குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/சூழ்நிலை
13 சூழ் நிலை
பாரம்பரியமாகக் குழந்தைக்கு அமையும் தன்மைகள், திறமைகள் முதலியவற்றைப்பற்றி முன்பே சுருக்கமாகக் கூறினேன். தாயும் தந்தையும் எவ்வாறு அவற்றிற்கு உதவுகிறார்கள் என்பதையும் கண்டோம். ஆனால் அவை யெல்லாம் வளர்ந்தோங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை வேண்டும். இல்லாவிட்டால் அவை நசித்துப் போகும்; அல்லது முழு வளர்ச்சி பெறாமல் நின்றுவிடும். ஆதலால் குழ்நிலையைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
சூழ்நிலை என்ற சொல்லால் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை முதலில் தீர்மானம் செய்துகொள்ளுவது அவசியம். சூழ்நிலை என்கிறபோது மனத் தத்துவர்கள் சுற்றியிருக்கும் இடம், சுற்றியிருக்கும் மக்கள் ஆகியவற்றை மட்டும் குறிப்பிடுவதில்லை. அவர்கள் அச்சொல்லுக்கு மிக விரிவான பொருள் கூறுகிறார்கள். பாரம்பரியத்தால் அமையாத மற்ற எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும் அநுபவங்களையும், தொடர்புகளையும், நிகழ்ச்சிகளையும் சூழ்நிலை என்ற சொல்லாலேயே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சில மனத்தத்துவர்கள் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு பாரம்பரியமாக எவ்விதமான திறமையும் அமைவதில்லை என்றுகூடச் சிலர் துணிந்து கூற முன்வருகிறார்கள். அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையல்ல என்றாலும் அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.ஒரு குழந்தைக்குக் கலைத் திறமை அமைந்திருக்கிறதென்று வைத்துக் கொள்ளுவோம். அது ஒரு சிறந்த ஓவியனாகலாம்; அதற்கேற்ற திறமைகள் பாரம்பரியமாகக் கிடைத்திருக்கிறதென்று வைத்துக் கொண்டாலும் அத்திறமையைப் பயிற்சியால் வளர்க்காவிட்டால் அது ஓங்கிப் பிரகாசிக்குமா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஓவியக் கலைக்கு வேண்டிய திறமை முழுவதும் இருக்கிறதென்றால் அக்குழந்தைக்கு அதன் வாழ்க்கையில் துாரிகை பிடிக்கவோ வர்ணத்தைக் குழைத்துத் தீட்டவோ சந்தர்ப்பமே வாய்க்காவிட்டால் அது ஒரு சிறந்த ஓவியனாக முடியுமா? முடியவே முடியாது.
சில குழந்தைகள் ஆச்சரியமாகப் பாடுகின்றன. கிராமப் பக்கங்களிலே போகும்போது அழகாகப் பாடுகின்ற ஒரு சில இன்டைப் பையன்களைப் பார்க்கிறோம். அவர்கள் பாடுகின்ற தெம்மாங்கும் நாடோடிப் பாடலும் நம் உள்ளத்தைக் கவர்கின்றன. ஆனால் அந்த அளவிலேயே அந்தப் பாட்டுத் திறமை நின்றுபோய் விடுகிறது. வயதாக ஆக மறைந்தும் போய்விடுகிறது. ஏனென்றால் அந்தத் திறமை நன்கு மலர்ச்சியடைவதற்கு வேண்டிய சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சூழ்நிலை அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அத்திறமை வளரமுடியும். ஆதலால் தான் சில மனத்தத்துவர்கள் பாரம்பரியத்தை முக்கியமானதென்று ஏற்றுக்கொள்ளாமல் சூழ்நிலையையே வற்புறுத்துகிறார்கள்.
பாரம்பரியத்தால் பல திறமைகள் அமைகின்றன என்று கூறுவதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனத்திற் கொள்ளவேண்டும். பாரம்பரியம் ஒரு திறமையை முழுமையாக அப்படியே ஒருவனுக்குக் கொடுத்து விடுவதில்லை. ஒருவனுக்கு ஆயிரம் ரூபாயைப் பையில் போட்டுக் கட்டிக் கொடுப்பதுபோலப் பாரம்பரியம் ஒரு திறமையைக் கட்டிக் கொடுப்பதில்லை. பணப்பையைப் பெற்றவன் அதற்காக முயன்றிருந்தாலும் சரி அல்லது முயற்சியே செய்யாமலிருந்தாலும் சரி அவனுக்கு அத்தொகை முழுவதும் கைக்கு வந்து விடுகிறது. பாரம்பரியம் அவ்வாறு திறமையைக் கட்டிக் கொடுப்பதில்லை. ஒரு திறமையை அல்லது கலேயை அல்லது வித்தையை ஒருவன் பெறுவதற்கு வேண்டிய மன இயல்பைத்தான் பாரம்பரியம் கொடுக்கும். சரியான சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மன இயல்பின் உதவியால் திறமைகள் மலர்ச்சியடையும். இல்லாவிட்டால் ஒரளவு வெளிப்பட்டும் வெளிப்படாமலுங்கூட அவை மறைந்துபோகும். ஆகையால் பாரம்பரியத்தால் கிடைத்தவையெல்லாம் சூழ்நிலையாலேதான் வளர வேண்டும் என்பதும், ஒருவனுடைய வாழ்க்கையை நிர்மாணிப்பதில் சூழ்நிலை பெரியதோர் முக்கிய ஸ்தானம் வகிக்கிறது என்பதும் தெளிவாகின்றன.
திறமைகள் மலர்வதில் சூழ்நிலை இவ்வாறு முக்கியத்துவம் பெற்றிருப்பதை அறிந்த சில மனத் தத்துவர்கள் பாரம்பரியம் என ஒன்று இல்லை என்றுகூடச் சொல்ல முன் வருகிறார்கள் என்று முன்பே குறிப்பிட்டேன். எந்தத் திறமையை வேண்டுமானலும் அதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திப் பயிற்சியால் எய்திவிடலாம் என்பது அவர்களுடைய கொள்கை. இது ஓரளவிற்குச் சாத்தியமாகலாம். ஓவியத்திறமையே இல்லாத ஒருவன் பயிற்சியால் அக்கலையில் ஒரளவு முன்னேற்றமடையலாம். ஆனால் அதில் முழுவெற்றி பெறமுடியாது. இடைவிடாது பயின்று ஒரு சாதாரண சித்திரக்காரன் ஆகலாம். அவனுடைய ஓவியத்திலே அமரத்துவம் பெறக்கூடிய அம்சமோ பிறர் உள்ளத்தைப் பெரிதும் கவரக்கூடிய அம்சமோ இருக்காது. இதே போலத்தான் மற்றத் திறமைகளிலும்.
இவ்வாறு கூறுவதால் சூழ்நிலையின் முக்கியத்துவம் குறைந்து போய் விடுவதில்லை. பாரம்பரியம் விதை என்றால் சூழ்நிலைதான் அதை மரமாக்க வேண்டும். பாறையின் மேலே போட்ட விதை பயனற்றுப் போய்விடுகிறது. விதை முளையாகி இளங்கன்றாகிப் பெரிய மரமாவதற்கு நல்ல மண் வேண்டும்; தண்ணிர் வேண்டும்; நல்ல உரம் வேண்டும். முளையிலேயே அழிந்து போகாதபடி பாதுகாப்பு வேண்டும். இவையெல்லாம் போன்றதுதான் சூழ்நிலை.
குழந்தையின் இயல்பான நல்ல திறமைகள் நன்கு வளர்வதற்கு வேண்டிய சூழ்நிலையைப் பெற்றோர் அமைத்துக் கொடுக்கவேண்டும். பெற்றோருக்கு ஏதாவது ஒரு துறையிலே குழந்தை பெருமை அடையவேண்டும் என்ற ஆவலிருக்கலாம். ஆனால் குழந்தையின் இயல்பைக் கவனியாமல் அதையே வற்புறுத்துவது சரியல்ல. அதனால் குழந்தையின் இயல்புத்திறமை மழுங்கிப் போவதோடு பெற்றோர்கள் தங்கள் ஆசையிலும் நல்ல வெற்றி காணாமல் ஏமாற்றமடைய நேரிடும்.