உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தை இலக்கியம்/கதை

விக்கிமூலம் இலிருந்து
கதை


60. கற்கை நன்று! ... 129
61. தந்தை தாய்ப் பேண் ... 132
62. தாய் சொற் கேள்! ... 134
63. பெரியோரைப் பழியேல்! ... 136
64. அண்ணனும் தம்பியும் ... 138
65. வீரச் சிறுமி ... 140
66. மூன்று பிள்ளைகள் ... 142
67. திருட்டு நாய் ... 144
68. நல்ல செயல் ... 146
69. கதை சொல்லட்டுமா? ... 147



60

ண்டை வீட்டில் கிழவன்!
அவனும் நல்ல உழவன்!
ஒண்டி யாக வாழ்ந்தான்!
ஒருமகன் துணைக்கும் இருந்தான்!

1

படிக்கச் சொல்லிப் பார்த்தான்;
பள்ளிக் கழைத்துப் பார்த்தான்;
அடித்துக் கிள்ளிப் பார்த்தான்!
மகனும் அழுது தீர்த்தான்!

2

பையன் படிக்க வில்லை!
படிப்பில் விருப்பம் இல்லை!
வெய்யில் நிழல்போல் ஓடி
வீணாள் போக்கினான் ஆடி!

3

உழுத அலுப்புத் தானோ,
உண்ணா அலுப்புத் தானோ?
கிழவன் ஒருநாள் நோயில்
கிடந்தான் வீட்டுப் பாயில்!

4


மருத்துவர் காலை வந்தார்
மருந்தை எழுதித் தந்தார்!
மருந்தை மகனும் கடையில்
வாங்கி வந்தான் விரைவில்!

5

அருந்தக் கொடுப்பது ஒன்றும்
அறைத்துப் பூசுவ தொன்றும்
மருந்தின் மீதே எழுதி
இருப்பதை மகனும் அறியான்!6

<poem>மருந்தைப் படிக்காப் பையன்
மாற்றிக் கொடுத்து விட்டான்!
அருந்திய மருந்து நஞ்சென்று
அறியான் எழுத்தை அறியான்!7

<poem>கிழவன் கண்கள் பிதுங்க,
கிட்டியே பற்கள் நெருங்க
அழுது பையன் ஒடி
அழைத்தான் மருத்துவர் நாடி!8

<poem>மருத்துவர் வந்து பார்த்தார்
மருந்தை எடு' எனக் கேட்டார்
அருந்தும் மருந்தும் இருக்க
நிலைமை அறிந்து கொண்டார்!9

<poem>மாற்று மருந்து கண்டார்!
மகனை நொந்து கொண்டார்!
ஏற்ற கல்வி இல்லை!
அதனால் என்றும் தொல்லை!

10 

பையன் மீண்டும் படித்தான்;
பண்பை, அறிவை அடுத்தான்;
கைமேற் பயனைக் கண்டான்;
கண்ணைத் திறந்து கொண்டான்!

11




61

ரில் வெள்ளம் வந்ததே!-ஏரி
உடைப்பெ டுத்துக் கொண்டதே!
ஊரில் உள்ள யாவுமே-வெருண்டு
ஓடி எங்கும் தாவுமே!

1

பெட்டி தூக்கி ஓடினர்-பொருள்
கட்டித் தூக்கி ஓடினர்;
தட்டுத் தூக்கி ஓடினர்-வெள்ளித்
தவலை தூக்கி ஓடினர்!

2

ஊரை விட்டே ஏகினர்-தத்தம்
உடைமை கொண்டு போயினர்!
ஊரில் ஒருவன் மட்டுமே-தன்
உடைமை யாவும் விட்டுமே

3 

தோளில் தாயைத் தந்தையைக்-கட்டித்
தூக்கி வந்த விந்தையை
ஆளும் அமைச்சன் கண்டான்;-அவன்
அருகில் வந்து நின்றான்!

4

பழுத்த கிழங்கள் தூக்கியே-வெள்ளப்
பாழைத் தாண்டும் சிறுவனே!
கொழுத்த செல்வம் இருக்கையில்-குற்
றுயர்எதற் கோதான்? என்றனன்.

5

பெற்ற அன்னை தந்தையே-என்றும்
பேசும் செல்வம் ஆகுமே!
மற்ற செல்வம் யாவுமே-நாட்டில்
வந்து வந்து போகுமே!

6

என்று சிறுவன் கூறினான்!-எதிர்
இருந்த வன்முகம் மாறினான்!
என்றும் அன்னை தந்தையே-ஈடு
இல்லாச் செல்வம் ஆகுமே!

7
62

தலையைச் சீவிப் பொட்டிட்டுச்
சட்டை போட்டு மையிட்டுப்
பலகை புத்தகம் பைகொடுத்துப்
பள்ளிக் கனுப்புவாள் தாயாரும்!

1

‘கண்ணே! மணியே! வழியினிலே
கால்வாய் உண்டே! பாலமுண்டே;
விண்ணின் நிலவே! பாலத்தின்
மேலே ஏறிப் பார்க்காதே!'

2

என்றே அடிக்கடி தாய்சொல்வாள்;
ஏகும் முன்பும் அதேசொல்வாள்!
நின்று பார்க்கும் சிறுபிள்ளை
தாயின் சொல்லை நினைக்காமல்!

3

பாலத் தேறி நின்றொருநாள்
பார்த்தது பிள்ளை வாய்க்காலை!
கோல வானைத் தன்காலைக்
குளிர்நீர் வாய்க்கால் கண்டதுவே!

4

தாய்சொல் தட்டி மற்றொருநாள்
தாவி ஏறிப் பாலத்தில்
வாயில், மோதிக் கீழ்நோக்கி
வாய்க்கால் இடையில் வீழ்ந்ததுவே!

5

‘அன்னை சொல்லைக் கேள்’ என்றும்!
அதிலே நன்மை உண்டென்றும்!
அன்னை சொல்லே பொன்சொல்லாம்!
அமிழ்தம் அமிழ்தம் தேன்சொல்லாம்!

6




63

காலும் கையும் சுருங்கிக்
கண்ணின் ஒளியும் ஒடுங்கித்
தோலும் நரம்பு மாகத்
தோன்றி வாழ்ந்தாள் கிழவி!

1

கிழவிப் பிள்ளை அழகன்
திருமண மான குமரன்!
பழகும் மனைவி பேச்சால்
தாயைப் பழித்து வந்தான்!

2

வீட்டை விட்டுத் தள்ளி,
வெறுத்துப் பேசி எள்ளி
மாட்டுக் கொட்டில் விட்டான்;
மல்லையில் - சோறும் இட்டான்!

3

வழக்கம் போல ஒருநாள்
மல்லை கொட்டில் இல்லை!
அழகன் மல்லை தேடி
அலைந்தான் அங்கிங்(கு) ஓடி!

4

மகனும் மல்லை எடுத்தே
மறைத்து வைக்கக் கண்டாள்;
மகனைக் கூவி, “ஏண்டா,
மறைத்தாய் மல்லை?” என்றாள்!

5

“சிகைவெ ளுத்து நானும்
கிழவ னாகும் போழ்தில்
அகப்ப டாதே மல்லை!
அதனால் மறைத்தேன்!” என்றான்!

6



64

தந்தையும் தாயும் இறக்க,
இருவரும் தனித்தனி உலைவைத்தார்;
முந்தையர் சொத்தாம் நன்செய் வயல்வெளி
முறையே பகிர்ந்து கொண்டார்!

1

அண்ணன் திருமணம் ஆனவன்; பிள்ளை
ஆறுக்கு மேலுடையான்!
மண்ணை உழுவான்; விதைப்பான்; அறுப்பான்!
வயிற்றுக்குப் போதாதே!

2 -

இருவரும் ஒருமுறை உழுதார், விதைத்தார்; -
எருவிட்டே வளர்த்தார்!
பருவம் வந்தது! வயலும் விளைந்தது!
பங்கை அறுத்துவந்தார்!

3

களத்திற் கட்டை அடுக்கியே வைத்தார்;
காத்தார் இரவினிலே!.
உளத்தில் அண்ணன் நினைத்தான் தம்பிக்(கு)
உதவி செய்வதென்றே!

4

‘மறைவாய் இரவில் வயல்நெற் கட்டை
வைத்தால், அவன் கட்டில்
நிறையும் நெல்லும்; பொருளும் நிறையும்;
திருமணம் நிறைவேறும்!’

5

என்று நினைத்தே காலம் நோக்கி
இருந்தான் அண்ணனுமே!
சென்றன இருநாள்! நிலவும் சென்றது!
செயற்பட முடிவுகொண்டான்!

6

‘அண்ணன் குடும்பம் பெரியது;
பிள்ளை ஆறுக்கும் மேலுண்டாம்!
மண்ணில் ஒருவன் நான்;என் கட்டை
மறைவாய் அவன்கட்டில்

7

வைப்பேன்; அறியான்; நெற்பொதி வளரும்;
வாழ்க்கை வளம்வளரும்;
இப்பொழு திரவே செய்வேன்' என்றான்; —
எழுந்தான். தம்பியுமே!

8


வழியில் இருவரும் வந்தனர் தனித்தனி
வாய்க்கால் வழியாக!
இழியும் போழ்து கட்டோடு கட்டும்
இடிக்கச் சிரித்தனரே!

9



65

பகைவர் நாட்டுப் பட்டாளம்
படர்ந்தது சிற்றூர் வட்டாரம்!
பகைவர் எதிர்க்க உள்ளூரார்
பதுங்கி இருந்தார் மலையுள்ளே!

1

இந்தச் செய்தி சிற்றூரில்
இருந்த சிறுமி நன்கறிவாள்;
வந்து வந்து பட்டாள
வகையைச் சொல்லிப் போய்விடுவாள்!

2

வந்து திரும்பும் வழியினிலே
வளைத்தார் சிறுமியைப் பகைநாட்டார்!
‘எந்த இடத்தில் உள்ளூரார்
மறைந்தார்? இடத்தைக் காட்’டென்றார்!

3

தந்தை நாட்டைத், தாய்நாட்டைத்,
தன்னை ஈன்ற பொன்னாட்டைச்
சிந்தை எண்ணி வணங்கியே,
‘தெரியா’ தென்றாள் சிணுங்கியே!

4 

சொல்லச் சொல்லி அடித்தார்கள்!
தூக்கிற் போட்டே உதைத்தார்கள்!
சொல்ல வில்லை சிறுமியும்!
சுட்டுத் தள்ளி விட்டார்கள்!

5

சிறுமி உயிரைக் கொடுத்தாளே!
தேயாப் புகழை எடுத்தாளே!
உறுமும் பகைமுன் தாய்நாட்டை
உயிரைக் கொடுத்தும் காப்போமே!

66

மூவர் சேர்ந்து பள்ளிக்கே
முணுமு ணுத்து நடந்தார்கள்;
மூவரும் வழியில் நின்றார்கள்;
மட்டம் போட முயன்றார்கள்!

1

பெரிய மரத்து நிழலிலே
பேசிச் சிரிக்கும் வேளையிலே
கரியால் இழுத்த கோட்டைப்போல்
கட்டை எறும்புகள் சென்றனவே!

2

‘எங்கே ஊர்ந்து போகின்றீர்?
இருங்கள், எம்மோ டாடிடலாம்!
தங்கிப் பேசி மகிழ்ந்திடலாம்!
சற்றே இருங்கள்!’ என்றார்கள்.

3

‘நாங்கள் உணவைச் சேர்க்கின்றோம்!
நாளைக் குணவை யார்கொடுப்பார்?
போங்கள்! போங்கள்! உம்போலப்
பொழுதைப் போக்கின் என்உண்டாம்?

4

‘வெறுநாள் போக்கல் அறிவின்மை!
வேலையை முடித்த லேநன்மை!
வெறுநாள் போக்கோம்’ எனக்கூறி
விரைந்தன எறும்புகள் மரமேறி!

5

வெட்கம் அடைந்தனர் மூவருமே!
‘வீண்நாள் போக்கோம்!’ எனக்கூறிப்
பக்கம் இருக்கும் பள்ளிக்கே
பறந்தனர்! அறிவும் நிறைந்தனரே!

6



67

கோழி வளர்க்கவே எண்ணி – வீட்டின்
கோடியில் கூண்டொன்று கட்டினாள் பொன்னி!
கோழியும் வாங்கி வளர்த்தாள்;–கன்னிக்
கோழியும் சேவலும் கூண்டி லடைத்தாள்!

1

முட்டையும் இட்டது பெட்டை!– அந்த
முட்டையைத் திருடிற்று வீட்டுநாய் நெட்டை!
‘முட்டை இடவில்லை’ என்றே–பொன்னி —
முகம் சோர்ந்தாள் கூண்டோரம் அடிக்கடி நின்றே!

2

எங்கோ புதரினில் கோழி – முட்டை
இடுவதாய் எண்ணினாள் இரண்டொரு நாழி!
இங்கே இடுவதற் கேற்ற – வகை
ஏதென எண்ணினாள்; வழிகண்டாள் பொன்னி!

3

பீங்கானில் முட்டை போல் ஒன்று – பொன்னி
பிற்பகல் வாங்கினாள். கடையினில் சென்று!
வாங்கிய முட்டையைப் பொன்னி – கூண்டில்
வைத்தாளே கோழியும் வந்திட எண்ணி!

4

முட்டைஎன் றெண்ணியே நாயும் – அதை
முன்போலத் திருடி வாய்கௌவிப் போயும்
குட்டையின் ஓரத்தில் குந்தி – வாலைக்
குழைத்துக் கடிக்க உடைந்தது பல்லும்!

5

திருட்டுத் தொழில் என்றும் வேண்டாம்!– பிறர்
பொருளினைத் திருடினால் இழிவென்றும் உண்டாம்!
திருட்டுத் தொழில்கெட்ட தாமே!– சிறு
திருட்டிலும் கால்கைபல் உடைபட்டுப் போமே!

6



68

மொந்தைத் தயிரை எடுத்தே,
முட்டையும் பெட்டையும் எடுத்தே
சந்தையில் கொண்டு விற்கப் போனாள்
தன்னை வளர்த்த அன்னை!

1

பத்து மணிக்கு வீட்டின்
பக்கம் இருக்கும் கூட்டில்
புத்தம் புதிய முட்டை யொன்று
பொன்னி இருக்கக் கண்டாள்!

2

குனிந்து முட்டை எடுத்தாள்;
‘கோழியிங் கேதெ’ன நினைத்தாள்;
‘முனியன் வீட்டுக் கோழி இட்ட
முட்டை’ எனமுணு முணுத்தாள்!

3

முனியன் வீட்டை அடுத்தாள்;
முட்டையைக் கொண்டு கொடுத்தாள்!
முனியன் அன்னை பொன்னியை வாழ்த்தி
முத்தப் பரிசு கொடுத்தாள்!

4
69

கதைசொல் லட்டுமா? தம்பி! – நல்ல
கதைசொல் லட்டுமா? தம்பி!


பதைத்துத் துடித்தே அருகில் வந்து
பார்க்காமல் எங்கோ பார்க்கிறாய் தம்பி!–


காதை இப்படித் திருப்பு! – தம்பி!
கண்ணை இப்படித் திருப்பு!
பாதிக் கதையைத் தொடங்கு முன்னே
பறந்தால் எப்படி நடக்கும்?


கதையைச் சொன்னால், ‘ஊம்ஊம்’ கூட்டிக்
கதையைத் தூண்ட வேண்டும்!
புதிய புதிய கேள்வி கேட்டுப்
புத்தி கற்க வேண்டும்!


கோணி நாணிக் குந்தி யிருந்தால்
கூறு வதுநான் எப்படி?
ஆணிப் பொன்னே! அருகில் வந்தே
அமர்ந்து கேள்நீ இப்படி!

தாழ்ந்த தலையை நிமிர்த்திப் பார்த்துத்
தம்பி! கதையைக் கேளு;
வாழ்ந்து வந்ததாம் ஒருநரி — தம்பி!
அத்தோடே கதை சரி!

"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தை_இலக்கியம்/கதை&oldid=1249331" இலிருந்து மீள்விக்கப்பட்டது