உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/கோழி

விக்கிமூலம் இலிருந்து

6. கோழி

சேவற் கோழி

கோழீ ! கோழீ! வா வா;
      கொக்கோ கோ என்று வா ;
கோழீ ! ஓடி வா வா ;
      கொண்டைப் பூவைக் காட்டு வா. 1

குத்திச் சண்டை செய்யவோ?
      குப்பை கிண்டி மேயவோ?
கத்திபோல் உன் கால்விரல்
      கடவுள் தந்து விட்டனர்! 2

காலை கூவி எங்களைக்
      கட்டில் விட்டெழுப்புவாய்;
வேலை செய்ய ஏவுவாய்;
      வெற்றி கொண்ட கோழியே! 3

பெட்டைக் கோழி

கோழீ ! கோழீ ! வா வா:
      கூரை விட்டு இறங்கி வா;
கோழீ! முட்டை இட வா:
      கூட்டில் அடை காக்க வா. 4

பெட்டைக் கோழீ! வா வா;
      பிள்ளைகளைக் கூட்டி வா!
குட்டை நெல்லைக் கொட்டினேன்;
      கொத்திக் கொத்தித் தின்ன வா. 5

வஞ்சமாய்ப் பருந்ததோ
      வானில் வட்டம் போடுது;
குஞ்சணைத்துக் காப்பாயோ?
      கூட்டில் கொண்டு சேர்ப்பாயோ? 6

"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தைச்_செல்வம்/கோழி&oldid=1672043" இலிருந்து மீள்விக்கப்பட்டது