குருகுலப் போராட்டம்/திட்டுண்ணா என்ன நயினா?

விக்கிமூலம் இலிருந்து
தீட்டுண்ணா
என்ன நயினா?

ஒமாந்துர் இராமசாமி ரெட்டியார் ஒரு நல்ல தலைவர். பழுத்த காந்திய வாதி. கடைசி வரை காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர். எளிமையான தோற்றமுடையவர். எப்பொழுதும் தூய வெள்ளைக் கதராடையே அணிவார். ஆடையைப் போலவே தூய வெள்ளை மனம் படைத்தவர். 1948ஆம் ஆண்டு வாக்கில் தமிழக முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சிக் காலம் தமிழக காங்கிரஸ் ஆட்சி யின் பொற்காலம் என்று கூற வேண்டும். ஏனெனில் அவருடைய ஆட்சியில் தான் எவ்வித ஊழலுமற்ற ஒரு செம்மையான அரசு நடந்தது.

அப்படிப்பட்ட சிறப்பு மிக்க இராமசாமி ரெட்டியார் பல ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் செயற் குழுவில் உறுப்பினராக இருந்தார். இராமசாமிப் பெரியாருக்கும், வரதராசுலு நாயுடுவுக்கும், திரு விக வுக்கும் எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தார். இந்த முப்பெருந் தலைவர்களுக்கும் ஒத்துழைக்கும் சிறந்த தொண்டராக விளங்கினார்.

நம் பண்டைய பெருமையைக் காப்பாற்றுவதற்கென ஏற்பட்ட குருகுலத்தில், வெள்ளையர் கலாச்சாரம் நுழைய முடியாத குருகுலத்தில், தன் பிள்ளையும் சேர்ந்து படிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆங்கிலக் கல்வியின் தீமையை மேடையில் பேசிக் கொண்டே தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கான்வென்டுக்கு அனுப்பும் இக்காலத் தமிழர் தலைவர்கள் போலில்லாமல் தன் பிள்ளையை பாரதக் கலாச்சார முறைக் கல்வி பயில குருகுலத்தில் சேர்த்து விட்டார்.

பையன் பள்ளியில் பயின்றான். ஆறு மாதங்கள் ஓடின. அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறைக்காகப் பள்ளி மூடப்பட்டது. பிள்ளைகள் தத்தம் பெற்றோரைப் பார்க்கச் சொந்த ஊருக்குப் போய் வர அனுமதிக்கப் பட்டார்கள்.

ஒமாந்துரார் பையனும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

கட்சி வேலைகள், தொண்டு, மாநாடு என்று பல நாள் வெளியூர்களிலே சுழன்றுகொண்டிருந்த இராமசாமி ரெட்டியார் வீட்டில் ஒய்வாக இருந்த ஒரு நாளில் தன் மகனோடு பேசத் தொடங்கினார்.

பையனின் படிப்பு எப்படி யிருக்கிற தென்று விசாரிக்கத் தொடங்கினார்.

அவன் மூலம் குருகுலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அறிந்து கொண்டார்.

குருகுலத்தின் தினசரி வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டார்.

அவருடைய கேள்விகளுக்கு மகன் அளித்த பதில் மூலம் அவர் தெரிந்து கொண்ட செய்திகள் பல.

காலையில் 4 மணிக்கு எழுப்பி விடுவார்கள். கை கால் முகம் கழுவி பல் விளக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உடற் பயிற்சி நடக்கும்.

உடற் பயிற்சி முடிந்ததும் மலங்கழிக்கச் செல்ல வேண்டும். செல்லும் போது மண் வெட்டியுடன் போய் ஒரு குழி வெட்டி, அதில் மலங்கழித்த பின் மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும்.

குளித்து முடித்த பின் காலை 7-30மணிக்கு ஒரு பெரிய கூடத்தில் எல்லா வகுப்பு மாணவர்களும், கூட வேண்டும். பார்ப்பன மாணவர்கள் ஒரு பக்கத்திலும், மற்ற மாணவர்கள் இன்னொரு பக்கத்திலும் நிற்பார்கள். தெய்வ வழிபாடு நடக்கும். ஐயர் பல பெரியோர்களின் வரலாறுகளைக் கூறுவார். புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். ஒருமணி நேரம் கழிந்தபின் மாணவர்களுக்கு காலை உணவாக கஞ்சி வழங்கப்படும்.

உழவு வேலை, தோட்ட வேலை, சமையல் வேலை ஆகியவற்றில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பிரித்துவிடப்படுவார்கள். நெல் பயிரிடப்பட்டிருந்தது. காய்கறிகள், பழ மரங்கள் வளர்க்கப் பட்டன. இவற்றில் எல்லாம் மாணவர்கள் ஈடு படுத்தப்பட்டார்கள்.

பள்ளிக் கூடத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டும் வேலை நடக்கும். இதில் மாணவர்கள் கொத்தனார்களுக்கு செங்கல் எடுத்துப் போதல், சாந்து குழைத்தல் போன்ற வேலைகள் செய்வார்கள்.

மற்ற ஆங்கிலப் பள்ளிக் கூடங்கள் போலவே, வரலாறு, சமூகநலம், பூகோளம், விஞ்ஞானம் எல்லாப் பாடங்களும் சொல்லித் தரப்பட்டன. தமிழும், சமஸ்கிருதமும், இந்தியும் கற்றுத்தரப்பட்டன. பயிற்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது. இந்த விவரங்களை யெல்லாம் கேட்ட போது ரெட்டியாருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. பிள்ளைகள் வேற்றுமையின்றி எல்லா வேலையும் செய்வது எளிமையான வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்று மகிழ்ச்சி யடைந்தார்.

ஆங்கிலம்தான் பயிற்சி மொழி என்று மகன் சொன்னபோது தேசிய உணர்வுள்ள ரெட்டியார் துடித்துப் போனார். ஆனால், கால நிலையை ஒட்டி, வேறு அரசு பள்ளி மாணவர்களோடு போட்டி வரும் போது சரி சமமாக நிற்க உதவியாயிருக்கும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டார். இந்தி தேசிய மொழி அதைக் கற்றுக் கொள்வது நல்லது என்று எண்ணினார். சமஸ்கிருதம் இலக்கிய மொழி அதுவும் தேவை தான் என்று எண்ணினார். இந்தப் படிப்புகளில் பாரதக் கலாச்சாரம் எங்கே யிருக்கிறது, மற்ற பள்ளிக்கூடங்கள் போலத்தானே இருக்கிறது என்று எண்ணமிட்டார்.

‘சாப்பாடு நன்றாய் இருக்கிறதா?’ என்று தந்தையார் கேட்க, மகன், ‘பழகிக் கொண்டு விட்டேன்’ என்று சொன்னான்.

“பள்ளிக்கூடம் எப்போது திறக்கிறார்கள்?” என்று தந்தையார் கேட்டபோது, “நயினா, நான் அங்கே போகவில்லை; வேறு பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன்!” என்றான்.

எல்லாம் நன்றாகத் தானே சொன்னான். ஏன் போகமாட்டேன் என்கிறான். தாய்ப் பாசமா? வீட்டு நினைப்பா? என்று எண்ணினார் ரெட்டியார்.

“என்னடா, செப்புறே?” என்று கேட்டார்,

“எங்களை யெல்லாம் கேவலமா நடத்துறாங்க நயினா!” என்றான் பையன்.

“உழவு வேலை செய்கிறது கேவலமா? கட்டட வேலை செய்வது கேவலமா? எல்லாத் தொழிலும் கற்றுக் கொள்ள வேண்டும்! தொழிலில் வேற்றுமை பார்க்கக் கூடாது” என்றார் ரெட்டியார்.

“அதைச் சொல்லவில்லை நயினா? நாங்கள் எல்லாம் சூத்திரப் பசங்களாம். பிராமணப் பசங்களுக்குத் தனியா சாப்பாடு போடுறாங்க. அவங்களுக்குச் சோமவாரம் சுக்கிரவாரம் கார்த்திகை இப்படி நாள் கள்ளே வடை பாயாசத்தோடு சாப்பாடு, எங்களுக் கெல்லாம் எப்பொழுதும் ஒரே மாதிரி சோறும் சாம் பாரும்தான்.

“ஒருநாள் தண்ணிர் தாகமெடுத்தது. வழியில் இருந்த பானையில் மொண்டு குடித்தேன். அது பிராமணப் பசங்க பானையாம். நான் தொட்டதும் தீட்டாகிப் போச்சாம். அந்த வழியாக வந்த பிரமச்சாரி வாத்தியார், பாதித் தண்ணிர் குடித்துக் கொண்டிருக்கும் போதே என் கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டார். சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு என்று பொரிந்து தள்ளினார். தீட்டுன்னா என்ன நயினா?” என்று கேட்டான் பையன்.

“பிராமணப் பசங்கன்னா ஒசத்தியா நயினா? எங்களோட தோட்ட வேலைக் கெல்லாம் அவங்க வர்றதில்லை. சமையல் வேலையிலே மட்டும் தான் சேர்ந்துக்குவாங்க. அதிலேயும் பாத்திரம் கழுவுறது மட்டும் எங்க வேலை. ஒருநாள் நானும் சமையல் கத்துக்கட்டுமா என்று கேட்டேன். சூத்திரப் பசங்க சமைச்சா பிராமணப் பசங்க சாப்பிட மாட்டாங்களாம். அந்த சமையல் ஐயர் என்னை முறைத்துப் பார்த்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை நயினா.”

“அடிபட்ட அன்னிக்கே வீட்டுக்கு வந்துவிடத் துடித்தேன். ரயிலுக்குப் பணமில்லே. அதனாலே பொறுத்துக் கொண்டேன்.”

கேட்கக் கேட்க ரெட்டியாரின் உதடுகள் துடித்தன. கண்கள் சிவப்பேறின. நெஞ்சு குமுறியது. தான் ஏதோ பாவம் செய்துவிட்டது போன்ற உணர்வு அவரை வாட்டியது. காந்தியடிகளின் அஹிம்சை இயக்கத்திலே பெற்ற பயிற்சியைக் கொண்டு அவர் தம் மனத்தை அடக்கிக் கொண்டார்.

இரவு முழுவதும் தூக்கமில்லை.

மறுநாள் காலையில் மகனை அழைத்தார்.

“நீ ஈரோட்டுக்குப் போ. பள்ளிக்கூடத்தில் நடந்த அட்டுழியங்களை ராமசாமி நாயக்கர் நயினாவிடம் செப்பு” என்று அனுப்பி வைத்தார்.

புதிதாக ஒரு சிறுவன் தன்னைப் பார்க்க வந்திருப்பதைக் கண்டு, பெரியார், அவனை “நீ யார்? என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

“நான் ஒமாந்துர் ரெட்டியாரின் கொடுக்கு” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் பையன்.

“என்ன செய்தி?” என்று கேட்டார் பெரியார்.

முதல்நாள் தன் தந்தையாரிடம் சொன்ன செய்திகளை யெல்லாம் பையன் ஆதியோடந்தமாக மிகத் தெளிவாக விளக்கிச் சொன்னான்.

தனித்தனிச் சாப்பாடு - தனித்தனி தண்ணிர்ப் பானை - சாதிவேற்றுமை - உயர்வு தாழ்வு - பெரியாருக்குச் சினம் பொங்கியது.

அந்தப் பார்ப்பனரை மிக உயர்ந்தவரென்று நம்பினோமே - நல்ல தேசபக்தர் என்று மதிப்புக் கொடுத்தோமே - தமிழர்கள் பணத்தை யள்ளி யள்ளிக் கொடுத்தோமே!

இதைச் சும்மாவிடக்கூடாது என்று கொதித்துப் பேசினார் பெரியார்.

ஒமாந்தூரார் செல்வாக்குப் பெற்ற தலைவர். அவர் இப்பிரச்சினையை உடனடியாக காங்கிரஸ் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

மற்ற தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர் இது பற்றி அறிந்தும் பேசாமல் இருந்துவிட்டனர். ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்ட பேரது, அவர்களும் மனம் நொந்து குருகுலத்தில் நடந்த கொடுமைகளை எடுத்துக் கூறினர்.

அவசரச் செயற் குழுக் கூட்டம் ஒன்று கூடுமாறு அறிக்கை விட்டார், ஈரோட்டுப் பெரியார்.