள் விடைப் பாகரை
மணந்து”

(காஞ்சிப். தமுபக்குழைந்த படலம் 14)

என்று காஞ்சிப் புராணம் கூறும். சிவத்தை அம்மையப்பராகவே வழிபடவேண்டும். சிவம், ஆருளுவதெல்லாம் அம்மையப்பர் திருக்கோலத்திலேயாம். சிவத்தின் ஒரு கூறே அருள் செய்யும் அம்மை! என்றாலும் பெரிய புராணத்தில் வரும் அடியார் பெருமக்களுக்கு அருள் வழங்கிய பொழுதெல்லாம் அம்மையப்பன் திருக்கோலத்திலேயே நிகழ்ந்தது. அதனாலேயே அருள்பாலித்த திருத்தலங்களில் எல்லாம் கருவறையில் சிவலிங்கத்திற்கு முன் அம்மையப்பர் திருமேனியும் விளங்கிக் காட்சியளிக்கிறது. ஆற்றல் இளமையோடிருக்க வேண்டும். ஆற்றலை நாளும் இளமை நலத்துடன் பேண வேண்டும். ஆற்றலை இழப்பின் அனைத்தும் போகும். ஆற்றல் வளரும் தன்மையது; என்றும் இளமையோடிருக்கும் இயல்பினது; படைப்பாற்றலுடையது. அதனால் அம்மையைக் கூறும் பொழுதெல்லாம் இளமை நலம் பொருளைக் குறிப்பிடுவர்; போற்றுவர்.

“மையிலங்கு நற்கண்ணி பங்கன்” கண்ணிற்கு மை, இளம் பெண்கள் தான் இட்டுக் கொள்வர். ஆதலால், உமாதேவியை “மையிலங்கு நற்கண்ணி” என்றார். “மையிலங்கு” என்ற சொற்றொடருடன் “நற்கண்ணி” என்றது அம்மையின் மையிட்ட கண் காமக் கவர்ச்சியுடையதல்ல என்றும் அது நலம் பயப்பது, இன்பம் தந்தருளி இறவாத அன்பு நெறியில் உய்த்துச் செலுத்துவது என்றும் பொருள்படும்.

கருணை- உதவுதல் என்பது கேட்டுச் செய்வதல்ல. தாமே எளிவந்து செய்வது. மாணிக்கவாசகர், இறைவன்-சிவன் தானே வந்தாட்கொண்டதாகவே பாடுகின்றார். அந்த எளிவந்த கருணையை நினைந்து நினைந்து மகிழ்கின்றார்; போற்றுகின்றார்.

“வான் பழித்து இம்மண் புகுந்து
மனிதரை ஆட்கொள்ளும் வள்ளல்”

என்று போற்றுவார்; போற்றிப் புகழ்வார். சிவன் திருப்பெருந்துறைக் குருந்த மரத்தடிக்கு எழுந்தருளி வந்து ஆட்கொண்டார்; ஆட்கொள்ளுதல் என்றால் பொன்னும் பொருளும் போகமும் எடுத்த எடுப்பில் அருளுவதல்ல. ஞானிகள், நல்லவர்கள் பொன் முதலியவற்றை முதலில் விரும்ப மாட்டார்கள். அவர்கள் இறைவன் பணி கொள்ளுதலையே விரும்புவார்கள். பணி கொள்ளுதலே, அருளிச் செய்தது போலத்தான்!

“எது எமைப் பணிகொளுமாறது கேட்போம்!”

என்பதூஉம் திருவாசகம், பணியில் செலுத்திய தாய் தந்தையை-

“நல்ல தாய் தந்தை ஏவ
நானிது செய்யப் பெற்றேன்”

என்று கூறும் சேக்கிழார் வாக்கு சிந்தனைக்குரியது. நமது வாழ்விலும் முயற்சிக்கு- உழைப்புக்குப் பணம் தூண்டுதல் சக்தியாக இல்லாமல் பணி செய்தலே தூண்டுதல் சக்தியாக இயங்கினால் நாம் வளர்வோம்! நமது நாடு வளரும். பணி செய்வதில் ஆர்வம் வேண்டும்’ விருப்பம் வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்தல் வேண்டும்.

“என் கடன் பணி செய்து கிடப்பதே”

என்றார் அப்பரடிகளும். பணியைப் பணிக்காகவே விருப்பார்வத்துடன் செய்தல் வேண்டும். பணியின் விளைவுகள், எதிர் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏன்? பணியின் பயனைக்கூட எதிர்பார்க்கக் கூடாது. “கிடத்தல்” என்பது அஃறிணை நிலை. அஃறிணைப் பொருள்கள் காலத்தொடு இசைந்து நின்று பணி செய்யும் பாங்கினை அறிக. பூத்துக் காய்த்துப் பயன் தரும் மரங்களை நோக்குக. அம்மரங்கள் வரவேற்புரையையும் எதிர்ப்பார்ப்பதில்லை; நன்றி கூறலையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஒரோவழிச் செய்தாலும் விருப்பார்வத்துடன் செய்வதில்லை. வேண்டா வெறுப்பாகச் செய்கிறான். கூலியையே குறியெதிர்ப்பாக உடைய உழைப்பு, பூரண பலன் தராது. ஆதலால், நமக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் நமக்கு முதலில் வேலை தரட்டும்; பணிகள் வழங்கட்டும். எவரொருவர் பணிகளை வழங்கித் திறமையையும் அனுபவத்தையும் பெற உதவி செய்கிறார்களோ அவர்களே நமக்கு மிகவும் வேண்டியவர்கள்; நல்லது செய்பவர்கள். பணிகளை வழங்காது சோறும் துணியும் வழங்கினால் அது உதவியாகாது; வாழ்விப்பதாகாது; அதனாலேயே சேக்கிழார், “கைத்திருத் தொண்டினை”ப் போற்றிப் புகழ்கிறார். இன்றோ வேலையைக் கண்டால் அஞ்சி ஓடுவது, வேலையை ஒத்திப் போடுவது, தட்டிக் கழிப்பது, அல்லது வேலை செய்வதற்கு சோம்பற் பட்டுக்கொண்டு விடுப்புகள் எடுப்பது போன்ற தீய பழக்கங்கள் இந்தியர்களை ஆட்கொண்டிருப்பதனாலேயே இந்தியா விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் முன்னேறவில்லை; வறுமையும் ஏழ்மையும் அகலவில்லை. என்று, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது பணியை- வேலையை ஊக்கத்துடனும் விருப்பத்துடனும் ஆர்வக் கிளர்ச்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்கின்றானோ அன்றே இந்தியா வளரும்; தமிழ்நாடு வளம் கொழிக்கும்.

சிவன், வலியவந்து வாழ்தலுக்கும் உய்தலுக்கும் உரிய பணிகளை வழங்கி ஆட்கொண்டருளிய அருமையை மாணிக்கவாசகர் உணரவில்லை. வளரும் குழந்தை! பொருள்களின் தராதரம் அறியாப் பருவம்! தங்கக் கிண்ணத்திற்கும் தகரக் குவளைக்கும் இடையில் மதிப்பீட்டு வேற்றுமைகளை அறிந்துகொள்ள இயலாத பருவம்! பொற் கிண்ணத்திற்கும் பொட்டுக் கடலைக்கும் மதிப்பீடு பிரித்தறியா நிலை! தின்னும் பொருளாதலால் பொட்டுக் கடலையிலேயே ஆர்வம் தலைகாட்டும். அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைக்குப் பொற் கிண்ணத்தின் மதிப்பீடு தெரியாமல் பொட்டுக்கடலையை வாங்கிக் கொண்டு பொற்கிண்ணத்தைத் தருதல் வியப்பில்லை. அதுபோல, இறைவனின் திருவருள் சார்ந்த வாழ்க்கை வழங்கப்படுகிறது; உலகியற் கவர்ச்சியால் இழுக்கப்படுகிறது. ஆன்மா- உலகியற் கவர்ச்சியிலேயே சுழல்கிறது. திருவருளை- வலிய வந்தாட்கொண்ட பெருமானின் எளிவந்த கருணையை அருமை என்று அறிந்து போற்றுவதில்லை. நெடுந்தவம் புரிந்தும் காண முடியாத இறைவன் தாமே வந்து தலையளித்து ஆட்கொண்டருளிய கருணையின் அருமை அறியாத பேதைமையை “மழக்கை யிலங்கு பொற்கிண்ணம்” என்றருளிச் செய்யும் நுட்பம் சிந்தனைக்குரியது; உணர்தலுக்குரியது.

இறைவன்- சிவன் வெண்ணீறு சண்ணித்த திரு மேனியையுடையவன். திருவெண்ணீறு சிவநெறியின் புனிதச் சின்னம். கடையூழிக் கூத்தில் எழுந்த பொடியின் சின்னமே திருநீறு. சிவநெறியைச் சார்ந்தலுக்குத் திருநீறணிதலே முதற் சாதனம்.

என்னை ஆண்டிட்டு என்னையும் தன்
கண்ண வெண்ணீ றணிவித்துத்
தூயநெறியே சேரும் வண்ணம்

என்ற திருவாசக வரிகளையும் எண்ணிக் கொள்க. திருநாவுக்கரசருக்கு, திலகவதியார் “திருவாளன் திருநீறு” வழங்கித்தான் சைவத்தில் சேர்த்தார். ஆன்மாக்கள் திருநீறு அணிந்தால் அவற்றின் வினை நீங்கும்; பாவமும் அகலும்; அமர நிலையும் அருளது நிலையும் எய்தலாம்! ஆனால் இறைவன் திருமேனியில் திருநீறு ஏன்? தாய்ப்பாலுண்ணும் குழந்தைக்குத் தாய் மருந்து கொடுப்பதில்லை. குழந்தைக்குப் பத்தியமும் இல்லை. குழந்தையின் நோய்க்குத் தாயே மருந்துண்கிறாள்; பத்தியம் பிடிக்கிறாள். அதுபோல இறைவன் தன்னைத் தொழுது எழும் பக்தர்களுடைய வினை வளம் கெடத் திருநீறு அணிகின்றான் என்று திருக்கோவையார் கூறும்.

“மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினார்” என்றார் அடிகள். பொய், கொடுமையினும் கொடுமையானது. அதனாலன்றோ தமிழ்மறை.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”

(297)

என்று கூறியது! பொய்- இல்லாதது. புனைவுகளை ஒட்டிக்கொண்டு பொய் வரும். மாணிக்கவாசகர்,

“யானும் பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே!”

என்று அருளிச் செய்துள்ளமையை அறிக. பொய்ம்மையற்ற மெய்ம்மை வாழ்வு தேவையென்றால் பொய்யைப் பொய் என்று அறியும் அறிவு வேண்டும். பொய்ம்மையைப் பெருக்கிப் பொய்யில் கிடந்துழலும் பொய்யாய மாய வாழ்க்கையை நினைந்து அழக் கற்றுக்கொண்டால்தான் பொய்ம்மை அகலும்; மெய்ம்மை மேவும்.

மெய்ம்மை, உண்மையானது; நிலையானது; மெய்ப் பொருள் சார்பு நிறைந்தது. மெய்ப்பொருளைச் சார்ந்து வாழும் அன்பர்கள் மெய்ம்மை அன்பர்கள். மெய்ம்மை அன்பர்கள் தாம் மெய்ப்பொருளாகிய இறைவனைச் சார்தல் இயலும்; கூடும். மெய்ம்மை மேவாதாருக்கு இவ்வுலகும் இல்லை; அவ்வுலகும் இல்லை.

இறைவா, நான் பொய்யன் தான்! நான் அப்படியே பொய்யனாகவே வாழ்ந்து செத்துப் போனால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? காத்தாளக்கூடிய கங்காளன் காக்கத் தவறிவிட்டானே என்று இகழ்ந்து பேசமாட்டார்களா? பழிக்க மாட்டார்களா? இறைவா, நானும் பொய்யும் நின் கருணை கிடைக்காமையால் புறமே வந்துவிட்டோம்! என்னை எவ்வாறேனும் ஆகுக என்று வாளாவிட்டு விட்டுப் போய்விட்டாய்! இது நின் கருணைக்கு இசைந்த அறமா? பிறைசூடிய பெருமானே! பொய் நீக்கி என்னை ஆளாமை நினக்குப் பெருமைதானா? நல்லவும் தீயவும் அல்லாத எருக்கம் பூவினும் நான் கடைகெட்டவனா? இறைவா, பொய்மையை நீக்கு! மெய்ம்மையை அருள் செய்க! என் பொய்யெலாம் நீயே ஏற்றருள் செய்க! நான் உன்னை அரியை என்று கருதாதது பிழைதான்! நீ எளிவந்தாட் கொண்ட அருளைப் போற்றிக் கொள்ளாதது குற்றம்தான்! தேவர்களே இந்தத் தவற்றினைச் செய்திருக்கிறார்கள். அகந்தையினால்-பதவிப் பித்தால் தேவர்கள் செய்த பிழையெலாம் பொறுத்தருள் செய்தாய்.

இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று கண்டு அறிய இயலாத சிவத்தினைக் காண முயன்றனர். அது, ‘பழச்சுவை’ என்றனர்; ‘அமுது’ என்றனர்; “அறிதலுக்கு அறிது” என்றனர். “அறிதலுக்கு எளிது” என்றனர். இங்ஙனம் அமரர்கள் தம்முள் முரண்பட்டு நின்று பேசினர்; விளக்கினர். ஆயினும் சிவம் உயிர்க்குலமெல்லாம் உய்தல் வேண்டி சிலைகளில் எழுந்தருளினன். இது அவன் திருவுரு இறைவன் எழுந்தருளியுள்ள திருவுருவம், உருவமன்று. இலங்கியங்களில் அகரம் முதலிய நெடுங் கணக்கு இருப்பினும் பயன்படுமாற்றால் இலக்கியம் என்றே போற்றுகின்றோம். இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளை, இரும்பு என்று கூறுவதில்லை. பயன்படு நிலை கருதி ‘ஒலி பெருக்கி’, ‘மண்வெட்டி’ என்று கூறுவதே மரபு. அதுபோல இறைவன் எழுந்தருளியுள்ள திருவுருவம் சிலையாக இருக்கலாம். ஆயினும் பயன்பாடு வழிபாடு ஆதலால் அது திருவுருவம் அல்ல. இறைவனேதான்!

“திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைச் சிவன் எனவே கண்டவர்க்கு சிவன் உறைவன் ஆங்கே!” - இது சாத்திரம் காட்டும் உண்மை. இறைவன் எண்ணற்ற ஆன்மாக்களை ஆட்கொள்ளும் பணிக்காகவே திருவுருவத்தில் எழுந்தருளுகின்றான். திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் முன்னிலையில் பணிகேட்டு விண்ணப்பித்தலே மரபு. அண்மைக் காலமாக இந்த மரபு அறவே மாறி நுகர் பொருள்களை இரந்து கேட்கும் பழக்கம் தோன்றிவிட்டது. இன்று நமது சமயப் பிரார்த்தனைகளில் பணி செய்ய விரும்பும் விண்ணப்பம் அறவே இல்லை. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை மன்னனிடம் “எது எமைப் பணிகொளு மாறது கேட்போம்” என்றே வேண்டுகிறார். பணி செய்தலே உய்யும் நெறி. “கொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை” என்று திருமுறை கூறும். இந்நெறியை உணர்த்தும் மாணிக்கவாசகர் பாடலை நினைத்து இறைவனை வேண்டுவோம்.

அது பழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(திருப்பள்ளியெழுச்சி-7)
நல்லவர் பேச வேண்டும்!
அல்லவர் ஏச வேண்டும்!

மாணிக்கவாசகர் பல்வேறு அனுபவங்களைச் சந்தித்தவர் மகிழ்ச்சிக்குரிய அனுபவங்கள் மாணிக்கவாசகர் வாழ்க்கையில் அருமையிலும் அருமை. அமைச்சுப் பொறுப்பிலிருந்த போதும் அந்தப் பொறுப்பை- பதவியைக் கடமையாகவும் பாரமாகவும் கருதினாரேயன்றி மகிழ்ச்சியாகக் கருதவில்லை.

ஆட்சிப் பொறுப்பு எளிதன்று; பொறுப்பு மிகுதியும் உடையது! மழை பெய்யவில்லையா? ஆட்சிக் காவலின் பிழையே என்பர் சான்றோர். பசி பட்டினியால் சாவா? இரந்து பிழைத்தலா? அனைத்துக்கும் காரணம் ஆட்சியே என்று கூறுவது மரபு. இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவன் வாயிலாக ஆட்சி துன்பம் தரும் தகையது என்று கூறுவார்.

“மன்பதைக் காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்”

என்பது சிலப்பதிகாரம்.

இன்று ஆட்சி சுகத்திற்குரியதாக விளங்குகிறது. இன்று அரசியல், ஆட்சி அனைத்தும் ஈட்டத்திற்குரியனவாகும். சுகானுபவத்திற்குரியனவாகவும் விளங்குகின்றன. இன்று Power Corrupt என்பது பழமொழியாகவே விளங்குகிறது.

ஆட்சிக்குரியவர்கள் எப்படி விளங்க வேண்டும் என்பதற்குக் கம்பனில் ஓர் உதாரணம் கிடைக்கிறது. இராமன் வசிட்டனது இல்லத்திற்குச் சென்று படித்துவிட்டு வருகிறான். அன்று மாணவர்கள் ஆசிரியரைத் தேடிப்போன காலம்! இன்றோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடிப் போகிறார்கள்! இராமன் வசிட்ட முனிவர் இல்லத்திலிருந்து வருகிறான். சாலையில் இரு மருங்கிலும் மக்களைப் பார்த்த இராமன் இரதத்திலிருந்து இறங்கி அவர்களை நோக்கிப் போய்,

“எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எதுவினை? இடர்இலை? இனிது நும் மனையும்
மதிதரு குமரரும் வலியர் கொல்?”

என்று வினவியறிகிறான். ஆக, என்ன தெரிகிறது? இல்லங்கள் தோறும் நலமமைந்த வாழ்க்கை தேவை; இன்றியமையாத் தேவை. அதற்கு அரசு உறுதுணையாக அமைதல் வேண்டும். உங்கள் பிள்ளைகள் வலிமையுடன் வாழ்கின்றார்களா? என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றெல்லாம் இராமன் கேட்கிறான். இன்றோ ஆட்சியாளர்களை அணுக முடியாத நிலையில் வேலி! ஆட்சியாளர்களை அணுக முடியாத நிலையில் குண்டு துளைக்காத கார்கள்! காவலர்களின் அணிவகுப்பு! ஆனால், அன்று நடப்பது முடியாட்சி; இன்று நடப்பது குடியாட்சி! மக்களுக்கும் ஆட்சியாளருக்குமிடையே இடைவெளி குறையும்போதே நல்லாட்சி அமைய இயலும்.

உண்மையில் சமூகம் என்ற அமைப்பு உருவாகவில்லை. மனிதர்கள் கூட்டமாக வாழ்கின்றனர். கூட்டமாக வாழ்தல் வேறு. கூட்டமாக கூடுதல் கூடப் பயம், தேவை ஆகிய அடிப்படையிலேயே நிகழ்கிறது. ஒன்றாகக் கூடி வாழ்தல் வேண்டும். ஒன்றாகக்கூடி உழைத்தல் வேண்டும். இங்ஙனம் உணர்வால் ஒத்ததறிந்து வாழும் மக்கள் தொகுதியே சமூக அமைப்பு. உயர்ந்த சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மேட்டுக்குடியினர் என்ற பாகுபாடு தோன்றாது; தோன்ற வழியில்லை. “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும்” என்று வாழ்வர். இயற்கை அமைவின் காரணமாகத் தகுதி, திறமையில் வேறுபாடுகள் இருந்தாலும் அல்லது காணப்பெற்றாலும் அவற்றை பொருட்படுத்துவதில்லை. பெரியோரை வியத்தல் தமிழ் மரபன்று. அதுமட்டு மல்ல. சிறியோரை இகழ்தல் அதனினும் இல்லை. தகுதி, திறமைகள் அழுக்காற்றைத் தூண்டி வளர்த்தல் உயர்ந்த சமுதாய அமைப்பில் காண இயலாது. ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ எங்கு உள்ளதோ அங்கேதான் சமூகம் இருக்கிறது.

சமுதாயம் என்ற அமைப்பு, மனிதகுல வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்தது. ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்ந்தனர். அன்று மனித குலத்தை அரித்து அழிக்கும் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகள் இல்லை. தனி உடைமைக் கோட்பாடும் வாழ்க்கை முறையும் தோன்றிய பிறகே சமுதாயம் உருக்குலைய ஆரம்பித்தது. பண்டங்களைப் பணமாக்கிப் புழங்கும் சமுதாயம் தோன்றிய பிறகே ‘மனிதம்’ மறைந்தது. பண மதிப்பீட்டுக் கொள்கை கோலோச்சத் தொடங்கியது என்றோ, அன்றே சமூகம் என்ற அமைப்பு நொறுங்கி உருத்தெரியாமல் போய்விட்டது. களவும் காவலும் தோன்றின. இரப்போரும் ஈவோரும் தோன்றினர். ஆட்சிக்கு அதிகாரங்கள் பெருகி வளர்ந்தன; சிறைச் சாலைகள் வளர்ந்தன. மக்கள் அடிமைகளானார்கள். அரசன் கடவுளானான். இது சமூகம் தோன்றி மறைந்த வரலாறு.

மாணிக்கவாசகர் காலத்தில் சமூக அமைப்பு கெட்டிருந்ததை அவரே குறிப்பிடுகிறார். இதனை,

“சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை”

என்று பாடுவதால் அறியலாம். சாதி குலப்பிரிவினைகள் நிலப் பிரபுத்துவம் பெற்றெடுத்த குழந்தைகள்! வளர்த்தெடுத்த செவிலித் தாய். தனி உடைமைச் சமுதாயம். திருவாசகம் “அயலவர்” என்று குறிப்பிடுகிறது. ஆக, மாணிக்கவாசகர் காலத்திலேயே “நம்மவர்” “அயலவர்” என்ற வழக்குகள் தோன்றிவிட்டன. “பொய்யர்தம் மெய்” என்பார் மாணிக்கவாசகர். கடவுள் நம்பிக்கையை வலியுறுத்திய மதப்புரோகிதர், ஆதிக்க சக்தியின் பால் சேர்ந்துவிட்டனர்; சுரண்டும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு “செல்வச் செழிப்பு, கடவுள் கருணை, புண்ணியத்தின் பயன்” என்று கூறியவுடன் சுரண்டப்பட்ட- வாழ்விழந்த மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கை தோன்றலாயிற்று. அவர்கள் ஆப்தமான உறவினராக இருந்து “அயலார்” ஆயினர். நாத்திகம் பேசினர். மனிதகுல நாகரிகத்திற்கு- பாதுகாப்பிற்குக் கடவுள் நம்பிக்கை தேவை. நாத்திகம் நஞ்சு. அதே போழ்து கடவுள் நம்பிக்கை மனித நேயத்திற்கு மாறாக இருப்பின் அது நாத்திகத்தினும் கொடிது.

மாணிக்கவாசகர் காலத்தில் சமூகம் உருக்கொள்ளவில்லை. மாணிக்கவாசகர் காலத்தில் சமூகம் சீர்குலைந்து இருந்தது. அவரவர் மனப்போக்குப்படி பேசினர்; அவரவர் விரும்பியவாறு ஒழுகினர்.

“ஊரவர் தத்தம் மனத்தன
பேச எஞ் ஞான்று கொல் சாவதுவே!”

என்று மாணிக்கவாசகரே அழுது புலம்புகிறார்.

சமூகம்- சமுதாயம் என்ற அமைப்புத் தோன்றியது. ஒருவரையொருவர் தாங்குவதற்காக, வாழ்விப்பதற்காகவேயாம்.

இந்த உலக அமைவை- இயற்கை நோக்கின் ஒப்புரவு நெறி பேணத்தக்கதாகவே அமைந்துள்ளது. ஒன்றின்றி ஒன்றில்லை என்பதை நியதியாக விளக்குகிறது. ஆனால் மனிதன் உயிரியல் இயற்கை- மனித இயல்பைப் பெரிதும் முயன்று அழிக்கிறான். அதன் விளைவே கெட்ட போரிடும் உலகத்தின் தோற்றம்! ஏன் இந்த உலகத்தில் பஞ்சம்? பாரதி காரணம் சொல்கின்றான்.

நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா,
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா,
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா,
சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு;
சிவன் செத்தா லன்றி, மண்மேல் செழுமை உண்டு

(பாரதி அறுபத்தாறு– 61)

என்று பாடினான். இன்று என்ன நிலை? மண்மேல் செழுமையைக் காணோம். “சிவன் செத்து” விட்டானா? நஞ்சுண்டும் சாகாத சிவன் எப்படிச் சாகமுடியும்? சாவாதவன் மூவாதன் சிவன். சிவன், மனிதகுலம் நெறிமுறை தவறித் தறிகெட்டுப் போவதைக் கண்டு திகைத்துச் சிலையாக நிற்கிறான்? அவ்வளவுதான்!

இன்றோ சமூகம் இடறி விழுகிறது; ஒருவன் முன்னேறுவதற்கு இடையூறுகள் செய்கிறது. இடறி விழுந்து விட்டால் எடுத்துத் தூக்க மறுக்கிறது. உண்மையில் சமூகம் நம்மீது சவாரி செய்கிறது. ஏசுகிறது; பேசுகிறது; இழிவு செய்கிறது. மானம், மரியாதை என்ற பெயரில் கலகம் செய்கிறது. அழுக்காற்றின் வழிப்பட்டு அல்லற்படுகிறது; அல்லற்படுத்துகிறது. ஆதலால், சமூகம் என்ற அமைப்பு வலிமையான அமைப்பாக உருக்கொள்ளவில்லை.

மனிதன் ஒரு சமூகப் பிராணி. ஆனாலும் அவனால் சமூகத்தில் ஓர் உறுப்பினனாக வாழ முடியவில்லை; வாழ இயலவில்லை. ஆதலால், சமூகத்தின் அங்கீகாரத்தை மனிதன் பெற முயற்சி செய்வதில் அர்த்தமில்லை; பொருளுமில்லை. சமூகம் “நல்லது”, “உண்மை” என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்யாது. தகுதி, திறமைகளுக்கும் கூட சமூகம் மதிப்புக் கொடுப்பதில்லை. ஆதலால், நாம் வளர வேண்டுமானால் இரண்டு நிகழ்வுகள் கட்டாயமாக நிகழ்ந்தாக வேண்டும். அதாவது,

“பேசப்பட்டேன் நின்னடியாரில் பூதலரால்
“நின் அடியான் என்று ஏசப்பட்டேன்”

என்ற மாணிக்கவாசகரின் அனுபவம் நமக்கும் பொருந்தும்; வேண்டும்.

நல்லவர்கள் கூடியிருக்கிற அவையில் நாம் ஒரு பொருளாக மதிக்கப் பெற்றுப் பேசப்படுதல் வேண்டும். கெட்டவர்கள் கூடியுள்ள கூட்டத்தில் நாம் ஏசப்படுதல் வேண்டும். இவை இரண்டும் நிகழ்ந்தால் நாம் நல்லவர்களாக வாழ்கிறோம் என்பது பொருள்.

மாணிக்கவாசகருக்குத் தம்மை இந்த உலகம் ‘பேய்’ என்று கூறிப் பரிகாசத்துடன் சிரிக்க வேண்டுமாம். ஆம்! இன்று இந்த உலகம் பேயாகத்தான் திரிகிறது! பணப்பேய் பிடித்தாட்டுகிறது. தலைவராதல் வேண்டும் என்ற பேய்க்குணம் பிடித்தாட்டுகிறது. நல்லதைக் கேட்பதும் இல்லை; சிந்திப்பதும் இல்லை. ஆதலால், இந்த உலகம் என்னை அங்கீகரிப்பது என்பது ஒருபோதும் ஆகாது. அப்படியே அங்கீகரித்தாலும் பயன் ஒன்றும் இல்லை. பயன் இல்லாதது மட்டும் அல்ல- தீமையும் விளையும்.

திருக்குறள் ‘புகழ்’ என்று ஓர் அதிகாரம் ஓதுகிறது. “புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்பது புறநானூறு.

புகழ் என்பது என்ன? இன்று நாம் கேட்பது, காண்பது புகழல்ல! இன்று விளம்பரத்தைப் புகழ் என்று கருதுகிறார்கள். விளம்பரம் வேறு. புகழ் வேறு. சமுதாயத்தில் பயன்பட வாழ்ந்தோர் இருப்பை- தேவையைச் சமூகம் உணர்வதே புகழ். புகழ் வேண்டிப் பெறுவதல்ல. தாமே வரலாற்றுப் போக்கில் வந்தடைவது புகழ்.

இங்ஙனம் பலபட வாழ்க்கைக்குப் புகழ் தேவை என்று கூறினும் புகழை விரும்பாத சான்றோர்களும் இருந்துள்ளனர்; இருக்கின்றனர். அவர்கள் தம் புகழ் கேட்கின் நாணுவர். ஏன்? மாணிக்கவாசகரும்,

“வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்”

என்றார். ஈசனின் புகழே பொருளுடைய புகழ் என்றார்.

புகழ் கேட்டு மகிழ்தல், பழி கேட்டு மனம் கோணுதல் மனிதர் இயல்பன்று. புகழ்படும்போது மகிழ்ந்து கேட்கலாம், பழியை மட்டும் கேட்கக் கூடாதா? மற்றவர் பழித்தலை மனம் கோணாது கேட்கவேண்டும். “யாம் வல்லேம்” என்று மமதை கொள்ளுதல் தகாது. மமதை இழக்கப்படுதல் வேண்டும். “நான்” கெட்டுப் போகவேண்டும். தாழ்வெனும் தன்மை வேண்டும். அறிவுடையோம் என்னும் செருக்கும் மயக்கமும் ஆகாது. செருக்கு, அறிவு வளர்ச்சியின் ஊற்றுக்களைத் தூர்க்கும்; மூடனாக்கும்; முட்டாளாக்கும்; பேதையாக்கும்; மூர்க்கனாக்கும். எவ்வகையாலும் செருக்கு ஆகாது; கூடாது.

இத்தகு தீய வாயில்களை அடைத்து நன்னெறி வாயிலைச் சார்தல் வேண்டும். ‘கடவுள் ஒன்று’ என்ற துணிவு வேண்டும். “இவர் தேவர், அவர் தேவர்” என்று ஆசைகளால் உந்தப்பட்டு அலை மோதல் கூடாது. ஈசனை- இறைவனை நினைந்து நினைந்து கன்று ஈன்ற ஆவின் மனம் போலக் கசிந்துருகி அழக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதுவே ஆன்மிக வாழ்க்கை; சமய வாழ்க்கை.

நெறிமுறை பிறழ்ந்த சமூகத்தின் மதிப்பீட்டை எதிர் பார்க்கக் கூடாது; புகழை விரும்பி அலையக்கூடாது. பழிச் சொற்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். கடவுள் உண்டென்றும் ஒன்றென்றும் துணிதல் வேண்டும். அக்கடவுளை ஆவின் மனம் போல நினைந்து நினைந்து கசிந்துருகி வழிபடல் வேண்டும்.

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத வின்றிச்
சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரம அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது

(போற்றித் திருவகவல் 68-74)
அக்காரம் தீற்றிய அதிசயம்

வாழ்வு சிறக்க சுய விமர்சனம் தேவை. விமர்சனம் என்பதைத் தூய்மை செய்தல் என்று கொள்ளலாம். ஒரு நாளில் எத்தனை தடவை கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துத் துடைத்துத் திருத்தம் செய்து கொள்கின்றோம்! அழகு செய்து கொள்கின்றோம்! அதுபோல நம் ஆன்மாவை-நாம் இயற்றிய செயல்களின் பயன்பாடு முதலியனவற்றை ஆய்வு செய்துகொண்டு பயனற்றவைகளைத் தவிர்த்துக் கொண்டு பயன்பாடுடைய பணிகளைச் செய்வது சுய விமர்சனம், எங்கே சுய விமர்சனம் புறக்கணிக்கப்படுகிறதோ அல்லது தரமாக அமையவில்லையோ அங்கே பிறர் விமர்சனம் வரும். ஆனால், விமர்சனம் விமர்சனம்தான்! விமர்சனம் ஆக்கத்தின்பாற்பட்டதே! குற்றங் கண்டுரைத்தால் ஆக்கம் இல்லை; இருக்காது. விமர்சனம், எரியும் விளக்கில் சுடர் தட்டி விட்டு, எரிய விடுதல் போன்றது! அல்லது சுய விமர்சனம் பரிபூரண ஆக்கம்!

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் பெரும்பான்மையானவை சுய விமர்சனப் பாடல்கள். தன்னைத்தானே ஆய்ந்து தமது குற்றங்களை உணர்ந்து திருத்தம் காணும் வேட்கையில் பாடுகின்றார்! அழுது அழுது பாடுகின்றார்! அதனாலேயே திருவாசகத்தை ஓதினால் உருக்கம் ஏற்படுகிறது. “நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து” என்றும்,

யானே பொய், என் நெஞ்சும்
பொய்; என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனை வந்துறு மாறே!

(திருச்சதகம்-90)

என்றும் பாடுகின்றார்.

அறிவ னே! அமு தே!அடி நாயினேன்
அறிவ னாகக் கொண் டோ, எனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்ட நாள்
அறிவ னோ வல்ல னோ அரு ளீசனே!

(திருச்சதகம்-50)

என்றும் அருளிச் செய்துள்ளார்.

மாணிக்கவாசகர் அறிவால் சிவமே என்று போற்றப்பெறும் அளவுக்கு உயர்ந்ததற்குக் காரணம் தம்மை உணர்ந்து தமது பழக்கங்களைத் தவிர்த்துப் பழகி சிவன் கழலே சார்பென்று உணர்ந்து சிவத்தினைச் சார்ந்து ஒழுகியதேயாம். மாணிக்கவாசகரிடம் ‘நான்’ கெட்டுப் போய்விட்டது; சிவமாம் தன்மை மேலிட்டது. ஆதலால், உலகியல் முன்னேற்றமானாலும் சரி, ஆன்மிக முன்னேற்றமானாலும் சரி சுய விமர்சனம் தேவை. சுய விமர்சனம் செய்து கொள்ள வில்லையெனில் வளர்ச்சியில்லை; பிறர் விமர்சனத்தைத் தாங்கி மாற்றிக் கொள்பவர்கள் உயர்வார்கள்!

மாயம்! உண்மையைப் போல் தோற்றுவது மாயம்! இந்த மாயம் நச்சுத் தன்மையுடையது! இது கடித்தவுடன் மனிதன் “நான்” ஆகின்றான். ‘நான்’ என்பது அகந்தையின் பரிணாமம். பற்றற்ற துறவி ஒருவர் பலகாலும் உண்ணாது, உறங்காது யாதொரு தீங்கும் செய்யாது நோன்பிருந்தார். அவர் இறந்து போன பிறகு சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை! மீண்டும் பிறக்க ஆணையிட்டான் இறைவன். துறவி, “ஏன்?” “எதற்காக?” என்று இறைவனிடம் கேட்க “நான்” என்பது இழக்கப் பெறவில்லை என்றான் இறைவன். கொங்கண முனிவர் கதை நாடறிந்த ஒன்றுதானே! ‘நான்’ என்பது செருக்கினைத் தரும். செருக்கு, அன்பிற்குப் பகை; அருளுக்குப் பகை; மனித உறவுகளுக்குப் பகை; ஏன் அறிவுக்கும் ஞானத்திற்கும் கூடப் பகை. இந்த ‘நான்-ஐ’ ஒழித்தல் தவத்தில் சிறந்த தவம்.

“நான் கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டமோ?”

“...............நாம் ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ?”

என்றும் மாணிக்கவாசகர் பேசுவார். இந்த “நான்” கெடுதலைக் குமரகுருபரர் “பின்னும் ஓர் மாத்திரை குறுகினன்" என்பார். அதாவது சீவன் சிவனாயிற்று. “நான்” பரந்த வெளியில் ஒற்றை மரம்! ‘நாம்’ அடர்ந்த தோப்புக்குள் ஒரு மரம்! பரந்த வெளியில் உள்ள ஒற்றை மரத்திற்குச் சூறைக் காற்றடிக்கும் போது பாதுகாப்பில்லை. தோப்புக்குள் உள்ள மரத்துக்குப் பாதுகாப்பு உண்டு. “நான்” மனித குலத்தின் தீமைகளுக்கெல்லாம் மூலகாரணம். இதுதான் அப்பரடிகள் கூறிய மூலநோய் போலும்! “நான்” உடன் பிறந்தது.

“எனது” என்பது தீமை, “என்னுடையது” என்ற தீமையே அழுக்காற்றின் தாய்! வீட்டுக்கும் வீட்டுக்கும் இடையேயுள்ள சுவர்களும் வேலிகளும் தோன்றியது. “எனது” என்பதிலிருந்து தான்! வளம்- வறுமை, களவு- காவல் பிறந்து வளர்ந்ததும் ‘எனது’ என்ற செருக்கினால் தான். பகைமைக்கும் கூடக் காரணம் ‘எனது’ தான். இந்த ‘எனது’ நீக்குதல் ‘நான்’ அகற்றுதலைவிடக் கடினம். எனது சொத்து என்பது பற்றிப் பிடித்துக்கொண்டு வளர்கிறது. ‘எனது’க்குத் தலைசிறந்த பரிவாரம் அரசு. “என”தின் ஏவல் கேட்போர் ஆட்சியாளர்; காவல்துறையினர்; பதிவாளர் துறையினர். எனது என்ற தீமை ஆட்சிக் கட்டிலிலேயே ஏறிவிட்டது. ‘நான்’ ‘எனது’ என்பதை செருக்கு என்றது வள்ளுவம். ‘நான்’ ‘எனது’ என்ற மாயம் மனிதனைக் கெடுத்துவிடுகிறது. ஏன்? மனிதனாக வாழ அவை அனுமதிப்பதில்லை.

‘நான்’ என்னும் செருக்குடையவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வான்; தான் செய்யாததைச் செய்ததாகக் கூறுவான்; பெருமையைத் தேடுவான். உரிய விலையின்றிச் செல்வத்தைத் தேடுவான். காரண காரியமின்றி ‘நான்’ மட்டுமே கருவியாகக் கொண்டு மிரட்டி, பயமுறுத்திப் பணம் கேட்பான். “நான் ஆணையிட்டால்!” என்பான். இந்த ‘நான்’ காரணமாகப் பொய் கூறுவான். ‘எனது’ என்பது, பொய் என்ற உரத்திலேயே வளரும். பொய்யும் வளரும் தன்மையது. விளையாட்டாக அல்லது அவசியத் தேவையாக ஒரு பொய் வாழ்க்கையில் தோன்றிவிட்டால் பொய் நாளும் வளரும். ‘எனது’ உரிமைச் செல்வம் அடுக்கிய பலவாக ஆக வேண்டுமானால் பொய் தேவைப்படும். ஒரு சில நல்லவர்கள் ‘பொய்யை’ப் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். சிறுமதியினர் பொய்யையே கருவியாகப் பயன்படுத்துவர். அடுத்தவர் செல்வத்தைப் பறிப்பர். ‘எனது’ உடன்பிறப்புக்களைக் கூடப் பிரிக்கும். கைகேயியின் மனத்தைத் திரித்தது கூட “எனது” தானே! மழலைக் குழந்தையாக இருக்கும் பொழுது ‘நான்’ இல்லை; ‘எனது’ இல்லை; ‘எனது’ என்ற உணர்வு வந்தவுடன் பொய்யும் உடன் வந்து விடுகிறது. விளையாட்டுப் பொம்மையில் தொடங்கும் ‘எனது’, சொத்து வரையில் வளர்கிறது. பகையை மூட்டுகிறது. கலகத்தை வளர்க்கிறது; மனிதரைப் பிரிக்கிறது. நட்பு, காதல் உறவு எல்லாம் ‘நான்’ ‘எனது’க்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப்போயின. ‘எனது’ அற்றால் ‘நான்’ அறும். ‘நான்’ ‘எனது’ அற்றால் பொய் அகலும்; ‘பொய்யினைப் பல செய்து’ என்கிறார் மாணிக்கவாசகர். “பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்” என்பார் பிறிதொரு பாடலில். உண்மையல்லாதன வெல்லாம் பொய்! உரியதல்லாதது-செல்வமாயினும், புகழாயினும் அது பொய்தான்! இன்றைய சமுதாயம் இவர் அவர் என்றில்லாமல் அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போலப் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரள்கிறது. பொய் கலந்த மெய்கூட இல்லை. உண்மையைச் சொன்னால் இந்தச் சமுதாயத்தில்- ஆட்சியமைப்பில் வாழ இயலாத நிலை இன்று! இன்று உண்மையைச் சொல்லி வாழ விரும்புபவர்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான்!

பொய், ‘நான்’ என்னும் செருக்கு, ‘எனது’ என்னும் செருக்கு ஆகியவை மனிதனை ஆட்கொண்ட பிறகு அவன் வாழ ஆசைப்படுகிறான்! ‘நான்’, ‘எனது’, ‘பொய்’ ஆகியன வாழ்வதற்குரிய இயல்புகள் அல்ல! ஆயினும் வாழும் ஆசை யாரை விட்டது? ஆதலால், நடிப்பர்! நடிப்பு பலவகை! வாழும் களங்கள் தோறும் நடிப்பு மாறும்! வீட்டில் நடிக்கும் நடிப்பு வேறு! நாட்டில் நடிக்கும் நடிப்பு வேறு! சமூக நடிப்பு வேறு! நாட்டிற்குரிய நடிப்பு வேறு! வேலையிலும் நடிப்பு உண்டு! சமூக சேவையில் தொண்டும் உண்டு; நடிப்பும் உண்டு! நடிப்பை எளிதில் கண்டுணர முடியாது. நம்பிக்கைகளை வளர்த்து அதன் பிறகுதான் நடிப்பு தோன்றும்! கடின உழைப்பாளி போல நடிப்பர். ஆனால், அவர் செய்யும் வேலைகள் ஊர்ந்து செல்லுமே தவிர, நகர்ந்துகூடச் செல்லா. அன்பிலும் விசுவாசத்திலும் முதிர்ந்தவர் போலக் கண்ணீர் சிந்துவார். ஆயினும் அன்பு என்பது மருந்துக்குக்கூட கிடைக்காது. நடிகர்கள் நாடகம் முடிந்தவுடன் நாடக மேடையைவிட்டு இறங்கி விடுவது போல, நடிக்கும் நண்பர்கள் அவரவர் காரியம் முடிந்தவுடன் அகன்றுவிடுவர்; அந்நியராகி விடுவர். பின் அழைத்துத்தான் ஆகவேண்டும்! வாங்கினதை மறந்தே விடுவர். மனித குலத்தில் மட்டும் நட்பும் உறவும் சீராக அமைந்துவிட்டால் வறுமை ஏது? ஏழ்மை ஏது? பகை ஏது? கலகம் ஏது? எல்லா நடிப்பிலும் “தலைமை நடிப்பு அலாதியானது; சுவை மிக்கது. இன்று தலைவராக ஆசைகொண்டு திரிவோருக்குத் தகுதியே இல்லை! ஆனால், எல்லோருக்கும் தலைவராக வேண்டும் என்று ஆசை.

வேள்வியில் இடம்பெறும் அவியுணவு சிவனுக்கே உரியது. அவனே சாகாதவன்! மூவாதவன்! பிறவா யாக்கைப் பெரியோன்! ஆனால், மற்றைத் தேவர்களுக்குத் தாங்களும் தலைவர்களாக ஆசை! தக்கன் வேள்வியில் தலைவர்கள் ஆனார்கள்! அவியுணவை உண்டார்கள்! பின் பாற்கடல் கடைந்தபொழுது முதலில் ஆலகால நஞ்சு எழுந்தது! தேவர்கள் அலறி ஓடினார்கள்! எம்பெருமான் நஞ்சை உண்டு அமரர்களைக் காப்பாற்றினான்! தேவர்களுக்கு அமுதைக் கொடுத்தான்!

“விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்வான்!”

என்பார் இளங்கோவடிகள். தலைமை என்றால் மற்றவர்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். மற்றவர்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றாதவர்கள்- காப்பாற்ற முடியாதவர்கள் எங்ஙனம் தலைவராக முடியும்? ஆனால் இன்று தலைவருக்குரிய இலக்கணங்கள் மாறி வருகின்றன. துண்டுகள், (பொருளற்ற- பயனற்ற) பேச்சுத் திறன் இருந்தால் தலைவராகி விடலாம். இந்த இலக்கணங்கள் ‘தலைமை’த் தகுதியாக எண்ணி நடித்தல்! “மண்ணிடை நடித்து” என்பார் மாணிக்கவாசகர். மண்ணிடை நடித்தல் ஏன்? சில நாள்களாவது உண்மை வாழ்வு வாழக் கூடாதா? இதற்கெல்லாம் காரணம் கேட்டால் “முன் வினையின்” மீது பழிபோட்டுத் திரிவது இயற்கையாகி விட்டது. உலா வருதல், பயணம் செல்லுதல் என்பன வேறு. இவற்றிற்கு நோக்கம் உண்டு. ‘திரிதல்'- பயனற்றது; உழைப்பில்லாமல் யாதொரு பயனுமின்றி ஊரைச் சுற்றுவர்; பிழைப்புக்கு இலவசத் தேநீர்-சோறு எதிர்பார்ப்பர்; காரணம் கேட்டால் “வினைப்பயன்” என்பர். “கெட்ட காலம்” என்பர். “நல்லகாலம் பிறக்க வில்லை” என்பர். “ஆறுமாத் காலம் கழியவேண்டும்” என்பர். முன் வினையின்மீது பழிபோட்டுவிட்டுச் செயலற்றிருப்பவர்களின்-தூர்த்தர்களாக நடப்பவர்களின் நடிப்பு பயன்தராது. நீண்ட நாள்களுக்குச் செலாவணியாகாது.

“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து
நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும்
விரைகின்றேன்”

என்றும் திருவாசகம் பேசுகிறது. நடிப்பும் விரைவும் இணைந்தவை போலும்! “உள்ளது போகாது” என்று அமைதியாக நடக்கும்; செய்யும் மண்ணிடையில்தான் நடிக்க இயலும். ஏனெனில் ஏமாறுபவர்கள் மண்ணில்தான் அதிகம். பொருள் செய்தல், அரசியல், மதம், மந்திர தந்திரங்கள் முதலிய அனைத்துத் துறைகளிலும் இன்று நடிப்பு புகுந்து விளையாடுகிறது. இன்று நமது நாட்டில் சோஷலிசம் என்பதே நடிப்பாளர்களின் மந்திர மொழிபோல் விளங்குகிறது. நடிப்பு, போலியானது; பொய்ம்மையானது. நிர்வானமான சுயநலத் தன்மையுடையது. நடிப்பின் விளைவு துன்பம்; துயரம்; எதிர் விளைவு சமுதாயச் சீரழிவு. குற்றங்கள், குறைகள் உடையதாக இருப்பது பாபமல்ல. இவற்றை நடித்து மறைப்பதுதான் குற்றம். நியாயப்படுத்துவதுதான் குற்றம். தவறுகள் செய்துவிடுவது பாபம் அல்ல. ஆனால் தவறுகளே செய்யவில்லை என்று நடிப்பது- உண்மைக்குப் புறம்பாக பேசுவது- நடப்பது இவைதான் பெருந் தீங்கு செய்யும். ஆதலால், மண்மீது பொய்யினை மறைத்துக் கொள்ளும் நடிப்பு வேண்டாம். ஆனால், மாணிக்கவாசகர் “நடிக்கவும் வேண்டும்” என்கிறார். பொய்யை மறைக்கும் நடிப்பு அல்ல. உண்மையை அடைய ஆர்வம் கொள்ளும் பத்திமை நடிப்புத் தேவை. “நடிக்கின்றிலை” என்பார்.

இங்ஙனம் மண்ணிடை நடித்தும்; வினை விளைவின் பயன் என்றும் திரிகின்ற ஆன்மாவை என்ன செய்வது? ஒரு ஆன்மா பைத்தியம்போலத் திரிந்தால் தாயிற் சிறந்ததயாவுடைய சிவத்துக்கு இழுக்கல்லவா? சிவத்தின் படைப்பில் ஆன்மாக்கள் இப்படித் திரிந்தால் உலகம் பழி தூற்றாதா? சந்தி சிரிக்க வைக்காதா? ஆதலால், சிவம் திரியும் ஆன்மாவைப் பிடிக்கிறான், பிடித்து நிறுத்துகிறான். திரியும் ஆன்மாவைத் தடுத்து நிறுத்துகிறான். தன்னுடன் பிணைத்துக் கொள்கிறான். சிவத்துக்கு ‘நடுதறி’ என்று ஒரு பெயர் உண்டு. அப்பரடிகள் திருத்தாண்டகத்தில் “கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே” என்றார். ஆன்மாவைச் சிவத்துடன் இணைத்துப் பிரியாமல் கட்டிப்போடுவது கட்டுத் தறி! பாரதம், சகாதேவன் கண்ணனைக் கட்டினான் என்று கூறுவதை ஓர்க.

நிலை தடுமாறி திரியும் ஆன்மாவை, நம் தலைவன் சிவம் தாமே எளிமையாகப் புகுந்து நிறுத்தி ஆட்கொள்கிறான். நாளும் சின்னஞ்சிறு செயல்கள் செய்தும் வினைகள் பல செய்தும் திரியும் ஆன்மாவை, நான்மறை நாயகன் நயந்து வந்து ஆட்கொண்டருள்கிறான். நான்முகனும் திருமாலும் தேடியும் காணப்பெறாத சிவம், நான்மறைகள் ஐயனே என்று தேடியும் காணப்பெறாத விழுப்பொருள் வலியவந்து ஆட்கொண்டருளிய போதும் அருமை உணர்ந்தபாடில்லை; திருவருள் நாட்டம் வரவில்லை; ஆணவத்தின் சேட்டை இம்மியும் குறையவில்லை. வேப்ப இலை தின்னும் புழுவைக் கரும்பில் இட்ட கதையாகவே அமைகிறது. ஆயினும் தென்னன் பெருந்துறையுறை சிவன் வள்ளல், ஆன்மாவை விடமாட்டான்! சில பொருள்கள் ஒரு கொதியிலேயே பக்குவமாகிவிடும்; பதப்படும். சில பொருள்களுக்குப் பல கொதி தேவைப்படும். நல்லான்மாக்கள் ஒரு சொல்லில் பெருமானுக்கு ஆட்படும்! முத்தி நெறியில் நிற்கும்! புறத்தே போகா! பெருமானே பார்த்துத் துடைத்தெறிய முற்பட்டாலும் போகா! இறுக்கி வளாறினால் அடித்தாலும் போகாது! பக்குவம் குறைந்த ஆன்மாக்களைப் பலதடவை அடித்து அடித்துத் தான் அற்புதம் செய்கிறான் சிவம்! ஆனாலும் ஓர் ஆன்மா வினையினின்று விடுதலை பெற்றுத் திருவருளின்பத்தில் திளைக்கச் செய்யும் வரையில் சிவம் ஓயாது, அவன்தன் ஐந்தொழிலும் நிற்காது! வேண்டியது நமது விழிப்புணர்வே!

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பல செய்து
நானென தெனு மாயக்
கடித்த வாயிலே நின்று முன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்ற பெருமறை தேடிய
அருட் பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே!

(அற்புதப் பத்து-3)
பொய்யும் யானும்
புறமே போந்தோம்!

இறைவன் உயர்த்தியுள்ள கொடி இடபக் கொடி. இடபம் அறத்தின் சின்னம். எருது கடுமையாக உழைக்கவும் உழைப்பின் பயனை மற்றவர்க்குக் கொடுக்கவும் செய்கிறது. அதுபோல மனிதன் கடுமையாக உழைப்பதையே ஒழுக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறருக்காக உழைப்பது நோன்பு, தவம் என்று புறநானூறு கூறும்.

அறம்- தற்சார்பில்லாதது. அதனால் அறம் விலைப் பொருள் அல்ல. அறத்தை விலைப் பொருளாகவும் ஆக்கக் கூடாது. “அறவிலை வாணிகன் ஆய் அலன்” என்று புறநானூறு கூறும். அறம் ஆன்மாவைச் சார்ந்தது. அறம், அகநிலைப் பண்பு, அறம், இம்மையின்பத்தையும் தரும்; மறுமை இன்பத்தையும் தரும். மாணிக்கவாசகர் “பொய்யும் யானும் புறமே போந்தோம்” என்றருளிச் செய்துள்ளார். திருவாசகப் பாடலில் வரும் புறம், அறத்திற்கு எதிரிடையான புறம். இறைவனுடைய திருவடி இன்பத்திற்குப் புறமாய புறம். புறம், உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லாத நிலை. அற நெறிக்கு, அன்பு நெறிக்கு எதிரிடையானதெல்லாம் புறம். புறம், பயனற்றவை ஒன்று சேரும் இடம்; அல்லது போடப்படும் இடம். புறம் என்பது ‘வெளியே’ என்ற பொருளும் தரும். “புறஞ்சுவர் கோலம் செய்வான்” என்று பாரதம் கூறும். புறத்தே வந்தபிறகு ஆன்மாவின் நிலை என்ன? தீயவை எல்லாம் புறம், தீயவை எழு பிறப்பும் தீண்டும், தீயைவிடத் தீமை கொடிது. பொருள் கூடத் தீதின்றி வந்தால்தான் பொருள் எனப்படும். அப்பொருள்தான் இன்பந்தரும். நெருப்பு புகையால் மூடப்பட்டுள்ளது. முகம் பார்க்கும் கண்ணாடியும் கூடப் புழுதியால் மூடப்படுகிறது. அதுபோல் தன்னலத்தால் மூடப்பெற்ற ஆன்மாக்கள் சமூகத்திற்குப் புறம்பாம்; அறநெறிக்குப் புறம்பாம்.

இன்ப நெறிக்கு இடையூறு காமமும் சினமும் பொய்யும்! இவை மனிதனை, மனிதக் கூட்டத்திலிருந்து பிரித்துப் புறத்தே தள்ளுகின்றன. புறம், சன்மார்க்கத்திற்கு இசைந்தது அல்ல. ஆன்மா, புறத்தே தூக்கியெறியப்படாதிருக்க வேண்டுமானால் நன்னெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். அவையாவன: ஒப்புரவறிதல், அடக்கம், பொறுமை, சினம் காத்தல் முதலியன. சத்தியத்தையும் நடுவு நிலையையும் பேணுக. புறத்தே தள்ளப்படாமல் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமா? சொர்க்கத்தின் கதவு திறக்க வேண்டுமா? நீ, அறநெறி பற்றிப் பேசுவதை நிறுத்து; அறநெறியில் நட! நீ, அறநெறியில் நடக்க முயன்று வெற்றி பெற்றுவிட்டால் புறமே இல்லை. நீ வாழும் இடமே சொர்க்கம்.

மாணிக்கவாசகர் “புறமே போந்தோம் பொய்யும் யானும்” என்கிறார். ஆம், உண்மை! பொய், சொர்க்கத்திற்குள் புகமுடியாது. அது மட்டுமல்ல. இப்புவிக் கோளத்தில் பொய் வெற்றி பெறாது; நிலை நிற்காது. மனிதன் தவிர்த்துக் கொள்ள வேண்டியவைகளில் பொய் ஒன்று என்பது மாணிக்கவாசகரின் கருத்து. அதனால் “பொய் தான் தவிர்த்து” என்றார். பொய் என்றால் என்ன? வள்ளுவத்தின் அடிப்படையில் விரிந்த அடிப்படையில் பொய்க்குப் பொருள் கொண்டால் குற்றம் அல்லது நலம் பயப்பனவாக இல்லாதன எல்லாம் பொய் என்று கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆதலால், பொய் என்பது, மெய் அல்லது உண்மைக்கு எதிரிடையானது என்று பொருள் கொள்ள இயலாது. தீமை செய்யாது நன்மை செய்தல் இவற்றுடன் பொய்யாமையை உடன் வைத்து எண்ணுகிறது பகவத்கீதை. “பாவம் இயங்க அதன் கைப்பிடியாகப் பயன்படுவது பொய்” என்றான் ஜேம்ஸ்.

பொய், நஞ்சு; இல்லை! பொய் நஞ்சினும் கொடியது. மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டுப் பொய்யை மறுத்தே வந்துள்ளனர் உலக சிந்தனையாளர்கள். சில நாடுகளில் பொய்க்கு எதிரான சட்டமே இயற்றியிருக்கிறார்கள். துருக்கி நாட்டுச் சட்டத்தில் பொய் சொன்னதாக நிரூபிக்கப் பட்டுவிட்டால் பொய் சொன்னவர்களின் நெற்றியில் நெருப்பில் பழுத்த இரும்புக் கம்பியால் சூடு போடுகிறார்களாம். நமது நாட்டில் சொல்வன்மையால் பொய்யை மெய்யாக்கிவிடுகிறார்கள். மனிதன் வளர, வளர அவனுடைய பொய்யும் வளருகிறது என்பது மாணிக்கவாசகரின் கருத்து. “பொய்மையே பெருக்கி” என்கிறார். பிறந்தவுடன் குழந்தைகள் பொய் கூறுவதில்லை. கூறவும் தெரியாது. ஆனால் வயது வளர, வளர வீடுகளும் வீதிகளும் குழந்தைகளுக்குப் பொய்யைக் கற்றுத் தந்துவிடுகின்றன. அதனால், திருக்குறள் “வாய்மை” என்று ஓர் அதிகாரமே இயற்றியது.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”

(297)

என்பது திருக்குறள்.

பொய்யைத் தவிர்க்க என்ன வழி? நாட்டில் செங்கோல் தழுவிய ஆட்சி இருக்க வேண்டும். இன்றைய ஆட்சிமுறையில் பொய்க் கணக்கு, இரண்டாம் கணக்கு என்றெல்லாம் பகிரங்கமாகவே பேசப்படுகின்றன. கருப்புப் பணம் இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், எங்கும் பொய் அரங்கேறுகிறது. கொடுங்கோல் அரசு அகற்றப் படவேண்டும். பொருள் ஈட்டவும், வைத்துக்கொள்ளவும் சுதந்திரம் வேண்டும். கொடுங்கோன்மை அகன்றால் மட்டும் போதாது. ஆற்றல் வளர வேண்டும். ஆற்றல் பெற்றவர்கள் தற்காப்புக்குப் பொய்யைக் கருவியாகப் பயன்படுத்துவது இயற்கை சத்தியம் சாகாது.

பொய்யைக்கூட ஓரளவு சமாளிக்கலாம். மெய் போலப் பொய் கூறுபவரை சமாளிப்பது அரிது. இங்ஙனம் மெய்போலப் பொய் கூறுபவர்களைப் பற்றிதான் “பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்” என்று மாணிக்கவாசகர் கூறினார். ஆதலால், பொய்களைத் தவிர்த்து வாழாதவர்கள் சொர்க்கத்தை அடைய முடியாது. பொய்யால் புறமேயாகும் தன்மை பெறுவர். பொய்க்குத் துணை ‘யான்’ என்பது. யானும் பொய்யும் புறமே போந்தோம் என்றார். பொய்க்கு யான் துணை; யானுக்குப் பொய் துணை.

மனிதன் சொர்க்கம் அடையவேண்டுமா? அவன் ‘யான், ‘எனது’ என்ற செருக்கு உடையவனாக இருத்தல் கூடாது என்றார் திருவள்ளுவர். இவற்றுள் யான் மிகவும் மோசமானது. ‘யான்’ உறவுப் பகை. நட்புக்குப் பகை; காதலுக்குப் பகை; சமுதாயத்துக்குப் பகை; ஆதலால், ‘யான்’ என்ற செருக்கு அறவே ஆகாது. ‘யான், ‘எனது’ என்ற அகந்தை எள்ளளவும் மாறவில்லை” என்பது தாயுமானவர் வாக்கு. ‘யான்’ என்ற செருக்கில் விளைந்த மோதல்களும் கலகங்களும் பலப்பல. ‘எனது’ என்பதால் எழுப்பப்பெற்ற சுவர்களும், போடப்பட்ட வேலிகளும் எண்ணிலடங்கா. பூட்டு வியாபாரிகளின் நம்பிக்கைக்குரிய மூலதனமே “எனது” என்பதுதான்! ஒரு முனிவர்- தூய துறவி- நல்லவராயினும் அவருக்கு வீடு பேறு கிடைக்கவில்லை. அவர் வாயிற் காவலராகிய நந்தீசரிடம் ‘நான்’ வந்திருக்கிறேன் என்று சொன்னதால் இறைவனின் ஆணை ‘நான்’ இழந்தபின் வரட்டும் என்பதாயிற்று! ஆதலால் ‘பொய்யும் யானும்’ சொர்க்கத்தில் புகா. பொய்யும் ‘யான்’ எனும் செருக்கும் உடையவர் சொர்க்கம் புகமுடியாது. புறத்தே தள்ளப்படுதல் உறுதி.

புறத்தேயிருந்து சொர்க்கத்திற்குள் புக அன்பு வேண்டும். அந்த அன்பு மெய்யன்பாக இருக்கவேண்டும். மெய்யன்பு என்று கூறியதால் அன்பிலும் போலி- பாசாங்கு இருப்பது உண்மையாகிறது. மெய்யன்பு என்பது காரண காரியங்களைக் கடந்த அன்பு. தூண்டுதல் தேவைப்படாத அன்பு. அன்பு, அன்புக்காகவே! இந்த அன்பு நெறி நின்று வாழ்வதில் துன்பம் வரினும் அன்பு குறையக்கூடாது. அன்பு வளர வேண்டும்.

இடர்க ளையா தேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும்- சுடர் உருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்னெஞ் சவர்க்கு.

(அற்புதத் திருவந்தாதி-2)

என்று அம்மையார் பாடினார்.

இந்த அன்பு நிரந்தரமானதாக இருக்கவேண்டும் என்பது மாணிக்கவாசகரின் பிரார்த்தனை.

பரந்து பல் லாய மலரிட்டு முட்
டாதடி யே இறைஞ்சி
இரந்தவெல் லாம் எமக் கேபெற
லாம் என்னும் அன்பருள்ளம்
கரந்து நில் லாக்கள் வனே நின்றன்
வார்கழற்(கு) அன்(பு) எனக்(கு)
நிரந்தர மாய்அரு ளாய் நின்னை
ஏந்த முழுவதுமே!

(திருச்சதகம்-6)

அன்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டும். அந்த அன்பும் ஆற்றுப் புனல்போல் கரைகளை- சம்பிரதாயங்களை உடைத்துக்கொண்டு ஓடவேண்டும். அன்பெனும் ஆறு கரை புரள நின்றுயர்ந்தவர்கள் மாணிக்கவாசகரும் கண்ணப்பருமாவர். அச்சமிலாத மாணிக்கவாசகர் அன்பிலாதவரைக் கண்டால் அஞ்சுகிறார். அன்பிலாதவர் உறவு, நட்பு பனை மரத்து நிழலனையது; கானல் நீர் போன்றது. பனைமரத்து நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்க இயலாது; முடியாது. கானல் நீர் தாகம் தீர்க்காது. அன்பிலாதவருடன் பழகி அவர்களைச் சுமப்பது பைத்தியக்காரத்தனம். அதனால் மாணிக்கவாசகர் “அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!” என்று பாடுகிறார். ஆம்! அன்பிலாதவர் உறவு அஞ்சத்தக்கது. அன்பிலாதவர்கள் ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்கமாட்டார்கள்; வஞ்சனை, ஏமாற்று, சூது முதலியனவும் கொண்டிருப்பார்கள். ஆதலால், ஒழுக்கமுடையவராக இருக்க விரும்பினால் அன்புடையராக வாழ்தல் வேண்டும். மனிதன் தன்னுடன் தொடர்புடையார் மாட்டும், தொடர்பிலாதார் மாட்டும், கடவுள் மாட்டும் அன்பு செலுத்தும் வரை ஒழுக்கமுடையவனாக இருப்பான். பரிபூரண அன்புடையோராவதற்கு அறிந்தோ, அறியாமலோ போராடுவதுதான் வாழ்க்கை! அன்பு வளர, அன்பை அனுபவிக்க, அன்பு காட்ட “யான்” என்ற உணர்ச்சியைத் துறந்தேயாக வேண்டும். நாமனைவரும் பின்பற்ற வேண்டிய பண்புகள் அன்பு, அறிவு, பணிவு ஆகியன. அன்பு குறையாமல் வளர வேண்டுமாயின் பணிவு வேண்டும், விரும்பி அன்பு செய்யப் பழகுதல் வேண்டும். அன்பும் நுண்ணறிவும் ஒருசேரப் பெற்றால் எதையும் சாதிக்கலாம். வாணிகப் போக்கில்- வாணிகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அன்பு ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பயன் தரக்கூடியது. அன்பு தன்னையே கொடுக்கும். உண்மை, அறிவுக்குப் புலனாகாது. அன்புக்கே உண்மை புலனாகும். வாழ்க்கை என்ற கோட்டையை வலிமைப்படுத்த வேண்டுமாயின் அது நட்புறவால்தான் இயலும். அன்பு கொள்வதும், அன்பு பெறுதலும் மனித வாழ்க்கையின் தலையாய கடமை. உலகத்தில் மற்றெல்லாவற்றிற்கும் அழிவுண்டு. ஆனால் அன்புக்கு அழிவில்லை. அன்பிலும்கூடப் பிரிவு வருதல் உண்டு. பிரிவு, சிறிது காலமாக இருந்தால் அன்பு வளரும். பிரிவு நீடித்தால் துன்பந்தரும்; வதைக்கும்.

மாணிக்கவாசகர் தமக்கும், இறைவனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவை நீடிக்க விரும்பாமல் அழுது புலம்பிய புலம்பல்தானே திருவாசகம்! தீங்கிழைத்தவரிடத்திலும் அன்பு காட்டுவதுதான் உண்மையான அன்பு. இங்ஙனம் தீங்கிழைத்தாரிடத்திலும் அன்பு காட்ட மனிதனால்தான் முடியும். அறியாமையாலேயே தீங்கிழைக்கிறான் என்று எண்ண வேண்டும். “அறியாமல் செய்கிறார்கள், மன்னித்து விடுக” என்று இயேசுபெருமான் செய்த பிரார்த்தனையை நினைவிற் கொள்க.

பிறந்தவர்கள் அனைவரும் இறப்பது உறுதி, அதற்குள் ஏன் அன்பில் வறட்சி என்று எண்ணி அன்பு காட்ட வேண்டும். கடவுள் மனிதனுக்கு மட்டும் கொடுத்துள்ள ஒரே ஒரு கொடை அன்புதான்! அன்பு அரும்பொருள். அதனை இழந்தால் திரும்பப் பெறுவது கடினம். அன்பு, உள்ளத்தை உயிருடனும் உயிரை உடலுடனும் பிணைக்கும் ஒரு தளை. “அறிவு இறைவனைத் தேடுகிறது. அன்புதான் இறைவன் உறைவிடம் என்பதை அறிந்து கொண்டாரில்லை. அன்பு தான் வாழ்க்கைச் சட்டம்! அன்புடன் ஒன்றுவதுதான் விடுதலையும் முத்தியும்” என்றார் இராமதீர்த்தர்.

அன்புடையார் ஆன்மாவைத் தவிர மற்றொன்று அறியார். ‘மற்றொன்று அறியார்’ என்பது கடவுள் பக்தி முதல் சமூக வாழ்க்கை வரை பொருந்தும்.

மெய்யன்பு காட்டும் வல்லமை பெறவேண்டும். அதற்குத் தொண்டு செய்யவேண்டும். அன்புக்கு அரண் தொண்டு.

பொய்யைத் தவிர்த்தல், “யான்” இழத்தல், மெய்யன்பு காட்டுதல், சிவமும் அன்பும் தவிர மற்றொன்று அறியா திருத்தல், தொண்டு செய்தல் ஆகியன மேற்கொண்டு ஒழுகினால் திருவருள் சித்திக்கும். மாணிக்கவாசகர் “யானும் பொய்யும் புறமே போந்தோம்” என்றும், “புறம் போக லொட்டேன்” என்றும் பாடுகின்றார். ஆம்! புறம் போதலுக்கா பிறந்தோம்! மனித குலத்திலிருந்து புறம் போகமாட்டோம் என்று உறுதி கொள்வோம். அன்பால் நட்புச்செய்தோரிடமிருந்தும் அன்பு காட்டப் பெற்றவரிடமிருந்தும் பிரியமாட்டோம்! புறம் போக மாட்டோம்! நிச்சயமாகக் கடவுளிடத்திலிருந்து விலக மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

புறமே போந்தோம் பொய்யும்
யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா
வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
மற்றொன் றறியாதார்
சிறவே செய்து வழி வந்து சிவனே
நின்தாள் சேர்ந்தாரே!

(திருச்சதகம்-86)
பிரிவிலாத இன்னருள்!


அறிவி லாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு
அறிவதை அருளிமேல்
நெறியெ லாம் புல மாக்கிய எந்தையைப்
பந்தனை அறுப்பானைப்
பிறவி லாத இன் னருள்கள் பெற் றிருந்துமா
றாடுதி பிண நெஞ்சே!
கிறியே லாம் மிகக் கீழ்ப்படுத் தாய் கெடுத்
தாய் என்னைக் கெடுமாறே!

(திருத்தகம்-36)

“மாணிக்கவாசகர் அறிவால் சிவமேயானவர்” என்று கூறுவது மரபு. ஆயினும் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகப் பாடல்களில் தம்மை “அறியாதவன்” என்றும் “அன்பில்லாதவன்” என்றும் திரும்பத் திரும்பக் கூறுகின்றார். நல்ல நன்செய்யில் மருதாம்புப் பயிரே பயிர்போல் இருக்கும். மாணிக்கவாசகரின் பழுத்த மனத்தில் பிறந்து வெளிவந்த திருவாசகப் பாடல்களின் சொற்கள் அன்பில் நனைந்தவை; கல்லைப் பிசைந்து கனியாக்கும் தன்மையவை. மாணிக்கவாசகரின் உடலில்- இதயத்தில் பெருமான் எழுந்தருளினார். “என்றன் உடலிடன் கொண்டாய் நான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!” என்று அருளியிருப்பது உணர்க.

பிறவி துன்பமா? இன்பமா? பிறவி துன்பமாவதும் இன்பமாவதும் பிறவியைப் பயன்படுத்துவாரைப் பொருத்தது. பொதுவாக மனிதன், வாழ்வாங்கு வாழ்ந்தால் பிறவியை இன்பமாக்கலாம்; இன்பமாக அனுபவிக்கலாம். அதனாலன்றோ “மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்றார் அப்பரடிகள். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன். தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்றருளினார் திருமூலர். ஆனால், இன்பம் விழைவதும் இடும்பையை ஏற்க ஒருப்படாமையும் வாழ்வியல் அல்ல. நன்றும் தீதும் ஒப்பக் கருதும் பாங்குதான் வாழ்வின் சிறப்பு. இத்தகு வாழ்வில் இன்பம் அமையும்; பிறவி இன்பமாகக் கழியும். ஆனால், அந்த இன்பத்தில் மூழ்கிப் போகாமல் வாழ்ந்தால் பிறவி துன்பமாகாது; பிறவி சுமையாகவும் இருக்காது. ஆனால் எத்தனை பேர் இங்ஙனம் வாழ்பவர்கள்? கோடியில் ஒருவர்கட இல்லை. ‘நான்’, ‘எனது’ என்ற செருக்கற்ற நிலை வாய்த்து வாழ்வோரைக் காண இயலவில்லை.

இன்று செருக்குடையோரே மிகுதி. தஞ்சாவூர்ப் பொம்மையைப் போல ஆட்டம் போடுகின்றனர்; பாழ்படுத்துகின்றனர். “பாழ்த்த பிறவி” என்றார் மாணிக்கவாசகர். காரணங்கள் சீராக அமையின் காரியங்களும் சீராக அமையும். இன்று பலர் காரணங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. காரணமின்றியே வெறுக்கின்றனர்; பகை வளர்க்கின்றனர். உழாத நிலத்தில் களை மண்டுதல் போல அன்பால் உழாத நெஞ்சுடையராதலால் தீமையே நினைக்கின்றனர், தீமையே செய்கின்றனர். தம்முடைய செயல்கள் துன்பமாக விளையும்; பிறவியைத் துன்பமாக்கும் என்பதை அறிவதில்லை. மூர்க்கராதலால் சான்றோர் சொல்லும் வார்த்தையைச் செவிகொடுத்துக் கேட்பதில்லை.

பிறவிக்குரிய காரணங்கள் கெட்டால் பிறவியும் கெடும். சித்த விகாரங்கள் சுட்டெரிக்கப்பட்டால் பிறவிக் காடும் அழியும். சின்னத்தனமான காரியங்கள் செய்தல், வெறுப்பனவே செய்தல் கூடாது. சிறுமையும் வெறுமையும் பிறவிக்குக் காரணங்கள். வெறுப்பனவே செய்யும் பிறவி ‘சீமைக் கருவையைப் போல வெட்ட வெட்ட தளிர்க்கும். இழி செயல் செய்வோரின் பிறவி தொடரும். அந்த ஆன்மாக்களின் இச்சையின்றியே தொடரும். பிறவி தொடர முயற்சிகள் வேண்டாம் இறைவனிடத்தில்கூட விண்ணப்பிக்க வேண்டாம். தாமே தொடரும்.

பிறவி நன்றாக அமையவும் இன்பமாக வந்து பொருந்தவும் ஆன்மா, இறைவனிடம் கேட்டுத்தான் அவனுடைய அருளிப்பாட்டுடன்தான் பிறக்க இயலும். ஆதலால், கெட்ட பிறவியை வேரும் வேரடி மண்ணுமாகக் களைய வேண்டும், சீமைக் கருவையைத் தோண்டுவது போல! “பிறவியை வேரறுப்பவன் இறைவன்” என்று திருவாசகம் கூறும்.

பிறவிக்குக் காரணம் பாசம்; அவா. “அவா தவாஅப் பிறப்பினும் வித்து” என்றது வள்ளுவம். இளையான்குடி மாறனார் கீரை பிடுங்கிய காட்சியைப் ‘பாசப் பழிமுதல் பறிப்பார் போல’ என்று சேக்கிழார் கூறினார். பிறவி ஓட வேண்டுமாயின் அல்லது பிறவி இன்பமுடையதாக அமைய வேண்டுமாயின் ஆசைகளை அகற்றுதல்வேண்டும். பாசத்தை விடுதல் வேண்டும். வாழ்க்கையை ஆட்டிப் படைத்து அவலப்படுத்துவன, ஆசாபாசங்கள். இந்த ஆசைக்கும் பாசத்துக்கும் காரணம் அறியாமை. அறியாமை என்பது பலர் கூறுவதுபோல ஒன்றும் தெரியாமை அல்ல. நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் முறைபிறழ அறிந்து கொள்ளுதலே அறியாமை.

இருள், பொருளைக் காட்டாது. ஒரோவழி காட்டினாலும் உள்ளவாறு காட்டாது. இதுபோல அறியாமை ஆன்மாவைப் பற்றிய இருள். இது ஆன்மாவுக்கு நல்லன காண, நல்லன கேட்க வாய்ப்பளிக்காது; வாய்ப்பளிக்காதது மட்டுமல்ல- தடுக்கும். இந்த அளவில் அந்த இருள்-அறியாமை நின்றால் பரவாயில்லை. தீச்செயல்களைச் செய்யத் தூண்டும்; துணை போகும். அத்தீச் செயல்கள் பிறவிக்கு வித்தாக அமைந்துவிடும். பிறவியின் நோக்கம் செயல். ஆனால் அச்செயல்- வினை இருள்சேர் இரு வினையாக அமையாமல் ஒளி சேர் வினையாக, வாசனையாக அமையாத செயலாக- வினையாக அமைதல் வேண்டும்.

பிறவியின் நோக்கம் இருளை அகற்றுதல். இருள்சேர் இருவினையிலிருந்து விடுதலை பெறுதல்; குறைவிலிருந்து நீங்கி நிறைவைப் பெறுதல்; குற்றங்களின்றும் விடுதலை பெறுதல்; குற்றங்களை நீக்கிக் குணங்களைக் கொள்ளல்; சிந்தையிலும் செயலுறுப்புக்களிலும் பூட்டப் பெற்றுள்ள விலங்குகளை உடைத்து விடுதலை பெறுதல்; பரிபூரணனுக்கு அடிமையாதல் முதலியனவாகும். இப்படிப் பிறவியின் நோக்கம் நிறைவேற, முதலில் அறியாமையிலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும். அறியாமை அகலுதலைத் ‘தெளிதல்’ என்று தேவாரம் கூறும்

“சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினும் சிவமுமாகி” என்று அப்பரடிகளும், “தெய்வத் தெளிவின் தெளிந்தோரப் பேணுமின்!” என்று இளங்கோவடிகளும் அருளியுள்ளமை உணரத்தக்கன. துன்பங்களிலிருந்தும் துன்பத் தொடக்குகளிலிருந்தும் அறவே விலக வேண்டுமானால் இறைவனின் திருவருள் தேவை.

அறியாமையில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, இறைவனைத் தேடாது. தேடினாலும் அவன் அகப்படுவதில்லை. ஆதலால் கருணையுடைய இறைவன் உயிர்க்குயிராகப் புகுந்து நின்றருளி ஆட்கொள்கின்றவன். இறைவன் ஆன்மாவினுள் உயிர்க்குயிரதாக எழுந்தருள்வது, இருள் கடிந்து எழுகின்ற ஞாயிறு போன்றது. அறியாமையின் பாற்பட்டு சாக்கை நனைத்துத் தூக்குமாப் போலே வினைகள், செயல்கள் பலவற்றைச் செய்து கொண்டும் அவ்வினைகள், செயல்களின் ஈட்டல்கள்- இழப்புக்கள், இன்பம்-துன்பம் ஆகிய உணர்வுகளில் சிக்கிக் கொண்டும் மத்துறு தயிர்போலச் சுழன்று வினையாகவே ஆகிக் கிடக்கும்பொழுது- ஆன்மபோதத்தில் திளைக்கும்போது இறைவன் ஆன்மாவின் விருப்பம் அறியாமல் அவனே புகுந்து ஆட்கொள்ளுதல் இயல்பு- கருணை.

அறியாதார் மாட்டு அறிவுடையோர் வெறுப்புக் கொள்ளலாகாது. அன்போடு பழகி, அறிவு தருதல் வேண்டும். மாணிக்கவாசகர் தம்மை அறிவிலாதவர் என்று கூறிக்கொள்ளும் இடங்கள் பலப்பல. அறிய வேண்டுவனவற்றை அறிதலே அறிவுடைமை. பலருக்கு உலகம் தெரியும். ஆனால், அவர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. இத்தகையோருக்குத் தெரிந்ததெல்லாம் சுயநலம் தான். அதுவும் நிர்வாணமான சுயநலம். வெறுப்பனவே செய்யும் வாழ்க்கைப் போக்கு. இத்தகைய வாழ்க்கைப் போக்கு மாறவேண்டுமாயின் அறியவேண்டியதை அறிதல் வேண்டும். ஆன்மாக்கள் அறிய வேண்டியதை அறியுமாறு செய்து அருள்பாவிக்கவே இறைவன் சிவன் எம்பிரான் ஆலமர். செல்வனாக எழுந்தருளி அறிவித்து உணர்த்து கின்றான்.

விடுதலை பெறுதல் வீடு. வீட்டினை “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்று திருக்குறள் கூறும். வானுலகம் பதவிகள் உலகம். பதவிகளும் மனிதனை மயக்குவனவேயாம். பதவிகள் மனிதர்களைப் பைத்தியமாக்கிவிடும். வீடு பற்றிய அறிவினை உணர்த்தினான் திருப்பெருந்துறை சிவன். மாணிக்கவாசகருக்கு இறைவன் “மேல் நெறியெலாம் புலமாக்கிய” பண்பினை வியந்து பாடுகின்றார்; பரவுகின்றார். வெட்ப தட்பம், பயம் முதலியனவற்றிலிருந்து விடுதலை தந்து, பாதுகாப்புத் தருவது மண்ணகத்து வீடு. அதுபோல ஆன்மா, ஆணவ வெப்பத்திலிருந்து விடுதலை பெற்று மாசில் வீணையாக, மாலை மதியமாக, வீசு தென்றலாக, இளவேனிலாக விளங்கும் இறைவன் திருவடிகளில் தங்கிப் பாதுகாப்புப் பெறுதல் வீடு. இந்த வீடு பற்றிய அறிவினை, உணர்வினை, அனுபவத்தினை மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறையுறை சிவன் அருளிச் செய்தனன். இறைவனைத் தாயிற் சிறந்த தயாவுடையான் என்று போற்றும் மாணிக்கவாசகர், அறிவு தந்து ஆட்கொண்டு அருளிய இறைவனை- சிவனை ‘எந்தை’ என்று போற்றுகின்றார். அறிவு தரும் பொறுப்பும் கடமையும் தந்தைக்கே உண்டு என்பதால் இங்ஙனம் கூறினார்.

அறியாமை அகன்று விட்டது. இருள்சேர் இரு வினையும் இல்லை. என்றும் பிரிவிலா அருளும் கிடைத்துவிட்டது. ஆயினும் வேம்பு தின்ற புழுப்போல, எலும்பு கடித்த நாய்போல மீண்டும் ஆன்மாவின் நெஞ்சு கீழ்மை நோக்கியே அழைத்துச் செல்ல விரும்புகிறது. நெஞ்சு போராடுகிறது. ஆன்மாவின் நலத்துடன் ஆன்மாவின் விருப்பத்திற்கு மாறாக நெஞ்சு மாறுபடுகின்றது. தன்னுடன் மாறுபட்டு நின்று போராடும் நெஞ்சை, திருஞானசம்பந்தர் சரிக்கட்டித் தன் வழிக்கு அழைக்க முயற்சி செய்து வெற்றி பெற்றார்.

“நீ நாளும் நினைவாய் நன் நெஞ்சே
சா நாளும் வாழ் நாளும் யாரறி வார்”

என்றருளியுள்ளமையைக் கற்றறிக.

நெஞ்சைத் தன் வசம் வைத்துக்கொள்வது அவசியம். நெஞ்சு எங்கும் செல்லும்; எதையும் சொல்லும்; எதையும் செய்யும். பதைந்துருகும் பாழ் நெஞ்சம். “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்று ஏசுவார் மாணிக்கவாசகர். இன்று மிகமிக மோசமான மனிதர்கள்கூட, உமி குற்றிக் கை ஓய்வாதல்போல வாழ்கிறவர்கள்கூட, பயனற்ற வாழ்க்கையைச் சுமந்து திரிபவர்கள்கூடத் தாம் தாம் வாழ்வதாகத்தான் எண்ணுகின்றனர். ஆனால், அவர்கள் வாழ்வது உண்மையல்ல. அவர்கள் நடத்துவது வாழாத வாழ்க்கையேயாம். பயனற்றனவெல்லாம் இருந்தும் பயனில்லை, இறந்தாலும் பயனில்லை என்பது திரண்ட கருத்து.

மாணிக்கவாசகர் தமது நெஞ்சத்துக்கு ஆசைகளைக் காட்டித் தம்பால் அணைத்துக்கொள்ள முயன்று வெற்றி பெற்றுவிட்டார் என்பதைத் திருவாசகம் உணர்த்துகிறது. இறைவன்- சிவன் வலியவந்து இம்மண் புகுந்து குருந்த மரத்தடியில் காத்திருந்து ஆட்கொண்டான். நெஞ்சமே! அவனுடைய திருவடிகளைச் சிந்தனை செய்! திருவருட் சிந்தனையுடன் திருப்பெருந்துறையுறை சிவனிடம் உனக்கு வேண்டியதை இரந்து கேள்! திருப்பெருந்துறை சிவன் நீ கேட்கும் எல்லாவற்றையும் தருவான். திருப்பெருந்துறையுறை சிவன் பெருங் கருணையுடையவன் என்று தமது நெஞ்சை திருப்பெருந்துறையுறை சிவனிடம் ஆற்றுப்படுத்துகின்றார். தமது நெஞ்சத்தினை இரந்து கேட்கின்றார் மாணிக்கவாசகர். ஆணவத்துடன் தொடக்குண்டு ஆன்ம போத நிலையில் விளங்கிய ஆன்மாவின் பொறி, புலன்களைச் சிவத் தன்மையுடையதாக்கிய திருப்பெருந்துறை இறைவனை-என்றும் பிரியாதிருந்தருள் செய்வானை வாயாரப் பேசு என்று கேட்டுக் கொள்கின்றார்.

“ஏ, நெஞ்சே! வேதங்கள்- பழமறைகள் ஐயா! ஐயா! என்று தேடியும் சிவம் என்னும் செய்பொருளை கண்டபாடில்லை! அந்த வேதங்களுக்கெல்லாம் நாயகனாகவும் வேதங்களையெல்லாம் கற்றறிந்தவனாகவும் விளங்கும் நான்முகனும் கண்டதில்லை. செல்வத்தின் தலைவன் திருமாலும் கண்டதில்லை. இறைவனை அறிவினாலும் பணத்தினாலும் காண இயலாது. இங்ஙனம் நான்மறைகளாலும் நான்முகனாலும் திருமாலாலும் காண இயலாத இறைவன் எளியேனை ஆண்டு கொண்டருளினர். ஆண்டு கொண்டருளியதுடன் தொண்டனாகவும் கொண்டருளிய அருளிப்பாட்டை என்னென்பது? அன்பு காட்டினால் போதாது; அருள் செய்தால் போதாது. வேலை- தொண்டு, செய்யப் பணித்தால்தான் உறவு ஆழம்படும்; உறுதிப்படும் என்று பேசுகிறார். ‘கூவிப் பணி கொள்’ என்றும், “எது எமைப் பணி கொள்ளுமாறு அது கேட்போம்” என்றும் அருளியுள்ளமையைக் கற்றுத் தெளிக.

தொண்டு செய்ய ஒருப்படுமின்! தொண்டராக விளங்குமின்! இறைவன், திருப்பெருந்துறையுறை சிவன் ஆட்கொண்டருளியதுடன் தொண்டனாகவும் கொண்டருளியதற்கு ஏது கைம்மாறு? இல்லை, இல்லை! அதனால் கைம்மாறு உண்டோ என்று நெஞ்சை நோக்கிக் கேட்கின்றார். நெஞ்சு, “இல்லை இதற்கு ஓர் கைம்மாறு” என்று கூறுகிறது.

கீழ்மையே செய்து கெடுக்கும் நெஞ்சத்தினை மாணிக்கவாசகர் தன் வசப்படுத்திக் கொண்டு திருப்பெருந்துறையுறை சிவன் புகழ் பாடும்படி செய்தது புகழ்மிக்க செயல்.

திருவாசகம் ஓதுதல் மூலம் நாளும் நமது நெஞ்சத்தைத் திருத்துவோம்! நம் வசப்படுத்துவோம்! இறைவன் புகழ் பாடிப் பரவுவோம். தொண்டு செய்வோம்! நம்மைச் சிவமாக்கி ஆட்கொண்டருளும் மாணிக்கவாசகர் திருவடித் தாமரைகள் போற்றி! அறிவு தந்து ஆட்கொண்டருளிய அற்புதத்தைப் போற்றுவோம்.

போற்றி! அருளுக!

கடவுளை, தமிழில் ‘போற்றி! போற்றி!’ என்று வாழ்த்துதல் மரபு. போற்றி- என்ற சொல்லிற்கு, ‘போற்று’ என்றும் பொருள் கொள்ள இயலும். போற்றி என்ற சொல்லில் உள்ள இகர ஈற்றை வியங்கோள் எனக் கொண்டால் ‘போற்று’ என்றாகும். ‘போற்றுக’ என்ற சொல்லுக்குக் ‘காப்பாயாக’ என்பது பொருள். இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.

“போற்றி யருளுக நின் ஆதியாம் பாதமலர்” என்ற தொடரில் “போற்றி” வினையெச்சம். இறைவன் எப்பொருளுக்கும் முதலாக விளங்குபவன். “வாழ் முதலே!” என்றும் அருள்வது காண்க! இந்த உலகத்தின்- உலகப் பொருள்களின் ஆதியே! நின் திருவடிகளை அருளுக! அதாவது திருவடி ஞானத்தை அருள்க! திருவடி இன்பத்தை அருள்க! எம்மைக் காத்தருள் செய்க! முத்தி நெறியறியாத மூர்க்கரொடு கூடாமலும் எறும்புகளால் அரிக்கப்படும் புழுக்களைப் போல், புலன்களால் அரித்து, அழிக்கப் பெறாமலும் “நான்” “எனது” என்ற செருக்கால் தலையால் நடக்காமலும் சிந்தையுள் சிவம் வைத்து வாழ்ந்திட அண்ணித்தருள் செய்க! எமக்கு வாழ்நிலையின் முடிவான பேறாகிய நின் செந்தளிர் போன்ற திருவடிகளைத் தந்தருள்க. செம்மை சேர்ப்பதால் செந்தளிர்கள்! ‘செம்மலர்’ என்று சிவஞான போதமும் கூறும்! சிவம் ஆதியாக நிற்றல்போல அந்தமாகவும் நிற்கிறது. உலகம் அனைத்தும் ஒடுங்கும் கடையூழிக் காலத்திலும் உள்ளவன் சிவன். அவனே உயிர்கள் களைப்பாறிப் புத்துயிர்ப்புப் பெறுவதற்குக் கடையூழியில் உலகத்தை ஒடுக்கிப் பின் புதுப்பித்தருளுகின்றான். ஆதலால், சிவனே அந்தம், ஆதி, முதலும் நடுவும் ஈறும் அவனே!

எல்லா உயிர்களின் தோற்றத்திற்கும் காரணம் இறைவனே! எல்லா உயிர்களும் இறைவனிடத்தில் தோற்றம் என்பது படைப்பு என்று பொருள் தராது. தோற்றம் = தோன்றுதல்; புலப்படுதல், “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற திருக்குறளுக்குத் “தோன்றின்” என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும் பாங்கே இங்கேயும் கொள்ள வேண்டும். அதாவது பலரறிய மக்கள் மன்றத்தில் தோன்றும் பொழுது புகழொடு தோன்றுக. அங்ஙனம் புகழ்பட வாழும் தகுதி பெறாவிடின் தோன்றாதே என்பதுதான் அந்தக் குறளுக்குரிய உண்மைப் பொருள் என்றும் உள்ள உயிர் ஆணவத்தால் கட்டுண்டு செயலற்றுக் கிடந்த நிலை, தோன்றா நிலை. இறைவன் கருணையால் செயற் கருவிகளுடன் கூடிய உடலையும் அறிவுக் கருவி கருவிகளாகிய (காரணங்களை) புலன்களையும் கொண்டு அறிவு விளக்கமுறும் நிலையில் தோன்றியதே தோற்றம்.

எல்லா உயிர்களும் பொன்னும் பொருளும் பெற்று வாழும் வாழ்வளிப்பதால் “பொற்பாதம்” என்றார்.

“பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை”

என்னும் நம்பியாரூரர் வாக்கும் அறிக. பொன் வேறு; பொருள் வேறு. பொன்- தங்கம். இன்று பணம் முதலியனவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். பொருள்- நுகர் பொருள்கள். உடலோடியைந்த உயிர்களுக்கு உயிர் வாழ உணவு தேவை; மருந்து தேவை. உடை தேவை. களிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியன தேவை. இவையெல்லாம் நுகர் பொருள்கள். திருவள்ளுவரும்

“பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை”

என்றார். இங்குப் பொருள் என்பது உயிர் வாழ்தலுக்குத் தேவையான உணவையே குறிக்கும்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”

என்றும் கூறுவர். உணவு, உயிராகாது. உணவால் உயிரைக் கொடுக்கவும் இயலாது. உடலில் உயிரைக் காத்து வைத்து வாழ்வளிப்பது உணவு.

போகம்- இன்பம். மாணிக்கவாசகர் “போகமாம் பூங்கழல்கள்!” என்று பாடுகின்றார். போகம் என்பது விரிந்த பொருளைத் தரவல்லது. போகம்- இன்பம். உயிர்க்குலத்துக்கு இன்பம் தரும் வாயில்களும் இன்பம் தருபவையும் பலப்பல. ஆன்மாக்கள் வளர்ச்சி அடைய, அடைய இன்பத் துறைகளும் மாறும். குழந்தைப் பருவத்தில் தேவை விளையாட்டுப் பொருள்கள்; இனிப்பு மிட்டாய்கள்! இளமையில் தேவை கல்வி கற்றோர் வாய்க் கேட்டல், வாலிபப் பருவத்தில் காதலின்பம். வாலிபப் பருவத்தில் இன்பத் துறைகள் ஆற்றலுக்கும் தகுதிக்கும் ஏற்பப் பலப்பல வாகிவிடும். சாதனை செய்தல் ஆகியவற்றிலும் இன்பம் காண்பர். முதிர்ந்த ஆன்ம முதிர்ச்சி நிலையில் இறைவன் கழலேத்தும் இன்பத்தையே இன்பமெனக் கொள்வர். “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!” என்றும் மாணிக்கவாசகர் அருளிச் செய்துள்ளார்.

இறைவனுடைய திருவடி யின்பமே இன்பம். உயிர்கள்-ஆன்மாக்கள் அடையும் முடிவிலா இன்பம் திருவடியின்பமேயாம். திருவடியின்பத்தை ‘ஆனந்த வெள்ளம்’ என்று கோவையார் போற்றும்! திருவடியின்பமாகிய ஆனந்த வெள்ளம் வற்றாது; முற்றாது. அந்த ஆனந்த வெள்ளத்தினை வழங்குவதே ஆடல்வல்லானின் கூத்து!

‘பூங்கழல்கள்’- மலரின் தன்மையுடைய திருவடிகள் என்பது பொருள். மலர், மங்கலப் பொருள்; மணமுடையது; தேன்பிலிற்றும் இயல்புடையது; மென்மையானது. ஆணவக் காரிருளினால் கட்டுண்டும் ‘யான்’ ‘எனது’ என்ற செருக்கில் சிக்கித் கொண்டும் தலையால் நடக்கும் ஆன்மாக்களை, இறைவன் வன்முறையால் அணுகுவதில்லை. இறைவன் ஆன்மாக்கள் செய்யும் பிழைகளையெல்லாம் பொறுத்து ஆள்பவன். மேலும் பிழையெல்லாம் தவிர்த்தும் காத்து ஆள்பவன். பிழைகளைப் பொறுத்தலினும் பிழைகளைத் தவிர்த்தல் பேரறம் என்றும் நினைந்து நினைந்து போற்ற வேண்டிய உதவி. இறைவன் ஆன்மாக்களை ஆணவத்தின் ஆதிக்கத்திலிருந்து மெள்ள யாதொரு சுவடும், களங்கமும், கறையும், நோவும் இன்றி மீட்பதைப் “பையத் தாழுருவி” என்பார் மாணிக்கவாசகர். ஆதலால் இறைவன் சிவன், ஆன்மாக்களை மென்மையாக இன்ப வெள்ளத்தில் அழுத்தி ஆட்கொள்வதால் பூங்கழல்கள் என்றார்.

இங்குத் திருவடிகளைக் ‘கழல்’ என்றார். வெற்றிச் சிலம்படித்த திருவடிகளைக் கழல் என்று கூறுவது மரபு. ஆம்! எம்பெருமான் சிவனின் திருவடிகளை- கழல்கள், உயிர்களை ஆட்கொள்வதில் வெற்றி பெற்றவை. முப்புரம் எரித்து வெற்றி கொண்ட கழல்கள்! சிவன், காலத்தை வென்று விளங்கி ஊழி முதல்வனாக நிற்பவன். ஆதலால், சிவபெருமானின் திருவடிகள்- கழல்கள்!

சமயநெறிக் கோட்பாட்டின் அடிப்படையே பலருக்கு விளங்காதது. நம்மை- உயிர்களைக் கடவுள் படைத்தான் என்றே பலரும் கருதுகின்றனர். ஏன் சில சமயங்கள் அப்படியே கூறுகின்றன. நம்மை- உயிர்களைக் கடவுள் படைத்தான் என்பது அறிவியல் முறையிலும்கூட இசைந்துவாராது. கடவுள் பரிபூரணன்; குறைவிலா நிறைவு; கோதிலா அமுது; குறையிலிருந்து நிறை தோன்றலாம். இது பரிணாம வளர்ச்சி. நிறையிலிருந்து குறை தோன்றாது. ஆன்மாக்களுக்கு உள்ள குறைகளை நோக்கின் கடவுள் படைத்திருப்பான் என்று சராசரி அறிவுகூட ஒத்துக் கொள்ளாது. ஆதலால் உயிர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. உயிர்கள் என்றும் உள்ளவை (Existence) “எல்லா உயிர்க்கும் தோற்றமாம்” என்பதற்குப் பொருள் கொண்டதுபோல, மறைவாகச் செயலின்றிக் கிடந்தவை, செயலுக்குரிய அறிவுக் கருவிகளையும் செயற்கருவிகளையும் பெற்று இயக்கத்திற்கு வருவதே தோற்றம்.

“மூலையிலே கிடந்தேனை”

என்றார் திருமூலரும். உயிர்களுக்கு முடிவும் இல்லை. அப்படியானால் உயிர் வாழ்க்கைக்கு முடிவே இல்லையா? முடிவில்லாமல் இருந்தால் எய்ப்பும் களைப்பும் வந்துவிடும். உயிர்களின் வாழ்க்கைக்கு எல்லை இறைவன் திருவடிகளைச் சார்தலேயாம். இந்த நிலையிலும் சமயங்கள் தம்தம் நிலையில் மாறுபடும். உயிர்கள் திருவடி ஞானம் பெறச் சிவத்தினை அடைந்து திருவடி இன்பத்தை அடைதலே உயிர்களின் வாழ்க்கைக்கு முடிவு. அப்படியானால் திருவடிகளில் உயிர்கள் கலப்பதன் மூலம் தன்னை இழந்து விடுகின்றனவா? இல்லை! உயிர்கள்- ஆன்மாக்கள் திருவடியின்பத்தில் தன்னை இழந்துவிட்டால் முன் சொன்ன உண்மைக்கு மாறாகிவிடும். அதாவது உயிர்களுக்கு- ஆன்மாக்களுக்கு அழிவு இல்லை என்பதற்கு மாறாகிவிடும். உயிர்கள் தன்னை இழத்தல், சிவத்துடன் சேர்ந்து தன்னை இழத்தல் என்பது பொருளால் இரண்டாகவும் தன்மையால் ஒன்றாகவும் விளங்குவதேயாம். தன்னை இழத்தல் என்பது தற்போதமிழத் தலேயாகும்; பாலொடு நீர் கலந்தது போல! பாலைக் காய்ச்சினால் தண்ணீர் நீராவியாகிவிடும். அது போலப் பாலொடு நீர் கலந்த நிலைதான் சிவத்தொடு ஆன்மா கலந்த நிலை.

இறைவன் சிவனைக் கண்டறிவார் இல்லை என்பது திருவாசகம். இறைவனைக் கண்ட பிறகுதான் நம்புவது என்பது சமயநெறிக்குப் பொருந்தாத விவாதம். காண்டல்-கண்களால் காண்பது. கண்களால் காணக் கூடியவன்தான் கடவுள் என்பதை

“புவனியில் சேவடி தீண்டினன் காண்க”

“கண்ணால் யானும் கண்டேன் காண்க”

என்றருளியுள்ளமையால் அறிக. கண்கள் அறிவுப் புலனுடன் தொடர்பு கொள்ளவில்லையானால் காட்சி நிகழ்ந்தாலும் பொருள் புரியாது. பொருளைப் பற்றியதாகக் காட்சியமையாமல் போய்விடும். சிந்தனை செய்து தெளிந்து அறிவால் அறிந்து உணர்ந்து அனுபவித்த பிறகுதான் கடவுள், கண் காட்சிக்குப் புலனாகும். இது சமய அனுபவ நெறி!

அறிவு என்பது கல்வி மட்டுமல்ல, கல்வியின் பயனை அறிவு, கற்றவர்களிலும் மூடர்கள்- அறிவில்லாதவர்கள் உள்ளனர். ஒலி நாடாப்போல ஒப்பிப்பர்; அனுபவமும் இருக்காது செயலும் இருக்காது; ஒழுகலாறும் இருக்காது; நான்முகன் வேதங்களை நன்றாகப் பயின்றவன். வேதங்களுக்கு நாயகன், கலைமகள் நான்முகனின் மனைவி. நான்முகனின் நாவிலேயே இருக்கிறாள். ஆயினும் என்? சமய ஞானம் இல்லையே! பிரணவத்தின் பொருள் தெரியாமல் திருமுருகன் கையால் குட்டுப்பட்டவனாயிற்றே!

நான்முகன் கல்வியின் துணை கொண்டு இறைவன் திருமுடியைக் கண்டு வருவதாகக் கூறினான். சூளுரைத்தான். அன்னத்தின் உருவம் கொண்டு முடியைத் தேடி வானோக்கிப் போனான். திருமால் செல்வத்தின் அதிபதி. திருமகள் கணவன். இறைவன் திருவடியைப் பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பதமலரைக் கண்டு வருவதாகச் சூளுரைத்தான்; பன்றியின் உருவெடுத்தான்; நிலத்தைத் தோண்டிக் கொண்டு கீழ் நோக்கிப் பயணமானான். அறியாமை ஆரவாரம் செய்யும்; அகங்காரம் காட்டும். எப்போதும் அறியாமை மேல்நோக்கிய நிலையிலேயே இருக்கும்! செல்வன் ஒளிவான்; மறைவான்; யாருக்கும் புலப்படாமல் செயல் செய்வான்; செல்வத்தை நிலத்தில் புதைத்து வைப்பான். வரலாறு பொருத்தமாக இருக்கிறது. இறைவன் திருமுடியைத் தேடிப்போன நான்முகன் முடியைக் காண முடியவில்லை; தோல்வியையும் ஒத்துக் கொள்ளவில்லை. படித்த பேதைகள்- புத்திசாலிகள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் உண்மையை- இயலாமையை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். பொருந்தும்படியாகப் பொய்கள் பல சொல்லி அறியாமையை அறிவு என்று வாதிடுவர். சாட்சியங்களும் வைப்பர். நான்முகன் திரு முடியைக் கண்டுவிட்டதாகக் கூறினான். இது பொய். இதற்குச் சாட்சி தாழம்பூ, திருமாலோ திருவடியைக் காண முடியவில்லை என்று ஒத்துக்கொண்டான். செல்வத்தைவிட சமூகத்திற்கு அதிகத் தீமை பொய்யும் சூதும். படித்தவர்களால்தான் இவை வளர்கின்றன. அதனால்தான் பாரதி “படித்தவன் சூது பண்ணினால் ஐயோ என்று போவான்!” என்றான். நான்முகனும் திருமாலும் காண முடியாத திருவடிகள்!

மக்களே! வேதங்கள் ஓதுவதினால் மட்டும் இறைவனைக் காண முடியாது; அறிய முடியாது; அனுபவிக்க முடியாது. இறைவனை- சிவனைக் காண அன்பு தேவை. ஆற்றல் மிக்க அன்பு தேவை. நினைந்து நினைந்து நனைந்து நனைந்து அழும் அன்பு தேவை.

உயிர்கள் உடலொடு கூடி நிலத்தில் தோன்றியது உய்வதற்காக! உயிர்கள் உய்வதற்காக உடுத்துக் கொண்ட உடையனையது உடம்பு. பிறப்பின் நோக்கம் உய்தல். உயிர்-ஆன்மா, தன் முயற்சியால் மட்டுமே உய்தல் இயலாது. இறைவன் சிவனின் கருணையும் தேவை. இறைவன் சிவன் உயிர்களுக்கு உய்வு அருளுகின்றான். ஆன்மாக்களாகிய நாம் உய்யுமாறு அறிந்து அவ்வழியிலேயே ஆட்கொள்கிறான். உயிர்களை- ஆன்மாக்களை உய்யுமாறு செய்தல்- உடன்பாட்டு நெறிகளின் வழி சென்று மீட்டெடுத்தலேயாம். இறைவன் சிவனின் ஆட்கொள்ளும் நெறியில் எதிர்மறை அணுகு முறையே இல்லை. ஆங்காரம் உயிரின் இயற்கை. அது எதிர்மறை அணுகுதலை ஏற்காது. ஆதலால் உயிர்களின் மனமறிந்து மனத்துள் இருக்கும் கருத்தறிந்து அக்கருத்தினை முடித்து வைத்தே ஆட்கொண்டருள்கின்றான் இறைவன். ஆன்மாக்கள் புறத்தே போனாலும் உடன் வருவான். துரிசுகள் செய்தாலும் உடந்தையாக இருப்பான். முடிவான நிலை ஆட்கொண்டருளுதல்; ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துதல்; இறவா இன்ப அன்பில் திளைத்திடச் செய்தல். உயிர்களை ஆட்கொண்டருளுதலால் ‘பொன்மலர்’ என்று போற்றுகின்றார்.

தைநீராடல் தமிழ் மரபு. காலப்போக்கில் மார்கழி நீராடல் ஆயிற்று. வைகறையில் மார்கழி நீராடல் பழந்தமிழர் காலம் தொடங்கி இன்றுவரை நிகழ்ந்து வருவது.

வாழ்க்கைப் பொழுதில் வைகறைப் பொழுது நல்ல பொழுது. வைகறைப் பொழுதில் ஆற்றல்மிக்குடைய ஓசோன் உலாப்போதரும். வைகறைப் பொழுதில் சுவாசிக்கும் ஒரு மூச்சு பத்து மூச்சுக்குச் சமம். மூச்சு சுவாசிக்கும் எண்ணிக்கை அடிப்படையில்தான் வாழ்நாள் கணிக்கப்படுகிறது. வைகறையில் எழுந்து நடந்து சுவாசித்தால்- ஒரு தடவை சுவாசித்தால் ஒன்பது மூச்சு மிச்சப்படுத்தலாம். அந்த அளவு வாழ்நாள் வளரரும். வைகறைப்பொழுதில் நீர் நிலைகளில் ஒசோன் படிந்து அந்தத் தண்ணீர் மிகுதியும் பயன் தரத்தக்க ஆற்றலுடையதாக விளங்கும். அப்போது நீராடல் உடலுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும், பத்திமைக்கும் மிகுதியும் பயனளிக்கும். ஆதலால் பயன் நோக்கி மார்கழி நீராடலையும் ‘போற்றி’ என்றார்.

இந்தப் பாடலில் இறைவனின்- சிவனின் தனித்தன்மை போற்றப்படுகிறது. ஐந்தொழிலுக்கும் சிவனே உரியவன். சிவனே முழு முதல்வன். சிவனை அறிவாலும் செல்வத்தாலும் காண இயலாது. அன்பினாலும் தொண்டினாலுமே காணலாம் என்பது பெறப்படும் உண்மை! சிவன்இறைவன் நம்மையெல்லாம் உய்ய ஆட்கொண்டருளப் பிரார்த்தனை செய்வோமாக! வாழ்வோமாக!

திருவாசகம் நாள்தோறும் ஓதுதலே பிரார்த்தனை. திருவாசகம் ஓதினால் சிவஞானம் சித்திக்கும். திருவாசகத்தை நாள்தோறும் ஓதுக.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்!

(திருவெம்பாவை-20)
  1. * “கலைமகள்” மாத இதழில் வெளிவந்தவை.