குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/எனது நோக்கம்

விக்கிமூலம் இலிருந்து

 

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

1. எனது நோக்கம்

பூங் குழந்தை! அது நமக்கு எத்தனை இன்பங் கொடுக்கிறது! எத்தனை இன்பக் கனவுகளையெல்லாம் காணும்படி செய்கிறது! அதன் உச்சிதனை முகர்ந்தால் உள்ளம் குளிர்கின்றது. அதன் சிரிப்பிலே, உடல் நெளிவிலே, மழலையிலே அமுதூறுகின்றது.

இந்தப் பூங்குழந்தை உடலிலும் உள்ளத் திறமைகளிலும் நன்கு வளர்ந்து உலகத்திலே புகழோடு வாழ வேண்டாமா? அதற்கு வேண்டிய முயற்சிகளைப் பெற்றோர்களும், குழந்தையைப் பேணுகின்ற மற்றவர்களும் தளர்வின்றி எடுத்துக்கொள்ள வேண்டாமா?

பெற்றோர்களுக்கு, சிறப்பாகத் தாய்க்குக் குழந்தையை நன்கு வளர்ப்பதற்கு வேண்டிய உணர்ச்சிகள் ஓரளவிற்கு இயல்பாகவே அமைகின்றன. தாய்மையோடு இந்த உணர்ச்சிகளும் மலர்ச்சியடைகின்றன. இருந்தாலும் தனது இயல்பான உணர்ச்சிகளோடு வழுவற்ற கல்வியாலும் கேள்வியாலும் பெறும் அறிவையுங் கொண்டு குழந்தையை வளர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்குமல்லவா?

குழந்தையின் உடல் நலம் செம்மையாக இருப்பதற்குக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. இயற்கை உபாதைகளேத் தவிர்ப்பதிலும், நல்ல பழக்கங்களை அநுசரிக்கச் செய்வதிலும், ஏற்ற உணவை அளிப்பதிலும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல இருக்கின்றன. இவ்வாறே குழந்தையின் உள்ள வளர்ச்சியிலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல உள்ளன. இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதால் இயல்பாகவே குழந்தையை வளர்ப்பதற்குள்ள உணர்ச்சி இன்னும் நன்கு விரிவடையும். அதனால் பெற்றோர்கள் குழந்தையை மேலும் சிறந்த முறையில் வளர்க்கலாம்.

சில சமயங்களிலே குழந்தை பிடிவாதம் பண்ணுகிறது; ஓயாது அழுது தரையிலே விழுந்து புரளுகிறது; பொய் சொல்லுகிறது. இப்படி நாம் விரும்பாத ஏதாவதொன்றைச் செய்கிறது. தாய்க்குப் பெரிய சோதனையாக அது முடிகிறது. என்ன செய்வதென்று அவளுக்குப் புரிகிறதில்லை. வீட்டில் அநுபவம் வாய்ந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் குழந்தையைத் திருத்த ஏதாவது உபாயம் கூறுவார்கள். பாட்டியம்மாள் இருந்தால் அவளுடைய யோசனை நிச்சயம் கிடைக்கும். குழந்தையின் உள்ளப் போக்கை ஆராய்ந்தறிந்த மனத் தத்துவர்கள் தங்களுடைய யோசனைகளையும் கூறியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க ஆசைப்படும் தாயும் தந்தையும் அறிந்திருக்க வேண்டும்.

“ஈன்று புரந்தருதல் என் தலைக்கடனே” என்று தமிழ்த் தாய் ஒருத்தி தனது தலைமையான கடமையைப் பற்றிக் கூறியிருக்கிறாள். குழந்தையைப் பெறுவது மட்டும் அவளுடைய கடமையல்லவாம்; அக் குழந்தையை நன்ருக வளர்ப்பதும் அவளுடைய முதற் கடமை என்று அவள் எடுத்துக் காட்டியிருக்கிறாள்.

தனது குழந்தை உலகிலே முன்னணியிலே நின்று புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படாத தாயோ தக்தையோ சாதாரணமாக இருக்கமாட்டார்கள். குழந்தைக்கு இயல்பாயமைந்துள்ள திறமைகள் மலர்வதில் பெற்றோர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், சூழ்நிலை எவ்வளவு தூரம் அதற்குச் சாதகமாக இருக்கும் என்பதையும், பெற்றோர்களின் வாழ்க்கை முறையும் நடத்தையும் எவ்வளவு தூரம் குழந்தையின் இள உள்ளத்திலே பதிகின்றன என்பதையும் இக்காலத்திலே உளவியல் நூல் தெளிவாக ஆய்ந்து கூறுகின்றது. விஞ்ஞான முறையிலே அநேக ஆயிரம் குழந்தைகளே ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுவது அவசியம். அப்பொழுதுதான் குழந்தைகளே நன்கு வளர்ப்பதிலே பெரியதோர் வெற்றி காண முடியும்; அப்பொழுதுதான் பெற்றோர்கள் தங்கள் கடமையைச் சரியானபடி செய்தவர்கள் ஆவார்கள். அவர்களுடைய பிற்கால வாழ்வு இன்பமும் அமைதியும் திருப்தியும் உடையதாக அமையும்.

இக்காலத்தில் மனத் தத்துவர்கள் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து குழந்தையைப் பற்றியும், மனிதனைப் பற்றியும், மன வளர்ச்சியைப் பற்றியும் பல உண்மைகளே அறிந்திருக்கிருர்கள். குழந்தை உள்ளத்தைப் பற்றிய அறிவு விஞ்ஞான முறையிலே நன்கு வளர்ந்திருக்கின்றது. மனித உள்ளம் மிக ஆச்சரியமானது. அதிலே வெளிப்படையாக இருந்து வாழ்க்கையிலே சாதாரணமாகத் தொழிற்படும் ஒரு பகுதியும் மறைவாக இருக்கும் ஒரு பகுதியும் இருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் வேறு வேறாகப் பிரிந்திருப்பவை அல்ல. ஒரே உள்ளத்தின் இரண்டு அம்சங்கள். இருந்தாலும் இந்த மறைந்துள்ள பகுதி மிகவும் பொல்லாததாம். அது வெளி மனத்தைக்கூட ஆட்டி வைத்துவிடுமாம். அதில் எத்தனையோ ஆசைகள், விருப்பு வெறுப்பு முதலியவைகள் மறைந்து அழுந்திக் கிடக்கின்றனவாம். அவற்றைப் பற்றியெல்லாம் மனப்பகுப்பியலார் என்ற அறிஞர்கள் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள். (மனத்தைப் பற்றியும் மறை மனத்தைப் பற்றியும் மனமெனும் மாயக் குரங்கு என்னும் அடுத்து வரும் நூலில் விரிவாக எழுதுவேன்.) மனப் பகுப்பியலார் கண்டறிந்து கூறியவற்றால் குழந்தை வளர்ப்பு முறையைப் பற்றிய கருத்துக்களில் பல முக்கிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. மனப் பகுப்பு முறையை முதலில் நன்கு உருவாக்கி நிலைபெறச் செய்தவர் பிராய்டு (Freud) என்ற அறிஞர் ஆவார். அவருக்குப் பின்னல் இன்னும் பல மனப்பகுப்பியலார் இதைப் பல வழிகளில் அபிவிருத்தி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியின் பயனாப் பொதுவாக மனத் தத்துவத்தைப் பற்றிய பல கொள்கைகள் மாற்றமடைந்திருப்பதோடு குழங்தை வளர்ப்பைப் பற்றிய எண்ணங்களிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த உண்மைகளை யெல்லாம் அறிந்துகொள்ள வேண்டியது குழந்தைகளே நல்ல முறையில் வளர்க்க விரும்பும் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.

தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் கூடியவரையில் எளிய முறையில் இவற்றைப் பற்றிய அடிப்படையான சில முக்கியக் கருத்துக்களை விளக்க முயலுவேன். குழந்தை மன மலர்ச்சியைப் பற்றி நான் கவனித்துக் குறித்து வைத்துள்ள சம்பவங்களுடன் பிணைத்துக் கூடியவரையில் படிப்பதற்குச் சுவையோ டிருக்கும்படியாகவும் வாழ்க்கையோடு ஒட்டிய முறையிலும் எழுத வேண்டு மென்பது என்னுடைய ஆவல். அதனால் குழந்தையின் உள்ள வளர்ச்சியைப் பற்றி விஞ்ஞான முறையில் விஷயங்களையும் அத்தியாயங்களையும் கோவைப்படுத்த கான் விரும்பவில்லை. முக்கியமாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவற்றைப் பற்றி மட்டும் எளிய முறையில் விளக்க இங்கு முயலுவேன்.

பிறக்கும்போதே குழந்தை பாரம்பரியமாகச் சில தன்மைகளைக் கொண்டுள்ளது. அவை சூழ்நிலையால் மலர்கின்றன; அல்லது அவற்றிற்கேற்ற வளம் கிடைக்காமற் போனால் மங்கி மறைந்துபோகின்றன. பாரம்பரியமும் சூழ்நிலையும் குழந்தையின் மலர்ச்சியில் முக்கிய ஸ்தானம் பெறுகின்றன. இவை இரண்டுமே குழந்தையை உருவாக்குகின்றன என்றே கூறிவிடலாம். ஆதலால் குழந்தையின் மன இயல்பை அறிந்து கொள்ளுவதற்கு முன்பு பாரம்பரியம் என்றால் என்ன, அது எவ்வாறு அமைகின்றது, அதற்கு யார் யார் பொறுப்பு என்பனவற்றைப் பற்றியெல்லாம் ஓரளவு அறிந்துகொள்ளுவது அவசியம். அதை அடுத்த பாகத்தில் விவரிப்பேன். சூழ்நிலையைப் பற்றிய விவரத்தையும் பின்னால் ஏற்ற இடத்தில் தெளிவுபடுத்துவேன்.