குறட்செல்வம்/காரணம் என்ன?
34. காரணம் என்ன?
இந்த உலகில் செல்வந்தர்கள் மிகச் சிலரே உள்ளனர்; வறியவர்கள் பலர். இந்த அவல நிலை ஏன்? உலகு தொடங்கிய நாள் தொட்டு, எல்லாரும் செல்வந்தர்களாக விளங்கவே விரும்புகின்றனர்; முயலுகின்றனர். சிலருக்கே வெற்றி கிடைக்கிறது. பலர் தோல்வியடைகின்றனர்.
இந்த வெற்றி — தோல்வியின் விளைவாக ஏற்பட்டுள்ள விளைவுகள் மனித சமுதாயத்தின் நல்வாழ்க்கைக்குக் கேடு பயப்பன ஆகும். பல்வேறு ஒழுக்கத் தவறுகளைத் தோற்றுவிப்பனவாகவும் அமைந்துள்ளன. அதனாலேயே, செல்வம் உடைய சிலரை எதிர்த்து, கிளர்ச்சிகளும், புரட்சிகளும் தோன்றின — தோன்றுகின்றன.
இந்த அவல நிலை பற்றிய ஆய்வு, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருக்குறளில் செய்யப் பெற்றுள்ளது. திருவள்ளுவர் ஒரு முற்போக்குக் கருத்துடைய கவிஞர் — பொருளியல் வல்லுநர் —நடைமுறைக்கு இயைந்த சித்தாந்தங்களைக் கண்டு சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவர்.
செல்வம் உடையவராகச் சிலரும், இல்லாதவராகப் பலரும் இருப்பதற்கு, திருவள்ளுவர் காரணம் கூறுகிறார். அவர் கூறும் காரணம் புதிது — புகழுடையது. உலக அரங்கில் தோன்றிய முற்போக்குக் கருத்துக்கள் அனைத்தினும் ஆன்ற சிறப்புடையது. எனினும் வள்ளுவரை விளக்க வந்தவ்ர்கள் அவர்தம் கருத்துக்கு மாறாக, பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளையே கூறி, அவருடைய புதுமைக்குத் திரையிட்டனர்.
இடைக் காலத்தில் செல்வம், ஆதிக்கம் ஆகியவற்றோடு இறுகப் பிணைத்துக் கொண்ட சமயக் கணக்கர்கள் செல்வம் முன்னைத் தவத்தின் பயன், வறுமை முன்னைத் தவமின்மையின் பயன் என்று மயக்க உணர்வோடு கூறி வைத்தனர். அதன் காரணமாகப் பொது மக்களிடத்தும்கூட செல்வம் முன்னைப் புண்ணியத்தின் பயன் — வறுமை பாவத்தின் பயன் என்ற கருத்து வேரூன்றி நிலவியது.
திருவள்ளுவரோ, செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் அன்று என்பதை உறுதியாக கூறுகின்றார். 'பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள’ என்று கூறுகின்றார். செல்வம் அற்றவர்கள், முயற்சியால் செல்வம் உடையவராக முடியும் என்பதையும் ஒத்துக் கொள்ளுகின்றார். 'பொருளற்றார் பூப்பர் ஒருகால்' என்று குறிப்பிடுகின்றார்.
ஆதலால் திருவள்ளுவர், செல்வம் உடைமைக்கும், இன்மைக்கும் முன்னைத் தவத்தையோ பயனையோ காரணமாக ஒத்துக் கொள்ளவில்லை.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
என்பது திருக்குறள்.
நோன்பு முறை பலப்பல. எல்லா நோன்புகளினுள்ளும் மிகச் சிறந்தது செல்வத்தின்கண் உள்ள பற்று நீங்கி, அவ்வழி தான் பெற்ற செல்வத்தைப் பலருக்கும் வழங்கி அவர்தம் வறுமையை மாற்றுதல். அதனாலன்றோ ஈகையிலுங்கூட,
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
என்று கூறுகின்றார்.
புறநானூற்றிலுங்கூட, கடலுள்மாய்ந்த இளம்பெரு வழுதி, இவ்வுலகம் உள்ளதாக விளங்குவதற்குப் பல்வேறு காரணங்களை வகுத்துக் கூறிவிட்டு இறுதி முடிவாக; 'தமக்கென முயலா நோன்றாருள் பிறருக்கென முயலுநர் உண்மையானே' என்று கூறுகின்றார்.
அதாவது, தனக்கென முயற்சி செய்யாது பிறருக்கென முயன்று பொருள் ஈட்டி வாழ்விப்பான் உள்ளமையானே, உலகம் இருக்கிறது—நடைபெறுகிறது—இயங்குகிறது என்று குறிப்பிடுகின்றார்.
அகநானூற்றிலுங்கூட தலைமகள், தன் தலைவனுக்குத் தன்மீது உள்ள, காதலைவிடப் பொருளின்மீது காதல் அதிகம். ஆதலால், பொருள்வழியிற் பிரிந்து சென்றவன் திரும்பி வருவானோ மாட்டானோ என்று ஐயுறுகின்றாள்.
தலைமகனுக்குப் பொருள்மீது காதல் மிகுந்தமைக்குக் காரணம் தான் நுகர்ந்து வாழவேண்டும் என்பது அன்று. இல்லாதவர்களுக்கு வழங்கி, அவர்களது வறுமையைத் தொலைக்கவேண்டும் என்பதேயாகும் என்றும் அவள் கூறுகின்றாள்.இரப்போர்க்கு இல்லென்று இயைவது கரத்தல் வல்லர நெஞ்சம் வலிப்ப.
“நம்மினும் பொருளே காதலர் காதல்” என்பது அகநானூறு. இங்கு, இயைவது என்று குறிப்பிட்டது பொருளுடைமையின் தகுதி மட்டுமன்று. அப்பொருளை ஈட்டக் கூடிய ஆற்றலையும் உட்படுத்தி நிற்கிறது.
புறநானூறும் தெளிவாகக் கூறுகிறது. “செல்வத்துப் பயனே ஈதல்” என்று. ஆதலால், செல்வத்தை ஈட்டுதலும், அச் செல்வத்தைப் பிறர்க்கு வழங்குதலும் ஒரு நோன்பாகும். இந்த நோன்பைச் செய்கின்றவர்கள்—நோற்பவர்கள் சிறரேயாக இருக்கிறார்கள்.
எனவே, இலர் பலராக இருக்கிறார்கள். இந்த நோன்பை நோற்பார் பலரானால், செல்வம் உடையரும் பலராவார்கள். இதுதான் நியாயமான உரை. இன்றையப் பொருளியல் சிந்தனையுலகும், புதுமை உலகும் தெளிவாகப் பேசுகின்றன.
“மனிதன் ஒரு சமுதாய உறுப்பினன்; அவனுடைய ஆற்றல் சமுதாயத்தின் பொதுவுடைமை. அவனுடைய ஆற்றலால் விளைகின்றவை அனைத்தையும் அனுபவிக்கச் சமுதாயத்திற்கு உரிமையுண்டு” என்பது. ஒருவர் தனது ஆற்றலால் செல்வம் ஈட்டினாலும் அவர் ஒரளவே அனுபவிக்கலாம். எஞ்சியதைச் சமுதாயத்திற்கு தருதல் வேண்டும் என்று இன்றைய நியாயம் கூறுகிறது—நீதி பேசுகிறது—சட்டம் வழி வகுக்கின்றது.
இக் கருத்தினையேதான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் 'செல்வத்தை முயன்று ஈட்டிப் பலருக்கும் வழங்கும் நோன்பை நோற்பார் பலரானால் செல்வம் உடையவரும் பலராக இருப்பார்கள். அங்ஙனம் நோற்பார் சிலராயின் வறியவர் பலராவர் என்று தெளிவாகக் கூறினார்.
திருக்குறளை, கீழ்க்கண்டவாறு இணைத்துப் பொருள் கொண்டு சிந்திக்கவும்.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் கோலா தவர்.
இக் குறட்பாவில், “நோற்பார் சிலர்” என்று ஒரு பகுதியும், “பலர் நோலாதவர் இலர் பலர்” என்றும் கொண்டு கூட்டிப் பொருள் காணுதல் சாலும். குறட்பாவில் இலர் வெளிப்படையாகச் சொல்லப் பெற்றுள்ளது. உடைமை உய்த்துணர்விக்கப் பெற்றுள்ளது.
நோற்பார் என்றும், சிலர் என்றும் இருப்பதால், நோற்பாரை உயர்வு கருதிய ஒருமையாக ஏற்றுக்கொண்டு பொருள் காணுதல் வேண்டும். அவ்வழி நோற்பாரும் சிலரும் ஒருவரேயல்லர்; நோற்பார் வேறு; சிலர் வேறு. நோலாதவர் வேறு; பலர் வேறு.
உலகியலுங்கூட ஒரு மனிதனுடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனைச் சார்ந்த சமுதாயம் பொறுப்புள்ளது ஆகிறது என்ற வழக்கின் அடிப்படையையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட உரை துறவியலில் வரும் ‘தவம்’ என்ற அதிகாரத்திற்குப் பொருந்துமோ என்ற ஐயப்பாடு சிலருக்குத் தோன்றலாம். பொருந்தும் — முக்காலும் பொருந்தும் என்பதே நம்முடைய கருத்து.
தவம், ஒழுக்கத்தின் முதற்படி, பொருட் பற்று நீங்குதலேயாம். அதனால், பொருந்தும். தவமுடையார்க்குப் பொருள் ஏது என்ற வினா எழலாம். தவமுடையார் தாமே நேரில் பொருள் ஈட்டாது போனாலும், அவர் தம் தவத்தினால் கவர்ச்சிக்கப்பட்டவர்கள் — நன்மைகளைப் பெற்றவர்கள் காணிக்கை தருவார்கள்.
அங்ஙனம், சாதாரண மக்களும் மன்னர்களும் கூடத் தந்துள்ளனர் என்பதை நமது நாட்டு வரலாறே பேசுகின்றது. அவ் வழித் தோன்றியவையே அறநிலையங்களும், திருமடங்களும். அங்ஙனம் தரும்பொழுது, அவற்றையும் வழங்கிப் பிறரை வாழ்வித்து, தான் வறியவராக வாழ்தலே தவத்திற்கு அழகு.
இக் கருத்தினை அப்பரடிகள், “கந்தை மிகையாம் கருத்தும்” என்று பேசுகின்றார். இதனைச் சேக்கிழார் அடிகளும்,
"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினால் கும்பிடலேயன்றி
வீடும் வேண்டார் விரலின் விளங்கினார்."
என்றும், அடுத்து
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணியல தொன்றிலர்
என்றும் குறிப்பிடுகின்றார்.
ஆதலால், தவத்தினை மேற்கொண்டவர்களாவது தமக்குக் கிடைத்த செல்வத்தைப் பிறருக்கு வழங்கி மற்றவர்தம் வறுமையை மாற்றி — அல்லல் நீக்கி — அவலம் போக்க சிவ சிந்தனையில் ஈடுபட வேண்டியது அவசியம். எனவே, இவ்வுரை முற்றிலும் பொருந்துவதேயாகும்.